என் மலர்
விளையாட்டு
கோவா:
11 அணிகள் பங்கேற்கும் 7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த 31-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர்-ஒடிசா அணிகள் மோதின. இதில் பெங்களூர் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணிக்காக சுனில் சேத்ரி 38-வது நிமிடத்திலும், சில்வா 79-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஒடிசா தரப்பில் டெய்லர் 71 நிமிடத்தில் கோல் அடித்தார்.
பெங்களூர் அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். அந்த அணி 6 ஆட்டத்தில் 3 வெற்றி, 3 டிராவுடன் 12 புள்ளிகள் பெற்று, 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. ஒடிசா அணி 5-வது தோல்வியை தழுவியது. அந்த அணி ஒரு புள்ளியுடன் 10-வது இடத்தில் இருக்கிறது.
இன்று நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)-ஜாம்செட்பூர் அணிகள் மோதுகின்றன.
கவுகாத்தி அணி 10 புள்ளியுடன் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 3-வது பெற்றிபெறும் ஆர்வத்தில் உள்ளது.
ஜாம்செட்பூர் அணி 7 புள்ளியுடன் 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 2-வது வெற்றிக்கான வேட்கையில் உள்ளது.
அடிலெய்டு:
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டுவில் நேற்று தொடங்கிய பகல்-இரவு டெஸ்டில் இந்திய அணி கேப்டன் ராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவர் 74 ரன் எடுத்திருந்த போது ரன்அவுட் ஆனார். கோலியின் ரன்அவுட்டுக்கு துணை கேப்டன் ரகானே தான் காரணம்.
நாதன் லயன் வீசிய 77-வது ஓவரில் கடைசி பந்தில் ரகானே பந்தை எதிர்கொண்டு ஒரு ரன் எடுக்க முயன்று பிறகு பின் வாங்கினார். இதனால் எதிர்முனையில் இருந்த கோலி ரன்அவுட் ஆனார். அவரது அவுட் துரதிர்ஷ்டவசமானது.
விராட் கோலி 16 ரன்னில் அவுட் ஆக வேண்டியவர். ஆஸ்திரேலிய அணி டி.ஆர்.எஸ்.க்கு செல்லாததால், அவர் தப்பினார். 74 ரன்னில் கோலி ரன் அவுட் ஆனது திருப்புமுனையாகும்.
கோலியின் ரன் அவுட் தொடர்பாக ஆஸ்திரேலிய முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் வார்னே கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
விராட் கோலி போன்ற மிகச்சிறந்த பேட்ஸ்மேன் ரன்அவுட் ஆவதை பார்க்கும் போது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. மனதை வருத்தம் அடைய செய்துள்ளது.
அவர் ஆடுகளத்திற்கு வரும்போது பெரிய இன்னிங்ஸ் வேண்டுமென எல்லோரும் சொல்லலாம். அதை உறுதியோடு அவரும் செய்து கொண்டிருந்தார். நம்மை போன்ற கிரிக்கெட் ஆர்வலர்கள் ஒவ்வொரு வரும் அவரது ரன் அவுட்டுக் காக வெட்கி தலைகுனிய வேண்டும்.
இவ்வாறு வார்னே கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இது தொடர்பாக கூறியதாவது:-
அந்த பந்தில் ரன் எடுத்திருக்கவே முடியாது. ஏனென்றால் பீல்டர் மிகவும் அருகில் இருந்தார். ஆனாலும் பார்ட்னர் ரகானேவின் அழைப்பை ஏற்று ரன் எடுக்க முன்வந்தார். கடைசியில் ரகானே வேண்டாம் என்று பின்வாங்கியதும் கோலி ரன்அவுட் ஆகி விட்டார்.
ரகானே மீது தவறு இருந்தாலும், அவரிடம் கோபித்து கொள்ளாமல் விராட் கோலி அமைதியாக பெவிலியன் திரும்பியது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
இந்த இன்னிங்சில் பல தடைகளை கடந்த கோலிக்கு இது கொஞ்சம் வலி இருக்கும். அது இயல்பானது.
இவ்வாறு சஞ்சஸ் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.
டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 2-வது முறையாக ரன்அவுட் ஆகியுள்ளார். இதற்கு முன்பு இதே அடிலெய்டு மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (2012)-ல் ரன்அவுட் ஆகியிருந்தார்.
உலக கோப்பை மல்யுத்த போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் 1-5 என்ற கணக்கில் மால்டோவா நாட்டு வீராங்கனை அனஸ்டாசியா நிசிதாவிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். இந்திய வீராங்கனைகள் சரிதா (59 கிலோ), சோனம் மாலிக் (62 கிலோ), சாக்ஷி மாலிக் (65 கிலோ) ஆகியோர் தங்கள் பிரிவில் கால்இறுதியை தாண்ட முடியாமல் ஏமாற்றம் அளித்தனர்.
உலக கோப்பை குத்துச்சண்டை போட்டி ஜெர்மனியில் நேற்று தொடங்கியது. கொரோனா அச்சம் காரணமாக இந்த போட்டியில் இருந்து நிறைய வீரர், வீராங்கனைகள் விலகி உள்ளனர். இந்த போட்டி அட்டவணையின்படி, உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் அமித் பன்ஹால் (52 கிலோ பிரிவு), இந்திய வீராங்கனைகள் மனிஷா (57 கிலோ), சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), பூஜா ராணி (75 கிலோ) ஆகியோர் நேரடியாக அரைஇறுதிப்போட்டியில் பங்கேற்கின்றனர். இதனால் களம் இறங்கும் முன்பே இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதியாகி விட்டது.
உடல் தகுதி பிரச்சினை காரணமாக இந்திய வீரர்கள் ஷிவதபா (63 கிலோ), சஞ்சீத் (91 கிலோ) ஆகியோர் இந்த போட்டியில் இருந்து விலகி உள்ளனர். இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் ரோகித் காஷ்யப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்ததை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக வீரர், வீராங்கனைகள் யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.







