என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

    பிரிஸ்பேன்:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை குயின்ஸ்லாந்து மாகாணாத்தில் உள்ள பிரிஸ்பேனில் நடக்கிறது.

    இதற்கிடையே பிரிஸ் பேனில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு இருக்கின்றன. வீரர்கள் மைதானம், ஓட்டல் அறையை தவிர வேறு எங்கும் செல்ல முடியாது. ஓட்டலில் தங்கி இருக்கும்போது தங்களது தளத்தை விட்டு வேறு தளத்துக்கு சென்று வீரர்களை கூட சந்திக்க முடியாது என்று கூறப்படுகிறது.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டு இருக்கும் நடைமுறைகளை மதித்து செயல்படுவதாக இருந்தால் மட்டுமே இந்திய அணி பிரிஸ்பேன் வரலாம். இல்லையென்றால் இங்கு வரவேண்டாம் என்று அந்த மாகாண சுகாதாரதுறை எச்சரித்து இருந்தது.

    தனிமைபடுத்துவதற்கு இணையான இந்த கொரோனா தடுப்பு விதிமுறைகளால் பிரிஸ்பேனுக்கு சென்று விளையாட இந்திய அணி தயக்கம் காட்டியது.

    ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்து இருந்ததால் இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரகானே இந்த புதிய கெடுபிடிகள் குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

    இதற்கிடையே அங்கு கடந்த 72 மணி நேரத்திற்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதனால் பிரிஸ்பேனில் 4-வது டெஸ்ட் போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் 4-வது டெஸ்டை பிரிஸ்பேனில் விளையாடவே விருப்பம் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் 4-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

    இதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹோக்ளே தெரிவித்தார்.

    இது தொடர்பாக இந்தியா, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே சுமூகமான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி இந்திய அணி நாளை பிரிஸ்பேன் புறப்பட்டு செல்லும்.

    சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 6000 ரன்கள் கடந்த 6வது இந்திய வீரர் என்ற சாதனையை புஜாரா எட்டி உள்ளார்.
    சிட்னி:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 338 ரன்களும், இந்தியா 244 ரன்களும் எடுத்தன. இரண்டாம் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 312 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய, இந்தியாவுக்கு 407 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணி இன்று 5வது நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையில் 3 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 41 ரன்னுடனும், ரிஷப் பண்ட் 73 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அதன்பின்னர் தொடர்ந்து ஆடிய புஜாரா, டெஸ்ட் போட்டிகளில் 27வது அரை சதத்தை நிறைவு செய்தார். 

    அத்துடன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்கள் என்ற இலக்கையும் எட்டினார். 134 இன்னிங்ஸ்கள் விளையாடி இந்த இலக்கை அவர் எட்டி உள்ளார். 

    இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்களை கடந்த 11வது இந்திய வீரராக புஜாரா இணைந்துள்ளார். இதற்கு முன்பு சச்சின், ராகுல் டிராவிட், கவாஸ்கர், விவிஎஸ் லட்சுமண், கங்குலி, அசாருதீன், விராட் கோலி, சேவாக், திலிப் வெங்கர்ச்சார், குண்டப்பா விஸ்வநாத் ஆகியோர் இந்த இலக்கை எட்டியிருந்தனர். அத்துடன், விரைவாக 6000 ரன்கள் கடந்த 6வது இந்திய வீரர் என்ற பெருமையையும் புஜாரா பெற்றுள்ளார். 

    ராகுல் டிராவிட்டும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில்தான் 6000 ரன்கள் என்ற இலக்கை அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி.-ஒடிசா எப்.சி. இடையிலான லீக் ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது.
    கோவா:

    11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை நடந்த சென்னையின் எப்.சி.-ஒடிசா எப்.சி. இடையிலான லீக் ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. பந்து அதிகமான நேரம் (57 சதவீதம்) சென்னை அணியின் கட்டுப்பாட்டில் இருந்த போதிலும் எதிரணியின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை.

    10-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி 2 வெற்றி, 5 டிரா, 3 தோல்வி என்று 11 புள்ளிகளுடன் 8-வது இடம் வகிக்கிறது. இரவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் 3-2 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்தது. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மும்பை சிட்டி- ஏ.டி.கே. மோகன் பகான் அணிகள் மோதுகின்றன.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் 5-ம் நாள் உணவு இடைவேளையில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்துள்ளது.
    சிட்னி:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. 

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி புகோவ்ஸ்கி, லபுஸ்சேன், ஸ்மித் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 105.4 ஓவரில் 338 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியின் புகோல்ஸ்கி 62 ரன், லபுஸ்சேன் 91 ரன், ஸ்மித் 131 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இந்தியா சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டு, பும்ரா, சைனி தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சுப்மான் கில், புஜாரா ஆகியோர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து அவுட்டாகினர்.

    ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டும்,  ஹசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 312 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. க்ரீன் 84 ரன்னும், ஸ்மித் 81 ரன்னும், லபுசேன் 73 ரன்னும் எடுத்தனர். இந்தியா வெற்றி பெற 407 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.  

    இந்தியா சார்பில் ரோகித் சர்மா, சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 31 ரன்னில் வெளியேறினார்.

    பொறுப்புடன் ஆடிய ரோகித் சர்மா அரை சதமடித்தார். அவர் 52 ரன்னில் அவுட்டானார்.  அடுத்து இறங்கிய ரகானே 4 ரன்னில் ஆட்டமிழந்தார். 

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் புஜாரா நிதானமாக ஆடினார். அவருடன் இணைந்த ரிஷப் பண்ட் முதலில் பொறுமையாக ஆடினார். நேரம் போக போக அதிரடியை காண்பித்தார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரியுமாக விளாசி அரை சதமடித்து அசத்தினார்.

    ஐந்தாம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 3 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 41 ரன்னுடனும், ரிஷப் பண்ட் 73 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா வெற்றி பெற இன்னும் 201 ரன்கள் தேவைப்படுகிறது.
    இனவெறி தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அராஜகத்தின் உச்சம் என்று விராட் கோலி கூறியுள்ளார்.
    மும்பை:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.  இதில், 3வது நாளான நேற்றைய ஆட்டத்தில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகிய இருவரையும் சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் இனரீதியாக இழிவுபடுத்தியுள்ளனர். எல்லைக்கோடு அருகே பீல்டிங் செய்த போது அவர்களை சீண்டியுள்ளனர்.

    3வது நாள் ஆட்டம் முடிந்ததும் இந்திய கேப்டன் ரஹானே கள நடுவர்கள் பால் ரீபெல், பால் வில்சன் மற்றும் போட்டி நடுவர் டேவிட் பூன் ஆகியோரிடம் இது குறித்து புகார் அளித்தார். மைதான பாதுகாப்பு அதிகாரிகளிடமும் முறையிடப்பட்டுள்ளது. இந்திய வீரர்களை இனவெறியுடன் வசைபாடிய ரசிகர்களை வீடியோ பதிவுகளின் மூலம் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    நேற்றைய 4வது நாள் ஆட்டத்தில், சிராஜ் பந்து வீசிய பின்னர் பும்ரா பந்து வீசுவதற்கு முன் வந்தபோது பவுண்டரி கோட்டு பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.  ரஹானே, நடுவரை நோக்கி சென்றார்.  சக வீரர்களும் அவருடன் சென்றனர்.

    நேற்றைய போட்டியிலும் ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து மீண்டும் இனவெறி கோஷம் எழுந்துள்ளது.  இதுபற்றி இந்திய வீரர்கள் நடுவரிடம் புகார் அளித்துள்ளனர்.  இதனால், போட்டி இடையில் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டன.  போட்டி நடுவர்களும், இந்திய வீரர்களும் சில நிமிடங்கள் வரை பேசி கொண்டனர்.

    இதன்பின்னர் போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கோஷம் எழுந்த பகுதியில் இருந்த ரசிகர்களை வெளியேறும்படி கேட்டு கொண்டனர்.  பார்வையாளர்கள் பகுதியில் சில வரிசைகள் காலியாக விடப்பட்டன.  இதன்பின்பு போட்டி தொடர்ந்தது.

    இந்நிலையில், இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    இனவெறி தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. பவுண்டரி லைன்களில் இது போன்ற பலவித தாக்குதல்கள் நடக்கின்றன. இது அராஜகத்தின் உச்சக்கட்டம். களத்தில் இவ்வாறு நடப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
    சிட்னி டெஸ்டின் கடைசி நாளில் இந்தியாவின் வெற்றிக்கு 309 ரன்கள் தேவை என்ற நிலையில், இந்தியா 200 ரன்னைத் தாண்டாது என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் வெற்றிக்கு 407 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.

    இந்தியா 4-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாளில் 309 ரன்கள் தேவை. புஜாரா, ரஹானே களத்தில் உள்ளனர். இருவரும் முதல் செசன் வரை ஆட்டமிழக்காமல் இருந்தால் இந்தியா வெற்றி அல்லது டிராவை எதிர்பார்க்கலாம். ஒருவர் முன்னதாக ஆட்டமிழந்தாலும் இந்தியா தோல்வியை சந்திக்கும்.

    புஜாரா, ரஹானே சிறந்த வீரர்கள். அவர்கள் டெஸட் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் இந்தியா 200 ரன்களை தாண்டாது என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேனும் ஆன ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    பேட்டிங் செய்வதற்கு சாதகமான சிட்னி ஆடுகளத்தில் 4-வது மற்றும் கடைசி நாளில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். 4-வது இன்னிங்சில் இந்த மைதானத்தில் சராசரி 168 ரன்களே ஆகும்.

    இந்தியா சிட்னியில் நடைபெற்ற கடைசி இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது கிடையாது. ஏனென்றால் இரண்டு போட்டிகளிலும் முடிவு எட்டப்படவில்லை.
    சையத் முஷ்டாக் அலி டிராபி டி20-யில் சுரேஷ் ரெய்னா அரைசதமும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட் வீழ்த்தியும் உத்தர பிரதேச அணியால் வெற்றி பெற முடியவில்லை.
    சையத் முஷ்டாக் அலி டிராபி டி20-யில் பஞ்சாப் - உத்தர பிரதேச அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட் வீழ்த்த பஞ்சாப் அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களே எடுக்க முடிந்தது.

    அடுத்து உத்தர பிரதேச அணி 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் மாதவ் கவுசிக் (21), த்ருவ் ஜுரெல் (23) ஓரளவிற்கு ரன்கள் அடித்தனர். அடுத்து வந்த ரெய்னா அரைசதம் அடித்தார். இருந்தாலும் 50 பந்தில் 56 ரன்கள் எடுத்த போதிலும் உ.பி.யால் வெற்றி பெற முடியவில்லை. 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களே எடுத்தது. இதனால் உத்தர பிரதேசம் 11 ரன்னில் தோல்வியை சந்தித்தது.
    பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் கிறிஸ் கெய்ல், டாம் பாண்டன் ஆகியோரை குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
    பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டி பிப்ரவரி 20-ந்தேதி முதல் மார்ச் 22-ந்தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இதற்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்லை குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. அதேபோல் இங்கிலாந்தின் அதிரடி பேட்ஸ்மேன் டாம் பாண்டனையும் எடுத்துள்ளது. இவர்களுடன் தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்னும் இணைந்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் லின் லாகூர் குவாலண்டர்ஸ் அணியில் இருந்து முல்தான் சுல்தான் அணிக்கு மாறியுள்ளார்.

    பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலியை இஸ்லாமாபாத் யுனைடெட் அணியும், டேவிட் மில்லரை பெஷாவர் ஷல்மி அணியும் ஏலம் எடுத்துள்ளது.

    ஆப்கானிஸ்தானின் முகமது நபி மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோரை பெஷாவர் ஷல்மி அணி தேர்வு  செய்துள்ளது. இந்த அணியில் ஆல்-ரவுண்டர் டேன் கிறிஸ்டியன், ஷெர்பேன் ரூதர்போர்டு ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.
    பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் கடும்முயற்சி மேற்கொண்டு பந்து வீசிய நிலையிலும், அபூர்வமாக கிடைத்த கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டதால் பும்ரா மிகவும் விரக்தியடைந்தார்.
    ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. அடிலெய்டு, மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் போன்று சிட்னி ஆடுகளம் களம் இல்லை. அந்த இரண்டு ஆடுகளங்களும் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது.

    ஆனால் சிட்னி ஆடுகளம் முற்றிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்தது. இதனால் பும்ரா, நாதன் லயன், அஸ்வின் விக்கெட்டுகள் வீழ்த்த திணறினர். குட் அண்டு லெந்தில் தொடர்ச்சியாக பந்து பிட்ச் செய்து, பேட்ஸ்மேன்கள் தவறு செய்தால் மட்டுமே விக்கெட் கிடைக்கும் நிலைக்கு பந்து வீச்சாளர்கள் தள்ளப்பட்டனர்.

    முதல் இன்னிங்சில் இந்தியா 94 ரன்கள் பின்தங்கியிருந்தது. இதனால் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை குறைந்த ரன்னிற்குள் சுருட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் பும்ரா களம் இறங்கினார். ஆடுகளம் ஒத்துழைக்காததால் பும்ரா கடுமையாக போராடினார்.

    ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் லாபஸ்சேனுக்கு லெக் சைடில் பந்து வீசினார். அவர் அடித்த பந்து ஹனுமா விஹாரியை நோக்கி சென்றது. பிடிக்கக்கூடிய கேட்சை விஹாரி தவறவிட்டார். அதன்பின் டிம் பெய்ன் முதல் ஸ்லிப்பில் கொடுத்த கேட்சை ரோகித் சர்மா தவறவிட்டார்.

    பும்ரா

    விக்கெட்டிற்கு வாய்ப்பே இல்லாத ஆடுகளத்தில் முழு முயற்சியுடன் பந்து வீசியும் கேட்சை தவற விடுகிறார்களே? என்ற விரக்தி பும்ராவிற்கு ஏற்பட்டது.

    பொதுவாக கேட்ச்கள் விடப்பட்டால் எளிதாக எடுத்துக்கொள்வார். ஆனால் இந்த போட்டியில் அவரால் அப்படி செய்ய முடியாமல் போனது. அதை தனது முகத்தின் மூலம் வெளிப்படுத்தினார்.
    மூன்று ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேசம் சென்றடைந்தது.
    வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேசம் சென்று மூன்று போட்டிகள் கொண்ட் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும், இரண்டு போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட இருக்கிறது.

    ஜனவரி 20-ந்தேதி முதல் ஒருநாள் போட்டியும், 22-ந்தேதி 2-வது ஒருநாள் போட்டியும், 3-வது ஒருநாள் போட்டி ஜனவரி 25-ந்தேதியும் நடக்கிறது.

    முதல் டெஸ்ட் பிப்ரவரி 3-ந்தேதியில் இருந்து பிப்ரவரி 7-ந்தேதி வரையும், 2-வது டெஸ்ட் பிப்ரவரி 11-ந்தேதி முதல் பிப்ரவரி 15-ந்தேதி வரையும் நடைபெறுகிறது.

    இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேசம் சென்றடைந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டும். அதில் நெகட்டிவ் என வந்தால், பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
    நடுவர் முடிவுக்கு ஆட்சேபம் தெரிவித்த டிம் பெய்னுக்கு ஐசிசி 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், தகுதி நீக்கத்திற்கான ஒரு புள்ளியையும் வழங்கியுள்ளது.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 244 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

    55-வது ஒவரின்போது புஜாராவுக்கு எதிராக ஆஸ்திரேலியா டிஆர்எஸ் முறையை பயன்படுத்தியது. ஆனால் 3-வது நடுவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். அப்போது டிம் பெய்ன் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

    டிம் பெய்னின் செயல்பாடு, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடுவரின் முடிவுக்கு கருத்து வேறுபாட்டை காட்டுவது வீரர்களின் நன்னடத்தை விதியை மீறும் வகையில் உள்ளது என புகார் அளிக்கப்பட்டது.

    அவர் மீதான புகாரை டிம் பெய்ன் ஒப்புக்கொண்டு தண்டனையை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து 15 சதவீதம் அபராதம் விதிப்பதாகவும், போட்டியில் இருந்து தடை செய்வதற்கான ஒரு புள்ளியையும் போட்டி நடுவர் டேவிட் பூன் வழங்கினார். தவறை ஏற்றுக் கொண்டதால், அதற்கு மேல் விசாரணை தேவையில்லை என்று டேவிட் பூன் தெரிவித்தார்.
    ஐசிசி கூட்டங்களில் பிசிசிஐ-யின் பிரதிநிதியாக ஜெய் ஷா கலந்து கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி உள்ளார். ஜெய் ஷா செயலாளராக உள்ளார். கடந்த வாரம் திடீரென சவுரவ் கங்குலிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. கொல்கத்தா உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் சில வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஐசிசி கூட்டங்களில் பிசிசிஐ சார்பில் ஜெய் ஷா கலந்து கொள்வார் எனத் தகவல்கள் தெரிவிக்கிறன. சவுரவ் கங்குலிதான் கலந்து கொண்டு வந்தார். அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஜெய் ஷா கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட இருக்கிறது.

    மேலும், உலக கோப்பை போட்டியின்போது வரி சலுகை அளிக்கும்படி மத்திய அரசிட் ஜெய் ஷா மற்றும் பொருளாளர் அருன் துமல் ஆகியோர் பேசுவார்கள் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.
    ×