என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 336 ரன்கள் சேர்த்தது.
    பிரிஸ்பேன்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன் சேர்த்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நிதானமாக விளையாடியது. போட்டியின் 2ம் நாளான நேற்றைய ஆட்டத்தின்போது 26 ஓவர் முடிந்த நிலையில் மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 336 ரன்களில் முடிவுக்கு வந்தது. அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 67 ரன்கள் அடித்தார். வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களும், ரகானே 37 ரன்களும், மயங்க் அகர்வால் 38 ரன்களும் எடுத்தனர். 

    ஆஸ்திரேலியா தரப்பில் ஹாசில்வுட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 33 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி 2ம் இன்னிங்சை ஆடி வருகிறது.
    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் மும்பை சிட்டி- ஐதராபாத் எப்.சி. அணிகள் இடையிலான விறுவிறுப்பான ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது.
    கோவா:

    11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய மும்பை சிட்டி- ஐதராபாத் எப்.சி. அணிகள் இடையிலான விறுவிறுப்பான ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது.

    11-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி 8 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி என்று 26 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இன்றைய லீக் ஆட்டங்களில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் (மாலை 5 மணி), எப்.சி.கோவா- ஏ.டி.கே. மோகன் பகான் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.
    டி நடராஜன் தன்னுடைய பொறுமை மற்றும் திடமான தன்மையை வெளிப்படுத்தினார் என்று ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த டி நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். முகமது சிராஜ், ஷர்துல் தாகூர் உடன் இணைந்து இருவரும் அபாரமாக பந்து வீசினார்கள். டி நடராஜன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    முக்கியமான கட்டத்தில் மேத்யூ வடே, லாபஸ்சேன் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கடைசி விக்கெட்டாக ஹசில்வுட்டை க்ளீன் போல்டாக்கினார்.

    இந்த நிலையில் துணைக் கேப்டனான ரோகித் சர்மா டி நடராஜனை வெகுவாக பாராட்டியுள்ளார். டி நடராஜன் குறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நடராஜன் மிகவும் சிறப்பாக பந்து வீசினார். சர்வதேச கிரிக்கெட்டில் நாட்டிற்கு வெளியே முதல் முறையாக தலைசிறந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்து வீசுவது எளிதான காரியம் அல்லை. ஆனால் டி நடராஜன் எந்தவித நெருக்கடிக்கு ஆளாகவில்லை.

    முதல் பந்தில் இருந்து வீறுகொண்டு எழுந்துகொண்டே இருந்தார். அதிகமான பொறுமையுடன் வலுவாக தன்மையை வெளிப்படுத்தினார். அதிகமாக பேசுவது கிடையாது. ஆனால், அவர் திடமான தனித்தன்மை வாய்ந்தவர். அவர் அணிக்காகவும் தனக்காகவும் சிறப்பாக செயல்பட விரும்புகிறார். இங்கே அதை செய்து கொண்டிருக்கிறார்.

    ஏராளமான வீரர்கள் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக விளையாடுகிறார்கள். சிராஜ் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளார். நவ்தீப் சைனி ஒரு போட்டியில் விளையாடியுள்ளார். உண்மையிலேயே அனுபவம் இல்லை.

    அதிக அளவில் தங்களுடைய துல்லியத்தை வெளிப்படுத்தினார்கள். ஒட்டுமொத்தமாக நான் பத்து வீச்சாளர்களின் பெர்பார்மன்ஸை ஆராய்ந்து பார்த்ததில், பந்து விச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் என்றே சொல்வேன். ஆடுகளம் இன்னும் சிறந்ததாகவே இருக்கிறது. அவர்களுடைய பந்து வீச்சு சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறந்த அனுபவம். அவர்களை பரிசோதனை செய்து கொள்வதற்கானது’’ என்றார்.
    இங்கிலாந்துக்கு எதிரான காலே டெஸ்டில் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாட 3-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்துள்ளது.
    இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 135 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இங்கிலாந்து ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் 421 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் 228 ரன்கள் அடித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

    முதல் இன்னிங்சில் 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் சொற்ப ரன்களில் சுருண்டதால் இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்க நேரிடும் என்ற நிலை இருந்தது.

    ஆனால் தொடக்க வீரர்களான குசால் பெரேரா, லஹிரு திரிமானே ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரும் அரைசதம் அடித்தனர். தொடர்ந்து விளையாடிய குசால் பெரேரா 62 ரன்னில் வெளியேறினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 15 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவர் கடந்த நான்கு இன்னிங்சில் தொடர்ந்து டக்அவுட் ஆனார்.

    3-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 156 எடுத்துள்ளது. திரிமானே 76 ரன்களுடனும், லசித் எம்புல்டெனியாக 0 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை இலங்கை அணி 130 ரன்கள் பின்தங்கியுள்ளது.
    பிரிஸ்பேன் டெஸ்டில் ரோகித் சர்மாவை ஆட்டமிழக்க செய்த நாதன் லயன், ரிஷப் பண்ட்-ஐ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
    சிட்னி டெஸ்டில் 407 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி இந்தியா செல்லும்போது, இந்தியா தோல்வியடைந்து விடும் என அனைவரும் நினைத்தனர். ஆனால் ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 97 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அவர் அடித்த ரன்கள்தான் இந்தியாவை டிரா செய்ய வைக்க உதவியது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் முதலில் நாதன் லயன் பந்தை எதிர்கொள்ள திணறினார். பின்னர் அதிரடியாக விளையாடி துவம்சம் செய்தார். அந்த அதிரடிதான் அவருக்கு எமனாக முடிந்தது. 97 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தூக்கி அடித்து ஆட்டமிழந்தார்.

    இந்த டெஸ்ட் போட்டியிலும் எனது பந்தை அவர் துவம்சம் செய்ய விரும்புவார். அவரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நாதன் லயன் கூறுகையில் ‘‘ரோகித் சர்மா உலகத்தரம் வாய்ந்த பவுலர். அவருக்கு என்னுடைய சிறந்த பந்தை வீச முயற்சி செய்தேன். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வெடிப்பு உள்ளது. அதை நோக்கியே பந்து வீச முயற்சி செய்வேன். ரிஷப் பண்ட் எனது பந்தை எப்போதுமே அடித்து விளையாடக்கூடியவர். அவருக்கு பந்து வீசுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவருக்கு பந்து வீசுவது சிறந்த போட்டியாக இருக்கும்’’ என்றார்.
    பிரிஸ்பேன் டெஸ்டில் 44 ரன்கள் எடுத்த நிலையில், நாதன் லயன் பந்தில் தேவையில்லாமல் ஷாட் அடித்து ஆட்டமிழந்த ரோகித் சர்மா, அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் அனுபவமில்லாத இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச ஆஸ்திரேலியா 369 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    அதன்பின் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஷுப்மான் கில் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினார். அனைவரது பந்தையம் சிரமமின்றி அற்புதமாக விளையாடினார். இதனால் ரோகித் சர்மா பெரிய இன்னிங்ஸ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நாதன் லயன் பந்தை தேவையில்லாமல் தூக்கி அடித்து ஆட்டமிழந்தார். இந்திய அணிக்கு முக்கியமான போட்டியாக கருதப்படும் ஆட்டத்தில் ரோகித் சர்மாவின் இந்த ஷாட் செலக்சன் அனைவரையும் அதிருப்தி அடையச் செய்துள்ளது.

    ரோகித் சர்மாவை இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர் வெளிப்படையாக விமர்சனம் செய்துள்ளார். ரசிகர்கள் ரோகித் சர்மாவை வசைபாடி வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆட்டமிழந்தது துரதிருஷ்டவசமானது. ஆனால் அந்த ஷாட்டுக்காக வருத்தமடையமாட்டேன் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘ஆட்டமிழந்த பந்தை எந்த இடத்தில் சந்திக்க விரும்பினேனோ, அந்த இடத்தில் சந்தித்தேன். ஆனால் பந்தை நான் ஹிட் செய்ய விரும்பியதுபோல் சரியாக பேட்டில் படவில்லை. லாங்-ஆன் - டீப் ஸ்கொயர் லெக் பீல்டர்களுக்கு இடையில் அடிக்க நினைத்தேன். பந்து அதற்கு ஏற்றவாறு பேட்டில் படவில்லை.

    நான் இன்று செய்ததை செய்ய விரும்பினேன். இங்கு வருவதற்கு முன், இது பேட்டிங் செய்ய சிறந்த ஆடுகளம் என்பது எங்களுக்குத் தெரியும். பவுன்ஸ், கேரி ஆகும். அதை நான் மகிழ்ச்சியாக எதிர்கொள்வேன்.

    நான் களத்தில் இறங்கி சில ஓவர்கள் விளையாடிய பின்னர், ஆடுகளத்தில் ஸ்விங் இல்லை என்பதை உணர்ந்தேன். அதற்கு ஏற்றபடி சற்று மாறிக்கொண்டேன். நான் ஆட்டமிழந்தது துரதிருஷ்டவசமானது. ஆனால் அதுகுறித்து வருத்தம் அடையமாட்டேன்.

    களம் இறங்கி பந்து வீச்சாளரை துவம்சம் செய்து அவர்களை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டும் என்பது எனது பணி. இரண்டு அணிகளிலும் ரன்குவிப்பதில் கடினம் உள்ளது. இதனால் யாராவது ஒருவர் முன்வந்து பந்து வீச்சாளர்களுக்கு எப்படி நெருக்கடி கொடுப்பது என்பது பற்றி யோசிப்பது அவசியம்’’ என்றார்.
    இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தான் சென்றுள்ளது.
    இலங்கை அணி பாகிஸ்தான் சென்று விளையாடும்போது பயங்கரவாதிகள் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்ற பேருந்து மீது எதிர்பாராத வகையில் தாக்குதல் நடத்தினர். இதில் சில வீரர்கள் காயம் அடைந்தனர். அதில் இருந்து பெரும்பாலான அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்தது.

    தற்போது வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது. தென்ஆப்பிரிக்கா அணி இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இன்று பாகிஸ்தான் சென்றடைந்துள்ளது.

    இதற்கு முன் தென்ஆப்பிரிக்கா அணி கடந்த 2007-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்றிருந்தது. அதன்பின் தற்போது பாகிஸ்தான் சென்றுள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கராச்சியில் ஜனவரி 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும், 2-வது டெஸ்ட் ராவல் பிண்டியில் பிப்ரவரி 4-ந்தேதியில் இருந்து 8-ந்தேதி வரையிலும் நடக்கிறது. டி20 கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 11-ந்தேதி தொடங்குகிறது.

    தென்ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரசு அமீரகத்தில் 2010 மற்றும் 2013-ல் சுற்றுப் பயணம் செய்து விளையாடியுள்ளது.
    இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் குருணால் பாண்டியா ஆகியோரின் தந்தை காலமானார்.
    சூரத்:

    இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் குருணால் பாண்டியா ஆகியோரின் தந்தை ஹிமான்ஷு மாரடைப்பால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட பல்வேறு வீரர்கள், கிரிக்கெட் சங்கத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

    குருணால் பாண்டியா தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் பரோடா அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார். இந்த தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய குருணால், 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். அவரது தந்தை மறைவுக்கு பரோடா அணி இரங்கல் தெரிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று நாடு திரும்பிய ஹர்திக், குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். தனது உடற்தகுதிக்காகவும் பயிற்சி செய்து வந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சிறந்த வீரருக்கான விருதை பெற்றிருந்தார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது.
    பிரிஸ்பேன்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது.

    முதலில் ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன் எடுத்து இருந்தது. 3-வது வீரராக களம் இறங்கிய மார்னஸ் லபுஷேன் அபாரமாக ஆடி சதம் அடித்தார்.

    அவர் 108 ரன்னும், மேத்யூ வேட் 45 ரன்னும் எடுத்தனர். கேப்டன் டிம் பெய்ன் 38 ரன்னிலும், கேமரூன் கிரீன் 28 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது.

    6-வது விக்கெட் ஜோடி தொடர்ந்து சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது. 95.1 -வது ஓவரில் அந்த அணி 300 ரன்னை தொட்டது.

    பொறுப்புடன் ஆடிய பெய்ன் 102 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 50 ரன்னை எடுத்தார். 35-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 9-வது அரை சதமாகும்.

    இந்த ஜோடியை ஒரு வழியாக ‌ஷர்துல் தாகூர் பிரித்தார். ஸ்கோர் 311 ஆக இருந்தபோது டிம் பெய்ன் 50 ரன்னில் அவரது பந்தில் பெவிலியன் திரும்பினார். 6-வது விக்கெட் ஜோடி 98 ரன் எடுத்தது.

    அதன்பிறகு விக்கெட்டுகள் சரிந்தன. கேமரூன் கிரீன் 47 ரன்னிலும், நாதன் லயன் 24 ரன்னிலும் வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஆட்டம் இழந்தனர். கம்மின்ஸ் 2 ரன்னில் ‌ஷர்துல் தாகூர் பந்தில் அவுட் ஆனார்.

    ஆஸ்திரேலியாவின் கடைசி விக்கெட்டை நடராஜன் கைப்பற்றினார்.ஹாசல்வுட் 11 ரன்னில் அவரது பந்தில் போல்டு ஆனார். ஆஸ்திரேலியா 115.2 ஓவரில் 369 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது.

    தமிழக வீரர்கள் டி. நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ‌ஷர்துல் தாகூர் தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள். அறிமுக டெஸ்டிலேயே தமிழக வீரர்கள் இருவரும் முத்திரை பதித்தனர். மராட்டியத்தை சேர்ந்த ‌ஷர்துல் தாகூர் தனது 2-வது டெஸ்டிலேயே சாதித்தார். முகமது சிராஜ் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை விளையாடியது. ரோகித் சர்மாவும், சுப்மன்கில்லும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தொடக்க ஜோடி மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

    ஆட்டத்தின் 7-வது ஓவரில் சுப்மன்கில் 7 ரன்னில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 11 ஆக இருந்தது. அடுத்து புஜாரா களம் வந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 44 ரன்னில் வெளியேறினார். 

    இதனையடுத்து புஜாராவுடன் கேப்டன் ரஹானே ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். 26-வது ஓவர் முடிந்த நிலையில் மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. மேலும் போட்டி ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் எடுத்தனர்.

    ஆஸ்திரேலியா அணி தரப்பில் கம்மின்ஸ் லயன் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
    தற்போதுள்ள சுழற்பந்து வீரர்களில் அஸ்வினால் மட்டுமே 700 முதல் 800 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்று முரளீதரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    சிட்னி:

    டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்களில் ‘டாப்-3’ வரிசையில் சுழற்பந்து வீச்சாளர்களே உள்ளனர்.

    இலங்கையை சேர்ந்த முத்தையா முரளீதரன் 133 டெஸ்டில் 230 இன்னிங்சில் விளையாடி 800 விக்கெட்டுகள் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். அவர் 2010-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

    முரளீதரனுக்கு அடுத்த படியாக வார்னே (ஆஸ்திரேலியா) 273 இன்னிங்சில் 708 விக்கெட் கைப்பற்றி 2-வது இடத்திலும், இந்தியாவை சேர்ந்த கும்ப்ளே 236 இன்னிங்சில் 619 விக்கெட்டுகள் எடுத்து 3-வது இடத்திலும் உள்ளனர்.

    இதற்கு அடுத்த நிலையில் தான் வேகப்பந்து வீரர்கள் உள்ளனர். ஆண்டர்சன் (இங்கிலாந்து) 600 விக்கெட்டும், மெக்ராத் (ஆஸ்திரேலியா) 563 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.

    இந்த நிலையில் தற்போதுள்ள சுழற்பந்து வீரர்களில் அஸ்வினால் மட்டுமே 700 முதல் 800 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்று முரளீதரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆஸ்திரேலிய பத்திரிகை ஒன்றில் அவர் கூறியதாவது:-

    கிரிக்கெட் உலகில் இன்றுள்ள சுழற்பந்து வீரர்களில் 700 முதல் 800 விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை உள்ளவராக நான் இந்திய வீரர் அஸ்வினை மட்டும் பார்க்கிறேன்.

    சென்னையை சேர்ந்த அஸ்வின் மிகச்சிறந்த பந்து வீச்சாளர். அவரைத் தவிர்த்த மற்ற இளம் பந்துவீச்சாளர்கள் யாரும் அந்த சாதனையை நிகழ்த்துவார்கள் என்று நான் நினைக்கவில்லை.

    ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனால்கூட இந்த சாதனையை நிகழ்த்த முடியாது. அவர் மீது நம்பிக்கை இல்லை.

    நான் விளையாடும் போது சமநிலை இருந்தது. ஆனால் இன்று ஒருநாள், 20 ஓவர் போட்டிகள் வந்தபிறகு பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக கிரிக்கெட் மாறிவிட்டது.

    அப்போது ஆடுகளம் நன்றாக தட்டையாக அமைக்கப்படும். பந்து வீச்சாளர்களுக்கும் பேட்ஸ்மேன்களுக்கும் சம அளவு ஒத்துழைக்கும். தற்போதுள்ள நிலையில் பவுலர்கள் நேர்த்தியாக நீண்ட நேரம் வீசினால்தான் 5 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும்.

    வேகபந்து வீச்சாளர்களை விட சுழற்பந்து வீரர்களால் தான் அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும். ஆனால் பீல்டர்களை சரியான இடத்தில் நிறுத்துவதும், கடினமாக உழைப்பதும் அவசியம்.

    இவ்வாறு முரளீதரன் கூறினார்.

    இந்தியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் டி நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். மயங்க் அகர்வால், ஷர்துல் தாகூர் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.

    ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக வார்னர், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் களம் இறங்கினர். முதல் ஓவரின் கடைசி பந்திலேயே முகமது சிரஜ் வார்னரை சாய்த்தார். 1 ரன்னில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வார்னர் ஏமாற்றம் அடைந்தார்.

    மற்றொரு தொடக்க வீரரான மார்கஸ் ஹாரிஸ் 5 ரன் எடுத்த நிலையில் ஷர்துல் தாகூர் பந்தில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு லாபஸ்சேன் உடன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது.

    ஸ்டீவ் 36 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு லாபஸ்சேன் உடன் மேத்யூ வேட் ஜோடி சேர்ந்தார்.

    லாபஸ்சேன் 37 ரன்கள் எடுத்த நிலையில் நவ்தீப் சைனி பந்தில் ராஹேனியுடம் கேட்ச் வாய்ப்பை கொடுத்தார். ரஹானே அந்த வாய்பை தவறவிட்டார்.

    அதனால் அரைசதம் அடித்த லாபஸ்சேன், அரை சதமாக மாற்றினார். மறுமுனையில் மேத்யூ வேட் 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
    சதம் அடித்த லாபஸ்சேன் 108 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி டி நடராஜன் அசத்தினார். இந்த ஜோடி 113 ரன்கள் விளாசியது.

    லாபஸ்சேன் ஆட்டமிழக்கும்போது ஆஸ்திரேலியா 65.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்திருந்தது.

    6-வது விக்கெட்டுக்கு டிம் பெய்ன் உடன் கேமரூன் க்ரீன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இன்றைய முதல்நாள் ஆட்டம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருந்தது.

    இதனால் ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது. கேமரூன் க்ரீன் 28 ரன்களுடனும், டிம் பெய்ன் 38 ரன்களுடனும்  களத்தில் இருந்தனர்.

    இதையடுத்து, 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறப்பாக ஆடிய டிம் பெய்ன் 50 ரன் எடுத்த நிலையில் ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் அவுட் ஆனார். 47 ரன்கள் எடுத்த நிலையில் கேமரூன் க்ரீனும் வெளியேறினார்.

    அடுத்துவந்த பேட் கம்ம்னிஸ் 2 ரன்னில் வெளியேறினார். ஆனால், 9-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்டார்க் - நாதன் லயன் ஜோடி கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடியது. லயன் 22 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

    கடைசி விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஸ்டாக் - ஜாஷ் ஹேசவுட் நிதான ஆட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியாக, நடராஜன் பந்துவீச்சில் ஹேசல்வுட் போல்ட் ஆகி வெளியேறினார். இதன் மூலம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 369 ரன்கள் குவித்தது.

    இந்திய அணி தரப்பில் நடராஜன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினார். தற்போது உணவு இடைவெளை நடைபெற்று வருகிறது. உணவு இடைவெளை முடிந்த உடன் இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாட உள்ளது.


    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் தோல்வி அடைந்தார்.
    பாங்காக்:

    யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் நடந்து வருகிறது. இதில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையில் மற்றொரு இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 2-வது சுற்றுடன் வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் 23-21, 14-21, 16-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் புசனனிடம் போராடி தோல்வி அடைந்தார். 

    புசனனுக்கு எதிராக சாய்னா தொடர்ச்சியாக சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸி ஜியா லீயை (மலேசியா) எதிர்கொள்ள இருந்த முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் பின்னங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக களம் இறங்காமலேயே விலகினார். 

    அடுத்த வாரம் தொடங்கும் மற்றொரு தாய்லாந்து தொடருக்குள் உடல்தகுதி பெற்று விடுவேன் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார். ஆண்கள் இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி, கலப்பு இரட்டையர் பிரிவில் சாத்விக்-அஸ்வினி ஆகிய இந்திய ஜோடியினரும் தங்களது ஆட்டங்களில் தோல்வி அடைந்தனர். இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
    ×