என் மலர்
விளையாட்டு
கோபா அமெரிக்கா கால்பந்தில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ரியோடிஜெனீரோ:
47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ரசிகர்கள் இன்றி நடைபெற்றது. அதில் இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் அர்ஜென்டினாவும், பிரேசிலும் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பாதியின் 22-வது நிமிடத்தில், அர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மரியா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதனால் முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதன்மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்டின் 2-வது இன்னிங்சில் வங்காளதேச வீரர்கள் ஷட்மன் இஸ்லாம், ஷன்டோ ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
ஹராரே:
வங்காளதேசம்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நடந்து வருகிறது.
முதலில் பேட் செய்த வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 468 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. லித்தன் தாஸ் 95 ரன், கேப்டன் மொமினுல் 70 ரன், தஸ்கின் அகமது 75 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். மக்முதுல்லா 150 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஜிம்பாப்வே சார்பில் முசாராபானி 4 விக்கெட்டும், டிரிபானோ, நியுவாச்சி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி 276 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டெய்லர் 81 ரன்னிலும், கைடனோ 87 ரன்னிலும் அவுட்டாகினர்

வங்காளதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 5 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 192 ரன்கள் முன்னிலை பெற்ற வங்காளதேசம் 2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. 3ம் நாள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ஷட்மன் இஸ்லாம் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த ஷண்டோவும் சதமடித்து அசத்தினார். இருவரும் 196 ரன்கள் சேர்த்தனர்.
வங்காளதேசம் ஒரு விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டிக்ளேர் செய்தது. ஷட்மன் இஸ்லாம் 115 ரன்னும், ஷன்டோ 117 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
477 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் பிரெண்டன் டெய்லர் அதிரடியாக ஆடி 73 பந்தில் 92 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. இன்று கடைசி நாள் என்பதால் வங்காளதேசம் அணியே வெற்றி பெற வாய்ப்புள்ளது என ரசிகர்கள் கருதுகின்றனர்.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
செயிண்ட் லூசியா:
ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. ரசல் அதிரடியாக ஆடி 28 பந்துகளில் 5 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 51 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதலில் ரன்களை குவித்தது.

7.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 89 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலிய அணி அதன்பின் சரிவைக் கண்டது. அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் மிட்செல் மார்ஷ் அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் மெக்காய் 4 விக்கெட், வால்ஷ் 3 விக்கெட், பாபியன் ஆலன் 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது மெக்காய்க்கு அளிக்கப்பட்டது.
இந்த வெற்றியின்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி கடந்த 2019-ல் பிரெஞ்ச் ஓபனில் கோப்பை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டம் நடந்தது. நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி, செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் மோதினர்.
ஒரு மணி நேரம், 56 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில் ஆஷ்லி பார்ட்டி 6-3, 6-7, 6-3 என்ற செட்கணக்கில் பிளிஸ்கோவாவை வீழ்த்தி முதல் முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார். ஆஷ்லி பார்ட்டி வெல்லும் 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.
இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் 'பாய்ந்து பிடித்த கேட்ச்' ஒன்று, சச்சின் உட்பட பல கிரிக்கெட் வீரர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
லண்டன்:
இங்கிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய பெண்கள் அணி 18 ரன்கள் (டி/எல் முறையில்) வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஹர்லீன் அற்புதமான கேட்ச் ஒன்றைப் பிடித்து அசத்தியுள்ளார்.
நார்தாம்ப்டனில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. நாட் ஸ்கிவர் 55 ரன்கள் எடுத்தார். மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் இந்திய அணிக்கு 8.4 ஓவர்களில் 73 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் இந்திய அணி, 8.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் மட்டும் எடுத்துத் தோல்வியடைந்தது. ஷஃபாலி வர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்ததால் இந்திய அணியால் இலக்கை விரட்ட முடியாமல் போனது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து இன்னிங்ஸின்போது 19-வது ஓவரில் ஆமி ஜோன்ஸ் சிக்சர் அடிக்க முயன்றார். பந்து சிக்சர் எல்லையைத் தாண்டிப் போகும் என நினைத்தபோது எல்லைக்கோட்டுக்கு அருகே நின்ற இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல், அற்புதமாகப் பந்தைப் பிடித்து ஆமி ஜோன்ஸை வெளியேற்றினார். கேட்ச் பிடித்தாலும் நிலை தடுமாறியதால் எல்லைக்கோட்டுக்கு வெளியே செல்ல இருந்தார் ஹர்லீன். உடனே பந்தை தூக்கி மேலே போட்டு விட்டு, எல்லைக்கோட்டுக்கு வெளியே சென்று அடுத்த நொடி உள்ளே வந்து பாய்ந்தபடி கீழே விழ இந்த பந்தைப் பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
A fantastic piece of fielding 👏
— England Cricket (@englandcricket) July 9, 2021
We finish our innings on 177/7
Scorecard & Videos: https://t.co/oG3JwmemFp#ENGvINDpic.twitter.com/62hFjTsULJ
இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் பாய்ந்து பிடித்த இந்த கேட்சை சச்சின் உட்பட பல கிரிக்கெட் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். இணையத்தில் அந்த வீடியோ வைரலலாகி உள்ளது.
கோபா கோப்பையை தக்க வைக்கும் முனைப்பில் நடப்பு சாம்பியன் பிரேசிலும், அதிகமுறை கோப்பையை வென்ற உருகுவே சாதனையை சமன் செய்யும் இலக்கில் அர்ஜென்டினாவும் பைனலில் நாளை மோதுகின்றன.
தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான கோபா கோப்பை கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதியில் தோற்ற பெரு - கொலம்பியா அணிகள் இன்று 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மோதிய நிலையில், சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பைனலில் பிரேசில் - அர்ஜென்டினா மோதவுள்ளன. இப்போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 5.30க்கு ரியோ டி ஜெனீரோ நகரில் நடக்கிறது. நடப்பு சாம்பியனான பிரேசில் கோப்பையை தக்க வைத்துக் கொள்ள எல்லா முயற்சிகளையும் களத்தில் பயன்படுத்தும். இந்த ஆட்டத்தில் வென்றால் 10-வது முறையாக கோப்பை வென்ற சாதனையையும் பிரேசில் படைக்கும்.
ஏற்கனவே 20 முறை பைனலில் விளையாடி உள்ள பிரேசில் 9 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. இப்போது 21வது முறையாக விளையாடும் இறுதி ஆட்டத்திலும் கோப்பை வெல்ல கார்லோஸ் காஸ்மிரா தலைமையிலான அணியில் நட்சத்திர ஆட்டக்கார் நெய்மர், சில்வா, லூகாஸ், ரிச்சர்லிசன், எவர்டன் சோரெஸ், ஃபிரெட் என பலரும் முனைப்பு காட்டுவார்கள்.
அர்ஜென்டினா அணி இதுவரை 28 முறை கோபா கோப்பை பைனலில் விளையாடி 14 முறை கோப்பையை வென்றுள்ளது. கோபா கோப்பையை அதிக முறை வென்ற உருகுவேயின் சாதனையை (15 முறை) சமன் செய்ய அர்ஜென்டினா வரிந்துகட்டுகிறது.
அதற்காக கேப்டன் மெஸ்ஸி தலைமையில் செர்ஜியோ, ரோட்ரிகோ, மார்டினெஸ், கோன்சாலெஸ், கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் ஆகியோரும் கலக்க காத்திருக்கிறார்கள். கோபா கோப்பை தொடங்கிய 1916 முதல் இதுவரை இந்த இரு அணிகளும் 10 முறை பைனலில் மோதியுள்ளன. அவற்றில் 2000-ம் ஆண்டு வரை மோதிய 8 இறுதி ஆட்டங்களிலும் அர்ஜென்டினாதான் வென்று கோப்பையை கைப்பற்றி உள்ளது. அதே நேரத்தில் 2000-ம் ஆண்டுக்கு பிறகு மோதிய 2 இறுதி ஆட்டங்களிலும் பிரேசில்தான் வெற்றி வாகை சூடியுள்ளது. எனவே 2000-ம் ஆண்டுக்கு பிறகு இந்த இரு அணிகளும் மோதும் 3-வது இறுதி ஆட்டத்தில் வெல்லப்போவது பிரேசிலா? அர்ஜென்டீனாவா? என்று ஆவலுடன் கால்பந்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
அர்ஜென்டினா-பிரேசில் இதுவரை 111 முறை சர்வதேச ஆட்டங்களில் மோதியுள்ளன. அவற்றில் பிரேசில் 46 ஆட்டங்களிலும், அர்ஜென்டினா 40 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. 25 ஆட்டங்கள் சமனில் முடிந்துள்ளன.
அர்ஜென்டீனா கடைசியாக மோதிய 10 சர்வதேச ஆட்டங்களில் ஒன்றில் கூட தோற்கவில்லை. அவற்றில் 6 வெற்றி, 4 டிரா செய்துள்ளது. பிரேசிலும் கடைசியாக விளையாடிய 10 ஆட்டங்களில் ஒன்றில் கூட தோற்கவில்லை. அவற்றில் 9 வெற்றி, ஒரு டிரா செய்துள்ளது.
உலகின் சிறந்த வீரர் விருதை 6 முறை பெற்றவரான 34 வயதான மெஸ்சிக்கு இன்னும் பெரிய போட்டிகளில் பட்டம் வெல்வது என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. 2014-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் தோல்வி மற்றும் கோபா அமெரிக்கா கால்பந்தில் 2007, 2015, 2016-ம் ஆண்டுகளில் இறுதி சுற்றில் தோல்வியை சந்தித்துள்ள மெஸ்சிக்கு அந்த நீண்ட கால குறையை போக்க இது அருமையான சந்தர்ப்பமாகும். அர்ஜென்டினா 1993-ம் ஆண்டுக்கு பிறகு இந்த கோப்பையை வென்றதில்லை என்பது நினைவு கூரத்தக்கது.
நெய்மார் தான் பிரேசில் அணியின் ஆணிவேர் என்பதில் சந்தேகமில்லை. 2019-ம் ஆண்டு கோபா அமெரிக்கா கோப்பையை பிரேசில் கைப்பற்றிய போது, காயத்தால் நெய்மார் அதில் விளையாடவில்லை. அதனால் நெய்மார் முதல்முறையாக இந்த கோப்பையை உச்சிமுகரும் முனைப்புடன் உள்ளார்.
5-வது டி.என்.பி.எல். போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
சென்னை:
5-வது டி.என்.பி.எல். (தமிழ்நாடு பிரிமீயர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந் தேதி முதல் ஆகஸ்டு 15-ந் தேதி வரை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்றொரு அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்தபோட்டியில் பங்கேற்கும் வீரர்களின் தனிமைக்காலம் நடைமுறை முடிவடைந்திருப்பதை தொடர்ந்து நேற்று முதல் பயிற்சியில் ஈடுபட்டனர். சேப்பாக்கம் மைதானத்தில் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
நார்த்தம்ப்டனில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நடாலி சீவர் 55 ரன்களும், ஆலன் ஜோன்ஸ் 43 ரன்களும் எடுத்தனர்.
இந்தியா சார்பில் ஷிகா பாண்டே 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. முதல் ஓவரிலேயே ஷபாலி வர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
ஸ்மிருதி மந்தனா 17 பந்தில் 6 பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஒரு ரன்னில் வெளியேறினார்.
இந்தியா 8.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது. அதன்பின் மழை நிற்கவில்லை. ஹர்லின் டியோல் 17 ரன்னும், தீப்தி ஷர்மா 4 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.
இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன், தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகி விருது நடாலி சீவருக்கு வழங்கப்பட்டது.
இலங்கைக்கு எதிராக இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர்கள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
கொழும்பு:
இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு தாயகம் திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணியினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் அந்த அணி–யின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவருக்கு (ஜிம்பாப்வே) கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.
இதற்கிடையே, அந்த அணியின் உதவி ஊழியர் (வீரர்களின் ஆட்டம் குறித்த புள்ளி விவரங்களை ஆய்வு செய்பவர்) ஜி.டி.நிரோஷன் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று தெரியவந்தது. இதையடுத்து அவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இலங்கை அணி வீரர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. அவர்கள் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் இந்திய தொடருக்காக நேற்று கொரோனா தடுப்பு வளையத்துக்குள் (பயோ பபுள்) வர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அவர்களது தனிமைப்படுத்துதலை மேலும் 2 நாட்கள் அதிகரித்து அதற்கு பிறகு மேலும் ஒரு முறை கொரோனா பரிசோதனை நடத்தி அந்த முடிவுக்கு தகுந்தபடி கொரோனா தடுப்பு வளையத்துக்குள் கொண்டு வரலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், கொழும்பில் வரும் 13-ம் தேதி தொடங்க இருந்த இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் 4 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மாற்றப்பட்ட அட்டவணையின்படி முதலாவது ஒரு நாள் போட்டி 17-ம் தேதி நடக்–கிறது. 2-வது ஒருநாள் போட்டி 19-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 21-ம் தேதியும் நடைபெறுகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடர் முறையே 24, 25, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரி–கிறது.
போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்து இருக்கிறது.
இதுகுறித்து வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் வரும் 13-ம் தேதிக்கு பதிலாக 17-ம் தேதி தொடங்–கும். வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் கலந்து ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டது’ என்று தெரிவித்தார்.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்டில் வங்காளதேச வீரர்கள் மெஹிதி ஹசன் 5 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஹராரே:
வங்காளதேசம்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நடந்து வருகிறது.
முதலில் பேட் செய்த வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 468 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. லித்தன் தாஸ் 95 ரன்னிலும், கேப்டன் மொமினுல் 70 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.
சிறப்பாக ஆடி 5வது சதத்தை பதிவுசெய்த மக்முதுல்லா 150 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தஸ்கின் அகமது 75 ரன்னில் வெளியேறினார்.
ஜிம்பாப்வே சார்பில் முசாராபானி 4 விக்கெட்டும், டிரிபானோ, நியுவாச்சி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி 2ம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், கைடனோ மற்றும் கேப்டன் பிரெண்டன் டெய்லர் பொறுப்புடன் ஆடினர். இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.

டெய்லர் 81 ரன்னிலும், கைடனோ 87 ரன்னிலும் அவுட்டாகினர். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. விக்கெட் கீப்பர் சகாப்வா 31 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.
இறுதியில், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 276 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வங்காளதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 5 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 192 ரன்கள் முன்னிலை பெற்ற வங்காளதேசம் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்துள்ளது.
விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்டினி என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-6, 7-5, 7-5 என்ற கணக்கில் கனடாவை சேர்ந்த டெனிஸ் ஷபோவலோவை விரட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதியில் 7-ம் நிலை வீரரான இத்தாலியைச் சேர்ந்த மேட்டியோ பெரெட்டினி 6-3, 6-0, 6-7, 6-4 என்ற கணக்கில் போலந்தின் ஹூபர்ட் ஹர்காசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜோகோவிச், மேட்டியோ பெரெட்டினி ஆகியோர் மோதுகின்றனர்.
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய அணிக்காக சிரங் ஷெட்டி பங்கேற்கிறார்.
பிவி சிந்து
பிவி சிந்து 1995 ஆம் ஆண்டு ஜுலை 5 ஆம் தேதி தெலுங்கானாவில் பிறந்தார். 25 வயதான பிவி சிந்து பேட்மிட்டன் வீராங்கணை ஆவார். இவர் சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். பிவி சிந்து 2009 ஆம் ஆண்டு தனது 14 வயதில் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கத்தொடங்கினார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் பிவி சிந்து வெள்ளிப்பதக்கம் வெற்றார். தற்போது இரண்டாவது முறையாக அவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்கிறார். இவர் பெண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடுகிறார்.
சாய் பிரனீத்
சாய் பிரனீத் 1992 ஆகஸ்ட் 10-ம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் பிறந்தார். 28 வயதான இவர் டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடுகிறார். 2019 ஆம் ஆண்டு சுவிஸ்சர்லாந்தில் நடைபெற்ற பேட்மிட்டன் வேல்ட் பெடரேஷன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சாய் பிரனீத் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இவர் உலக தரவரிசை பட்டியலில் 11-வது இடத்தில் உள்ளார்.
சாத் விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி
சாத் விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி 2000 ஆகஸ்ட் 13-ம் தேதி ஆந்திராவில் பிறந்தார். இவர் டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் பங்கேற்கிறார். இவர் சிரங் ஷெட்டியுடன் இணைந்து விளையாடுகிறார். இந்த ஜோடி 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.
சிரங் ஷெட்டி
சிரங் ஷெட்டி 1997 ஆம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி மும்பையில் பிறந்தார். இவர் டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் பங்கேற்கிறார். இவர் சாத் விக் சாய்ராஜ் ரங்கிரெட்டியுடன் இணைந்து விளையாடுகிறார். இந்த ஜோடி 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது. இந்த ஜோடி உலக பேட்மிட்டன் இரட்டையர் பிரிவு தரவரிசை பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது.






