என் மலர்
விளையாட்டு


சென்னை:
8 அணிகள் பங்கேற்ற 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று இரவு தொடங்கியது.
பார்வையாளர்கள் இல்லாமல் நடந்த இந்த போட்டியின் தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதின.
முதலில் கோவை அணி விளையாடியது. அந்த அணி வீரர் சாய் சுதர்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 43 பந்தில் 87 ரன்கள் (8 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார்.
கோவை அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்து இருந்தது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
டி.என்.பி.எல். போட்டி 2-வது லீக் ஆட்டம் இன்று நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் என்.ஜெகதீசன், சோனு யாதவ், அலெக்சாண்டர், சித்தார்த் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் உள்ளனர்.
இதில் என்.ஜெகதீசன் டி.என்.பி.எல். போட்டியில் அதிக ரன் எடுத்த வீரராக உள்ளார். அவர் 32 இன்னிங்சில் 1352 ரன் எடுத்து உள்ளார். சராசரி 54.08 ஆகும். ஒரு சதமும், 14 அரை சதமும் அடித்துள்ளார். விக்கெட் கீப்பரான அவர் 21 கேட்ச் பிடித்துள்ளார். 13 ஸ்டம்பிங் செய்து உள்ளார். இதனால் ஜெகதீசன் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
இலங்கை தொடருக்கான இந்திய அணியுடன் வலைப் பயிற்சியில் பந்து வீச்சாளராக சென்றிருக்கும் சாய் கிஷோர், சந்திப் வாரியர் ஆகியோர் அந்த தொடர் முடிந்ததும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் இணைகிறார்கள்.
எம்.முகமது தலைமையில் பெயர் மாற்றத்துடன் களம் காணும் திருப்பூர் தமிழன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த தினேஷ் கார்த்திக் இங்கிலாந்தில் நடைபெறும் போட்டிக்கு வர்ணனையாளராக பணியாற்றுவதால் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார். வலுவான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் சவாலை சமாளிப்பது திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
கொழும்பு:
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுவதற்காக இலங்கை சென்று உள்ளது.
கொழும்பில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 80 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதலில் விளையாடிய இலங்கை 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 263 ரன் எடுத்தது. ஷமீகா கருணா ரத்னே அதிகபட்சமாக 43 ரன் எடுத்தார். தீபக் சாகர், சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய இந்தியா 36.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்தது.
கேப்டன் தவான் 95 பந்துகளில் 86 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்), இஷான் கிஷன் 42 பந்தில் 59 ரன்னும் (8 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
இந்த ஆட்டத்தில் 23 ரன்கள் எடுத்த போது தவான் ஒருநாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்னை தொட்டார். இந்த ரன்னை அதிவேகத்தில் கடந்த 2-வது இந்தியர் என்ற சாதனையை பெற்றார். அவர் 140 இன்னிங்சில் 17 சதம், 33 அரை சதம் உள்பட 6063 ரன் எடுத்துள்ளார்.
கங்குலியின் சாதனையை தவான் முறியடித்தார். கங்குலி 147 இன்னிங்சில் 6 ஆயிரம் ரன்னை கடந்து இருந்தார். விராட் கோலி 136 இன்னிங்சில் 6 ஆயிரம் ரன்னை எடுத்து முதல் இடத்தில் உள்ளார். சர்வதேச அளவில் 6 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் எடுத்த வீரர்களில் தவான் 4-வது இடத்தில் உள்ளார்.
ஒருநாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை எடுத்த 10-வது இந்திய வீரர் தவான் ஆவார். தெண்டுல்கர் (18,426 ரன்), விராட்கோலி (12,169), கங்குலி (11,221), ராகுல் டிராவிட் (10,768), டோனி (10,599), அசாருதீன் (9,378), ரோகித்சர்மா (9,205), யுவராஜ்சிங் (8,609), ஷேவாக் (7,995) ஆகியோரது வரிசையில் தவான் இணைந்தார்.
இஷான் கிஷன் தனது அறிமுக போட்டியிலேயே அசத்தினார். முதல் போட்டியிலேயே அதிவேகத்தில் அரை சதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை அவர் பெற்றார். அவர் 33 பந்தில் அரை சதத்தை தொட்டார்.
குணால் பாண்ட்டியா அறிமுக போட்டியில் 26 பந்தில் அரை சதம் எடுத்து சாதனை படைத்து இருந்தார்.
டோக்கியோ:
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடக்கிறது.
ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் கொரோனாவின் பாதிப்பு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. முதலில் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து நேற்று 3 விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களது பெயர் விபரம் வெளியிடப்படவில்லை. இதில் 2 பேர் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கி இருந்தவர்கள். மற்றொரு வீரர் ஓட்டலில் தங்கி இருந்த வர் ஆவார்.
இந்த நிலையில் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கி இருந்த மேலும் 3 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதை போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த 3 பேரும் விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் அல்ல. ஒலிம்பிக் கிராமத்தோடு தொடர்புடையவர்கள். ஒரு பத்திரிகையாளருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 10 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 127 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 95-க்கும் மேற்பட்ட முதல் குழு நேற்று ஜப்பான் சென்றடைந்தது.
இந்த நிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்-வீராங்கனைகளுக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.






