என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாச, ஷிவம் டுபே 31 பந்தில் அரைசதம் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்.
    ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டில் அபு தாபியில் இன்று நடைபெற்ற  47-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ருதுராஜ் 42 பந்தில் அரைசதம் அடித்த நிலையில், 60 பந்தில் சதம் விளாசினார். அவர் கடைசி 18 பந்தில் 51 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. ஜடேஜா 15 பந்தில் 32 ரன்கள் எடுத்தும், ருதுராஜ் 101 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் டெவாட்டியா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால், லீவிஸ் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. லீவிஸ் 12 பந்தில் தலா 2 பவுண்டரி, சிக்சருன் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் விக்கெட்டுக்கு 5.2 ஓவரில் 77 ரன்கள் குவித்தது.

    மறுமுனையில் விளையாடிய ஜெய்ஸ்வால் 19 பந்தில் அரைசதம் அடித்ததுடன், 21 பந்தில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் ஸ்கோரில் 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடங்கும்.

    அடுத்து சஞ்சு சாம்சன் உடன் ஷிவம் டுபே ஜோடி சேர்ந்தார். சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாட, ஷிவம் டுபே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 31 பந்தில் தனது முதல் ஐ.பி.எல். அரைசதத்தை பதிவு செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் 8.1 ஓவரில் 100 ரன்னையும், 12.4 ஓவரில் 150 ரன்னையும் கடந்தது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள்

    அணியின் ஸ்கோர் 15.4 ஓவரில் 170 ரன்னாக இருக்கும்போது சஞ்சு சாம்சன் 24 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு ஷிவம் டுபே உடன் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த  ஜோடி இலக்கை வெற்றிகரமாக எட்டியது. ராஜஸ்தான் ராயல்ஸ் 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஷிவம் டுபே 64 ரன்களுடனும், பிலிப்ஸ் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷர்துல் தாகூர் 2 விக்கெட் வீழ்த்தினார்.
    6 பவுண்டரி, 3 சிக்சருடன் 19 பந்தில் அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால், சர்வதேச போட்டியில் விளையாடாமல் அதிகவேகமாக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ளார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி அபு தாபியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்தில் 9 பவுண்டரி, 5 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

    பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சி.எஸ்.கே. வீரர்களின் பந்து வீச்சை நான்கு திசைக்கும் விரட்டினார். இதனால் 19 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

    இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் ஐ.பி.எல். தொடரில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 2-வது இடம் பிடித்தார். இதற்கு முன் இஷான் கிஷன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக 2018 சீசனில்  17 பந்தில் அரைசதம் விளாசினார்.

    தீபக் ஹூடா  20 மற்றும் 22 பந்துகளிலும், குருணல் பாண்ட்யா 22 பந்துகளிலும் அரைசதம் அடித்துள்ளனர்.

    ருதுராஜ் 60 பந்தில் 101 ரன்களும், ஜடேஜா 15 பந்தில் 32 ரன்களும் விளாச ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 190 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.
    ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டில் இன்று நடைபெற்று வரும் 47-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்து வருகின்றன.

    டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். வழக்கம்போல் இந்த தொடக்க ஜோடி அதிரடியை வெளிப்படுத்தியது. இருந்தாலும் டு பிளிஸ்சிஸ் 19 பந்தில் 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 6.5 ஓவரில் 47 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின் வந்த மொயீன் அலி 21 ரன்னிலும், அம்பதி ராயுடு 2 ரன்னிலும் வெளியேறினார்.

    ஆனால் தொடக்க வீரர் ருதுராஜ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 42 பந்தில் அரைசதம் அடித்தார். அப்போது சென்னை 13.4 ஓவரில் 100 ரன்கள் எடுத்திருந்தது.

    அரைசதம் அடித்தபின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அவருடன் இணைந்து ஜடேஜாவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    சென்னை அணிக்கு 15-வது ஓவரில் 15 ரன்களும், 16-வது ஓவரில் 17 ரன்களும், 17-வது ஓவரில் 8 ரன்களும், 18-வது ஓவரில் 14 ரன்களும் கிடைத்தன. ருதுராஜ் ஒருபக்கம் சதம் நோக்கி செல்ல, மறுமுனையில் ஜடேஜா வாணவேடிக்கை நிகழ்த்தினார்.

    19-வது ஓவரில் 12 ரன்கள் கிடைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 167 ரன்கள் அடித்தது. அப்போது ருதுராஜ் 58 பந்தில் 95 ரன்கள் எடுத்திருந்தார்.

    கடைசி ஓவரை முஷ்டாபிஜூர் ரஹ்மான் வீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஜடேஜா, 2-வது பந்தில் இமாலய சிக்ஸ் விளாசினார். 3-வது பந்தில் பவுண்டரி அடித்தார்.

    3 விக்கெட் வீழ்த்திய டெவாட்டியா

    95 ரன்கள் எடுத்த நிலையில் ருதுராஜ் 5-வது பந்தை எதிர்கொண்டார். ஐந்தாவது பந்தில் ரன் அடிக்காத நிலையில் கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கி சதம் அடித்தார் ருதுராஜ் கெய்க்வாட். கடைசி ஓவரில் 22 ரன்கள் கிடைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது.

    ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்தில் 9 பவுண்டரி, 5 சிக்சருடன் 101 ரன்கள் எடுத்தும், ஜடேஜா 15 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 32 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    மந்தமான ஆடுகளத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் நிலைத்து நின்று பேட்டிங் செய்ய, டெல்லி கேப்பிடல்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
    மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். 2021 தொடரின் 46-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் 129 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. டெல்லி அணியில் அக்சார் பட்டேல், அவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர 130 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி களம் இறங்கியது. மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களும் நேர்த்தியான வகையில் பந்து வீசினர். இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா (6), தவான் (6), ஸ்டீவ் ஸ்மித் (9) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த கேப்டன் ரிஷாப் பண்ட் 22 பந்தில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் நங்கூரம் பாய்ச்சி நிற்கும் கப்பல் போல் நிலைத்து நின்று ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அக்சார் பட்டேல் 9 ரன்னிலும் வெளியேறினாலும் ஹெட்மையர் 8 பந்தில் 15 ரன்கள் எடுத்து ஸ்கோர் உயர்வுக்கு சற்று காரணமாக இருந்தார்.

    டெல்லி கேப்பிடல்ஸ் 13.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திற்கும்போது ஷ்ரேயாஸ் அய்யர் உடன் அஷ்வின் ஜோடி சேர்ந்தார். அப்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 41 பந்தில் 37 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஜோடி பிரிந்தால் மும்பை இந்தியன்ஸ் அணி, ஆட்டத்தை தன்வசமாக்கிவிடும் நிலை இருந்தது.

    மும்பை இந்தியன்ஸ் அணி

    ஆனால், அஷ்வின் ஒருபக்கம் பந்துக்கு பந்து ரன்கள் அடிக்க, மறுபக்கம் ஷ்ரேயாஸ் அய்யர் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி நோக்கி சென்றது.

    கடைசி ஓவரில் நான்கு ரன் தேவைப்பட்டது, முதல் பந்தை அஷ்வின் சிக்சருக்கு விளாசினார். இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் 19.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஷ்ரேயாஸ் அய்யர் 33 பந்தில் 33 ரன்கள் எடுத்தும், அஷ்வின் 21 பந்தில் 20 எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பல மாற்றங்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
    அபுதாபி:

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது

    அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 47-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 வெற்றி, 2 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் அணி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. 

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விவரம்

    1.டுபெலிசிஸ் 2. ருதுராஜ் கெய்க்வாட் 3. மொய்ன் அலி 4. ரெய்னா 5. ராயுடு 6. சாம் கரன் 7. ‌ஷர்துல் தாகூர் 8. ஆசிப் 9. ஹசில்வுட் 10. ஜடேஜா 11. எம்எஸ் டோனி

    ராஜஸ்தான் அணி வீரர்கள் விவரம்

    1.  எவின் லீவிஸ், 2. யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3. சஞ்சு சாம்சன், 4. ஆகாஷ் சிங் 5. துபே, 6. பிலிப்ஸ் 7. ராகுல் டெவாட்டியா, 8. மில்லர் 9. சேத்தன் சகாரியா, 10. மயங் மார்கண்டே 11. முஸ்டாபிஜுர் ரஹ்மான்.
    ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு என முக்கியமான பேட்ஸ்மேன்கள் சொதப்ப மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவரில் 129 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 46-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷாப் பண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

    அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா, டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 2-வது ஓவரில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 10 பந்தில் 7 ரன்கள் சேர்த்தார். டி காக் 19 ரன்னில் வெளியேறினார். இதுவரை சரியாக விளையாடாத சூர்யகுமார் யாதவ் இன்று நம்பிக்கையுடன் விளையாடினார். இருந்தாலும் 26 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அதன்பின் மும்பை இந்தியன்ஸ் ஸ்கோர் மந்தமான நிலையிலேயே உயர்ந்தது. சவுரப் திவாரி 15 ரன்னிலும், பொல்லார்டு 6 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    6-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்ட்யா உடன் குருணல் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். மும்பை இந்தியன்ஸ் 17 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

    18-வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா இரண்டு பவுண்டரிகள் விளாசினார். அதனால் மும்பைக்கு 9 ரன்கள் கிடைத்தது. 19-வது ஓவரை அவேஷ் கான் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழந்தார். அவர் 18 பந்தில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கவுல்டர்-நைல் 1 ரன் எடுத்த நிலையில் 4-வது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜயந்த் யாதவ் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்ட மும்பை இந்தியன்ஸ் 19-வது ஓவரில் 7 ரன்கள் எடுத்தது.

    அவேஷ் கான்

    கடைசி ஓவரை அஷ்வின் வீசினார். இந்த ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்த மும்பை இந்தியன்ஸ் இரண்டு சிக்சருடன் 13 ரன்கள் சேர்த்தது. இதனால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் அடித்துள்ளது.

    டெல்லி அணியில் அக்சார் பட்டேல், அவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
    டெல்லி அணிக்கெதிரான இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
    ஷார்ஜா:

    சார்ஜாவில் இன்று 3 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றனர். இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    மும்பை இந்தியன்ஸ் அணி விவரம்:-

    1. ரோகித் சர்மா 2. டிகாக் 3. சூர்யகுமார் யாதவ் 4. திவாரி 5. ஹர்திக் பாண்டியா 6. பொல்லார்ட் 7.குர்ணால் பாண்ட்யா 8. நாதன் கூல்டர்-நைல் 9. ஜெயந்த் யாதவ் 10 பும்ரா 11.போல்ட்

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-

    1. பிரித்வி ஷா 2. தவான் 3. ஸ்மித் 4. ஸ்ரேயாஸ் ஐயர் 5. ரிஷப் பண்ட் 6. ஹெட்மயர் 7. அக்சர் படேல் 8. அஸ்வின் 9. ரபாடா 10. ஆவேஷ் கான் 11. அன்ரிச் நார்ட்ஜே
    உலக டெஸ்ட் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வி தொடர்பாக கேப்டன் விராட் கோலி மீது ரகானே, புஜாரா ஆகியோர் அதிருப்தி அடைந்தனர் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் கடந்த ஜூன் மாதம் நடந்தது. இதில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்தது.

    இறுதிப்போட்டியில் ஏற்பட்ட இந்த தோல்வி தொடர்பாக கேப்டன் விராட் கோலி மீது ரகானே, புஜாரா ஆகியோர் அதிருப்தி அடைந்தனர்.

    அவரது செயல்பாடுகள் குறித்து இருவரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய்ஷாவை தொடர்பு கொண்டு பேசியதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

    உலக டெஸ்ட் இறுதிப் போட்டி முடிந்தபிறகு இந்திய வீரர்களுக்கு நிறைய நாள் ஓய்வு இருந்தது. அதன் பிறகே இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த காலக்கட்டத்தில்தான் இருவரும் ஜெய்ஷாவிடம் கோலியின் கேப்டன் பதவி குறித்து முறையிட்டு உள்ளனர்.

    இந்திய அணிக்கு 3 வடிவிலான போட்டியிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) கேப்டனாக இருப்பதால் கோலியின் கேப்டன் திறன் பாதிக்கப்படுவதாக கருதப்பட்டது. இதன் காரணமாகவே அவர் 20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார்.

    ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்டில் தொடர்ந்து கேப்டனாக அவர் பணியாற்றுவார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை எதிர்பார்க்க முடியும் நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் களம் இறங்க இருக்கிறது.
    புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்திலும் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் 7-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் சென்னை வலுவான நிலையில் முதல் இடத்தில் நீடிக்கும். ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியடைந்தால் பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் கூடுதல் நெருக்கடியுடன் களம் இறங்கும்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் 11 போட்டிகளில் விளையாடி 9-ல் வெற்றி பெற்று பிளே-ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. கடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை எதிர்கொண்டது. சாம் கர்ரனுக்குப் பதிலாக ஹேசில்வுட்டை டோனி தேர்வு செய்து விளையாடி வருவது ரசிகர்களுக்கு சற்று விந்தையாக இருந்தது. ஆனால் நேற்றைய போட்டியில் தன்மீது டோனி வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றினார் ஹேசில்வுட்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அதிரடி வீரர் ஜேசன் ராயை 2 ரன்னில் வெளியேற்றியதுடன் அபிஷேக் சர்மா (18), அப்துல் சமாத் (18) ஆகியோரை வீழ்த்தி மிடில் ஆர்டர் பேட்டிங்கை சீர்குழைத்தார். பிராவோவை பற்றி சொல்லவே வேண்டும்.  கேன் வில்லியம்சன் (11), பிரியம் கார்க் (7) ஆகியோரை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 134 ரன்னில் கட்டுப்படுத்த முக்கிய காரணமாக இருந்தார்.

    135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ருதுராஜ், டு பிளிஸ்சிஸ் களம் இறங்கி மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.1 ஓவரில் 75 ரன்கள் குவித்து, நெருக்கடியை குறைத்தது.

    இருந்தாலும் ருதுராஜ் (45), டு பிளிஸ்சிஸ் (41) ஆட்டமிழந்ததும் சென்னைக்கு லேசான சறுக்கல் ஏற்பட்டது. மொயீன் அலி 17 ரன்னில் ஆட்டமிழக்க, ரெய்னா 2 ரன்னில் வெளியேறினார்.

    இதுவரை ஜொலிக்காத கேப்டன் எம்.எஸ். டோனி சிறப்பாக விளையாடினார். அம்பதி ராயுடு அவரது ஸ்டைலில் விளையாட, தல டோனி சிக்சர் அடித்து இலக்கை எட்ட சென்னை அணி  2 பந்துகள் மீதமுள்ள நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

    பீல்டிங், பேட்டிங், பந்து வீச்சு என மூன்று துறைகளிலும் சி.எஸ்.கே. அசத்தி வருகிறது. ஹேசில்வுட் விக்கெட் வீழ்த்தியிருப்பது சென்னை அணிக்கு கூடுதல் பலம். ரெய்னா மட்டும் இன்னும் பாஃர்முக்கு வரவில்லை. அவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் காட்டாற்று வெள்ளம்போல் செல்லும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கட்டுப்படுத்துவது கஷ்டமாகும்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் கடைசியாக ஆர்.சி.பி. அணியை எதிர்கொண்டது. தொடக்க வீரர் லீவிஸ் (37 பந்தில் 58 ரன்), ஜெய்ஸ்வால் (22 பந்தில் 31 ரன்) சிறப்பான தொடக்கம் கொடுத்த போதிலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பல் காரணமாக 150 ரன்களுக்கு உள்ளாகவே அடிக்க முடிந்தது. ஒரு கட்டத்தில் 11 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 9 ஓவர்களில் 49 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது பரிதாபமே.

    ராஜஸ்தான் ராயல்ஸ்

    பந்து வீச்சில் முஸ்டாபிஜூர் ரஹ்மான், சேதன் சகாரியா, ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் மற்ற பந்து வீச்சாளர்கள் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பலவீனம். குறிப்பாக தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் அணியில் இல்லை. பேட்டிங்கே நம்பியே அணி உள்ளது.

    மொத்தத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு அணியாக வீறுகொண்டு விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ராஜஸ்தான் ராயல் அணியால் ஈடுகொடுக்க முடியுமா? என்பது சந்தேகமே.

    அபு தாபியில் இதுவரை ஐந்து போட்டிகள் நடந்துள்ளன. இதில் நான்குமுறை சேஸிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது.
    பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தோல்வியடைந்துள்ளதால், பிளேஆஃப் சுற்றுக்கான பிரகாச வாய்ப்பை தவறவிட்டுள்ளது.
    ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி வெற்றி பெற்றதால் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

    தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் (9 வெற்றி), டெல்லி கேப்பிடல்ஸ் (8 வெற்றி) அணிகள் பிளே-ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளன. ஆர்.சி.பி. 7 வெற்றிகள் மூலம் 3-வது இடத்தில் உள்ளது. இன்றும் மூன்று போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். இல்லையென்றால் ரன்ரேட் முறையில் தகுதி பெறும்.

    4-வது அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் கொல்கத்தா, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் 12 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்றுள்ளன. மும்பை இந்தியன்ஸ் 11 போட்டியில் விளையாடி 5 வெற்றியும், ராஜஸ்தான் ராயல்ஸ் 11-ல் விளையாடி 4-ல் வெற்றியும் பெற்றுள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் நாளை சென்னைக்கு எதிராக விளையாடுகிறது. இதில் தோல்வியடைந்தால் பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை இழக்கும். மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் ரன்-ரேட் அடிப்படையில் தகுதி பெற வாய்ப்பு உண்டு.

    பஞ்சாப் கிங்ஸ் அணி

    கொல்கத்தா, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அடுத்த இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். ஒன்றில் தோற்றால் கூட வாய்ப்பை இழக்கும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்னும் 3 போட்டிகள் உள்ளன. இரண்டில் வெற்றி பெற்றால் ரன்ரேட் அடிப்படையில் தகுதி பெற வாய்ப்புள்ளது. மூன்றிலும் வெற்றி பெற்றால் பிளே-ஆஃப் சுற்றை உறுதி செய்யும். இதனால் நான்கு அணிகள் இடையே ஒரு இடத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது.
    கே.எல். ராகுல் 67 ரன்னில் அவுட்டாக, ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொள்ள, இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ஐ.பி.எல். 2021 தொடரின் 45-வது லீக் ஆட்டம் இன்று துபாயில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெங்கடேஷ் அய்யர் (49 பந்தில் 67 ரன்), திரிபாதி (26 பந்தில் 34 ரன்), நிதிஷ் ராணா (18 பந்தில் 31 ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.

    பின்னர் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களம் இறங்கியது. கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கம் அமைத்தனர். மயங்க் அகர்வால் 27 பந்தில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.5 ஓவரில் 70 ரன்கள் சேர்த்தது.

    அதன்பின் வந்த நிக்கோலஸ் பூரண் 12 ரன்னிலும், மார்கிராம் 18 ரன்னிலும், தீபக் ஹூடா 3 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. என்றாலும் மறுமுனையில் அரைசதம் அடித்து போரட்டத்தில் ஈடுபட்டார் கே.எல். ராகுல்.

    5-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ஷாருக்கான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 21 பந்தில் 32 ரன்கள் என்ற நிலையில் களம் இறங்கிய ஷாருக்கான் 17-வது ஓவரின் 5-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். சவுத்தி வீசிய அடுத்த ஓவரில் பவுண்டரி ஒன்று விளாசினார். இதனால் பஞ்சாப் அணிக்கு சற்று நெருக்கடி குறைந்து கடைசி இரண்டு ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது.

    ஷிவம் மாவி வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தையும், கடைசி பந்தையும் பவுண்டரிக்கு விரட்டினார் கே.எல். ராகுல். இதனால் பஞ்சாப் அணிக்கு 10 ரன்கள் கிடைக்க கடைசி ஓவரில் ஐந்து ரன்கள் தேவைப்பட்டது.

    கொல்கத்தா வீரர்கள்

    கடைசி ஓவரை வெங்கடுஷ் அய்யர் வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்ட நிலையில், 2-வது பந்தில் கே.எல். ராகுல் ஆட்டமிழந்தார். அவர் 55 பந்தில் 67 ரன்கள் சேர்த்தார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 4 பந்தில்  4 ரன்கள் தேவைப்பட்டது. ஷாருக்கான் 3-வது பந்தை சிக்சருக்கு தூக்க பஞ்சாப் கிங்ஸ் 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஷாருக்கான் 9 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் அய்யர் அதிரடியாக ஆடி 67 ரன்கள் எடுத்தார்.
    துபாய்:

    ஐ.பி.எல். தொடரின் 45-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் 7 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ராகுல் திரிபாதி வெங்கடேஷ் அய்யருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் ரன் வேகம் அதிகரித்தது.

    குறிப்பாக, வெங்கடேஷ் அய்யர் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். இவர் 49 பந்தில் ஒரு சிக்சர், 9 பவுண்டரி உள்பட 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். திரிபாதி 34 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.  கேப்டன் மார்கன் 2 ரன்னில் அவுட்டானார்.

    67 ரன்கள் எடுத்த வெங்கடேஷ் அய்யர், ஷுப்மான் கில் போல்டு

    கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய நிதிஷ் ராணா 18 பந்தில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

    பஞ்சாப் அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட், பிஷ்னோய் 2 விக்கெட்டும், ஷமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    ×