என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டி20 உலகக் கோப்பை சூப்பர்12 சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
    துபாய்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சூப்பர் 12 சுற்று தொடங்குகிறது. சூப்பர் 12 சுற்றில் குரூப்- 1ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேசம், குரூப்-2ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். 

    சூப்பர் 12 சுற்றின் முதல் நாளான இன்று மாலை 3.30 மணிக்கு அபுதாபியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-தென்ஆப்ரிக்கா மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்கிறது.

    ஆஸ்திரேலியா அணி: ஆரோன் பின்ச், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹாசில்வுட்.

    தென் ஆப்பிரிக்கா அணி: டெம்பா பவுமா, குயின்டன் டி காக், ஐடன் மார்க்ராம், ராசி வான் டெர் டஸன், டேவிட் மில்லர், ஹென்றிச் கிளாசன், டுவைன் பிரிட்டோரியஸ், ரபாடா, கேசவ் மகராஜ், அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்ஸி.
    டி 20 உலக கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடிய நெதர்லாந்து 3 போட்டிகளிலும் தோற்றதால் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
    சார்ஜா:

    டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைவதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. இதையடுத்து, சூப்பர் 12 சுற்று போட்டிகள் இன்று தொடங்குகிறது.

    இதற்கிடையில், உலக கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடிய நெதர்லாந்து அணி 3 போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இதனால் சூப்பர் 12 சுற்றுக்கு  தகுதி பெறும் வாய்ப்பை இழந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

    இந்நிலையில், உலக கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறாததால் வருத்தமடைந்த நெதர்லாந்து அணி ஆல்-ரவுண்டர் ரியான் டென் டஸ்ஜெட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரிடையராவதாக நேற்று அறிவித்தார். 

    ரியான் 2006-ல் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். 2011-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ரியான் 119 ரன்கள் குவித்தார். அதேபோல், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 106 ரன்கள் குவித்தார். ரியான் டென் டெஸ்ஜெட் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 1,541 ரன்கள் குவித்துள்ளார்.

    கொரோனா அச்சத்தால் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கைவிடப்பட்டது.
    லண்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி கடந்த மாதம் மான்செஸ்டரில் நடக்க இருந்த இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட மறுத்தது. கொரோனா அச்சத்தால் இந்திய வீரர்கள் பின்வாங்கியதால் இந்த டெஸ்ட் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. தொடர்ந்து பலக்கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த டெஸ்டை வேறொரு நாளில் நடத்துவது என்று இரண்டு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஒப்புக் கொண்டன.

    இந்த நிலையில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இந்த டெஸ்ட் அடுத்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடைபெறும் என்று நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. முன்பு இந்த டெஸ்ட் மான்செஸ்டரில் நடத்த திட்டமிடப்பட்டது. இப்போது அது எட்ஜ்பஸ்டனுக்கு மாற்றப்பட்டு உளளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டியை தொடர்ந்து இந்திய அணி அங்கு மூன்று 20 ஓவர் (ஜூலை 7, 9, 10) மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் (ஜூலை 12, 14, 17) விளையாடுகிறது.

    திறமை தான் நிரந்தரம். எனவே டேவிட் வார்னரை அணியில் இருந்து நீக்கக்கூடாது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.
    துபாய்:
     
    ஐ.சி.சி. டி20 உலக கோப்பை 2021 கிரிக்கெட் போட்டி கடந்த 17-ம் தேதி தொடங்கி தற்போது ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன.

    இந்த போட்டியின் சூப்பர் 12 சுற்று இன்று முதல் தொடங்குகிறது. அபுதாபியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. 

    இதற்கிடையே, ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர், சமீப காலமாக நடந்த ஆட்டங்களில் சிறப்பாக செயல்படவில்லை. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் 0, 2 என ரன்கள் எடுத்த வார்னர், கடைசி ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

    இந்நிலையில், டேவிட் வார்னரை அணியில் இருந்து நீக்கிவிடக்கூடாது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வார்னே கூறுகையில், டேவிட் வார்னர் மிகத்திறமையான வீரர். சமீபத்தில் அவர் சரியாக விளையாடவில்லை, நிறைய ரன்கள் எடுக்கவில்லை. ஆனால் முக்கியமான போட்டிகளில் அதிக ரன்கள் எடுக்கும் வீரர்களில் ஒருவர். 

    திறமை தான் நிரந்தரம். வார்னர் விஷயத்தில் இதுதான் சரி. எனவே அவரை அணியிலிருந்து நீக்கிவிடக் கூடாது. முதல் இரு ஆட்டங்கள் முக்கியமானவை. அவர் நன்றாக விளையாட ஆரம்பித்துவிட்டால் டி20 உலக கோப்பை போட்டியின் சிறந்த வீரர்களில் ஒருவராக இருப்பார் என தெரிவித்துள்ளார்.

    முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி, இலங்கை பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 10 ஓவர்களில் 44 ரன்களுக்குள் சுருண்டது.
    சார்ஜா:

    டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன. ஸ்காட்லாந்து, வங்காளதேசம், இலங்கை மற்றும் நமீபியா ஆகிய 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. 

    இந்நிலையில், முதல் சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் உள்ள இலங்கை-நெதர்லாந்து அணிகள் மோதின.

    ஷார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தது.  முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி, இலங்கை பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. கொலின் ஆக்கர்மேன் (11) தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 10 ஓவர்களில் 44 ரன்களுக்குள் சுருண்டது. 

    இதையடுத்து 45 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 77 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. துவக்க வீரர் நிசங்கா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அசலங்கா 6 ரன்கள் அடித்தார். சிறப்பாக ஆடிய குசால் பெரேரா ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுக்க, இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது.
    சார்ஜா:

    டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்றுடன் முடிகின்றன. நாளை முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. ஸ்காட்லாந்து, வங்காளதேசம் மற்றும் இலங்கை ஆகிய 3 அணிகளும் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், கடைசி அணியை தீர்மானிக்கும் லீக் போட்டி ஷார்ஜாவில் இன்று நடந்தது. இப்போட்டியில் குரூப்-ஏ பிரிவில் உள்ள அயர்லாந்து மற்றும் நமீபியா அணிகள் மோதின.

    டாஸ் வென்று பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. துவக்க வீரர்கள் பால் ஸ்டர்லிங் 38 ரன்கள், கெபின் ஓ பிரையன் 25 ரன்கள், கேப்டன் ஆண்டி பார்பிர்னி 21 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்வரிசை வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    டேவிட் வீஸ்

    இதையடுத்து 126 ரன்கள் என்ற இலக்கை துரத்திய நமீபியா அணியின் தொடக்க வீரர்கள் கிரேக் வில்லியம்ஸ் 15 ரன்னிலும், ஜேன் க்ரீன் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் எராஸ்மஸ், டேவிட் வீஸ் இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடி கடைசி வரை நின்று வெற்றியை உறுதி செய்தனர். எராஸ்மஸ் 53 ரன்களும் (நாட் அவுட்), டேவிட் வீஸ் 28 ரன்களும் (நாட் அவுட்) எடுத்தனர். 

    18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து நமீபியா அணி 126 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நமீபியா அணி, முதல் முறையாக டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.  
    20 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்தியா முன்னணியில் இருப்பதாக பிரெட் லீ தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ ஐ.சி.சி. இணையதளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கட்டுரையில் அவர் கூறியதாவது:

    20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் நாங்கள் அதிகமாக சாதித்ததில்லை. அதை மாற்றுவதற்கு இதுவே சரியான நேரம். அதற்கு எல்லா வகையிலும் நாங்கள் முயற்சிக்க வேண்டும். ஆனால் இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து போன்ற வலுவான அணிகள் உள்ள நிலையில் கோப்பையை வெல்வது எளிதானது அல்ல. 

    இந்த ஆஸ்திரேலிய அணியில் திறமையான வீரர்கள் நிறைந்துள்ளனர். இதில் டேவிட் வார்னர் முக்கிய வீரராக இருப்பார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் நடத்தப்பட்ட விதத்தால் அவரது நம்பிக்கை குறைந்திருக்கலாம். ஆனால் அவர் முக்கியமான தருணத்தில் ஜொலிக்கக் கூடியவர்.

    உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. இந்த உலக கோப்பையில் அதிக ரன் குவிப்பில் இந்தியாவின் லோகேஷ் ராகுலும், அதிக விக்கெட் வீழ்த்துவதில் முகமது ஷமியும் முதலிடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
    ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியின் டேவி 3 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
    அல் அமீரத்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டியில் இன்று 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள ஓமன், ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஓமன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 122 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக லியாஸ் 37 , மசூத் 34 ரன்னும் எடுத்தனர்.

    ஸ்காட்லாந்து சார்பில் டேவி 3 விக்கெட், ஷ்ரீப், லீஸ்க் தலா விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்கியது. அதிகபட்சமாக கைல் கோட்சர் 41 47 ரன்கள் எடுத்தார். பெர்ரிங்டன் 31 ரன்னும், மேத்யூ கிராஸ் 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இறுதியில், 17 ஓவரில் ஸ்காட்லந்து அணி 2 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ஜோஷ் டேவிக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுக்கு ஸ்காட்லாந்து அணி முன்னேறியது.
    182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி, துவக்கம் முதலே வங்காளதேச பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.
    அல் அமீரத்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் முதல் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ‘பி’ பிரிவில் இன்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசம்-பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய வங்காளதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் மஹ்முதுல்லா 50 ரன்கள் சேர்த்தார். ஷாகிப் அல் ஹசன் 46 ரன்கள், லித்தன் தாஸ் 29 ரன்கள் சேர்த்தனர்.

    இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி, துவக்கம் முதலே வங்காளதேச பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். 29 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    இந்த நெருக்கடியான சூழ்நிலையில், கிப்லின் டோரிகா ஆறுதல் அளிக்கும் வகையில் விளையாடி அரை சதத்தை நெருங்கினார். எனினும் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பப்புவா நியூ கினியா அணி 97 ரன்களில் சுருண்டது.  கிப்லின் டோரிகா 34 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 46 ரன்கள் சேர்த்தார். 

    வங்காளதேசம் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட் வீழ்த்தினார். 
    20 ஓவர் உலக கோப்பையில் இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகமாக இருக்கும் அணிகளுக்கு எதிராக அஸ்வின் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    துபாய்:

    20 ஓவர் உலக கோப்பையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ‘சூப்பர் 12’ சுற்றில் நேரடியாக விளையாடுகிறது.

    குரூப்-2 பிரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் முதல் சுற்றில் இருந்து 2 அணிகள் ஆகியவை அந்த பிரிவில் உள்ளன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 24-ந் தேதியும், நியூசிலாந்துடன் 31-ந் தேதி நவம்பர் 3-ந் தேதி ஆப்கானிஸ்தானுடனும் மோதுகிறது. தகுதி சுற்று அணிகளுடன் 5 மற்றும் 8-ந் தேதிகளில் மோதுகிறது.

    இந்த போட்டிகளுக்கு முன்பு இந்திய அணி விளையாடிய 2 பயிற்சி ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்தது.

    இந்த பயிற்சி ஆட்டங்கள் மூலம் இந்திய அணியில் விளையாடும் 11 வீரர்கள் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் களம் இறங்குவார்கள். அதைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரி‌ஷப்பண்ட், ஹர்த்திக் பாண்ட்யா, ஜடேஜா என்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

    பந்துவீச்சாளர்கள் சூழலுக்கு ஏற்ப தேர்வு செய்யப்படுவார்கள். இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகமாக இருக்கும் அணிகளுக்கு எதிராக அஸ்வின் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் அவர் இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. மற்ற போட்டிகளில் ராகுல் சாகருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல வருண் சக்கரவர்த்தியும் போட்டி களத்தில் இருக்கிறார்.

    வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை பும்ரா, முகமது ‌ஷமி இடம் பெறுவது உறுதியாகி உள்ளது. அதே நேரத்தில் புவனேஸ்வர் குமாரும் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

    விளையாடும் எதிரணி மற்றும் ஆடுகள தன்மையை பொறுத்து இந்திய பந்து வீச்சாளர்கள் தேர்வு இருக்கும்.

    இரு புதிய அணிகள் குறித்த விவரங்களை வருகிற 25-ந் தேதி துபாயில் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு நாட்டு வீரர்கள் ஒரு அணியில் விளையாடியதால் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டிக்கு பெரும் வரவேற்பு இருந்தது.

    வர்த்தக ரீதியிலும் இந்த போட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    ஐ.பி.எல். போட்டியில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகள் இடம்பெறுகின்றன. மொத்தம் 10 அணிகள் அடுத்த சீசனில் விளையாடும்.

    ஐ.பி.எல். புதிய அணிகளுக்கான ஏலம் டெண்டர் நடைமுறையை கிரிக்கெட் வாரியம் கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் வெளியிட்டது. டெண்டருக்கான விண்ணப்பம் ரூ.10 லட்சம் ஆகும். இந்த தொகை திரும்ப வழங்கப்பட மாட்டாது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். அணியை வாங்க பிரபல கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் விருப்பம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள இந்த கிளப் உலகம் முழுக்க பிரசித்தி பெற்றது.

    மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் கிரிக்கெட் அணியை வாங்கும்பட்சத்தில் ஐ.பி.எல். புகழ் மேலும் விரிவடையும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    மான்செஸ்டர் யுனைடெட் விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து ஐ.பி.எல். அணிகளுக்கான டெண்டர் தேதியை கிரிக்கெட் வாரியம் நீட்டித்து இருந்தது.

    புதிய ஐ.பி.எல். அணிக்கான ஏல விண்ணப்பத்தை அக்டோபர் 5-ந் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏல விண்ணப்பத்தை பெறுவதற்கான காலக்கெடு 20-ந் தேதி வரை நீட்டித்தது.

    இரு புதிய அணிகள் குறித்த விவரங்களை வருகிற 25-ந் தேதி துபாயில் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு புதிய அணிகள் மூலம் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று கருதப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய மைதானத்தை கொண்டிருக்கும் அகமதாபாத் நகரின் பெயரில் ஒரு அணி உருவாகும்.

    ராகுல் டிராவிட்டுக்கு இதுவரை யாரும் பெறாத வகையில் இந்திய பயிற்சியாளர் பதவிக்கு ரூ.10 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி உள்ளார். 20 ஓவர் உலக கோப்பையுடன் அவரது பதவி காலம் முடிவடைகிறது. அவர் மேலும் அந்த பதவியில் நீடிக்க விரும்பவில்லை.

    முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார். உலக கோப்பை போட்டிக்கு பிறகு அவர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கிறார்.

    ராகுல் டிராவிட்டுக்கு இதுவரை யாரும் பெறாத வகையில் பயிற்சியாளர் பதவிக்கு ரூ.10 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. இதேபோல பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த பரத் அருணுக்கு பதிலாக மாம்ரே புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார்.

    இதற்கிடையே பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வரவேற்று இருந்தது. இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு அபய் சர்மா விண்ணப்பித்து உள்ளார். அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஆர்.ஸ்ரீதர் இருந்தார். அவரது பதவிக்கு அபய் சர்மா விருப்பம் தெரிவித்து உள்ளார்.

    52 வயதான அபய் இந்திய ‘ஏ’ அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு பொறுப்பு வகித்து உள்ளார். தேசிய பெண்கள் அணிக்கும் அவரது பங்களிப்பு இருந்துள்ளது.

    பயிற்சியாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 3-ந்தேதி ஆகும்.

    ×