என் மலர்tooltip icon

    விளையாட்டு

    அயர்லாந்து அணி ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது.
    அபுதாபி:

    டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற 8வது ஆட்டத்தில் அயர்லாந்து அணியை இலங்கை அணி எதிர்கொண்டது. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது. அயர்லாந்து தரப்பில் ஜோசுவா லிட்டில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கை அணியில் பதும் நிஷன்கா மற்றும் ஹஸரங்கா ஆகியோர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். நிஷன்கா 61 ரன்களும், ஹஸரங்கா 71 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.

    அதன்பின், 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஸ்டிர்லிங் 7 ரன்களிலும், கெவின் ஓ ப்ரைன் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் பால்பிரின் நிலைத்து நின்று ஆடி 39 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேம்பெர் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மற்ற வீரர்கள் அனைவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.  இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 18.3 ஓவர்களில் 101 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்த தோல்வியின் மூலம், அயர்லாந்து அணி ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது.

    இலங்கை அணி தரப்பில் தீக்‌ஷனா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம், இலங்கை அணி 4 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம், இலங்கை அணி சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி பெறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
    நெதர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய லீக் ஆட்டத்தில் நமீபியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
    அபுதாபி:

    ஐ.சி.சி. 20 ஓவர் உலகக்கோப்பை 2021 கிரிக்கெட் போட்டி கடந்த 17 ஆம் தேதி தொடங்கி தற்போது ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. 

    இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற நமீபியா அணியின் கேப்டன் எராஸ்மஸ், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து நெதர்லாந்து அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மேக்ஸ் ஒடொவுட் 56 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். இது தவிர அதிகபட்சமாக கோலின் அகெர்மேன் 35 ரன்கள் அடித்து கேட்ச் ஆனார்.

    இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி நமீபியா அணி களமிறங்கியது. அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் வெய்ஸ் 66 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதையடுத்து நமீபியா அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    துபாய்:

    துபாயில் இன்று ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தனது 2-வது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில், ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. 

    இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், பேட்டிங்கை தேர்வு செய்தார். அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர்(1) மற்றும் ஆரோன் பிஞ்ச்(8) தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்து வெளியேறினர். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ்(0) கேட்ச் ஆகி வெளியேறினார்.

    இவ்வாறு ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், ஸ்டீவன் ஸ்மித்-மேக்ஸ்வெல் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அரைசதத்தைக் கடந்த ஸ்டீவன் ஸ்மித், 57 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். க்ளென் மேக்ஸ்வெல் 37 ரன்களில் போல்ட் ஆனார். மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 25 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

    இறுதியாக ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 2 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார், ராகுல் சாஹர் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 
    இதையடுத்து 153 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல்-ரோகித்சர்மா களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 68 ரன்கள் குவித்தது. 39 ரன்கள் இருந்த நிலையில் ராகுல் கேட்ச் என்ற முறையில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய ரோகித் 60 ரன்கள் எடுத்து ரிட்டேட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

    இதனையடுத்து சூர்யகுமார் யாதவ் 38, ஹர்திக் பாண்ட்யா 14 ஜோடி அதிரடியாக விளையாடி இந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அகர் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
    ஜம்மு- காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், பாகிஸ்தானுக்கு எதிரான டி20-யில் இந்தியா விளையாடக்கூடாது என்ற கருத்து வலுத்து வருகிறது.
    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் வருகிற 24-ந்தேதி மோதுகின்றன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடுவதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.

    மத்திய மந்திரி கிரிராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘‘இந்தியா- பாகிஸ்தான் இடையே உறவுகள் நல்ல முறையில் இல்லை. காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடத்தக்கூடாது. இதுகுறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றார்.

    மற்றொரு மத்திய மந்திரி ராம்தாஸ்அத்வாலே, ‘‘20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது’’ என்று எதிர்ப்பு தெரிவித்தார். பஞ்சாப் மந்திரி ஒருவர் அளித்த பேட்டி யில், ‘‘இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உலக கோப்பை போட்டியை ரத்து செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தானுடனான போட்டியை ரத்து செய்ய முடியாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பி.சி.சி.ஐ.-யின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது:-

    ஜம்மு காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு ஐ.சி.சி.யுடன் பி.சி.சி.ஐ. ஒப்பந்தம் செய்துள்ளது. போட்டியில் பங்கேற்போம் என உறுதி அளிக்கப்பட்டு விட்டது.

    எனவே இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டியை ரத்து செய்ய முடியாது. ஐ.சி.சி.யிடம் அளித்த உறுதிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மீற முடியாது.

    எந்த நாட்டு அணியுடனும் விளையாட முடியாது என்று மறுக்கவும் முடியாது. ஐ.சி.சி. தொடர்பான போட்டிகளில் இந்திய அணி நிச்சயமாக விளையாடும்.

    இவ்வாறு ராஜீவ் சுக்லா கூறினார்.
    ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற்றுவரும் டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளது என மைக்கேல் வாகன் கணித்துள்ளார்.
    இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

    20 ஓவர் உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்குதான் அதிகமான வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன். ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் இல்லாவிட்டாலும் அந்த அணி வலுவாக இருக்கிறது.

    கேப்டன் மோர்கன் பேட்டிங்கில் சிறப்பாக இல்லாவிட்டாலும் அணியை வழிநடத்திச் செல்வதில் மிகவும் சிறந்தவர்.

    20 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவின் நிலை குறித்து எனக்கு தெரியவில்லை. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் இங்கிலாந்துக்கு கடும் சவாலாக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் குறைவான வாய்ப்பே இருக்கிறது. மேக்ஸ்வெல் ஒருவரே அந்த அணியில் சிறப்பாக இருக்கிறார்.

    20 ஓவர் உலக கோப்பை நடைபெறும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆடுகளங்கள் வித்தியாசமானது. ஐ.பி.எல். போட்டிகளில் இதை பார்க்க முடிந்தது. 150 முதல் 160 ரன் வரை நல்ல ஸ்கோராக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    2-வது வெற்றியை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் இலங்கை- அயர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
    7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடைபெற்று வருகிறது. 8 நாடுகள் பங்கேற்றுள்ள முதல் சுற்று ஆட்டங்களில் இதுவரை 6 போட்டிகள் முடிந்துள்ளன.

    ‘ ஏ’ பிரிவில் இலங்கை, அயர்லாந்து அணிகள் தலா ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று உள்ளன. நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகள் தலா ஒரு தோல்வியுடன் புள்ளி எதுவும் பெறவில்லை. ‘பி’ பிரிவில் ஸ்காட்லந்து 4 புள்ளியுடனும் , வங்காளதேசம், ஓமன் தலா 2 புள்ளியுடனும் உள்ளன. பப்புவா நியூ கினியா புள்ளி எதுவும் பெறவில்லை.

    லீக் முடிவில் 2 பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது ரவுண்டான சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும்.

    4-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்களும் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபியில் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஏ பிரிவில் உள்ள நமீபியா- நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் முதல் வெற்றிக்காக காத்திருக்கின்றன.

    இரவு 7.30 மணிக்கு இதே பிரிவில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் இலங்கை- அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளுமே 2-வது வெற்றியை பெற்று சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளன. முன்னாள் சாம்பியனான இலங்கை தொடக்க ஆட்டத்தில் நமீபியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. பலம் வாய்ந்த அந்த அணி அயர்லாந்தை வீழ்த்தும் வேட்கையில் இருக்கிறது.

    அயர்லாந்து

    அயர்லாந்து முதல் ஆட்டத்தில் நெதர்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேரடியாக 2-வது சுற்றில் விளையாடுகிறது. இந்தியா முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.
    துபாய்:

    7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் அரங்கேறி வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட தரவரிசையில் ‘டாப்-8’ இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக ‘சூப்பர்-12’ சுற்றில் களம் இறங்குகின்றன. சூப்பர்-12 சுற்றில் விளையாட இருக்கும் அணிகள் தங்களை தயார்படுத்தி கொள்வதற்கு பயிற்சி ஆட்டங்களில் ஆடுகின்றன.

    துபாயில் இன்று (புதன்கிழமை) மாலை நடைபெறும் தனது 2-வது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

    முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடிய லோகேஷ் ராகுல், இஷான் கிஷன் அரைசதம் விளாசி அசத்தினர். விராட்கோலி, சூர்யகுமார் யாதவ் சோபிக்கவில்லை. பந்து வீச்சில் முகமது ஷமி 3 விக்கெட்டும், பும்ரா, ராகுல் சாஹர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். புவனேஷ்வர்குமார் 54 ரன்கள் வாரி வழங்கியதுடன் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. ஆர்.அஸ்வின் பந்துவீச்சில் சிக்கனத்தை காட்டினார்.

    கடந்த ஆட்டத்தில் விளையாடாத தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குர், சுழற்பந்து வீச்ச்சாளர் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பாக தனது பேட்டிங் வரிசையை சோதித்து இறுதி செய்ய இந்திய அணி இந்த ஆட்டத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள முயற்சிக்கும்.

    ஆஸ்திரேலிய அணி தனது முந்தைய பயிற்சி ஆட்டத்தில் ஒரு பந்து மீதம் இருக்கையில் 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது. பேட்டிங்கில் டேவிட் வார்னர், மேத்யூ வேட் தவிர மற்றவர்கள் கணிசமாக பங்களிப்பை அளித்தனர். ஜோஷ் இங்லிஸ் கடைசி ஓவரில் 2 பவுண்டரிகள் விரட்டி அணி வெற்றி இலக்கை கடக்க உதவினார்.

    ஐ.பி.எலில் சோடை போன வார்னர், முதலாவது பயிற்சி ஆட்டத்திலும் டக்-அவுட் ஆனது அந்த அணி நிர்வாகத்துக்கு கவலை அளித்துள்ளது. இனி வார்னர் அவ்வளவு தான் என்ற விமர்சனங்களும் கிளம்பியுள்ளன. ஆனால் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள சக வீரர் மேக்ஸ்வெல், ‘வார்னரின் திறமை மீது சந்தேகப்பட்டால் நிச்சயம் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் தற்போதைய நிலைமையை மாற்றப்போகிறார். மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அவர் சூப்பர் ஸ்டார். நிறைய ரன்கள் குவித்துள்ளார். எங்கள் அணியில் மிகப்பெரிய வீரராக அவர் இருப்பார்’ என்றார்.

    இரு அணியிலும் தரமான வீரர்கள் இருப்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    அபுதாபியில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் சந்திக்கின்றன. அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டம் ஒன்றில் பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. துபாயில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இன்னொரு பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ்-ஆப்கானிஸ்தான் அணிகள் களம் காணுகின்றன.
    சிறப்பாக பந்து வீசிய ஓமன் அணியின் பிலால் கான் மற்றும் பய்யாஸ் பட் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
    மஸ்கட்:

    டி20 உலகக்கோப்பை தொடரில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில் வங்கதேசம்-ஓமன் அணிகள் பலப்பரிட்சை நடத்தின.

    அல் அமீரட் நகரத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக நைம் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர்.

    லிட்டன் தாஸ் 6 ரன்களில் அவுட் ஆகி வெளியேறிய போதிலும், நைம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். அவர் 50 பந்துகளில் 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    பின்னர் வந்த சகீப் அல் ஹசன் 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய கேப்டன் மஹ்முதுல்லா 10 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். இறுதியில் வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக பந்து வீசிய ஓமன் அணியின் பிலால் கான் மற்றும் பய்யாஸ் பட் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    பின்னர், 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணியின் தொடக்க வீரர்களாக அகிப் மற்றும் ஜத்திந்தர் சிங் களமிறங்கினர். அகிப் 6 ரன்களில் வெளியேறினார்.

    சற்று நிலைத்து நின்று ஆடிய தொடக்க வீரர் ஜத்திந்தர் சிங் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் வங்கதேச அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் ஓமன் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ஓமன் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி அபார வெற்றிபெற்றது.

    வங்கதேசம் தரப்பில் அந்த அணியின் முஸ்தபிஷிர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளையும், சகீப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட வங்காளதேச அணியின் சகீப் அல் ஹசன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
    பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியின் ரிச்சி பெர்ரிங்டன் சிறப்பாக அரை சதமடித்து 70 ரன்கள் எடுத்தார்.
    அல் அமீரத்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டியில் இன்று 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக பெர்ரிங்டன் 70 ரன்கள் எடுத்தார். கிராஸ் 45 ரன்கள் எடுத்தார்.

    பப்புவா நியூ கினியா சார்பில் கபுவா மோரியா 4 விக்கெட்டும், சாட் சோபர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பப்புவா நியூ கினியா அணி களமிறங்கியது. அதிகபட்சமாக நார்மன் வனுவா 47 ரன்கள் எடுத்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    இறுதியில், 19.3 ஓவரில் பப்புவா நியூ கினியா அணி 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து வெற்றி பெற்றது.

    ஸ்காட்லாந்து சார்பில் ஜோஷ் டேவி 4 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருது ரிச்சி பெர்ரிங்டனுக்கு வழங்கப்பட்டது.
    இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும், ஐ.பி.எல். தொடரிலும் கே.எல். ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பாக பேட்டிங் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய லோகேஷ் ராகுல் 51 ரன்னும், இஷான் கி‌ஷன் 70 ரன்னும் எடுத்தனர்.

    இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா- லோகேஷ் ராகுல் களம் இறங்குவார்கள் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    ஐ.பி.எல்.லுக்கு முன்பு சூழ்நிலைகள் வித்தியாசமாக இருந்தன. தற்போது லோகேஷ் ராகுலை டாப் வரிசையில் இருந்து கீழே இறக்குவது கடினமானது. ரோகித் சர்மா உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்.

    பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் நான் 3-வது வரிசையில் களம் இறங்குவேன். ரோகித் சர்மாவுடன் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக விளையாடுவார்.

    முதல் ஆட்டத்தில் எப்படி தொடங்க போகிறோம் என்ற அடிப்படையில் நாங்கள் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கிறோம். பயிற்சி ஆட்டத்தில் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்களின் செயல்பாடுகளை நாங்கள் பார்ப்போம்.

    விராட் கோலி

    ஒரு குழுவாக ஆற்றலையும், வேகத்தையும் உருவாக்குவதுதான் தற்போது யோசனையாக இருக்கிறது. கடந்த காலத்தில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்று இருக்கிறோம். அதே ஆற்றலை உருவாக்க விரும்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பனியின் தாக்கத்தை பொறுத்தே இந்திய அணியின் தேர்வு இருக்கும் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
    துபாய்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் மற்றும் பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகிறது.

    சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரில் பனியின் தாக்கம் ஆட்டத்தில் எதிரொலித்தது. இந்திய அணி மோதும் அனைத்து ஆட்டங்களும் இரவே நடக்கிறது. இதனால் பனியின் தாக்கம் அதிகளவில் இருக்கும்.

    இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பனியின் தாக்கத்தை பொறுத்தே இந்திய அணியின் தேர்வு இருக்கும் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    20 ஓவர் உலக கோப்பை போட்டி ஆட்டங்களில் பனியின் தாக்கம் எவ்வளவு இருக்கிறது என்பதை பார்த்து முதலில் பேட்டிங் செய்வதா? அல்லது பந்து வீசுவதா என்பதை முடிவு செய்வோம்.

    மேலும் கூடுதலாக சுழற்பந்து வீச்சாளர் அல்லது வேகப்பந்து வீச்சாளருடன் களம் இறங்குவது என்பது குறித்தும் முடிவு செய்வோம். கடந்த 2 மாதங்களாக இங்கு ஐ.பி.எல். போட்டியில் இந்திய அணி வீரர்கள் விளையாடி இருக்கிறார்கள். எனவே அவர்கள் அதிகளவில் தயாராக வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

    பயிற்சி ஆட்டத்தில் எல்லோரும் பந்து வீசலாம். எல்லோரும் பேட்டிங் செய்யலாம். எனவே வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பற்றி ஒரு யோசனை கிடைக்க அது நமக்கு உதவும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கடந்த ஆகஸ்டு மாதம் முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு சிந்து பங்கேற்கும் முதலாவது போட்டி இது என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
    ஒடென்சி:

    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்சி நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 24-ந் தேதி வரை நடக்கிறது. இதில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரும், உலக சாம்பியனுமான இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து கலந்து கொள்கிறார். கடந்த ஆகஸ்டு மாதம் முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு சிந்து பங்கேற்கும் முதலாவது போட்டி இது என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் சிந்து, துருக்கி வீராங்கனை நீஸ்லிஹன் யிஜித்துடன் மோதுகிறார். கடந்த வாரம் நடந்த உபேர் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் காயம் அடைந்ததால் வெளியேறிய இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானின் அயா ஒஹோரியுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் லக்‌ஷயா சென், சவுரப் வர்மா, ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், சமீர் வர்மா, காஷ்யப் ஆகியோரும், இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிக்கி ரெட்டி-அஸ்வினி ஜோடியும் இந்த போட்டியில் களம் காணுகிறது.



    ×