என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • உடலில் உண்டாகும் பிணிகள் 4448 என்று சித்த மருத்துவம் சொல்கிறது.
    • வாத நோய் தாக்கும் இடங்களைப் பொறுத்து அது வெவ்வேறு பெயர்களைப் பெறுகின்றது.

    காலம் போன கடைசியில் வாதம் வந்து வாய்த்ததே என்பது கிராமத்துப் பழமொழி. ஆம் வயது முதிர்ந்து நாடி தளர்ந்து உடல் ஒடுங்கிய வேளை இது. இந்த நேரத்தில் வாதம் வேறு வந்து வாய்த்துவிட்டதே என்ற வேதனையின் பிரதிபலிப்பே இந்தப் பழமொழியாகும்.

    உடலில் உண்டாகும் பிணிகள் 4448 என்று சித்த மருத்துவம் சொல்கிறது. இதில் வாதம், என்பது 80 வகை என்று வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது. இவற்றின் குணங்களைத் துல்லியமாக விளக்குகிறது யூகிமுனி வைத்திய காவியம் என்னும் சித்தர் நூல். மேற்கூறியபடி வலியென்று சொல்லப்படும் வாதக்குற்றம் மிகுதலே வாத நோயாகும். இன்னும் விளக்கமாகச் சொன்னால் நரம்பு செல்களில் கெட்ட நீர் தங்கித் தசைகளில் ஊறி வாயு அதிகரித்து வரும் நோயே வாத நோயாகும்.

    வாத நோய் தாக்கும் இடங்களைப் பொறுத்து அது வெவ்வேறு பெயர்களைப் பெறுகின்றது. உதாரணமாக மூட்டுகளைத் தாக்கினால் மூட்டு வாதம் என்றும், முகத்தைத் தாக்கி முகம் கோணிக் கொண்டால் முக வாதம் என்றும், சர்வ அங்கங்களையும் தாக்கினால் சர்வாங்க வாதம் என்றும் பெயர்களைப் பெறுகிறது. இவ்வாறாக 80 வகை வாதங்களில் மனிதனை அதிகமாகத் தாக்குவது முடக்கு வாதம், பக்கவாதம் எனும் இருவகை வாத நோய்களாகும். ஏனெனில் வாத நோய்களிலேயே மூட்டுகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு மனிதனின் இயக்கங்கள் அனைத்தையுமே முடக்கி அவனைச் செயலற்றவனாக்கி விடுவதே முடக்கு வாதம்.


    நரம்புகள் பாதிக்கப்பட்டு உறுப்புகளை உணர்விழக்கச் செய்து மனிதனைச் செயலற்றவனாக்கி விடுகிறது பாரிசவாதம். இந்த இருவித நோய்களுமே மனிதனை அணுவணுவாகச் சித்திரவதை செய்யும் நோய்களாகும். நவீன மருத்துவத்தில் எல்லாவித வாத நோய்களுக்கும் அவர்களிடம் இருக்கும் மருந்துகள் வலி கொல்லி மாத்திரைகள், உணர்விழக்கச்செய்யும் கிரீம்கள் மட்டுமே. அவை தற்காலிகமான நிவாரணம்தான். அதைத் தொடர்ந்து உண்டு வந்தால் மூட்டு எலும்புகளைத் தேயவைத்து நோயாளியை மேலும் முடமாக்கும் அபாயம் உண்டு. அதோடு ஜீரண மண்டலமும் தோலும் பாதிக்கப்படுகின்றன.

    முடக்குவாத நோயும் நிவாரணமும்: முடக்குவாதம் என்பது உஷ்ணம் மிகுதியாலோ கிருமித் தொற்றுகளாலோ உடலில் பிரிக்கப்பட வேண்டிய நீர் உடல் அங்கங்களின் மூட்டுகளில் தங்கி இணைப்புத் தசைகளை வீங்கச் செய்து மிகுந்த வலி தரும். தொடர்ந்து காய்ச்சல் அதனால் உடலை அசைக்க முடியாத தன்மையே முடக்கு வாதம். சுருங்கச் சொன்னால் மனிதனின் இயக்கங்கள் அனைத்தையுமே முடக்கி வைப்பதே முடக்கு வாதம். முடக்குவாத வியாதியின் ஆரம்பத்தில் சில சமயம் தொண்டை பாதிக்கப்படுகிறது. பின்பு எலும்பு சந்துகள் சிவந்து வீங்கி வலியுண்டாகிப் படிப்படியாக பெரிய மற்றும் சிறிய மூட்டுகளையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. அதனால் காய்ச்சல், வாந்தி மயக்கம். உடம்புப் பெருக்கம் உண்டாகும். உட்கார்ந்தால் எழ முடியாது. அசைந்தால் உயிர் போவது போல் வலிக்கும். எந்த வேலையிலும் கவனம் செல்லாது. இந்த நோயைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் இதயம் நோய் வாய்ப்படும். இதனால் இதய வால்வுகளிலும், உட்பகுதிகளிலும் அழற்சி உண்டாகும்.

    முடக்குவாதம் நரம்புத் தளர்ச்சி, மனச் சஞ்சலம் ஆகியவைகளால் கூட வரவாய்ப்புள்ளது. உடல் இயக்கத்திற்குத் தேவையான ஆதார சக்தி மெரிடின் என்று அழைக்கப்படும் 12 சக்தி நாளங்களின் வழியாக உடலில் ஒட்டிக் கொண்டிருப்பதாகச் சீன மருத்துவம் கூறுகிறது. இந்த சக்தியில் ஏதேனும் குறைபாடோ அல்லது சக்தி நாளங்களின் ஓட்டத்திற்குத் தடையோ வருமாயின் அது பல நோய்களை உருவாக்குகிறது. அதற்குச் சக்திப் புள்ளிகளில் நுண்ணிய ஊசிகளைக் கொண்டு தூண்டிச் சக்தியை சீர் செய்வதே அக்குபஞ்சர் மருத்துவமாகும். இதன் மூலம் முடக்குவாதத்தை சரி செய்கிறார்கள். சிகிச்சை மேற்கொள்ளுமுன் ஓகிசிமாக்சா என்னும் மூலிகையால் ஒத்தடம் கொடுக்கிறார்கள்.

    பக்கவாத நோயும் பரிகாரமும்:

    இதைப் பக்கவாதம், பாரிசவாதம், பாரிசவாயு என்று ஜீவரட்சாமிர்தம் என்னும் சித்த மருத்துவ நூல் குறிப்பிடுகிறது. இந்நோய் தனி நோயாகவோ அல்லது மற்ற நோயின் தொடர் நோயாகவோ வரலாம். பக்கவாத நோயில் மூன்று வகைகள் உள்ளன. உடலின் வலது அல்லது இடது பக்கத்தையோ அல்லது பாகத்தையோ செயலிழக்கச் செய்துவிடுகிறது. அதாவது ஒரு கால் ஒரு கை அசைக்க முடியாமல் போய் விடுகிறது இது ஒரு வகை.

    ஒரு காலோ அல்லது ஒரு கையோ மட்டும் அசைக்க முடியாமல் செயலிழந்து விடுவது மற்றொரு வகையாகும். 2 கால்களுமே அசைக்க முடியாமல் போவது 3-வது வகையாகும். பக்கவாத நோய் வரக்காரணம் காரம், கசப்பு. துவர்ப்பு ஆகிய சுவையுள்ள உணவு வகைகளை அதிகமாக உண்ணுதல், அளவுக்கதிகமாகக் குளிரால் தாக்கப்படுதல், மிதமிஞ்சிச் சிற்றின்பம். தொடர்ந்து போதைப்பொருள்களை உபயோகிப்பது. குறிப்பாகப் போதை மயக்கத்தில் அடிக்கடி உடலுறவு கொள்ளுதல், ஆகிய காரணங்களால் பக்கவாதம் வரலாம்.

    கேஎஸ் சுப்பையாபாண்டியன்

    கேஎஸ் சுப்பையாபாண்டியன்

    மேலும் முதுகுத் தண்டில் அடிபடுவதால் நரம்புகள் கெட்டிப்பட்டுக் கட்டிகள் ஏற்பட்டு நரம்புகளை அழுத்துவதால் மூளையில் ரத்தக் குழாய்கள் உடைந்து போதல், அல்லது ரத்தம் உறைந்து கெட்டிப்படுதல், ஆகிய காரணங்களால் மூளைக்கு ரத்த ஓட்டம் தடைப்படுகிறது. அதனால் அதை நிர்வகிக்கக்கூடிய பகுதிகள் உணர்ச்சி குறைந்து திடீரென இந்நோய் தாக்கலாம். பிரதானமாக வர்மம் புள்ளிகளில் அடிபட்டுவிட்டால், அதை உடனே கவனிக்காமல் விட்டுவிட்டால், நாளடைவில் பக்கவாத நோய் பற்றிக்கொள்ள அதுவே காரணமாகலாம். திராம்பசஸ் என்று சொல்லப்படுகின்ற ரத்தத்தில் ஏற்படும் சிறுசிறு கட்டிகள் அல்லது பெரிய கட்டிகள் ரத்த நாளங்களை அடைத்து விடுவதால் மூளையின் செயல்திறனில் பாதிப்பு ஏற்பட்டு உடலில் சில பாகங்கள் செயலிழந்து பக்கவாதத்தால் பாதிக்கப்படலாம். இது தவிர நுண்ணுயிர்க்கிருமிகளாலும், இதய வால்வுகள், சிறு நீரகங்கள் மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதாலும் ரத்த அழுத்தம், நீரிழிவு, ரகசிய நோய்களாலும் வரலாம்.

    பொதுவாக பக்கவாத நோய் 40 முதல் 60 வயதுள்ளவர்களைத் தாக்குகிறது. அதிகமாக ஆண்களுக்கே இந்நோய் ஏற்படுகிறது எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பக்கவாத நோய் ஆணுக்கு வலதுபுறமும், பெண்ணுக்கு இடதுபுறமும் தாக்கினால் எளிதில் தீராது, அதோடு நாக்கும் பாதிக்கப்பட்டால் மருந்துக்கு வசப்படுவதில்லை. கால தாமதம் ஆகலாம். பக்கவாத நோய் தாக்கி நீண்ட நாளாகுதல், உடல் மெலிதல், நோய் தாக்கிய பகுதி சூம்பிப் போதல், உடல் வீங்குதல், நடுக்கம் ஏற்படல் ஆகிய இவை மருத்துவத்திற்குக் கட்டுப்படுவது கடினம். நீண்ட நாள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டால் பலன் கிடைக்கலாம்.

    பக்கவாத நோய் வாதமிகுதியால் வரும் நோய். எனவே வாதத்தை தன்நிலைப்படுத்த வேண்டும். பக்கவாத நோயாளிக்குத் தாக்கப்பட்ட உறுப்புகள் பயனற்றுப் போவதால் முதலில் தேங்கியுள்ள மலத்தைக் கழிச்சல் மருந்துகளைக் கொடுத்து மலச்சிக்கலைப் போக்க வேண்டும். அதற்கு கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றையும், கொட்டைகளை நீக்கிச் சமமாக எடுத்து உலர வைத்து சூரணமாக எடுத்து சலித்து வைத்துக்கொண்டு பக்கவாத நோயாளிக்கு 1 முதல் 2 தேக்கரண்டி வரை இரவு சாப்பிடச் சொல்லலாம். இதையே திரிபலா சூரணம் என்பர். இதைப்போலவே நிலாவரைச் சூரணத்தையும் உபயோகிக்கலாம். இவை இரண்டும் சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும், மலச்சிக்கல் தீர்ந்த பின்பு, கேடு அடைந்து பயனற்றுப் போன உறுப்புகளுக்கு வலிமை தந்து, வாதக் குற்றத்தைப் போக்கக்கூடிய உள் மருந்துகளைத்தர வேண்டும்.

    பக்கவாதத்தால் செயலிழந்த உறுப்புகளுக்குச் சிகிச்சை முறைகளுடன் லேசான பயிற்சியும் அவசியம். பக்கவாத நோயாளிகளுக்கு இதய நோய், நீரிழிவு மற்றும் பால்வினை நோயிருந்தால் அதற்கான மருந்துகளையும் கொடுத்து நோயைக் குணப்படுத்த வேண்டும். பக்கவாத நோயாளிகளுக்கு அக, புற சிகிச்சைகளோடு உணவு முறைகளிலும் கவனம் செலுத்தினால் துரிதமாகக் குணமடைய வாய்ப்புள்ளது.

    பொதுவாக வாதரோகம் அனைத்திற்குமே உள் மருந்துகளுடன் மேற்பூச்சு தைலங்களும் ஒத்தட முறைகளும் மேற்கொள்வது அவசியம். பொதுவாக வாத நோய்க்குச் சிகிச்சை மேற்கொள்ளும்போது பத்தியம் மிக முக்கியம். மலச்சிக்கலை உண்டாக்காத உணவுமுறை முக்கியம். சைவ உணவே சாலச் சிறந்தது.

    வெங்காயம், தக்காளி, காரட், புதினா, கறிவேப்பிலை, வெள்ளரிக்காய் போன்றவைகளைக் கலந்து பச்சடி செய்து உண்ண வேண்டும். வாரம் இருமுறை கொள்ளு ரசம் சாப்பிட வேண்டும்.அரிசி உணவைக் குறைத்து கோதுமை உட்கொள்ளலாம். புளியை அறவே நீக்க வேண்டும். உப்பைக் குறைக்க வேண்டும். உடலில் நீர் சேராமல் காக்கும் முள்ளங்கிச் சாம்பார், வாழைத்தண்டு கூட்டு, முருங்கைக்கீரை பொரியல் ஆகியவை உணவில் சேர்க்கலாம்.

    டீ, காப்பிக்கு பதிலாக காலையில் 1 டம்ளர் பார்லித் தண்ணீர் குடிக்கலாம். இரவில் 2 பல் பூண்டு போட்டுக் காய்ச்சிய பாலையும், பூண்டையும் தேன் கலந்து சாப்பிடலாம். முடக்கு வாதத்திற்கென்றே இறைவன் படைத்த மூலிகை முடக்கற்றான். இதனை சூப்பாக செய்து வாரம் ஒருமுறை அருந்தி வரலாம்.

    முன் சொன்னவாறு பொதுவாக வாத நோய்க்குப் புறமருந்து, அகமருந்து, உணவுப் பத்தியம் இவைகளுடன் பயிற்சியும் அவசியம். ஆதலால் கால்களுக்குப் பயிற்சி தரும் விதத்தில் மடக்கி நீட்ட முயல வேண்டும். ஆசனத்தில் திரிகோணாசனம் (முக்கோணநிலை)மிகவும் பயன்தரவல்லது. பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சியால் உயிர்காற்று உடலுக்கு அதிகம் கிடைப்பதால் நோய் விரைவில் குணமாகும்.வாதத்திற்குச் சிகிச்சை அளிப்பதில் மிகுந்த கவனம் தேவை. தழைபார், வேர்பார், மெல்ல மெல்ல பஸ்பம் செந்தூரம் பார் என்ற சித்தர்களின் மறை மொழிக்கேற்ப ஆரம்பத்தில் பாஷாண மருந்துகளைப் பிரயோகிக்கக் கூடாது. தேவையானால் மட்டும் பயன்படுத்த வேண்டும்.

    அதோடு நோயாளிகளுக்குச் சிறுநீரகக் கோளாறு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் உள்ளனவா எனப் பரிசோதித்து அதற்குத் தகுந்த வண்ணம் மருந்துகளைப் பிரயோகிக்க வேண்டும். மருந்துகளுடன் உடல் தேற்றி மருந்துகளையும் இணைத்தே மருத்துவம் மேற்கொள்ள வேண்டும். முடக்கு வாதத்திற்கு முதல் தரமான சிகிச்சை சித்த மருத்துவத்தில் மட்டுமே உண்டு. இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம் அரும்பு கோணிடில் அதன் மணம் குன்றுமோ கரும்பு கோணிடில் கட்டி பாகாகலாம் நரம்பு கோணிடில் நாமதற் கென்செய்யலாம்என்ற சித்தர் பாடலைப் படிக்கும்போது வாத நோய்கள் முற்றிலும் சிக்கலான நோய்கள் என்பது தெளிவாகிறது. எனவே இவைகளுக்குச் சுய மருத்துவம் செய்து காலத்தை வீணாக்காமல் ஆரம்ப நிலையிலேயே திறமையான சித்த மருத்துவரை நாடிச் சிகிச்சை மேற்கொண்டால் கண்டிப்பாக எல்லாவித வாத நோய்களையும் வெல்லலாம்.

    • பெரும்பாலும் கூடுகட்டும் பணியை ஆண் பறவைகள்தான் மேற்கொள்கின்றன.
    • சிட்டுக்குருவிகள், கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து புழுதியில் அரை வட்டவடிவில் பள்ளம் அமைத்து அதில் மண்குளியல் நடத்தும்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காலை நேரத்தில் வீடுகளிலும் சிட்டுக்குருவிகளின் சத்தத்தை கடந்த தலைமுறை வரை கேட்டு இருப்பார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் குறிப்பாக நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் சிட்டுக்குருவிகளை பார்ப்பதே அரிதாகி விட்டது. இந்த சிட்டுக்குருவிகள் தற்போது நகர்ப்புறங்களில் மறைந்தே போய்விட்டன என்றே கூறலாம்.

    ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் குருவி இனங்கள் உள்ளன. இவை எங்கும் காணப்படுபவை. சிட்டுக் குருவிகளின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகளாகும். மரத்திலும், வீடுகளின் மறைவான இடங்களிலும் வைக்கோல் போன்ற மெல்லிய பொருட்களைக் கொண்டும் கூடு கட்டி வசிக்கின்றன. இவற்றின் கூடுகள் கிண்ண வடிவில் இருக்கும். இவை குளிர் காலத்தில் கூட்டமாக ஒரு புதரில் ஒன்று சேர்ந்து இரவைக் கழிக்கின்றன.

    மனிதன் வாழும் வாழ்விடத்தையே தன் வாழ்விடமாக மாற்றி, மனிதனின் வாழ்வோடு பின்னிப் பிணைந்து, வாழும் ஒரு பறவை சிட்டுக்குருவி. பறவைகளைப்போல் சிட்டுக்குருவிகளை அடர்ந்த காட்டுப் பகுதியிலோ அல்லது பாலைவனத்திலோ காண முடியாது. அவைகள் மனிதனின் வாழ்விடங்கள், வீடுகள் மற்றும் அதனைச் சார்ந்துள்ள வயல்வெளிகளில்தான் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளும். கிராமங்களில் உள்ள ஓட்டு வீடுகளின் இடுக்குகளில், வைக்கோல் மற்றும் காய்ந்த புற்களைக்கொண்டு இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு வாழும்.

    பெரும்பாலும் கூடுகட்டும் பணியை ஆண் பறவைகள்தான் மேற்கொள்கின்றன. குளிர்காலங்களில், தெருவோரம் உள்ள மின் விளக்குகளில் கூடுகட்டி இருப்பதைக் கிராமங்களில் காணலாம். ஏனெனில், கடும் குளிரிலும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தங்கள் கூடுகளை மின்விளக்குகளில் கட்டும். இந்தக் குருவிகள் 3 முதல் 5 முட்டைகள் வரை இடும். சிட்டுக்குருவிகளின் பிரதான உணவு தானியங்களின் விதைகள் மற்றும் புற்கள் ஆகும்.

    முன்பு உணவு சமைக்கும் முன் அரிசியை முறத்தில் வைத்து வீட்டு வாசற்படியின் முன் அமர்ந்து கல் நீக்கி, புடைத்து உணவு சமைக்க உதவுவார், அன்றைய பாட்டி. இன்று முறமும் இல்லை. தானியங்களும் அதிகம் சிந்துவதில்லை. சிட்டுக்குருவிகளுக்கு உணவும் இல்லை. இதனால் சிட்டுக் குருவி இனத்தை அழியாமல் காக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேண்டி வருகிறார்கள். எனவே மார்ச் மாதம் 20-ந் தேதியை உலக சிட்டுக்குருவிகள் தினமாகக் கொண்டாடி அவற்றைக் காக்கப் போராடி வருகின்றனர்.

    சிட்டுக்குருவிகள், கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து புழுதியில் அரை வட்டவடிவில் பள்ளம் அமைத்து அதில் மண்குளியல் நடத்தும். மழைக்காலங்களில் தெருவில் தேங்கும் தண்ணீரில் அல்லது தண்ணீர் கிடைக்கும்போதெல்லாம் அவை கூட்டம் கூட்டமாக நீராடுவது வழக்கம். அதன் பிறகு இறகுகளைக் கோதிக் கொள்வதும், அதை உலர்த்திக் கொள்வதும் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும். இதற்கு முக்கிய காரணம், அதன் இறகுகளில் ஏதாவது ஒட்டுண்ணிகள் இருந்தால் அதை வெளியேற்றவும் தன் இறகைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்தான் அவைகள் இவ்வாறு செய்கின்றன. சிதறும் தானியங்கள்தான் சிட்டுக்குருவிகளின் பிரதான உணவு.

    தானியங்கள், விதைகள்தான் இவைகளின் முக்கிய உணவாக இருந்தாலும் சிட்டுக்குருவிகளின் குஞ்சுகளுக்கு உணவுக்கு அவைகள் தோட்டத்துச் சிறு பூச்சிகள், புழுக்களையே முழுவதும் நம்பி உள்ளன. முட்டையில் இருந்து வெளிவந்த குஞ்சுகளுக்கு முதல் உணவு இந்தத் தோட்டத்துப் புழுக்களும், பூச்சிகளும்தான். நமது கிராமத்து வீடுகளில் தாய்ப்பறவை அடிக்கடி வெளியில் பறந்துபோய் குஞ்சுகளுக்குப் பூச்சிகளைப் பிடித்து உணவாகக் கொடுத்துக் கொண்டிருக்கும். தற்போது தாவரங்களும், புற்களும் குறைந்ததால் அதை நம்பி வாழும் புழுக்கள், பூச்சிகள் அரிதாகிவிட்டன.

    சிட்டுக்குருவிகள் அனைத்துண்ணிகள் தானியங்களையும், புழு, பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும். சில வகைக் குருவிகள் பூ மொட்டுகளையும் உண்ணும். விவசாயத்தில் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் ரசாயன பூச்சிக்கொல்லிகளின் விளைவாக, நன்மை செய்யும் பூச்சிகளை மட்டும் கொல்லவில்லை. மாறாக, சிட்டுக்குருவிகளின் சந்ததிகளையும் சேர்த்துத்தான் அழித்துவிட்டோம்.

    செல்போன் கோபுரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பதன் விளைவு அதில் இருந்து வெளியாகும் மின்காந்த அதிர்வலைகளால் பறவைகள் மற்றும் தேனீக்களின் எண்ணிக்கை பெருமளவு குறையத் தொடங்கி உள்ளது என அறியப்படுகிறது.

    சிட்டுக்குருவிகள் உணவுச் சங்கிலியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பணியில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. சிட்டுக்குருவிகள் போன்ற பறவைகள் உதவியுடன் எந்தச் செலவுமில்லாமல் இயற்கையான முறையில் பூச்சிகள் பெருகி பயிர்களுக்குச் சேதம் ஏற்படுத்தாத வகையில், பூச்சிகளின் பெருக்கத்தை இயற்கை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. சிட்டுக் குருவிகளின் அழிவு மனிதகுலத்தின் அழிவுக்கு அடித்தளமாகும். எனவே மனித குலத்தை பாதுகாக்க சிட்டுக்குருவிகளை அழிவில் இருந்து காப்போம்....

    • நாடு இப்போது 18-வது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான, தேர்தலை சந்திக்க உள்ளது.
    • பல்வேறு தடைகளை தாண்டி 1993-ம் ஆண்டு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை முழுமையாக அறிமுகம் செய்யப்பட்டது.

    வாக்காளர் அடையாள அட்டை...

    இது சாத்தியமா...

    அதுவும் அதிக அளவு மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை வழங்குவது என்பது எப்படி முடியும் என்று நினைத்திருந்த ஒரு காலம் உண்டு.

    ஆனால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1993-ம் ஆண்டு, நம் நாட்டில் வாக்காளர் அடையாள அட்டை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

    இது உலக நாடுகளையே ஆச்சரியப்பட வைத்தது.

    இமாலய சாதனை

    இந்தியாவின் மக்கள்தொகை 140 கோடியை தாண்டிவிட்டது. அதிலும் 94 கோடியே 50 லட்சத்து, 25 ஆயிரத்து 694 கோடி பேர் வாக்களிக்க தகுதி வாய்ந்த வாக்காளர்களாக உள்ளனர். உலக அளவில் மிக அதிக வாக்காளர்களை கொண்ட நாடு இந்தியாதான்.

    இவ்வளவு பெரிய மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில், அனைவருக்கும் வாக்களிக்க அடையாள அட்டை வழங்கி இருப்பது இமாலய சாதனைதான்.

    நாடு இப்போது 18-வது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான, தேர்தலை சந்திக்க உள்ளது.

    இந்த சூழ்நிலையில், தற்போது நடைமுறையில் இருக்கும் வாக்காளர் அடையாள அட்டை உருவான வரலாறு பற்றி பார்ப்போம்.

    சுகுமார் சென்

    நம் நாட்டில் வாக்களிக்கும் வாக்காளர் அனைவருக்கும், இவர் தான் வாக்காளர் என்று அறிவதற்கும், வாக்குப்பதிவில் முறைகேட்டை தவிர்ப்பதற்கும் ஒரு அடையாள ஆவணம் வேண்டும் என்று முடிவு செய்த இந்திய தேர்தல் ஆணையம், கடந்த 1957-ம் ஆண்டு வாக்காளர் அடையாள அட்டை திட்டத்தை முன்மொழிந்தது.

    இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையாளராக இருந்த சுகுமார் சென்தான், வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வரவேண்டும் என்ற விதையை போட்டவர்.

    அவர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, அதாவது 1958-ம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ந்தேதி, இதற்கான மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதை அறிமுகம் செய்தவர் அப்போதைய சட்ட மந்திரியாக இருந்த அசோக் குமார் சென். இவர், சுகுமார் சென்னின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தநிலையில் 1958-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந்தேதி, இந்தியாவின் இரண்டாவது தலைமை தேர்தல் ஆணையாளராக கே.வி.கே.சுந்தரம் பதவி ஏற்றார். அடுத்த சில நாட்களில் அடையாள அட்டை வழங்க வகை செய்யும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, சட்டமாகியது.

    கொல்கத்தா இடைத்தேர்தலில் அறிமுகம்

    வாக்காளர் அடையாள அட்டையை நடைமுறைப்படுத்த, தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டபோதும், ஏனோ தாமதாமாகிக் கொண்டே சென்றது.

    இருப்பினும் 1960-ம் ஆண்டு மே மாதம் மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தா தென்மேற்கு பாராளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை சோதனை முயற்சியாக கொண்டு வந்தது.

    பலர் புகைப்படம் எடுக்க முன்வரவில்லை. குறிப்பாக பெண்கள் தங்களை புகைப்படம் எடுக்க மறுப்பு தெரிவித்தனர். இடைத்தேர்தல் நடைபெற்ற அந்த ஒரு தொகுதிக்கே ரூ.25 லட்சம் வரை தேவைப்பட்டது. அன்றைய காலத்தில் இது மிகப்பெரிய தொகையாகும்.

    தேர்தல் நடத்தும் செலவைவிட, வாக்காளர் அடையாள அட்டைக்கான செலவு அதிகமாக இருந்த காரணத்தால், அந்த முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து, இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

    உயிர் பெற்ற திட்டம்

    19 ஆண்டுகளுக்கு பின்னர், இந்த திட்டம் மீண்டும் உயிர் பெற்றது.

    ஆம்!... 1979-ம் ஆண்டு சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    இது ஓரளவு சாத்தியமானதால், அசாம், மேகாலயா, நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டது. இதில் கிடைத்த வெற்றியே 1993-ம் ஆண்டு அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை என்பது சாத்தியமானது.

    டி.என்.சேஷன்

    இதை செய்து காட்டியவர், அப்போது தேர்தல் ஆணையாளராக இருந்த டி.என்.சேஷன். அவரது காலத்தில்தான், தேர்தல் நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்கள், கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.

    பல்வேறு தடைகளை தாண்டி 1993-ம் ஆண்டு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை முழுமையாக அறிமுகம் செய்யப்பட்டது.

    ஆரம்பத்தில் வாக்காளர் அடையாள அட்டை என்பது கறுப்பு நிறத்தில் இருந்தது. அதன் முதல் பக்கத்தில் வாக்காளரின் புகைப்படம், பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், பிறந்த தேதி, வயது, பாலினம் ஆகியவை இடம் பெற்று இருக்கும்.

    பின்பக்கத்தில் வீட்டு முகவரி, தொகுதி, பாகம் (வாக்குச்சாவடி எண்) ஆகியவை இடம் பெற்று இருக்கும்.

    இதில் வேடிக்கை என்னவென்றால், ஆரம்ப காலங்களில், வாக்காளர் அடையாள அட்டைக்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அந்த அட்டையில் இடம்பெறும்போது தெளிவற்றதாகவும், கேலிக்குரியதாகவும் இருந்தது. இது பல்வேறு விமர்சனங்களுக்குள்ளானது.

    மின்னணு வாக்காளர் அட்டை

    பின்னர் அந்த தவறுகள் படிப்படியாக சரிசெய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து வாக்காளர் பட்டியலும் புகைப்படத்துடன் வந்தது. தற்போது அழகிய வண்ணப்புகைப்படத்துடன், பிளாஸ்டிக் அட்டையில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

    இந்த வளர்ச்சியின் காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு முதல் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை நடைமுறைக்கு வந்துவிட்டது.

    மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை என்பது, வாக்காளர் அடையாள அட்டையின் திருத்தமுடியாத, பாதுகாப்பான 'பி.டி.எப்' பதிப்பாகும். மேலும் இதில் வரிசை எண், பகுதி எண் மற்றும் பிற புள்ளிவிவரங்களுடன், பாதுகாப்பான 'கியூ-ஆர்' குறியீடும் உள்ளது.

    இதனை செல்போன் மற்றும் கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து, சேமித்து வைக்கலாம்.


    வாக்காளர் அடையாள அட்டையை எப்படி பெறுவது?

    இந்தியாவில் பிறந்த 18 வயது நிறைவடைந்த அனைவரும் வாக்களிக்க தகுதியானவர்கள்.

    18 வயது நிறைவடைந்தவர்கள், தேர்தல் ஆணையம் வழங்கும் படிவம் 6-ஐ நிரப்பி, அதனை உள்ளாட்சி அமைப்புகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

    இது தவிர தேர்தல் ஆணையம் அவ்வப்போது நடத்தும் சிறப்பு முகாம்களில், வாக்காளர் அட்டையில் உள்ள முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை செய்யலாம்.

    மனநோயாளிகள், கடன் வாங்கி திவால் ஆனவர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படாது.

    • பிஜின் தீவு என்பது கடலுக்கு நடுவில் இருக்கும் ஒரு குட்டித் தீவு.
    • மலையில் சென்று இறங்கியதுமே சுற்றும், முற்றும் பார்த்தால் தண்ணீர்.

    அவ்வை சண்முகி காட்சிகள் விறு விறுப்பாக படமாகி கொண்டிருந்தது.

    கமல் சார் படம் என்றாலே அந்த கால கட்டத்தில் முத்தக்காட்சி கண்டிப்பாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

    அவ்வை சண்முகியில் அவருடன் நடிக்க ஒத்துக்கொண்டபோது அதைப்பற்றியெல்லாம் நான் கேட்கவில்லை. ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது தான் ஒரு நாள் அடுத்து எடுக்கப்போகும் காட்சி முத்தக்காட்சி என்றார்கள். அதை கேட்டதும் எனக்கு தூக்கி வாரிப்போட்டது. உடலெல்லாம் வியர்த்து விட்டது.

    அய்யய்யோ... படத்துக்கு ஒப்பந்தமான போதே இதைப்பற்றி கேட்காமல் இருந்து விட்டோமே என்று ஒரே பதட்டமாக இருந்தது.

    இனி என்ன செய்வது? இதை எப்படி தவிர்ப்பது? டைரக்டரிடம் சொன்னால் ஒத்துக்கொள்வாரா? என்று ஒரே குழப்பமாக இருந்தது. அம்மாவிடமும் சொல்லி புலம்பினேன்.

    இப்படியாக நான் தவித்து கொண்டிருந்த போது ஷாட் ரெடி என்று கூப்பிட்டார்கள் பயந்தபடியே சென்றேன். டைரக்டர் காட்சியை பற்றி விளக்கினார்.

    முத்தக்காட்சி என்று அவர் சொல்ல தொடங்கியதும் எனது பதட்டத்தை புரிந்து கொண்டார்.

    பயப்படாதீங்க நீங்கள் கீழேதான் படுத்து இருப்பீர்கள். கமல் சார் உங்க கிட்ட வருவார். வந்ததும் இந்த தடவை வேண்டாமே என்று கூறுவார். அவ்வளவு தான் என்றார்.

    அதை கேட்ட பிறகுதான் அப்பாடா... என்று பெருமூச்சு விட்டேன். அப்புறம் அதே போல் தான் காட்சியும் படமாக்கப்பட்டது.

    அந்த படத்தில் வரும் 'காதலா... காதலா,,,'என்ற டூயட் பாடல் தென்னாப்பிரிக்காவில் படமாக்கப்பட்டது. அதற்காக தென்னாப்பிரிக்கா சென்றிருந்தேன்.

    அந்த பாடலுக்கு நான் அணிந்து இருக்கும் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு கலர் காஸ்ட்டியூம்கள் நானே தேர்வு செய்தது. அதை டைரக்டரும் ஒத்துக்கொண்டதால் ரொம்ப சந்தோசமாக இருந்தது.


    பாடலுக்கான சில காட்சிகளை அங்குள்ள பிஜின் தீவில் படமாக்க திட்டமிட்டு இருந்தார்கள்.

    பிஜின் தீவு என்பது கடலுக்கு நடுவில் இருக்கும் ஒரு குட்டித் தீவு. அதில் இருக்கும் மலையில் தான் படப்பிடிப்புக்கான இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தது.

    அந்த மலையில் நின்று கீழே பார்த்தால் அதல பாதாளத்தில் கடல். லேசாக கால் தவறினால் கூட அவ்வளவு தான். பார்த்தாலே பயமாக இருந்தது. அந்த இடத்தில் நின்று ரொமான்டிக்காக நடிக்கனும். எப்படி இருக்கும்?

    ஷூட்டிங் நடந்த அந்த மலைக்கு ஹெலிகாப்டரில் அழைத்து செல்வார்கள். அதில் நானும் கமல்சாரும் மற்றொரு உதவியாளரும் மட்டும் தான் இருப்போம்.

    மலையில் சென்று இறங்கியதுமே சுற்றும், முற்றும் பார்த்தால் தண்ணீர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கட்டிடம் எதுவும் இருப்பதே தெரியாது. ஆபத்து ஏற்பட்டால் உதவிக்கு கூட யாரும் வர முடியாது. அப்படிப்பட்ட ஒரு இடம். இந்த இடத்தையெல்லாம் எப்படித்தான் தேடி கண்டுபிடித்தார்கள் என்று கூட நினைத்தேன்.

    இன்னொரு விசயம், அந்த மலையில் நிறைய புறாக்கள் இருந்தது. அந்த பகுதி முழுவதும் புறாக்களின் எச்சம் தான். திறந்த வெளி என்பதால் அந்த எச்சத்தால் வாடையோ அருவெறுப்போ அவ்வளவாக தெரியாது.


    நடிக்கும் போது உருண்டு, புரண்டதால் உடை முழுவதும் புறா எச்சங்கள் பட்டிருக்கிறது. ஷூட்டிங் முடிந்து ஹெலிகாப்டரில் ஏறிய பிறகு வந்தது பாருங்க ஒரு வாடை...! அப்பா... என்னாலேயே சகிக்க முடியவில்லை.

    அறைக்கு சென்று உடைமாற்றி குளித்த பிறகு தான் நிம்மதி வந்தது. அப்படியும் அந்த ஸ்மெல் அடிக்கடி நினைவுக்கு வரும். அதற்காக ஸ்பிரே அடித்துக் கொள்வேன்.

    அங்கு ஷூட்டிங் நடந்த நாட்கள் அனைத்துமே சந்தோசம். இருந்தாலும் ஒருவிதமான திகிலுடனேயே இருந்தேன். காரணம் படப்பிடிப்பு நடந்து ஆபத்தான இடம்.

    நாங்கள் எங்கே இருக்கிறோம்? எப்படி இருக்கிறோம்? என்பது வெளியே இருந்த அம்மாவுக்கு தெரியாது. அவர் இது பற்றி படக்குழுவிடமே சொல்லி ஆதங்கப்பட்டிருக்கிறார்.

    இப்படி கண்ணுக்கு தெரியாத இடத்துக்கு அனுப்பி இருக்கிறார்களே, அங்கு ஏதாவது பிரச்சினை என்றால் எப்படி அழைத்து வருவது? இப்படிப்பட்ட இடங்களில் ஷூட்டிங் நடத்த ரிஸ்க் எடுக்காதீங்க! என்று கூறு வாராம்.

    நாங்கள் திரும்பி கரைக்கு வந்த பிறகு தான் அம்மாவுக்கு நிம்மதி வரும் அன்று அந்த காட்சிகள் ரிஸ்க்காக தெரிந்தாலும் அவ்வை சண்முகி வெளியானதும் படம் ஹிட்... பாடல் ஹிட்.. அதை கேட்டதும் ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருந்தது. இன்றும் பேசப்படும் படம் அல்லவா...?

    நாங்கள் கஷ்டப்படுவதே இந்த பெயருக்கும் புகழுக்கம் தானே!

    ருக்கு ருக்கு.. என்ற பாடல் கமல்சாரே தனது சொந்த குரலில் பாடியிருந்தார்.

    இப்படி ஒவ்வொரு படங்களிலும் காட்சிகளில் நடித்தது அப்போது கிடைத்த அனுபவங்கள் எனக்கு பாடமாகவும் அமைந்தது என்பதே உண்மை.

    அடுத்த தகவலுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்... (தொடரும்...)

    • நம்மை நாம் சரி செய்து கொள்ள சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
    • ஆன்மீக வழியில் பஞ்ச பூதங்களில் ஒன்றாக கூறப்படும் நீருக்கு நிறைந்த முக்கியத்துவம் உண்டு.

    ஒவ்வொருவரின் ஆன்மீகப் பயணமும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும்.

    * சிலர் கண் மூடி தியானம் செய்வார்கள்.

    * சிலர் தான் செய்யும் வேலையினை கர்மயோகியாக செய்வார்கள்.

    * சிலர் கோவிலுக்கு அடிக்கடி செல்வார்கள்.

    * சிலர் வீட்டின் பூஜை அறையினை தெய்வ உலகமாய் அலங்கரித்து ஆனந்தப்படுவார்கள்.

    * அபிஷேகம், ஆராதனை, தேரோட்டம் என சிலரது வழிபாடு அமர்களமாய் இருக்கும்.

    * ஒரு சிலர் பூசலார் நாயனார் போல் மனதுக்குள் கோவில் கட்டி மானசீகமாய் வழிபடுவர்.

    இப்படி ஆன்மீக பயணம் செய்வது பொதுவாக கீழ்வரும் மாற்றங்களை ஏற்படுத்தும்.

    * யாரையும் மிக நல்லவர் என தூக்கி வைத்து ஆடுவதும், பின்னர் அவராலேயே பாதிப்புகளுக்கு உள்ளாவதும் இருக்காது. இறைவன், பிரபஞ்சம், சித்தர்கள், மகான்கள், ஆடம்பரமில்லாத அரிய இடங்கள். இங்கு மட்டுமே மனம் செல்லும். நிம்மதி காணும்.

     * நமது தனிப்பட்ட வாழ்வில் ஏற்படும் பாதிப்புகளை வீடியோ போட்டு அனுதாபம் தேடும் குணம் நீங்கும். அநேகர் பிறரின் சோகக் கதைகளை கேட்டு சிரிப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

    * யாரை பற்றியும் எந்த முடிவும் எதற்கு எடுக்க வேண்டும். நாம் நல்லவர் என்று நினைப்பவர் மிகவும் கெட்டவராக இருக்கலாம். அல்லது விதி அவரை மாற்றலாம். அது போல் மிக கெட்டவர் என நாம் நினைக்கும் ஒருவர் உள்ளத்தில் நல்லவராக இருக்கலாம். அல்லது விதியை மாற்றலாம். அவரவர் வாழ்வினை அவரவர் விதிபடி வாழ்கின்றனர். இந்த நிலைகள் காலத்தின் சூழலுக்கேற்ப மாறுகின்றன என்பது புரியும்.

    * தியானம் செய்வது ஒருவரை தேவையின்றி பேசாது இருக்கச் செய்யும். அதிகம் பேசாது இருந்தாலே சிறப்பு.

    * ஒருவர் அதிகம் கோபப்படுகின்றாரா, கூச்சல் போடுகின்றாரா, ஊர் வம்பினை ஓயாது பேசுகின்றரா- முடிந்தால் அந்த இடத்திலேயே இல்லாது இருப்போம். இருந்தால் மவுனம் காப்போம். இந்த பொறுமை ஒருவருக்கு ஏற்படும்போது மவுனம் போன்ற ஒரு தண்டனையை உங்களால் வேறு எந்த விதத்திலும் மற்றவர்களுக்கு கொடுக்க முடியாது.

    * பணம் தலை விரித்து ஆடினால் அங்கே உண்மை போராடி போராடிதான் ஜெயிக்க வேண்டும்.

    * கவலை என்பது ஒருவருக்கு வந்து விடக்கூடாது. கவலை வர, வர மரணம் நெருங்குகின்றது என்று பொருள்.

    * மன வலிமையை கூட்டிக் கொள்ள வேண்டும். கடைசி நொடியில் கூட அநேக அற்புதங்கள் நிகழ்கின்றன.

    நீங்கள் நான் பல வசதிகளை தியாகம் செய்கிறேன் என்பது மட்டும் தியாகம் ஆகாது. ஆசைகளை அழிப்பது, ஆசைகளே இல்லாமல் இருப்பதுதான் வாழ்க்கை என்கிறார் புத்தர்.

    * மேற்கூறிய வகையில் நமது சிந்தனைகள் மாற வேண்டும். செயல்கள் மாற வேண்டும். இது நம்மிடம் மாற்றத்தினை ஏற்படுத்தும். பண்பினை பிரதிபலிக்கும்.

    * நாம் செய்பவைதான் நமக்குத் திரும்பி வருகின்றன. அதுதான் பிரபஞ்ச வழி. இதற்காக மற்றவர் எந்த கெடுதல் செய்தாலும் அதனை தாங்கிக் கொள் என்பது பொருள் அல்ல. நியாயமாக உறுதியாக போராடலாம்.

    * ஆக நம் வாழ்வில் நடப்பவற்றுக்கு நாமே பொறுப்பாகின்றோம்.

    * ஒவ்வொரு செயலுக்கும் கர்ம வினை இருக்கும். அது நல்ல வினையா? தீய வினையா? என்பது ஒருவர் செய்யும் செயலைப் பொறுத்தது. ஆகவே ஒருவர் தன் சிந்தனை, செயல்களுக்கு பயப்பட வேண்டும்.

    * நம்மை நாம் சரி செய்து கொள்ள சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதற்கு பழக்கப்படுத்தப்பட வேண்டும். நீங்கள் கவனித்து இருக்கின்றீர்களா? சிறு வயதில் வீட்டில் பெரியவர்கள் ஒன்று சொல்வார்கள். 'தப்பு செய்தால் சாமி ராத்திரி வந்து கண்ணை குத்தும்' என்பார்கள். ஒருவருக்கு நாம் தீங்கு செய்தால் அந்த கர்மவினை செய்பவரை வந்து ஒட்டிக் கொள்ளும் என்பதனை முந்தைய கால முறைக்கு ஏற்ப கற்பித்தார்கள். ஆக ஒருவன் மனம் திருந்தி நல்லவனாக மாற முடியவில்லை என்றாலும் தனது கர்மவினை பாதிப்பிற்கு பயந்தே ஒழுக்கமாய் வாழ்ந்தான்.

    * அழிவுப்பூர்வமான எண்ணங்களை அறவே ஒழித்து விட வேண்டும். எப்போதெல்லாம் அழிவுப்பூர்மான எண்ணங்கள் தோன்றுகின்றதோ உடனே விடாது ஆக்கப்பூர்வமான எண்ணங்களை உங்களுடன் நீங்களே மனதிற்குள் பேசுங்கள்.

    * உணவில் கட்டுப்பாடு வேண்டும். முறையற்ற உணவு பழக்கம் உடல் நலம், உள்ள நலம் இரண்டினையும் கெடுக்கும்.

    * அதிகமாக பேசி தெளிவாக புரிய வைக்கத் தெரிய வேண்டும். தியானம் செய்ய அன்றாடம் பழக வேண்டும். தெளிவான சிந்தனை, சொல், செயல் ஏற்படும்.

    * நாம் அனைவரும் இவ்வுலகில் வாழ வேண்டும். கோபப்பட்டு, பொருமைப்பட்டு, அடுத்தவர்களை அழிப்பதற்காக அல்ல.

    * ஆன்மீகம், தியானம் இவை இரண்டுமே ஒருவரை மகிழ்ச்சியாய், அமைதியாய் வைக்கும்.

    * இந்த அமைதிதான் ஒவ்வொருவரின் இயல்பான அமைப்பு ஆகும். இதில் மாறுபடும் போதுதான் மொத்த பிரச்சினையும் ஏற்படுகின்றது.

    * சுய பச்சாதாபம், சுய பரிதாபம் கூடவே கூடாது.

    * மவுனமாய் இயற்கையை கவனியுங்கள். இயற்கை உங்களின் பல கேள்விகளுக்கு பதில் தரும்.

    கமலி ஸ்ரீபால்

    வாழைப்பழம் பழுக்க ஆரம்பிக்கும் போது அதில் சர்க்கரை அளவு குறைவாகவே இருக்கும். பழுத்து முடிய வேண்டிய தருவாயில் ஆன்டிஆக்ஸிடன்ட் சத்து கொண்டதாக இருக்கும். பழுத்த நிலையில் குறைவான மாவு சத்து, கூடுதல் சர்க்கரை, கூடுதல் ஆன்டிஆக்ஸிடன்ட் கொண்டதாக இருக்கும். சற்று அதிகம் பழுத்து விட்டால் சிறந்த அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியும் கூடி இருக்கும். மிக அதிகம் பழுத்து விட்டால் ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்து கொட்டி கிடக்கும் என ஒரு ஆய்வு கூறுகின்றது. சர்க்கரை நோயாளிகள் அதிகம் பழுக்காத வாழைப் பழம் மருத்துவர் அறிவுரையின் பேரில் எடுத்துக் கொள்ளலாம்.

    இப்பவும் கிராமங்களில் தார், தாராக வாழைப் பழம் இறைவனுக்கு படைப்பார்கள். நம் முன்னோர்கள் இந்த மருத்துவ குணங்களை நன்கு அறிந்தவர்கள் போல் தெரிகிறது. வாழைப்பழம் இல்லாத பூஜையே கிடையாது. பின் அதனையே பிரசாதமாக மனிதன் எடுத்துக் கொள்கின்றான்.

    * உடலை அடிக்கடி உள் சேரும் நச்சுப் பொருட்களில் இருந்து சுத்தம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கான அறிகுறிகளை நம் உடலே காட்டும்.

    * அதிக இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற உணர்வு * மலச்சிக்கல் * வயிற்றுப் பகுதியில் பருத்த கடின கொழுப்பு * சதா ரைஸ்மில் போல் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற உணர்வு * உப்பிசம்

    * காற்று

    * சரும பாதிப்பு இப்படி பலவற்றினைக் கூறலாம்.

    இதற்காக எத்தனை முயற்சி, கடின பயிற்சி, உணவு கட்டுப்பாடு என திண்டாடுகின்றோம். இதற்காகத்தான் நம் முன்னோர்கள் விரத முறைகளை கட்டாயமாக செய்ய வைத்துள்ளனர். இறைவன் பெயரில் பக்தியோடு செய்ய வைத்துள்ளனர்.

    இந்த விரத, உபவாச முறையில் மற்றொன்றும் இருக்கின்றது. சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு ஏற்படும். உணவு கட்டுப்பாடு தான் ஆன்மீக பயணத்தில் ஒருவர் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய முதல் கட்டுப்பாடு ஆகும்.

    தண்ணீர்: இந்த கோடை காலத்தில் தண்ணீரின் அவசியம் நன்றாகவே எல்லோருக்கும் புரியும். கோடை காலமோ, குளிர் காலமோ உடலுக்கு தண்ணீர் என்பது மிக அவசியம் ஆகின்றது.

    ஆன்மீக வழியில் பஞ்ச பூதங்களில் ஒன்றாக கூறப்படும் நீருக்கு நிறைந்த முக்கியத்துவம் உண்டு. மனிதனுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை நீரோடு தொடர்பு உண்டு. நீர்- ஞானம், அமைதி, சுத்தம்-புனிதம் இவற்றோடு தொடர்பு உண்டு.

    * புனித நீராடல்- சக்தி வாய்ந்த நதிகளில் நீராடுதல், கடலில் குளித்தல் போன்றவை உடலையும், ஆன்மாவினையும் புனிதப்படுத்துவதாக கூறப்படுகிறது.

    * Holy water, துளசி தீர்த்தம் என கொடுக்கப்படுகின்றது.

    * தண்ணீருக்கு ஈர்ப்பு சக்தி அதிகம். அதன் அருகில் இருந்து தீய, தவறான செயல்களை பேசக்கூடாது. அப்படியே பலித்து விடுமாம்.

    * ஜபம் செய்யும் நேரத்தில் ஒரு குவளையில் நீரினை பக்கத்தில் வைத்து ஜபம் செய்த பிறகு வேண்டுதலை மனதில் நினைத்து அந்த நீரினை அருந்தி விட வேண்டும்.

    * தாரை வார்த்து கொடுப்பதும், கும்பாபிஷேகம் செய்வதும் நீரை வைத்துதான்.

    * சாபம் இடுவதும், தலையில் நீர் ஊற்றி உறவினை உதறி விடுவதும் நீரைக் கொண்டுதான்.

    * உணவு அருந்தும் போதும், நீர் அருந்தும் போதும் நாம் எதைப் பற்றி நினைக்கின்றோமோ, எதனை பேசுகின்றோமோ அதன்படியே வாழ்க்கை மாறும். எனவே அதிசக்தி வாய்ந்த நீரினை முறையாய், மரியாதையுடன் பயன்படுத்துவோம்.

    • சக மனிதர்களுக்கும் தந்து மகிழ்வதும், அவர்களிடம் பெற்றுக் கொள்வதுமாகவும் இருக்கிறது.
    • நமது வாழ்வியலில் ஆணும் பெண்ணும் இணைவதால் ஏற்படும் குடும்ப அமைப்பு என்பதே தருதலையும் பெறுதலையும் அடிப்படையாகக் கொண்டதுதான்.

    தருவதிலும் பெறுவதிலும் அன்பின் நம்பிக்கை வைத்திருக்கும் அருமை வாசகர்களே! வணக்கம்!

    மனித வாழ்க்கை தருவதற்கும் பெறுவதற்குமாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆதிமனிதன் இயற்கையில் இருந்தும் விலங்குகள் உயிரினங்களிடம் இருந்தும் கற்றுக் கொண்டதையும் பெற்றுக்கொண்டதையும் மீண்டும் அவற்றுக்கே அளித்து, மீண்டும் மீண்டும் தருவதும் பெறுவதுமாக வாழ்க்கையைப் பண்படுத்திக் கொண்டிருக்கிறான்.. வாழ்க்கை என்பது இயற்கை மற்றும் உயிரினங்களோடு கொடுக்கல் வாங்கல் செய்வது மட்டுமல்ல, சக மனிதர்களுக்கும் தந்து மகிழ்வதும், அவர்களிடம் பெற்றுக் கொள்வதுமாகவும் இருக்கிறது.

    வாழ்க்கையில் சிலவற்றை நாம் எதிர் எதிர் குணம் கொண்டவையாகக் கருதிக் கொண்டிருக்கிறோம். "சரி!-தவறு!", "நல்லது!- கெட்டது"!, "வலது!- இடது!", "பள்ளம்!- மேடு!" போன்றவற்றைக் கூர்ந்து கவனித்தால் அவை உண்மையில் எதிர் எதிர் குணமானவை அல்ல! என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

    எது கெட்டது என்பதை உண்ர்ந்து கொண்டால்தான் எது நல்லது என்கிற முடிவுக்கே வர முடியும்.. தவற்றைத் தெரிந்து திருத்திக் கொண்டால்தான் சரியாகச் செயல்பட முடியும். இதுபோன்றது தான் "தருவதும்!- பெறுவதும்!"; இவை எதிர்ச் சொற்கள் இல்லை!; உடன்சொற்கள்.

    பெறுபவர் இல்லையென்றால் தருவதற்கே வேலையில்லாமல் போய்விடும். அதைப்போலத் தருபவர் இல்லையென்றால் பெறுபவரே இருக்கமாட்டார். அன்றாட வாழ்வியலில் தருபவர்கள் எல்லோரும் பெறுபவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் எந்தச் சூழ்நிலையில் தருகிறார்கள்; எந்தச் சூழ்நிலையில் பெறுகிறார்கள் என்பதைப் பொறுத்தே இவர்களைப்பற்றிய முடிவுக்கு நாம் வர வேண்டியிருக்கிறது.

    ஒன்றைக்கொடுத்து அதற்கு நிகரான அல்லது அதே மதிப்புடைய ஒன்றைப் பெறுவது என்பது கொடுக்கல்-வாங்கல் முறைகளில் ஒன்றாக இருக்கிறது. அலுலகத்தில் சேவையை வழங்குகிற மனிதனோ அல்லது வயல்களில், தொழிற்சாலைகளில் உழைப்பை வழங்குகிற மனிதனோ அதற்கேற்ற கூலியைச் சம்பளமாகப் பெற்றுக் கொள்ளும் முறை; இது ஒன்றைக்கொடுத்து ஒன்றைப் பெறுகிற நல்ல முறை.


    இங்கே உழைப்பாளி உழைப்பைக் கொடுத்துக் கூலியைப் பெற்றுக் கொள்கிறார்; முதலாளி உழைப்பைப் பெற்றுக்கொண்டுக் கூலியைக் கொடுக்கிறார். இது ஒருவகையில் வணிகமுறை சார்ந்த தருதல் பெறுதல்தான். வணிக நிறுவனங்களுக்குச் சென்று பணத்தைக் கொடுத்து, நமக்குத் தேவையான நுகர் பொருட்களைப் பெற்றுக்கொள்வதும் வணிகச் சார்புடைய 'தருதல் பெறுதல்' தான். அந்தத் 'தருதல் பெறுதல்' நடுவுநிலை தவறாமல் நிகழவேண்டும் என்கிறார் திருவள்ளுவர். கொடுப்பதைக் குறைவில்லாமலும் கொள்வதை மிகைப்படாமலும் செய்யவேண்டும்; நடப்பது வணிகமாக இருந்தாலும் நீதி வழங்குகிற முறையாக இருந்தாலும், பெறுபவர் இடத்தில் வழங்குபவர் தாம் இருப்பதாகப் பாவித்துக்கொண்டு வழங்க வேண்டும்.

    என்னதான் தருதலும் பெறுதலும் நேர்செய்யும் தன்மையுடையதாக இருந்தாலும் அவற்றை முழு ஈடுபாட்டோடு மனமுவந்து செய்யும்போது அவற்றின் பலன்கள் பன்மடங்காகப் பல்கிப் பெருகி நலமளிக்கின்றன.

    அலுவலகத்திலோ, உழைப்பிடத்திலோ பணிபுரியும் உழைப்பாளிகள் கடனுக்கென்றோ, வாங்குகிற சம்பளத்திற்கென்றோ உழைப்பை நல்கினால், அது உரிய பயன்விளைச்சலைத் தராது. கடமைக்காகத் தருதலின் பலன் நேர்த்தியானதாக இருக்காது. அதேபோல, உழைப்புக்காகப் பெறுகிற கூலியையும் ஒப்புக்காகப் பெற்றுக்கொள்ளும்போதும் அதனால் மகிழ்ச்சி நிறைவதில்லை. இந்த வகையில், தருகிற உழைப்போ, பெறுகிற கூலியோ முழுமன ஈடுபாட்டோடு நிகழ்ந்தால் மட்டுமே அது அளவில் பன்மடங்கு பெருகிய வளர்ச்சியை உருவாக்கும்.

    தருவதும் பெறுவதும் கணக்குப்படி பார்த்தால் வணிகத்தைப் போன்றதுதான் என்றாலும், அவற்றில் மனிதம் சார்ந்த அக்கறையும் சமூகம் சார்ந்த தொலைநோக்கும் சேர்ந்தால் அவை மதிப்பிற்குரியதாக மாறிவிடுகின்றன.

    மனிதனின் வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்து வளங்களையும் இயற்கையே தன்னிடத்தில் வைத்திருக்கின்றது. மனிதனது வசதியான வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் தன்னிடமிருந்து வழங்க இயற்கை எப்போதும் காத்திருக்கிறது. மழை தருகிறது; மரம் தருகிறது; மண் தருகிறது; வெயில் தருகிறது; காற்றுத் தருகிறது; உலோகங்கள் தருகிறது; உணவு தருகிறது. இப்படிப் பலவற்றைத் தருகிற இயற்கைக்கு மனிதன் திருப்பித் தரவேண்டியதெல்லாம் மூலவளம் குறையாது இயற்கையின் சமத்தன்மையைப் போற்றிப் பாதுகாப்பது மட்டுமே.

    இயற்கை நமது உணவுத் தேவைக்காகப் பலவிதைகளைத் தந்தால், அவற்றில் சிலவற்றை உணவாக்கிச், சிலவற்றை மீண்டும் விதையாக்கி மண்ணில் ஊன்றும்போது இயற்கையும் செழிக்கிறது; தருவதும் பெறுவதும் பன்மடங்காகிப் பொலிகின்றன. மழைவளமும் வனவளமும் நம்மை வளப்படுத்திச் செம்மைப் படுத்துகின்றன. "தக்கார்க்கு வேளாண்மை" எனும் பதத்தில் திருவள்ளுவர், 'வேளாண்மை' என்றால் உதவிசெய்தல் என்று அர்த்தப் படுத்துகிறார். இயற்கையோடு மனிதன் நிகழ்த்தும் 'தருதலும் பெறுதலுமே' உலகின் தலைசிறந்த அறச்செயலாகப் போற்றப்பட வேண்டியது ஆகும்.

    நமது வாழ்வியலில் ஆணும் பெண்ணும் இணைவதால் ஏற்படும் குடும்ப அமைப்பு என்பதே தருதலையும் பெறுதலையும் அடிப் படையாகக் கொண்டதுதான். தனித்தனியே வாழும் தனியர் வாழ்வு, ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உணர்வு சார்ந்த அன்பின் சார்பு நிலையையும், மனத்தளவிலும் உடலளவிலும் பாதுகாப்பு உறுதியையும் அளிப்பதில்லை.

    ஓர் ஆணும் ஒரு பெண்ணும் சேர்த்துவைக்கப்பட்டு அவர்கள் குடும்பமாக்கப்படும்போது, உனக்கான அன்பையும், உனக்கான பாதுகாப் பையும், உனக்கான உணவு உடை செல்வம் முதலான வாழ்வியல் தேவைகளையும் நானும் தருவேன்! நானும் கைம்மாறாக எனக்கானதைப் பெறுவேன்! என்று ஆணும் பெண்ணும் உறுதியெடுத்துக் கொண்டு வாழ்வதே குடும்பம். குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள உறவை மேலோட்டமாகப் பார்த்தால் அதுவும் ஒருவகை 'தருதல் பெறுதல்' முறைமைதான். ஆனாலும் அவ்வுணர்வின் மேன்மையை அடியாழம்வரை புகுந்து பார்த்தாலும் யார் அதிகம் தந்தார்கள்? யார் அதிகம் பெற்றார்கள்? என்பதைப் புரிந்துகொள்ளவே முடியாது.


    குடும்ப வாழ்வியலில் பிள்ளைகள் பெற்று வளர்ப்பதும்கூட ஒருவகை 'தருதல் பெறுதல்' முறை சார்ந்ததுதான். "தம்மின் தம்மக்கள் அறிவுடைமை" என்றும், "அவையத்து முந்தியிருப்பச் செயல்" என்றும் "சான்றோன் எனக் கேட்ட தாய்" என்றும் வள்ளுவர் குறிப்பிடுவதெல்லாம் பிள்ளைகளைப் பெறுகிற பெற்றோர்க்கான கடமைகள் ஆகும். தாம் கற்கத் தவறிய கல்வியையும், ஏற்கத் தவறிய வேலைவாய்ப்பையும் தன் மகளையோ மகனையோ தயார்ப்படுத்தி அவர்கள் மூலம் அடைந்து விட வேண்டும் என்று கருதுகிற பெற்றோர்கள்தான் பெரும்பான்மையானோராக இன்று உள்ளனர்.

    பிள்ளைகளின் கல்விக்காகவும் எதிர்காலத்திற்காகவும் செய்கிற செலவுகள், பெற்றோர்களின் பிற்கால வாழ்க்கைக்கான வைப்புநிதி என்று கருதுகிற பெற்றோர்களும் உண்டு. வளர்ந்து பெரிய நிலைகளுக்கு வந்த பின்னர் நமது பிள்ளைகள் நம்மை நல்லபடியாகக் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பதுகூட ஒருவகை 'தருதல் பெறுதல்' தான். இப்படி எதிர்பார்த்திருந்து ஏமாந்துபோகும் பெற்றோர்கள்தான் நிலை பரிதாபத்திற்குரியது.

    தற்காலக் குடும்ப விழாக்களில் பெறப்படுகிற மொய் எனப்படும் அன்பளிப்புப் பணமும், பரிசுப் பொருள்களும் கூடத், 'தருதல் பெறுதல்' வகையினதே!. அவர் வீட்டு விசேஷத்திற்கு ஐந்நூறு செய்தால், நம்வீட்டு விசேஷத்திற்கு அவர் அறுநூறாகவோ ஆயிரமாகவோ திரும்பச் செய்யவேண்டும் என எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். இது ஒருமடங்கு விதைத்துப் பன்மடங்கு விளைச்சலை எதிர்பார்க்கும் மொய் முறை.

    தற்காலத்தில்,பிறந்தநாள் விழா போன்ற குடும்ப நிகழ்வுகளில் 'தருதல் பெறுதல்' முறை உடனுக்குடன் நிகழ்வாக நிகழ்கிறது. விழாவிற்குச் செல்வோர் பரிசுப் பொருள்களோடு செல்வர்; விசேஷ வீட்டார் அவற்றைப் பெற்றுக்கொண்டு, கைம்மாறுப் பரிசாக அவர்களும் ஒவ்வொன்றைத் தந்தனுப்புவார்கள். இது உடனுக்குடன் நிகழ்ந்து விடுகிற 'தருதல் பெறுதல்'. இம்முறை பழங்காலந்தொட்டே செட்டிநாட்டுப் பகுதிகளில் வழக்கத்தில் உள்ளது.

    தருவது ஒன்று பெறுவது ஒன்று; இது இயல்பானது. ஆயினும் பிரதிபலன் கருதாமல் தருவதில்தான் உண்மையான அறம் அடங்கியிருக்கிறது'

    ஒரு கடுமையான பாலைவனம். வழி தெரியாமல் மாட்டிக்கொண்ட ஒருவர். எப்படிப் பாலைவனத்திலிருந்து வெளியேறுவது என்பது தெரியவில்லை. கடும் வெயில் காரணமாக தண்ணீர்த் தாகம் வேறு அவர் உயிரைத் தின்னத் தொடங்கியிருந்தது. வெளியேறித் தப்பிப்பதற்குமுன் ஒருவாய் தண்ணீர் கிடைத்தால் போதும் என்கிற நிலை அவருக்கு.

    தொலைதூரத்தில் ஒரு பாழடைந்த வீடு இருப்பதைப் பார்த்தார். அங்கு சென்றால் தண்ணீருக்கு ஏதாவது வழி கிடைக்கும் என்று முயன்று நடந்து சென்றார். அவரது நம்பிக்கை வீணாகவில்லை. அந்தப் பாழடைந்த வீட்டு வாசலுக்கு முன் ஒரு துருப்பிடித்துப் போன பழைய அடிகுழாய் தென்பட்டது.

    ஆவலோடு அடிகுழாய்ப் பக்கம் சென்றபோது, அதனருகில் இருந்த கைப்பிடிச் சுவற்றில் ஒரு பழைய அலுமினியக் குவளை, நிறைந்த தண்ணீரோடு இருந்தது. அவருக்கிருந்த தாகத்திற்கு அந்த ஒரு குவளைத் தண்ணீர் போதவே போதாது. இருந்தாலும் தொண்டையை நனைத்துக்கொள்வோம் என்று ஆவலோடு குவளைநீரைத் தூக்கப் போனார்.

    ஆனால் குவளையின் கீழே ஓர் அறிவிப்போடு கூடிய தாள் ஒன்று இருந்தது." வருக! உங்கள் தாகம் தீரத் தண்ணீர் பருக வேண்டுமென்றால், குவளையில் உள்ள தண்ணீரை அடிகுழாய்க்குள் ஊற்றிக் குழாயை அடிக்கவும். தண்ணீர் வரும்; தாகம் தீரும் வரை குடித்துவிட்டு, மீண்டும் ஒரு குவளைத் தண்ணீரைப் பிடித்து, இந்தச் சுவற்றில் வைத்துவிட்டுச் செல்லவும்!".

    பொதுவாகக் காற்றுவாங்கிக் கிடக்கும் அடிகுழாயிலிருந்து தண்ணீரை அடிக்க வேண்டுமென்றால், முதலில் மேலிருந்து நாம் கொஞ்சம் தண்ணீரை ஊற்றினால்தான் அடிக்க அடிக்கத் தண்ணீர் வெளியேறும். கொடுத்துப் பெறுகிற தத்துவம்.

    இப்போது பாலைவனத்திலிருக்கும் அந்த நபருக்கு அடிகுழாய்த் தத்துவம் தெரியும். என்றாலும், கண்ணுக்குத் தெரிகிற அந்த ஒரு குவளை நீரையும் குழாய்க்குள் ஊற்றி, அதிலிருந்து தண்ணீர் வராமல் போய்விட்டால்? இருக்கிற நீரையும் இழக்க வேண்டியதாகிப் போய்விடுமே?.

    துணிந்து முடிவெடுத்தார். குவளைநீரைக் குழாய்க்குள் ஊற்றி அடித்தார். தண்ணீர் குபுகுபுவென்று வரத் தொடங்கிவிட்டது. தாகம் தீரும்வரை குடித்தார். தாளில் எழுதியிருந்தது போலவே மீண்டும் குவளையை நிரப்பிச் சுவற்றில் வைத்தார். அந்தத் தாளில் இவர் கூடுதலாக ஒரு வார்த்தை எழுதினார். "நிச்சயம் தண்ணீர் வருகிறது! இது உண்மை!".

    தருவதால் தான் பெற முடியும் என்பது உலகறிந்த உண்மை என்றாலும் அதிலும் நம்பிக்கை அவசியமல்லவா?.

    சிலர் தருகிறார்கள்! பெறமாட்டார்கள்!

    சிலர் பெறுவார்கள்! தர மாட்டார்கள்!

    சிலர் தரவும் மாட்டார்கள்! பெறவும் மாட்டார்கள்!

    சிலர் தரவும் பெறவும் செய்வார்கள்!

    தன்னலமற்ற சிலராலேயே உலகில் தருதலும் பெறுதலும்

    தரமுயர்ந்து விளங்குகிறது!

    தொடர்புக்கு 9443190098

    • மூச்சானது சாதாரணமாக வலது, இடது நாசிகளில் மாறிமாறி ஓடிக்கொண்டு இருக்கும்.
    • மகான் மாணிக்க வாசகர் நம் உடலிலே 9 வாசல்கள் உள்ளது.

    வாசகர்களே, சில உடற்பயிற்சிகள் மூலமாக மூச்சை நாசிகளில் மாற்றும் முறை பற்றி ஜீவ பிரம்ம ஐக்கிய வேதாந்த ரகசியம் என்கின்ற நூலில் மகான் சச்சிதானந்த யோகீலவரர் அவர்களாலும் அதையே உபாயத்தோடு வேதாதிரி மகரிஷி அவர்களாலும் விளக்கப்பட்டுள்ளது.

    மூச்சானது சாதாரணமாக வலது, இடது நாசிகளில் மாறிமாறி ஓடிக்கொண்டு இருக்கும். இடது நாசியை தாயாருடைய நாடி என்றும் வலது நாசியை தந்தையுடைய நாடி என்றும் சுமுமுனை நாடியை குருநாடி என்றும் அழைக்கிறோம். ஒவ்வொரு ஒரு மணி நேரம் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை இந்த சுவாசம் மாறி நடந்து கொண்டே இருக்கும். எனவே நாடி சுத்தி பிராணாயாமம் மூலமாக ஒரு மனிதர் குரு நாடியை இயக்கலாம் என்கிறார்கள்.

    இதை மகரிஷி அவர்கள், எளிய முறை குண்டலினி யோக தியான பயிற்சிகளிலும், எளிய முறை குண்டலினி யோக உடற்பயிற்சிகளிலும் நமக்கு ஒரு உபாயமாகவே அளித்து இருக்கிறார். குறிப்பாக உடற்பயிற்சியில் கை பயிற்சி, நரம்பு தசை நார் மூச்சு பயிற்சியிலும், காயகல்பம் பயிற்சியிலும் மற்றும் நித்தியானந்த தவத்திலும் இந்த உபாயங்களை கொடுத்து இருக்கிறார். எனவே, குண்டலினி யோகத்தின் திறவு கோள் நாடி சுத்தி பிராணாயாமம் என்று சித்தர்களால் சொல்லப்படுகிறது.

    மனிதர்கள், உலகத்தில் பகுத்தறிவை பயன்படுத்தி எவ்வளவு தான் கற்றாலும் தன்னை அறியாததால், 95 சதவீதம் மக்கள் இறைவனை தன்னில் இருந்து வேறு படுத்தி பார்க்கிறார்கள். ஞானம் பெற்றவர்களுடைய நிலைகளை ஆராய்ந்து பார்ப்பதற்கு, அறிவு திறன் விரிவடையாததால் இந்த நிலை ஏற்பட்டு நடமாடும் கற்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். எனவே, மனிதர்கள் தன் கருவை உணர்வதற்கு, குண்டலினி யோகம், மற்றும் ஆத்ம வித்தை என்ற இரண்டு வழிகள் உள்ளது என்று மகான்கள் கூறுகின்றனர்.

    குண்டலினி யோகத்தின் மூலம் நமது நாடிகளை சுத்தம் செய்து கொள்ளலாம். தியானத்தின் மூலமாக நமது மூலாதாரத்தில் உறங்கி கொண்டு இருக்கும் குண்டலினி சக்தியை மேல் எழுப்பி, நமது முன்னோர்கள் மூலமாக நாம் பெற்ற சஞ்சித கர்ம வினை பதிவுகளையும், நமது 3 வயது முதல் இந்த நிமிடம் வரை, நாம் செய்த பிராப்த கர்மாவின் பதிவுகளையும் ஒழித்து அதன் பின்பு ஆத்ம தரிசனம் பெறலாம் என்று உபதேசங்கள் கூறுகிறது.

    மனிதர்களுடைய உடல், மனம், உயிர் தத்துவங்களான 96ல், 59 தத்துவங்கள் ஸ்தூல தத்துவங்களாகவும், 36 சூக்கும தத்துவங்களாகவும், 1 அதி சூக்கும தத்துவமாகவும் உள்ளது என்பதை நாம் அறிவோம்.

    இதில், சூக்கும தத்துவத்தில் உள்ள 36ல், அந்த கரணம் என்று சொல்லப்படும் மனம், புத்தி, சித்து, அகங்காரம் என்ற நான்கும்தான் மனிதர்கள் ஆகிய நாம் மீண்டும், மீண்டும் பிறப்பதற்கும், இறப்பதற்கும் காரணமாக அமைகிறது. இதில் குறிப்பாக சித்தம்தான் எண்ணங்களின் பாசறை என்றும் நம் கர்மாவின் மூலஸ்தானம் என்றும் சொல்லப்படுகிறது.

    இதில் இந்த சித்தம் அழிந்தால், நமது நெஞ்சின் மூலப்பொருளை காண முடியும். அதாவது, சித்தத்தை நாசம் செய்தால்தான் மற்ற மூன்று கரணங்களும் அழியும்.


    இதையேதான் சித்தர்கள் பாடலிலே, சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி, சப்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி என்கிறார்கள்.

    இதையே அருட் பிரகாச வள்ளளார் "கையளவு இல்லாத நடுக்கண் புருவ பூட்டு கண்டு களி கொண்டு திறந்துண்டு நடு நாட்டு மணிக்கதவை திறப்பாயோ மறைப்பை எல்லாம் நீங்கி" என்று குறிப்பிடுகிறார். அதாவது ஜோதி நிலையை பார்ப்பதற்கு, உடலின் சிரசு பகுதியில் வாசல் ஒன்று உள்ளது. அது மிக மிக நுண்ணிய சவ்வினால் மூடப்பட்டு உள்ளது என்றும் மாயா சக்தி என்கின்ற 6 திரைகள் மறைப்பை எல்லாம் நீக்கி, பூட்டை திறந்தால் 7ம் திரை கடந்து மணிக்கதவு திறந்து தரிசனம் கிடைக்கும் என்கிறார்.

    இதையே, மகான் மாணிக்க வாசகர் நம் உடலிலே 9 வாசல்கள் உள்ளது. அதன் வழியாக சுவாசம் சென்று, சுவாச கணக்கு தீர்ந்தவுடன் மரணம் ஏற்படுகிறது. ஆனால், 10வது வாசல் ஒன்று உள்ளது. இதை யாரும் அறிவதில்லை. அதை திறந்தவர்களே ஞானம் பெற்றவர்கள் ஆகிறார்கள். அது நமது சிரசு பகுதியில் புருவ மத்திக்கு உள்ளே உள்ளது. அதனை திறப்பதற்கான சாவிதான் வாசி என்கிறார்.

    இதையே, மகரிஷி ஒரு கவியிலே புருவத்திடை உந்தன் பூவிரலால் தொட்டு எந்தன் உயிர் உணர்த்தி என்று இந்த ஆக்கினை தவமாக கொடுத்து இருக்கிறார்.

    இதையே, பட்டிணத்தார் ஒரு கவியிலே, "வாசிதனை பார்த்து மகிழ்ந்து உன்னை போற்றாமல், காசி வரை போய் திரிந்து கால் அலுத்தேன் பூரணமே" என்கிறார். அதாவது நாம் தேடும் சிவம், நமக்குள்ளேயே உள்ளது என்கிறார்.

    பொதுவாக நாம் காசிக்கு செல்வது எதற்காக என்றால் நமது கர்மவினை பதிவுகளை போக்கி கொள்வதற்காக என்று அறிந்ததே. காசிக்கு சென்று வந்தவர்களிடம் கங்கா நீராடல் சிறப்பாக முடிந்ததா என்று நாம் கேட்க வேண்டும்.

    மனவளக்கலை பேராசிரியர்கள் கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

    மனவளக்கலை பேராசிரியர்கள் கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்


    ஏனென்றால் காசியில் கங்கை நீரில் நீராடும் போது பொதுவாக மூன்று முறை நீரில் மூழ்கி எழுந்திருப்பார்கள். அதற்கு என்ன பொருள் என்றால், முதல் முறை மூழ்கும் போது ஸ்மரணா என்று சொல்லி மூழ்கி எழுந்தால் முன்னோர்கள் மூலமாக நாம் பெற்ற கர்மவினை பதிவுகளில் இருந்து தப்பித்து கொள்வதற்கும், இரண்டாம் முறை மூழ்கி எழும்போது ஸ்மரணா என்று சொல்லி நாம் செய்த கர்ம வினைகளில் இருந்து தப்பித்து கொள்வதற்கும், மூன்றாம் முறை ஸ்மரணா என்று சொல்லி மூழ்கி எழும்போது இனி நாம் வாழ வேண்டிய வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்று பிராத்தனை செய்து நீராட வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு காசி சென்று நீராட பாக்கியம் கிடைத்திருக்கிறது.

    அப்படி அந்த வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு சித்தர்கள் சொல்லும் உபதேசம் என்னவென்றால் வாரணாசி என்னும் அபிமூர்த்தம் தனை மனதில நினைத்து தியானம் செய்திடு என்கின்றனர். அதாவது காசிக்கு மற்றொரு பெயர் வாரணாசி. வேறு ஒரு அர்த்தமும் உள்ளது.

    நாசி என்றால் மூக்கு. மூக்குக்கு மேலே, புருவ மத்திக்கு நடுவே உள்ள இடத்தில் மனதை வைத்து மூச்சை சமன்படுத்தி தியானம் செய்தால், உட்கார்ந்த இடத்தில் இருந்தே காசிக்கு சென்று வந்த பலன் கிடைக்கும் என்கின்றனர். எனவே நாம் ஒரு முறை ஆக்கினை தவம் செய்தால் ஒரு முறை காசிக்கு சென்று வந்த பலன் கிடைக்கும்.

    இதையே பட்டிணத்தார் மற்றொரு பாடலிலே "ஈராறு தன் கணக்குள் இருந்து கூத்து ஆடினதை காணாமல் அறிவிழந்தேன் பூரணமே" என்கிறார். (ஈராறு என்றால் 2X6 12 அங்குலம் மூச்சு காற்று). நமது சுவாசத்தின் அளவு 12 அங்குலம் ஆகும். இதில் 12 அங்குலம் வெளியே சென்று 8 அங்குலம் மட்டும் உள்ளே வருகிறது. எனவே 4 அங்குலம் சுவாசம் ஒவ்வொறு முறையும் நஷ்டம் அடைந்து நமக்கு மரணம் ஏற்படுகிறது. இந்த நஷ்டம் அடையக்கூடிய 4அங்குலம் சுவாசத்தை உள்ளே செலுத்தி, 12 அங்குல சுவாச கதியையும், உள்ளேயே ஒட செய்தால் ஞான வாசலை திறப்பதற்கான சக்தி கிடைக்கும்.

    மற்றொறு சித்தர் பாடலிலே

    "ஐவர்க்கு நாயகன், அவ்வூர் தலைமகன்

    உய்யக் கொண்டு ஏறும் குதிரை மற்று

    ஒன்றுண்டு

    மெய்யார்க்கு பற்று கொடுக்கும் கெடாது

    போய்

    பொய்யாரை தள்ளி விழுந்திடுந்தானே"

    என்கிறார்.

    அதாவது ஐவர் என்பது பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் என்கின்ற பஞ்ச வாயுக்கள் ஆகும். மற்றொரு குதிரை என்பது வாசி யோகம். இதை நித்திய ஜீவன் என்கிறார். இது தான் ஆத்மாவில் இணைக்கும் வேலையை செய்கிறது. எனவே நாடி சுத்தி பிராணாயாமத்திற்கு எவ்வளவு முக்கியம் கொடுத்து இருக்கிறார்கள் என்பது இந்த சித்தர்கள் பாடல் மூலமாக தெரிகிறது.

    இந்த காற்று வெளியே இருக்கும் போது வளிமண்டல வாயு என்று பெயர். நாம் மூச்சை உள்ளே இழுக்கும் போது இந்த வாயு சென்றவுடன் பிராணணாக மாறி விடுகிறது. இதுவே வயிற்றுக்கு உள்ளே செல்லும் போது சமானனாக மாறி விடுகிறது (செரித்தல்). செரித்தலில், கெட்டதை பிரித்து நல்லதை உள்ளேயே தங்க வைத்து, கெட்டதை வெளியே தள்ளும் போது அபானனாக மாறுகிறது. சத்துக்களை பிரித்து நமது மூளையில் தங்குவது தான் உதானன். பிறகு உடல் முழுக்க இதை பரவ விடுவது வியானன்.

    இந்த பஞ்ச வாயுக்களையும் நாம் தெளிவாக வைத்தால் நோய் வராது. இது நாடி சுத்தி பிராணாயாமத்தில் கிடைக்கிறது. அதேபோல் மகரிசியால் உருவாக்கப்பட்ட உடற்பயிற்சியில் கை பயிற்சியின் நிலை 3, 4 மற்றும் 5ல் இந்த பஞ்ச வாயுக்கள் சமன் பெற்று உடல் முழுவதும் பிராண சக்தி சீராக இயக்கம் பெறுகிறது.

    சமானன் என்பது சரியான உணவு + பிராண சக்தி. சரியான உணவு என்பது குளுக்கோஸ் சத்து. பிராண சக்தி என்பது எனர்ஜி+ Co2. இந்த Co2 ஆனது அபானனாக வெளியேறும். எனர்ஜி மேல் நோக்கும் போது உதானன், அதுவே பரவும்போது வியானன்.

    இந்த இயக்க சக்தியை நாடி சுத்தி மூலம் முறைபடுத்தும் போது உமிழ்நீர் சரியான முறையில் சுரக்கும். இந்த உமிழ் நீரிலே 24 வகையான புரோட்டீன் சத்து உள்ளது. முக்கியமாக நரம்பு வளர்ச்சி ஒவ்வொரு மூளை நரம்புகளுக்கும் இணைப்பு பாலமாக இருக்கும். உதாரணத்திற்கு ஒரு விஷயத்தை கேட்டால் அல்லது ஒரு காட்சியை பார்த்தால் 10 வருடங்களுக்கு பிறகு கூட அப்படியே வரித்து காட்டும். இப்படி அற்புதமான பல விந்தைகளை வெளிப்படும் ஒரு அற்புதமான பயிற்சிதான் இந்த சரகலை.

    சரம் அடுத்த இதழில்தொடரும். போன்: 9444234348

    • எந்த ஒரு கிரகப் பெயர்ச்சியும் குலதெய்வத்தை முறையாக சென்று வணங்கி வருபவர்களை ஒன்றும் செய்து விட முடியாது.
    • கூட்டுக்குடும்பமாக வந்து கூட்டமாக மக்கள் வணங்குவதால் குல தெய்வமானவர் சாஸ்தா என அழைக்கப்பட்டார்.

    குலம் தெரியாமல் போனாலும், குல தெய்வம் தெரியாமல் போகக் கூடாது என பெரியவர்கள் சொல்வார்கள்.

    குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்மோடு எப்போதும் நீங்காமல் இருந்து நமது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழி காட்டும் அருட்சக்தி ஆகும்.

    கோடி தெய்வங்களின் சன்னதியை தேடிப் போய் வணங்கி பெறும் ஆசிகளை ஒற்றைக் குலதெய்வத்தின் சன்னதி முன் வணங்கி பெறலாம்.

    அன்னிய படையெடுப்பு காரணமாகவோ, பிழைப்பிற்காகவோ, அல்லது வறட்சி காரணமாகவோ, கொள்ளை நோய் காரணமாகவோ முந்தைய தலைமுறையினர் தங்களது பூர்வீக ஊரை விட்டு வேறு பகுதிகளில் குடியேறி இருப்பார்கள்.

    ஊரை காலி செய்யும் முன் தங்களது முன்னோர்கள் வழி வழியாக வணங்கிய குல தெய்வத்தின் முன் கண்ணீரோடு நிற்பார்கள்.

    அந்தக் குல தெய்வத்தின் சன்னதியில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து "இங்கே இருந்து எங்கள காப்பாத்துன மாதிரி நாங்க குடி போகுற இடத்துக்கும் எங்களோடு வந்து எங்கள காப்பாத்துமய்யா" என புலம் பெயருவார்கள்.

    அந்த கைப்பிடி மண்ணைக் கொண்டு தாங்கள் புதிதாக குடியேறும் ஊரில் தங்களது குல தெய்வத்திற்கு கோவில் கட்டி வழிபடுவார்கள்.

    எத்தனை வளமான மண்ணாக இருந்தாலும் தளிர்த்து வளரும் செடியை அதன் பிறந்த இடத்து பிடி மண்ணோடு இன்னொரு இடத்தில் வைத்தால் மட்டுமே வேர் விட்டு தழைத்து வளரும்.

    புலம் பெயரும் இடத்தில் எத்தனை தெய்வ ஆலயங்கள் இருந்தாலும் குல தெய்வத்தின் அருளையும் ஆசியையும் பிரதானமாக நினைத்து பிடிமண் ஆலயம் என குல தெய்வத்தின் ஆலயத்தை வைத்து வழிபட்டு வந்தனர் முன்னோர்கள்.

    குல தெய்வம் கோவிலுக்கு சென்று வணங்கும்போது நமது குலதெய்வத்தின் அருளோடு நமது முன்னோர்களின் ஆசியும் கிடைக்கின்றது.

    "நாள் செய்யாததை கோள் செய்யும்...

    கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்" என்பார்கள்.

    ஒரு செயல்களையோ, காரியத்தையோ ஆரம்பிக்கும் முன் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து செய்வோம்.

    கிரகம் எனும் கோள்களில் சுக்கிர திசை உச்சத்தில் இருக்கிறதா என கிரகாச்சார அமைப்பை பார்த்து தொழில் ஆரம்பிப்போரும் உண்டு.

    நாளும், கோளும் பார்க்காமல் கற்குவேல் அய்யனாரே! நான் ஆரம்பிக்குற மளிகை கடை யாவற்றுக்கும் நீர் தான் மொதலாளி! எந்த நட்டமும், போட்ட முதலுக்கு சேதாரமும் வராம லாபத்தை தாருமய்யா! என குல தெய்வத்தை வணங்கி ஆரம்பிக்கும் எந்த தொழிலும் தோற்றுப்போனதாக சரித்திரம் இல்லை.

    ஆம்... குலதெய்வத்தின் அருளாசி நாளும் கோளும் செய்யாததை விட அதிகமாக அருள் புரிந்து நம்மை காக்கும்.

    பசியால் பிள்ளை அழுதால் தாய் பொறுக்க மாட்டாள். குல தெய்வமும் தாயை போலத்தான். தன் முன் குறைகளை கண்ணீரோடு சொல்லி முறையிடும் தனது பிள்ளைகளின் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றி தரும் கருணை கொண்டவர் குலதெய்வம் ஆவார்.

    எய்யா!! இளம்பாளை சாஸ்தாவே!! எம்புள்ளைக்கு வயசு முப்பது ஆவ போவுது. காலா காலத்துல எம்புள்ளைக்கு கல்யாணம் காட்சிய நடத்தி தாரும் என...

    குல தெய்வ சன்னதியில் தனது கஷ்டங்களை, குறைகளை சொல்லி அழுது, கண்ணீர் சிந்தியபடி கேட்டவர்களின் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றித் தரும் வல்லமை படைத்தது குலதெய்வத்தின் அருளாசி ஆகும்.

    இந்த சனிப்பெயர்ச்சி என்னை போட்டு பாடாய் படுத்துதே! என கிரகப்பெயர்ச்சி பலனை நினைத்து வருந்துபவர்கள் குலதெய்வத்தை முறையாக சென்று வணங்கினாலே போதும்.

    எந்த ஒரு கிரகப் பெயர்ச்சியும் குலதெய்வத்தை முறையாக சென்று வணங்கி வருபவர்களை ஒன்றும் செய்து விட முடியாது. குல தெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கின்றது.

    "குல தெய்வத்தை கும்புடாம போனா குலம் தழைக்காது" என சொல்வார்கள்.

    எம்புள்ளைக்கு கலியாணம் முடிஞ்சு வரும் பங்குனி மாசத்தோட பத்து வருசம் ஆவப் போவுது..

    எம் மருமொவ வயத்துல ஒரு புள்ள பூச்சி தங்க காணோம்..

    சொரிமுத்து அய்யா!! நாங்க அறிஞ்சு அறியாம எந்த தப்பு செஞ்சிருந்தாலும் மன்னிச்சுடும்.

    என்னோட கொலம் தழைக்க எம்புள்ளைக்கு ஒரு வாரிசு கொடு.

    புள்ள பெத்து கரையேறி வந்ததும் தாயையும், புள்ளையையும் ஒன்னோட தலத்துக்கு கூட்டி வந்து ஒன்னோட சன்னதியில என்னோட பேரபுள்ளைக்கு பொறந்த முடி எடுக்குறோமுய்யா! என மகனுக்காக குல தெய்வத்திடம் பிள்ளை வரம் கேட்டு பிரார்த்தனை செய்யும் தாய்மார்களின் வேண்டுதலை நம்மில் அனேகர் கேட்டு இருப்போம்.

    குலம் தழைக்கும் வல்லமையை தருவது கூட குலதெய்வத்தின் அருளாசிகள் தான்.

     

    சுரேஸ்வரன் அய்யாப்பழம் (சில்வண்டு)

    சுரேஸ்வரன் அய்யாப்பழம் (சில்வண்டு)

    தென் தமிழக மக்களுக்கு குலதெய்வம் பெரும்பாலும் சாஸ்தா ஆகவே இருப்பார்.

    யார் இந்த சாஸ்தா?

    சாஸ்தா என தற்போது தென்மாவட்ட மக்களால் அழைக்கப்படும் சொல் முந்தைய தலைமுறை மக்களால் சாத்தா என்று அழைக்கப்பட்டது.

    சாத்து என்றால் கூட்டம் என பொருள்.

    குல தெய்வ கோவிலுக்கு வழிபாட்டிற்கு வருபவர்கள் ஒரு போதும் தனித்து வர மாட்டார்கள்.

    குடும்ப சகிதமாக கூட்டமாக வந்து தான் தங்களது குல தெய்வத்தை வணங்குவார்கள்.

    கூட்டுக்குடும்பமாக வந்து கூட்டமாக மக்கள் வணங்குவதால் குல தெய்வமானவர் சாஸ்தா என அழைக்கப்பட்டார்.

    குடும்பத்தில் தந்தையை ஐயா!! என்று அழைப்பது முந்தைய தலைமுறை நெல்லை மாவட்டத்து மக்களின் பேச்சு வழக்கம்.

    ஐயா, ஐயன் என்ற தமிழ்ச்சொல்லுக்கு மூத்தவர், தலைவர் என்ற பொருள் படும்.அதனால் தங்களது குல தெய்வத்தை ஐயனார் என அழைத்தனர்.

    தேவர்களுக்கு அமிர்தம் வழங்க பகவான் நாராயணர் எடுத்த மோகினி அவதாரத்தில் சிவ - வைணவ ஐக்கியமாக உதித்தவர் சாஸ்தா.

    ஐயன் (திருமால்), அப்பன்(சிவன்) என்ற இரு மூர்த்திகளின் ஒருமித்த சக்தியாக சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில் தான். தென் மாவட்டங்களில் சாஸ்தாவின் ஆலயங்கள் பெரும்பாலும் குளம், ஆறு, சுனை போன்ற நீர்நிலைகளின் அருகிலேயே அமைந்து இருக்கும்.

    எதற்காக சாஸ்தாவை தென் மாவட்ட மக்கள் நீர்நிலைகளின் அருகில் வைத்து வணங்க வேண்டும்..?

    விவசாயம் தான் தென்மாவட்ட மக்களின் பிரதான தொழில்.

    நீரின்றி அமையாது உலகு என்பது போல் நீரின்றி விவசாயம் நடைபெறாது.

    தங்களது நீர்நிலைகளை பாதுகாத்து விவசாயத்தை செழிக்க வைக்க தங்களது குலதெய்வமான சாஸ்தாவை நீர் நிலைகளின் கரையோரங்களில் வைத்து வணங்கி வந்தனர்.

    "ஏரிக்கு ஒரு ஐயனாரும், ஊருக்கு ஒரு பிடாரியும் எங்க ஊருல உண்டு வேய்" என தங்கள் ஊரின் பெருமையாக கிராமத்தில் சொல்வார்கள்

    காரையாறு சொரிமுத்து ஐயனார் அருஞ்சுனை காத்த ஐயனார், கடம்பாக்குளம் பூலுடையார் சாஸ்தா, ஸ்ரீவல்லப பேரி என்ற சீவலப்பேரி ஏரியின் மறுகால் மடையில் வீற்றிருக்கும் மறுகால் தலை சாஸ்தா.. என தென் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சாஸ்தா ஆலயங்கள் அனைத்தும் நீர் நிலையின் அருகாமையில் தான் இருக்கும்.

    இவ்வாறு நீர்நிலைகளின் தெய்வமும், சம்சாரி எனும் விவசாய மக்களின் குல தெய்வமான சாஸ்தா பங்குனி உத்திர திருநாளில் அவதரித்தார்.

    குல தெய்வத்தை வழிபடும் பங்குனி உத்திர நாள் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் கொண்டாடப்பட்டாலும் தென் தமிழகமான நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசியில் பங்குனி உத்திரத்தை கொண்டாடும் விதமே தனி..

    சாஸ்தா அவதரித்த பங்குனி உத்திர திருநாள் ஆனது தென் மாவட்ட மக்கள் அனைவரும் குடும்பத்தோடு ஒன்று சேரும் நாள் என்று கூட சொல்லலாம்.

    சொக்காரன் என அழைக்கும் பங்காளிகள் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ளாதவர்கள் கூட உத்திர நாளில் சாஸ்தாவை வணங்க குலதெய்வ கோவிலுக்கு குடும்பமாக வந்து விடுவார்கள்.

    போன வருச பங்குனி உத்திரத்தோட ஊருக்குப் போயிட்டா.., வியாபாரம் பாதிக்குமேன்னு சாஸ்தா கோவிலுக்கு போகாம இருந்துட்டேன்.

    பாம்பு துரத்துற மாதிரி கனவு வருது.. வியாபாரமும் சரியில்லை.

    வீட்டுக்காரி வேற மேலுக்கு சரியில்லாம படுத்துக்குடுதா..

    எய்யா!! கடம்பா குளத்துக்கரை பூலுடையார் சாஸ்தாவே.. இந்த வருசம் உத்திரத்திற்கு ஒம்ம சன்னதிக்கு வர நீதாய்யா அருள் புரியணும்..

    என சத்தம் போட்டு குலசாமியிடம் வேண்டி கொண்ட மளிகைக்கடை சொக்காரனின் வேண்டுதல் குரலை கேட்ட அனுபவம் நிறைய பேருக்கு இருக்கும்.

    பங்குனி உத்திரத்திற்கு சென்று குலதெய்வத்தை வழிபடுவதை தென் மாவட்ட மக்கள் தங்களது கடமையாகவே கருதுவார்கள்.

    பெரும்பான்மையான இந்த சாஸ்தா கோவில்களில் தினசரி பூஜைகள், தீபம் ஏற்றுவது கூட நடைபெறாது.

    நிதம் தனது சன்னதியில் வந்து தன்னை வணங்கி வழிபட்டால் மட்டுமே அருள் புரிவேன், லாபத்தில் பத்து சதவீதம் பங்கு தந்தால் மட்டுமே காப்பாற்றுவேன் என ஒரு போதும் குல தெய்வமான சாஸ்தா தனது பிள்ளைகளிடம் நிபந்தனை விதிக்க மாட்டார்.

    பிழைப்புக்காக ஏதோ ஒரு இடத்திற்கு சென்று தான் செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்து காலையில் வியாபாரம் ஆரம்பிக்கும் முன் எய்யா!! எங்க சாமி!! இன்றைய பொழுது நல்லாயிருக்கணும், நல்லா லாபம் கெடைக்கணும்" என தனது புகைப்படத்தின் முன் நின்று ஒற்றை ரூபாய் ஊதுபத்தியை ஏற்றியோ, ஏற்றாமலோ தன்னை வணங்கும் பிள்ளைகளின் பிரார்த்தனையை தான் இருந்த இடத்திலிருந்த படியே நிறைவேற்றி கொடுப்பது தான் குலதெய்வத்தின் தனிப்பெரும் கருணை எனலாம்.

    வருடம் முழுவதும் தனியாக இருக்கும் சாஸ்தா ஆனவர் பங்குனி உத்திர நாளில் பிறந்தநாளை கொண்டாடும் சிறுவனை போல் உற்சாகம் ஆகிவிடுவார்.

    ஆம். பங்குனி உத்திரம் தான் சாஸ்தாவின் பிறந்தநாள் ஆகும்.

    பங்குனி உத்திர திருநாள் ஆனது சாஸ்தாவின் பிறந்த நாளோடு மட்டுமல்லாமல் நிறைய புண்ணிய நிகழ்வுகளையும் கொண்ட தினம் ஆகும்.

    அனைத்து தமிழ் மாதங்களிலும் உத்திரம் நட்சத்திரம் வருவதுண்டு. பங்குனி மாதத்தில் வருகின்ற உத்திரம் நட்சத்திரத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு.

    தெய்வங்களின் திருமணம் நடந்த தினமாதலால் "தெய்வங்களின் திருமண நாள்" என்ற பெயருக்கான பெருமைக்கு உரியது இந்த பங்குனி உத்திர திருநாள்.

    சிவ பெருமான் - பார்வதி திருமணம், ஸ்ரீராமன் - சீதை திருமணம், ஸ்ரீரங்கமன்னார் - ஆண்டாள் திருமணம், முருகன் - தெய்வானை திருமணம், சந்திரன் அஸ்வினி முதல் ரோகிணி வரையிலான இருபத்தியேழு நட்சத்திரங்களை மணந்தது, கும்ப முனி அகத்தியர் லோபா முத்திரையை மணந்தது என பல்வேறு தெய்வங்களின் திருமணங்கள் பங்குனி உத்திர நாளில் நடைபெற்றதாக பல்வேறு புராணங்கள் குறிப்பிடுகின்றன.

    பங்குனி உத்திர திருநாள் வழிபாடு மிகவும் புண்ணியமானதும், சகல நலன்களை தருவதும், துவக்கும் காரியங்களில் வெற்றியை தரவல்லதும் ஆகும்.

    பங்குனி உத்திர திருநாள் வழிபாடு பணக் கஷ்டம், திருமணத் தடைகள், வாராக் கடன், ஆரோக்கியக் குறைவு போன்ற அனைத்து தடைகளையும் நீக்கி தரும் புண்ணிய நாளாகும்.

    உத்திர திருநாளில் அன்னை, தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, உற்றார், உறவினர்களோடு உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள்.

    தனியாக ஒருபோதும் குலதெய்வ கோவிலுக்கு செல்லாதீர்கள்.

    தனியாக சென்று வேண்டும் வேண்டுதல்களை ஒருபோதும் குலதெய்வம் கேட்பதில்லை.

    ஒற்றுமையாக குடும்பத்தோடு கூட்டமாக சென்று வேண்டும் வேண்டுதல்களைத் தான் குலதெய்வம் எப்பொழுதும் நிறைவேற்றி தரும்.

    குலதெய்வம் கோவிலுக்கு செல்லும்போது தவறாது பொங்கலிட்டு குல தெய்வத்தை வணங்கி அவருக்கு படையலிட்ட பொங்கலை அவர் ஆலயத்தில் வைத்து சாப்பிடுங்கள்.

    நீங்கள் படைக்கும் பொங்கல் நிச்சயம் உங்கள் குல தெய்வத்திற்கானது அல்ல..

    யோவ்!!! என்ன!!! நாங்க வைக்குற பொங்கலு எங்க சாமிக்கு இல்லையா. நாங்க வைக்குற பொங்கலை எங்க சாமி ஏத்துக்கிடாதா என பட்டுன்னு எகிறாதீங்க..

    பிள்ளைகள் வயிறார சாப்பிடுவதை தானே தாய் விரும்புவாள்.

    தாயைப் போல தாய்மை குணம் நிறைந்தது தானே குலதெய்வம்.

    தன்னை வணங்கி விட்டு பசியோடு தனது பிள்ளைகள் வீட்டிற்கு செல்லக்கூடாதே!! என்று எண்ணி தனக்கு பொங்கல் படைக்க வேண்டும் என்று கூறி தனக்கு படைக்கப்பட்ட பொங்கலை தனது ஆலயத்தின் முன் இருந்து வயிறார சாப்பிடும் பிள்ளைகளை கருவறையில் இருந்த படியே மனம் நிறைய பாசத்தோடு ஆசிகள் வழங்கி கொண்டிருப்பார் குல தெய்வமான சாஸ்தா.

    குல தெய்வ வழிபாடு என்பது விட்டு போன உறவுகளை இணைப்பதற்காக, உறவுகள் விட்டு போகாமல் இருப்பதற்காக, பட்டுப்போன உறவுகளை துளிர வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு புண்ணிய சடங்கு ஆகும்.

    குலதெய்வத்தை வழிபட்டு அனைவரும் குடும்பத்தோடு ஒற்றுமையாக இருப்போம்.

    தொடர்புக்கு:

    isuresh669@gmail.com

    • குடியுரிமை என்பது அவரது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள நாடு.
    • ஒரு நாட்டின் மைய அரசால் தேசியக் குடியுரிமை விதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

    "நேஷனாலிட்டி" (தேசியம்) மற்றும் "சிட்டிசன்ஷிப்" (குடியுரிமை) ஆகிய இரண்டுக்கும் இடையே நுணுக்க வேறுபாடே உள்ளது.

    தனிநபரின் பிறந்த இடம் அல்லது வம்சாவளியைக் குறிப்பது தேசியம். குடியுரிமை என்பது அவரது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள நாடு. சில நாடுகளில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட குடியுரிமை கொண்டவராக இருக்க முடியும். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட "நேஷனாலிட்டி" கொண்டவராக இருக்க முடியாது அல்லவா?

    எனவே குடியுரிமைச் சட்டம் உலகெங்கிலும் "கொடுக்கும் சட்டம்" என்று கருதப்படுகிறது. உரிமையைப் பறிப்பவை முடக்கும் சட்டங்கள். எடுத்துக்காட்டாக பொது அமைதி காரணங்களுக்காகப் பிறப்பிக்கப்படும் சில சட்டங்கள் ஆகும்.

    ஒரே சட்டம் இரண்டுமாக இருக்க முடியாது. ஆனால் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் குடியுரிமைச் சட்டம் 2019 மற்றும் அதன் திருத்த விதிகள் பல்வேறு பாகு பாடுகள் காரணமாக அப்படி இருப்பதாகச் சட்ட நிபுணர்கள் கருதுகிறார்கள்.

    ஒரு நாட்டின் மைய அரசால் தேசியக் குடியுரிமை விதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆனால் சட்ட விதிகள் ஒரே சீராக இல்லாத காரணத்தால் எந்த நாட்டின் குடியுரிமையையும் பெற்றிருக்காத நிலை, இரட்டைக் குடியுரிமை போன்ற சிக்கல்கள் எழுந்தன. அவற்றை முடிவுக்கு கொண்டு வர நெதர்லாந்தின் ஹேக் நகரில் ஒரு மாநாடு 1930ல் நடந்தது.

    அதில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதை பல நாடுகள் ஏற்றுக் கொண்டன. திருமணமான பெண்களின் தேசியக் குடியுரிமை சார்ந்த உடன்படிக்கை 1957ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. எந்த நாட்டின் தேசியக் குடியுரிமையையும் பெற்றிராத நிலைக்குத் தீர்வு காணக் கூடிய வேறு சில உடன்படிக்கைகள் 60களுக்குப் பிறகே ஏற்றுக் கொள்ளப்பட்டன.

    சர்வதேசச் சட்டப்படி ஒரு நாட்டின் அரசு தன் தேசியக் குடியுரிமையைக் காப்பதற்காக ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் தலையிடலாம். எனவே குடியுரிமைச் சட்டத் திருத்தம் கொண்டுவர இந்திய அரசுக்கு உரிமை இருக்கிறது. தடுக்கும் உரிமை மாநிலங்களுக்கு இல்லை.

    இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 11 குடியுரிமை குறித்த சட்டம் இயற்றுவதற்கு வகை செய்தது. அதன் அடிப்படையில் "இந்தியக் குடியுரிமைச் சட்டம்-1955" இயற்றப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட காலத்திற்கு முன்பு இந்தியாவில் குடியிருந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு அதன் மூலம் வழி செய்யப்பட்டது.

    இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கான விதிகள் பின் வருமாறு:-

    1. பிறப்பால் அடைதல்: இந்தியக் குடியுரிமைச் சட்டம்-1955-ன் பிரிவு 3-ன் படி, அரசியல் அமைப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்ட தேதிக்கு முன் இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும்.

    2. மரபுவழிக் குடியுரிமை: இந்தியக் குடியுரிமைச் சட்டம் பிரிவு 4 இதற்கு வகை செய்கிறது. ஒருநபர் 26.01.1950 க்குப் பின்போ அல்லது 1992-ம் ஆண்டு திருத்தப்பட்ட இந்தியக் குடியுரிமைச் சட்டத்திற்கு முன்போ வெளிநாட்டில் பிறந்திருந்து அவருடைய தந்தை இந்தியக் குடிமகனாக இருந்தால், அவர் மரபுவழிக் குடியுரிமை பெறத் தகுதி உள்ளவர்.

    3. பதிவு செய்தல்: குறிப்பிட்ட வருடங்கள் இந்தியாவில் வாழ்ந்திருந்தால் உரிய அனுமதிகளுடன் இந்தியக் குடிமகன் என்ற பதிவைப் பெறலாம். இது அனைத்து நாட்டினருக்கும் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது.

    இதில் இப்போது ஒரு முக்கிய திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு மட்டும் விலக்குத் தரப்படுள்ளது. இவற்றிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப்பிரிவினர்கள் சில குறிப்பிட்ட நிபந்தனைகள் அடிப்படையில் குடியுரிமைக் பெறலாம்.

    வெளிநாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் இந்தியக் குடிமகனாக முடியாது. அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள். அல்லது முகாம் மற்றும் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

    ஆனால் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் சட்டத் திருத்தம் மூலம் அவர்களை இந்தியக் குடிமகனாக அங்கீகரிக்க வழிவகை செய்யப்படுகிறது. ஆனால் அந்தப் பட்டியலில் இஸ்லாமியர்கள் இல்லை. இந்துக்களான இலங்கைத் தமிழர்களும் இல்லை. அவர்களும் பவுத்தமதவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தான் என்ற வாதததை ஏற்றுக்கொள்ள மத்திய அரசு மறுத்து விட்டது.

    பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்து, சீக்கியர்கள், பவுத்தர், சமணர், பார்சி, கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு மட்டும் சலுகை தரப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்பதே திருத்தம். கெடு தேதி நீட்டிக்கப்பட்டு 2014-ம் ஆண்டு டிசம்பர் 31- ந் தேதிக்கு முன் குடியேறிய மேற்கண்ட பிரிவினர் (அதாவது பா.ஜனதா ஆட்சிக்கு வந்த வருடம்) இந்தியக் குடியுரிமை பெற வழி செய்யப்பட்டுள்ளது.

    குடியுரிமைச் சட்டத்திருத்த விதிகள் அமலுக்கு வந்ததை வடகிழக்கு மாநிலங்கள் பெரிய அளவுக்கு எதிர்க்கின்றன. ஏன்?

    வங்கதேசத்திலிருந்து வந்த இரண்டு லட்சம் வங்காள இந்து அகதிகள் அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தங்கி உள்ளனர். புதிய சட்டத் திருத்தம் மூலம் வங்கதேச அகதிகள் மேலும் அதிகரிப்பார்கள்.

    அது அஸ்ஸாமின் பூர்வகுடி ஜனத்தொகை விகிதாச்சாரத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும். அவர்கள் சொந்த பூமியில் சிறுபான்மை ஆகும் அபாயம் உள்ளது.

    அஸ்ஸாமில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறிய தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) நடவடிக்கை முன்பு மேற்கொள்ளப்பட்டது. அதற்கான காலக்கெடு 1971-ம் ஆண்டு மார்ச் 24 என்று நிர்ணயிக்கப்பட்டது.

    ஆனால் புதிய குடியுரிமை சட்டத்திருத்தம் 2014 டிசம்பர் 31 வரை வங்கதேச இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்க வழி செய்கிறது. அவர்கள் இதற்கு முன் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்.ஆர்.சி.) விலக்கப்பட்டிருந்தவர்கள்.

    அதே நேரத்தில் காலங்ககாலமாய் வட கிழக்கின் வனப் பகுதிகளில் வாழந்துவரும் ஆதிவாசிகள் தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற முடியவில்லை. அவர்கள் மேல்முறையீடு செய்துவிட்டு கோர்ட்டுக்கும், வீட்டுக்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் வங்கதேச இந்துக்களுக்கு சுலப விலக்கு கிடைத்துள்ளது.

    தராசு ஷ்யாம்

    தராசு ஷ்யாம்

    தேசியக் குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) மதத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. ஆனால், குடியுரிமை சட்டத் திருத்தம் மதத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பல அமைப்புகள் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை எதிர்க்கின்றன.

    நுழைவு அனுமதிப் படிவம் (இன்னர்-லைன் பர்மிட்) மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் அருணாசலப்பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய பகுதிகளுக்குச் சட்டத் திருத்தத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    அதாவது குடியுரிமை சட்டத்திருத்தம் இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் பொதுவானது அல்ல. எனவே தமிழ்நாடு மாதிரி லட்சக்கணக்கான இலங்கை அகதிகள் இருக்கும் மாநிலத்திற்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்பதே நியாயமானது.

    குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்பாளர்கள் கூறுவது என்ன?

    1. மதச்சார்பின்மை எனும் இந்தியாவின் அடித்தளத்தை இது சிதைக்கிறது.

    2. மதத்தை அடிப்படையாகக் கொண்டு குடியுரிமை வழங்கப்படக் கூடாது. ஏன் என்றால் மதத்தின் பெயரால் ஒருவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம். ஆனால் சட்டத்திருத்தம் மதப்பாகு பாட்டிற்கு அப்பட்டமான அங்கீகாரம் தருகிறது.

    3. குடியுரிமை சட்டத் திருத்தம் "சட்டத்தின் முன் அனைவரும் சமம்!" என்ற கோட்பாட்டைப் செல்லாததாக்குகிறது.

    4. மதப்பாகுபாட்டால் அகதிகளான சிறு பான்மையினரின் பாதுகாப்புக்காகத்தான் சட்டத் திருத்தம் என்றால் இஸ்லாமியர்களைச் சேர்த்து இருக்க வேண்டும். பாகிஸ்தான் அகமதியாக்களையும், மியான்மர் ரோகிஞ்சாக்களையும் (அந்தந்த நாடுகளில் பெரும்பான்மை மதப் பிரிவினரின் அடக்குமுறைக்கு உள்ளான இஸ்லாமியர்கள்) ஏன் சேர்க்கவில்லை?

    5. இலங்கையில் இன்னல்களையும், பவுத்த பேரின வாதத்தையும் சந்தித்து வரலாறு காணாத மானுட சோகத்திற்கு உள்ளான ஈழத்தமிழர்களை ஏன் விட்டுவிட்டார்கள்?

    சட்டத்திருத்தத்தை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?

    1. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளும் இஸ்லாமியப் பெரும்பான்மை நாடுகள். ஒன்று அரசே இஸ்லாமிய அரசாக இருக்கிறது, அல்லது அங்கு இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

    2. அவர்கள் அங்குள்ள சிறுபான்மை மக்களைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு தேவை.

    3. அதற்காகத்தான் குடியுரிமைச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. குடியுரிமை பெற அவர்கள் அனுபவிக்கும் துயரங்களைப் போக்குவதற்குப் புதிய சட்டத் திருத்தம் வழி வகுக்கும்.

    4. சட்டத்திருத்தம் குடியுரிமை வழங்குவதற்காகத்தானே தவிர பறிப்பதற்காக அல்ல.

    வங்கதேசப்பிரிவினையின் (1970-71) போதும், இடி அமீன் காலத்தில் (1972) உகாண்டாவில் இந்தியர்கள் தாக்கப்பட்டபோதும் வேறு சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி சிறப்புச் சலுகைக் குடியுரிமை ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே புதிய சட்டத் திருத்தமே தேவை இல்லை என்பதே உண்மை.

    ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வியூகங்களுக்காக குடியுரிமைச் சட்ட திருத்தத்தைப் பயன்படுத்துகிறது பாரதிய ஜனதா.

    மேற்குவங்கத்தில் வங்கதேச எல்லையில் அடர்த்தியாக வாழும் "நாம சூத்திரா" வகைப் பிரிவினர் இந்துக்கள். கங்கை நன்னீர் மற்றும் கழிமுகப்பகுதிகளில் மீன் பிடித்தல் மற்றும் சதுப்பு நிலச் சாகுபடி செய்தல் ஆகியவை அவர்களது வாழ்வியல்.

    மாநில எல்லைகள் இல்லாத காலத்தில் இன்றைய மேற்கு வங்கத்தின் அண்டை மாநிலங்களிலும் நாமசூத்திரர்கள் குடியேறி உள்ளனர். வரலாற்றால் மறக்கடிக்கப்பட்ட அவர்களுக்குக் குடியுரிமை என்ற ஒன்று இருப்பதே தெரியாது. 2019 தேர்தல் காலத்தில் அவர்கள் வாக்குகளைக் கவர பாரதிய ஜனதா முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றது.

    மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளில் அது 40 சதவீத வாக்குகளைப் பெற்று 18 இடங்களைக் கைப்பற்றியது. 2024ல் நாமசூத்திர வாக்கு வங்கியால் மொத்தம் உள்ள அத்தனை இடங்களையும் அள்ளிவிடலாம் என்று நினைக்கிறது பாரதிய ஜனதா. அதற்குக் குடியுரிமைச் சட்டத் திருத்தம் உதவும் என்பது அதன் கணக்கு.

    இந்துக்களான நாமசூத்திரர்கள் மத்தியில் இப்போது குடியுரிமைக் கனவு ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் அண்டை மாநில விழிப்புணர்வு இயக்கங்கள் எதிர்க்கின்றன. தேசவிரோத முத்திரை குத்தப்பட்டு அவை அடக்கி ஒடுக்கப்படுகின்றன.

    சுருக்கமாகச்சொன்னால், குடியுரிமைச் சட்டதிருத்தம் வாக்கரசியலுக்காக இந்து-முஸ்லிம் பிரிவினைவாதத்தை முன்னெடுக்கிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள காலகட்டத்தில் பா. ஜ. ஆதரவு அதிகம் உள்ள வட மாநிலங்களில் இந்து ஓட்டு வங்கியை மேலும் ஒருமுனைப்படுத்த முனைகிறது பாரதிய ஜனதா என்பது தான் உண்மை.

    ஓட்டுக்காக நாட்டைப் பிளவுபடுத்துவது பேராபத்து.

    • நமது உடலில் ஏதாவது ஒரு நோய் வருவதற்கு முன்பே அதனை கண்டறிந்து நமது உடல் நலனை பாதுகாத்துக் கொள்ளலாம்.
    • முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என நீங்கள் நினைத்தால் அன்றைய தினம் காலையில் டீ, காபி உள்பட எதுவுமே சாப்பிடாமல் செல்லுங்கள்.

    'லேசாகத் தலைவலிக்கிறது' என்று சொன்னால் கூட, அனைவரும் சொல்லும் முதல் வார்த்தை ஆஸ்பத்திரிக்கு சென்று முழு உடல் பரிசோதனை செய்து பார் என்பது தான்.

    அந்த அளவுக்கு படித்தவர்கள் முதல் படிக்காத பாமரர்கள் வரை அனைவரது மனதிலும் பதிவாகி விட்ட ஒரு வார்த்தையாகி விட்டது முழு உடல் பரிசோதனை.

    இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் நாம் நமது உடல் நலனை நன்றாக கவனித்து கொள்கிறோமா என்று நம்மை நாமே முதலில் கேட்டு பார்த்தால், இல்லை என்று தான் சொல்ல தோன்றும். அந்தளவுக்கு உடல் நலனை பற்றி அக்கறைப்படுவதற்கோ அல்லது கவலைப்படுவதற்கோ நமக்கு அதற்கான நேரம் இருப்பதே இல்லை.

    உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதைப் பொறுத்தவரை பலரும் நோய் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றே நினைக்கின்றனர்.

    நோய் அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கும் வரை காத்திருக்கின்றனர். உதாரணத்துக்குத் தலைச்சுற்றல், மயக்கம் வந்தால் உயர் ரத்த அழுத்தம் இருக்க வாய்ப்புள்ளது. அதிகமாகச் சிறுநீர் கழிப்பது, புண் ஆறத் தாமதம் ஆகிறது என்றால் நீரிழிவு நோய் வந்துவிட்டது என்று அர்த்தம். இப்படி நோய் வந்த பிறகு உடலை போட்டு சிரமப்படுத்துவதைவிட, அந்த நோய் தலையெடுக்கும் முன்பே அதனை கண்டுபிடித்து, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து சிகிச்சை மேற்கொள்வது தான் புத்திசாலித்தனமானது. உடல் வலி மற்றும் அறுவை சிகிச்சை போன்றவற்றையும் தவிர்த்து விடலாம். இதற்கு முழு உடல் பரிசோதனை முக்கியம்.

    எல்லோரும் முழு உடல் பரிசோதனை செய்து கொள் என்று சொல்கிறார்களே உண்மையில், முழு உடல் பரிசோதனை என்பது என்ன, அது யாருக்கு அவசியம், அதில் செய்யப்படும் பரிசோதனைகள் மூலம் என்னென்ன நோய்களைக் கண்டறிய முடியும்? என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

    நமது உடலில் ஏதாவது ஒரு நோய் வருவதற்கு முன்பே அதனை கண்டறிந்து நமது உடல் நலனை பாதுகாத்துக் கொள்ளலாம். அந்த வகையில் முழு உடல் பரிசோதனையானது அதற்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது. இன்றை இளம் தலைமுறையினரிடம் 'நோய் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்' என்ற மனநிலையே மேலோங்கி நிற்கிறது. நோய் முற்றிய பின்னரே ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். முன்னதாகவே பார்த்து விட்டால் நன்றாக இருக்கும்.

    இருந்தாலும், எல்லோரும் இந்த பரிசோதனை செய்து கொண்டு தான் ஆக வேண்டும் என்பதில்லை. பொதுவாக, 35 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, ரத்தப் புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற ஏதாவது மரபு வழி நோய்கள் இருந்தால் அந்தக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் 35 வயதுக்கு முன்பாக இந்தப் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது. பல்வேறு நோய் அறிகுறிகள் உள்ளவர்களும் இந்த சோதனையை மேற்கொள்ளலாம். இதுமட்டுமின்றி தங்கள் உடம்பில் நோய் இருக்கிறதா? இல்லையா? என்பதை பார்க்க விரும்புபவர்களும் முழு உடல் பரிசோதனை செய்து பார்த்து கொள்ளலாம்.

    புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள், ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுபவர்கள் போன்றோர் வருடத்துக்கு ஒரு முறை கட்டாயம் இந்த பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். அதிக டென்ஷன் உள்ள வேலைகளை செய்வோர், ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களும் செய்ய வேண்டும். உடல் உழைப்பு இல்லாமல் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்கள் எந்த நோய் இல்லாவிட்டாலும் 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் தொடக்க நிலை மற்றும் முற்றிய நிலையில் உள்ள நோய்களை நாம் கண்டறிய முடியும். அப்படி கண்டறிந்தால் அதற்கான சிகிச்சைகளை அப்போதே தொடங்கி அதனை செய்து கொள்ள முடியும். இதற்கு முழு உடல் பரிசோதனை மிகவும் அவசியமானது.

    முழு உடல் பரிசோதனை செய்து விட்டோம் பல நாட்கள் கழித்து தான் முடிவுகள் வரும் என எண்ண வேண்டாம். ஒரே நாளிலேயே அதன் முடிவுகளும் உடனே தெரிவிக்கப்பட்டு விடுகிறது.

    என்னென்ன பரிசோதனைகள்?

    பொதுவாக ரத்தம், சிறுநீர், மலம் தொடர்பான பரிசோதனைகள், மார்பக எக்ஸ்ரே, காது, மூக்கு, தொண்டை, பல், கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ஈசிஜி, டிஎம்டி, எக்கோ, கார்டியோ கிராம், பெண்களுக்கு மேமோகிராம், ஆஞ்சியோ கிராம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இந்த முழு உடல் பரிசோதனையில் உள்ளது. இதுமட்டுமின்றி முழு உடல் பரிசோதனை செய்ய வருபவர்களிடம் அவர்களின் பழக்க வழக்கங்கள் பற்றியும் கேட்டு அறியப்படும். அப்போது அவர்களுக்கு இந்த சிகிச்சை முறையிலோ அல்லது வேறு ஏதாவது சந்தேகங்கள் இருந்து எங்களிடம் கேட்பவர்களுக்கு அதற்கான விளக்கத்தையும் கொடுக்கிறோம்.

    இந்த முழு உடல் பரிசோதனையில், நோய் அறிகுறிகளுக்கு ஏற்பவும் பரிசோதனைகள் விரிவடைந்து கொண்டே செல்கின்றது. முழு உடல் பரிசோதனையின்போது ஏதேனும் நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டால், அதை உறுதி செய்வதற்காக கூடுதல் பரிசோதனைகள் தேவைப்படும். முழு உடல் பரிசோதனையின்போது அந்த நபருக்கு கூடுதல் பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனையானது சலுகை கட்டணத்திலேயே செய்யப்பட்டு வருகின்றன.

    முழு உடல் பரிசோதனை செய்யும்போது, நமது உடலில் உள்ள பல், கண், காது, மூக்கு, தொண்டை போன்ற பல உறுப்புகளில் ஏற்படும் நோய்களை முன்கூட்டியே நாம் தெரிந்துகொள்ள முடியும். ரத்த பரிசோதனையில் ரத்த சோகை, ரத்தப் புற்றுநோய், நீரிழிவு நோய் பாதிப்பு தெரியவரும். நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு, அளவைக் கண்டறிவதன் மூலம் இதயத்தின் இயங்கும் தன்மையை அறியலாம்.

    இந்த சோதனையின் மூலம் மாரடைப்பு அபாயத்தையும் முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் அதனை தடுப்பதற்கான மருத்துவ சிகிச்சையையும் நாம் எடுத்து கொள்ளலாம்.

    இ.சி.ஜி., டி.எம்.டி.(ட்ரெட் மில் டெஸ்ட்) மற்றும் ஆன்ஜியோகிராம் மூலம் மாரடைப்பு நோயை கண்டுபிடிக்கலாம். ரத்த அழுத்த அளவு பரிசோதனையில் ரத்தக் கொதிப்பு வாய்ப்புகளைக் கண்டறியலாம். எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் மற்றும் புராங்கைட்டிஸ் பரிசோதனை மூலம் நுரையீரல் பாதிப்பு, நுரையீரல் புற்றுநோய் மற்றும் நிமோனியா பாதிப்புகளை கண்டறியலாம். இதன் மூலம் ஏற்பட வாய்ப்புள்ள மாரடைப்பு, பக்கவாதத்தையும் கண்டுபிடிக்கலாம். மேமோகிராம் பரிசோதனை மூலம் மார்பக புற்றுநோயைக் கண்டறியலாம்.

    அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கல்லீரல் இயக்கம், கொழுப்பு படிந்த கல்லீரல், கல்லீரலில் ஹெபடைடீஸ் பாதிப்பு, கல்லீரலில் சிரோசிஸ் மற்றும் புற்றுநோய் பாதிப்புகளைக் கண்டறியலாம்.

    இத்தகைய பரிசோதனைகள் மூலம் பித்தப்பைக் கற்கள், குடல் மற்றும் குடலுக்கு வெளியே உள்ள பாகங்களில் ஏற்படும் பாதிப்புகள், சிறுநீரக செயல்பாடு, புராஸ்டேட் புற்றுநோய் அபாயம், பெண்களுக்கு கர்ப்பப்பை ஆகியவற்றில் தோன்றும் சாதாரணக் கட்டிகள் முதல் புற்றுநோய் வரை இந்த சிகிச்சை முறையின் மூலம் கண்டறிந்து விட முடியும்.

     

    டாக்டர்கள் ஜோசப், ஸ்மித்தா அசோக் கே.எம்.சி.எச். மருத்துவமனை, கோவை.

    டாக்டர்கள் ஜோசப், ஸ்மித்தா அசோக் கே.எம்.சி.எச். மருத்துவமனை, கோவை.

    முழு உடல் பரிசோதனை மேற்கொள்பவர்களுக்கு பரிசோதனையின்போது ஏதாவது பாதிப்புகள் கண்டறியப்பட்டால், எந்த நோய் இருக்கிறதோ, அந்தந்த நோய்களுக்கு ஏற்ப துறை ரீதியான மருத்துவர்களிடம் அழைத்து செல்லப்படுவார்கள்.

    அந்த மருத்துவர்கள், அவர்களுக்கு அந்த நோயின் தன்மை குறித்தும், எந்த நிலைமையில் உள்ளது, அதனை எப்படி சரி செய்ய வேண்டும், அதற்கான சிகிச்சை முறை என்பதையும் விரிவாக விளக்கி கூறுவார்கள். மேலும் அவர்களுக்கு தேவையான ஆலோசனையை வழங்குவதுடன், அந்த நோய்க்கான உரிய சிகிச்சைகளையும் மேற்கொண்டு அவர்களை அந்த நோயில் இருந்து முற்றிலும் குணப்படுத்தி விடுவார்கள்.

    முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என நீங்கள் நினைத்தால் அன்றைய தினம் காலையில் டீ, காபி உள்பட எதுவுமே சாப்பிடாமல் செல்லுங்கள். ஏதாவது நோய்க்கு மருந்து சாப்பிடுபவர்களாக நீங்கள் இருந்தால், அது தொடர்பான மருத்துவ அறிக்கையை கையுடன் எடுத்து சென்று டாக்டர்களிடம் காண்பித்து விட்டு, முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    எங்களது ஆஸ்பத்திரியில், முழு உடல் பரிசோதனை செய்ய நீங்கள் விரும்பினால் எங்களது மையத்துக்கு முன்கூட்டியே போன் செய்து பதிவு செய்து வைத்து கொள்ளுங்கள். ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் தவிர மற்ற அனைத்து தினங்களிலும் இந்த மையமானது செயல்பட்டு வருகிறது.

    வருமுன் காப்பதே சிறந்தது என்ற வாக்கியத்திற்கு ஏற்ப நாம் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் இருப்பதற்கு நாம் ஆண்டிற்கு ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது மிகவும் அவசியமானது. அப்படி செய்து கொண்டோமேயானால் நாம் இந்த பூமியில் இருக்கும் வரை சந்தோஷத்துடனும், உற்சாகத்துடனும் நமது பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கலாம்.

    தொடர்புக்கு:

    73393 33485

    • தாயாருக்கு 9 வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, பாசிப்பயறு சுண்டல் வைத்து பிரார்த்தித்து வர நினைத்த காரியம் கைகூடும்
    • தலத்தில் ஏழு தீர்த்தங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது சோழர்கள் தலைநகராக விளங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

    கும்பகோணத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது நாதன்கோவில். இந்த ஊரில் ராஜராஜசோழன் எழுப்பிய மிகப்பழமையான ஆலயம் இருக்கிறது. இந்தக் கோவிலில் இருந்தபடி இன்றைக்கும் அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறார் பெருமாள். இங்கு, மூலவரின் திருநாமம் - ஸ்ரீவிண்ணகரப் பெருமாள்: ஸ்ரீநாகநாதர் என்றும் அழைப்பர்.

    கருவறையில் இவருக்கு முன்னே, ஸ்ரீதேவி மற்றும் ஸ்ரீபூதேவியுடன் ஸ்ரீஜெகந்நாதபெருமாள் எனும் திருநாமத்துடன் உற்சவரும் காட்சி தருகிறார்.

    ஸ்ரீபிரம்மா, திருமாலின் விக்கிரகத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட அற்புதத் தலம் இது! இத்தகைய சிறப்புடைய நாதன்கோவிலை, திருநந்திபுர விண்ணகரம் எனப் போற்றுகிறது தல புராணம். நந்தி, சிவபெருமானின் வாகனம். அந்த நந்தி பெயரில் பெருமாளுக்கு உரிய இடம் அழைக்கப்படுகிறது. அந்த பெருமாள் குடிகொண்டிருக்கும் தலத்துக்கு சிவனாரின் வாகனமான நந்தியின் பெயர் வந்தது எப்படி தெரியுமா?

    ஒருமுறை, மகாவிஷ்ணுவைத் தரிசிக்க வைகுண்டத்துக்கு நந்திதேவர் சென்றார். ஆனால், துவாரபாலகர்களான ஜயனும் விஜயனும் அவரைத் தடுத்து நிறுத்தினார்கள். அதையும் மீறி நந்திதேவர் உள்ளே செல்ல முயன்றார். இதனால் கோபம் கொண்ட இருவரும், "உஷ்ண நோயால் உன் தேகம் பாதிக்கப் பட்டு. அவதிப்படுவாயாக!" எனச் சாபமிட்டனர்.

    இந்த நோயால் அவதிப்பட்ட நந்திதேவர், சிவபெருமானிடம் முறையிட்டார். அப்போது, "திருமகள் கடும் தவம் இருந்து, திருமாலின் இதயத்தில் இடம் பிடித்த தலமான நாதன்கோவி லுக்குச் சென்று தவம் செய்தால், சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கப் பெறுவாய்" என்று அருளினார் சிவபெருமான்.

    அதன்படி, இந்தத் தலத்துக்கு நந்திதேவர் வந்தார். திருமாலை எண்ணிக் கடும் தவம் மேற்கொண்டார். இதில் மகிழ்ந்த பெருமாள் அவருக்கு காட்சி கொடுத்து ஆசிர்வதித்தார். அதோடு நந்தியின் சாபத்தையும் போக்கியருளினார். அப்போது திருமாலிடம் நந்திதேவர். "என்னைப் போலவே தோல் நோயால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து தங்களைத் தரிசித்தால், அந்த நோயைத் தாங்கள் தீர்த்தருள வேண்டும். இதன் நினைவாக, இந்தத் திருத்தலம் அடியேனின் பெயரால் அழைக்கப்படவேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார். அைத ஏற்றுக்கொண்ட மகாவிஷ்ணு, 'அப்படியே ஆகட்டும்' என அருளினார். அதன்படி, இன்றளவும் தோல் நோய்களைத் தீர்த்து அருளி வருகிறார் பெருமாள். இங்கே, மனித உருவில் காட்சி தரும் நந்திதேவரை கருவறையிலேயே தரிசிக்கலாம்.

    திருமாலின் இதயத்தில் இடம்பிடிக்க, செண்பக மரத்தடியில் ஸ்ரீமகாலட்சுமி தவம் செய்த தலம் என்பதால், இங்கு மரத்தடியில் ஸ்ரீசெண்பகவல்லித் தாயாராக, கிழக்குப் பார்த்தபடி, தவம் செய்யும் கோலத்தில் காட்சி தருகிறாள்.

    சுக்லபட்ச அஷ்டமி நாளில், இங்கு ஸ்ரீசூக்த ஹோமம் சிறப்புற நடைபெறுகிறது. தொடர்ந்து எட்டு சுக்லபட்ச அஷ்டமி நாட்களில் இந்தத் தலத்துக்கு வந்து,ஸ்ரீசூக்த ஹோமத்தில் பங்கேற்று,ஸ்ரீசெண்பகவல்லித் தாயாரை தரிசித்து வணங்கினால், தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்பது ஐதீகம். மேலும் திருமணத் தடை அகலும்; கஷ்டங்கள் யாவும் விலகும். சந்திர மற்றும் பித்ரு தோஷங்கள் நீங்கும்; லட்சுமி கடாட்சமாக வாழலாம் என்பது ஐதீகம்!

    மனித உருவில் காட்சி தரும் நந்திதேவரை வணங்கி வழிபட, நோய்கள் நீங்கப் பெறலாம்; இழந்த பதவியை அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இந்த ஆலய மூலஸ்தான கோபுரத்தில் நந்தியும், பிரம்மாவும் பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளனர். இது இக்கோவிலின் சிறப்புக்களில் ஒன்று. இக்கோவிலில் இறைவன் மேற்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

    பெருமாளின் 108 திவ்ய தேச தலங்களில் இந்த தலமும் ஒன்றாகும். இது 21 வது திவ்ய தேச கோவிலாக போற்றப்படுகிறது. இக்கோவில் நந்திபுரம், நாதன் கோவில், திருதந்திபுர விண்ணகரம் ஆகிய மற்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. இக்கோவில் தட்சிண ஜகந்நாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

    கோவில் தனிச்சிறப்பு :

    * பெருமாளுக்கு முன் நந்தி காட்சி தரும் தலம்

    * திருமாலின் திருமார்பில் திருமகள் உறையும் பாக்கியம் பெற்ற தலம்

    * திருமண தடை நீக்கும் தலம்

    சந்திர தோஷ பரிகார தலமாகவும் இக்கோவில் உள்ளது. இத்தல பெருமாள் கையில் வாள், வில், சக்கரம், தண்டாயுதம், சங்கு ஆகிய ஆயுதங்களுடன் அருள்பாலிக்கிறார். நந்தி சாப விமோசனம் பெற்ற தலம் என்பதால் சன்னதி, ஊர், தீர்த்தம் என அனைத்தும் நந்தியை முதன்மைப்படுத்தியே காணப்படும்.

    வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஆனி மாத பவித்ரோற்சவம், அட்சய திருதியை போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

    தாயாருக்கு பிரார்த்தனை:

    திருமணப் பிரார்த்தனைக்கு இது உகந்த தலமாகும். தாயாருக்கு 9 வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, பாசிப்பயறு சுண்டல் வைத்து பிரார்த்தித்து வர நினைத்த காரியம் கைகூடும்.

    திருமணத்தடை உள்ளவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர, குழந்தை பாக்கியம் பெற, வழக்குகளில் சாதகமான தீர்ப்பு பெற, நரம்பு சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் சிறந்த பலன் கிடைக்கும். வேண்டுதல் நிறைவேறியவர்கள் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் வழிபடுகின்றனர்.

    கோவில் விபரங்கள் :

    மூலவர் - நாதநாதன், விண்ணகரப் பெருமாள் யோக ஸ்ரீனிவாசன், தாயார் செண்பகவல்லி, உற்சவர் - ஜெகந்நாதன்

    தல விருட்சம் - செண்பக மரம்

    தீர்த்தம் - நந்தி தீர்த்த புஷ்கரணி

    கோலம் - வீற்றிருந்த திருக்கோலம்

    நந்திக்கே முதன்மை

    மூன்று நிலை ராஜகோபுரங்களுடன் அமைந்த இந்த தலத்தின் குளம் நந்தி தீர்த்தம் என்றும், விமானம் நந்தி விமானம் என்றும் அழைக்கப்படுகின்றன. மூலஸ்தானத்தில் சீனிவாசப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேர்ந்து காட்சி தருகிறார்.

    சிவன் கோவில்களில் மட்டுமே காணப்படும் நந்தி, இத்தலத்தில் மூலஸ்தானத்தின் முன் காட்சி தருகிறார். செண்பகவல்லி தாயாருக்கு தனி சந்நிதி உண்டு. இந்த தலத்தில் ஏழு தீர்த்தங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது சோழர்கள் தலைநகராக விளங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

    காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இந்த கோவில் நடை திறந்திருக்கும்.

    • தர்மர் துயரத்தோடு கலியுகம் பிறக்கப் போகிறது, அதற்கான நாள் நெருங்கிவிட்டது என்று சொல்லிவிட்டு மேலும் பேசத் தொடங்கினார்.
    • மக்கள்தான் வறுமையில் வாடுவார்களே தவிர, அதிகாரிகள் எல்லோரும் செழிப்பாகத்தான் இருப்பார்கள்.

    மிகக் கடுமையான மகாபாரதப் போர் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தது. தீயவனான துரியோதனன் பீமனால் தொடையைப் பிளந்து கொல்லப்பட்டான்.

    பாவி துச்சாதனன் செந்நீர், அந்தப் பாழ்த் துரியோதனன் யாக்கை ரத்தம் இரண்டையும் கலந்து கூந்தலில் தடவி நீராடிச் சீவிக் குழல் முடித்தாள் பாஞ்சாலி. அவள் கவுரவர் சபையில் துச்சாதனன் தன்னைத் துகிலுரிய முனைந்தபோது செய்த சபதம் நிறைவேறியது.

    இப்போது பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தருமபுத்திரர் மன்னராகி விட்டார். தன் பெயருக்கேற்ற வகையில் அவர் தருமநெறி தவறாமல் ஆட்சி செய்துகொண்டிருந்தார். அவரது செங்கோல் அரசாட்சியில் மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மாதம் மும்மாரி பொழிந்து நாடே செழிப்பாக இருந்தது.

    அந்தத் தருணத்தில்தான் துவாரகையின் மன்னனும் பஞ்ச பாண்டவர்களின் வழிகாட்டியுமான கண்ணன் ஒரு வேடனால் தற்செயலாகக் கொல்லப்பட்டான்.

    மரத்தின் கிளையில் உயரே அமர்ந்திருந்த கண்ணனின் அழகிய வெள்ளை நிறப் பாதங்களைப் புறா என நினைத்த வேடனின் புத்தியை என்ன சொல்வது? வேடனின் அம்பால் கண்ணன் மாண்டுபோனதை விதி என்று சொல்லாமல் அதற்கு வேறென்ன விளக்கம்?

    கண்ணன் வைகுந்தம் செல்லும்முன், `விரைவில் துவாபர யுகம் முடிந்து கலியுகம் தோன்றும், கலிபுருஷன் தன் வேலைகளைக் காண்பிக்கத் தொடங்குவான்` என்று தருமபுத்திரரை எச்சரித்துவிட்டே சென்றான்.

    தர்மபுத்திரர் கண்ணன் சொன்னபடி, கலியுகம் தோன்றினால் உலகம் என்னென்ன வகையில் மாறுமோ, மக்களின் மனப்போக்கு எவ்விதமெல்லாம் உருக்கொள்ளத் தொடங்குமோ எனக் கவலையுடனும் அச்சத்துடனும் காத்திருந்தார்.

    கண்ணனின் எச்சரிக்கையை எண்ணி அடிக்கடி அவரிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

    அப்படியான காலகட்டத்தில் ஒருநாள்...

    பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த வணிகச் சந்தை. சிலர் பொருட்களைக் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தார்கள். பலர் பொருட்களைத் தேடித் தேடி வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

    அங்கு காய்கறி தொடங்கி வீட்டுக்கு உபயோகமான எல்லா வகையான பொருட்களும் விலைக்கு வாங்கக் கிடைத்தன. நியாயமான முறையில் வணிகம் நடந்து கொண்டிருந்தது.

    சூரியாஸ்தமனம் நிகழத் தொடங்கி மெல்லிய இருள் பரவும் நேரம். அப்போது, பரவிக் கொண்டிருந்த இருளைத் திரட்டிச் செய்தது மாதிரியான கறுத்த நிறத்தோடு ஒருவர் ஒரு குதிரையுடன் சந்தையில் அதை விற்பதற்காக வந்தார்.

    அவர் எங்கிருந்து வந்தார் எனத் தெரியவில்லை. அவர் உடலின் கருமை நிறம் வித்தியாசமானதாய் இருந்தது. ஆனால் அவர் விற்பதற்காகக் கொண்டு வந்த குதிரையின் எழில் எல்லோரையும் சுண்டி இழுத்தது.

    மினுமினுப்பான உடல். கம்பீரமான நடை. அந்தக் குதிரையிடம் தென்பட்ட மிடுக்கு அதற்கு ஒரு தனி கவர்ச்சியைக் கொடுத்தது. பார்த்த யாராலும் அதனிடமிருந்து கண்ணைத் திருப்ப முடியவில்லை.

    அந்நேரம் பார்த்து, பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான சகாதேவன் அந்தச் சந்தைக்குள் நுழைந்தான். எல்லோரையும் கவர்ந்த குதிரை அவனையும் கவரத் தவறவில்லை.

    குதிரையின் சேணத்தைப் பிடித்துக்கொண்டு நின்ற குதிரையின் உரிமையாளரை நெருங்கி, "இந்த அழகிய குதிரை என்ன விலை? என்று கேட்டான்.

    அவரோ குதிரையின் விலையைச் சொல்லாமல் அவன் கேட்ட கேள்விக்கு விந்தையான ஒரு பதிலைச் சொன்னார்.

    "ஐயா! இந்தக் குதிரையை நான் விற்பனைக்காகக் கொண்டு வரவில்லை. நீங்கள் இதை வாங்க விரும்பினால் அதற்கு ஒரு வழி இருக்கிறது. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால் போதும். அப்படி பதில் சொல்பவர்களுக்குக் குதிரையை எந்தப் பணமும் பெற்றுக் கொள்ளாமல் இலவசமாகவே தருவேன் " என்றார் அவர்.

    சற்றே திகைப்படைந்த சகாதேவன், "சரி உங்கள் கேள்விகளைக் கேளுங்கள்" என்றான்.

    குதிரையின் உரிமையாளர், "ஒரு பெரிய கிணறு. அதில் உள்ள நீரை எடுத்து ஏழு சிறிய கிணறுகளை நிரப்ப முடியும். ஆனால், அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் நீரை எடுத்து, மறுபடியும் அந்தப் பெரிய கிணற்றில் ஊற்றினால், பெரிய கிணறு நிரம்பாது. எதிர்காலத்தில் இப்படி நிகழும். இது ஏன்?" என்று கேட்டார்.

    இதென்ன விசித்திரமான கேள்வி? சகாதேவனுக்குப் பதில் தெரியவில்லை. அங்கேயே பதிலை யோசித்தவாறு உட்கார்ந்து விட்டான்.

    சிறிது நேரத்தில், எங்கே சகாதேவனைக் காணோம் எனத் தேடிக்கொண்டு அவன் சகோதரன் நகுலன் சந்தைக்கு வந்தான். குதிரையையும் அதன் உரிமையாளரையும் அருகே சோர்வோடு அமர்ந்திருந்த சகாதேவனையும் பார்த்தான். குதிரையின் அழகு நகுலனையும் மயக்கியது. அவனும் அதை வாங்கும் எண்ணத்தில் விலை கேட்டான்.

    இப்போது குதிரையின் உரிமையாளர், நகுலனிடம் வேறு ஒரு கேள்வியைக் கேட்டார். "துணி தைக்கும் ஊசியின் துவாரம் வழியாக ஒரு யானை புகுந்து, அடுத்த பக்கம் போய்விட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் அந்த துவாரத்தின் வழியாகப் போக முடியவில்லை. ஏன்?" என்று கேட்டு இதற்கான பதிலைச் சொல்லிவிட்டு பணமே தராமல் குதிரையை அழைத்துச் செல்லலாம் என்றார்.

    நகுலன் எவ்வளவோ யோசித்தும் அவனுக்கு பதில் தெரியவில்லை. அவனும் ஏற்கெனவே சந்தையில் உட்கார்ந்திருந்த சகாதேவனுடன் தானும் சேர்ந்து உட்கார்ந்துவிட்டான்.

    சில நிமிடங்கள் கழிந்தன. அர்ஜுனன் அங்கு வந்தான். அவனும், அழகிய குதிரையைப் பார்த்து, அதன் விலையைக் கேட்டான். குதிரையின் உரிமையாளர், அர்ஜுனனிடமும் கேள்வி கேட்டார்.

    "ஒரு வயலில் பயிர் நன்றாக விளைந்திருந்தது. வேலியெல்லாம் போட்டு பயிரை மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். ஆனால் அறுவடை காலத்தில், அந்த வயலில் விளைந்த பயிர் எதையும் காணவில்லை. வேலியெல்லாம் இருந்தும் விளைந்த தானியம் எங்கு போயிற்று? யார் எடுத்தார்கள்? பதில் சொல்லிவிட்டு, குதிரையை அழைத்துச் செல்லுங்கள்" என்றார்.

    கண்ணனிடம் மகாபாரதப் போர் நடந்தபோது கீதோபதேசம் கேட்டவன் அர்ச்சுனன். அப்போது எத்தனையோ நுணுக்கமான கேள்விகளை எழுப்பி கண்ணன் மூலம் விளக்கம் பெற்ற அர்ஜுனனால் இப்போது இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. அவனும் யோசனையோடு அங்கேயே உட்கார்ந்து விட்டான்.

    அரண்மனையில் சகோதரர்கள் மூவரையும் காணாமல், தர்ம புத்திரர் திகைப்படைந்தார். பீமனைக் கூப்பிட்டு, "நீ போய், அவர்கள் எங்கே என்று தேடி அழைத்து வா!" என்றார்.

    பீமன் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அரண்மனைக்கு அழைத்து வந்தான். திரெளபதியோடு அரியணையில் அமர்ந்திருந்த தர்மர், அவர்களைப் பார்த்ததும், "அர்ஜுனா! நீண்ட நேரமாக நீயும் உன் தம்பிகளும் எங்கு போனீர்கள்?" என விசாரித்தார்.

    அர்ஜுனன், நடந்ததை விவரித்தான். குதிரை உரிமையாளர் கேட்ட மூன்று வினாக்களையும் ஒவ்வொன்றாகச் சொன்னான். அந்தக் கேள்விகளைக் கேட்ட தர்மபுத்திரர் நடுநடுங்கினார்.

    திருப்பூர் கிருஷ்ணன்

    திருப்பூர் கிருஷ்ணன்

     

    தம்பிகள் திகைத்தார்கள். "அண்ணா! நீங்கள் நடுங்கும்படியாக இந்தக் கேள்விகளில் என்ன இருக்கிறது?" எனக் கேட்டார்கள்.

    தர்மர் துயரத்தோடு கலியுகம் பிறக்கப் போகிறது, அதற்கான நாள் நெருங்கிவிட்டது என்று சொல்லிவிட்டு மேலும் பேசத் தொடங்கினார்...

    "என் அன்புச் சகோதரர்களே! விரைவில் கலியுகத்தில் நிகழப்போகும் விபரீதங்களை, அந்த மூன்று கேள்விகளும் தெரிவிக்கின்றன. அதை எண்ணித்தான் நடுங்கினேன். ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள்....." என்று விரிவாகக் கூறலானார்.

    "உங்களிடம் கேள்வி கேட்டவன் கலி புருஷன். அவன் கேட்ட முதல் கேள்வியில் பெரிய கிணறு என்பது பெற்றோர். ஏழு சிறிய கிணறுகள் என்பவை அந்தப் பெற்றோரின் பிள்ளைகள். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை, அவர்கள் எண்ணிக்கையில் எத்தனை பேராக இருந்தாலும் சரி! காப்பாற்றுவார்கள்.

    இதைத்தான் பெரிய கிணற்றின் நீரைக் கொண்டு சிறிய கிணறுகளை நிரப்பினார்கள் என்றது குறிக்கிறது. ஆனால் அந்தப் பிள்ளைகளோ, அவ்வளவு பேரும் சேர்ந்து கூட, தங்கள் பெற்றோரைக் காப்பாற்ற மாட்டார்கள்.

    இதைத்தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள அத்தனை தண்ணீரையும் கொண்டு, அந்த ஒரே ஒரு பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறிக்கிறது.

    அடுத்த இரண்டாவது கேள்வி என்ன சொல்கிறது தெரியுமா? இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள் ஏராளமாக நடைபெறும். ஆனால் நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினம். இதைத்தான் யானையே போன வழியில், அதன் வால் போக முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார் அந்தக் குதிரை உரிமையாளர்.

    மூன்றாவது கேள்வியில் பயிர்கள் என்பது மக்களைக் குறிக்கும், பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக் குறிக்கும். மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே விளைச்சல் முழுவதையும் அனுபவிப்பார்கள்.

    அவர்கள் மக்களின் நலன்களை அழித்து விடுவார்கள். மக்கள்தான் வறுமையில் வாடுவார்களே தவிர, அதிகாரிகள் எல்லோரும் செழிப்பாகத்தான் இருப்பார்கள். இதைத்தான், வேலி அப்படியே இருக்க, பயிர்கள் எப்படி அழிந்தன என்ற கேள்வி குறிப்பிடுகிறது!

    இவையாவும் கலியுகத்தில் நடக்கும். அரசாட்சியில் உள்ளோர் நம்மைப் போல் அரசாள மாட்டார்கள். மக்களைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாமல் தங்கள் நலனைப் பெருக்கிக் கொள்வதையே அவர்கள் நோக்கமாகக் கொள்வார்கள்` என்று சொல்லி முடித்தார் தர்மர்.

    பஞ்ச பாண்டவர்களும் பாஞ்சாலியும் கலியுகம் தோன்றப் போவதை எண்ணிக் கவலையில் ஆழ்ந்தார்கள்.


    தொடர்புக்கு:

    thiruppurkrishnan@gmail.com

    ×