search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஆன்மிக அமுதம்: கலியுகத்தின் நடைமுறைகள்!
    X

    ஆன்மிக அமுதம்: கலியுகத்தின் நடைமுறைகள்!

    • தர்மர் துயரத்தோடு கலியுகம் பிறக்கப் போகிறது, அதற்கான நாள் நெருங்கிவிட்டது என்று சொல்லிவிட்டு மேலும் பேசத் தொடங்கினார்.
    • மக்கள்தான் வறுமையில் வாடுவார்களே தவிர, அதிகாரிகள் எல்லோரும் செழிப்பாகத்தான் இருப்பார்கள்.

    மிகக் கடுமையான மகாபாரதப் போர் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தது. தீயவனான துரியோதனன் பீமனால் தொடையைப் பிளந்து கொல்லப்பட்டான்.

    பாவி துச்சாதனன் செந்நீர், அந்தப் பாழ்த் துரியோதனன் யாக்கை ரத்தம் இரண்டையும் கலந்து கூந்தலில் தடவி நீராடிச் சீவிக் குழல் முடித்தாள் பாஞ்சாலி. அவள் கவுரவர் சபையில் துச்சாதனன் தன்னைத் துகிலுரிய முனைந்தபோது செய்த சபதம் நிறைவேறியது.

    இப்போது பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தருமபுத்திரர் மன்னராகி விட்டார். தன் பெயருக்கேற்ற வகையில் அவர் தருமநெறி தவறாமல் ஆட்சி செய்துகொண்டிருந்தார். அவரது செங்கோல் அரசாட்சியில் மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மாதம் மும்மாரி பொழிந்து நாடே செழிப்பாக இருந்தது.

    அந்தத் தருணத்தில்தான் துவாரகையின் மன்னனும் பஞ்ச பாண்டவர்களின் வழிகாட்டியுமான கண்ணன் ஒரு வேடனால் தற்செயலாகக் கொல்லப்பட்டான்.

    மரத்தின் கிளையில் உயரே அமர்ந்திருந்த கண்ணனின் அழகிய வெள்ளை நிறப் பாதங்களைப் புறா என நினைத்த வேடனின் புத்தியை என்ன சொல்வது? வேடனின் அம்பால் கண்ணன் மாண்டுபோனதை விதி என்று சொல்லாமல் அதற்கு வேறென்ன விளக்கம்?

    கண்ணன் வைகுந்தம் செல்லும்முன், `விரைவில் துவாபர யுகம் முடிந்து கலியுகம் தோன்றும், கலிபுருஷன் தன் வேலைகளைக் காண்பிக்கத் தொடங்குவான்` என்று தருமபுத்திரரை எச்சரித்துவிட்டே சென்றான்.

    தர்மபுத்திரர் கண்ணன் சொன்னபடி, கலியுகம் தோன்றினால் உலகம் என்னென்ன வகையில் மாறுமோ, மக்களின் மனப்போக்கு எவ்விதமெல்லாம் உருக்கொள்ளத் தொடங்குமோ எனக் கவலையுடனும் அச்சத்துடனும் காத்திருந்தார்.

    கண்ணனின் எச்சரிக்கையை எண்ணி அடிக்கடி அவரிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

    அப்படியான காலகட்டத்தில் ஒருநாள்...

    பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த வணிகச் சந்தை. சிலர் பொருட்களைக் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தார்கள். பலர் பொருட்களைத் தேடித் தேடி வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

    அங்கு காய்கறி தொடங்கி வீட்டுக்கு உபயோகமான எல்லா வகையான பொருட்களும் விலைக்கு வாங்கக் கிடைத்தன. நியாயமான முறையில் வணிகம் நடந்து கொண்டிருந்தது.

    சூரியாஸ்தமனம் நிகழத் தொடங்கி மெல்லிய இருள் பரவும் நேரம். அப்போது, பரவிக் கொண்டிருந்த இருளைத் திரட்டிச் செய்தது மாதிரியான கறுத்த நிறத்தோடு ஒருவர் ஒரு குதிரையுடன் சந்தையில் அதை விற்பதற்காக வந்தார்.

    அவர் எங்கிருந்து வந்தார் எனத் தெரியவில்லை. அவர் உடலின் கருமை நிறம் வித்தியாசமானதாய் இருந்தது. ஆனால் அவர் விற்பதற்காகக் கொண்டு வந்த குதிரையின் எழில் எல்லோரையும் சுண்டி இழுத்தது.

    மினுமினுப்பான உடல். கம்பீரமான நடை. அந்தக் குதிரையிடம் தென்பட்ட மிடுக்கு அதற்கு ஒரு தனி கவர்ச்சியைக் கொடுத்தது. பார்த்த யாராலும் அதனிடமிருந்து கண்ணைத் திருப்ப முடியவில்லை.

    அந்நேரம் பார்த்து, பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான சகாதேவன் அந்தச் சந்தைக்குள் நுழைந்தான். எல்லோரையும் கவர்ந்த குதிரை அவனையும் கவரத் தவறவில்லை.

    குதிரையின் சேணத்தைப் பிடித்துக்கொண்டு நின்ற குதிரையின் உரிமையாளரை நெருங்கி, "இந்த அழகிய குதிரை என்ன விலை? என்று கேட்டான்.

    அவரோ குதிரையின் விலையைச் சொல்லாமல் அவன் கேட்ட கேள்விக்கு விந்தையான ஒரு பதிலைச் சொன்னார்.

    "ஐயா! இந்தக் குதிரையை நான் விற்பனைக்காகக் கொண்டு வரவில்லை. நீங்கள் இதை வாங்க விரும்பினால் அதற்கு ஒரு வழி இருக்கிறது. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால் போதும். அப்படி பதில் சொல்பவர்களுக்குக் குதிரையை எந்தப் பணமும் பெற்றுக் கொள்ளாமல் இலவசமாகவே தருவேன் " என்றார் அவர்.

    சற்றே திகைப்படைந்த சகாதேவன், "சரி உங்கள் கேள்விகளைக் கேளுங்கள்" என்றான்.

    குதிரையின் உரிமையாளர், "ஒரு பெரிய கிணறு. அதில் உள்ள நீரை எடுத்து ஏழு சிறிய கிணறுகளை நிரப்ப முடியும். ஆனால், அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் நீரை எடுத்து, மறுபடியும் அந்தப் பெரிய கிணற்றில் ஊற்றினால், பெரிய கிணறு நிரம்பாது. எதிர்காலத்தில் இப்படி நிகழும். இது ஏன்?" என்று கேட்டார்.

    இதென்ன விசித்திரமான கேள்வி? சகாதேவனுக்குப் பதில் தெரியவில்லை. அங்கேயே பதிலை யோசித்தவாறு உட்கார்ந்து விட்டான்.

    சிறிது நேரத்தில், எங்கே சகாதேவனைக் காணோம் எனத் தேடிக்கொண்டு அவன் சகோதரன் நகுலன் சந்தைக்கு வந்தான். குதிரையையும் அதன் உரிமையாளரையும் அருகே சோர்வோடு அமர்ந்திருந்த சகாதேவனையும் பார்த்தான். குதிரையின் அழகு நகுலனையும் மயக்கியது. அவனும் அதை வாங்கும் எண்ணத்தில் விலை கேட்டான்.

    இப்போது குதிரையின் உரிமையாளர், நகுலனிடம் வேறு ஒரு கேள்வியைக் கேட்டார். "துணி தைக்கும் ஊசியின் துவாரம் வழியாக ஒரு யானை புகுந்து, அடுத்த பக்கம் போய்விட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் அந்த துவாரத்தின் வழியாகப் போக முடியவில்லை. ஏன்?" என்று கேட்டு இதற்கான பதிலைச் சொல்லிவிட்டு பணமே தராமல் குதிரையை அழைத்துச் செல்லலாம் என்றார்.

    நகுலன் எவ்வளவோ யோசித்தும் அவனுக்கு பதில் தெரியவில்லை. அவனும் ஏற்கெனவே சந்தையில் உட்கார்ந்திருந்த சகாதேவனுடன் தானும் சேர்ந்து உட்கார்ந்துவிட்டான்.

    சில நிமிடங்கள் கழிந்தன. அர்ஜுனன் அங்கு வந்தான். அவனும், அழகிய குதிரையைப் பார்த்து, அதன் விலையைக் கேட்டான். குதிரையின் உரிமையாளர், அர்ஜுனனிடமும் கேள்வி கேட்டார்.

    "ஒரு வயலில் பயிர் நன்றாக விளைந்திருந்தது. வேலியெல்லாம் போட்டு பயிரை மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். ஆனால் அறுவடை காலத்தில், அந்த வயலில் விளைந்த பயிர் எதையும் காணவில்லை. வேலியெல்லாம் இருந்தும் விளைந்த தானியம் எங்கு போயிற்று? யார் எடுத்தார்கள்? பதில் சொல்லிவிட்டு, குதிரையை அழைத்துச் செல்லுங்கள்" என்றார்.

    கண்ணனிடம் மகாபாரதப் போர் நடந்தபோது கீதோபதேசம் கேட்டவன் அர்ச்சுனன். அப்போது எத்தனையோ நுணுக்கமான கேள்விகளை எழுப்பி கண்ணன் மூலம் விளக்கம் பெற்ற அர்ஜுனனால் இப்போது இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. அவனும் யோசனையோடு அங்கேயே உட்கார்ந்து விட்டான்.

    அரண்மனையில் சகோதரர்கள் மூவரையும் காணாமல், தர்ம புத்திரர் திகைப்படைந்தார். பீமனைக் கூப்பிட்டு, "நீ போய், அவர்கள் எங்கே என்று தேடி அழைத்து வா!" என்றார்.

    பீமன் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அரண்மனைக்கு அழைத்து வந்தான். திரெளபதியோடு அரியணையில் அமர்ந்திருந்த தர்மர், அவர்களைப் பார்த்ததும், "அர்ஜுனா! நீண்ட நேரமாக நீயும் உன் தம்பிகளும் எங்கு போனீர்கள்?" என விசாரித்தார்.

    அர்ஜுனன், நடந்ததை விவரித்தான். குதிரை உரிமையாளர் கேட்ட மூன்று வினாக்களையும் ஒவ்வொன்றாகச் சொன்னான். அந்தக் கேள்விகளைக் கேட்ட தர்மபுத்திரர் நடுநடுங்கினார்.

    திருப்பூர் கிருஷ்ணன்

    தம்பிகள் திகைத்தார்கள். "அண்ணா! நீங்கள் நடுங்கும்படியாக இந்தக் கேள்விகளில் என்ன இருக்கிறது?" எனக் கேட்டார்கள்.

    தர்மர் துயரத்தோடு கலியுகம் பிறக்கப் போகிறது, அதற்கான நாள் நெருங்கிவிட்டது என்று சொல்லிவிட்டு மேலும் பேசத் தொடங்கினார்...

    "என் அன்புச் சகோதரர்களே! விரைவில் கலியுகத்தில் நிகழப்போகும் விபரீதங்களை, அந்த மூன்று கேள்விகளும் தெரிவிக்கின்றன. அதை எண்ணித்தான் நடுங்கினேன். ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள்....." என்று விரிவாகக் கூறலானார்.

    "உங்களிடம் கேள்வி கேட்டவன் கலி புருஷன். அவன் கேட்ட முதல் கேள்வியில் பெரிய கிணறு என்பது பெற்றோர். ஏழு சிறிய கிணறுகள் என்பவை அந்தப் பெற்றோரின் பிள்ளைகள். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை, அவர்கள் எண்ணிக்கையில் எத்தனை பேராக இருந்தாலும் சரி! காப்பாற்றுவார்கள்.

    இதைத்தான் பெரிய கிணற்றின் நீரைக் கொண்டு சிறிய கிணறுகளை நிரப்பினார்கள் என்றது குறிக்கிறது. ஆனால் அந்தப் பிள்ளைகளோ, அவ்வளவு பேரும் சேர்ந்து கூட, தங்கள் பெற்றோரைக் காப்பாற்ற மாட்டார்கள்.

    இதைத்தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள அத்தனை தண்ணீரையும் கொண்டு, அந்த ஒரே ஒரு பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறிக்கிறது.

    அடுத்த இரண்டாவது கேள்வி என்ன சொல்கிறது தெரியுமா? இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள் ஏராளமாக நடைபெறும். ஆனால் நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினம். இதைத்தான் யானையே போன வழியில், அதன் வால் போக முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார் அந்தக் குதிரை உரிமையாளர்.

    மூன்றாவது கேள்வியில் பயிர்கள் என்பது மக்களைக் குறிக்கும், பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக் குறிக்கும். மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே விளைச்சல் முழுவதையும் அனுபவிப்பார்கள்.

    அவர்கள் மக்களின் நலன்களை அழித்து விடுவார்கள். மக்கள்தான் வறுமையில் வாடுவார்களே தவிர, அதிகாரிகள் எல்லோரும் செழிப்பாகத்தான் இருப்பார்கள். இதைத்தான், வேலி அப்படியே இருக்க, பயிர்கள் எப்படி அழிந்தன என்ற கேள்வி குறிப்பிடுகிறது!

    இவையாவும் கலியுகத்தில் நடக்கும். அரசாட்சியில் உள்ளோர் நம்மைப் போல் அரசாள மாட்டார்கள். மக்களைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாமல் தங்கள் நலனைப் பெருக்கிக் கொள்வதையே அவர்கள் நோக்கமாகக் கொள்வார்கள்` என்று சொல்லி முடித்தார் தர்மர்.

    பஞ்ச பாண்டவர்களும் பாஞ்சாலியும் கலியுகம் தோன்றப் போவதை எண்ணிக் கவலையில் ஆழ்ந்தார்கள்.


    தொடர்புக்கு:

    thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×