என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • சணலால் ஆன சாக்குகளுக்கு நல்ல கிராக்கி இருந்தது.
    • இந்துஸ்தான் அலுமினியம் நிறுவனத்தின் சேர்மனாக அவர் இறுதி வரை இருந்தார்.

    சாதாரண சின்ன பெட்டிக் கடையில் பதினாறாம் வயதில் வணிகத்தைத் தொடங்கி பிரம்மாண்டமான அளவு அதை வளரச் செய்த ஒரு சாதனையை நிகழ்த்தியவர் யார் தெரியுமா? அவர் தான் கணஷ்யாம் தாஸ் பிர்லா.

    ஜி.டி. பிர்லா என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும். பெரிய தொழில் அதிபர், தேசபக்தர், ஆகப் பெரும் பணக்காரர்.

    அனைவருக்கும் கொடுத்துக் கொடுத்துக் கைகள் சிவந்தவர், தேசத்தை தொழில்மயமாக்க உதவியவர், காந்திஜிக்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவர், தடைகள் பலவற்றை வென்றவர், கல்வி அறிவு பரப்புவதில் ஆர்வம் கொண்டவர் என்று இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் இவரைப் பற்றி!

    பிறப்பும் இளமையும்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஜுன் ஜுனு என்ற மாவட்டத்தில் பிலானி என்னும் சிறு நகரில் ஒரு மார்வாடி குடும்பத்தில் பல்தேவ்தாஸ் பிர்லாவுக்கு மூன்றாவது மகனாக 1894ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் நாள் கணஷ்யாம் தாஸ் பிர்லா பிறந்தார். அன்று ராம நவமி தினம்.

    இளமையில் உள்ளூரிலேயே ஆரம்பக் கல்வியை முடித்துக் கொண்ட இவர் தந்தையுடன் கல்கத்தா சென்று சணல் வியாபாரத்தைக் கற்றுக் கொண்டார். பின்னர் சணல் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கினார்.

    1914 முதல் ஆரம்பித்த முதலாம் உலகப் போர் பிரிட்டிஷாரைத் திணற அடித்துக் கொண்டிருந்தது. சணலால் ஆன சாக்குகளுக்கு நல்ல கிராக்கி இருந்தது. நிலைமையை நன்கு கவனித்த பிர்லா அதை நன்கு பயன்படுத்திக் கொண்டு நன்கு உழைத்து முன்னேறலானார். உலகப் போர் முடிந்த 1919ஆம் ஆண்டில் குவாலியரில் ஜவுளி ஆலை ஒன்றைத் தொடங்கினார்.

    பிரிட்டிஷாரின் எதிர்ப்பு: பிர்லா தனியாகத் தொழில் தொடங்குவதைக் கண்ட பிரிட்டிஷார் எரிச்சல் அடைந்தனர். ஏராளமான இடையூறுகளைத் தந்தனர். அவர்கள் உபயோகிக்கும் லிப்டில் ஏறக் கூடாது. ஒரு சந்திப்பில் காத்திருக்கும் போது அங்குள்ள பெஞ்சுகளில் பிரிட்டிஷாருக்குச் சமமாக உட்காரக் கூடாது. இப்படி ஒவ்வொரு சிறு விஷயத்திலும் அவர் படாதபாடு பட்டார். பிரிட்டிஷாருக்கு எதிராக சுயமாக சுதேசி ஜவுளியைத் தயாரித்து அவர்களுக்கு ஈடு கொடுத்தார் அவர்.

    எப்படியும் தேச பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் விதையூன்றியது. எந்த பிரிட்டிஷ் அரசு அவரை அவமதித்ததோ அதே அரசால் லண்டனில் 10, டவுனிங் சாலையில் அவரது 40வது வயதில் அவர் வரவேற்கப்பட்டது குறிப்பிடத்தகுந்த நிகழ்ச்சியானது.

    மகாத்மாவின் எழுச்சி: இந்த நிலையில் தான் "இந்த வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டு, பாழ்பட்டு நின்றதாம் ஓர் பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா" மக்களை எழுச்சியுறச் செய்ய ஆரம்பித்தார். பிர்லாவையும் கவர்ந்தார்.

    முதலில் ஐயாயிரம் ரூபாயை நன்கொடையாக அவர் காந்திஜிக்கு அனுப்பினார். அதைப் பெற்றுக் கொண்ட காந்திஜி ஒரு கடிதத்தை அனுப்பினார்.

    "நீங்கள் நலமுற இருக்க வேண்டும். எனக்கு உங்களால் ஆக வேண்டிய காரியம் நிறைய இருக்கிறது" என்று எழுதினார் காந்திஜி.

    உண்மையும் அப்படித்தான் ஆனது. காந்திஜியின் திட்டங்களுக்கெல்லாம் அவர் உதவினார்.

    ச.நாகராஜன்

    ச.நாகராஜன்

    இத்தனைக்கும் அவர் காந்திஜியின் அனைத்துக் கொள்கைகளையும் அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. பல விஷயங்களில் மாறுபட்ட கருத்து கொண்டிருந்தாலும் அடிப்படைக் கொள்கைகளில் அவர் காந்திஜியை அப்படியே பின்பற்றினார்.

    காந்திஜியை அவர் எவ்வளவு மதித்தார் என்பதற்கு ஒரு சிறிய சம்பவம் உண்டு. 1931-ல் இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில் லார்ட் சாலிஸ்பரி, பிர்லாவிடம், "நல்ல குணாதிசயத்துடன் கூடிய அனுபவத்தைக் கொண்ட ஒருவரை மகானாக ஆக்கி விடும் பெரும் தவறை நீங்கள் உங்களது குழப்பத்தினால் செய்கிறீர்கள். இங்கிலாந்து ஆயிரம் ஆண்டுகளின் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது, உங்களுக்கோ ஒன்றும் இல்லை" என்று காந்தியடிகளை மகானாக ஆக்கும் இந்தியரை ஏளனம் செய்தார். உடனே பிர்லா, "எங்களது பாரம்பரியம் உங்களுடையதை விடப் பழமையானது. அது அனைவராலும் மதிக்கப்படுவதும் கூட" என்று பளீரென்று பதிலைக் கூறிவிட்டு அவரிடமிருந்து அகன்றார்.

    காந்திஜியுடன் கடிதங்கள்: நூற்றுக் கணக்கான கடிதங்கள் காந்திஜிக்கும் அவருக்கும் இடையே பரிமாறப்பட்டன.

    ஒரு கடிதத்தில், பிர்லா என்னென்ன சாப்பிட வேண்டும், எப்படி, எப்போது சாப்பிட வேண்டும் என்று அன்புடன் அறிவுரை கூறி இருந்தார் காந்திஜி. இன்னொரு கடிதத்தில் தன்னிடமிருந்து உடனடியாக பதில் வரவில்லை என்றால் தான் மிக முக்கியமான வேலையில் ஈடுபட்டிருந்ததாகவே எப்போதும் கொள்ள வேண்டும் என்றும் அன்புரை கூறி இருந்தார்.

    நான் ஒரு காந்தியவாதி: மகாத்மா என்ன சொன்னாலும் அதைச் செய்ய என்னால் மறுக்க முடியாது என்று கூறினார் பிர்லா. "நான் காங்கிரஸ்காரன் இல்லை; ஆனால் காந்தியவாதி" என்று இங்கிலாந்தில் அவர் முழங்கினார்.

    1916-ல் முதன் முதலாக மகாத்மாவை சந்தித்த அவர் ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட முக்கிய போராட்டங்களில் பங்கேற்றார்.

    டில்லியில் இருந்த 12 அறைகளுடன் கூடிய அவரது பெரிய வீடு இந்தியாவின் தலைநகர் வீடாக கருதப்பட்டது. தேசியத் தலைவர்கள் அங்கே குழுமுவது வழக்கம். மகாத்மா தனது கடைசி நான்கு மாதங்கள் இங்கு தான் தங்கி இருந்தார்.

    லெஜிஸ்லேடிவ் அசெம்பிளி உறுப்பினர்:

    பிரிட்டிஷ் இந்தியாவில் 1926ஆம் ஆண்டு அவர் லெஜிஸ்லேடிவ் அசெம்பிளி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பிர்லாவின் வணிக சாம்ராஜ்யம்: சர்க்கரை ஆலை, பேப்பர் ஆலை என ஒவ்வொன்றாக அவர் தொழில் சாம்ராஜ்யம் விரிவை அடைந்தது.

    1925-ல் பல தொழில் அதிபர்களை இணைத்து இந்தியன் சேம்பர் ஆப் காமர்சை அமைத்தார்.

    சிமெண்ட், அலுமினியம், கெமிக்கல்கள், ரேயான், இரும்பு பைப்கள், டெலிகாம் என்று எந்தத் துறையையும் விட்டு வைக்காமல் ஒவ்வொன்றாக ஆரம்பித்தார்.

    1940-களில் அவர் கவனம் கார் தயாரிப்பில் திரும்பியது. இந்துஸ்தான் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து கார்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தார்.

    இந்துஸ்தான் அலுமினியம் நிறுவனத்தின் சேர்மனாக அவர் இறுதி வரை இருந்தார். பிர்லா குழுமத்தில் மூன்று லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர் என்றும் 2,50,000 பங்குதாரர்களுக்கு லாபத்தில் பங்கு அளிக்கப்படுகிறதென்றும் அவர் பெருமையுடன் கூறினார்.

    வெள்ளையனே வெளியேறு இயக்கம் முடிந்த பின்னர் அவருக்கு வங்கி ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உதிக்கவே யுனைடெட் கமர்ஷியல் வங்கியை 1942ல் அவர் ஆரம்பித்தார். (பின்னால் இது யூகோ வங்கி என்று ஆனது)

    கல்வித் துறையில் தன் கவனத்தைச் செலுத்திய அவர் பிலானியில் பிர்லா என்ஜினீயரிங் காலேஜ் என்று பொறியியல் கல்லூரியை ஆரம்பித்தார். இன்று பிட்ஸ் பிலானி (Birla Institute of Technology and Science) என்று அனைவராலும் வியந்து அழைக்கப்படும் பெரிய கல்வி நிறுவனத்தை அவர் வளர்த்ததோடு, கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் என பலவற்றிற்கும் ஆதாரமாகத் திகழ்ந்தார்.

    பிர்லா நாட்டிற்காகச் செய்த சேவையை கவுரவிக்க 1957-ல் அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. தபால்தலையும் வெளியிடப்பட்டது.

    குடும்பமும் வணிகமும்: துர்கா தேவி என்ற முதல் மனைவி மூலம் அவருக்கு ஒரு மகனும் இரண்டாம் மனைவி மகாதேவி மூலம் இரு மகன்களும் அவருக்கு உண்டு. மகாதேவி மறைந்தவுடன் தனது மகன்களை கூட்டுக் குடும்பத்தின் பரிபாலிப்பில் அவர் விட்டார். தனது மகன்களை தனது சமூகத்தில் உள்ள இதர நல்ல வணிகர்களிடம் அனுப்பி வணிக முறைகளைக் கற்றுக் கொள்ளச் சொன்னார்.

    அவர் வணிகத்தை நடத்திய விதமே தனி.' நான் ஒரு பிசினஸ்மேன் இல்லை' என்று அவர் ஒரு முறை கூறிய போது அனைவரும் வியந்தனர்.

    'ஆம், எனது வணிகம், தொழில்கள் தானியங்கி பைலட்டாக செயல்படும், முக்கியமான பெரிய முடிவு எடுக்க வேண்டும் என்றால் தான் என்னை அழைப்பார்கள்' என்றார் அவர். அப்படி ஒரு நிர்வாகத் திறமை அவருக்கு இருந்தது.

    பம்பாய் அலுவலகத்தில் நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களிலும் உள்ள அவரது நிறுவனங்களிடமிருந்து உற்பத்தி, விற்பனை உள்ளிட்ட விவரங்கள் காலையில் அவருக்கு வந்து குவியும். அதில் சிவப்பு, நீலம் போன்ற வண்ணங்களில் கேள்விக் குறி, ஆச்சரியக் குறி, க்ராஸ் X குறி போடப்பட்டு உரியவர்களுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு விடும். தனது மேலாளர்களிடமும் குடும்பத்தினரிடமும் அவர் கறாராகவே இருந்தார்.

    காந்திஜி நினைவு இல்லம்: புது டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் சலவைக் கற்களால் ஆன பிரம்மாண்டமான கோவில்களை பிர்லா குடும்பத்தினர் கட்டியுள்ளனர்.

    காந்திஜி தங்கி இருந்த பிர்லா மாளிகையை அரசு தன் கைவசத்தில் 1971-ம் ஆண்டு எடுத்தது, அதை பொதுமக்களின் பார்வைக்காக காந்திஜியின் நினைவு இல்லமாகத் திறந்து வைத்தது.

    மறைவு: இந்தியாவின் பொருளாதாரத்தையும் கல்வித் துறையையும் தொழில் துறையையும் பெரிதும் மேம்படுத்திய ஜி.டி.பிர்லா 1983-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ம் நாள் தனது 89-ம் வயதில் மறைந்தார்.

    சம்பாதித்ததை சந்தோஷமாக அறவழியில் நன்கொடையாக அளி என்பது அவர் காட்டிய வழி!

    உலகில் உள்ள எல்லா பொக்கிஷமும் மதிப்பே இல்லாதவையாகி விடும், அவற்றை நீங்கள் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை எனில்! என்பது அவரது பொன்மொழி!

    ஆகவே கோடி கோடியாக அவர் நன்கொடையை தகுதி உள்ளோருக்குத் தந்து வந்தார். அவரது வழி வந்த அவரது குடும்பத்தினர் தவறாது அவர் வழியை இன்றும் பின்பற்றி வருகின்றனர். ஆதித்ய பிர்லா குழுமம் கடந்த ஆண்டுகளில் ரூ.50 கோடி, ரூ.276 கோடி, ரூ.400 கோடி என்று அளித்து வரும் நன்கொடை விவரங்களை அவ்வப்பொழுது செய்திகளாக நாம் பார்த்து வருகிறோம்.

    அனைவருடனும் ஒத்து வாழ் என்பதே அவர் அனைவருக்கும் கூறிய அன்புரை.

    'அழகிய ரோஜா மலரும் வலியைத் தரும் முள்ளும் இணைந்து ஒன்றோடொன்று ஒத்துழைத்து இருப்பதைப் பார்த்தால் நம்மால் அப்படி இருக்க முடியாதா என்ன?' என்றார் அவர்.

    இந்தியாவை சுதந்திரத்துடன் பொருளாதாரத்தில் வலிமை உள்ள நாடாக ஆக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்த அவரது தாரக மந்திரம்: அனைவருக்கும் உதவுங்கள் என்பதே!

    தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

    • நரம்பு சார்ந்த நோய்நிலைகள் ஒருபுறமிருக்க, மன அழுத்தத்தாலும் சிறுநீர் அடக்க முடியாத நிலை உண்டாகிறது.
    • எளிமையாக கடுக்காய் கபத்தைக் குறைத்து புராஸ்டேட் சுரப்பியின் வீக்கத்தைக் குறைத்து நற்பலன் தரும்.

    உலகம் முழுவதிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு ஆயுட்காலம் கொஞ்சம் அதிகம் தான். ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 62.7 ஆண்டுகள் என்றும், பெண்களின் சராசரி ஆயுள் காலம் 66 ஆண்டுகள் என்றும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு வாழ்நாள் அதிகம் உள்ளது. இதனால் முதுமையில் ஆண்களை விட பெண்கள் கூடுதலாகவே முதுமையில் உடல்நல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமும், அவசியமும் உள்ளது.

    முதுமையில் அதிகம் பேர் தூக்கத்தை தொலைப்பதற்கு முக்கிய காரணமாய் இருப்பது சிறுநீர் அடங்காமை நிலை (Urine Incontinence) தான். சொட்ட சொட்ட சிறுநீர் விழுதலும், சிறுநீர் கழிக்கும் முன்னமே காலோடு விழுதலும், அதனை அடக்க முடியாமல் போதலும், முக்கியமாக இரவில் அதிக முறை சிறுநீர் கழித்து தூக்கம் கெட்டு உடலும், மனமும் குன்றுதலும் முதுமைக்கு மிகப்பெரும் சிரமங்கள் தான்.

    இந்த நிலைமை 65 வயதை தொடும் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேருக்கு மேலாக காணப்படுவதாக உள்ளது. முக்கியமாக 55 சதவீதம் பெண்களுக்கு சிறுநீர் அடக்க முடியாமை தொந்தரவு வாழ்க்கைத் தரத்தைக் குறைப்பதாக உள்ளது.

    பொதுவாகவே முதுமையில் ஏற்படும் நரம்புத் தளர்ச்சியால் சிறுநீரை சேமித்து வைக்கும் சிறுநீர்ப்பையானது, சிறுநீரை அடக்க முடியாமல் அடிக்கடி வெளியேற்றும் சூழல் உண்டாகிவிடுகிறது. மேலும் முதுமையில் ஏற்படும் நீரிழிவு, பார்கின்சன் எனும் நடுக்கு வாதம், பிற நரம்பு மண்டல நோய்நிலைகளிலும் சிறுநீர்ப்பை தனது இயல்பான தன்மையை இழந்து, சிறுநீர் அடக்க முடியாத நிலைக்கு பாதை அமைக்கிறது.

    நரம்பு சார்ந்த நோய்நிலைகள் ஒருபுறமிருக்க, மன அழுத்தத்தாலும் சிறுநீர் அடக்க முடியாத நிலை உண்டாகிறது. இதனால் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய சூழல் உண்டாகி தூக்கம் கெட்டு துக்கம் சேருவது தான் அதிகம். இந்த சிறுநீர் அடக்கமுடியாத நிலையால் சிறுநீர்ப்பாதை தொற்றுக்களும் அடிக்கடி உண்டாகும் அபாயம் உள்ளது.

    மேலும் முதுமையில் நாட்பட்ட நோய்நிலைகளுக்கு எடுத்துக்கொள்ளும் சிறுநீர்பெருக்கி மருந்துகளும், மிகை ரத்த அழுத்தம் குறைக்கும் மருந்துகளும், மன அழுத்தம் போக்கும் மருந்துகளும், இதய நோய்க்காக வழங்கப்படும் மருந்துகளும், சிறுநீர் அடக்க முடியாத நோய்நிலைக்கு துணை போவதாக உள்ளன. ஆகவே மருத்துவர் ஆலோசனை பெற்று மருந்துகளை எடுப்பது நலம்.

    சித்த மருத்துவக் கூற்றுப்படி முக்குற்றங்களில் வாதக்குற்றம் பாதிப்படைவது சிறுநீர் அடக்க முடியாத நிலைக்கு காரணமாக உள்ளது. எனவே வாதம் தணித்து நரம்புகளை வன்மைப்படுத்தும் மருந்துகளும், வாதம் அதிகரிக்காத உணவு முறையும் பின்பற்ற இந்நோய்நிலையில் நற்பலன் காண முடியும்.

    சித்த மருத்துவ மூலிகைகளான அமுக்கரா கிழங்கு, தொட்டாற்சிணுங்கி, பூனைக்காலி விதை, சிற்றாமுட்டி, வல்லாரை, நீர்பிரமி, எட்டி, சாதிக்காய், சாதிபத்திரி போன்ற நரம்புக்கு வன்மை தரும் மூலிகைகளும், நெருஞ்சில், மூக்கிரட்டை, மஞ்சள், மாவிலங்கு ஆகிய சிறுநீர்ப்பாதை தொற்றுக்களைத் தடுக்கும் மூலிகைகளும் பயன்படுத்த நல்ல பலன் தருவதாக உள்ளன.

    மேற்கூறிய மூலிகைகள் மட்டுமின்றி, நரம்புக்கு வன்மைத் தரக்கூடிய கருப்பு உளுந்தினை கஞ்சியாக்கி குடித்து வருவதும் மூத்திரப்பை பலவீனத்தைக் குறைத்து, சிறுநீர் அடங்காத நிலையில் பலன் தரும். சித்த மருந்தான உளுந்து தைலத்தை தினமும் அடிவயிற்றில் பூசி வருவதும் நன்மை பயக்கும்.

    முதுமையில் பெண்களுக்கு நரம்பு தளர்ச்சியால் உண்டாகும் சொட்டு மூத்திரமும், சிறுநீர் அடக்கமுடியாத நிலையையும் போன்று ஆண்களுக்கு முதுமையில் உண்டாகும் புராஸ்டேட் சுரப்பியின் வீக்கத்தால் (BPH/Prostatomegaly) உண்டாகும் மூத்திரப்பையின் வாய்ப்பகுதி நெருக்கப்பட்டு சிறுநீர் கழிப்பதில் பல்வேறு தொந்தரவுகளை உண்டாக்கும். 40 வயதிலேயே சிலருக்கு புராஸ்டேட் சுரப்பியின் வீக்கம் உண்டாகிவிடுகிறது. 80 வயதைத் தொடும் 90 சதவீதம் ஆண்களுக்கு புராஸ்டேட் சுரப்பு வீக்கமடைவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    இதனால் சிறுநீர் அடக்க முடியாத நிலை, இரவில் அதிகம் சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழித்து வந்த சில நிமிடங்களில் மீண்டும் சிறுநீர் கழிக்கும் எண்ணம் தோன்றுவது ஆகிய பல குறிகுணங்கள் உண்டாகி முதுமையில் ஆண்களைத் துன்புறுத்தும்.

    நாட்பட்ட புராஸ்டேட் சுரப்பி வீக்கத்தில் முழுவதும் சிறுநீர் அடைப்பு உண்டானால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழலும் உருவாகும். அதுமட்டுமின்றி சிலருக்கு பின்னாளில் புராஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பும் உள்ளதால் மேற்கூறிய அறிகுறிகளுக்கு மருத்துவர் ஆலோசனை எப்போதும் அவசியம்.

    சித்த மருத்துவத்தின் அடிப்படையான 96 தத்துவத்தின்படி தசவாயுக்களும், தசநாடிகளும் உடல் இயங்கியலில் முக்கிய பங்காற்றுகின்றன. அதன்படி சிறுநீர் கழித்தல், மலம் கழிப்பது ஆகிய உடல் இயக்க செயல்பாடுகள் பத்து வாயுக்களில் அபானன் வாயுவின் செயல்பாடாக சித்த மருத்துவம் கூறுகின்றது. இந்நோய் நிலையில் உடலில் அதிகமாகும் கபத்தின் வளர்ச்சியால் அபானன் வாயுவின் செயல்பாடு தடை ஏற்பட்டு சிறுநீர் கழிக்க சிரமத்தை உண்டாக்குவதாக உள்ளது.

    உடலில் சேரும் கபமே, புராஸ்டேட் வீக்கத்தை உண்டாக்கி நோயினை உண்டாக்குவதாக உள்ளதால் அத்தகைய கபம் போக்கி, வீக்கம் குறைக்கும் மூலிகை மருந்துகளை சித்த மருத்துவர் ஆலோசனைப்படி நாடுவது நலம் பயக்கும்.

    நெருஞ்சில், சதாவேரி, மாவிலங்கப்பட்டை, மூக்கிரட்டை, மஞ்சள், கழற்சிக்காய், கடுக்காய், வல்லாரை, முருங்கை ஆகிய மூலிகைகள் புராஸ்டேட் சுரப்பியின் வீக்கத்தைக் குறைத்து குறிகுணங்களைக் குறைப்பதாக உள்ளன. இதுமட்டுமின்றி இன்னும் பல பற்பம், மெழுகு போன்ற சித்த மருந்துகளும் இந்நோய்நிலையில் உதவக்கூடும்.

    நெருஞ்சில் முள்ளினைப் பொடித்து பாலில் கலந்து கொதிக்க வைத்து எடுத்துக்கொள்வது இந்நோய்நிலையில் நற்பலன் தரும். நெருஞ்சில் இலை மற்றும் கருவேப்பிலை கொண்டு நடந்த ஆய்வில் இந்த மூலிகைகளின் கூட்டு புராஸ்டேட் சுரப்பியால் வீக்கம் கொண்ட நோயாளிகளின் குறிகுணங்கள் வெகுவாக குறைவதாக ஆய்வுகள் கூறுவது சிறப்புமிக்கது.

    டெஸ்டோஸ்டீரோன் எனும் ஹார்மோன் சுரப்பு புராஸ்டேட் சுரப்பியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகிறது. இந்த ஹார்மோன் 5-ஹைட்ராக்ஸி டெஸ்டோஸ்டீரோன் எனும் கூடுதல் செயல் விளைவுள்ள ஹார்மோனாக நமது உடலில் மாறுகிறது. இதற்கு 5-ஆல்பா-ரிடெக்டேஸ் எனும் நொதி முக்கிய காரணமாக உள்ளது.

    எனவே மேற்கூறிய நொதியின் செயல்பாட்டை தடுப்பதன் மூலம் டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் செயலைக் குறைத்து புராஸ்டேட் சுரப்பியின் வளர்ச்சியைத் தடுக்க முடியும். சித்த மருத்துவ மூலிகைகளில் உள்ள பீட்டா சைட்டோஸ்டீரால், ஸ்டிக்மா ஸ்டீரால், லூபியோல், குர்சிட்டின், கடிச்சின், கெம்ப்பெரோல், மிரிஸ்டிக் அமிலம், லினோலெயிக் அமிலம், லாரிக் அமிலம், இ.ஜி.சி.ஜி. ஆகிய பல்வேறு தாவர வேதிப்பொருட்கள் மேற்கூறிய நொதியின் செயல்பாட்டைத் தடுத்து புராஸ்டேட் சுரப்பியின் வீக்கத்தைக் குறைப்பதாக உள்ளதை பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

    எளிமையாக கடுக்காய் கபத்தைக் குறைத்து புராஸ்டேட் சுரப்பியின் வீக்கத்தைக் குறைத்து நற்பலன் தரும். ஒரு தேக்கரண்டி அளவுக்கு கடுக்காய் சூரணத்தை வெந்நீரில் கலந்து இரவில் எடுத்துக்கொள்வதும் அல்லது கடுக்காய் லேகியம் எனும் சித்த மருந்தை எடுத்துக்கொள்வதும் இந்நோய் நிலையில் பெரும்பயன் அளிக்கும். கடுக்காயில் உள்ள இஜிசிஜி எனும் வேதிப்பொருள் மருத்துவ தன்மைக்கு காரணமாகிறது.

    அதே போல் மற்றொரு எளிய மூலிகையான முருங்கை கீரையை முதுமையில் அவ்வப்போது சூப் வைத்து குடித்து வருவதும் புராஸ்டேட் நோயின் தாக்கத்தைக் குறைக்க உதவும். கபத்தைக் குறைக்கும் மற்றொரு மூலிகையான கொள்ளு கொண்டு செய்யப்படும் கொள்ளு ரசமும் அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ள இந்நோய் நிலையில் பலனைத் தரும். 

    முளை கட்டிய தானியங்கள்

    முளை கட்டிய தானியங்கள்

    துத்தநாகச் சத்து குறைபாட்டினால் புராஸ்டேட் சுரப்பியின் உருப்பெருக்கம் (hypertrophy) உண்டாவதாக சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே துத்தநாக சத்துள்ள இறைச்சி, கடல் மீன்கள், முளை கட்டிய தானியங்கள், கொட்டை வகைகள் இவற்றை நாடுவது புராஸ்டேட் சுரப்பின் வளர்ச்சியைத் தடுக்க உதவும். பாரம்பரிய அரிசியான மாப்பிள்ளைச் சம்பா அரிசியில் இயற்கையாகவே இச்சத்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    இந்நோய் நிலையில் அதிமுக்கியமாக மாலை நேரத்தில் குடிக்கும் தண்ணீரின் அளவைக் குறைப்பது நல்லது. இது இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதைக் குறைக்க உதவும். அதே போல் நீர்பெருக்கி காய்கறிகளை தவிர்ப்பதும் நல்லது.

    உணவு முறைக்கும், வாழ்வியல் முறைக்கும், புராஸ்டேட் சுரப்பியின் வீக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. நல்ல உடல் பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ளும் முதியவர்களுக்கு புராஸ்டேட் நோயின் தாக்கம் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுவது சிறப்பு.

     

    மருத்துவர் சோ.தில்லைவாணன்

    மருத்துவர் சோ.தில்லைவாணன்

    அதே போல் அசைவ உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்பு சார்ந்த உணவுகளைக் குறைத்து, நார்ச்சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்ப்பது புராஸ்டேட் நோய்நிலையில் பலன் தருவதாக உள்ளதை ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சுட்டிக்காட்டுகின்றது. இன்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கூறுவதைத் தான் ஆதி மருத்துவமாம் சித்த மருத்துவமும் கூறியுள்ளது. அத்தகைய வழிமுறைகளை பின்பற்றி வாழ்வது முதுமையில் நோய்களை துரத்தி நலத்தை வரவழைக்கும்.

    தொடர்புக்கு:

    drthillai.mdsiddha@gmail.com

    8056040768

    • ஒருவரின் ஜாதக ரீதியான ஜீவன அமைப்பை தேர்வு செய்வதில் பல விதமான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
    • அனைவருக்கும் சவால் விடும் வகையில் தொழில் வளர்ச்சி உலகில் பெருகி வருகிறது.

    ஒரு தனி மனிதனின் வாழ்வாதாரத்தை நிர்ணயம் செய்வதில் பொருளாதாரத்தின் பங்கு அளப்பரியது. ஆள்பாதி, ஆடை பாதி என்பது போல் ஒரு மனிதனின் கர்ம வினைப்படி அமையும் தொழிலே சமுதாய அங்கீகாரத்தையும் பொருளாதாரத்தையும் நிர்ணயம் செய்கிறது. நவீன யுகத்தில் லேட்டஸ்ட் டிரெண்டிங்கான தொழில்கள் பல உள்ளது.

    ஆனால் ஒருவரின் ஜாதக ரீதியான ஜீவன அமைப்பை தேர்வு செய்வதில் பல விதமான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. ஒருவரின் ஜாதகரீதியான தொழிலை 10ம்மிடமான தொழில் ஸ்தானமும், சனி மற்றும் புத பகவானுமே நிர்ணயம் செய்கிறார்கள்.

    தொழில் ஸ்தானம்

    ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் தொழில் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. அனைவருக்கும் சவால் விடும் வகையில் தொழில் வளர்ச்சி உலகில் பெருகி வருகிறது.

    ஒருவருக்கு தொழிலை வழங்கக்கூடிய பத்தாம் பாவகத்தின் மூலம் தொழிலால் உண்டாக கூடிய கவுரவம், அந்தஸ்து, தொழில் செய்யும் திறன், தொழிலில் ஜாதகருக்கு இருக்கும் ஆர்வம், தொழில் சம்மந்தப்பட்ட நுணுக்கங்கள், நுட்பங்களை வெளிபடுத்தும் திறன் ஆகியவற்றை அறிய முடியும். அனைவரது ஜாதகத்திலும் 10ம் பாவகம் உள்ளது. ஆனால் அனைவரும் தொழில் செய்வது கிடையாது. அதே போல தொழில் செய்யும் அனைவரும் அதில் பெரும் முன்னேற்றம் பெறுவதும் கிடையாது.

    சிறிய பெட்டி கடை முதல் பன்னாட்டு வணிகம் செய்பவர்கள் வரை அனைவரும் தொழிலில் சாதனை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடனே தொழில் தொடங்குகிறார்கள். ஆனால் சிலருக்கு பெரிய வளர்ச்சியை கொடுக்கும் சொந்த தொழில் பலருக்கு தளர்ச்சியை கொடுத்து கொடுத்து ஒருவருக்கு சொந்த தொழில் கை கொடுக்குமா? என்பதை ஜாதகத்தின் மூலம் எளிதில் கண்டறிய முடியும்.

    அதன்படி 10-ம்மிடம், 10-ம் அதிபதி 10-ம் அதிபதி நின்ற சாரநாதன், 10-ல் நின்ற கிரகங்கள், நவாம்சத்தில் 10 க்குடையவன் நின்ற ராசி, சனிக்கு 10-ம் இடம், சனிக்கு திரிகோணத்தில் நின்ற கிரகங்கள், சனி முதலில் தொடும் கிரகம், சனி நின்ற நட்சத்திர சார அதிபதி ஆகிய காரணிகளே ஒருவரின் தொழிலை தீர்மானிக்கிறது. ஜென்ம லக்னத்திற்கு 10-ம் அதிபதி ஆதிபத்தியம் சார்ந்த தொழில், உத்தியோகத்தை ஒருவர் செய்வது சாலச் சிறந்தது. ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான், 10-ம் அதிபதி நின்ற நிலைக்கு ஏற்பவே தொழில், உத்தியோகம் அமையும்.

    சனி

    கால புருஷ 10-ம் இடமான மகர ராசியின் அதிபதி சனியே ஒருவரின் தொழில், வியாபாரம், உத்தியோகம், வேலை, பதவியை நிர்ணயம் செய்கிறார். சனிக்கு கர்ம காரகன் என்ற பெயரும் உண்டு. ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. ஒருவருக்கு யோக பலன்கள் அனுபவிக்க வேண்டிய அமைப்பு ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு.

    ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து விடும்.

    ஜனன கால ஜாதகத்தில் சனி நின்ற நிலைக்கு ஏற்பவே ஒருவருக்கு தொழில், உத்தியோக அனுகூலம் உண்டு. ஒரு ஜாதகத்தில் சனி பலமாக இருந்தால் மட்டுமே தொழில், உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும். சனி நல்ல நிலையில் இருந்தால் அடி தட்டில் இருந்து உழைத்து உயர்ந்தவர்களாக இருப்பார்கள். உழைப்பின் அவசியத்தை உணர்ந்தவர்கள். தேவைப்படும் இடத்தில் உழைப்பையும், புத்தி சாதுர்யத்தையும் ஒருங்கே பயன்படுத்துவார்கள்.

    முதலாளியாக இருந்தால் கூட தொழிலாளி போல் உழைப்பவர்கள். சனி குறைந்த பாகையில் இருந்தால் சிறிய உழைப்பில் பெருத்த வரும்படியும் அதிக பாகையில் இருந்தால் கடின உழைப்பில் சிறிய வருவாயும் இருக்கும். சனி பலம் குறைந்தால் அடிமைத் தொழில், கவுரவம் இல்லாத, நீசத் தொழில் அல்லது வேலை வாய்ப்புகளில் நிரந்தரமற்ற தன்மை, நோய் நொடிகள் கஷ்ட ஜீவனம் நிரம்பி இருக்கும்.

    புதன்

    வாழ்க்கையில் வெற்றி பெற தொழில் காரகன் சனிக்கு அடுத்தபடியாக புத்திக்காரகன் புதனின் தயவு வேண்டும். புத்தியுள்ள மனிதனே பலவான். ஒரு மனிதனுக்கு உழைப்பு மட்டும் போதாது. புத்தியும், உழைப்பும் சேர்ந்தால் மட்டுமே காரியசித்தி உண்டு. வெற்றி மழையில் நனைய, நினைத்தது நடக்க புத்திக்காரகன் புதனின் தயவு வேண்டும்.

    நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்துள்ள முதல் கிரகம் புதனாகும். கிரகங்களில் மிகச் சிறிய கிரகமாக இருப்பதால் சந்திரனுக்கு அடுத்து வேகமாக சுற்றக்கூடிய கிரகம் புதனாகும். சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் புதன் என்பதால் புதனுக்கு வெளிச்சம் அதிகமாகக் கிடைக்கும். புத்தி, அறிவு, ஞானம் ஆகியவற்றை வழங்குவதால் புத்திகாரகன் என்று பெயர். ஒரு மனிதனின் ஞானத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் காரணமான கிரகம் என்பதால் வித்யாகாரகன் என்ற பெயரும் உண்டு. புதன் வலிமை பெற்றவர்கள் மட்டுமே புத்திசாலியாக இருப்பார்கள்.

    ஜனன ஜாதகத்தில் புதன் பலம் பெற்றவர்கள் இளமைப் பொழிவுடன் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். கணக்கியல், மறைமுகமான, நுணுக்கமான பிரச்சினைகளை தீர்ப்பதில் நிபுணராக இருப்பார்கள். வியாபார தந்திரம் மிக்கவராகவும், மதிநுட்பத்தை பயன்படுத்தி இருந்த இடத்திலேயே தொழில் செய்து வருமானம் செய்பவராக இருப்பர். ஒயிட் காலர் ஜாப் செய்பவர் என்றும் கூறலாம்.

    பாவ கிரகங்களுடன் சேராமல் இருந்தால் புதன் தனித்தன்மையுள்ள சுபகிரகம். வேறு எந்த கிரகத்துடனும் சேராத புதனுக்கும் அதன் பார்வைக்கும் குருவிற்கு நிகரான சக்தி உண்டு.

    அதே நேரத்தில் புதன் இரட்டை தன்மையுள்ள கிரகம். தான் சேரும் கிரகத்திற்கு, இடத்திற்க்கு தக்கவாறு பார்க்கும் கிரகத்திற்க்கு தக்கவாறு ஜாதகரை மாற்றிவிடுவார்.

    இந்த கட்டுரையில் 12 ராசியினருக்கும் பயன்படும் தொழில், உத்தியோகம் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

    ஐ.ஆனந்தி

    ஐ.ஆனந்தி

    மேஷம்

    (அசுவினி, பரணி, கிருத்திகை 1)

    மேஷ ராசியில் பிறந்தவர்கள் உணவு விடுதி, உணவுப் பொருட்கள் வியாபாரம். உர வியாபாரம், எண்ணை வியாபாரம், சுரங்கத் தொழில், சிறு பொருட்கள் விற்பனை, திரவப் பொருட்கள் விற்பனை, கழிவு பொருட்கள் விற்பனை, தோல் வியாபாரம், இரும்பு வியாபாரம், விவசாயம், கட்டிட வேலை, மர வியாபாரம், கல், மண் வியாபாரம், கடினமான வேலைகள் கீழ்மட்ட ஊழியம் போன்றவற்றை தேர்வு செய்யலாம்.

    ரிஷபம்

    (கிருத்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிஷம் 1 ,2)

    ரிஷப ராசியினர் மனவியல் கலை, ஜோதிடம், ஆன்மீகம், ஆசிரியர் பணி, ஆராய்ச்சி துறை, நிர்வாகப் பொறுப்பு, ஆலோசனை வழங்குதல், வாயு பொருட்கள் விற்பனை, விமானத்துறை, விண்வெளி துறை, தீயணைப்புத்துறை, சிறைச்சாலை பணி, தொல்பொருள் ஆராய்ச்சி, பொறியியல் துறை, சுரங்கப்பாதை அமைத்தல், வெடிகுண்டு தயாரிப்பு, பொதுஜன வழிகாட்டி, சுங்க இலாகா பணி, இறைச்சி கடை உளவுத்துறை போன்ற தொழில், உத்தியோகத்தில் பணி செய்யலாம்.

    மிதுனம்

    மிதுன ராசியினர் கல்வித்துறை, ஆன்மீகம், மருத்துவம், நிதித்துறை, நீதித்துறை, தூதரகம், கடற்படை, நீர் நிலைகளில் வேலை செய்தல், ஆலயப் பணி, மத போதனை செய்தல், வங்கியில் பணி செய்தல், ஜோதிடம், பேச்சாற்றல், கணிதம், கணினித் துறை, கவிதை எழுதுதல், சிற்பம் வடித்தல், சித்திரம் வரைதல், நடிப்பு, நாடகம், சாஸ்திரம் , நுண்கலைகள், எழுத்தாளர், கவிஞர்கள், நகைச் சுவை நடிகர்கள், பேச்சாளர்கள், பத்திரிக்கை துறை, அரசியலை அலசுபவர்கள், விமர்சிப்பவர்கள், கல்வித்துறை, ஓவியர்கள் போன்ற தொழிலில் ஈடுபடலாம்.

    கடகம்

    கடக ராசியில் பிறந்தவர்கள் அரசு உத்தியோகம், காவல்துறை ராணுவம், தீயணைப் புத்துறை, விளையாட்டுத்துறை, பொறியியல் துறை, தொழிற்சாலைகளில் பணி செய்தல், இரும்பு சம்பந்தமான தொழில், உழைக்கூடம் தொடர்பான தொழில், செங்கல் சூளை வைத்தல், மட்பாண்டங்கள் செய்தல், சுரங்கத் தொழில், அறுவை சிகிச்சை மருத்துவம், ஆயுதங்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை செய்தல், சமையல் கலை, பூமித்தொழில் விவசாயம் போன்றவற்றில் ஈடுபடலாம்.

    சிம்மம்

    சிம்ம ராசியில் பிறந்தவர்கள் பொன், வெள்ளி மற்றும் ரத்தின வியாபாரம், கால்நடை வளர்ப்பது, வட்டி தொழில், தரகுத்தொழில், நிதி நிறுவனங்களில் பணி செய்தல், கலைப் பொருட்கள், அழகு, பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், வாசனைப் பொருட்கள், சுவையான உணவுப் பொருட்கள், சொகுசு பொருட்கள், மற்றும் இனிப்பான பானங்கள் விற்பனை செய்தல், இயல், இசை நாடகம், திரைப்படம், கவிதை, எழுதுதல், மற்றும் பாட்டு பாடுதல் போன்ற கலைத் தொழில்கள், தங்கும் விடுதி, மற்றும் கேளிக்கை விடுதிகள் நடத்துதல் கருவூலத்துறை போன்ற பணியில் ஈடுபடலாம்.

    கன்னி

    கன்னி ராசியை சார்ந்தவர்கள் செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை, விண்வெளி துறை, கல்வித்துறை, தபால் துறை, தொலைபேசித் துறை, தந்தி துறை, புத்தகத் தொழில், கணிதத்துறை, கணக்கர், தணிக்கையாளர், போன்ற தொழில்கள் சட்டம் மற்றும் நீதித்துறை, ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள், நவீன பொறியியல் துறை, எழுத்து துறை, மேடைப்பேச்சு, ஜோதிடம், பலவிதமான வியாபாரம் செய்தல் தூதரகம் போன்ற பணிகளில் ஈடுபடலாம்.

    துலாம்

    துலாம் ராசியினர் திரவப் பொருட்கள், உணவுப் பொருட்கள் விற்பனை செய்தல், ஏற்றுமதி இறக்குமதி செய்தல், கடல் கடந்து சென்று வியாபாரம் செய்தல், வேளாண்மை தொழில், மருத்துவம், ஜோதிடம், ஆன்மீகம், போக்குவரத்து, கலைத்துறை, கல்வித்துறை போன்றவற்றில் ஆர்வம் செலுத்தலாம்.

    விருச்சிகம்

    விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு அரசு உத்தியோகம், அரசியல், பிரதம மந்திரி, முதலமைச்சர், நிர்வாகப் பொறுப்பு, இரும்பு மற்றும் நெருப்பு சம்பந்தமான தொழில், Extension துறை, அறுவை சிகிச்சை மருத்துவர், சமூக சேவை செய்தல், தர்ம ஸ்தாபனம் நடத்துதல் சிறப்பான பலன் தரும்.

    தனுசு

    தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு கணக்கர் தொழில், தணிக்கையாளர், பலவிதமான வியாபாரம் செய்தல், ஆசிரியர், எழுத்தர், மளிகை கடை வைத்தல், சில்லரை வியாபாரம் ஆகியன பயன் தரும்.

    மகரம்

    மகர ராசியைச் சார்ந்தவர்கள் பொன், வெள்ளி மற்றும் ரத்தின வியாபாரம், அழகு பொருட்கள், கலைப் பொருட்கள், சொகுசுப் பொருட்கள், வாசனை திரவியங்கள், மற்றும் ஆடம்பரப் பொருட்கள் விற்பனை செய்தல், வட்டி தொழில், தரகு தொழில், வங்கிப் பணி, நிதி நிறுவனங்களில் பணி செய்தல், நிதித்துறை, நீதித்துறை, தங்கும் விடுதி, கேளிக்கை விடுதி, மற்றும் அழகு நிலையங்கள் நடத்துதல் இயல், இசை, நாடகம், பாட்டு மற்றும் கலைத் தொழில்கள் பயன்தரும்.

    கும்பம்

    கும்ப ராசியினருக்கு நெருப்பு சம்பந்தமான தொழில், பொறியியல் துறை, சுரங்கத் தொழில், விவசாயம், மின்னியல் துறை, மாந்திரீகம், ஜோதிடம், ஆன்மீகம், பூமித்தொழில், தாதுப் பொருட்கள் சம்பந்தமான தொழில், ஆராய்ச்சி செய்தல், உலோகங்கள் மற்றும் கருவிகள் சம்பந்தமான தொழில் பலன் தரும்.

    மீனம்

    மீன ராசியினர் மர வியாபாரம், ஆன்மீகத்துறை, வங்கித் தொழில் சட்டம், மற்றும் நீதித்துறை, அறநிலையத்துறை, நிதித்துறை, கல்வித்துறை, ஆயுத சாலை, போற்பயிற்சி சமூக சேவை தர்ம ஸ்தாபனங்கள் நடத்தலாம். பெரும்பான்மையாக ஒருவரின் விதிப்படி அவரவரின் தொழில், உத்தியோகத்தை பிரபஞ்சமே நிர்ணயித்துவிடும். தொழில் சார்ந்த குழப்பம் இருப்பவர்களுக்கு இந்த கட்டுரை நல்ல பயன் தரும்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி செல்: 98652 20406

    • சனாதனம் என்பது சாதிய தீண்டாமையை குறிப்பிடுவதாக இருந்தால் காந்தி தன்னை சனாதனவாதி என சொல்லியிருப்பாரா?.
    • இந்து சமயத்தின் புனித நூல்கள் எதிலும் சாதிய வேறுபாடுகளுக்கு பெயர் தான் “சனாதன தர்மம்” என கூறவில்லை.

    'அனைத்து சாதியினரும் ஒருமித்து அன்போடு வாழ வேண்டும்'

    அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்தைக் காத்தாரா? அல்லது எதிர்த்தாரா?

    இந்த கேள்விக்கான விடையை அறிய வேண்டும் என்றால் அய்யா வைகுண்டர் யார்? என்பதையும், சனாதன தர்மம் என்றால் என்ன? என்பதற்கான சரியான புரிதலும் இருந்தால் மட்டுமே அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்துக்கு எதிரானவரா அல்லது அதனைக் காப்பதற்காக அவதரித்தவரா என்கின்ற உண்மையை அறிந்து கொள்ள முடியும்.

    அய்யா வைகுண்டர் யார்?

    அய்யா வைகுண்டர் யார் என்று சொல்ல வேண்டும் என்றால் அவரின் அவதாரக் காலத்தில் அவர் அருளிய "அகிலத்திரட்டு அம்மானை" என்னும் புனித நூலை ஆதாரமாகக் கொண்டு மட்டுமே சொல்ல வேண்டும்.

     

    அதுபோல் வைகுண்டர் போதிக்கின்ற தர்மத்துக்கும் அகிலத்திரட்டு அம்மானையே ஆதாரம். ஆனால் இங்கு மிகப் பெரிய துரதிஷ்டம் அய்யா அருளிய நூலை முழுமையாக கற்று உணராமல் தாங்கள் கேள்விப்பட்டதையும், பிறர் எழுதியதையுமே ஆதாரமாக்குகின்றனர். அய்யா யார் என்பதை அறியாமல், தவறான புரிதலுடன் கருத்துக்களை பதிவிடும் நிலையே இங்கு அதிகமாக காணப்படுகின்றது. எனவே புனித அகிலத்திரட்டு அம்மானை நூலின் அடிப்படையில் அய்யா யார் என்பதைக் காண்போம்.

    "ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசு பண்ணி.." என்கிற வாசகத்துடனே அகிலத்திரட்டு அம்மானை தொடங்குகிறது. முதல் வரியிலேயே மிக தெளிவாக மாயோனாகிய திருமாலே வைகுண்டராக வந்தவர் என்பதை உணர்த்துகிறது. மேலும்

    "பாண்டவர் தமக்காய்த் தோன்றி பகைத்தனை முடித்து மாயோன் வீன்றிய கலியன் வந்த விசளத்தால் கயிலை யேகி சான்றவர் தமக்காய் யிந்த தரணியில் வந்த ஞாயம்............"

    என்கின்ற அகில வாசகம் அன்று பாண்டவர்களுக்காக வந்த கண்ணனே இன்று சான்றவர்களுக்காக அய்யா வைகுண்டராக அவதரித்துள்ளார் என மிகத் தெளிவாக பறை சாற்றுகின்றது.

    "சனாதன தர்மம்" என்பதின் பொருள் என்ன?

    "அழிவில்லாது என்றென்றும் நிலைத்திருக்கும் தருமம்" "வாழ்வியல் ஒழுக்க நெறி" என்பதே சனாதன தர்மம் என்பதின் பொருள் என இந்து மதத்தில் இருக்கும் ஆன்மிக அன்பர்கள் கூறிப்பிடுகின்றனர். ஆனால் இதனை ஏற்காதவர்கள் சாதிய வேறுப்பாடே சனாதன தர்மம் என்கின்றனர். இதற்கான விடையை ஆராயும்போது கீழ் கண்ட தகவல் கிடைக்கிறது.

    * தமிழக அரசின் 12 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் "இந்து சமயம் சனாதன தர்மம் என அழைக்கப்படுகிறது" என்றும், "அழிவில்லாத நிலையான அறம்" என்றும் பொருள் சொல்லப்பட்டுள்ளது.

    * சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடான கழக தமிழ் அகராதியில் "தொன்றுத் தொட்ட அற ஒழுக்கம்" என பொருள் சொல்லப்பட்டுள்ளது.

    * சனாதன தர்மத்துக்கு விக்கிபீடியா நித்திய தர்மம்" அல்லது "நித்திய ஒழுங்கு" என்றும், "இந்து மதத்தின் மாற்று பெயர்" என்றும் பொருள் கொடுக்கிறது.

    * ராமாயணத்தில் ராமர் வாலியிடம் பேசும்போது தம்பியின் மனைவியை அபகரிப்பது தான் நீ கடைப்பிடிக்கின்ற சனாதன தர்மமா? என்று கேட்கின்றார். இதிலிருந்து "சனாதன தர்மம்" என்பது வாழ்வியல் ஒழுக்க நெறியை மட்டுமே குறிக்கின்றதை அறிய முடிகின்றது.

    இந்து சமயத்தின் புனித நூல்கள் எதிலும் சாதிய வேறுபாடுகளுக்கு பெயர் தான் "சனாதன தர்மம்" என கூறவில்லை. அதுபோல் இந்து சமய ஞானிகளும் எந்த இடத்திலும் சாதிய வேறுபாடுகளுக்கு பெயர் தான் "சனாதன தர்மம்" என குறிப்பிடவில்லை. இந்திய அளவில் இந்து மதமே சனாதன தர்மமாக பார்க்கப்படுகிறது. அப்படியிருக்க எங்கிருந்து சனாதன தர்மம் என்பது சாதிய வேறுபாடுகளை குறிக்கும் என பொருள் எடுக்கின்றனர் என தெரியவில்லை?

    சாதிய தீண்டாமையை எதிர்த்து, அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்று கூறிய நேசத் தந்தையான மகாத்மா காந்தி தன்னை ஒரு "சனாதனவாதி" என பிரகடனப்படுத்துக்கின்றார். சனாதனம் என்பது சாதிய தீண்டாமையை குறிப்பிடுவதாக இருந்தால் காந்தி தன்னை சனாதனவாதி என சொல்லியிருப்பாரா?.

    எனவே வாழ்வியல் ஒழுக்க நெறியை போதிக்கின்ற இந்து தர்மமே சனாதன தர்மம் என்று அழைக்கப்படுகின்றது என்கின்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

    சனாதன தர்ம நூல்களை அருளியது யார்?

    அய்யா வைகுண்டப் பரம்பொருள் அருளித் தந்த அருள் நூலான சிவகாண் அதிகாரப் பத்திரத்தில் "வேதாந்தம் சித்தாந்தம் விளம்பி வைத்தேன் வையகத்தில்" என்கின்றார். மேலும் அகிலத்திரட்டு அம்மானையில் "நாலு வேதம் அதிலும் நான் வருவேன் கண்டாயே" என்கின்றார். இதன் மூலம் அய்யா வைகுண்டர் இந்த உலகிற்கு உணர்த்துவது இந்து தர்மத்தின் புனித நூல்களாக இருக்கின்ற நான்கு வேதம், ஆகமம், புராணம், இதிகாசங்கள், சைவ சித்தாந்தம் என அனைத்துமே பரம் பொருளால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இறை அருளாளர்கள் மூலம் அருளப்பட்டது என்பது அய்யா தந்த அகிலத்திரட்டு அம்மானை மற்றும் அருள்நூல் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த புனித நூல்கள் போதிக்கின்ற தர்மமே "சனாதன தர்மம்" ஆகும்.

    அய்யா வைகுண்டர் எதற்காக அவதரித்தார்?

    அய்யா வைகுண்டர் தனது அவதார நோக்கத்தை தான் அருளிய புனித நூலில் தெளிவாக "சாஸ்திரவேத நூலுக்குச் சரியொத்த பேர்களுக்கு உபகாரங்கள் செய்யவும்" என்கிறார். ஆம் "சனார்த்தனன்" என அழைக்கப்படுகின்ற திருமால் கலியுகத்தில் வைகுண்டமாக அவதரிக்கும்போது அவன் தந்த சனாதன தர்மத்தை காத்து அதைத்தானே போதிப்பான். இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுமே அவனுடைய பிள்ளைகளே எந்த உயிர்களிடமும் இறைவன் எவ்விதப் பாகுபாடு பாப்பதில்லை என்பதே உண்மையான சனாதன தர்மம் ஆகும். அதைத்தான் அய்யா வைகுண்டர்

    "எல்லோருக்கும் ஒருப் போலே ஈசன் நான் இருக்கிறேன்"

    என சொல்கின்றார். மேலும் சாதியை பேய்க்கு ஒப்பாக சொல்லி அதனை அழிக்க உத்தரவிடுகிறார்.

    "சாதி பதினெட்டும் தலையாட்டிப் பேய்களையும்

    வாரி மலையதிலும் வன்னியிலுந் தள்ளிவிடு"

    "தலைப்பாகை" தந்து அனைவரையும் மன்னராக்கி தலை நிமிர்ந்து வாழச் செய்து

    சமத்துவத்தை மலர செய்ய அய்யாவின் பிள்ளைகள் சாதிய தீண்டாமையை எதிர்ப்பதில் முதல் ஆளாக இருக்க வேண்டும். அதுவே நாம் அய்யாவின் பிள்ளை என்பதற்கு அடையாளம் ஆகும்.

    வாரிமூன்று கோதி வளைந்திருக்கு மோர்தீவை

    சாதியொரு நிரப்பாய்த் தானாள்வா யென்மகனே

    சாதிய தீண்டாமையை எதிர்ப்பவர்களும், அதற்காக போராடுகின்றவர்களும் சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று சொல்லாமல் "சாதிய தீண்டாமையை அழிப்பேன்" என அனைவருக்கும் புரியும் வகையில் சொல்லலாமே. அப்படி சொல்லும்போது அதற்கு எந்த விதமான எதிர்ப்பும் வரப்போவது இல்லை.

    யார் மனமும் புண்படப்போவதில்லை. மாறாக அனைவரின் ஆதரவையும் பெறலாம். அதைவிடுத்து "சனாதன தர்மத்தை" அழிக்க வேண்டும் என்று சொல்லும்போது தான் அங்கு பிரச்சனையும், தேவையில்லாத குழப்பமும் ஏற்படுகிறது. நமது நோக்கம் சாதி வேறுபாட்டை அழிப்பதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர ஒரு மதத்தை அழிப்பதாக இருக்கக் கூடாது. சனாதன தர்மத்தின் காவலனான இறைவன் கலியுகத்தில் அய்யா வைகுண்டராக அவதரித்து அனைத்து சாதியினரும் ஒருமித்து அன்போடு வாழ வேண்டும் என்பதை மனதில் நிலைநிறுத்தி வாழ்ந்தால் எந்த பிரிவினையும் நமக்குள் இல்லை.

    - பா.கிருஷ்ணமணி அப்புக்குட்டி,

    வடலிவிளை, நெல்லை மாவட்டம்.

    • கமல் சாரோடு நடிக்க வாய்ப்பே கிடைக்கவில்லையே என்ற எண்ணம் அவ்வை சண்முகியில் நிறைவேறியது.
    • கதை சொல்லும் போது கமல் சாருக்கு இரண்டு வேடம்.

    இஞ்சி இடுப்பழகி...

    மஞ்ச சிவப்பழகி...

    தேவர் மகனில் கேட்ட இந்த பாடல் இன்றும் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கும் பாடல். இந்த பாடல் எனக்காகவே எழுதப்பட்டது. ஒன்றிரண்டு காட்சிகளில் நடித்தும் முடித்தேன். ஆனால் சில பல காரணங்களால் அந்த படத்தை தயாரிப்பது தள்ளிப்போனது.

    நானும் ரொம்ப பிசியாக இருந்ததால் அதன் பிறகு அந்த படத்தில் நடிக்க முடியாமல் ஆகிவிட்டது. சிவாஜி சார், கமல் சாரோடு நடிக்க கிடைத்த வாய்ப்பு கை நழுவிவிட்டது. அந்த வருத்தம் இன்றும் என்னிடம் இருக்கிறது.

    கமல் சாரோடு நடிக்க வாய்ப்பே கிடைக்கவில்லையே என்ற எண்ணம் அவ்வை சண்முகியில் நிறைவேறியது.

    1995-ல் அவ்வை சண்முகியில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. நடிக்க ஒப்பந்தம் ஆனதும் ரொம்ப சந்தோசமாக இருந்தது. ஏனெனில் பல முன்னணி நடிகர்களுடன் அப்போது நடித்திருந்தேன். ஆனால் கமல் சாரோடுதான் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.


    கதை சொல்லும் போது கமல் சாருக்கு இரண்டு வேடம். பாண்டியன் என்ற ஆண்வேடம். அவ்வை சண்முகி என்ற அய்யர்மாமி வேடம் என்றார்கள். கமல் சார் பெண் வேடத்தில் எப்படி இருப்பார்...?

    கற்பனையில் நினைத்ததை நேரில் பார்க்கும் நாளும் வந்தது. படப்பிடிப்புக்கு ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

    செட்டில் நான் உள்பட சக கலைஞர்களும் தயாராக இருந்தோம். 'கமல் சார் எங்கே? என்றேன்.

    மேலே மாடியில் மேக்அப் போட்டு கொண்டிருக்கிறார் என்றார்கள். அவரது வருகைக்காக எல்லோரும் காத்திருந்தோம்.

    பெண் வேடம் என்றால் சாரி கட்டி, தலையில் விக் வைத்து கொண்டு வருவார் என்றுதான் நினைத்தேன்.

    அதுவரை கமல் சாரை முதல் முதலாக பார்த்ததும் அவருடன் நடித்ததும் இந்த படத்தில் தான். அதிலும் புது விதமான கெட்- அப்பில் அன்றுதான் முதல்முறையாக பார்க்கிறேன். அதுவும் ஒரிஜினல் அடையாளத்தோடு அல்ல. பெண் வேடத்தில் என நினைத்ததும் எனக்கே சிரிப்பாக இருந்தது.

    சற்று நேரத்தில் மாடிப்படிகள் வழியாக ஒரு மாமி வந்து கொண்டிருந்தார். பச்சை நிறத்தில் மடிசார் புடவை கட்டிக் கொண்டு, தோள் சேலையை கச்சிதமாக இடுப்பில் சொருகியபடி பெண்களுக்கே உரித்தான நளினத்துடன் இறங்கி கொண்டிருந்தார்.

    எல்லோரது பார்வையும் அவர் மீது விழுந்தது.

    அது கமலா?

    என்னால் நம்பவே முடியவில்லை. என் அருகில் வந்ததும் 'எப்படி இருக்கு...? என்றார்.


    நான் அவரையே விழிமூடாமல் பார்த்து கொண்டிருந்தேன்...

    கால் முதல் தலை வரை கெட்-அப் என்று சொல்ல முடியாதபடி அந்த கெட்-அப் இருந்தது.

    என்ன பார்த்துக்கிட்டே இருக்கீங்க? எப்படி இருக்குன்னு கேட்டேன் என்று மறுபடியும் கேட்டார்.

    அப்புறம்தான் 'சார்... சூப்பர் சார்...' என்று ஆச்சரியத்துடன் கூறினேன். உடனேஅவர் அங்கிருந்து ஸ்டுடியோவுக்குள் சென்றுவிட்டார்.

    அந்த வேடத்துக்காக அவர் எடுத்துக்கொண்ட சிரத்தையும், தாங்கி கொண்ட சிரமமும் கொஞ்ச நஞ்சமல்ல.

    அதிகாலையிலேயே வந்து விடுவார். மேக்-அப் போட்டு முடிக்க 5 மணி நேரம் ஆகும். அதுவும் சரியாக வாய் திறந்து எதுவும் பேச முடியாது. நீண்ட நேரம் அந்த மேக்-அப்புடன் இருக்கவும் முடியாது.

    எனவே அவருக்கு மேக்-அப் முடிந்ததும் அவர் தொடர்பான காட்சிகளை வேகமாக படமாக்குவார்கள். ஷூட்டிங் முடிந்து மேக்-அப்பை கலைக்கும் வரை அவரால் எதுவும் சாப்பிட முடியாது. திரவ உணவுகளை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பார். அந்த அளவு கஷ்டப்பட்டுதான் அந்த பாத்திரத்தில் நடித்து முடித்தார். அவருக்கு இப்படி கஷ்டம் என்றால் எனக்கு வேற மாதிரியான கஷ்டம். அந்த படத்தில் நடித்த டெல்லிகணேஷ் சார், ஜெமினி சார், நாகேஷ் சார்... எல்லோருமே ஜாம்பவான்கள்.

    அவர்களை பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நடிப்பது போலவே தெரியாது. யதார்த்தமாகத்தான் கேமரா முன் நிற்பார்கள். நடிப்பார்கள். அவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தது.

    ஜெமினி சார் அந்த வயதில் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே வந்து மேக்-அப் போட்டு ரெடியாகி வந்து விடுவார்.

    டெல்லி கணேஷ் சார், ஜெமினி சார், நாகேஷ் சார், மணிவண்ணன் சார் எல்லோரும் ஒன்றாக இருக்கும்போது அவர்கள் பக்கத்தில் சின்ன பெண்ணாக நின்று கொண்டிருப்பேன்.

    எல்லோருமே ரொம்ப பெரியவர்கள் என்பதால் அவர்கள் பக்கத்தில் நிற்கும்போது, பயம், டென்ஷனாக இருக்கும். ரிலாக்சாகவே இருக்க முடியாது. சத்தம்போட்டு விடுவார்களோ? ஏதாவது சொல்லி விடுவார்களோ? என்று பயந்து பயந்தே ஒவ்வொன்றையும் செய்வேன்.

    ஆனால் அவர்கள் அடிக்கும் லூட்டி இருக்கே...? அப்பப்பா... விழுந்து விழுந்து சிரிக்க வைத்து விடுவார்கள்.

    சிரிப்பு, கோபம், எரிச்சல், சலிப்பு, சந்தோசம் என்று பல வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும்.

    'மீனா சின்ன பொண்ணாச்சே... அவளால் முடியுமா...? என்றுதான் நினைத்து இருக்கிறார்கள். உண்மையும் அதுதான்.

    காமெடி காட்சியாக தெரியும். ஆனால் அதில் ஒரு டயலாக் கோபப்படும்படி இருக்கும். இன்னொரு டயலாக் எரிச்சலடைய வைக்கும். மற்றொரு டயலாக் சிரிக்க வைக்கும். இவை ஒவ்வொன்றையும் அடுத்தடுத்து முகத்தில் வெளிப்படுத்த வேண்டும்.

    படத்தில் ஒன்றியும், ரிஸ்க் எடுத்தும் நடித்தேன். ஜெமினி சார், சுற்றி நிற்பவர்களிடம் எதார்த்தமாக பேச வேண்டும். அடுத்த விநாடியே கோபப்பட வேண்டும். எதுவாக இருந்தாலும் சும்மா பின்னுவார்.

    பார்த்து கொண்டிருக்கும் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அந்த ஜாம்பவான்களிடம் இருந்து நிறைய செயல்கள் கற்றுக் கொள்ள முடிந்தது. என்னைப்பற்றி பெரியவர்களின் சந்தேகத்தையும் தாண்டி நடித்து இருக்கிறேன் என்பதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது.

    ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது நாசர் சார் இதை குறிப்பிட்டு சொல்லி பாராட்டினார். இப்படி மற்றவர்கள் பாராட்டும் அளவுக்கு நடித்து இருக்கிறேன் என்பது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய சந்தோசம்.

    காட்சி திரில்லிங்காக இருப்பது மட்டுமல்ல உண்மையிலேயே கண்ணுக்கு தெரியாத இடத்தில் சில திரில்லிங்கான அனுபவங்களை சந்தித்ததும் உண்டு. அந்த அனுபவங்களோடு அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

    தொடரும்....

    • காலையில் விளக்கேற்றி பழமோ அல்லது பாதாம், திராட்சை, முந்திரி வைத்து மதியத்தில் ஏதேனும் அன்னம், பாயாசம் போன்றவை வைக்கலாம்.
    • ஸ்ரீ முருக பிரானுக்கு துவரம் பருப்பு சேர்த்து கதம்ப சாதம், சாம்பார் சாதம் என பூஜைக்கு வைப்பர்.

    கமலி ஸ்ரீபால்நம்மிடையே பல நல்ல பண்புகள் உள்ளன. வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் வரவேற்று உபசரிப்போம். நேரம், காலம், நம் சக்திக்கு ஏற்ப அவர்களுக்கு தேவையானதைக் கொடுப்போம். குறைந்தபட்சம் டீ, காபி, மோர் போன்றவை கொடுப்போம். இதுவே திருமணம், வரவேற்பு, விழாக் காலங்களில் தடபுடலாக விருந்து அளிப்போம். நம் வீட்டில் அம்மா கூட அவரவருக்கு பிடித்த உணவு என ஸ்பெஷலாக செய்வார்.

    உணவு என்பது வாழ்வின் அவசியம். பிடித்த உணவு என்பது மனதிற்கு மகிழ்ச்சி தருவது. அது போலத்தான் நம் முன்னோர்கள் அன்றாட பூஜை, வழிபாட்டின் முக்கிய கட்டமாக அந்தந்த தெய்வத்திற்கேற்ப உணவினை படைத்து வந்தனர். பின்னர் அதனை பிரசாதம் என உண்டனர். இறைவனுக்கு படைக்கப்படும் உணவு என்பதால் அதனை சமைக்க அதிக கவனம் செலுத்தினர். இதனை மக்கள் உண்ணும்போது சுத்தமான, சத்தான உணவு மக்களுக்கு கிடைத்தது.

    இறைவனுக்கு உணவு அளிக்கும் வரை விரதம் இருந்து, பேசாது மனதினை ஒருமுகப்படுத்தி இறைவனையே நினைத்து செய்ததால் மனக்கட்டுப்பாடு இயற்கையாகவே அமைந்தது.

    பொதுவாக இறைவனுக்கு உணவு படைப்பது என்பது நம் நாட்டில் இடத்திற்கு இடம் மாறுபடும். தென் இந்தியாவில் வீடு, கோவில், இரண்டிலும் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் என நைவேத்தியம் செய்வர். ஆனால் கடவுளின் விக்கிரகங்கள் மிக பெரிதாக இருக்கும்போது அதற்கேற்ற அளவில் வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், புளி சாதம், எலுமிச்சை சாதம், வடை என பல விதங்களில் செய்வர். பொதுவில் விக்ரகங்களின் தோற்றத்திற்கேற்ற அளவில் உணவு கொடுக்க வேண்டும். பொதுவாக வீட்டில் படங்களை வைத்து வழிபடுவது சிறப்பு. அன்றாடம் வேலை வேலை என்று 7 மணிக்குள் ஓடும்போது படங்கள் இருந்தால் பால், முந்திரி, திராட்சை, பாதாம், கற்கண்டு என வைத்து விளக்கேற்றி வணங்கலாம். நல்ல நாள், கிழமைகளில் சிறப்பான உணவுகளை தயாரித்து வணங்கலாம். பொதுவில் 11 மற்றும் 12 மணிக்கு இறைவனுக்கு அன்னம் படைத்து வணங்கலாம். இன்றைய கால சூழ்நிலையில் இது சற்று கடினமான நிலையாகவே வேலைக்குச் செல்பவர்களுக்கு இருக்கின்றது.

    காலையில் விளக்கேற்றி பழமோ அல்லது பாதாம், திராட்சை, முந்திரி வைத்து மதியத்தில் ஏதேனும் அன்னம், பாயாசம் போன்றவை வைக்கலாம்.

    கோவில்களில் அபிஷேகம், ஆறு கால பூஜை செய்து தினம் தோறும் சிறப்பான உணவுகளை வைத்து வழிபடுபவர்.

    பிள்ளையாருக்கு இட்லி, கொழுக்கட்டை, சுண்டல் போன்றவை வைத்து வழிபடுவது தென்னகத்தில் வழிபடும் முறை.

    மோதி லட்டு எனப்படும் லட்டு வைத்து கணேஷ் பகவானை வழிபடுவது வடஇந்திய முறை.

    தென்னகத்தில் அநேக கோவில்களில் சிவபிரானுக்கு வெண் பொங்கல் அளித்து வழிபடும் முறை உள்ளது. நெய், மிளகு, சீரகம், முந்திரி, கருவேப்பிலை என நல்ல நறுமணத்தோடு இறைவனுக்கு அளிப்பது வழக்கம்.

    இதே வழக்கம் பெருமாள் கோவிலிலும் இருக்கும். வட இந்தியாவில் சிவபிரானுக்கு 'கீர்' எனப்படும் பால் பாயாசம் செய்வார்கள்.

    பொதுவாக சிவபிரான் யோக நிலையில் இருப்பதாக பேசப்படுவதால் அவரது உணவு எளிதாகக் கூட இருக்கும்.

    ஆனால் பெருமாளுக்கோ தடபுடலான உணவுகள் இடம் பெறும்.

    அம்பாளுக்கு கேரள முறைப்படி செய்யப்படும் பாயாசம் மிக சிறப்பானதாக கூறப்படுகின்றது. தேங்காய் பால், தேங்காய் துண்டுகள் சேர்த்து செய்யப்படும் இந்த பாயாசம் செய்யவே கூடுதல் நேரம் பிடிக்கும்.

    ஸ்ரீ ராம பிரானுக்கு பானகம், நீர் மோர் போன்றவை என்றால் ஸ்ரீ கிருஷ்ண பிரானுக்கு நெய், அப்பம், வெண்ணை முக்கிய பங்கு வகிக்கும்.

    ஸ்ரீ முருக பிரானுக்கு துவரம் பருப்பு சேர்த்து கதம்ப சாதம், சாம்பார் சாதம் என பூஜைக்கு வைப்பர்.

    மகா விஷ்ணுவுக்கு லட்டு, சர்க்கரை பொங்கல் என மஞ்சள் நிறமான உணவுகளை படைப்பர்.

    சரஸ்வதி அம்பாளுக்கு வெண்மையான வெண்பொங்கல் சிறப்பு ஆகும்.

    பிள்ளையாருக்கு கொழுக்கட்டை, லட்டு, இனிப்பு வகைகள் சேரும்.

    முருக பிரானுக்கு பழங்கள், கற்கண்டு, தேன், ஏலக்காய் சேர்த்த பஞ்சாமிர்தம் தனி சிறப்பு ஆகும்.

    துர்க்கை, காளி இவர்களுக்கு வெல்லம் சேர்த்த உணவு, காய்கறிகள் சேர்த்த உணவு செய்வார்கள்.

     

    காளிக்கு- எலுமிச்சை சாதம், மசால் வடையும் மிகச் சிறப்பு என்பர்.

    வாராகி அம்மனுக்கு மாதுளை, வேக வைத்த சர்க்கரை வள்ளி கிழங்கு பிடித்த உணவாகும்.

    மகாலட்சுமி என்றாலே குங்குமப்பூ, ஏலக்காய் பச்சை கற்பூரம் சேர்த்த பாயாசங்கள் சிறப்பு.

    பொதுவில் அம்மன் வழிபாட்டில் பாயாசம் என்பது அவசியமான ஒன்று.

    ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை, தயிர் சாதம், சிறப்பு. கால பைரவருக்கு உப்பில்லாத தயிர் சாதம் விசேஷம். சனி, ராகு, கேது இவர்களுக்கு கறுப்பு உளுந்து, கறுப்பு எள், கொள்ளு, நல்ல எண்ணெய் சேர்த்த உணவு வகைகளை வைத்து வழிபடலாம்.

    இப்படி உணவு வகைகளாக கூறப்பட்டுள்ளதே என்று நினைக்கலாம்.

     

    கமலி ஸ்ரீபால்

    கமலி ஸ்ரீபால்

    பக்தி மார்க்கத்தில் ஒரு வழிதான் கடவுளை நறுமணம் கொண்ட பூக்களால் அலங்கரித்து, விளக்கேற்றி, தூப, தீப வழிபாடுகள் செய்து பிரத்யேகமான உணவுகள் படைத்து வழிபடுவது என்பதாகும். நாம் எந்த முறையினை தேர்ந்தெடுக்கின்றோமோ அதனை முழுமையாய் அறிந்து முடிந்தவரை அதன்படி செயல்பட முனைவோமே.

    கடவுளுக்கு எந்த உணவும் தேவை என்பது கிடையாது.

    அவர் சர்வ வல்லமை படைத்தவர்.

    நாம் உண்ணும் அனைத்தும் அவர் வாங்கி கொடுத்ததே. நம் நன்றியினை காட்டும் விதமாகத்தான் இவ்வாறு செய்கின்றோம்.

    இது பக்தி மார்க்க இறைவழிபாடு, இல்லறத்தில் இருந்து இறை வழிபாடு செய்வோரின் கூற்று. இதில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி. அவருக்கு படைத்து நாம் அதனை எடுத்துக் கொள்வதில் ஒரு ஆத்ம திருப்தி.

    தயிரில் தேன் கலந்து அளிப்பது என்பது முந்தைய காலத்தில் இருந்தது. பின்னர் தேன், தயிர், நெய், பால், நாட்டு சர்க்கரை என கலந்து கொடுத்தனர். பெண் தெய்வங்களுக்கு நெல்லிக்காய், எலுமிச்சை, மிளகாய் என கூட அளிக்கப்பட்டுள்ளது.

    மேலை நாடுகளில் சாக்லேட்களை அவர்கள் வணங்கும் தெய்வத்தின் முன்பு வைத்து வணங்குவர். கிராமங்களில் வெறும் வெல்லம் கூட வைத்து வழிபட்டு இருக்கின்றனர்.

    உக்கிர தெய்வங்கள், குல தெய்வங்கள், கிராம தெய்வங்கள், இவர்களுக்கு அசைவ உணவினை படைக்கும் வழக்கமும் உண்டு.

    மனித வாழ்க்கை என்றாலும் அல்லது உலகில் எந்த ஜீவராசியாக இருந்தாலும் உயிர் வாழ உணவு என்பது மிக முக்கியமானது.

    அதனால்தான் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் இந்த மூன்றும் மிக அவசியம் என்கின்றோம்.

    ஆதிகால மனிதன் உணவிற்கும் இன்று நாம் உண்ணும் உணவிற்கும் உள்ள வித்தியாசங்கள் எவ்வளவு?

    'பசி வந்தால் பத்தும் பறந்திடும்' என்பர். இந்த பத்து என்ன? மானம், தான் பிறந்து வளர்ந்த பரம்பரை, படித்த படிப்பு, திறமை, அறிவு, தானம், தவம், முயற்சி, ஆளுமை, அன்பு இவை அனைத்தினையும் மனிதன் இழப்பான். எத்தனை கொடுமையானது பசி. பசிக்கு பணக்காரன், ஏழை என கிடையாது.

    சரி. உணவு என்று சொல்லி மூன்று வேளை கஞ்சி என்பதும், சரியானதே அதுவும் பசியின் பிரிவில் தான் வரும்.

    அறுசுவை கொண்ட உணவே மனிதனை மனிதனாக உருவாக்கும் பசி. பசியோடு ருசி எனப்படும் சுவையும் மிக அவசியம்.

    அனைவரும் நினைத்துப் பாருங்கள். ஒரு வேளை உணவில் சிறிது சுவை குன்றினாலும் வீட்டில் பேயாட்டம் ஆடுபவர்கள் எத்தனை பேர் உள்ளனர். நாக்குக்கு என்றும் அடிமை ஆகக் கூடாது என்றாலும் பதமான, இதமான உணவு என்பது அனைவருக்கும் அவசியம்.

    உங்களின் ஒளி சக்தியினை அறிய ஐம்புலன்களின் கட்டுப்பாடும் அவசியமே.

    • மூட்டுத் தேய்மானம் மற்றும் மூட்டுவாதம் என்பது 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 20 சதவீதம் முதல் 40 சதவீத மக்களை பாதிக்கிறது.
    • மூட்டு மாற்று அறுவை சிகிச்சை என்பது “ஆர்த்ரோபிளாஸ்டி என்றழைக்கப்படும் எலும்பியல் சிகிச்சை ஆகும்.

    மூட்டு வலி என்பது பொதுவாக எலும்புகளின் தேய்மானத்தாலேயே உருவாகிறது. ஒரு காலத்தில் முதியவர்களை மட்டுமே பாதித்த மூட்டுவலி, இன்றைய காலக்கட்டத்தில் வயது வித்தியாசமின்றி அனைவரும் சந்திக்கும் பிரச்சினையாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக இளம்பெண்கள் மத்தியிலும் இந்த மூட்டுவலியானது தற்போது காணப்படுகிறது.

    மூட்டுத் தேய்மானம் மற்றும் மூட்டுவாதம் என்பது 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 20 சதவீதம் முதல் 40 சதவீத மக்களை பாதிக்கிறது.

    நோயின் ஆரம்பத்தில் சிறுமூட்டுகளில் வலியும், வீக்கமும், இறுக்கமும் நமக்கு தொல்லை கொடுக்கும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் காலையில் எழும்போது ஒரு மணிநேரத்துக்கு மேல் கை, கால்களை அசைக்க முடியாத அளவுக்கு மூட்டுவலி கடுமையாக இருக்கும். நாட்கள் செல்ல, செல்ல நம்மால் நடக்க முடியாது. அவ்வளவு ஏன் நாம் தினந்தோறும் செய்யக்கூடிய சின்ன சின்ன வேலைகளை கூட நம்மால் செய்ய முடியாமல் அவதிப்படும் நிலைக்கு ஆளாக்கி விடுகிறது மூட்டுவலி.

    மூட்டு வலி கடுமையாக இருக்கிறது என்ற ஒரே காரணத்தால் உடனே ஆபரேஷன் தான் செய்ய வேண்டும் என நினைத்து விடக்கூடாது. மூட்டுவலிக்கான மூட்டு மாற்று ஆபரேஷன் என்பது கடைசி கட்டத்தில் பண்ணக்கூடிய சிகிச்சை. அதற்கு முன்பாக சில எளிய சிகிச்சை முறைகளும் உள்ளன. அதன் மூலமும் மூட்டு வலியை நாம் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    மூட்டுத் தேய்மானம் ஆரம்ப கட்டத்தில் இருந்தால் நாம் நம்முடைய வாழ்க்கை முறையில் சில எளிய மாற்றங்களையும், சில வைத்திய முறைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    இதுமட்டுமின்றி உடற்பயிற்சி, உடல் எடை குறைப்பு, யோகாசனம் போன்றவற்றை தினமும் செய்ய வேண்டும். இதன் மூலம் மூட்டு தேய்மானத்தை சிறிது நாட்கள் தள்ளிபோடலாம் அல்லது தடை படுத்தலாம்.

    இந்த பயிற்சிகளை தவிர மருத்துவ ரீதியாகவும் சில எளிய சிகிச்சை முறைகள் உள்ளன. ஆரம்ப கட்ட மூட்டு தேய்மானத்தை குளுக்கோசமான் மூட்டு டானிக் மருந்தாலும், நோயாளியின் உடம்பில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ரத்த அணுக்களை(பி.ஆர்.பி இன்ஜக்ஷன்) மூட்டினுள் செலுத்துவதாலும், நோயாளியின் வயிற்று பகுதி அல்லது இடுப்பு எலும்பில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட மூலச் செல்களை மூட்டினுள் செலுத்துவதன் மூலமும், மூட்டு தேய்மானத்தையும், அதனால் வரக் கூடிய வலியில் இருந்தும் நமக்கு நிவாரணம் கிடைக்கும்.முழங்கால் மூட்டில் ஆரம்ப கட்ட வலி இருக்கும் நோயாளிகள் பலரை நாங்கள் பார்க்கிறோம். இதில் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் 30 முதல் 40 வயதுடையவர்கள் தான்.

    இவர்களுக்கு கால் லேசாக வளைந்து இருக்கும். அந்த மாதிரியான நோயாளிகளுக்கு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை இல்லாமலே, வேறு சில அறுவை சிகிச்சைகள் உள்ளன. மூட்டின் வளைவு தன்மையை நேர்படுத்தி, உள்ளே ஒரு உலோகத்தகடு பொருத்துவது தான் இந்த சிகிச்சை முறை.

    அதாவது மூட்டின் ஒரு பகுதி தேய்ந்திருந்தால், அந்த பகுதியின் வளைவை மட்டும் தேர்ந்தெடுத்து, சரி செய்து, நேராக்குவது. அப்படி காலை நேராக்கும் போது, மூட்டு தேய்மானம் அதிகமாவதில்லை. வலியும் போய்விடும். இந்த சிகிச்சை முறையும் மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளது.

    ஆனால் மூட்டு மிகவும் தேய்ந்து வளைந்து போனால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தான் நிரந்தரத் தீர்வு ஆகும். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை என்பது "ஆர்த்ரோபிளாஸ்டி என்றழைக்கப்படும் எலும்பியல் சிகிச்சை ஆகும்.

    இது செயல்படாத, சேதமடைந்த அல்லது செயலற்ற மூட்டுகளை பிளாஸ்டிக், உலோகம் அல்லது பீங்கான் ஆகியவற்றால் செய்யப்பட்ட செயற்கை இணைப்பு மூலம் மாற்றுவதுதான் இந்த நடைமுறையாகும். இப்படிப்பட்ட மூட்டு அறுவை சிகிச்சையானது கோவையில் உள்ள எங்கள் ஆஸ்பத்திரியில் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

    உலக அளவில் இந்த அறுவை சிகிச்சையானது மூட்டு வலியால் பாதிக்கப்பட்டுள்ள பல கோடி நோயாளிகளுக்கு மிகப் பெரிய நிவாரணியாக இருந்து வருகிறது.கடந்த 30 ஆண்டுகளில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையானது பல முன்னேற்றங்களை கண்டுவிட்டது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மட்டுமின்றி, அறுவை சிகிச்சை செய்யும் முறை, அதில் உபயோகப்படுத்தப்படும் உலோக செயற்கை மூட்டுக்கள், அறுவை சிகிச்சையின் போது கொடுக்கப்படும் மயக்க மருந்து போன்றவற்றிலும் மிகப்பெரிய மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்பட்டுள்ளது.

    இதில் மிக முக்கியமானது கம்ப்யூட்டர் கொண்டு செயல்படுத்தப்படும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தான். கோவை கே.எம்.சி.ஹெச் ஆஸ்பத்திரியில் இந்த சிகிச்சை முறையானது கடந்த 2004-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் பலரும் பயன் அடைந்துள்ளனர்.

    இருந்த போதிலும் அறிவியல் வளர்ச்சி அதிகமுள்ள இந்த காலகட்டத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் மிக துல்லியமான சிகிச்சை முறைகள் இருக்கிறதா என ஆய்வு செய்தோம். அப்போது, மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் ரோபோட்டிக் கருவி உதவியுடன் செய்யப்படும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை இருப்பதை அறிந்து கொண்டோம்.

    இந்த ரோபோட்டிக் கருவி உதவியுடன் செய்யப்படும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையானது மிகவும் துல்லியமாக இருப்பதால், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை களில் முன்னோடியாக இது திகழ்ந்து வருகிறது.

    இப்பொழுது இந்த சிகிச்சை முறை எங்கள் ஆஸ்பத்திரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து தருவிக்கப்பட்ட அதிநவீன செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் ரோபோட்(கோரி ரோபோட்) மேம்படுத்தப்பட்ட கருவி ஆகும்.

    மூட்டு மாற்று அறுவை சிகிச்சை என்பது மூட்டின் தேய்ந்து போன சில மில்லி மீட்டர் எலும்பின் நுனிப்பகுதியை அகற்றி விட்டு செயற்கை மூட்டை பொருத்துவதாகும்.

    புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ள ரோபோட்டிக் எந்திரம் மிக துல்லியமான மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவும். இந்த சிகிச்சையானது மற்ற சிகிச்சை முறைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

    சாதாரண மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் சில மில்லி மீட்டர் எலும்பின் நுனிப்பகுதியை எடுக்கிறோம். இந்த சிகிச்சை முறையில் எலும்பின் பாகங்கள் சிறிதே அகற்றப்படும்.

    அதுமட்டுமின்றி அறுவை சிகிச்சையின் போது மிகச் சிறிய அளவிலேயே தசைகள் ஒதுக்கப்படும். மற்ற சிகிச்சைகளில் இருந்து ரத்த போக்கும் குறைவாகவே இருக்கும். இதனால் நோயாளிகளுக்கு ஆபரேஷனால் உண்டான வலியும் குறைவாகவே இருக்கும்.

    நமது உடம்பில் உள்ள மென்மையான திசுக்களை பாதுகாத்து நோயாளி விரைவில் குணம் அடையவும் இந்த சிகிச்சை முறையானது உதவிகரமாக இருக்கிறது. இந்த ரோபோட்டிக் கருவி அறுவை சிகிச்சையை சுலபமாகவும், விரைவாகவும் செய்து முடித்து விடுகிறது.

    மேம்பட்ட துல்லியம், எலும்புகள் மீது மிகவும் கச்சிதமாக இம்பிளாண்டுகள் பொருத்துதல், நோயாளியின் மூட்டு அமைப்புக்கு ஏற்றவாறு பிரத்யேக சிகிச்சை, அறுவை சிகிச்சைக்கு பின்பு குறைவான வலி மற்றும் வீக்கம் ஆகியவையும் இந்த ரோபோடிக் தொழில்நுட்பத்தினால் கிடைக்கிறது.

    இதன் மூலம் நோயாளி மிக விரைவிலேயே குணம் அடைந்து, வீடு திரும்ப முடியும். இதனால் மருத்துவமனையில் தங்கும் காலம் குறைவாகிறது. ஒரே நேரத்தில் 2 மூட்டுக்களையும் மாற்றும் போது இந்த ரோபோடிக் கருவி மிக உதவிகரமாக இருக்கிறது. இந்த சிகிச்சை முறையால் எங்கள் ஆஸ்பத்திரியில் பல நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர்.

    இந்த சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வீடு திரும்புகிறார்கள். இந்த சிகிச்சை முறையானது மிக துல்லியமாக செயல்படுத்தப்படுவதால், இந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நீண்ட நாட்களுக்கு செயல்படும் என உலக அளவில் பல்வேறு ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது.

    இந்த ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை எங்கள் மருத்துவமனையின் எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களான டாக்டர்கள் திருமலைச்சாமி, லெனின் பாபு, தென்னவன், பாஸ்கரன், பூபதி கிருஷ்ணன் ஆகியோர் செய்கின்றனர்.

    மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் ரோபோடிக் கருவி சிகிச்சையை அறிமுகப்படுத்தியது போன்று இந்தியாவிலேயே முதல் முறையாக 3 டிசி ஆர்ம் என்ற இமேஜிங் கருவியையும் எங்கள் ஆஸ்பத்திரி அறிமுகம் செய்துள்ளது.

    எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகளின் துல்லியத்தை இது அதிகரித்து சிறந்த பலனை கொடுக்கும். எலும்புகள் மறுகட்டமைப்பு முதலான சிக்கலான சிகிச்சைகளையும் மேம்பட்ட திறனுடன் செய்து முடித்திட இந்த தொழில்நுட்ப சிகிச்சை உதவுகிறது.

    முப்பரிமாண தொழில்நுட்பம் துணையுடன் மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உதவுகிறது. மேலும் ஸ்குரூக்கள், இம்பிளாண்டுகள் போன்றவற்றை துல்லியமாக பொருத்தி சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற உதவியாக உள்ளது.

    இதர அறுவை சிகிச்சை துறைகளை போல எலும்பு மருத்துவ துறையில் நோயாளியின் சவுகரியத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பம் சிறப்புடன் செயல்படுகிறது.

    மூட்டு வலி ஏற்பட்டால் ஆரம்ப காலகட்டத்தில் எளிய முறை சிகிச்சைகளிலும், நாள்பட்ட மூட்டு வலிக்கு ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையாலும் நல்ல முறையில் மருத்துவம் அளிக்கலாம்.

    தொடர்புக்கு: 73393 33485

    • நமது மூச்சினுடைய எண்ணிக்கை உயர உயர ஆயுள் குறையும். அதே நேரம், நாம் இந்த நிலையை தவிர்த்தல் நலம்.
    • நாடி சுத்தி பிராணாயாமத்தை செய்யும் போது மனம் ஆழ்நிலைக்கு செல்கிறது.

    வாசகர்களே, கர்மாவில் இருந்து தப்பித்து கொள்ள இந்த நாடி சுத்தி பிராணாயாமம் நமக்கு எப்படி உதவி செய்கிறது என்பதை பற்றி சற்று சிந்தித்து பார்ப்போம். பொதுவாக மனிதர்கள் மூச்சை மூன்று வகைகளாக சொல்வார்கள். அவை, மேல் மூச்சு, நடு மூச்சு மற்றும் அடி மூச்சு என்பர். மேல் மூச்சு என்பது உணர்ச்சிவயப்பட்டநிலை, மனத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையாகும். மேல் மூச்சு என்பது நுரையீரலுடைய மேல் பகுதியை மட்டும் இயக்கும். இதனால் மூச்சின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்படி மூச்சின் எண்ணிக்கை ஒரு நிமிடத்திற்கு அதிகரிக்கும்போது நம்முடைய ஆயுள் குறைந்துவிடும். அடிப்படையாக, நம் மூச்சின் எண்ணிக்கை ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு என்ற அளவில் இருக்கும்போது, இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட ஆயுள் நமக்கு கிட்டும். ஆனால், மேல் மூச்சில், உணர்ச்சிவயப்பட்ட நிலையில், நமது மூச்சினுடைய எண்ணிக்கை உயர உயர ஆயுள் குறையும். அதே நேரம், நாம் இந்த நிலையை தவிர்த்தல் நலம்.

    நடு மூச்சு என்பது, நாம் பல நேரங்களில் சிந்தித்து சில முடிவுகளை எடுக்கும் நிைல இது. அடி மூச்சு என்பது அமைதியான மனநிலையில் இருந்து கொண்டு, பக்தி மார்கத்தில் உருவ வழிபாட்டின் மூலமாகவோ அல்லது அகம் நோக்கிய பிரயாணத்திலோ, தன்னையே உணர்ந்து கொள்ள, தியான நிலையில் இருக்கின்ற நிலையாகும். ஆனால் இந்த மூன்று நிலைகளை கடந்து, நான்காவதாக ஒரு நிலை உள்ளது. அது ஞானிகள் அல்லது சித்தர்களின் மூச்சு எனப்படுகிறது.

    இந்த மூச்சு ஆனது அடி மனம் என்று சொல்லுகின்ற ஆழ் மனதோடு இணைந்துள்ளது. இங்கிருந்து தான் நமக்கு உள்ளே இருந்து தெய்வத்தின் குரல் கேட்கிறது என்று சித்தர்களால் சொல்லப்படுகிறது. எனவே, நமக்குள் உள்ள இறைவனை உணர வேண்டும் என்றல், அந்த மெல்லிய குரலை கேட்டு, உணர வேண்டும் என்றால், நாம் ஞானிகளின் மூச்சோடு நம்மை ஒன்றுபடுத்திக் கொண்டு இந்த நாடி சுத்தி பிராணாயாமத்தை செய்யும் போது மனம் ஆழ்நிலைக்கு செல்கிறது. அப்படி செல்லும்போது நமது பேச்சு அடங்குகிறது.

    எனவே, நாம் பேசாது இருக்கும்போது, நமக்குள் உள்ள இறைவன் பேசுகிறார் என்கிறார்கள் மகான்கள். விஞ்ஞான வழியில் சொல்லும்போது, இந்த ஞானிகளின் மூச்சின் மூலமாக நமது உதிரவிதானத்தை இயக்குகிறோம். அப்போது மனம் அமைதி பெறுகிறது. மேலும் உள் உறுப்பு தசைகள் வலுப்பெறுகிறது. சித்தர்கள் வைத்து இருந்த பயற்சியை, உலகில் உள்ள பாமர மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்கின்ற நோக்கிலே இந்த மூச்சு பயிற்சியை ஏழு நிலைகளில் செய்யக்கூடிய நரம்பு தசைநார் மூச்சு பயிற்சியாக உலகிற்கு அளித்த மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள்தான். நாடி சுத்தி பிராணாயாமமும், வேதாத்திரி மகரிஷி அவர்களால் வடிவமைக்கப்பட்ட, நரம்பு தசைநார் மூச்சு பயிற்சியும் ஒரே பலனை கொடுக்கிறது என்றால் நமக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

    இந்த ஞானிகளின் மூச்சை இயக்குகின்ற இந்த பயிற்சியை தான் திருமூலர் இதை சர கலை என்று கூறுகிறார். சரம் என்றால் தொடர்ச்சி, வளர்தல், முடிவு, இல்லாதது என்று பொருள். இந்த உடலிலே பிராணன் நீண்ட நாட்கள் தங்குவதற்கு செய்ய கூடிய ஒரு மூச்சு பயிற்சியை தான், திருமூலர் சரகலை என்று குறிப்பிடுகிறார். திருமூலர் ஒரு பாடலிலே சொல்லும்போது சரம் தெரிந்தவரிடம் சரசம் ஆடாதே என்கிறார். அதாவது இந்த மூச்சு செய்பவர் இடத்தில் தேவையில்லாமல் யாரும் வாக்குவாதம் செய்யக்கூடாது என்கிறார். மேலும் சரம் தெரிந்தவர் பரம் பார்ப்பார் என்கிறார். அதாவது இந்த பயிற்சி செய்பவர்கள் எப்பொழுதும், பரம் என்கின்ற இறைவனோடு இணைந்து இருப்பார்கள். அவர்கள் ஏதாவது நினைத்தாலோ, சொன்னாலோ அது அப்படியே நடந்துவிடும் என்று சரகலையின் முக்கத்துவத்தை குறிப்படுகிறார். இந்த சரகலை தான் நாடி சுத்தி பிராணாயாமம் அல்லது மகரிஷி அவர்களின் நரம்பு தசை நார் மூச்சு பயிற்சியாகும்.

    அது போல இந்த சரீரத்தின் மேலே ஐந்து கோசங்கள் என்று சொல்லுகின்ற ஐவகையான போர்வைகள் (உறைகள்) நமக்கு மேலே உள்ளது. அதை முறையே அன்னமய கோசம், மனோமயசோசம், பிராணமய கோசம், விஞ்ஞான மய கோசம், ஆனந்தமய கோசம் என்கின்ற ஐந்து உறைகள் நமக்கு மேலே ஆடையாக உள்ளது. இந்த ஐந்து உறைகளை கடந்து உள் ெசன்றால் நம் ஆன்மாவை நம்மால் உணர முடியும். இந்த பிராணாயாமம் பயிற்சியின் மூலம் நமக்கு ஐந்து கோசத்தில் இருந்து முக்தி கிடைக்கிறது. ஏனென்றால் இந்த பிரபஞ்சமாகிய அண்டத்தில் உள்ளதுதான் பிண்டமாகிய இந்த சரீரத்திலும் இருக்கிறது. அவை முறையே, பஞ்ச பூதங்களாகிய நிலம் என்கிற பருவுடலும், நீர் என்கிற இரத்தமும், உமிழ்நீரும் விந்து நாதம் மற்றும் ஹார்மோன்களும் நெருப்பு என்கிற 98.4 வெப்ப நிலையும் ஆகாசம் என்று சொல்லுகின்ற உயிரும் உள்ளது.

    மேலும் அண்டத்தில், பரம்வெளி மண்டலம் என்கின்ற பால்வெளி மண்டலங்கள் 3 1/2 (மூன்றரை) அளவு வளைவு உள்ளதாக இயங்கிகொண்டு இருக்கிறது. அது போல தான் இந்த உடலின் இயக்கத்திற்கு காரணமான குண்டலினி சக்தியும் 3 1/2 சுற்று வளைந்து படுத்து இருக்கும் பாம்பாகவே உருவகம் படுத்தப்பட்டுள்ளது.

    அன்பர்களே, இந்த பிரபஞ்ச படைப்பிலே அனைத்து இயக்கத்திற்கும் காரணமான சக்தி, ஒன்றே ஒன்றுதான். அண்ட சராசரங்களின் இயக்கத்துக்கும், ஒவ்வொரு தனி மனிதனின் இயக்சுத்துக்கும், காரணமான சக்திக்குதான் குண்டலினி என்று பெயர். எனவே, இந்த குண்டலினி சக்தி என்னும் இறை சக்தியை நமக்குள்ளாக காத்து கொள்ள இந்த நாடி சுத்தி பிராணாயாமம் மிகவும் அவசியம். இந்த இறை சக்தியை நமக்குள் நாம் வாழும் காலத்திலேயே உணர்ந்தால் தான், நாம் கர்மவினை பதிவுகளில் இருந்து விடுபட முடியும். ஏனேன்றால் ஆயுள் என்பது நமது மூச்சோடு தொடர்பு உடையது. இதற்கு மூச்சு எப்படி உதவி செய்கிறது என்கிற சந்தேகம் நமக்கு எழும். இதை அட்டாங்க யோகத்தில் பதஞ்சலி முனிவர் நான்காம் அத்தியாயமாக (பிராணாயாமம்) அமைக்கிறார்.

    மனித உடல் ஆனது திடமாக இயங்க 108 இடங்களில் உயிர்காற்று நின்று இயங்குகிறது. இதையே நாம் உயிர்நிலை ஓட்டம் என்கிறோம். மனித உடலில் உள்ள 10 வாயுக்கள் மேற்சொன்ன 108 இடங்களில் உயிர்காற்றை இயக்குவதாக சித்தர்கள் அறிந்தனர். இந்த தச (10) வாயுக்கள் தான், 108 உயிர் இடங்களை, எப்படி இயக்குகிறது என்பதே பிராணாயாமம்.

    அதே போல் மனிதனின் கண்களுக்கு புலப்படாத பொருட்கள் நான்கு 1. இறை நிலை 2. மனிதனின் உயிர் 3. காற்று 4. நோய். இவை நான்கும் உணர முடியும். இந்த நான்கும் தான் இந்த சரீரத்தை சூட்சமமாக ஆட்சி செய்கிறது. எனவே சித்தர்கள் கண்ணால் காண முடியாத பிராணனை கொண்டு உடலின் நோய்களை போக்கும் வழியை கண்டுபிடித்த முறையே பிராணாயாமம்.

    நாடி சுத்தி என்பது உடலின் நோயை குணப்படுத்தும். மேலும் இந்த உடலை கல்பம் (அழியாதது) ஆக்கும். அறிவை அஜயா என்ற ஒடுக்க நிலைக்கு கொண்டு செல்லும்போது சிற்றறிவு ஆனது பேறறிவோடு இணையும். இதை உணர்ந்த சித்தர்கள், பொய் என்று சொல்லக்கூடிய இந்த தேகத்தை, மெய் என்று நிரூபித்து காட்டி காற்றை பிடித்து, மூலக்கனலை எழுப்பி, மெய்ஞான அமுது உண்டு நரை, திரை, மூப்பு, இன்றி இறவா வரம் பெற்று வாழ்ந்து காட்டியவர்கள் சித்தர்கள்.

    இப்போது இந்த நான்கு வகையான மூச்சை பற்றி சற்று விஞ்ஞான பார்வையாக பார்க்கும் போது இதன் முக்கியத்துவம் விளங்கும்.

    மேல்மூச்சு என்பது உயர் சுவாசித்தல் என்பர். இதை கழுத்தெலும்பு சுவாசம் என்பர். இவ்வாறு சுவாசித்தால், விலா எலும்புகளை மேல் பக்கமாக தூக்கி கழுத்து எலும்பும், தோள்பட்டைகளும் உயர தூக்கும்.அதே நேரம், அடிவயிறு அத்தனையும் உள்ளுக்கு இழுத்து உதிரவிதானத்துக்கு எதிராய் அழுத்தி ஏற்றுவர். இதனால் குறைந்த காற்றே நுரையீரலுக்கு கிடைக்கும். மேலும் உதிரவிதானம் மேல் நோக்கி வந்து விட்டதால் எந்த திசையிலும் விரிவு அடைய வாய்ப்பு இல்லாமல் போய்விடும். இது மிகக்குறைந்த அளவு பலனையே தரும். எனவே இந்த உயர் சுவாசித்தல் என்பது மிகவும் மோசமானது. பல பாகங்களை அழுத்தி உயர்த்தி அதிக வேலையை நம்மிடம் வாங்கி கொண்டு குறைந்த அளவே கை கூடும்.

    நடு மூச்சு என்பது இதை விலா சுவாசித்தல் என்பர். உயர் சுவாசித்தலை விட சற்று கூடுதல் பலன் தரும். இதில் உதிரவிதானம் மேலுக்கு தள்ளப்பட்டு அடிவயிறு அடங்கிய வயிற்றுப்பகுதி உள்நோக்கு இழுக்கப்படுகிறது. இதனால் உயர் சுவாசத்தை விட பலன்கள் சற்று அதிகமாக கிடைக்கும். காரணம் என்னவென்றால், விலா எலும்புகள் சற்ற அதிகமாக தூக்கப்படுவதால், நெஞ்சின் ஒரு பகுதி மட்டுமே விரிவடையும்.

    அடி மூச்சு என்பது, இதை அடி வயிறு சுவாசித்தல் என்பர். இந்த மூச்சு உதிரவிதானத்தின் மேல்பகுதி இயக்கப்படுவதால், மேல் மூச்சு, நடு மூச்சை விட நுரையீரல்கள் இயங்க அதிகமான சுதந்திரம் கிடைக்கும். இதனால் காற்று உள் இழுக்கும். இந்த நிலையில் உதிரவிதானம் இயக்கப்படும் போது குன்று போன்ற அமைப்பு கீழ் நோக்கி அழுத்தப்பட உதிரவிதானம், வயிற்றுப் பகுதி பாகங்களை அழுத்தி, அப்பகுதியை உந்தி வெளி தள்ளும். இதனால் கூடுதலான பிராண சக்தி கிடைக்கும்.

    ஞானிகள் மூச்சு என்பது, மூச்சை உள் இழுத்து, வெளிவிடும்போது உள்ளே இருக்கும், உடலுக்கு ஒவ்வாதவற்றை அகற்றி, அனைத்து சுவாச உறுப்புகளையும் முழு இயக்கத்திற்கு உட்படுத்தும். நுரையீரலின் ஒவ்வொரு செல்லையும், ஒவ்வொறு பகுதியையும் முழு மையான இயக்கத்திற்கு உட்படுத்தும். குறைந்த சக்தி செலவில் அதிகமான சுவாச பலனை எட்ட வைக்கும். மேலும் மார்பு கூடு அனைத்து திசைகளிலும், அதிகப்படியான விரிவுக்கு உட்படுத்தப்பட்டு சுவாசத்தில் ஈடுபடும் அனைத்து உறுப்புகளும் தானாக முழு உழைப்புக்கு தள்ளப்பட்டு விடுவதால் முழு பலனும் கை மேல் கிடைக்கும். இதனால் நெஞ்சு மற்றும் அதன் உதிரி பாகங்களை வயிறு மற்றும் அதன் உதிரி பாகங்களில் இருந்து பிரிக்கும். தசை சுவரான உதிரவிதானம் முழுவதும் வேலை செய்யும். இந்த ஞானிகள் மூச்சின் பலன் நமக்கு நாடி சுத்தி பிராணாயாமம் நரம்பு தசை நார் மூச்சு பயிற்சி மூலம் கிடைக்கிறது.

    யோகிகளின் இந்த சுவாசக் கலையை, அவர்கள் பவகார யோகம் என்கிறார்கள். அதாவது தொடர் நாடி சுத்தி பிராணாயாமம் பயிற்சியினால், யோகியானவர்கள் மரணத்தின் மீது முழு ஆதிக்கம் செலுத்தி, அதனோடு மூச்சின் மீதும் மனதின் மீதும் ஆதிக்கம் செலுத்தி, புவி ஈர்ப்பு விசை எல்லைகளை கடந்து செல்லும் நிலை கிடைக்கிறது. எனவே, ஜீவ பிரம்ம ஐக்கிய முக்தி நிலையை வாழும் காலத்திலேயே கொடுக்கக்கூடிய சர கலையை நாம் செய்யும்போது ஆயுள் நீடிக்கிறது.

    எப்போது நாம் ஆயுளை நீட்டித்து மரணத்தை வெல்கிறோமோ அப்போதே நமது கர்மவினை பதிவுகளில் மாற்றம் ஏற்பட்டு, நமது விதியை மதியால் வெல்லுகின்ற சூட்சமம் கிடைக்கிறது. அந்த சூட்சம ரகசியங்களை பற்றி மேலும் ஆராய்ச்சி செய்வோம்.

    • நாம் அனைவரும் பணம், பதவி, பட்டம் என்று ஓர் எல்லையை வகுத்து இயங்கிக் கொண்டிருக்கிறோம்.
    • மூக்கின் வழியாக உள்ளே இழுக்கப்படும் காற்று மூச்சுக்குழாய்கள் வழியாக நுரையீரலைச் சென்றடைகிறது.

    பல ஆயிரம் கோடி அணுக்கள் உள்ள நம் உடல் ஓர் உயிரணுவில் இருந்துதான் உருவாகிறது என்றால் எவ்வளவு வியப்பாக உள்ளது! ஓர் உயிரணு இரண்டாகப் பிரிந்து பிறகு நான்கு, எட்டு, பதினாறு எனப் பிரிந்து திசுக்கள், உடல் உறுப்புகள், ரத்தக் குழாய்கள், தோல், தசை, கொழுப்பு எனப் பல கூறுகளாகப் பிரிகின்றன. நம் உடலுக்குள் கண்டுபிடிக்கப்பட முடியாத, இன்னும் சரியாக விவரிக்கப்பட முடியாத விந்தைகள் பல உள்ளன.

    நாம் அனைவரும் பணம், பதவி, பட்டம் என்று ஓர் எல்லையை வகுத்து இயங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் உடலின் இயல்புகள் பற்றியோ அல்லது, ஓர் உறுப்பு, செயல்படாமல் போனால் என்ன ஆகும் என்பது பற்றியோ புரிந்துக் கொள்ள முயல்வதில்லை, அதற்கு நாம் நேரம் ஒதுக்குவதுமில்லை.

    "சிறுநீரகத்தின் மதிப்பு", அது பழுது பட்டு, நினைத்த நேரத்தில் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் துயர்ப்படும் நோயாளிகளுக்குத்தான் தெரியும். "இதயத்தின் மதிப்பு" அதனால் இடராகிச் சிறிது தொலைவு நடந்தால் கூட மூச்சு வாங்கும் நோயாளிக்குத்தான் தெரியும், கை கால்கள் நடக்க முடியாமல் தடுமாறும் நோயாளிக்குத்தான் தெரியும் "மூளையின் அருமை".

    எனவே நம் உடல் உறுப்புகளின் மதிப்பை உணர்வதற்காக உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ஆகும் செலவைத் தோராயமாக இங்கே பட்டியலிட்டுள்ளேன்.

    1. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ.10-20 லட்சங்கள்

    2. கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ.25-30 லட்சங்கள்

    3. நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 25-30 லட்சங்கள்

    4. இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 20-25 லட்சங்கள்

    5. கணைய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 15-20 லட்சங்கள்

    6. மூச்சுக்குழாய் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 5 லட்சங்கள்

    7. விழித்திரை மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம்

    8. தோல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 1 லட்சம்


    உடல் உறுப்புகளின் மதிப்பை இப்போது உணர்ந்து விட்டீர்களா? இவ்வளவு லட்சங்கள் நம் கையில் இருந்தால் மட்டும் போதும், இந்த உறுப்புகளை வாங்கிப் பொருத்திக் கொள்ளலாம் என்று மட்டும் எண்ணி விடாதீர்கள். இந்த உறுப்புகள் ஒருவருக்குப் பொருத்தமானதாக இருக்கிறதா? இல்லையா? என்பதைக் கண்டறிவதே கடினம்.

    நாம் பேணிப் பாதுகாக்க வேண்டியவை விலைமதிப்பில்லா நம் உடல் உறுப்புகளையே, பணத்தையல்ல. பணம் தேவைதான்.! பணமே வாழ்க்கை அல்ல. நாம் சம்பாதித்த பணத்தால், உடல் உறுப்புகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள், உடல் உறுப்புகளைப் பேணிப்பாதுகாக்க முயலுங்கள்.

    உடலின் இயல்புகள் பற்றித் தெரிந்து கொண்டால்தான், சிக்கல்கள் ஏற்படும்போது அதை எளிதாகக் கண்டறியலாம்.

    ஆண்களுக்கு இதயத் துடிப்பு, சராசரியாக நிமிடத்திற்கு 70 முதல் 80 முறை இருக்கிறது, அதேபோல் பெண்களுக்கு நிமிடத்திற்கு 72 முதல் 82 முறை துடிக்கிறது. பொதுவாக, ஓய்வு நேரத்தில் குறைந்த அளவும், ஏதேனும் பயிற்சிகள் அல்லது வேலை செய்யும்போது அதிகமாகவும் இதயம் துடிக்கிறது. உடலுக்குத் தேவையான ரத்த ஓட்டத்தைக் கொடுப்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. இதயத்தை எப்படிப் பாதுகாப்பது என்பது பற்றிப் பகுதி 4-ல் பார்ப்போம்.

    மரு.அ.வேணி

    மரு.அ.வேணி

    ஒரு நிமிடத்திற்கு நாம் 12 முதல் 20 முறை மூச்சிழுத்து விடுகிறோம். நாம் செய்யும் வேலைகளுக்கு ஏற்றவாறு இதன் அளவும் வேறுபடுகிறது. மூக்கின் வழியாக உள்ளே இழுக்கப்படும் காற்று மூச்சுக்குழாய்கள் வழியாக நுரையீரலைச் சென்றடைகிறது. மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கவும், வெளியேற்றவும் உதரவிதானம், மார்பக எலும்புகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள தசைகள் உதவுகின்றன.

    குழந்தை, பிறக்கும்போது பொதுவாக 270 எலும்புகளுடன் பிறக்கிறது. பருவத்திற்கு வரும்போது 206 முதல் 213 எலும்புகளாக ஒன்றோடொன்று இணைந்து அவை எண்ணிக்கையில் மட்டும் குறைகின்றன. சிலருக்கு விலா எலும்புகளும், முதுகெலும்புகள் மற்றும் அதன் இலக்கங்களும் மாறுபடுவதே இந்த மாறுபாட்டிற்கான முக்கியக்காரணம்.

    "ரத்தம்" என்பது பிளாஸ்மா மற்றும் ரத்த அணுக்களினால் ஆனது. இதில் பிளாஸ்மா என்பது திரவப்பகுதியைக் குறிக்கிறது. இது நீர், உப்புகள் மற்றும் புரதத்தால் ஆனது. ரத்த அணுக்களில் சிவப்பு ரத்த அணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள் மற்றும் தட்டணுக்கள் ஆகிய மூன்றும் உள்ளன. சிவப்பு ரத்த அணுக்கள் நுரையீரலில் இருந்து திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்கின்றன. வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை உடலுக்கு வழங்கிக் கிருமிகளிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. தட்டணுக்கள், ரத்தம், ரத்தக் குழாய்களில் இருந்து வெளியேறினால் உறையும் தன்மையை ஏற்படுத்தி, ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்துகிறது. ஒவ்வொரு உடலிலும் உள்ள ரத்தம் சிவப்பு நிறத்தில் இருந்தாலும், அதன் வகையில் பல மாற்றங்கள் இருக்கின்றன.

    Rh காரணி என்று அழைக்கப்படும் ஒரு புரதம் ரத்தத்தில் உள்ளதா? (Rh+) இல்லையா? (Rh-) என்பதைப் பொறுத்து, மனித உடலின் ரத்த வகைகளை முதன்மையான எட்டுப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். (A+, A-, B+,B-, O+, O-, AB+, AB-).

    O - Positive - 40 %

    A - Negative - 6 %

    A - Positive - 32 %

    AB - Positive - 4 %

    B - Positive - 11 %

    B - Negative - 2 %

    O - Negative - 7 %

    AB - Negative - 1 %

    A1B+, A1B-, A2B+, A2B-..,Etc.., A1 மற்றும் A2 அரிதான துணைக்குழுக்கள். உலக அளவில் மிகவும் அரிதான வகை ரத்தம் AB நெகடிவ் மற்றும் Rh-null ஆகியவை. இந்த Rh-null ரத்தவகை Rh எதிர்மறையில் இருந்து வேறுபட்டது. ஏனெனில் இதில் Rh ஆன்டிஜென்கள் எதுவும் இருக்காது.

    உடலில் கண்களின் பங்கு...

    மனிதன் இந்த உலகத்தைப் பார்த்து ரசித்து வாழ்கையை வாழ இயற்கை நமக்கு வழங்கிய கொடை கண்கள். இந்தக் கண்களை நம் முன்னோர்கள் மிகவும் பக்குவத்தோடு பாதுகாத்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாம் அந்தக் கண்களை ஒரு பொருட்டாகக்கூட மதிப்பது இல்லை. அதிகப்படியான செல்போன் பயன்பாடு, கணினி பயன்பாடு உள்ளிட்ட பல காரணங்களால் கண்கள் பாதிக்கப்படுகின்றன. அது மட்டுமின்றி முறையற்ற உணவுப் பழக்கத்தால், கண்களுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பது இல்லை. இதனால் இன்று சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண் தொடர்பான நோய்கள், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். இது தொடர்பாக விரிவான தகவல்களை பின்வரும் பகுதிகளில் பார்க்கலாம்.

    மனித உடலை இயற்கை கட்டமைத்து இருப்பதே ஒரு வியக்கத்தக்க விஷயம்தான். உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் அதன் பணியைச் சரியான நேரத்தில் முறையாகச் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? சிந்தித்துப் பாருங்கள். நாம் ஓய்வெடுக்கும் பொழுதும், உடல் அதன் பணியைத் தலையாய கடமை என நினைத்துக் கண்ணியத்துடன் பணியாற்றுகிறது. அந்த உடல் உறுப்புகளுக்கு நாம் கொடுக்க வேண்டிய வெகுமதி அவற்றின் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாப்பதுதான். அது மட்டுமின்றி, உங்கள் குடும்பத்தினருக்கோ அல்லது இந்தச் சமுதாயத்திற்கோ நீங்கள் எதையாவது பரிசாக வழங்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால், உங்கள் ஆரோக்கியத்தைப் பரிசாக வழங்குங்கள். அதுவே சிறந்த வாழ்க்கைக்கு வழிவகை செய்யும்.

    மரு.அ.வேணி (7598001010, 8056401010)

    • சலனமற்ற அவர் நடவடிக்கையை உற்றுக் கவனித்து நான் அவரிடமிருந்து ஞானம் பெற்றேன்!` என்றார் முனிவர்.
    • ஒவ்வொரு நாளும் காலை வேளையில் அழுக்கு மூட்டைகளை முதுகில் சுமந்துகொண்டு எந்தச் சலனமும் இல்லாமல் மெல்ல நடந்து செல்கிறது.

    வாழ்க்கையில் நாம் அடைய வேண்டியது அறிவு அல்ல. ஞானம்.

    புத்தகங்களைப் படித்தோ பலரிடம் பாடம் கேட்டோ தொடர்ந்த முயற்சி மூலம் யார் வேண்டுமானாலும் அறிவை அடைந்துவிடலாம்.

    ஆனால் ஞானத்தை அனுபவம் சார்ந்த முதிர்ச்சி மூலமே ஒருவன் அடைய முடியும்.

    வாழ்வில் பெற வேண்டிய பேறுகளில் எல்லாம் மிகப் பெரிய பேறு ஞானம்தான்.

    ஒருவனுக்கு திடீரென்று ஞானம் என்றால் என்ன என்று ஒரு சந்தேகம் வந்தது.

    அவன் எவ்வளவோ புத்தகங்களைப் படித்திருக்கிறான். பல விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறான்.

    ஆனால் நிறையத் தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பது அறிவுதானே தவிர ஞானம் ஆகாது என்று அவனுக்குப் புரிந்துவிட்டது.

    ஞானம் பற்றித் தெரிந்துகொள்வதற்காகப் பல இடங்களில் தேடி இறுதியாக ஓர் ஆசிரமத்தில் தவம் புரிந்துவந்த ஒரு முனிவரை அணுகினான். அவர் முகத்தில் இருந்த தெய்வீகப் பொலிவு அவர் ஞானம் பெற்றவர் என்பதை அவனுக்கு உணர்த்தியது.

    அவரிடம் `சுவாமி! ஞானம் என்றால் என்ன? எனக்கு நீங்கள் விளக்க முடியுமா?` என்று பணிவுடன் வினவினான்.

    முனிவர் அவனையே அருள்பொங்கப் பார்த்தார். அவனிடம் தென்பட்ட முழுமையான அடக்கம் அவருக்கு நிறைவு தந்தது.

    ஞானம் பற்றி அடக்கம் உடையவர்கள் தானே அறிந்துகொள்ள அதிகாரம் பெற்றவர்கள்? இவன் ஞானம் அடைய உரிமை பெற்றிருக்கிறான் என அவர் கருதினார்.

    அவனைத் தன்னருகே அமரச் சொன்ன அவர், 'அன்பனே! இன்பத்தினால் மகிழ்ச்சி அடையாமலும் துன்பத்தினால் துவண்டு போகாமலும் இருப்பதுதான் ஞானம் எனப்படுகிறது!` என்றார்.

    அவன் திகைப்படைந்தான். சொல்வது சரி, ஆனால் அப்படி ஒருவர் இருக்க முடியுமா என அவனுக்கு சந்தேகம். இன்பத்தில் ஒருவர் ஆனந்தம் கொள்வதும் துன்பத்தில் அவரே சோர்வடைவதும் இயல்புதானே, அந்த உணர்வுகளை எப்படி வெல்வது என அவன் மனம் யோசித்தது.

    `சரி சுவாமி. இத்தகைய ஞானத்தை நீங்கள் எங்கு கற்றீர்கள்? எப்படி அடைந்தீர்கள்?` என வினவினான் அவன்.

    `நான் அதை ஒரு குருவிடம் கற்றேன்!` என்றார் முனிவர்.

    `அந்த குருவிடமிருந்து நானும் அதைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அவர் எந்த மொழியில் பேசுவார்?` என ஆவலோடு கேட்டான் அவன்.

    முனிவர் கலகலவென்று நகைத்தார்.

    `அந்த குரு பேசுவதில்லை. மெளனம்தான் அவர் மொழி. பேச்சால் அவர் தன் உபதேசத்தைச் செய்வதில்லை. தன் செய்கை மூலம்தான் புலப்படுத்துவார். நாம்தான் அதைப் புரிந்துகொண்டு ஞானம் பெற வேண்டும்!` என்றார்.

    `நல்லது சுவாமி! அவர் எங்கிருக்கிறார்? என்ன செய்கிறார்? அவரை நான் எப்போது எங்கே சந்திக்க முடியும்?` என ஆவலோடு அவன் அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பினான்.

    முனிவர் அவன் ஆர்வத்தைக் கண்டு நகைத்தார்.

    `அவர் நாள்தோறும் அதிகாலையில் இந்த வழியாகத்தான் போவார். அதுமட்டுமல்ல, சூரியாஸ்தமன நேரத்தில் மாலையில் இதே வழியாகத்தான் திரும்பி வருவார். சலனமற்ற அவர் நடவடிக்கையை உற்றுக் கவனித்து நான் அவரிடமிருந்து ஞானம் பெற்றேன்!` என்றார் முனிவர்.

    `நான் அவரைப் பார்க்க வேண்டுமே?` என்று பரபரத்தான் அவன்.

    `அன்பனே! நீ இன்றுபோய் நாளை அதிகாலையில் ஆசிரமத்துக்கு வா! நாம் வாயிலிலேயே காத்திருந்தால் அவர் நடந்துசெல்லும்போது அவரைப் பார்த்துவிடலாம். அவர் நடவடிக்கையை என்னைப்போல் நீயும் உற்று கவனித்து ஞானம் பெறலாம்` என்றார் முனிவர்.

    அவன் மறுநாள் வருவதாகச் சொல்லிவிட்டு மகிழ்ச்சியோடு புறப்பட்டான்.

    அன்றிரவு முழுவதும் அவன் சரியாக உறங்கவில்லை. ஞானம் பெற வேண்டும் என்ற வேட்கையே அவன் மனத்தைச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது...

    மறுநாள் காலை ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்த அவனை ஆசிரமத்தின் வாயிலுக்கு அழைத்துச் சென்றார் முனிவர். வரப்போகிற குருவின் வருகையை எதிர்பார்த்து அவர்கள் வழிமேல் விழிவைத்து ஆவலோடு காத்திருந்தார்கள்.

    கொஞ்ச நேரத்தில் அந்த வழியாக, பெரிய பெரிய அழுக்கு மூட்டைகளை முதுகில் சுமந்தபடி ஒரு கழுதை நிதானமாக நடந்து வந்தது. சற்றுத் தொலைவில் அதைப் பின்தொடர்ந்து ஒரு மனிதனும் வந்துகொண்டிருந்தான்.

    அந்தக் கழுதையைச் சுட்டிக்காட்டிய முனிவர் இவரே என் குரு என்று இருகரம் கூப்பிக் கழுதையை வணங்கினார். அவன் திகைத்தான்.

    `இந்தக் கழுதையார் எதுவும் பேசுவதில்லை. ஆனால் தொடர்ந்த தன் செயல்பாட்டால் எனக்கு ஞானத்தைக் கற்பித்தார்!` என்றார் முனிவர்.

    அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. முனிவர் விளக்கலானார்:

    'அன்பனே! நாள்தோறும் அதிகாலையில் இந்தக் கழுதையை நான் பார்ப்பேன். இது ஒவ்வொரு நாளும் காலை வேளையில் அழுக்கு மூட்டைகளை முதுகில் சுமந்துகொண்டு எந்தச் சலனமும் இல்லாமல் மெல்ல நடந்து செல்கிறது.

    கொஞ்ச தூரத்தில் ஒரு நதி இருக்கிறது. அங்கே போய் இந்த அழுக்குத் துணிகளையெல்லாம் கல்லில் அடித்துத் துவைத்துச் சுத்தம் செய்வான் உடன்வரும் மனிதன். பின்னர் அழுக்குப் போன சுத்தமான துணிகளை மூட்டையாகக் கட்டி கழுதையின் முதுகில் ஏற்றுவான்.

    கழுதை சுத்தம் செய்யப்பட்ட துணிகள் அடங்கிய மூட்டையுடன் மாலையில் திரும்பி இந்த வழியாகவே நடந்து வரும். வரும்போதும் போகும்போதிருந்த அதே நிதானம்.

    இப்போது தன் முதுகில் ஏற்றப்பட்டுள்ள துணிகள் சுத்தம் செய்யப்பட்டவை என்ற கர்வமோ மகிழ்ச்சியோ அதன் முகத்தில் ஒருசிறிதும் தென்படுவதில்லை.

    அன்பனே! நாம் இந்தக் கழுதைபோல் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். காலையிலே போகும்போது அழுக்கு மூட்டைகளைச் சுமந்து செல்கிறோம் என்ற வருத்தமும் அதற்கு இல்லை. மாலையில் திரும்பி வரும்போது அழுக்கு நீக்கப்பட்ட சுத்தமான துணிகளைச் சுமந்துவருகிறோம் என்பதில் மகிழ்ச்சியும் அதற்கு இல்லை.

    நாமெல்லாம் கழுதைகள்தான். துன்ப நினைவுகள் என்ற அழுக்கைச் சுமக்கிறோம். இன்ப நினைவுகள் என்ற சுமையையும் சுமக்கிறோம். இந்தக் கழுதையைப் போல் நம் சுமைகள் எப்படி இருந்தாலும் அவற்றால் பாதிக்கப் படாமல் இருப்போமானால் நிம்மதியாக வாழலாம்.

    இன்பத்தாலும் துன்பத்தாலும் பாதிக்கப் படாமலிருக்கும் கழுதையின் மனநிலையை நாம் பயிற்சி மூலம் பெறவேண்டும். அதுவே ஞானம். அதை நீயும் அடைவாயாக!`

    என்றார் முனிவர்.

     

    அந்த மனிதன் அவரைக் கைகூப்பி வணங்கினான். ஞானம் பெற்றுவிட்டால் ஞானியாகி விடலாம். ஞானிகளை இன்ப துன்பங்கள் பாதிப்பதில்லை என்பதை அவன் புரிந்துகொண்டான்...

    திரையரங்கிற்குச் சென்று படம் பார்க்கிறோம். திரைப்படத்தில் ஓர் அருவி வருகிறது. அருவியில் தண்ணீர் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. படம் முடிந்து பார்க்கும்போது படம் காட்டப்பட்ட திரையில் ஒரு சிறிதளவு ஈரம் கூட இல்லை.

    அதேபோல் நெருப்புப் பிடித்து எரிகின்ற காட்சிகள் திரைப்படத்தில் வருகின்றன. ஆனால் அந்தத் திரையை அதில் காட்டப்பட்ட நெருப்பு பாதிப்பதில்லை. திரை அதனால் கருகிப் போவதில்லை.

    படத்தில் வருகின்ற நீருக்கும் நெருப்புக்கும் அந்தத் திரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    நாம் அந்தத் திரை மாதிரி இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நம் மனமே அந்தத் திரை. நம் மனத்தில் தோன்றும் இன்ப துன்ப நினைவுகளே திரையில் தோன்றும் நீரும் நெருப்பும்.

    எப்படி திரையில் தோன்றும் நீராலோ நெருப்பாலோ அந்தத் திரை பாதிப்படைவது இல்லையோ அதுபோல் இன்ப துன்பங்கள் நம் மனத்தை பாதிக்கக் கூடாது.

    அத்தகைய பக்குவம் நமக்கு வந்துவிட்டால் அதுவே ஞானம். அத்தகைய ஞானம் பெற்றுவிட்டால் எந்த இன்பமும் சரி, எந்தத் துன்பமும் சரி, நம்மை ஒன்றும் செய்யாது.

    யார் கற்றுக் கொடுக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. கற்றுக் கொடுப்பவர் அது கழுதையானால் என்ன, திரையரங்கத்தின் காட்சித் திரை ஆனால் என்ன? அவற்றிடமிருந்து எதைக் கற்றுக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்.

    ராமபிரான் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவிக்கும் ஞானிக்குரிய மனநிலையைப் பெற்றிருந்தான். உனக்கு மகுடம் உண்டு என்றபோது அவன் இன்பத்தில் ஆழவில்லை. அந்த மகுடம் உனக்கில்லை, உன் தம்பிக்குத் தான், நீ காட்டுக்குப் போ என்று சொன்னபோது அந்தச் செய்தி அவனை வருத்தவுமில்லை.

    இன்ப துன்பங்களை ஒன்றாக பாவிக்கும் மனநிலையை அவன் பெற்றிருந்ததே அதற்குக் காரணம்.

    ராமபிரானது இந்த அரிய பண்பை இலங்கையில் அசோக மரத்தடியில் வீற்றிருக்கும் சீதை நினைத்துக் கொள்கிறாள்.

    `மெய்த்திருப்பதம் மேவென்ற போதினும்

    இத்திருத்துறந்து ஏகென்ற போதினும்

    சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை

    ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்`

    என்கிறார் கம்பர். ராமனின் முகம் சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரைபோல் இருந்தது என்கிறார்.

    குளத்தில் பூத்த உண்மைத் தாமரைகள் மாலையில் வாடிவிடும். சித்திரத் தாமரைகள் ஒருபோதும் வாடுவதில்லை. ராமன் திருமுகத்தில் துன்பத்தால் வாட்டம் ஒருபோதும் தோன்றுவதில்லை.

    பற்றில்லாமல் எந்தச் செயலையும் செய்யும் ஞான நிலைக்கு நாம் உயர வேண்டுமானால் தெய்வத்தின்மேல் பக்தி கொண்டு தெய்வத்தையே சரணடைந்து வாழவேண்டும் என்கிறது வள்ளுவம்.

    `பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

    பற்றுக பற்று விடற்கு`

    என்கிறார் திருவள்ளுவர்.

    எந்தப் பற்றும் இல்லாத முழுமையான ஞானியான கடவுளின் பாதங்களை மனதளவில் இறுகப் பற்றிக் கொண்டால் நாம் நமது பற்றுகளிலிருந்து எளிதாக விடுபட முடியும்.

    அப்படிப் பயிற்சி செய்தால் இன்பமும் துன்பமும் அற்ற நிம்மதியான மனநிலையை நாம் அடைய முடியும். அதுவே ஞானம். ஞானம் பெறுவதே மனித வாழ்வின் நோக்கம்.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • பாரதத்தின் உயரிய விருதான பாரத் ரத்னா இதுவரை ஐந்து பெண்மணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
    • அறிவில் சிறந்தவர் ஆணா, பெண்ணா? பெண்ணே தான் என்று அடித்துக் கூறினார் பூங்கோதையார்.

    மார்ச் 8-ம் நாள் உலக மகளிர் தினம். 2024-ம் ஆண்டின் கோஷமாக முன்னிலைப்படுத்தப்படுவது : பெண்கள் முன்னேற்றத்தில் முதலீடு செய்யுங்கள்; முன்னேற்றத்தை துரிதப்படுத்துங்கள்.

    உலக ஜனத்தொகை 810 கோடி என்ற எண்ணிக்கையை 2024-ல் எட்டி விட்டது. இதில் மகளிரின் எண்ணிக்கை 49 சதவீதம்.

    பெண்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதாக அனைவரும் கூறி வந்த போதிலும் உலகில் சுமார் 8 சதவீத பெண்கள் அன்றாட உணவிற்கே அல்லல்படும் நிலையில் இருக்கின்றனர். ஆகவே சுருக்கமாகச் சொல்லப் போனால், "போகுமிடம் வெகு தூரம்; போக வேண்டும் நெடு நேரம்" என்பதே பெண்களின் சம உரிமைப் போராட்டத்தின் இன்றைய நிலை.

    பெண்கள் இன்றிருக்கும் நிலையைக் கூடத் தாமாகப் பெறவில்லை. அதற்கென ஆங்காங்கே உரிமைப் போர்கள் நடைபெற்றே வந்தன.

    பெண்கள் போராடிப் பெற்ற ஓட்டுரிமை: பெண்கள் சாதாரணமாகப் பெறவில்லை ஓட்டுரிமையை! மிகுந்த போராட்டம் அதற்காகவே பிரிட்டனில் வெடித்தது. பெண்கள் ஓட்டுரிமை வேண்டும் என்று கேட்டபோது "பைத்தியக்காரத்தனமான, சூழ்ச்சி நிறைந்த முட்டாள் பெண்கள் கேட்கும் உரிமை இது" என்று கூறிய விக்டோரியா மகாராணியார் ஒரு பெண்ணிற்கு சாட்டையால் அடித்து தண்டனை தர ஆணையிட்டார்.

    ஆனால் பெண்கள் அசரவில்லை. 1901-ம் ஆண்டு ஏழாம் எட்வர்ட் பட்டம் சூட்டியபோது எமிலின் பங்கர்ஸ்ட் என்ற பெண்மணியின் தலைமையில் கூட்டம் கூட்டமாகப் பெண்களின் அணி திரண்டது. ஆண்கள் கூட்டம் போடும் இடங்களிலெல்லாம் அவர்கள் திடீரென வந்து குதித்தனர். மேடை மீது ஏறி மெகா போன் வாயிலாக எங்களுக்கும் ஓட்டுரிமை வேண்டும் என்று கோஷமிட்டனர். உண்ணாவிரதம் இருந்தனர். சிறைக்கும் சென்றனர்.

    இந்தியாவில் வைசிராயாக இருந்த லார்ட் கர்ஸான் பெண்கள் தாழ்ந்தவர்கள் என்பதற்காக பதினைந்து காரணங்களைப் பட்டியலிட்டார். ராயல் கமிஷனோ 'ஒரு பெண்ணின் மூளை எதையும் சமாளித்து ஈடு கொடுக்க வல்லதா" என்று ஆராய முற்பட்டது. ஆனால் பெண்கள் அயர்ந்து போகவில்லை. முதலாம் உலக மகாயுத்தம் 1914-ல் ஆரம்பிக்கவே ஆண்கள் போர்க்களம் செல்லவே, அனைத்து வேலைகளையும் பெண்கள் மேற்கொண்டு தங்கள் திறனைக் காண்பித்தனர். டிராம் விடுவது, கார்களை ஓட்டுவது, மெகானிக்குகளாக அனைத்து வாகனங்களையும் பழுதுபார்ப்பது உள்ளிட்ட வேலைகளை அவர்கள் செய்து காட்டவே உலகமே பிரமித்தது. 1918-ல் யுத்தம் முடிந்தது. பிரதம மந்திரி ஜார்ஜ் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கினார். போராட்டம் உலகெங்கும் வலுக்கவே இன்னும் 28 நாடுகள் பெண்களுக்கு உரிமையை வழங்கின. 1952-ல் களமிறங்கிய ஐ.நா. உலகெங்கும் ஆண்களுக்கும் இருக்கும் அனைத்து உரிமைகளையும் பெண்களுக்குக் கொடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

    முன்னோடிகள்: பெண்களின் உரிமைக்காகப் போராடிய ஏராளமான அதிசயப் பெண்மணிகள் உள்ளனர். எடுத்துக்காட்டிற்கு எலினார் ரூஸ்வெல்டைச் சொல்லலாம். அமெரிக்க ஜனாதிபதியாக நான்கு முறை பதவி வகித்து சாதனை புரிந்த பிராங்ளின் ரூஸ்வெல்டின் மனைவியான இவர், அவரது வெற்றிக்குக் காரணமாகத் திகழ்ந்தவர்.

    அத்தோடு வெள்ளை மாளிகையில் குடியேறியவுடன் அவர் அடிக்கடி நிருபர்களைச் சந்திக்கப் போகிறேன் என்றார். அனைவரும் மகிழ்ந்த அந்த வேளையில் அற்புதமான அடுத்த வரியை அவர் கூறினார்: "ஆனால் அவர்கள் எல்லோரும் பெண்களாகவே இருக்க வேண்டும்!"

    அனைவரும் பிரமித்தனர். எல்லா பத்திரிகைகளும் போட்டி போட்டுக்கொண்டு பெண் நிருபர்களை வேலைக்கு அமர்த்தின. பத்திரிகை உலகம் புதிய அழகைப் பெற்றது. செய்திகளின் தரமும் கூடியது.

    அதே போல உலக அரங்கில் பெண்களின் தாக்கம் அதிகமானது. இதுவரை அறிவிக்கப்பட்ட 864 நோபல் பரிசுகளில் 64 பரிசுகளை பெண்மணிகள் இலக்கியம், மருத்துவம், அமைதி, ரசாயனம், இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் பெற்றுள்ளனர்.

    பாரத ரத்னா: பாரதத்தின் உயரிய விருதான பாரத் ரத்னா இதுவரை ஐந்து பெண்மணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி, மதர் தெரசா, அருணா ஆசப் அலி, இசையரசி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, லதா மங்கேஷ்கர் ஆகியோர் இந்த உயரிய விருதைப் பெற்றுள்ளனர்.

    விண்வெளி வீராங்கனைகள்: 1963-ல் முதல்முறையாக வாலெண்டினா தெரஷ்கோவா என்ற ரஷிய பெண்மணி தனது 26-ம் வயதிலேயே விண்ணில் பறந்து சாதனை நிகழ்த்திக் காட்டினார். தொடர்ந்து விண்வெளிக்குச் சென்ற சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட விண்வெளிப் பயணிகளில் வீராங்கனைகள் ஏராளமானோரும் இந்தச் சாதனையில் ஈடுபட்டனர். ஸ்வெட்லேனா சாவிட்ஸ்கி, சாலி ரைட், கிறிஸ்டா மக்லிப், மே ஜெமிசன், ஐலீன் காலின்ஸ், இந்திய வீராங்கனையான கல்பனா சாவ்லா, பெக்கி விட்சன், கிறிஸ்டினா கோச், ரெசிகா மெய்ர், கேட் ரூபின்ஸ் செய்த சாத னைகள் வியப்பூட்டுபவை; பிரமிக்க வைப்பவை.

    உத்வேகமூட்டும் பெண்மணிகள்:

    உலகளாவிய விதத்தில் உத்வேகமூட்டும் பெண்மணிகள் பட்டியலைத் தயாரிக்கும் பத்திரிகைகளும், சர்வே நிபுணர்களும் தரும் தகவல்கள் சுமார் பத்தாயிரம் பேரைச் சுட்டிக் காட்டுகின்றன. அரசியலில் நியூசிலாந்து பிரதம மந்திரி, ஜேசிந்தா ஆர்டன், அமெரிக்காவின் கமலா ஹாரிஸ் மற்றும் ஹில்லாரி க்ளிண்டன், இந்தியாவின் நிர்மலா சீதாராமன், அழகிகள் மற்றும் திரைப்படத் துறையில் ஐஸ்வர்யா ராய், சீன நடிகை யாங் மி, ப்ரியங்கா சோபிரா, பாடகிகளில் டெய்லர் ஸ்விப்ட் உள்ளிட்டோர் முன்னணியில் இடம் பெறுகின்றனர்.

    இன்போசிஸ் பவுண்டேஷனை நிறுவிய சுதா மூர்த்தி சிறந்த எழுத்தாளர். சேவை மனப்பான்மை கொண்டவர். கோவிட் காலத்தில் அவர் ஆற்றிய சேவையை அனைவரும் பாராட்டினர். உலகத்தில் மீடியா துறையில் ஒரு கலக்கு கலக்கி முன்னணியில் நிற்பவர் ஓபிரா வின்பிரே. சிறு வயதில் பல கொடுமைகளுக்கு ஆளாகி சுயமாக முன்னுக்கு வந்த இவர் பெண்களுக்காக குரல் கொடுப்பது நியாயமானதே.

    நீண்ட இந்த பட்டியலில் அன்றாடம் சேரத் துடிக்கும் பெண்மணிகளால், இது ஆயிரம் ஆயிரமாகப் பெருகும் என்பதில் ஐயமில்லை. விளையாட்டுத் துறையிலும் அறிவியலிலும் சாதனை படைக்கத் துடிக்கும் பெண்மணிகள் எங்களுக்கு இங்கு சில இடைஞ்சல்கள் இருக்கின்றன என்று சொல்வது கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சம்!

    பிரபலம் வேண்டாம்; சாதனையே முக்கியம்!

    எங்களுக்குப் பெயர் வேண்டாம், புகழ் வேண்டாம், காசு பணம் வேண்டாம் என்று சொல்லும் அபூர்வப் பெண்மணிகளும் இல்லாமல் இல்லை. எடுத்துக்காட்டிற்கு திம்மக்காவைக் கூறலாம். இவருக்கு இப்போது வயது 112. கர்நாடகத்தில் பழைய மைசூர் ராஜ்யத்தில் குப்பி தாலுக்காவில் (இப்போது தும்கூர்) 1911, ஜூலை 8-ம் நாள் பிறந்த இவர் ஏராளமான மரக்கன்றுகளை சிறு வயதிலிருந்தே நட்டு வந்திருக்கிறார். இவர் நட்டு வைத்த ஆலமரங்கள் மட்டும் 400. பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.

    இதிகாசத்திலும் இலக்கியத்திலும் பெண்கள்:

    ராமாயண மகாபாரத இதிகாசங்களில் வரும் அறிவுசால் பெண்மணிகளைப் பற்றி எழுதப் புகுந்தால் ஒரு கலைக்களஞ்சியமே உருவாகும்.

    திரவுபதி, தமயந்தி, சாவித்திரி. இப்படி அறத்தின் அடிப்படையிலான நூற்றுக்கணக்கான பெண்மணிகளை நமது இதிகாசங்களும் இலக்கியமும் சுட்டிக் காட்டுகின்றன. தமிழ் இலக்கியத்தை மட்டும் எடுத்துக் கொண்டோமானால் சங்க இலக்கியத்தில் நாம் காணும் பெண் புலவர்கள் ஏராளமானோர்.

    அஞ்சில் ஆந்தைமகள் நாகையார், அள்ளூர் நன்முல்லையார், ஒக்கூர் மாசாத்தியார், அவ்வையார், கழார்க் கீரனெயிற்றியார், குமிழிஞாழார் நப்பச லையார், நக்கண்ணையார், போந்தைப் பசலையார், மதுரை நல்வெள்ளியார், முள்ளியூர்ப் பூதியார், வெள்ளிவீதியார் என்று இந்தப் பட்டியல் நீளும். அவ்வையாரைப் போல இன்னொரு பெண் புலவர் இலக்கிய உலகில் உண்டா, என்ன?

    பெண்களுக்கு இன்று இருக்கும் பிரச்சனைகள்:

    "ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே" என்று மகாகவி பாரதியாரின் முழக்கம் முழங்கி நூறு ஆண்டுகள் கடந்து விட்டன. என்றாலும் நம் நாட்டைப் பொறுத்தவரையில்அரசியலுக்குத் தேவையான அளவு தலைமைப் பண்புள்ள பெண்மணிகள் இன்னும் தேவை. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள, கல்வியறிவில்லாப் பெண்மணிகள் ஏற்றம் பெற உரிய நடவடிக்கை தேவை.

    பாலியல் கொடுமைகளும், இல்லத்தில் ஏற்படும் வன்கொடுமைகளும் முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். நீதித்துறை, விளையாட்டு, அறிவியல், கல்வி, விண்வெளி, பாதுகாப்பு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பெண்களுக்கு இருக்கும் தடைகள் இனம் காணப்பட்டு அகற்றப்பட வேண்டும்.

    ஆணுக்கு அறிவு அதிகமா பெண்ணுக்கு அதிகமா?

    பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

    பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

    எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்

    இளைப்பில்லை காண் என்ற கும்மியடி என்று மகாகவி பாரதியார் கூற்றை மெய்ப்பிக்கும் சம்பவத்தை சுட்டிக் காட்டுகிறது கொங்கு மண்டல சதகத்தில் உள்ள பாடல் எண் 65.

    தக்கையிசை ராமாயணம் என்ற நூலை இயற்றிய சிறந்த கவிஞரான எம்பிரான் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சங்ககிரியில் வாழ்ந்து வந்தார்.

    ஒரு நாள் கவிஞர் வெளியில் சென்றிருந்தபோது அவருடன் அளவளாவி மகிழ சில வித்துவான்கள் அவர் வீட்டிற்கு வந்தனர்.

    அறிவில் சிறந்த அவரது மனைவி பூங்கோதையார் அவர்களை வரவேற்று உபசரித்து கவிராயர் வெளியில் சென்றிருப்பதையும் சற்று நேரத்தில் வந்து விடுவார் என்பதையும் கூறினார். திண்ணையில் அமர்ந்த வித்துவான்கள் தங்களுக்குள் பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

    அவர்களுள் ஒருவர் எவ்வளவு தான் கற்றாலும் ஆணுக்கு முன்னால் பெண்ணின் அறிவு குறைவு தான் என்ற தன் கருத்தை முன் வைத்தார். அதை அனைவரும் சந்தோஷமாக ஆதரித்து பெண்களை இழித்துச் பேச ஆரம்பித்தனர். வீட்டின் உள்ளேயிருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த பூங்கோதையாரால் ஒரு அளவுக்கு மேல் பொறுக்க முடியவில்லை.

    ஒரு சிறிய துண்டுச் சீட்டில் ஒரு பாடலை எழுதி ஒரு சிறுமி மூலம் புலவர்களிடம் அனுப்பினார். அந்தப் பாடல்:

    அறிவில் இளைஞரே ஆண்மக்கள்; மாதர்

    அறிவில் முதிஞரே ஆவர் – அறிகரியோ

    தான் கொண்ட சூல் அறிவர் தத்தையர்; ஆண்மக்கள்

    தான் கொண்ட சூல் அறியார் தான்

    இதைப் படித்துப் பார்த்த புலவர்கள் திகைத்துப் போனார்கள். அந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த கவிராயர் திரும்பி வந்தார். நடந்ததை அறிந்து கொண்ட கவிராயர் தன் மனைவியிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்டார். ஆண்மக்களை இழித்துக் கூறலாமா என்ற அவர் கேள்விக்கு அம்மையார், "நான் இழித்துக் கூறவில்லையே ஆண், பெண் இருவரும் அறிவைக் கொண்டிருந்தாலும் அறிவில் சிறந்தவர்கள் பெண் மக்களே என்றல்லவா கூறி இருக்கிறேன்.

    ஆன்மாவானது நீர்த்துளி வழியே பூமியில் சேர்ந்து உணவு வழியாக புருஷ கர்ப்பத்தில் தங்கி பின்னர் பெண்ணின் கருப்பையை அடைந்து கர்ப்பமுற்று சிசு பிறக்கிறது. ஆகவே தங்கள் கர்ப்பத்தைத் தெரிந்து கொள்ளாத ஆண்களை விட அதை அறிந்திருக்கும் பெண்களே அறிவில் சிறந்தவர்கள் என்கிறேன்" என்றார்.

    மேல் உலகம் சென்ற ஒரு உயிரானது, பூமிக்குத் திரும்பும்போது முறையே துறக்கம், மேக மண்டலம், நிலம், தந்தை, தாய் ஆகிய ஐந்து இடத்துப் புகுந்து வருவதை தியானித்தலே பஞ்சாக்கினி வித்தை என்று அறநூல்கள் கூறுகின்றன.

    சொர்க்கம் சென்ற ஆன்மா, மேகத்தை அடைந்து மழைத்துளி மூலம் நிலத்தை அடைந்து உணவுப் பொருளாய் புருஷ தேகத்தை அடைந்து பின்னர் இந்திரிய மயமாக பெண்ணின் கருப்பையை அடைந்து சிசுவாகப் பிறக்கிறது. புருஷ கர்ப்பத்தில் இரண்டு மாதம் தங்கி இருப்பதை ஆண்கள் அறிவதில்லை. ஆனால் கருவுற்ற உடனேயே பெண் மக்கள் அதை அறிந்து போற்றிப் பாதுகாத்து குழந்தையைப் பிரசவிக்கின்றனர்.

    அறிவில் சிறந்தவர் ஆணா, பெண்ணா? பெண்ணே தான் என்று அடித்துக் கூறினார் பூங்கோதையார்.

    விக்கித்துப் போன புலவர்கள் அதை ஒப்புக் கொண்டனர்.

    விஷயம் கொங்கு மண்டலம் வழியே தமிழகமெங்கும் பரவியது. அனைவரும் பூங்கோதையாரைப் பாராட்டி மகிழ்ந்தனர். தாய்க்குலத்தின் மகிழ்ச்சியைச் சொல்லவும் வேண்டுமோ!

    சிக்கலான கேள்விக்கு சரியான பதிலை அளித்த அறிவில் சிறந்த பெண்மணியான பூங்கோதையைப் பெற்ற மணியான பூமி கொங்கு மண்டலமே என்று கொங்கு மண்டல சதகத்தில் கார்மேகக் கவிஞர் பாடியுள்ளார்.

    குறுமுனி நேர் தமிழ் ஆழி உண் வாணர் குழாம் வியப்ப

    அறிவில் இளைஞரே ஆண் மக்கள் என்ன அறுதியிட்ட

    சிறிய விடைச்சி எம்பெருமான் மனைவி சிறந்து வளர்

    மறுவறு சங்ககிரி சேர்வது கொங்கு மண்டலமே

    பொருள்:

    தமிழ்க் கடலை உண்ட அகத்திய முனி போன்ற பல புலவர்கள் வியக்குமாறு, அறிவில் இளைஞர் ஆண் மக்களே என்று முடிவு கூறிய எம்பெருமான் கவிராயரது மனையாட்டியார் வாழும் சங்க கிரியும் கொங்கு மண்டலமே!

    தமிழ் மங்கையர் பொறுப்பு:

    இப்படி உலகிற்கே அரிய உண்மையை உணர்த்திய பெருமை தமிழ் மங்கையையே சாரும். பெண்களின் சம உரிமையை நிலை நாட்டி உலகெங்கும் அவர்களை மேல்நிலைக்குக் கொண்டு செல்ல தமிழ் மங்கையரை விட தகுதி வேறு யாருக்கு உண்டு. உலக மகளிர் தினத்தில் சிந்திப்போம். செய்வார்களா?


    தொடர்புக்கு:-

    snagarajans@yahoo.com

    • நான் என்கிற அகந்தையை அழித்து தானே பிரம்மமாய் உணர்வது ஞான வழியாகும்.
    • விரதம் இருந்து முதல் கால பூஜை வழிபட்டால் முற்பிறவி கர்மாக்கள் விடுபட்டு நற்பலன்கள் கிடைக்கும்.

    மனித மனம் மண், பொன், பெண் இந்த 3 வசைகளையும் சுற்றியே அலைப்பாய்ந்து வருகிறது. மனித வாழ்வுக்கும் அஸ்திவாரமாக இந்த மூன்று ஆசைகளே விளங்குகிறது. ஒவ்வொருவரின் மனமும் செல்வத்தின் அந்தஸ்த்தில் புகழில் மற்றவர்களைக் காட்டிலும் தான் சிறந்து விளங்க வேண்டும் என்று போராடுகிறது. பிறக்கும்போதே ஒருவன் செல்வ செழிப்பான பெற்றோருக்கு பிறப்பதும், ஏழ்மையில் வாடும் பெற்றோருக்கு பிறப்பதும் அவரவர்களின் ஊழ்வினையே. முன் ஜென்ம ஊழ்வினையை அறுக்க ஒவ்வொரு மனிதனும் பல வழிகளையும் தேடி அலைகிறார்கள். ஊழ்வினையில் இருந்து மீண்டு இறைவனை அடைய நம் முன்னோர்கள் பல்வேறு வழிகளை போதித்துள்ளார்கள். கர்மவினை தீர்ந்து பிறவா நிலையை அடைய இந்து மதத்தில் நான்கு வித உபயங்கள் கூறப்பட்டுள்ளன.

    சரியை:

    நமது இல்லத்தில் இறைவனை ஆத்மார்த்தமாய் வழிபடுவதுடன் கோவில்களுக்கு சென்று இறைவனை துதித்து பாடுவது, மலர் மாலை தொடுப்பது, சந்தனம் அரைத்துக் கொடுப்பது போன்ற இறைப்பணிக்கு உதவுதல், திருக்கோவிலில் மெழுகிடுதல், சுத்தம் செய்வது போன்ற உழவாரப்பணிகள் செய்து வணங்குதல் யாவும் சரிகை வழியாகும். இதன் மூலம் பெறும் முக்தி சாலோக முத்தி எனப்படும்.

    கிரியை

    சிவச்சின்னங்களை அணிந்து சிவனடியாராக இறைச்சேவை செய்வது ஒன்றையே வாழ்வின் நோக்கமாய் கொண்டு வாழ்வதே கிரியை வழியாகும். இந்த வகையில் கிடைக்கும் முக்தி நிலை சாமீப முக்தி எனப்படும்.

    யோகம்

    தகுதியான குருவை பணிந்து யோக முறைகளை கற்று, தொடர் பயிற்சியின் மூலம் உடல், மனம் ஆகியவற்றை தூய்மையாக்கி இறைவனை வழிபாடு செய்து முக்தி பெறுவதே யோக வழியாகும். இத்தகைய முக்தி நிலை சாரூப முக்தி எனப்படும்.

    ஞானம்

    நான் என்கிற அகந்தையை அழித்து தானே பிரம்மமாய் உணர்வது ஞான வழியாகும். இந்த வகையில் பெறும் முக்தி நிலை சாயுச்ய முக்தி எனப்படும்.

    விரதம்

    மேலே கூறிய நான்கு நிலை தவிர்த்து இறையருளைப் பெற சாஸ்திரங்களில் கூறப்பட்ட மற்றொரு உபயம் விரதம். விரதம் என்பது ஒரு விசேஷ நாளில் விருப்பமான தெய்வத்தை நினைத்து குறிப்பிட்ட வேண்டுதலுக்காக ஐம்புலனை அடக்கி, உண்ணாமல் இருக்கும் நிலை ஆகும். விரதம் இருப்பதால் ஆன்மா, மனம், புத்தி, உடல் முதலியவை தூய்மை அடையும். உடலும் உள்ளமும் சுத்தமடையும்போது நினைத்த காரியம் வெற்றியடையும். இந்த மதத்தில் கர்மவினை தீர்ந்து காரிய சித்தி தரும் கடவுளாக கருதப்படுவது சிவ பெருமான். சிவ பெருமான் தன்னை வழிபடுபவர்களின் நியாயமான கோரிக்கைகளை வழங்குவதில் வள்ளல். சிவபெருமானை வழிபட்டு வேண்டிய வரத்தை பெற கூறப்பட்ட பல்வேறு விரதங்களில் சிறப்புப் பெற்றது மகா சிவராத்திரி விரதம்.

    கடும்குளிர் காலம் முடிந்து வசந்த காலம் தொடங்குவதை குறிக்கும் காலம் தான் மாசி மாதமாகும். இந்த மாதத்தில் மாசி மகம், மகா சிவராத்திரி, காரடையான் நோன்பு, ஹோலிப் பண்டிகை போன்ற சிறப்பு மிக்க வழிபாடுகள் கொண்டாடப்படுவதால் ஆன்மீகச் சிறப்பு மிக்க மாதமாகிறது. மாசி மாதம் என்றாலே சிவ, சக்தி வழிபாட்டிற்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் சிவ பெருமானை நினைத்து வழிபடும் சிவராத்திரியும் அம்பிகை வழிபாடும் காரடையான் நோன்பும் இந்துக்களிடம் பிரசித்தி பெற்றது.

    ஸ்வஸ்தி ஸ்ரீ சோபகிருது வருடம் மாசி மாதம் 25-ம் நாள் வெள்ளிக்கிழமை, (8.3.2024) பிறவிப் பிணி தீர்க்கும் மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. பகலில் திரயோதசியும் இரவில் சதுர்த்தசி திதியும் கூடும் சிவராத்திரியானது மிக விசேஷமானதாகும்.

    சிவராத்திரியின் மகத்துவத்தையும் அதனால் ஏற்படப்போகும் நன்மைகளையும் காணலாம். ஒருவர் தன் வாழ்நாளில் மிகுதியான சிரமத்தை அனுபவிப்பதற்கு ஜாதகத்தில் உள்ள தோஷங்களே காரணம். ஒருவரின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை அழிக்கும் வல்லமை பெற்றவர் சிவபெருமான். தன்னை வணங்குபவர்களின் மனதில் இருக்கும் கெட்ட எண்ணக் கழிவுகளான காமம், கோபம், குரோதம், பேராசை, பொறாமை போன்ற கெட்ட கர்ம வினைக் கழிவுகளை அழிப்பவர்.

    அவரை வழிபடுபவர்களின் வாழ்வில் நிலவும் மனக்கவலைகள், வறுமைநிலை, நோய்கள் போன்றவற்றை அறவே அழிப்பவர். ஒருவன் தனது மூன்று பிறவியில் செய்த பாவங்களையும் அழிப்பவர் சிவபெருமான். சிவன் என்ற சொல்லுக்கு மங்கலம், இன்பம் என்று பொருள். ஒருவன் தன் வாழ்வில் வினைப்பயனை அழிக்க எட்டு விதமான சிவ வழிபாட்டு முறைகளை கடைபிடிக்கலாம் என சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அவற்றில் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்ததி திதியன்று வரும் மகா சிவராத்திரி விரதமாகும். சிவராத்திரி என்றால் ஒளிமயமான இரவு இன்பம் தருகின்ற இரவு என்று அழைக்கப்படுகிறது.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

    "பிரசன்ன ஜோதிடர்" ஐ.ஆனந்தி

     

    சிவராத்திரி விரதம் இருக்கும் முறைகள்

    8.3.2024 அன்று வெள்ளிக்கிழமை மாசி 25 அன்று அதிகாலை குளிர்ந்த நீரில் குளித்து நெற்றியில் திருநீறு பூசி சாமி படம் முன் விளக்கேற்றி சிவராத்திரி விரதத்தை தொடங்க வேண்டும்.

    சிவராத்திரி விரதத்தை முதல் நாளே தொடங்கிவிட வேண்டும். விரதமிருப்போர் வியாழக்கிழமை ஒருவேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும். சிவராத்திரி நாளில் சமைத்த உணவு உண்ணாமல் சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும். தண்ணீர் மட்டும் அருந்தலாம். வெள்ளிக்கிழமை பகல் மற்றும் இரவு முழுவதும் எதுவும் சாப்பிடக்கூடாது. வயதானவர்கள், நோயாளிகள் சமைக்காத உணவுகளான பழங்கள், அவல் சாப்பிடலாம். மகா சிவராத்திரி அன்று முழுவதும் மவுன விரதம் இருந்து பேசாமல் பஞ்சாட்சரம் அல்லது "ஓம் நமசிவாய" மந்திரம் சொல்வதால் புண்ணிய பலன் மிகுதியாகும்.

    வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை சிவன் கோவிலில்களில் நடைபெறும் 4 கால அபிஷேக பூஜைகளில் கலந்துகொண்டு சிவனை வழிபட வேண்டும். மறுநாள் சனிக்கிழமை காலையில் நீராடி பகல் முழுவதும் உறங்காமல் இருந்து விரதத்தை முடித்தால் சகல வினைகளும் நெருப்பில் விழுந்த தூசி போல் உடனே சாம்பலாகும்.

    மகா சிவராத்திரி பூஜைகள்

    முதல் ஜாமம்

    பிரம்மா சிவனை பூஜிக்கும் காலம் இரவு 7.30 மணிக்கு. முதல் ஜாமத்தில் பிரம்மதேவன், சிவனை பூஜிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் சிவபெருமானை ரிக்வேத பாராயணம் செய்து வழிபட வேண்டும்.

    பஞ்சகவ்யம் அபிஷேகம்.

    மஞ்சள் நிற வஸ்த்திரம்.

    தாமரை மலர் சாற்றல்.

    பாசிப்பருப்பு பொங்கல் நிவேதனம்.

    நெய் தீபம்.

    ரிக்வேத பாராயணம்.

    விரதம் இருந்து முதல் கால பூஜை வழிபட்டால் முற்பிறவி கர்மாக்கள் விடுபட்டு நற்பலன்கள் கிடைக்கும். ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். வேதங்களில் சிறந்து விளங்குவார்கள். ஜனன ஜாதகத்தில் உள்ள கடுமையான விதிப்பயன்கள், ஜாதக ரீதியான தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பிறவா நிலையை அடைய முடியும்.

    இரண்டாம் ஜாமம்

    மகாவிஷ்ணு சிவனை பூஜிக்கும் காலம் இரவு 10.30 மணிக்கு.

    பஞ்சாமிர்தம் அபிஷேகம்.

    வெண்மை நிற வஸ்த்திரம்.

    வில்வ மாலை சாற்றல்.

    இனிப்பு பாயாசம் நிவேதனம்.

    நல்லெண்ணெய் தீபம்.

    யசூர் வேதம் பாராயணம்.

    இந்த இரண்டாம் ஜாம வேளையில், யசூர் வேத பாராயணம் செய்து சிவனை வழிபடுவதால் தன தான்ய சம்பத்துக்கள் கிடைக்கும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனியின் தாக்கம் குறையும். நவகிரக தோஷம் விலகும்.கண் திருஷ்டி செய்வினை தோஷம் அகலும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் அனுகூலம் ஏற்படும். வறுமை, கடன் தொல்லை, சந்திர தோஷம் நீங்கும். சந்திர தசை, சந்திர புத்தி நடப்பவர்களுக்கு மன உளைச்சல் குறையும். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு, இரண்டாம் ஜாம பூஜையின் அபிஷேக நீரை பருக கொடுத்தால் சித்த சுத்தி உண்டாகும் என்பது நம்பிக்கை.

    மூன்றாம் ஜாமம்

    சக்தியின் வடிவமாக அம்பாள் சிவனை பூஜிக்கும் காலம் நள்ளிரவு 12 மணிக்கு

    தேன் அபிஷேகம்.

    சிவப்பு வஸ்த்திரம்.

    ஜாதி மல்லிகை பூ சாற்றல்.

    எள் அன்னம் நிவேதனம்.

    இலுப்பை எண்ணெய் தீபம்.

    சாம வேதம் பாராயணம்.

    விரதம் இருந்து மூன்றாம் கால பூஜையை சக்தியின் வடிவான அம்பாள் செய்வதாக ஐதீகம். விரதமிருந்து தரிசித்தால் எந்த வித தீய சக்தியும் அண்டாமல் அம்பாள் அருள் கிடைக்கும். மகா சிவராத்திரியின் உச்சகட்ட வழிபாட்டு நேரம் இது. இதனை 'லிங்கோத்பவ காலம்' என்றும் கூறுவர். இரவு 11.30 மணி முதல் 1 மணி வரையான இந்த நேரத்தில் தான், அடிமுடியாக நின்ற ஈசன், மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் லிங்க ரூபமாக காட்சி யளித்தார். மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் லிங்கோத்பவ காலத்தில் இறைவனுக்கு நெய் பூசி, வெந்நீரால் அபிஷேகம் செய்து, கம்பளி ஆடை அணிவித்து, மலர்களினால் அலங்கரிக்க வேண்டும். அதோடு சாமவேத பாராயணம் மற்றும் சிவ சகஸ்ர நாமம் உச்சரிக்க வேண்டும். இதனால் சகல பாவங்களும் நீங்குவதோடு, ஆண், பெண் ஜாதகத்தில் உள்ள திருமணத் தடை நீங்கும். கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்த தம்பதிகள் இணைந்து வாழ்வார்கள். பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கும். எந்த தீய சக்தியும் அண்டாது சிவ சக்தியின் அருள் அனைவரையும் காக்கும்.

    நான்காம் ஜாமம்

    நான்காம் காலம் அதிகாலை 4.30 மணிக்கு. முப்பத்து முக்கோடி தேவர்கள் முனிவர்கள் ரிஷிகள் மனி தர்கள் மற்றும் அனைத்து ஜீவராசிகள் சிவனை பூஜிக்கும் காலம். கரும்பு சாறு மற்றும் பால் அபிஷேகம்.

    பச்சை கலர் வஸ்த்திரம்.

    நந்தியாவட்டை மலர் சாற்றல்.

    சுத்தான்னம் நிவேதனம்.

    அதர்வண வேதம் பாராயணம்.

    முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்களும், மனிதர்களும், அனைத்து ஜீவராசிகளும் நான்காவது காலத்தில் சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். விரதம் இருந்து நான்காம் காலம் தரிசித்தால் அனைத்து செல்வமும் கிட்டும் வாழ்வில் மகிழ்ச்சியும் உண்டாகும். பொழுது புலரும் அதிகாலை வேளையில், அதர்வண வேத பாராயணம் செய்து சிவனை வழிபட வேண்டும். இதனால் நம் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். இல்லறம் நல்லறமாகும். பட்டங்களும், பதக்கங்களும், பதவியும் தேடி வரும். உடல் கஷ்டம், மனக்கவலை, பஞ்சம், துக்கம், அவமானத்தில் ஆழ்த்தும் கெட்ட கீர்த்தி நீங்கும். இடி, மின்னல் போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் ஆபத்துகளையும் கிரக மாற்றங்களால் ஏற்படும் கவலை, நோய், இழப்புகள் எல்லாம் நீங்கி உலகம் அமைதிப் பூங்காவாகும்.

    மகா சிவராத்திரி

    சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து சுவாமி தரிசனம் செய்ய முடியாவிட்டால் கூட, லிங்கோற்பவ காலமாகிய இரவு 11.30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலத்திலாவது சிவதரிசனம் செய்து வழிபட வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் தான் சிவன் ஜோதிலிங்கமாக தோன்றிய நேரமாக கருதப்படுகிறது. வயதானவர்கள், குழந்தைகள், கோவிலுக்கு செல்ல முடியாமல் உடல் நலக்குறைவோடு இருப்பவர்கள் சிவபுராணம், வில்வாஷ்டகம் படித்து வில்வத்தால் சிவபூஜை செய்தால் அந்த நிமிடமே அவர்களுடைய அனைத்து பாவங்களும் நீங்கும். அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும். பஞ்ச மகா பாதகங்கள் அகலும்.

    சர்ப்ப தோஷத்திற்கு தீர்வு தரும் மகா சிவராத்திரி வழிபாடு

    ஆதிசேஷன் பூலோகத்தை தன் தலையில் சுமந்து தன் பலம் அனைத்தையும் இழந்து தவித்தபோது, ஒரு சிவராத்திரியில் முதல் ஜாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமியையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரம் பாம்புரநாதரையும், நான்காம் ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் தரிசித்தார். அப்போது சிவபெருமான் பூமி முழுவதையும் தாங்கும்படியான வலிமையை வழங்கினார். எனவே சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களிலும் வழிபாடு செய்தால் ஜனன கால ஜாதகத்தில் 1, 2, 3, 5,7, 8, 9 ஆகிய இடங்களில் ராகு/கேதுக்கள் நிற்பது கால சர்ப்ப தோஷம், அதிக கிரகங்கள் ராகு/கேது சாரம் போன்ற காரணத்தால் திருமணத்ததடை, குழந்தை பாக்கிய மின்மையால் பாதிப்படைந்தவர்களுக்கு சர்ப்ப தோஷம் நீங்கும். செவ்வாய் தோஷ பாதிப்பு குறையும்.

    மகா சிவராத்திரி விரதத்தால் கிடைக்கும் நற்பலன்கள்

    மகா சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுடன் சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்து வந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும். உணவு உண்ணாமல் பசியை அடக்குவதன் மூலம் காமம், குரோதம், கோபம், பேராசை, பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். எல்லோருக்கும் இந்த மகா சிவராத்திரி விரதம் இருக்கும் பாக்கியம் கிட்டாது. "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி அவன் (சிவன்) அருள் இருந்தால் மட்டுமே" இந்த மகா சிவராத்திரி விரத வாய்ப்பு கிட்டும்.

    வாழ்வில் செல்வம், வெற்றி ஆகியவற்றை பெற விரும்புவோர் அவசியம் மகாசிவராத்திரி விரதம் இருக்க வேண்டும்.


    - "பிரசன்ன ஜோதிடர்" ஐ.ஆனந்தி,

    செல்: 98652 20406

    ×