search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மகத்தான மகா சிவராத்திரி
    X

    மகத்தான மகா சிவராத்திரி

    • நான் என்கிற அகந்தையை அழித்து தானே பிரம்மமாய் உணர்வது ஞான வழியாகும்.
    • விரதம் இருந்து முதல் கால பூஜை வழிபட்டால் முற்பிறவி கர்மாக்கள் விடுபட்டு நற்பலன்கள் கிடைக்கும்.

    மனித மனம் மண், பொன், பெண் இந்த 3 வசைகளையும் சுற்றியே அலைப்பாய்ந்து வருகிறது. மனித வாழ்வுக்கும் அஸ்திவாரமாக இந்த மூன்று ஆசைகளே விளங்குகிறது. ஒவ்வொருவரின் மனமும் செல்வத்தின் அந்தஸ்த்தில் புகழில் மற்றவர்களைக் காட்டிலும் தான் சிறந்து விளங்க வேண்டும் என்று போராடுகிறது. பிறக்கும்போதே ஒருவன் செல்வ செழிப்பான பெற்றோருக்கு பிறப்பதும், ஏழ்மையில் வாடும் பெற்றோருக்கு பிறப்பதும் அவரவர்களின் ஊழ்வினையே. முன் ஜென்ம ஊழ்வினையை அறுக்க ஒவ்வொரு மனிதனும் பல வழிகளையும் தேடி அலைகிறார்கள். ஊழ்வினையில் இருந்து மீண்டு இறைவனை அடைய நம் முன்னோர்கள் பல்வேறு வழிகளை போதித்துள்ளார்கள். கர்மவினை தீர்ந்து பிறவா நிலையை அடைய இந்து மதத்தில் நான்கு வித உபயங்கள் கூறப்பட்டுள்ளன.

    சரியை:

    நமது இல்லத்தில் இறைவனை ஆத்மார்த்தமாய் வழிபடுவதுடன் கோவில்களுக்கு சென்று இறைவனை துதித்து பாடுவது, மலர் மாலை தொடுப்பது, சந்தனம் அரைத்துக் கொடுப்பது போன்ற இறைப்பணிக்கு உதவுதல், திருக்கோவிலில் மெழுகிடுதல், சுத்தம் செய்வது போன்ற உழவாரப்பணிகள் செய்து வணங்குதல் யாவும் சரிகை வழியாகும். இதன் மூலம் பெறும் முக்தி சாலோக முத்தி எனப்படும்.

    கிரியை

    சிவச்சின்னங்களை அணிந்து சிவனடியாராக இறைச்சேவை செய்வது ஒன்றையே வாழ்வின் நோக்கமாய் கொண்டு வாழ்வதே கிரியை வழியாகும். இந்த வகையில் கிடைக்கும் முக்தி நிலை சாமீப முக்தி எனப்படும்.

    யோகம்

    தகுதியான குருவை பணிந்து யோக முறைகளை கற்று, தொடர் பயிற்சியின் மூலம் உடல், மனம் ஆகியவற்றை தூய்மையாக்கி இறைவனை வழிபாடு செய்து முக்தி பெறுவதே யோக வழியாகும். இத்தகைய முக்தி நிலை சாரூப முக்தி எனப்படும்.

    ஞானம்

    நான் என்கிற அகந்தையை அழித்து தானே பிரம்மமாய் உணர்வது ஞான வழியாகும். இந்த வகையில் பெறும் முக்தி நிலை சாயுச்ய முக்தி எனப்படும்.

    விரதம்

    மேலே கூறிய நான்கு நிலை தவிர்த்து இறையருளைப் பெற சாஸ்திரங்களில் கூறப்பட்ட மற்றொரு உபயம் விரதம். விரதம் என்பது ஒரு விசேஷ நாளில் விருப்பமான தெய்வத்தை நினைத்து குறிப்பிட்ட வேண்டுதலுக்காக ஐம்புலனை அடக்கி, உண்ணாமல் இருக்கும் நிலை ஆகும். விரதம் இருப்பதால் ஆன்மா, மனம், புத்தி, உடல் முதலியவை தூய்மை அடையும். உடலும் உள்ளமும் சுத்தமடையும்போது நினைத்த காரியம் வெற்றியடையும். இந்த மதத்தில் கர்மவினை தீர்ந்து காரிய சித்தி தரும் கடவுளாக கருதப்படுவது சிவ பெருமான். சிவ பெருமான் தன்னை வழிபடுபவர்களின் நியாயமான கோரிக்கைகளை வழங்குவதில் வள்ளல். சிவபெருமானை வழிபட்டு வேண்டிய வரத்தை பெற கூறப்பட்ட பல்வேறு விரதங்களில் சிறப்புப் பெற்றது மகா சிவராத்திரி விரதம்.

    கடும்குளிர் காலம் முடிந்து வசந்த காலம் தொடங்குவதை குறிக்கும் காலம் தான் மாசி மாதமாகும். இந்த மாதத்தில் மாசி மகம், மகா சிவராத்திரி, காரடையான் நோன்பு, ஹோலிப் பண்டிகை போன்ற சிறப்பு மிக்க வழிபாடுகள் கொண்டாடப்படுவதால் ஆன்மீகச் சிறப்பு மிக்க மாதமாகிறது. மாசி மாதம் என்றாலே சிவ, சக்தி வழிபாட்டிற்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் சிவ பெருமானை நினைத்து வழிபடும் சிவராத்திரியும் அம்பிகை வழிபாடும் காரடையான் நோன்பும் இந்துக்களிடம் பிரசித்தி பெற்றது.

    ஸ்வஸ்தி ஸ்ரீ சோபகிருது வருடம் மாசி மாதம் 25-ம் நாள் வெள்ளிக்கிழமை, (8.3.2024) பிறவிப் பிணி தீர்க்கும் மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. பகலில் திரயோதசியும் இரவில் சதுர்த்தசி திதியும் கூடும் சிவராத்திரியானது மிக விசேஷமானதாகும்.

    சிவராத்திரியின் மகத்துவத்தையும் அதனால் ஏற்படப்போகும் நன்மைகளையும் காணலாம். ஒருவர் தன் வாழ்நாளில் மிகுதியான சிரமத்தை அனுபவிப்பதற்கு ஜாதகத்தில் உள்ள தோஷங்களே காரணம். ஒருவரின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை அழிக்கும் வல்லமை பெற்றவர் சிவபெருமான். தன்னை வணங்குபவர்களின் மனதில் இருக்கும் கெட்ட எண்ணக் கழிவுகளான காமம், கோபம், குரோதம், பேராசை, பொறாமை போன்ற கெட்ட கர்ம வினைக் கழிவுகளை அழிப்பவர்.

    அவரை வழிபடுபவர்களின் வாழ்வில் நிலவும் மனக்கவலைகள், வறுமைநிலை, நோய்கள் போன்றவற்றை அறவே அழிப்பவர். ஒருவன் தனது மூன்று பிறவியில் செய்த பாவங்களையும் அழிப்பவர் சிவபெருமான். சிவன் என்ற சொல்லுக்கு மங்கலம், இன்பம் என்று பொருள். ஒருவன் தன் வாழ்வில் வினைப்பயனை அழிக்க எட்டு விதமான சிவ வழிபாட்டு முறைகளை கடைபிடிக்கலாம் என சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அவற்றில் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்ததி திதியன்று வரும் மகா சிவராத்திரி விரதமாகும். சிவராத்திரி என்றால் ஒளிமயமான இரவு இன்பம் தருகின்ற இரவு என்று அழைக்கப்படுகிறது.

    "பிரசன்ன ஜோதிடர்" ஐ.ஆனந்தி

    சிவராத்திரி விரதம் இருக்கும் முறைகள்

    8.3.2024 அன்று வெள்ளிக்கிழமை மாசி 25 அன்று அதிகாலை குளிர்ந்த நீரில் குளித்து நெற்றியில் திருநீறு பூசி சாமி படம் முன் விளக்கேற்றி சிவராத்திரி விரதத்தை தொடங்க வேண்டும்.

    சிவராத்திரி விரதத்தை முதல் நாளே தொடங்கிவிட வேண்டும். விரதமிருப்போர் வியாழக்கிழமை ஒருவேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும். சிவராத்திரி நாளில் சமைத்த உணவு உண்ணாமல் சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும். தண்ணீர் மட்டும் அருந்தலாம். வெள்ளிக்கிழமை பகல் மற்றும் இரவு முழுவதும் எதுவும் சாப்பிடக்கூடாது. வயதானவர்கள், நோயாளிகள் சமைக்காத உணவுகளான பழங்கள், அவல் சாப்பிடலாம். மகா சிவராத்திரி அன்று முழுவதும் மவுன விரதம் இருந்து பேசாமல் பஞ்சாட்சரம் அல்லது "ஓம் நமசிவாய" மந்திரம் சொல்வதால் புண்ணிய பலன் மிகுதியாகும்.

    வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை சிவன் கோவிலில்களில் நடைபெறும் 4 கால அபிஷேக பூஜைகளில் கலந்துகொண்டு சிவனை வழிபட வேண்டும். மறுநாள் சனிக்கிழமை காலையில் நீராடி பகல் முழுவதும் உறங்காமல் இருந்து விரதத்தை முடித்தால் சகல வினைகளும் நெருப்பில் விழுந்த தூசி போல் உடனே சாம்பலாகும்.

    மகா சிவராத்திரி பூஜைகள்

    முதல் ஜாமம்

    பிரம்மா சிவனை பூஜிக்கும் காலம் இரவு 7.30 மணிக்கு. முதல் ஜாமத்தில் பிரம்மதேவன், சிவனை பூஜிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் சிவபெருமானை ரிக்வேத பாராயணம் செய்து வழிபட வேண்டும்.

    பஞ்சகவ்யம் அபிஷேகம்.

    மஞ்சள் நிற வஸ்த்திரம்.

    தாமரை மலர் சாற்றல்.

    பாசிப்பருப்பு பொங்கல் நிவேதனம்.

    நெய் தீபம்.

    ரிக்வேத பாராயணம்.

    விரதம் இருந்து முதல் கால பூஜை வழிபட்டால் முற்பிறவி கர்மாக்கள் விடுபட்டு நற்பலன்கள் கிடைக்கும். ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். வேதங்களில் சிறந்து விளங்குவார்கள். ஜனன ஜாதகத்தில் உள்ள கடுமையான விதிப்பயன்கள், ஜாதக ரீதியான தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பிறவா நிலையை அடைய முடியும்.

    இரண்டாம் ஜாமம்

    மகாவிஷ்ணு சிவனை பூஜிக்கும் காலம் இரவு 10.30 மணிக்கு.

    பஞ்சாமிர்தம் அபிஷேகம்.

    வெண்மை நிற வஸ்த்திரம்.

    வில்வ மாலை சாற்றல்.

    இனிப்பு பாயாசம் நிவேதனம்.

    நல்லெண்ணெய் தீபம்.

    யசூர் வேதம் பாராயணம்.

    இந்த இரண்டாம் ஜாம வேளையில், யசூர் வேத பாராயணம் செய்து சிவனை வழிபடுவதால் தன தான்ய சம்பத்துக்கள் கிடைக்கும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனியின் தாக்கம் குறையும். நவகிரக தோஷம் விலகும்.கண் திருஷ்டி செய்வினை தோஷம் அகலும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் அனுகூலம் ஏற்படும். வறுமை, கடன் தொல்லை, சந்திர தோஷம் நீங்கும். சந்திர தசை, சந்திர புத்தி நடப்பவர்களுக்கு மன உளைச்சல் குறையும். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு, இரண்டாம் ஜாம பூஜையின் அபிஷேக நீரை பருக கொடுத்தால் சித்த சுத்தி உண்டாகும் என்பது நம்பிக்கை.

    மூன்றாம் ஜாமம்

    சக்தியின் வடிவமாக அம்பாள் சிவனை பூஜிக்கும் காலம் நள்ளிரவு 12 மணிக்கு

    தேன் அபிஷேகம்.

    சிவப்பு வஸ்த்திரம்.

    ஜாதி மல்லிகை பூ சாற்றல்.

    எள் அன்னம் நிவேதனம்.

    இலுப்பை எண்ணெய் தீபம்.

    சாம வேதம் பாராயணம்.

    விரதம் இருந்து மூன்றாம் கால பூஜையை சக்தியின் வடிவான அம்பாள் செய்வதாக ஐதீகம். விரதமிருந்து தரிசித்தால் எந்த வித தீய சக்தியும் அண்டாமல் அம்பாள் அருள் கிடைக்கும். மகா சிவராத்திரியின் உச்சகட்ட வழிபாட்டு நேரம் இது. இதனை 'லிங்கோத்பவ காலம்' என்றும் கூறுவர். இரவு 11.30 மணி முதல் 1 மணி வரையான இந்த நேரத்தில் தான், அடிமுடியாக நின்ற ஈசன், மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் லிங்க ரூபமாக காட்சி யளித்தார். மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் லிங்கோத்பவ காலத்தில் இறைவனுக்கு நெய் பூசி, வெந்நீரால் அபிஷேகம் செய்து, கம்பளி ஆடை அணிவித்து, மலர்களினால் அலங்கரிக்க வேண்டும். அதோடு சாமவேத பாராயணம் மற்றும் சிவ சகஸ்ர நாமம் உச்சரிக்க வேண்டும். இதனால் சகல பாவங்களும் நீங்குவதோடு, ஆண், பெண் ஜாதகத்தில் உள்ள திருமணத் தடை நீங்கும். கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்த தம்பதிகள் இணைந்து வாழ்வார்கள். பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கும். எந்த தீய சக்தியும் அண்டாது சிவ சக்தியின் அருள் அனைவரையும் காக்கும்.

    நான்காம் ஜாமம்

    நான்காம் காலம் அதிகாலை 4.30 மணிக்கு. முப்பத்து முக்கோடி தேவர்கள் முனிவர்கள் ரிஷிகள் மனி தர்கள் மற்றும் அனைத்து ஜீவராசிகள் சிவனை பூஜிக்கும் காலம். கரும்பு சாறு மற்றும் பால் அபிஷேகம்.

    பச்சை கலர் வஸ்த்திரம்.

    நந்தியாவட்டை மலர் சாற்றல்.

    சுத்தான்னம் நிவேதனம்.

    அதர்வண வேதம் பாராயணம்.

    முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்களும், மனிதர்களும், அனைத்து ஜீவராசிகளும் நான்காவது காலத்தில் சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். விரதம் இருந்து நான்காம் காலம் தரிசித்தால் அனைத்து செல்வமும் கிட்டும் வாழ்வில் மகிழ்ச்சியும் உண்டாகும். பொழுது புலரும் அதிகாலை வேளையில், அதர்வண வேத பாராயணம் செய்து சிவனை வழிபட வேண்டும். இதனால் நம் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். இல்லறம் நல்லறமாகும். பட்டங்களும், பதக்கங்களும், பதவியும் தேடி வரும். உடல் கஷ்டம், மனக்கவலை, பஞ்சம், துக்கம், அவமானத்தில் ஆழ்த்தும் கெட்ட கீர்த்தி நீங்கும். இடி, மின்னல் போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் ஆபத்துகளையும் கிரக மாற்றங்களால் ஏற்படும் கவலை, நோய், இழப்புகள் எல்லாம் நீங்கி உலகம் அமைதிப் பூங்காவாகும்.

    மகா சிவராத்திரி

    சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து சுவாமி தரிசனம் செய்ய முடியாவிட்டால் கூட, லிங்கோற்பவ காலமாகிய இரவு 11.30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலத்திலாவது சிவதரிசனம் செய்து வழிபட வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் தான் சிவன் ஜோதிலிங்கமாக தோன்றிய நேரமாக கருதப்படுகிறது. வயதானவர்கள், குழந்தைகள், கோவிலுக்கு செல்ல முடியாமல் உடல் நலக்குறைவோடு இருப்பவர்கள் சிவபுராணம், வில்வாஷ்டகம் படித்து வில்வத்தால் சிவபூஜை செய்தால் அந்த நிமிடமே அவர்களுடைய அனைத்து பாவங்களும் நீங்கும். அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும். பஞ்ச மகா பாதகங்கள் அகலும்.

    சர்ப்ப தோஷத்திற்கு தீர்வு தரும் மகா சிவராத்திரி வழிபாடு

    ஆதிசேஷன் பூலோகத்தை தன் தலையில் சுமந்து தன் பலம் அனைத்தையும் இழந்து தவித்தபோது, ஒரு சிவராத்திரியில் முதல் ஜாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமியையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரம் பாம்புரநாதரையும், நான்காம் ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் தரிசித்தார். அப்போது சிவபெருமான் பூமி முழுவதையும் தாங்கும்படியான வலிமையை வழங்கினார். எனவே சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களிலும் வழிபாடு செய்தால் ஜனன கால ஜாதகத்தில் 1, 2, 3, 5,7, 8, 9 ஆகிய இடங்களில் ராகு/கேதுக்கள் நிற்பது கால சர்ப்ப தோஷம், அதிக கிரகங்கள் ராகு/கேது சாரம் போன்ற காரணத்தால் திருமணத்ததடை, குழந்தை பாக்கிய மின்மையால் பாதிப்படைந்தவர்களுக்கு சர்ப்ப தோஷம் நீங்கும். செவ்வாய் தோஷ பாதிப்பு குறையும்.

    மகா சிவராத்திரி விரதத்தால் கிடைக்கும் நற்பலன்கள்

    மகா சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுடன் சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்து வந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும். உணவு உண்ணாமல் பசியை அடக்குவதன் மூலம் காமம், குரோதம், கோபம், பேராசை, பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். எல்லோருக்கும் இந்த மகா சிவராத்திரி விரதம் இருக்கும் பாக்கியம் கிட்டாது. "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி அவன் (சிவன்) அருள் இருந்தால் மட்டுமே" இந்த மகா சிவராத்திரி விரத வாய்ப்பு கிட்டும்.

    வாழ்வில் செல்வம், வெற்றி ஆகியவற்றை பெற விரும்புவோர் அவசியம் மகாசிவராத்திரி விரதம் இருக்க வேண்டும்.


    - "பிரசன்ன ஜோதிடர்" ஐ.ஆனந்தி,

    செல்: 98652 20406

    Next Story
    ×