search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மலரும் நினைவுகள் மீனா: இஞ்சி இடுப்பழகி...
    X

    மலரும் நினைவுகள் மீனா: இஞ்சி இடுப்பழகி...

    • கமல் சாரோடு நடிக்க வாய்ப்பே கிடைக்கவில்லையே என்ற எண்ணம் அவ்வை சண்முகியில் நிறைவேறியது.
    • கதை சொல்லும் போது கமல் சாருக்கு இரண்டு வேடம்.

    இஞ்சி இடுப்பழகி...

    மஞ்ச சிவப்பழகி...

    தேவர் மகனில் கேட்ட இந்த பாடல் இன்றும் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கும் பாடல். இந்த பாடல் எனக்காகவே எழுதப்பட்டது. ஒன்றிரண்டு காட்சிகளில் நடித்தும் முடித்தேன். ஆனால் சில பல காரணங்களால் அந்த படத்தை தயாரிப்பது தள்ளிப்போனது.

    நானும் ரொம்ப பிசியாக இருந்ததால் அதன் பிறகு அந்த படத்தில் நடிக்க முடியாமல் ஆகிவிட்டது. சிவாஜி சார், கமல் சாரோடு நடிக்க கிடைத்த வாய்ப்பு கை நழுவிவிட்டது. அந்த வருத்தம் இன்றும் என்னிடம் இருக்கிறது.

    கமல் சாரோடு நடிக்க வாய்ப்பே கிடைக்கவில்லையே என்ற எண்ணம் அவ்வை சண்முகியில் நிறைவேறியது.

    1995-ல் அவ்வை சண்முகியில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. நடிக்க ஒப்பந்தம் ஆனதும் ரொம்ப சந்தோசமாக இருந்தது. ஏனெனில் பல முன்னணி நடிகர்களுடன் அப்போது நடித்திருந்தேன். ஆனால் கமல் சாரோடுதான் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.


    கதை சொல்லும் போது கமல் சாருக்கு இரண்டு வேடம். பாண்டியன் என்ற ஆண்வேடம். அவ்வை சண்முகி என்ற அய்யர்மாமி வேடம் என்றார்கள். கமல் சார் பெண் வேடத்தில் எப்படி இருப்பார்...?

    கற்பனையில் நினைத்ததை நேரில் பார்க்கும் நாளும் வந்தது. படப்பிடிப்புக்கு ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

    செட்டில் நான் உள்பட சக கலைஞர்களும் தயாராக இருந்தோம். 'கமல் சார் எங்கே? என்றேன்.

    மேலே மாடியில் மேக்அப் போட்டு கொண்டிருக்கிறார் என்றார்கள். அவரது வருகைக்காக எல்லோரும் காத்திருந்தோம்.

    பெண் வேடம் என்றால் சாரி கட்டி, தலையில் விக் வைத்து கொண்டு வருவார் என்றுதான் நினைத்தேன்.

    அதுவரை கமல் சாரை முதல் முதலாக பார்த்ததும் அவருடன் நடித்ததும் இந்த படத்தில் தான். அதிலும் புது விதமான கெட்- அப்பில் அன்றுதான் முதல்முறையாக பார்க்கிறேன். அதுவும் ஒரிஜினல் அடையாளத்தோடு அல்ல. பெண் வேடத்தில் என நினைத்ததும் எனக்கே சிரிப்பாக இருந்தது.

    சற்று நேரத்தில் மாடிப்படிகள் வழியாக ஒரு மாமி வந்து கொண்டிருந்தார். பச்சை நிறத்தில் மடிசார் புடவை கட்டிக் கொண்டு, தோள் சேலையை கச்சிதமாக இடுப்பில் சொருகியபடி பெண்களுக்கே உரித்தான நளினத்துடன் இறங்கி கொண்டிருந்தார்.

    எல்லோரது பார்வையும் அவர் மீது விழுந்தது.

    அது கமலா?

    என்னால் நம்பவே முடியவில்லை. என் அருகில் வந்ததும் 'எப்படி இருக்கு...? என்றார்.


    நான் அவரையே விழிமூடாமல் பார்த்து கொண்டிருந்தேன்...

    கால் முதல் தலை வரை கெட்-அப் என்று சொல்ல முடியாதபடி அந்த கெட்-அப் இருந்தது.

    என்ன பார்த்துக்கிட்டே இருக்கீங்க? எப்படி இருக்குன்னு கேட்டேன் என்று மறுபடியும் கேட்டார்.

    அப்புறம்தான் 'சார்... சூப்பர் சார்...' என்று ஆச்சரியத்துடன் கூறினேன். உடனேஅவர் அங்கிருந்து ஸ்டுடியோவுக்குள் சென்றுவிட்டார்.

    அந்த வேடத்துக்காக அவர் எடுத்துக்கொண்ட சிரத்தையும், தாங்கி கொண்ட சிரமமும் கொஞ்ச நஞ்சமல்ல.

    அதிகாலையிலேயே வந்து விடுவார். மேக்-அப் போட்டு முடிக்க 5 மணி நேரம் ஆகும். அதுவும் சரியாக வாய் திறந்து எதுவும் பேச முடியாது. நீண்ட நேரம் அந்த மேக்-அப்புடன் இருக்கவும் முடியாது.

    எனவே அவருக்கு மேக்-அப் முடிந்ததும் அவர் தொடர்பான காட்சிகளை வேகமாக படமாக்குவார்கள். ஷூட்டிங் முடிந்து மேக்-அப்பை கலைக்கும் வரை அவரால் எதுவும் சாப்பிட முடியாது. திரவ உணவுகளை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பார். அந்த அளவு கஷ்டப்பட்டுதான் அந்த பாத்திரத்தில் நடித்து முடித்தார். அவருக்கு இப்படி கஷ்டம் என்றால் எனக்கு வேற மாதிரியான கஷ்டம். அந்த படத்தில் நடித்த டெல்லிகணேஷ் சார், ஜெமினி சார், நாகேஷ் சார்... எல்லோருமே ஜாம்பவான்கள்.

    அவர்களை பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நடிப்பது போலவே தெரியாது. யதார்த்தமாகத்தான் கேமரா முன் நிற்பார்கள். நடிப்பார்கள். அவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தது.

    ஜெமினி சார் அந்த வயதில் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே வந்து மேக்-அப் போட்டு ரெடியாகி வந்து விடுவார்.

    டெல்லி கணேஷ் சார், ஜெமினி சார், நாகேஷ் சார், மணிவண்ணன் சார் எல்லோரும் ஒன்றாக இருக்கும்போது அவர்கள் பக்கத்தில் சின்ன பெண்ணாக நின்று கொண்டிருப்பேன்.

    எல்லோருமே ரொம்ப பெரியவர்கள் என்பதால் அவர்கள் பக்கத்தில் நிற்கும்போது, பயம், டென்ஷனாக இருக்கும். ரிலாக்சாகவே இருக்க முடியாது. சத்தம்போட்டு விடுவார்களோ? ஏதாவது சொல்லி விடுவார்களோ? என்று பயந்து பயந்தே ஒவ்வொன்றையும் செய்வேன்.

    ஆனால் அவர்கள் அடிக்கும் லூட்டி இருக்கே...? அப்பப்பா... விழுந்து விழுந்து சிரிக்க வைத்து விடுவார்கள்.

    சிரிப்பு, கோபம், எரிச்சல், சலிப்பு, சந்தோசம் என்று பல வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும்.

    'மீனா சின்ன பொண்ணாச்சே... அவளால் முடியுமா...? என்றுதான் நினைத்து இருக்கிறார்கள். உண்மையும் அதுதான்.

    காமெடி காட்சியாக தெரியும். ஆனால் அதில் ஒரு டயலாக் கோபப்படும்படி இருக்கும். இன்னொரு டயலாக் எரிச்சலடைய வைக்கும். மற்றொரு டயலாக் சிரிக்க வைக்கும். இவை ஒவ்வொன்றையும் அடுத்தடுத்து முகத்தில் வெளிப்படுத்த வேண்டும்.

    படத்தில் ஒன்றியும், ரிஸ்க் எடுத்தும் நடித்தேன். ஜெமினி சார், சுற்றி நிற்பவர்களிடம் எதார்த்தமாக பேச வேண்டும். அடுத்த விநாடியே கோபப்பட வேண்டும். எதுவாக இருந்தாலும் சும்மா பின்னுவார்.

    பார்த்து கொண்டிருக்கும் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அந்த ஜாம்பவான்களிடம் இருந்து நிறைய செயல்கள் கற்றுக் கொள்ள முடிந்தது. என்னைப்பற்றி பெரியவர்களின் சந்தேகத்தையும் தாண்டி நடித்து இருக்கிறேன் என்பதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது.

    ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது நாசர் சார் இதை குறிப்பிட்டு சொல்லி பாராட்டினார். இப்படி மற்றவர்கள் பாராட்டும் அளவுக்கு நடித்து இருக்கிறேன் என்பது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய சந்தோசம்.

    காட்சி திரில்லிங்காக இருப்பது மட்டுமல்ல உண்மையிலேயே கண்ணுக்கு தெரியாத இடத்தில் சில திரில்லிங்கான அனுபவங்களை சந்தித்ததும் உண்டு. அந்த அனுபவங்களோடு அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

    தொடரும்....

    Next Story
    ×