search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சனாதன தர்மத்தின் காவலர் அய்யா வைகுண்டர்
    X

    சனாதன தர்மத்தின் காவலர் அய்யா வைகுண்டர்

    • சனாதனம் என்பது சாதிய தீண்டாமையை குறிப்பிடுவதாக இருந்தால் காந்தி தன்னை சனாதனவாதி என சொல்லியிருப்பாரா?.
    • இந்து சமயத்தின் புனித நூல்கள் எதிலும் சாதிய வேறுபாடுகளுக்கு பெயர் தான் “சனாதன தர்மம்” என கூறவில்லை.

    'அனைத்து சாதியினரும் ஒருமித்து அன்போடு வாழ வேண்டும்'

    அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்தைக் காத்தாரா? அல்லது எதிர்த்தாரா?

    இந்த கேள்விக்கான விடையை அறிய வேண்டும் என்றால் அய்யா வைகுண்டர் யார்? என்பதையும், சனாதன தர்மம் என்றால் என்ன? என்பதற்கான சரியான புரிதலும் இருந்தால் மட்டுமே அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்துக்கு எதிரானவரா அல்லது அதனைக் காப்பதற்காக அவதரித்தவரா என்கின்ற உண்மையை அறிந்து கொள்ள முடியும்.

    அய்யா வைகுண்டர் யார்?

    அய்யா வைகுண்டர் யார் என்று சொல்ல வேண்டும் என்றால் அவரின் அவதாரக் காலத்தில் அவர் அருளிய "அகிலத்திரட்டு அம்மானை" என்னும் புனித நூலை ஆதாரமாகக் கொண்டு மட்டுமே சொல்ல வேண்டும்.

    அதுபோல் வைகுண்டர் போதிக்கின்ற தர்மத்துக்கும் அகிலத்திரட்டு அம்மானையே ஆதாரம். ஆனால் இங்கு மிகப் பெரிய துரதிஷ்டம் அய்யா அருளிய நூலை முழுமையாக கற்று உணராமல் தாங்கள் கேள்விப்பட்டதையும், பிறர் எழுதியதையுமே ஆதாரமாக்குகின்றனர். அய்யா யார் என்பதை அறியாமல், தவறான புரிதலுடன் கருத்துக்களை பதிவிடும் நிலையே இங்கு அதிகமாக காணப்படுகின்றது. எனவே புனித அகிலத்திரட்டு அம்மானை நூலின் அடிப்படையில் அய்யா யார் என்பதைக் காண்போம்.

    "ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசு பண்ணி.." என்கிற வாசகத்துடனே அகிலத்திரட்டு அம்மானை தொடங்குகிறது. முதல் வரியிலேயே மிக தெளிவாக மாயோனாகிய திருமாலே வைகுண்டராக வந்தவர் என்பதை உணர்த்துகிறது. மேலும்

    "பாண்டவர் தமக்காய்த் தோன்றி பகைத்தனை முடித்து மாயோன் வீன்றிய கலியன் வந்த விசளத்தால் கயிலை யேகி சான்றவர் தமக்காய் யிந்த தரணியில் வந்த ஞாயம்............"

    என்கின்ற அகில வாசகம் அன்று பாண்டவர்களுக்காக வந்த கண்ணனே இன்று சான்றவர்களுக்காக அய்யா வைகுண்டராக அவதரித்துள்ளார் என மிகத் தெளிவாக பறை சாற்றுகின்றது.

    "சனாதன தர்மம்" என்பதின் பொருள் என்ன?

    "அழிவில்லாது என்றென்றும் நிலைத்திருக்கும் தருமம்" "வாழ்வியல் ஒழுக்க நெறி" என்பதே சனாதன தர்மம் என்பதின் பொருள் என இந்து மதத்தில் இருக்கும் ஆன்மிக அன்பர்கள் கூறிப்பிடுகின்றனர். ஆனால் இதனை ஏற்காதவர்கள் சாதிய வேறுப்பாடே சனாதன தர்மம் என்கின்றனர். இதற்கான விடையை ஆராயும்போது கீழ் கண்ட தகவல் கிடைக்கிறது.

    * தமிழக அரசின் 12 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் "இந்து சமயம் சனாதன தர்மம் என அழைக்கப்படுகிறது" என்றும், "அழிவில்லாத நிலையான அறம்" என்றும் பொருள் சொல்லப்பட்டுள்ளது.

    * சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடான கழக தமிழ் அகராதியில் "தொன்றுத் தொட்ட அற ஒழுக்கம்" என பொருள் சொல்லப்பட்டுள்ளது.

    * சனாதன தர்மத்துக்கு விக்கிபீடியா நித்திய தர்மம்" அல்லது "நித்திய ஒழுங்கு" என்றும், "இந்து மதத்தின் மாற்று பெயர்" என்றும் பொருள் கொடுக்கிறது.

    * ராமாயணத்தில் ராமர் வாலியிடம் பேசும்போது தம்பியின் மனைவியை அபகரிப்பது தான் நீ கடைப்பிடிக்கின்ற சனாதன தர்மமா? என்று கேட்கின்றார். இதிலிருந்து "சனாதன தர்மம்" என்பது வாழ்வியல் ஒழுக்க நெறியை மட்டுமே குறிக்கின்றதை அறிய முடிகின்றது.

    இந்து சமயத்தின் புனித நூல்கள் எதிலும் சாதிய வேறுபாடுகளுக்கு பெயர் தான் "சனாதன தர்மம்" என கூறவில்லை. அதுபோல் இந்து சமய ஞானிகளும் எந்த இடத்திலும் சாதிய வேறுபாடுகளுக்கு பெயர் தான் "சனாதன தர்மம்" என குறிப்பிடவில்லை. இந்திய அளவில் இந்து மதமே சனாதன தர்மமாக பார்க்கப்படுகிறது. அப்படியிருக்க எங்கிருந்து சனாதன தர்மம் என்பது சாதிய வேறுபாடுகளை குறிக்கும் என பொருள் எடுக்கின்றனர் என தெரியவில்லை?

    சாதிய தீண்டாமையை எதிர்த்து, அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்று கூறிய நேசத் தந்தையான மகாத்மா காந்தி தன்னை ஒரு "சனாதனவாதி" என பிரகடனப்படுத்துக்கின்றார். சனாதனம் என்பது சாதிய தீண்டாமையை குறிப்பிடுவதாக இருந்தால் காந்தி தன்னை சனாதனவாதி என சொல்லியிருப்பாரா?.

    எனவே வாழ்வியல் ஒழுக்க நெறியை போதிக்கின்ற இந்து தர்மமே சனாதன தர்மம் என்று அழைக்கப்படுகின்றது என்கின்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

    சனாதன தர்ம நூல்களை அருளியது யார்?

    அய்யா வைகுண்டப் பரம்பொருள் அருளித் தந்த அருள் நூலான சிவகாண் அதிகாரப் பத்திரத்தில் "வேதாந்தம் சித்தாந்தம் விளம்பி வைத்தேன் வையகத்தில்" என்கின்றார். மேலும் அகிலத்திரட்டு அம்மானையில் "நாலு வேதம் அதிலும் நான் வருவேன் கண்டாயே" என்கின்றார். இதன் மூலம் அய்யா வைகுண்டர் இந்த உலகிற்கு உணர்த்துவது இந்து தர்மத்தின் புனித நூல்களாக இருக்கின்ற நான்கு வேதம், ஆகமம், புராணம், இதிகாசங்கள், சைவ சித்தாந்தம் என அனைத்துமே பரம் பொருளால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இறை அருளாளர்கள் மூலம் அருளப்பட்டது என்பது அய்யா தந்த அகிலத்திரட்டு அம்மானை மற்றும் அருள்நூல் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த புனித நூல்கள் போதிக்கின்ற தர்மமே "சனாதன தர்மம்" ஆகும்.

    அய்யா வைகுண்டர் எதற்காக அவதரித்தார்?

    அய்யா வைகுண்டர் தனது அவதார நோக்கத்தை தான் அருளிய புனித நூலில் தெளிவாக "சாஸ்திரவேத நூலுக்குச் சரியொத்த பேர்களுக்கு உபகாரங்கள் செய்யவும்" என்கிறார். ஆம் "சனார்த்தனன்" என அழைக்கப்படுகின்ற திருமால் கலியுகத்தில் வைகுண்டமாக அவதரிக்கும்போது அவன் தந்த சனாதன தர்மத்தை காத்து அதைத்தானே போதிப்பான். இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுமே அவனுடைய பிள்ளைகளே எந்த உயிர்களிடமும் இறைவன் எவ்விதப் பாகுபாடு பாப்பதில்லை என்பதே உண்மையான சனாதன தர்மம் ஆகும். அதைத்தான் அய்யா வைகுண்டர்

    "எல்லோருக்கும் ஒருப் போலே ஈசன் நான் இருக்கிறேன்"

    என சொல்கின்றார். மேலும் சாதியை பேய்க்கு ஒப்பாக சொல்லி அதனை அழிக்க உத்தரவிடுகிறார்.

    "சாதி பதினெட்டும் தலையாட்டிப் பேய்களையும்

    வாரி மலையதிலும் வன்னியிலுந் தள்ளிவிடு"

    "தலைப்பாகை" தந்து அனைவரையும் மன்னராக்கி தலை நிமிர்ந்து வாழச் செய்து

    சமத்துவத்தை மலர செய்ய அய்யாவின் பிள்ளைகள் சாதிய தீண்டாமையை எதிர்ப்பதில் முதல் ஆளாக இருக்க வேண்டும். அதுவே நாம் அய்யாவின் பிள்ளை என்பதற்கு அடையாளம் ஆகும்.

    வாரிமூன்று கோதி வளைந்திருக்கு மோர்தீவை

    சாதியொரு நிரப்பாய்த் தானாள்வா யென்மகனே

    சாதிய தீண்டாமையை எதிர்ப்பவர்களும், அதற்காக போராடுகின்றவர்களும் சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று சொல்லாமல் "சாதிய தீண்டாமையை அழிப்பேன்" என அனைவருக்கும் புரியும் வகையில் சொல்லலாமே. அப்படி சொல்லும்போது அதற்கு எந்த விதமான எதிர்ப்பும் வரப்போவது இல்லை.

    யார் மனமும் புண்படப்போவதில்லை. மாறாக அனைவரின் ஆதரவையும் பெறலாம். அதைவிடுத்து "சனாதன தர்மத்தை" அழிக்க வேண்டும் என்று சொல்லும்போது தான் அங்கு பிரச்சனையும், தேவையில்லாத குழப்பமும் ஏற்படுகிறது. நமது நோக்கம் சாதி வேறுபாட்டை அழிப்பதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர ஒரு மதத்தை அழிப்பதாக இருக்கக் கூடாது. சனாதன தர்மத்தின் காவலனான இறைவன் கலியுகத்தில் அய்யா வைகுண்டராக அவதரித்து அனைத்து சாதியினரும் ஒருமித்து அன்போடு வாழ வேண்டும் என்பதை மனதில் நிலைநிறுத்தி வாழ்ந்தால் எந்த பிரிவினையும் நமக்குள் இல்லை.

    - பா.கிருஷ்ணமணி அப்புக்குட்டி,

    வடலிவிளை, நெல்லை மாவட்டம்.

    Next Story
    ×