search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உள்ளம் என்னும் ஓவியத் தாமரை
    X

    உள்ளம் என்னும் ஓவியத் தாமரை

    • சலனமற்ற அவர் நடவடிக்கையை உற்றுக் கவனித்து நான் அவரிடமிருந்து ஞானம் பெற்றேன்!` என்றார் முனிவர்.
    • ஒவ்வொரு நாளும் காலை வேளையில் அழுக்கு மூட்டைகளை முதுகில் சுமந்துகொண்டு எந்தச் சலனமும் இல்லாமல் மெல்ல நடந்து செல்கிறது.

    வாழ்க்கையில் நாம் அடைய வேண்டியது அறிவு அல்ல. ஞானம்.

    புத்தகங்களைப் படித்தோ பலரிடம் பாடம் கேட்டோ தொடர்ந்த முயற்சி மூலம் யார் வேண்டுமானாலும் அறிவை அடைந்துவிடலாம்.

    ஆனால் ஞானத்தை அனுபவம் சார்ந்த முதிர்ச்சி மூலமே ஒருவன் அடைய முடியும்.

    வாழ்வில் பெற வேண்டிய பேறுகளில் எல்லாம் மிகப் பெரிய பேறு ஞானம்தான்.

    ஒருவனுக்கு திடீரென்று ஞானம் என்றால் என்ன என்று ஒரு சந்தேகம் வந்தது.

    அவன் எவ்வளவோ புத்தகங்களைப் படித்திருக்கிறான். பல விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறான்.

    ஆனால் நிறையத் தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பது அறிவுதானே தவிர ஞானம் ஆகாது என்று அவனுக்குப் புரிந்துவிட்டது.

    ஞானம் பற்றித் தெரிந்துகொள்வதற்காகப் பல இடங்களில் தேடி இறுதியாக ஓர் ஆசிரமத்தில் தவம் புரிந்துவந்த ஒரு முனிவரை அணுகினான். அவர் முகத்தில் இருந்த தெய்வீகப் பொலிவு அவர் ஞானம் பெற்றவர் என்பதை அவனுக்கு உணர்த்தியது.

    அவரிடம் `சுவாமி! ஞானம் என்றால் என்ன? எனக்கு நீங்கள் விளக்க முடியுமா?` என்று பணிவுடன் வினவினான்.

    முனிவர் அவனையே அருள்பொங்கப் பார்த்தார். அவனிடம் தென்பட்ட முழுமையான அடக்கம் அவருக்கு நிறைவு தந்தது.

    ஞானம் பற்றி அடக்கம் உடையவர்கள் தானே அறிந்துகொள்ள அதிகாரம் பெற்றவர்கள்? இவன் ஞானம் அடைய உரிமை பெற்றிருக்கிறான் என அவர் கருதினார்.

    அவனைத் தன்னருகே அமரச் சொன்ன அவர், 'அன்பனே! இன்பத்தினால் மகிழ்ச்சி அடையாமலும் துன்பத்தினால் துவண்டு போகாமலும் இருப்பதுதான் ஞானம் எனப்படுகிறது!` என்றார்.

    அவன் திகைப்படைந்தான். சொல்வது சரி, ஆனால் அப்படி ஒருவர் இருக்க முடியுமா என அவனுக்கு சந்தேகம். இன்பத்தில் ஒருவர் ஆனந்தம் கொள்வதும் துன்பத்தில் அவரே சோர்வடைவதும் இயல்புதானே, அந்த உணர்வுகளை எப்படி வெல்வது என அவன் மனம் யோசித்தது.

    `சரி சுவாமி. இத்தகைய ஞானத்தை நீங்கள் எங்கு கற்றீர்கள்? எப்படி அடைந்தீர்கள்?` என வினவினான் அவன்.

    `நான் அதை ஒரு குருவிடம் கற்றேன்!` என்றார் முனிவர்.

    `அந்த குருவிடமிருந்து நானும் அதைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அவர் எந்த மொழியில் பேசுவார்?` என ஆவலோடு கேட்டான் அவன்.

    முனிவர் கலகலவென்று நகைத்தார்.

    `அந்த குரு பேசுவதில்லை. மெளனம்தான் அவர் மொழி. பேச்சால் அவர் தன் உபதேசத்தைச் செய்வதில்லை. தன் செய்கை மூலம்தான் புலப்படுத்துவார். நாம்தான் அதைப் புரிந்துகொண்டு ஞானம் பெற வேண்டும்!` என்றார்.

    `நல்லது சுவாமி! அவர் எங்கிருக்கிறார்? என்ன செய்கிறார்? அவரை நான் எப்போது எங்கே சந்திக்க முடியும்?` என ஆவலோடு அவன் அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பினான்.

    முனிவர் அவன் ஆர்வத்தைக் கண்டு நகைத்தார்.

    `அவர் நாள்தோறும் அதிகாலையில் இந்த வழியாகத்தான் போவார். அதுமட்டுமல்ல, சூரியாஸ்தமன நேரத்தில் மாலையில் இதே வழியாகத்தான் திரும்பி வருவார். சலனமற்ற அவர் நடவடிக்கையை உற்றுக் கவனித்து நான் அவரிடமிருந்து ஞானம் பெற்றேன்!` என்றார் முனிவர்.

    `நான் அவரைப் பார்க்க வேண்டுமே?` என்று பரபரத்தான் அவன்.

    `அன்பனே! நீ இன்றுபோய் நாளை அதிகாலையில் ஆசிரமத்துக்கு வா! நாம் வாயிலிலேயே காத்திருந்தால் அவர் நடந்துசெல்லும்போது அவரைப் பார்த்துவிடலாம். அவர் நடவடிக்கையை என்னைப்போல் நீயும் உற்று கவனித்து ஞானம் பெறலாம்` என்றார் முனிவர்.

    அவன் மறுநாள் வருவதாகச் சொல்லிவிட்டு மகிழ்ச்சியோடு புறப்பட்டான்.

    அன்றிரவு முழுவதும் அவன் சரியாக உறங்கவில்லை. ஞானம் பெற வேண்டும் என்ற வேட்கையே அவன் மனத்தைச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது...

    மறுநாள் காலை ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்த அவனை ஆசிரமத்தின் வாயிலுக்கு அழைத்துச் சென்றார் முனிவர். வரப்போகிற குருவின் வருகையை எதிர்பார்த்து அவர்கள் வழிமேல் விழிவைத்து ஆவலோடு காத்திருந்தார்கள்.

    கொஞ்ச நேரத்தில் அந்த வழியாக, பெரிய பெரிய அழுக்கு மூட்டைகளை முதுகில் சுமந்தபடி ஒரு கழுதை நிதானமாக நடந்து வந்தது. சற்றுத் தொலைவில் அதைப் பின்தொடர்ந்து ஒரு மனிதனும் வந்துகொண்டிருந்தான்.

    அந்தக் கழுதையைச் சுட்டிக்காட்டிய முனிவர் இவரே என் குரு என்று இருகரம் கூப்பிக் கழுதையை வணங்கினார். அவன் திகைத்தான்.

    `இந்தக் கழுதையார் எதுவும் பேசுவதில்லை. ஆனால் தொடர்ந்த தன் செயல்பாட்டால் எனக்கு ஞானத்தைக் கற்பித்தார்!` என்றார் முனிவர்.

    அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. முனிவர் விளக்கலானார்:

    'அன்பனே! நாள்தோறும் அதிகாலையில் இந்தக் கழுதையை நான் பார்ப்பேன். இது ஒவ்வொரு நாளும் காலை வேளையில் அழுக்கு மூட்டைகளை முதுகில் சுமந்துகொண்டு எந்தச் சலனமும் இல்லாமல் மெல்ல நடந்து செல்கிறது.

    கொஞ்ச தூரத்தில் ஒரு நதி இருக்கிறது. அங்கே போய் இந்த அழுக்குத் துணிகளையெல்லாம் கல்லில் அடித்துத் துவைத்துச் சுத்தம் செய்வான் உடன்வரும் மனிதன். பின்னர் அழுக்குப் போன சுத்தமான துணிகளை மூட்டையாகக் கட்டி கழுதையின் முதுகில் ஏற்றுவான்.

    கழுதை சுத்தம் செய்யப்பட்ட துணிகள் அடங்கிய மூட்டையுடன் மாலையில் திரும்பி இந்த வழியாகவே நடந்து வரும். வரும்போதும் போகும்போதிருந்த அதே நிதானம்.

    இப்போது தன் முதுகில் ஏற்றப்பட்டுள்ள துணிகள் சுத்தம் செய்யப்பட்டவை என்ற கர்வமோ மகிழ்ச்சியோ அதன் முகத்தில் ஒருசிறிதும் தென்படுவதில்லை.

    அன்பனே! நாம் இந்தக் கழுதைபோல் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். காலையிலே போகும்போது அழுக்கு மூட்டைகளைச் சுமந்து செல்கிறோம் என்ற வருத்தமும் அதற்கு இல்லை. மாலையில் திரும்பி வரும்போது அழுக்கு நீக்கப்பட்ட சுத்தமான துணிகளைச் சுமந்துவருகிறோம் என்பதில் மகிழ்ச்சியும் அதற்கு இல்லை.

    நாமெல்லாம் கழுதைகள்தான். துன்ப நினைவுகள் என்ற அழுக்கைச் சுமக்கிறோம். இன்ப நினைவுகள் என்ற சுமையையும் சுமக்கிறோம். இந்தக் கழுதையைப் போல் நம் சுமைகள் எப்படி இருந்தாலும் அவற்றால் பாதிக்கப் படாமல் இருப்போமானால் நிம்மதியாக வாழலாம்.

    இன்பத்தாலும் துன்பத்தாலும் பாதிக்கப் படாமலிருக்கும் கழுதையின் மனநிலையை நாம் பயிற்சி மூலம் பெறவேண்டும். அதுவே ஞானம். அதை நீயும் அடைவாயாக!`

    என்றார் முனிவர்.

    அந்த மனிதன் அவரைக் கைகூப்பி வணங்கினான். ஞானம் பெற்றுவிட்டால் ஞானியாகி விடலாம். ஞானிகளை இன்ப துன்பங்கள் பாதிப்பதில்லை என்பதை அவன் புரிந்துகொண்டான்...

    திரையரங்கிற்குச் சென்று படம் பார்க்கிறோம். திரைப்படத்தில் ஓர் அருவி வருகிறது. அருவியில் தண்ணீர் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. படம் முடிந்து பார்க்கும்போது படம் காட்டப்பட்ட திரையில் ஒரு சிறிதளவு ஈரம் கூட இல்லை.

    அதேபோல் நெருப்புப் பிடித்து எரிகின்ற காட்சிகள் திரைப்படத்தில் வருகின்றன. ஆனால் அந்தத் திரையை அதில் காட்டப்பட்ட நெருப்பு பாதிப்பதில்லை. திரை அதனால் கருகிப் போவதில்லை.

    படத்தில் வருகின்ற நீருக்கும் நெருப்புக்கும் அந்தத் திரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    நாம் அந்தத் திரை மாதிரி இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நம் மனமே அந்தத் திரை. நம் மனத்தில் தோன்றும் இன்ப துன்ப நினைவுகளே திரையில் தோன்றும் நீரும் நெருப்பும்.

    எப்படி திரையில் தோன்றும் நீராலோ நெருப்பாலோ அந்தத் திரை பாதிப்படைவது இல்லையோ அதுபோல் இன்ப துன்பங்கள் நம் மனத்தை பாதிக்கக் கூடாது.

    அத்தகைய பக்குவம் நமக்கு வந்துவிட்டால் அதுவே ஞானம். அத்தகைய ஞானம் பெற்றுவிட்டால் எந்த இன்பமும் சரி, எந்தத் துன்பமும் சரி, நம்மை ஒன்றும் செய்யாது.

    யார் கற்றுக் கொடுக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. கற்றுக் கொடுப்பவர் அது கழுதையானால் என்ன, திரையரங்கத்தின் காட்சித் திரை ஆனால் என்ன? அவற்றிடமிருந்து எதைக் கற்றுக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்.

    ராமபிரான் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவிக்கும் ஞானிக்குரிய மனநிலையைப் பெற்றிருந்தான். உனக்கு மகுடம் உண்டு என்றபோது அவன் இன்பத்தில் ஆழவில்லை. அந்த மகுடம் உனக்கில்லை, உன் தம்பிக்குத் தான், நீ காட்டுக்குப் போ என்று சொன்னபோது அந்தச் செய்தி அவனை வருத்தவுமில்லை.

    இன்ப துன்பங்களை ஒன்றாக பாவிக்கும் மனநிலையை அவன் பெற்றிருந்ததே அதற்குக் காரணம்.

    ராமபிரானது இந்த அரிய பண்பை இலங்கையில் அசோக மரத்தடியில் வீற்றிருக்கும் சீதை நினைத்துக் கொள்கிறாள்.

    `மெய்த்திருப்பதம் மேவென்ற போதினும்

    இத்திருத்துறந்து ஏகென்ற போதினும்

    சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை

    ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்`

    என்கிறார் கம்பர். ராமனின் முகம் சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரைபோல் இருந்தது என்கிறார்.

    குளத்தில் பூத்த உண்மைத் தாமரைகள் மாலையில் வாடிவிடும். சித்திரத் தாமரைகள் ஒருபோதும் வாடுவதில்லை. ராமன் திருமுகத்தில் துன்பத்தால் வாட்டம் ஒருபோதும் தோன்றுவதில்லை.

    பற்றில்லாமல் எந்தச் செயலையும் செய்யும் ஞான நிலைக்கு நாம் உயர வேண்டுமானால் தெய்வத்தின்மேல் பக்தி கொண்டு தெய்வத்தையே சரணடைந்து வாழவேண்டும் என்கிறது வள்ளுவம்.

    `பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

    பற்றுக பற்று விடற்கு`

    என்கிறார் திருவள்ளுவர்.

    எந்தப் பற்றும் இல்லாத முழுமையான ஞானியான கடவுளின் பாதங்களை மனதளவில் இறுகப் பற்றிக் கொண்டால் நாம் நமது பற்றுகளிலிருந்து எளிதாக விடுபட முடியும்.

    அப்படிப் பயிற்சி செய்தால் இன்பமும் துன்பமும் அற்ற நிம்மதியான மனநிலையை நாம் அடைய முடியும். அதுவே ஞானம். ஞானம் பெறுவதே மனித வாழ்வின் நோக்கம்.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×