என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதும் நல்லது.
    • பல்வேறு வகையான உணவு பழக்கவழக்க முறைகள் உலகம் முழுதும் கடைபிடிக்கப்படுகின்றன.

    எவ்வளவு மருந்து தான் எடுத்துக்கொள்வது என்கிற சலிப்பு பொதுவாகவே முதுமையில் வந்துவிடுகிறது. மருந்து மாத்திரைகளோடு தான் இனி வாழ்நாள் முழுமையும் பயணிக்க வேண்டுமா? என்ற எண்ணம் முதுமையில் வாழ்க்கையின் உற்சாகத்தையே குறைத்து விடுகிறது. இந்நிலையில் உணவு மற்றும் உணவு முறை சார்ந்த முழு அறிவும், விழிப்புணர்வும் முதுமைக்கு அவசியமாகிறது.

    "மருந்து கால், மதி முக்கால்" என்பது வழக்குமொழி. ஏனெனில் மருந்துண்பது என்பது ஒருபுறமிருக்க, நுட்பமான அறிவோடு உணவுக்கட்டுப்பாடு மட்டுமே வாழ்நாளை ஆரோக்கியமாக நகர்த்த பேருதவி புரியும் என்பதை முதியவர்கள் மட்டுமின்றி, அனைத்து வயதினரும் புரிந்துகொள்வது இத்தருணத்தில் அவசியமாகிறது.

    வாழ்வியல் நெறிமுறை மாற்றங்கள் உடல் எடையைக் குறைப்பதில் மிக அவசியமானவை. அதில் ஆரோக்கியமான உணவு, நல்ல உறக்கம், உடல் பயிற்சி ஆகிய அனைத்தும் அடங்கும். முக்கியமாக உணவு கட்டுப்பாடு என்பது உடல்பருமன் எனும் கொடிய நோய்நிலையில் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டு வர பெருந்துணை புரியும். இதன்மூலம் மற்ற நோய்நிலைகளையும் கட்டுக்குள் கொண்டு வந்து, உடலை காத்துக்கொள்ள முடியும்.

    முதுமையில் உணவு முறை மாற்றத்தில் கையில் எடுக்க வேண்டிய ஆயுதமாய் இருப்பவை பாரம்பரிய உணவுகள் தான். முதுமையில் பாரம்பரிய உணவு முறைகளை நாடுவது உடல் பருமனைக் குறைக்க உதவுவதோடு மட்டுமின்றி, சிறுநீரக நோய், ரத்த குழாய் அடைப்பு, ரத்தத்தில் கொழுப்பு, சத்துக்கள் குறைபாடு போன்ற பல்வேறு நோய்நிலைகளை தடுக்க உதவும்.


    பொதுவாக அதிகம் பேர் பயன்படுத்தும் உணவாக இருப்பவை வெள்ளை அரிசி சார்ந்த உணவுகள் தான். இவற்றில் சர்க்கரை சத்து அதிகமாகவும், இரும்பு சத்து, கால்சியம், நார்சத்து ஆகியவை மிகச்சொற்பமாகவே உள்ளன. இதனால் உடலுக்கு பெரும்பயன் ஒன்றுமில்லை. ஆகவே வெள்ளை அரிசி சார்ந்த உணவுகளை முற்றிலும் குறைப்பது நல்லது.

    அதற்கு மாற்றாக நோய் நீக்கும் நிறமி சத்துக்களையும், நார்சத்துக்களையும், விட்டமின்கள், தாது உப்புக்கள் இவற்றைக் கொண்ட கருப்பு நிற அரிசிகளான கருப்பு கவுனி, காட்டு யானம் ஆகியவற்றைப் பயன்படுத்துவது முதுமைக்கு நல்லது.

    பாரம்பரிய அரிசி வகைகளில் உள்ள நிறமிசத்துக்கள் உடல் பருமனுக்கு காரணமாகும் வளர்ச்சிதை மாற்றக் குறைபாட்டினை தடுத்து உடலை காத்து ஆரோக்கியம் நோக்கி நகர உதவுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அவற்றின் நிறத்திற்கு காரணமாகும் ஆன்தோசயனின் மற்றும் ப்ரோ-ஆன்தோசயனின் ஆகிய நிறமிகள் அதன் மருத்துவ குணத்திற்கு காரணமாய் உள்ளன. இவற்றின் கிளைசெமிக் குறியீடு எனும் சர்க்கரை சத்தினை குறிக்கும் அளவும் குறைவாக இருப்பதோடு, உடல் பருமனை உண்டாக்கும் இன்சுலின் எதிர்ப்பு தன்மையை நீக்குவதாகவும் உள்ளன.

    அதே போல் நாம் பயன்படுத்த மறந்த சிறுதானியங்களையும் பயன்படுத்த துவங்குவது முதுமைக்கு நல்லது. அதிக நார்சத்து கொண்ட, குறைந்த சர்க்கரை சத்து உடைய கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற குறுதானியங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். அவற்றாலான கேழ்வரகு களி, கம்பங்கூழ், சோள தோசை ஆகிய பண்டைய காலத்தில் நாம் அதிகம் பயன்படுத்திய தானிய உணவுகளை சேர்ப்பது உடல் பருமனைக் குறைப்பதோடு மட்டுமின்றி, உடலுக்கு தேவையான பிற சத்துக்களையும் அள்ளித்தரும்.

    மேலும் தினை, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதும் நல்லது. இவற்றாலான உணவுகளையும் அடிக்கடி உணவில் சேர்ப்பது உடல் பருமன் மட்டுமின்றி நீரிழிவு, ரத்த சோகை, கால்சியம் குறைபாட்டால் உண்டாகும் எலும்பு மூட்டுத் தேய்மானம் ஆகிய இன்னும் பல நோய்நிலைகளிலும் நன்மைகளைத் தரும்.

    சிறு தானியங்களின் சிறப்பு என்னவெனில் அவற்றில் சர்க்கரை சத்து குறைவாக இருப்பதுடன் உடலுக்கு அத்தியாவசியமான இரும்பு சத்து, கால்சியம், துத்தநாகச் சத்து போன்ற நுண்ணூட்ட சத்துக்களும், பல்வேறு நோய்நிலைகளில் நன்மை பயக்கும் நார்ச்சத்தும், உடலின் வளர்ச்சிக்குத் தேவையான புரதச்சத்தும் அதிகம் உள்ளது. எனவே சிறுதானிய உணவினை நாடுவது சரிவிகித போஷாக்களுக்கும் உணவாக உள்ளது. சிறு மற்றும் குறுதானியங்களில் குறைந்த கிளைசெமிக் குறியீடு (GI) உள்ளபடியால் உடல் பருமனை குறைப்பதில் பேருதவி புரியும். இவற்றை உண்டவுடன் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காமல் தடுப்பதுடன், ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவும். இவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் முதுமையில் உண்டாகும் மலச்சிக்கலைப் போக்கவும் உதவும். "ஆயில் ஆயுளைக் குறைக்கும்" என்பது புதுமொழி. அந்த வகையில் உடல் பருமனைக் குறைக்க, எண்ணெயில் வறுத்த பதார்த்தங்களையும், எண்ணெய் தோய்ந்த உணவுகளையும் குறைப்பது நல்லது. வணிக ரீதியாக கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான உணவுப் பொருட்களைத் தயாரிக்க மீண்டும் மீண்டும் பயன்படுத்திய எண்ணெய் பயன்படுத்துவதால், அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

    சோ.தில்லைவாணன்

    சோ.தில்லைவாணன்

    இவ்வாறு தயாரித்த உணவில் டிரான்ஸ் கொழுப்பு அதிகம் உள்ளதால் அவை உடல் பருமனை அதிகரிக்க துணைபுரியும். மேலும் இந்த டிரான்ஸ் கொழுப்பு, ரத்தத்தில் ட்ரைகிளிசெரைட் கொழுப்பினை அதிகரித்து இதயம் சார்ந்த நோய்களையும் உண்டாக்கும் என்று எச்சரிக்கின்றன ஆய்வுத் தரவுகள்.

    முதுமையில் நலமுடன் பயணிக்க, உணவில் பிஞ்சுக் காய்கறிகளை அதிகம் சேர்ப்பது உடல் எடையைக் குறைக்க வழிவகை செய்யும். நார்சத்துக்கள் அதிகம் கொண்ட, குறைந்த கலோரிச் சத்துள்ள பிஞ்சுக் காய்கறிகளையும், கீரைகளையும் உண்ணும் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள மேலும் உடல் எடை கூடாமல் தடுக்கலாம்.

    காய்கறிகள், பழங்களில் உள்ள நார்ச்சத்துக்கள் பசி எடுப்பதை தடுப்பதோடு, வயிறு நிரம்பிய உணர்வையும் தரும். மேலும் இவை உணவில் உள்ள கொழுப்புப் பொருட்கள் உட்கிரகிப்பதை தடுத்து உடல் எடை குறைய உதவுவதாக உள்ளன.

    உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை சத்தும், புரதச்சத்தும் சம அளவான கலோரி சக்தியினை அளிப்பதாக உள்ளன. மாறாக கொழுப்புச் சத்தானது இரண்டு மடங்கு அதிக கலோரி சக்தியினை அளிப்பதாக உள்ளது. எனவே அத்தகைய கொழுப்பு சத்துள்ள எண்ணெய் சார்ந்த உணவுப்பொருட்களை குறைப்பதும், தவிர்ப்பதும் நல்லது. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை (மோர் தவிர) தவிர்ப்பது உடல் எடையைக் குறைக்க உதவும்.

    பல்வேறு வகையான உணவு பழக்கவழக்க முறைகள் உலகம் முழுதும் கடைபிடிக்கப்படுகின்றன. மத்திய தரைக்கடல் உணவு முறை, பாலியோ உணவு முறை, சைவ உணவு முறை, அறிவியலாளர் ஆர்னிஷ் உணவு முறை போன்றவைகள் அவற்றில் சில.

    இவற்றில் சிறப்பானதாக கருதப்படுவது மத்திய தரைக்கடல் பகுதி உணவு முறை தான். இது இத்தாலி, கிரேக்கம் ஆகிய நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் உணவு முறை. இந்த உணவு முறையானது பழங்கள், காய்கறிகள், கொட்டை வகைகள், மீன், கடல் உணவுகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வலியுறுத்துகிறது. தாவர வகை உணவுப் பொருட்களை அதிகம் சேர்த்துக்கொள்ள வலியுறுத்துவது இதன் சிறப்பு. இத்தகைய உணவு முறையை பின்பற்றி 12 மாதங்கள் நடந்த ஆய்வில் உடல் பருமன் 8.7சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுவது கூடுதல் சிறப்பு.

    அடுத்து மிகச்சிறப்பானதாக கருதப்படுவது சைவ உணவு முறை. இதில் தாவர வகை உணவுப்பொருட்கள் மட்டும் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. இறைச்சி, மீன், பால் மற்றும் பால் பொருட்கள், முட்டை இவை அனைத்தும் தவிர்க்கப்படும். இந்த உணவு முறையில் உடல் பருமன் சிறப்பான முறையில் குறைவதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. முதுமையில் எளிமையாக சைவ உணவு முறையைப் பழகுவது முதுமைக்கு அதிகம் நன்மை பயக்கும்.

    உணவில் கலோரி சத்துக்களின் அளவைக் குறைப்பது எளிமையான வழிமுறை. உண்ணும் பொருட்களின் கலோரி அளவினை மதிப்பிட்டு, அதற்கேற்ப உணவு முறைகளை மேற்கொள்வது நல்லது. அதிக கலோரி அளிக்கும் எண்ணெய் பொருட்களும், சர்க்கரை சத்துள்ள கிழங்கு வகைகளும் தவிர்ப்பது உடல் எடை குறைய வழிவகை செய்யும்.

    தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்வது சமீப காலங்களில் அதிகமாகிவிட்டது. சிறு குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பாக்கெட் பொருட்களை நாடுவது உடலின் ஆரோக்கியத்துக்கு ஆபத்து தான். அத்தகைய தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் போது அதில் முக்கிய நன்மை பயக்கும் இயற்கை வேதிப்பொருட்களை நீக்கிவிட்டு செயற்கை நிறமிகளையும், பதப்படுத்தும் வேதிப்பொருட்களையும் சேர்ப்பது உடல் பருமன் போன்ற நோய்களுக்கு வித்திடும். ஆக எக்காலத்தும் அத்தகைய உணவுகளுக்கு சிவப்பு கொடி காட்டுவது நல்லது.

    முதுமையில் அதிகமான உடல் எடையைக் குறைக்க மருந்துகள், உணவுப்பொருட்கள், உணவு முறைகள் போன்றவைகள் ஒரு புறமிருக்க, எல்லாவற்றுக்கும் மேலாக உடல் எடையைக் குறைக்க மனம் இருக்க வேண்டும். 'மனமிருந்தால் மார்கம் உண்டு' என்பதைப் போல, எல்லா நோய்நிலைகளையும் எதிர்கொள்கின்ற மனம் இருக்க வேண்டியது மிக அவசியம். அத்தகைய மனம் இருந்தால் முதுமை என்றென்றும் மகிழ்ச்சியே.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com (8056040768)

    • மாசி மாதத்தில் வரும் ஏகாதசிகளுக்கு ஜெய ஏகாதசி, விஜய ஏகாதசிகள் என்று பெயர்.
    • விஜயதசமியைப் போலவே இந்த ஏகாதசியும் வெற்றியைத் தரும் ஏகாதசியாகக் கருதப்படுகிறது.

    விரதங்களில் ஏகாதசிக்கு இணையான விரதம் எதுவும் இல்லை என புராணங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு ஏகாதசிக்கும், ஒரு தனிப்பட்ட பெயரும் தனிச்சிறப்பும் உண்டு.

    மாசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு விஜய ஏகாதசி என்று பெயர். நாளை (புதன்கிழமை) விஜய ஏகாதசி தினமாகும். இந்த விஜய ஏகாதசிக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. குறிப்பாக இந்த ஏகாதசி விரதத்தை நாளை கடைபிடிப்பதால், மனம் தூய்மை அடைகிறது.

    ஏகாதசி விரதம் எவ்வளவு கடினமானதோ, அவ்வளவு பலன் தரும் என்பதும் நம்பிக்கை. தொடர்ந்து 12 ஏகாதசிகளில் விரதம் இருப்பது பல நூறு அஸ்வமேத யாகங்களும், கங்கையில் பல முறை புனித நீராடியதற்கு சமமான பலனையும் தரக் கூடியது என புராணங்கள் சொல்கின்றன.

    மாசி மாதத்தில் வரும் ஏகாதசிகளுக்கு ஜெய ஏகாதசி, விஜய ஏகாதசிகள் என்று பெயர். இதில் வளர்பிறை வருவது ஜெய ஏகாதசி என்றும், தேய்பிறையில் வருவது விஜய ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு ஏகாதசிகளிலும் விரதம் இருப்பவர்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    சனாதன தர்மத்தின் படி, ஆண்டு முழுவதும் 24 ஏகாதசிகள் வருகின்றன, அவற்றில் நாளை வரும் விஜய ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    விஜயதசமியைப் போலவே இந்த ஏகாதசியும் வெற்றியைத் தரும் ஏகாதசியாகக் கருதப்படுகிறது. பொதுவாக, இந்த ஏகாதசி விஷ்ணு பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த விரதத்தை அனுசரிக்கும் நபர்கள் நாள் முழுவதும் விஷ்ணு பகவானை வழிபட வேண்டும், இதனால் அவர்கள் ஆசீர்வாதத்தையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் பெறுவார்கள்.

    விஜய ஏகாதசி நாளை காலை தொடங்கி வியாழக்கிழமை காலை முடிவடைகிறது. இந்த விரதத்தின் பரணை பிற்பகல் 1.43 மணி முதல் மாலை 4.04 மணி வரை செய்யப்படும்.

    ஏகாதசி விரதம் முடிவடையும் போது அது பரணா எனப்படும். பொதுவாக எல்லா விரதங்களும் ஒரே நாளில் மாலை/இரவில் ஏதாவது சாத்வீக உணவுகளை சாப்பிட்டு முடிக்கப்படும், ஆனால் ஏகாதசியின் மறுநாள் சூரிய உதயத்திற்குப் பிறகும், சூரியன் மறைவதற்கு முன்பும் விரதம் இருக்க வேண்டும். அதாவது வழக்கமான உணவை உண்பதன் மூலம் விரதத்தை முடிக்க வேண்டும்.

    துவாதசி திதிக்குள் பரணத்தைச் செய்யாமல் இருப்பது பாவத்திற்குச் சமம் என்பது நம்பிக்கை. கூடுதலாக, நோன்பு திறக்கும் போது, ஒருவர் தியானம் செய்ய வேண்டும். அல்லது விஷ்ணுவின் பெயரை உச்சரிக்க வேண்டும். விஜய ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பது மிகவும் புண்ணிய மானதாக கருதப்படுகிறது. மேலும், பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் அருளைப் பெற, முழுமையான சடங்குகளைப் பின்பற்றி விஜய ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

    விஜயம் என்றால் வெற்றி என்று அர்த்தம். கடினமான சூழலில் போராட்டமான வாழ்க்கையில் இருப்பவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஏகாதசி விஜயா ஏகாதசி. இந்த ஏகாதசி விரதத்தை ராமபிரானே கடைப்பிடித்ததாக ஐதீகம்.

    வினைப்பயன்களாலேயே இந்த வாழ்க்கை உருவாகிறது. நல் வினைகளோடு பிறந்தவர்கள் வாழ்வில் நற்பயன்களையும் தீவினைகளோடு பிறந்தவர்கள் துன்பத்தையும் வாழ்வில் அனுபவிக்கின்றனர் என்கின்றன சாஸ்திரங்கள்.

    ஆனால் அவையே இதற்கான தீர்வையும் சொல்கின்றன. ரிஷிகளும் ஞானிகளும் மனிதர்களின் பாவத்தைப் போக்கும் விரத நாள்களைக் கண்டு தெளிந்து அவற்றை ஒரு முறையாக வகுத்தனர். யார் எந்த தெய்வத்தை வணங்குபவர்களாக இருந்தாலும் அவர்கள் தங்களின் இஷ்ட தெய்வத்தை வழிபட உகந்த நாள்களை உருவாக்கி அன்று வழிபடவேண்டிய முறைமைகளையும் உருவாக்கினர்..

    சிவனை வழிபடுபவர்களுக்கு பிரதோஷமும், முருகனை இஷ்ட தெய்வமாகக் கொண்டவர்களுக்கு சஷ்டியும், விநாயகரைத் தொழுதுகொள்பவர்களுக்கு சதுர்த்தியையும் விசேஷ தினங்களாக வகுத்தனர். அதேபோன்று விஷ்ணுவை வழிபட உகந்த தினம் ஏகாதசி. வளர்பிறை தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் ஏற்படும் ஏகாதசி திதி தினத்தில் விஷ்ணுவை வழிபடத் துன்பங்கள் தீரும்.

    ராமர் மனிதர்களுக்கு உதாரண புருஷராக வாழ்ந்துகாட்டியவர். மனிதர்கள் தங்கள் பாவங்கள் தீர வாழ்வில் வெற்றிபெற மேற்கொள்ள வேண்டிய வழிபாடுகளைத் தன் வாழ்வில் செய்துகாட்டியவர். அப்படி அவர் மேற்கொண்ட விரதங்களில் ஒன்று விஜயா ஏகாதசி.

    ராவணனுடன் போரிட இலங்கை செல்லும் முன்பு அந்தப் போரில் வெல்ல என்ன செய்ய வேண்டும் என்று வக்தால்ப்ய ரிஷியிடம் கேட்டார் ராமர். அதற்கு அந்த ரிஷியும் விஜயா ஏகாதசி விரத மகிமைகளை எடுத்துச்சொல்லி அதை மேற்கொள்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதை விளக்கினார். ராம பிரானும் தவறாமல் அந்த விரதத்தைக் கடைப்பிடித்து அதன் பலனை அடைந்தார் என்கிறது புராணம்.

    விஜயா ஏகாதசி நாளில் உபவாசம் இருந்து வழிபடுவது சிறந்தது. உபவாசம் என்றால் அருகில் வசிப்பது என்று பொருள். இரையைத் தவிர்த்து இறைச் சிந்தனையில் மூழ்கியிருந்தால் அந்த இறைவன் நம் அருகில் வாசம் செய்வான் என்பது பொருள். எனவே முடிந்தவர்கள் முழு பட்டினி கிடந்து விரதம் மேற்கொள்வது பயன்தரும். துளசி தீர்த்தம் மட்டும் அருந்தலாம். இயலாதவர்கள் முழு அரிசிச் சோற்றைத் தவிர்ப்பது நல்லது.

    அதுவும் முடியாதவர்கள் தவறாமல் இறைவனின் நாமத்தை உச்சரித்துக்கொண்டிருப்பது நல்லது. விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை உரைக்கும் சகஸ்ர நாமத்தை இந்த நாளில் கேட்பது பயன்தரும். குறைந்தபட்சம் நாளை கட்டாயம் ஆலயம் சென்று பெருமாளை வழிபட்டு அங்கு அமர்ந்து விஷ்ணு சகஸ்ர நாமப் பாராயணம் செய்து வழிபடுவதன் மூலம் விஜயா ஏகாதசி விரதத்தின் பலனை முழுமையாகப் பெறலாம்.

    விஜய ஏகாதசிக்கு அப்படி என்ன சிறப்பு?

    ஜனக மகாராஜா, தனது மகள் ஜானகிக்கு சரியான கணவனை தேர்வு செய்ய முடியாமல் குழப்பத்தில் இருந்தார். தெய்வ அம்சம் பொருந்திய தனது மகளுக்கு யாரை மணமகனாக தேர்வு செய்வது என யோசித்த அவர், மகா விஷ்ணுவிடமே இதற்கு வழி கேட்கலாம் என முடிவு செய்து, யாகம் ஒன்றை நடத்தினார்.

    அந்த யாகத்தின் பயனாக ஜனகரின் முன் தோன்றிய மகா விஷ்ணு, விஜய ஏகாதசி நாளில் உனது அரண்மனை வாசலை தேடி வரும் ஒருவனுக்கு உனது மகளை திருமணம் செய்து கொடு என கூறினார்.

    விஜய ஏகாதசி நாளுக்காக ஜனக மகாராஜாவும் காத்திருந்தார். அந்த நாளில் அரண்மனை வாசலுக்கு மிதிலையின் இளவரசன் ஸ்ரீ ராமரே வந்தார். அவருக்கு ஜனகர் தனது மகளை திருமணம் செய்து கொடுத்ததாக புராணங்கள் சொல்கின்றன.

    அதனால் விஜய ஏகாதசி தினம் வெற்றிக்குரிய நாளாகவும், நினைத்தவற்றை நிறைவேற்றி தரும் நாளாகவும் குறிப்பிடுகிறார்கள். இந்த நாளில் தான் ஸ்ரீராமர், அரக்கர்களை அழித்து வெற்றி கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

    விஜய ஏகாதசி நாளில் முழு உபவாசம் இருந்து, மகா விஷ்ணு திருநாமங்களை பாராயணம் செய்ய வேண்டும். பகவத்கீதை புராணத்தை படிக்கலாம். மகாவிஷ்ணுவை போற்றும் பாடல்களை பாட வேண்டும்.

    என்ன பலன் கிடைக்கும்?

    விஜய ஏகாதசி விரதம் இருப்பவர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். நல்ல ஆரோக்கியம், அதிர்ஷ்டம், செல்வம், வளமான வாழ்வு ஆகியவை கிடைக்கும். பிறப்பு, இறப்பு இல்லாத நிலையை அளிப்பதுடன், மோட்சத்தையும் கொடுக்கும்.

    விஜய ஏகாதசி அன்று, விரதம் இருப்பதன் மூலம், வாழ்க்கையில் செல்வ வளம் வெற்றி, நிம்மதி, ஐஸ்வர்யம், அதிர்ஷ்டம் என அனைத்தையும் பெற்று சிறப்பாக வாழலாம்.

    கோபம், வெறுப்பு, குழப்பம் ஆகிய அனைத்தும் நீங்கி மனதில் நிம்மதியான உணர்வு ஏற்படும். நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகி, வாழ்க்கையில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் அடையலாம்.

    என்ன மந்திரம் சொல்ல வேண்டும்?

    "ஓம் நமோ பகவதே வாசுதேவாய"

    "ஓம் நமோ நாராயணா"

    இந்த மந்திரங்களை பூஜையின் போதும், மற்ற நேரங்களிலும் பாராயணம் செய்வது மகாவிஷ்ணுவின் ஆசிகளை பெற்றுத்தரும்.

    • திருமலையில் இருந்தவர் திருமலை நம்பி.
    • அனந்தாழ்வார் தான் வந்த வேலையான நந்தவனம் அமைக்கும் வேலையை செய்ய ஆரம்பித்தார்.

    பச்சை கற்பூரம்: பச்சை கற்பூரம் என்று சொன்னாலே தெய்வீக மணம் ஞாபகத்திற்கு வரும். குறிப்பாக திருப்பதி பெருமாள் சன்னதி ஞாபகத்திற்கு வரும். ஆக்கப்பூர்வமாக மனதினை மாற்றி விடும் சக்தி பச்சை கற்பூரத்தின் நறுமணத்திற்கு உண்டு. உணவின் சுவைக்காக கூட பச்சை கற்பூரம் சேர்க்கப்படுகின்றது. இதற்கு நிறைய மருத்துவ குணங்களையும் பயன்படுத்துவார்கள். ஆயினும் இதனை மிகக் குறைவாகவே பயன்படுத்துவார்கள்.

    திருப்பதியில் பெருமாளுக்கு நெற்றிக்கு இடுவதில் பச்சை கற்பூரம் முக்கிய பங்கு வகிக்கும். சரி. ஆனால் பெருமாளின் தாடையிலும் பச்சை கற்பூரம் சாற்றப்படுகின்றது. இது ஏன் என்று தெரியுமா?

    ஸ்ரீரங்கம் எனப்படும் திருவரங்கத்தில் பெருமாளின் சேவையிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் ஸ்ரீராமானுஜர். ஸ்ரீராமானுஜருக்கு ஒரு குறை எப்போதும் மனதில் இருந்தது. திருவேங்கடவருக்கு அதாவது ஏழுமலையானுக்கு ஒரு நந்தவனமும், தபோவனமும் அமைக்க இன்னமும் முடியவில்லையே என தவித்தார்.

    ஸ்ரீராமானுஜர் ஒருநாள் தன் சீடர்களிடம் கேட்கிறார். 'நீங்கள் யாராவது ஏழுமலையானுக்கு அன்றாடம் மாலை கட்டி தரும் பாக்கியத்தினை ஏற்றுக் கொள்வீர்களா? என்று கேட்கின்றார். பலரும் அமைதியாகவே இருந்தனர். அனந்தாழ்வார் என்ற சீடர் மட்டும்தான் அந்த கைங்கர்யத்தை ஏற்றுக் கொள்வதாக முன் வந்தார். ஸ்ரீராமானுஜருக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. அனந்தாழ்வாரும் தனது மனைவியோடு திருமலைக்கு வந்தார்.

    திருமலையில் இருந்தவர் திருமலை நம்பி. இவர் ஸ்ரீராமானுஜரின் தாய் மாமன். இவர் அனந்தாழ்வாரும் அவரது மனைவியும் தங்க எளிய ஏற்பாடுகள் செய்தார். அவர்களால் முடிந்தது குடிசை அமைத்துத்தந்தார். அனந்தாழ்வார் தான் வந்த வேலையான நந்தவனம் அமைக்கும் வேலையை செய்ய ஆரம்பித்தார். நறுமணமுள்ள பூச்செடிகளை நட்டார். தனது குருவின் பெயரால் 'ராமானுஜ நந்தவனம்' என்று பெயரும் சூட்டினார். இன்றும் அந்த நந்தவனம் அதே பெயரில் உள்ளது.


    கோடை காலத்தில் நந்தவனத்திற்கு தண்ணீர் வேண்டுமே. அதற்காக அனந்தாழ்வார் குளம் வெட்டத் தொடங்கினார். குளத்தில் நீர் சேர்த்து வைத்தால் நந்தவனத்திற்கு எப்போதும் தண்ணீர் கிடைக்கும் என்று குளம் வெட்டும் பணியினைத் தொடர்ந்தார். தனியாக வேலை செய்த அவருடன் அவருடைய மனைவியும் உடன் சேர்ந்து வேலை செய்தார்.

    வெட்டும் மண்ணை எடுத்து வெளியே சற்று தள்ளி கொட்ட வேண்டும் அல்லவா. அனந்தாழ்வார் மண்ணை வெட்ட அவரது மனைவி அதனை தலையில் சுமந்து மறுபக்கம் சென்று கொட்டினார். அந்த பெண்மணி அப்போது கருவுற்று இருந்தார்.

    இதனைக் கண்ட ஒரு சிறுவன் அங்கு ஓடி வந்தான். அவன் தானும் இந்த பணியில் உதவுவதாகக் கூறினான். அனந்தாழ்வார் இதனை 'வேண்டாம்' என மறுத்தார். அந்த பையனோ கூலி கூட வேண்டாம். ஆனால் நானும் இந்த பணியினைச் செய்கின்றேன் என்றார். அப்படியும் அனந்தாழ்வார் கண்டிப்பாய் வேண்டாம் என்று சொல்லி அந்த பையனை அனுப்பி விட்டார். இறைவனுக்கு முழுமையாக தானும் தன் மனைவியும் மட்டுமே செய்ய வேண்டும் என்பதில் அனந்தாழ்வார் உறுதியாக இருந்தார்.

    அனந்தாழ்வார் சொல்லியும் போகாத அந்த சிறுவன் ஒரு பக்கம் மறைந்து நின்றார். அனந்தாழ்வாரின் மனைவியைப் பார்த்து 'அம்மா, நான் மண் சுமந்தால் உங்கள் கணவர் கோபிப்பார். ஆகவே நான் இங்கு மறைந்து நிற்கின்றேன். நீங்கள் இதுவரை மண்ணை கொண்டு வாருங்கள். அதன் பிறகு கரைபக்கம் நான் சென்று கொட்டி விடுகின்றேன்' என அன்போடு வேண்டினான். அந்த சிறுவனின் அன்பை அன்னையால் மீற முடியவில்லை.

    'சரி' என்றார். வேலை சற்று வேகம் கூடியது.

    இதனால் அனந்தாழ்வாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 'என்ன சீக்கிரமாக மண்ணை கொட்டி விட்டு வருகிறாயே' என மனைவியிடம் கேட்டார். மனைவியும் 'ஆமாம். எனக்கு சோர்வு தெரியவில்லை. அதனால் வேகமாக செய்து விடுகிறேன்' என்றார்.

    சிறிது நேரம் சென்று அனந்தாழ்வார் மண் கொட்டிய பகுதியை பார்க்க வந்தார். அங்கு அந்த சிறுவன் ஓடி ஓடி மண்ணைக் கொட்டிக் கொண்டு இருந்தான். இதனைப் பார்த்த அனந்தாழ்வாருக்கு கோபம் வந்து விட்டது. தன் கடப்பாரையை எடுத்து வீசினார். இதனால் சிறுவன் தாடையில் காயம் ஏற்பட்டது. அதில் இருந்து ரத்தம் கொட்டியது. சிறுவன் ஓடி விட்டான்.


    மறுநாள் காலையில் கருவறையைத் திறந்த அர்ச்சகருக்கு அதிர்ச்சியானது. பெருமாளின் தாடையில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அர்ச்சகர் செய்வதறியாது பதறினார். 'அனந்தாழ்வாரை அழைத்து வா' என அசரீரி கேட்டது. அர்ச்சகர் அனந்தாழ்வாரை அழைக்க இருவரும் பெருமாள் சன்னதிக்கு ஓடோடி வந்தனர். பெருமாளின் தாடையில் ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. அனந்தாழ்வாரின் கண்களுக்கு பெருமாள் சிறுவனாக காட்சி அளித்தார்.

    அனந்தாழ்வார் கதறி விட்டார். 'பெருமாளே வந்தது நீங்கள் தான் என்று நான் அறியாமல் இருந்து விட்டேனே' என கண்ணீர் விட்டு அழுதார். மன்னித்து விடுங்கள் என்றார். பெருமாள் அனந்தாழ்வாரை நோக்கி, "அனந்தாழ்வார் உன் கைகளால் தொடுத்து மலர் மாலைகளை நீ அளிக்கும் போது நான் மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறேன். ஆனால் கர்ப்பிணியான உன் மனைவி மண் சுமக்கும்போது எனக்கு பொறுக்கவில்லையே" என்றார்.

    அனந்தாழ்வார் பெருமாளின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். சரி பெருமாளின் தாடையில் ரத்தம் வடிகின்றதே என்ன செய்வது? அப்போது தாடையில் சிறிது பச்சை கற்பூரம்வை என்று குரல் கேட்க அதுபடியே அர்ச்சகரும் செய்தார். பெருமாளின் தாடையில் ரத்தம் வடிவது நின்றது. பெருமாள் தாடையில் பச்சை கற்பூரம் வைக்கும் பழக்கம் இன்று வரை தொடர்கின்றது.

    திருப்பதி திருமலைவாசலை தரிசிக்க செல்லும் போது பிரதான வாசலின் வலது பக்கத்தில் இந்த கடப்பாரை இன்னும் தொங்க விடப்பட்டு இருக்கும். திருப்பதி செல்லும் போது அவசியம் இந்த கடப்பாரையையும் பார்க்கலாம்.

    அதிகமாக மருத்துவம் எழுதி பழகி விட்டது. ஆன்மீகம் எழுதும் பொழுது சில மருத்துவ செய்திகள் உடனே எழுத வேண்டும் என்ற வேகத்தினை, ஆர்வத்தினை ஏற்படுத்துகின்றன. கோடை வேறு வந்து விட்டதா? சில எளிய மாற்றங்களை உணவு முறையில் சொல்லலாமே என்று மனம் சொன்னது. சமீபத்தில் நான் பார்த்த காட்சி இதனை எழுதச் சொன்னது. இரண்டு தள்ளு வண்டியில் மிக அருமையான, பிரஷ் ஆன பழங்களை குவித்து விற்றனர். பார்க்கவே நன்கு இருந்தது. பக்கத்தில் ஒரு சுவீட் ஸ்டால். பழ வியாபாரியிடம் வந்த மக்கள் குறைவு. சுவீட் ஸ்டாலில் நிறைவாக இருந்தது. அருகில் இருந்த ஆன்மீக பெரியவர்- அவர்தான் நான் எழுதும் கட்டுரைகளுக்கு பல செய்திகளைத் தருவார்-அவர் திடீரென பழங்களின் தன்மையினை பற்றி பேசினார். அதனை அப்படியே குறிப்பெடுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பொதுவில் பழங்கள் மிக எளிதில் ஜீரணமாகி விடும். அதனால் தான் ஆன்மீக பயணத்தில் இருப்பவர்கள் பழங்களை எடுத்துக் கொண்டனர் என்றார்.


    * அன்னாசி பழம்-சில துண்டுகள் எடுத்துக் கொண்டால் ரத்த சோகை ஏற்படாது. அடிக்கடி ஒரு சில துண்டுகளே போதும்.

    * விளாம்பழம்-இதனை நகர மக்கள் மறந்து விட்டனர். சுண்ணாம்பு, விட்டமின் ஏ சத்து அதிகம். சிறிது வெல்லம் கலந்து சாப்பிட வேண்டும். கண் பார்வை குறைந்து இருப்பவர்கள் இதனை அடிக்கடி பயன்படுத்தலாம். கிருமிகளை அழிக்கும் குணம் விளாம்பழத்திற்கு உண்டு.

    * மாதுளம் பழமும் சரி, தோலும் சரி ஜீரண மண்டலத்தையே சீராக வைக்கும்.

    * ஆரஞ்சு பழத்தில் வைட்டமின்கள் கொட்டி கிடக்குது. கொய்யாபழம்- குறிப்பாக பல நாட்கள் தொடர்ந்து நோயாளிகள் இதனை அன்றாடம் சாப்பிட்டு வந்தால் அநேக நல்ல மாற்றம் கிடைக்கும்.

    * திராட்சையில் கறுப்பு திராட்சையை அதிக மருத்துவ குணங்கள் கொண்டதாக சொல்லுவர். திராட்சை சாற்றினை அடிக்கடி அரை டம்ளர் அளவு அருந்தி வர வேண்டும்.

    * எலுமிச்சை சாறு நீரில் (அ) வெது வெதுப்பான நீரில் கலந்து அன்றாடம் குடிக்கலாம். இதன் பலனை 2 பக்கங்கள் எழுதலாம். எளிமையாக கிடைக்கும். இதன் பலன்கள் பெரிது என்றார்.

    * 2 பேரீச்சம்பழம் அன்றாடம் எடுத்துக் கொள்ளலாம். நரம்புகள் பலப்படும். பல் வியாதி நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

    * பப்பாளி பழ அருமையை இன்று நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள். ஆயினும் கிராம புறங்களில் இந்த பழம் அப்படியே யாரும் எடுக்காமல் தரையில் கொட்டி வீணாகி இருக்கின்றது. இது மாதிரி பலன் அளிக்கும், எளிதாக கிடைக்கும் பழங்கள் சில உள்ளன. இதனால் நரம்புகள் பலப்படுகின்றன. கிராம புறங்களில் குழந்தைகளின் நல்ல மூளை பலத்திற்கும், நரம்புகள் பலத்திற்கும் இப்படி வீணாக கொட்டி யாரும் பழங்களை உபயோகித்து அவர்களை ஆரோக்கியமான குழந்தைகள் ஆக்கலாமே.

    ஆப்பிள்-உடம்பு சரியில்லாதவர்களை பார்க்கச் சொல்லும் பொழுது தெரிந்தோ, தெரியாமலோ 'ஆப்பிள்' வாங்கிச் செல்வார்கள். தலை முதல் கால் வரை என்பார்களே அது போல் உடலின் அனைத்து மண்டலங்களும் பாதுகாக்கப்படும்.

    * வாழைப்பழம் எந்த பிறவியிலும் சிறந்ததே. * பேயன் வாழை. பச்சை வாழை வெப பத்தை உடலில் குறைக்கும். உடல் குளிர்ச்சியில் இருக்கும். * மஞ்சள் வாழை குடலை சுத்தப்படுத்தி விடும், * ரஸ்தாளி கண், உடல் இரண்டிற்கும் வலுவினை அளிக்கும். பொதுவில் ரஸ்தாளி பழத்தினை உடல் எடை அதிகம் இருப்பவர்கள் அடிக்கடி எடுத்துக் கொள்வதை தவிர்ப்பார்கள். * செவ்வாழை பழம் ஜீரண மண்டலம், குறிப்பாக கல்லீரலுக்கு சிறந்த உணவு ஆகும். கண் எரிச்சல், வறட்சி என்பவர்கள் கற்பூர வாழையினைப் பயன்படுத்தலாம். * நாவல் பழம்- தாகம் தணிக்கும். நீரிழி விற்கு சிறந்த தீர்வு. வயிற்றுப் புண், குடல் புண் தீரும்.

    மாம்பழம் கூட ராஜகனி தான். இப்படி இறைவன் நமக்கு அள்ளி நன்மைகளைத் தருகிறார். முறையாக பயன் படுத்திக் கொள்ளலாமே என்றார்.

    • மிகப்பெரிய இக்கட்டில் சிக்கி மீண்டோம். அதை இன்று நினைத்தாலும் உடம்பெல்லாம் சிலிர்க்கும்.
    • ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டு மரங்களில் வந்தவர்கள் மீனா... மீனா... என்று பயங்கர மாக கத்தினார்கள்.

    அதோ நடுக்கடலில் நிற்குது பாருங்கள் கப்பல்! அந்த கப்பலுக்குத்தான் போகப் போகிறோம் என்றதும் ராமேஸ்வரம் கடற்கரை மணலில் நின்றபடி கடலுக்குள் நின்ற கப்பலை பார்த்தேன்... வாவ்... சூப்பர்... அப்போதே துள்ளி குதிக்க வேண்டும் போல் இருந்தது.

    செங்கோட்டை!

    அர்ஜுனுடன் நான் நடித்த படம். அவருடன் நான் நடித்த முதல் படமும் அதுதான். நல்ல கதை. புதிய டைரக்டர் சி.வி.சசிகுமார்.

    இந்த படத்திற்கான சில காட்சிகள்தான் கப்பலில் வைத்து படமாக்கப்பட்டது. அதற்காக நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலுக்கு சிறிய படகு மூலம் அழைத்து செல்ல ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

    அது சிறிய படகு. அந்த படகில் நான், என் அம்மா படகோட்டி மட்டும் இருந்தோம். படகு புறப்பட்டதும் ஜாலியாகத்தான் இருந்தது. அசைந்தாடிய படகும்... பரந்து விரிந்த கடலும் பயணத்தை உற்சாகப்படுத்தியது.


    ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் நினைக்க கூட இல்லை. சில நிமிடங்களில் எங்கிருந்துதான் அவ்வளவு கூட்டம் வந்தது...? எப்படி திரண்டது...? என்று தெரியவில்லை. ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டு மரங்களில் வந்தவர்கள் மீனா... மீனா... என்று பயங்கர மாக கத்தினார்கள். கடல் இரைச்சலையும் தாண்டி அவர்கள் போட்ட சத்தம் என் காதுகளை துளைத்தது.

    சரி ரசிகர்கள்தான்...! நம்மை பார்க்க ஆர்வத்துடன் வந்திருக்கிறார்கள் பார்த்த சந்தோசத்தில் கத்துகிறார்கள்! திரும்பி சென்று விடுவார்கள் என்று நினைத்து நானும் அவர்களை பார்த்து சிரித்தபடியே கை காட்டினேன்.

    கடலில் படகு சென்ற போது அலை உயரும் போது உயர்ந்தும், உடனே கவிழ்வது போல் தாழ்ந்தும் சென்றது. அது மனதுக்குள் பயத்தை கிளப்பியது.

    அந்த நேரத்தில் படகுகளில் வந்தவர்களும் எங்கள் படகை சூழ்ந்து கொண்டு வழி விடாமல் முற்றுகையிட்டபடி அவர்கள் படகால் எங்கள் படகை மோதினார்கள். இதனால் படகு தண்ணீரில் கவிழ்வது போல் தள்ளாடியது. நான் பயந்து நடுங்கினேன். பிளீஸ்... வழி விடுங்கள் என்று கெஞ்சினேன். ஆனால் அதை யாரும் காதில் வாங்கவே இல்லை.

    நிறைய சாக்லெட்டுகள் வாங்கி வந்திருக்கிறார்கள். அதை என் மீது தூக்கி வீசினார்கள். தண்ணீருக்குள் படகு அங்கும் இங்கும் ஆடியதும் என் இதயம் பயத்தில் ஆடியது. படகை கெட்டியாக பிடித்துக் கொண்டேன். அழுகை, அழுகையாக வந்தது. ஆனால் அவர்களோ எங்கள் மீது பரிதாபப்பட்டதாக தெரியவில்லை.

    படகில் உட்கார்ந்து இருந்த பிறகும் நாங்கள் பயந்தோம். ஆனால் அவர்களோ கட்டுமரங்களில் எழுந்துநின்று ஆடினார்கள்.

    அவர்களை தாண்டி எங்களால் செல்ல முடியவில்லை. நடுக்கடலிலேயே தவித்து கொண்டிருந்தோம்.

    ரொம்ப நேரம் ஆகியும் நாங்கள் கப்பலுக்கு செல்லாததால் கப்பலின் மேல் தளத்துக்கு வந்து எங்கள் படகு வருகிறதா? என்று படக்குழுவினர் பார்த்துள்ளார்கள்.

    அப்போது நடுக்கடலில் எங்கள் படகை முற்றுகையிட்டு வழிவிடாமல் தடுத்து தொந்தரவு செய்ததை பார்த்திருக்கிறார்கள்.

    உடனே மாஸ்டர் கனல் கண்ணன் ஒரு படகில் அங்கிருந்து விரைந்து வந்து திரண்டிருந்தவர்களை திட்டி எச்சரித்து விரட்டினார். அதன் பிறகுதான் எங்களால் அங்கிருந்து நகர முடிந்தது. மிகப்பெரிய கண்டத்தில் இருந்து மீட்கப்பட்டது போல் இருந்தது.

    ஒரு சின்ன சீன்தான் எடுத்தார்கள். அதற்காக மிகப்பெரிய இக்கட்டில் சிக்கி மீண்டோம். அதை இன்று நினைத்தாலும் உடம்பெல்லாம் சிலிர்க்கும்.

    அந்த படம் அதிரடி படம் மட்டுமல்ல. வலுவான கதையம்சம் கொண்டது. கதைப்படி அக்ரஹாரத்தை சேர்ந்த நான் அய்யர் பாஷைதான் பேச வேண்டும். பேசினேன் அது எனக்கு புதிய அனுபவம்.


    அந்த படத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் எனக்கு தோழியாக இருப்பார். நிஜமாகவே ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை அந்த பாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தார்கள்.

    "பாடு பாடு பாரத பண்பாடு

    மேலை நாடும் போற்றிடும்

    பண்பாடு...." என்ற பாடலுக்கு நானும் அந்த பெண்ணும் ஆடுவோம். அது எனக்கு ரொம்ப பிடித்தது.

    பாடலில் பண்பாட்டை பற்றி பெருமையாக பேசப்பட்டது போல் அந்த பெண்ணும் நமது பண் பாட்டை பற்றி அடிக்கடி நிறைய விஷயங்களை என்னிடம் கேட்டு தெரிந்து கொண்டார்..

    'வெண்ணிலவே வெள்ளை

    பூவே வா.... வா...

    வெட்கம் என்னும்

    ஆடை வேண்டாம் வா... வா..' என்ற டூயட் பாடல் காட்சிகள் வாகினி ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டது.

    நிறைய காஸ்ட்யூமில் அந்த காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது அர்ஜுனுக்கு குழந்தை பிறந்திருந்தது. அதனால் படப்பிடிப்புக்கு அடிக்கடி தாமதமாக வரவேண்டிய சூழல்.

    அவர் தாமதமாக வந்ததில் எனக்கு சந்தோசம். ஏன் என்றால் என் சம்பந்தப்பட்ட குளோசப் காட்சிகளை நிதானமாக முன் கூட்டியே எடுத்து விடுவார்கள். எங்கள் வீடும் பக்கத்தில் இருந்ததால் கூடுதல் சந்தோசம். ஓய்வு நேரத்தில் வீட்டுக்கு சென்று விடுவேன். இந்த சந்தோசம் எல்லோருக்கும் இருப்பது தானே? இந்த மீனாவுக்கும் ஏற்பட்டதில் தப்பில்லையே?

    இதை நான் அர்ஜுனிடமே சொல்லி இருக்கிறேன். புகழ் பெற்ற டெல்லி செங்கோட்டை போல செங்கோட்டை படமும் பெரும் புகழை தேடி தந்தது.

    அடுத்து வந்தது ஒரு சூப்பர் டூப்பர் படம். தமிழ்நாடே கொண்டாடிய வித்தியாசமான படம். அது என்ன படம் என்று யோசிக்கிறீங்களா...? அது சஸ்பென்ஸ்....

    அடுத்த வாரம் சொல்கிறேன்!

    (தொடரும்)

    • அமெரிக்க அதிபரின் இல்லமான வெள்ளை மாளிகையில் வான்கோழிகளுக்கு மன்னிப்பு வழங்கும் சடங்கும் நடைபெறும்.
    • தம் வாழ்வில் நிறைந்திருக்கும் செல்வத்திற்காக நன்றி செலுத்துவதற்கும், ஒற்றுமையின் உணர்வைக் கொண்டாடுவதற்கும் இது ஒரு சிறந்த நேரமாகக் கருதுகிறார்கள்.

    அமெரிக்காவில் நன்றி செலுத்துதல் நாள் என்பது நம் நாட்டின் தைப்பொங்கல் திருநாள் போன்று ஒரு வகை அறுவடைத் திருநாள். கனடாவில் தோற்றம் பெற்ற நன்றி நவிலல் தினம் அமெரிக்க முதற்குடிகளின் பாரம்பரியத்திலும், ஐரோப்பியரும் சேர்ந்து கொண்டாடும் அறுவடைத் திருநாளாகும். நவம்பர் மாதத்தின் நான்காம் வியாழக்கிழமையன்று நன்றி நவிலல் நாள் கொண்டாடப்படுகிறது. இது அரசியல், சமூக, கலாச்சார, சமய முக்கியத்துவம் வாய்ந்த நாளாகவும் உள்ளது. மொத்தத்தில் ஒரு குடும்ப விழாவாகவே கொண்டாடப்படுகிறது.

    உறவினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் இந்த விழா நாளில் ஊரே திருவிழாக் கோலம் பூண்டுவிடுகிறது. விருந்தும், கேளிக்கையும், மரபுவழிச் சமையலுடன் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. வான்கோழியை முழுக்கோழியாக அவித்தும், பொரித்தும் சமைப்பர். மக்காச் சோளம், கிரான்பெரி பழங்கள், சக்கரை பூசணி கேக் போன்ற உணவுகளை உண்ணுவர்.

    கால்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளும் நடக்கும். கடவுளுக்கு நன்றி செலுத்தும் வழிபாடுகளும் நடப்பது வழக்கம். அமெரிக்கர்கள், ஐரோப்பிய குடியேறிகளுடன், அனைத்து நாட்டு மக்களும் நல்லுறவு பேணுதற்கும் இவ்விழா பயன்படுகிறது.

    நன்றியுணர்வுடன் தொடங்கும் எந்த ஒரு காரியமும் தன்னம்பிக்கை, நேர்மறையான சிந்தையைத் தூண்டுவதோடு, இதனால் அச்சத்தையும் வெல்ல முடியும் என்ற பரவலான நம்பிக்கை இவர்களிடம் உள்ளது. பிரச்சனைகள் உட்பட நம்மிடம் உள்ள அனைத்திற்கும் நாம் முற்றிலும் நன்றியுள்ளவர்களாக இருக்கும்போது அச்சமின்றி வெற்றிகரமாக செயல்பட முடியும் என்ற வகையில் நன்றியுணர்வைப் பின்பற்றுபவர்கள் மிகவும் ஆக்கபூர்வமானவர்கள் என்கிறார்கள்.

    அதனால் துன்பத்திலிருந்து விரைவாக மீண்டு வருவதோடு, வலுவான சமூக உறவுகளைக் கட்டமைக்கக் கூடியவர்களாக இருக்க முடியும் என்றும், நன்றியுணர்வுடன் இருக்கும்போது பெருமளவிலான ஆற்றல், நம்பிக்கை, உறுதிப்பாடு, உற்சாகம், விழிப்புணர்வு ஆகியவற்றை விளைவிப்பதாகவும் ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளதைக் குறிப்பிடுகிறார்கள்.

    நன்றிநவிலல் கொண்டாட்டம் இலையுதிர் கால இலைகளுடன் விடுமுறை அலங்காரம், வான்கோழிப் பதார்த்தங்கள், இனிப்புகள் என்று வீட்டு அலங்காரத்தோடு, சாப்பாட்டு மேசைகளையும் பிரகாசமாக்குகிறது.

    வழக்கமாக தனிக்குடும்பமாக வாழ்பவர்கள், பெற்றோர், சகோதர, சகோதரிகள் போன்ற நீட்டிக்கப்பட்ட குடும்பத்தினருடனும் மகிழ்ந்துக் கொண்டாடும் வகையில் கூடுதல் நாற்காலிகள் போன்றவற்றை அடித்தளத்திலிருந்து மேலே இழுத்துக்கொண்டு வருவார்கள்.

    அடிக்கடி சந்திக்க வாய்க்காத உறவினர்கள் அந்த நாளுக்காக ஒன்றுகூடுவதால் கொண்டாட்டத்திற்கும் மகிழ்ச்சிக்கும் குறைவிருப்பதில்லை. ஏராளமான உணவு வகைகளைச் சாப்பிடுவதுடன், கால்பந்துப் போட்டிகளையும், அணிவகுப்புகளையும் ஒன்றாக அமர்ந்து கண்டுகளிக்க விரும்புகிறார்கள்.

    பெரும்பாலும் இரவு உணவு நேரத்தின்போது உறவுகள் ஒன்றுகூடி, அலங்கரிக்கப்பட்டு, மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்ட சாப்பாட்டு அறையில், பாரம்பரியமான மைய உணவான வறுத்த வான்கோழியுடன், இனிப்பு வகைகள், பீர் போன்ற மதுபானங்கள், திராட்சை இரசம் போன்றவையும் வேண்டுமளவில் வழங்கப்படுகின்றன.

    குடும்பங்கள் ஒன்றுகூடி விருந்து உண்பதற்கு ஏற்ப அமெரிக்காவைச் சுற்றியுள்ள பெரிய நகரங்களிலும், உணவகங்கள் நன்றி தின சிறப்பு உணவுகளை உருவாக்குவதால் வீட்டில் சமைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதில்லை.

    நன்றி செலுத்துதலுக்கு அடுத்த நாள் கருப்பு வெள்ளி என அழைக்கப்படும் விடுமுறையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று நாடு முழுவதும் உள்ள கடைகள் விடிய விடியத் திறந்திருப்பதுடன் சிறப்பான தள்ளுபடிகளையும் வழங்குகின்றன. இக்காலங்களில் கருப்பு வெள்ளி விற்பனை மிகவும் பிரபலமாகிவிட்டன. கறுப்பு வெள்ளி இப்போது அமெரிக்காவில் பரபரப்பான ஷாப்பிங் நாட்களில் ஒன்றாக அறியப்பட்டு, அதன் சொந்த பாரம்பரியமாகவும் மாறியுள்ளது.

    நன்றி செலுத்தும் வார இறுதியில் அடுத்த ஆண்டு மொத்தத்திற்கும் பெரும்பாலும் தேவையான அனைத்து விதமானப் பொருட்களையும் தள்ளுபடி விலையில், பரவலான விளம்பரங்களால் எளிதாக வாங்க முடிகிறது.

    நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நன்றி தெரிவிக்கும் நாளில் தங்கள் குடும்பங்களைப் பார்க்கப் பயணிக்கின்றனர். வருடத்தின் மிகவும் பரவலாகப் பயணம் செய்யும் நாட்களில் ஒன்றான இந்நாளில் விமானங்களும், புகைவண்டிகளும் நிரம்பி வழிவதோடு, பயண தாமதங்களும், சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாகவே இருக்கின்றன.

    நன்றி செலுத்தும் நேரம் அமெரிக்காவில் உள்ள வான்கோழிகளுக்கு மட்டும் மோசமான நேரமாம். நாட்டின் வேடிக்கையான மரபுகளில் ஒன்று, அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒரு வான்கோழிக்கு மன்னிப்பு வழங்குவது. நேரம் நன்றாக இருக்கும் பறவையின் உயிர் காப்பாற்றப்படுகிறது.

    20-ம் நூற்றாண்டின் மையப்பகுதியில் தொடங்கி, அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒவ்வொரு ஆண்டும் ஒன்று அல்லது இரண்டு வான்கோழிகளை மன்னித்து, மனிதாபிமானத்துடன் அந்தப் பறவைகளை படுகொலையிலிருந்து காப்பாற்றி ஒரு பண்ணைக்கு அனுப்பினாராம். இதையடுத்து இதனையே ஒரு சடங்காக பல அமெரிக்கத் தலைவர்களும் அந்த வான்கோழி மன்னிப்புச் சடங்கைச் செய்கிறார்கள். அமெரிக்க அதிபரின் இல்லமான வெள்ளை மாளிகையில் வான்கோழிகளுக்கு மன்னிப்பு வழங்கும் சடங்கும் நடைபெறும்.


    நியூயார்க் நகரில் மேசி வர்த்தக நிறுவனம் மூலமாக ஊர்வலம் நடத்தப்படுகிறது. இதில் பல ஊர்களிலிருந்தும் மக்கள் குழந்தை குட்டிகளுடன் வந்து கலந்துகொள்வது வழக்கம். இன்னிசை முழங்க துண்டுத் தாள்களும்மேலிருந்து மழைபோல் தூவப்படுகிறது. இந்த ஊர்வலத்தில் சாந்தா கிளாசு எனும் கிறிஸ்துமஸ் தாத்தாவும் தோன்றி குழந்தைகளைக் குதூகலப்படுத்துகிறார்.

    இவையனைத்திற்கும் முத்தாய்ப்பாக மலிவு விலையில் குவிக்கப்படும் பொருட்களை மக்கள் சாரி சாரியாகச் சென்று வாங்குவதும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

    தம் வாழ்வில் நிறைந்திருக்கும் செல்வத்திற்காக நன்றி செலுத்துவதற்கும், ஒற்றுமையின் உணர்வைக் கொண்டாடுவதற்கும் இது ஒரு சிறந்த நேரமாகக் கருதுகிறார்கள்.

    அமெரிக்கக் கலாச்சாரத்தில் ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்டுள்ள, நன்றி செலுத்துதல் நாள் வட அமெரிக்காவில் ஐரோப்பிய குடியேற்றவாசிகளின் ஆரம்ப நாட்களைக் குறிக்கிறது. இன்று நன்றியறிதல் ஒற்றுமை, பெற்றுள்ள அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

    • திருவிதாங்கூர் மன்னன் அய்யாவை மண்டியிட்டு வணங்கினான்.
    • கொடிமரத்தை 3 முறை வலம் வந்து வணங்கி அய்யா வைகுண்டரை மிக அருகில் தரிசிக்கலாம்.

    எங்கெல்லாம் அநீதிகள் நடக்கிறதோ, அங்கெல்லாம் தர்மத்தை காக்க நான் அவதரிப்பேன் என்றார் ஸ்ரீமன் நாராயணர். அதன்படி அவர் யுகம்தோறும் அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க அவதரித்துள்ளார்.

    அதில் 10-வது அவதாரமாக கலி எனப்படும் மாய எண்ணங்களை அழித்து தர்ம சிந்தனைகளை ஏற்படுத்தி மக்களை நல்வழிப்படுத்த ஸ்ரீமன் நாராயணர் எடுத்த அவதாரம் தான் அய்யா வைகுண்டர்.

    சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு...

    தமிழகத்தின் தென் கோடியில் உள்ள இன்றைய குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்டு இருந்தது. அந்த கால சூழலில் ஜாதிய கொடுமைகள் மேலோங்கி இருந்தது. கீழ்சாதிகள் என பாகுபாட்டால் 18 சாதி மக்கள் சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆளானார்கள்.

    தாழ்ந்த சாதி எனப்படுபவர்கள் முழங்காலுக்கு கீழே வேட்டி அணியக்கூடாது, பெரிய மீசை வைக்க கூடாது, செருப்பு அணிந்து செல்லக்கூடாது, பெண்கள் தோள்சீலை அணிய கூடாது, தாலி அணிந்திருக்க கூடாது என பலவாறான கொடுமைகள் அரங்கேறின. இந்த சூழலில்தான் குமரி மாவட்டம் சாஸ்தான்கோவில் விளை எனப்படும் சாமிதோப்பில் அன்னை வெயிலாளின் வயிற்றில் அய்யா வைகுண்டர் அவதரித்தார். 24-வது வயதில் இறைவனின் நியமப்படி, திருச்செந்தூர் கடலில் தீர்த்தமாடச்சென்று அக்கடலிலேயே சங்கமித்தார்.

    3 நாட்கள் கடலுக்குள் விஞ்சை பெற்று 3-ம் நாளில் வைகுண்ட சுவாமியாக அவதரித்தார் மகா விஷ்ணு. அவரது அவதாரம் நிகழ்ந்த நாள் மாசி மாதம் 20-ந்தேதி அதிகாலை வேளை.

    செந்தூர் கடலில் அவதரித்த அவர் நேராக சாமிதோப்புக்கு வந்தார். தாழக்கிடப்பாரை தற்காப்பதே தருமம் என்று சாதிய கொடுமைக்கு ஆளாகி கூனி குறுகி கிடந்தமக்களை தலை நிமிர செய்தார். யாருக்கும் அஞ்சி நடக்காதீங்கோ, சட்டம் மறவாதே தன்னளவு வந்தாலும், காணிக்கை வேண்டாதீங்கோ, கைக்கூலி கேளாதீங்கோ என மக்களுக்கு நல் அறிவுரைகளை கூறியதோடு, மக்களை பிரித்தாண்டு கொடுமை படுத்தியவர்களுக்கு அவர்கள் செய்யும் செயலை உணரச்செய்தார்.

    அய்யா வைகுண்டர் காலத்தில் தீண்டாமை, மூடநம்பிக்கை இவற்றில் ஊறிப்போயிருந்த மக்கள் எல்லாம் அய்யாவை தெய்வமாக கொண்டாடினார்கள். இது மேல்மட்ட மக்களை பொறாமைப்பட வைத்தது. அவர்கள் திருவிதாங்கூர் மன்னன் சுவாதி திருநாளிடம் புகார் செய்தார்கள்.


    கலி வயப்பட்ட மன்னனும் தனது படைகளை அனுப்பி அய்யாவை சிறைபிடித்து வர செய்தான். தனது தவக்காலமான 5-ம் வருடம் இறுதியில் அய்யாவை கயிற்றினால் கட்டி சாலையில் இழுத்து சென்றார்கள். அய்யாவை கொல்வதற்கு பல வகைகளில் முயற்சி செய்தார்கள். சாராயத்தில் விஷத்தை கலந்து கொடுத்தனர். வத்தல் அறைக்குள் நெருப்பு போட்டு அய்யாவை அடைத்தனர்.

    சுண்ணாம்பு காளவாயில் வைத்து நீற்றினர். பாலில் விஷம் கலந்து கொடுத்தனர். கட்டைகளை அடுக்கி தீயை வைத்து நீந்திக்கொள் என்று அய்யாவை அதில் தூக்கி போட்டனர். எல்லாவற்றையும் புன்முறுவலோடு பொறுமையாக ஏற்ற அய்யா வைகுண்ட சுவாமியை இறுதியாக புலியை பட்டினிபோட்டு அடைத்து வைத்திருந்த கூண்டில் அய்யாவை அடைத்தனர். புலியோ அய்யாவை வணங்கி அவர் திருவடியில் கிடந்தது. அதன்பிறகே அய்யாவை இறைவன் அவதாரம் என உணர்ந்தனர். திருவிதாங்கூர் மன்னன் அய்யாவை மண்டியிட்டு வணங்கினான்.

    சமதர்ம சமுதாயத்தை உருவாக்க அவர் பட்ட இன்னல்கள், கொடுமைகளும் ஏராளம். எல்லாவற்றையும் அமைதியுடனும், பொறுமையுடன் சகித்தவாறு அடிமைத்தழையில் கட்டுண்டு கிடந்தவர்களை மீட்டார். பொறுத்து இருங்க மக்கா, பூலோகம் ஆளவைப்பேன் என்று மக்களை ஒரு நிரப்பாய் வாழ வைத்தார்.

    ஒருவருக்கொருவர் அன்பாய் இருந்து வாழுங்கள் என்று அன்பு வழியை போதித்தார். நடந்தது, நடப்பது, நடக்கபோவது என முக்காலமும் உணர்த்தும் அகிலத்திரட்டு என்னும் புனித நூலை அருளினார். அன்பால் மக்கள் ஒருங்கிணைந்து வாழ அன்புக்கொடி மக்கள் என மக்களை அழைத்தார். எல்லோரும் ஓரு குலம், எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பதை அன்றே நடைமுறைக்கு கொண்டு வந்தார்.

    ஜோதி வழிபாட்டையும் உனக்குள்ளே இறைவன் இருக்கிறான் என உணர்த்த கண்ணாடி முன் நின்று வழிபடும் முறையையும் ஏற்படுத்தினார். மக்கள் பயன்படுத்தும் பொருட்களில் கூட வேறுபாடுகள் இருக்க கூடாது என முத்திரி கிணறு என பொது கிணறுகள், வழிபடுவதற்காக தாங்கல்கள், பதிகள் அமைத்தார்.

    ஒடுக்கப்பட்ட ஆண்கள் முழங்காலுக்கு கீழ் வேட்டி கட்டக் கூடாது. அங்க வஸ்திரம் அணியக் கூடாது என்று அரசாங்க சட்டம் இருந்த அந்த கால கட்டத்தில் தலைப்பாகை அணிந்து தான் இறைவழிபாடு செய்யவேண்டும் என்றும், பெண்கள் தோள் சீலை அச்சம் இன்றி அணிய வேண்டும் என்றும், மனோதத்துவ ரீதியாக புத்தி போதித்து தம் மக்களை தலை நிமிர்ந்து நிற்க செய்தார்.

    தீண்டாமை என்னும் தீயசக்தியை வேரோடு பிடுங்கும் விதத்தில் திருமண்ணை எடுத்த தம் பக்தர்களின் நெற்றியில் தொட்டு நாமம் சாற்றினார். உங்களுக்கு தெரிந்த பாசையில் இறைவனை போற்றி நீங்களே பணிவிடை செய்யுங்கள் என்று காலை, மாலை இருவேளையும் உகப்படிப்பையும், மதியம் உச்சிப்படிப்பையும் தம் மக்களுக்கு அறிமுகபடுத்தி வழிபடச் செய்தார்.

    எளியோர், வறியோர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் சமமாக அமர்த்தி சாப்பாடு கொடுத்து சமபந்தி போஜனம் நடத்தினார். சாதிக்கொரு கிணறு என்றிருந்த காலத்தில், எல்லோரும் ஒரே கிணற்று நீரை குளிக்கவும், குடிக்கவும் செய்தார். கூட்டு வழிபாட்டு மூலமே கலி என்கிற மாய அரக்கனை வேட்டையாட முடியும் என்று தர்ம நெறிகளை போதித்தார்.

    மகா விஷ்ணுவின் அவதாரமாய் முப்பொருளும் ஒரு பொருளாய் உதித்த வைகுண்டரின் தலைமைப் பதியாக இன்று சாமிதோப்பு விளங்குகிறது. அய்யாவே முன்நின்று முட்டப்பதி, பூப்பதி, அம்பலப்பதி, தாமரைக்குளம் பதி மற்றும் பல பதிகளை அமைத்தார். இன்று அய்யா வைகுண்டசாமி வழிபாட்டு ஆலயங்கள் இந்தியா முழுவதும் மட்டுமின்றி வெளி நாடுகளிலும் விழுதுகளாய் படர்ந்து பரவி வருகிறது.

    அய்யா வைகுண்டரின் தலைமைப்பதி எனப்படுவது சாமிதோப்பு. சாமிதோப்பில் அய்யா வைகுண்டர் 6 ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார். அவர் மூன்று நிலையில் தவம் மேற்கொண்டதாக அகிலம் கூறுகிறது. மூன்று நிலைகளும் மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த நோக்கங்களை கூறும் போது அகிலம்,

    "முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே

    தத்தமுள்ள இரண்டாம் தவசு சாதிக்காமே

    மூன்றாம் தவசு முன்னுரைத்த பெண்ணாட்கும் நன்றான முற்பிதிரு நல்ல வழிகளுக்கும்"

    மேலும் தவத்தின் இருப்பு முறையும் நிலைக்கு நிலை மாறுபட்டதாக கூறப்படுகிறது. முதல் 2 வருடங்களும் அவர் 6 அடி குழியிலும், அடுத்த 2 ஆண்டுகள் தரையிலும், கடைசி 2 ஆண்டுகள் உயர்ந்த பீடமிட்டு தவம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் தவம் புரிந்த கால கட்டத்தில் பச்சரிசிப் பால் தவிர வேறெந்த உணவு உட்கொள்ளவில்லை. குறைவாகப் பேசினார்.

    சாமிதோப்பு பதிக்குள் நுழைவதற்கு முன்பாக, அய்யா உருவாக்கிய முத்திரிக் கிணற்றில் நீர் இறைத்து நீராடி, அந்தக் கிணற்றை வலம் வந்து வழிபட்டு செல்ல வேண்டும்.

    அய்யாவின் பதிக்கு சென்றதும் அய்யா வைகுண்டர் தவம் இருந்த வடக்குவாசலை "சிவசிவ சிவசிவா அரகர அரகரா" என்று உச்சரித்து 5 முறை சுற்றி அய்யாவிடம் மாப்பு கேட்டு, ஏழு நிலை ராஜகோபுரம் தாண்டி, தருமபதியின் கிழக்குப் பார்த்த முகப்பு வாசலை அடைய வேண்டும். முகப்பு வாசலில் இருந்தே அய்யா வைகுண்டரைத் தரிசிக்கலாம். கொடிமரத்தை 3 முறை வலம் வந்து வணங்கி அய்யா வைகுண்டரை மிக அருகில் தரிசிக்கலாம். அய்யா வைகுண்டரின் பள்ளியறையை வலம் வரும் வழியில் அய்யா வைகுண்டர் மானிட அவதாரத்தில் பயன்படுத்திய கட்டில் வைக்கப்பட்டுள்ள அறையைக் காணலாம்.

    பள்ளியறை தரிசனம் முடித்ததும் தருமபதியின் உள் பிராகாரத்தை வலம் வரலாம். அவ்வாறு வலம் வருகையில், கேரள கட்டடக்கலை முறையில் அமைந்து உள்ள அய்யா வைகுண்டர் கருவறையின் பொன் விமானத்தைத் தரிசிக்கலாம்.

    தருமபதி மட்டுமல்ல, இங்கே பின்பற்றப்படும் அத்தனை வழிபாட்டு முறைகளும் வித்தியாசமானவை. தீப ஆராதனை கிடையாது. தேங்காய் உடைக்க மாட்டார்கள். கற்பூரம், சாம்பிராணி, ஊதுவத்தி ஆகியவற்றுக்கும் இங்கே இடமில்லை.

    வெற்றிலை- பாக்கு, மல்லிகைப்பூ, துளசி, பிச்சிப்பூ, பன்னீர், முழு எலுமிச்சைப் பழம் ஆகியவற்றைக் கொண்டு வந்தால் போதும். இவை வழிபாட்டுக்குப் பிறகு, இனிமமாக(பிரசாதமாக) அனைவருக்கும் சரிசமமாகத் தரப்படும்.

    'காணிக்கை வேண்டா(து)ங்கோ…' என்று அய்யா வைகுண்டரே சொல்லியிருப்பதால், தருமபதிகளில் உண்டியல்கள் கிடையாது. இங்கே பிரதானமாக வலியுறுத்தப்படுவது… 'உங்களால் முடிந்த தருமத்தைச் செய்யுங்கள்' என்பதுதான்.

    'தருமம் செய்து தழைத்திருங்கோ…'

    என்பது அய்யா வைகுண்டரின் வாக்கு என்பதால், இங்கே வரும் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த தருமத்தைச் செய்கிறார்கள். அதாவது, தருமபதிகளில் நடைபெறும் அன்னதானத்துக்குத் தேவையான, தங்களால் முடிந்த நிதி உதவியை மனமுவந்து தருகின்றனர் மக்கள்.

    • மொபைல் போனும் இண்டர்னெட்டும் சாப்பாடு தூக்கத்தைவிட முக்கியமாகப்போய்விட்ட காலத்தில் இருக்கிறோம்.
    • சந்தோஷ வருத்த தருணங்கள் பற்றியெல்லாம் தாய் தகப்பனுக்கு நன்றாகத்தெரிந்திருக்க அவர்களுடன் நிறையப் பேச வேண்டும்.

    "என்னடி மொபைலிலேயே இத்தன நேரமா பாக்கறியே?"

    "சும்மா இரும்மா! இதெல்லாம் உனக்குப்புரியாது!"

    நீங்கள் இந்த வகை அம்மாவாக இருக்கக்கூடவே கூடாது!

    எண்பதுகளில் பரிட்சை ஹாலுக்கு கால்குலேட்டர் கொண்டு வரக்கூடாது என்றாலோ, காலேஜுக்கு பாவாடை தாவணிதான் போட்டுக்கொள்ள வேண்டும், சுடிதாரெல்லாம் அனுமதிக்க முடியாது என்றால் வாய் பேசாமல் ஒப்புக்கொண்ட தலைமுறை நாம்.

    ஆனால் பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வரக்கூடாது என்றால் உண்ணாவிரதமிருக்கும் தலைமுறை இப்போது! சுதந்திரம் என்றால் நாமறிந்தது காந்தி வாங்கித்தந்தது. ஆனால் இப்போது சுதந்திரம் என்னும் வார்த்தையின் அர்த்தமே வேறு.

    "காலேஜுலேர்ந்து வந்ததுலேர்ந்து அந்த மொபைல் போனையே நோண்டிட்டு இருக்கியே! கொஞ்சம் என்னொட உட்கார்ந்துதான் பேசேன்!"

    "அட என்னம்மா! நீ அடிக்கடி என்னோட சுதந்திரத்துல தலையிடறே. எனக்கு "மீ டைம்" (தானே தனியாகச்செலவிடும் நேரமாம்!) தரணும்! சும்மா குறுக்கிடாதே!"

    மொபைல் போனும் இண்டர்னெட்டும் சாப்பாடு தூக்கத்தைவிட முக்கியமாகப்போய்விட்ட காலத்தில் இருக்கிறோம். எட்டாவது பிறந்த நாளுக்கு மொபைல் போன் வாங்கித்தரவில்லை என்று ஒரு சிறுமி தற்கொலையே பண்ணிக்கொண்டுவிட்ட அவலம் நடந்து சில காலம் கூட ஆகவில்லை.

    ஆக, நம் வீட்டுக்குழந்தைகள் சுதந்திரமாக மொபைல் போனும் கம்ப்யூட்டரில் இண்டெர்னெட்டும் பயன்படுத்துவார்கள் என்பது நமக்கு விதிக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. அந்தகண்றாவி இண்டெர்னெட்டில் கிடைக்காத சமாச்சாரம் இல்லை. தெய்வீக விஷயங்களிலிருந்து தீவிரவாதம் வரையும் ஆன்மீகத்திலிருந்து அடல்ட்ஸ் ஒன்லி வரையும் பாழாய்ப்போன எல்லாம் இருக்கும் சவுகரியம்.

    நம் குழந்தைகள் எதை எப்படிப்பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்காணிப்பது இயலாது. அதான் சொன்னேனே சுதந்திரம் என்னும்வார்த்தையை தூக்கி நம் முன்னே போடுவார்கள். ஆகவே அவர்களை வழி நடத்துவது மிக மிக அவசியம்.

    இந்த வழி நடத்துதல் அவ்வளவு சுலபமில்லை. இண்டர்னெட் அல்லது ஆன்லைன் பயன்படுத்துதல் பற்றி நமக்கே அரைகுறைதான். தொழில் நுட்பமும் அதன் வசதிகளூம் நாளுக்கொன்றாய் மாறி முன்னேறி வருவதால் நாமே இன்னும் கற்றுக்கொள்ளும் நிலையில்தான் இருக்கிறோம். ஆகவே இதை வைத்து நம் குழந்தைகளை வழி நடத்துதல் சிரமமான காரியம்.

    விரவிக்கிடக்கும் சமூக வலைத்தளங்கள் ஆன்லைன் தளங்கள் மொபைல் செயலிகள் போன்றவை ஒரு அடர்ந்த காட்டை விட பயங்கரமானதாக ஆகிவிட்டிருக்கின்றன. இந்தக்காட்டினுள் எப்படி பாதுகாப்பாக வலம் வந்து பயன் அடையலாம் என்பது பற்றி நாம் இளைய சமுதாயத்தை வழி நடத்தியாக வேண்டும்.

    முதல் காரியமாக என்னென்ன செயலிகளை உங்கள் குழந்தை உபயோகிக்கிறாள் என்பதை நீங்கள் நன்கு அறிந்துகொள்ள வேண்டும். நீங்கள் அதில் ஒரு கண் வைத்திருக்கிறீர்கள் என்பது அவளுக்கும் தெரியவேண்டும்.

    'நேத்து ஏதோ புது டோன் கேட்டேனே! எந்த செயலியை டவுன்லோடு பண்ணியிருக்கே?"

    "அம்மா! நீ என்ன ஷெர்லக் ஹோல்ம்ஸா? அது வந்து…ரியா சொன்னாம்மா! இந்த செயலில லேடஸ்ட் பேஷன்ல்லாம் வர்ரதாம்! அம்மா ப்ளீஸ்! இந்த செயலி மட்டும் இருக்கட்டும்மா!"

    அது!

    அதே சமயம் அப்படியே விட்டுடக்கூடாது.

    "எங்க எனக்கு காமி! நானும் டவுன்லோடு பண்ணிக்கறேனே! எனக்கும் லேட்ஸ்ட் பேஷன் தெரிஞ்சா உனக்கு தெச்சுப்போடலாமோனோ!"

    அவர்கள் பார்க்கும் செயலிகளை நீங்களும் தரவிறக்கம் செய்து உபயோகித்துப்பார்த்து நம் குழந்தைக்கு தோதான செயலிதானா என்பதை உறுத்திப்படுத்திக்கொள்ளலாம்.

    அடுத்ததாக சில சின்ன வரைமுறைகள் கொண்டு வரவேண்டும்.

    "இதப்பார்! நீ கேட்டேன்னு மொபைல் வாங்கிக்கொடுத்தாச்சு! ஆனா ராத்திரி எட்டு மணிக்கு சாப்பிட வரும்போது அணைச்சுடணும். அது நம்ம வீட்ல நீ சொல்லுவியே "மீ டைம்"னு அது மாதிரி "எல்லோருக்குமான டைம்! யாரும் மொபைல்ல பேசவோ இல்ல அதை நோண்டவோ கூடாது!"

    நல்ல விஷயம் தான் ஆனால் இதில் ஒரு முக்கிய சமாச்சாரம் இருக்கிறது! நீங்களும் இந்த டிஸிப்ளினுக்கு பணிந்து வரவேண்டும். நீங்கள் "மாதிரி"யாக திகழ்ந்தால்தான் குழந்தைகளுக்கும் ஒரு பொறுப்பு வரும். அதை விட்டுவிட்டு எட்டு மணிக்கு மேல் நீங்க மொபைல் பயன்படுத்த, அதைப்பார்த்த குழந்தை,

    "நீ மட்டும் மொபைல் பேசறியே" என்று கேட்கும்போது, "வாயை மூடு! அதிகப்பிரசங்கி" என்பது தப்பாட்டம்!

    எனக்குத்தெரிந்த ஒரு குடும்பத்தில் செவ்வாய்க்கிழமை வீட்டில் மொபைல் போனுக்குத்தடை. வீட்டுக்கு வந்துவிட்டால் யாரும் செவ்வாயன்று மொபைல் போன் உபயோகப்படுத்த மாட்டார்கள். மொபைல் இண்டர்னெட்டுக்கு வெளியேயும் உலகம் உண்டு என்பது புரிய வேண்டும்.


    பர்சனல் விவரங்களைக்கொடுக்கக்கூடாது என்பதை நீங்கள் குழந்தைகளுக்கு வலியுறுத்த வேண்டும். முக்கியமாக தன் போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் தாராளமாக வெளியிடுவது தடுக்கப்பட வேண்டும்.

    "அம்மா! இதப்பாரேன்! என் ப்ரெண்ட் ரியா எத்தனை அழகழகா போட்டொ போட்டுண்டிருக்கா!"

    குழந்தை காட்டும்போது நீங்களே அந்த ரியாவின் விபரங்களை தளங்களிலிருந்து தரவிரக்கம் செய்து காண்பித்து அவளுக்குப்புரிய வைக்க வேண்டும்!

    "பாத்தியா? இது போல யார் வேணா டவுன்லோடு பண்ணி தப்பா உபயோகப்படுத்த முடியும்! ரியாகிட்டயும் சொல்லு!"

    குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை தூண்டிவிடும் பலப்பல விஷயங்களை இணையத்தின் மூலம் தாய்மார்கள் கண்டறிந்து வீட்டிலேயே சொல்லித்தந்து ஒவ்வொரு குழந்தையும் எந்த விதத்திலும் வாய்ப்புக்கள் குறையப்பெற்றதில்லை என்று முன்னேற்ற முடியுமே...

    அமெரிக்காவில் சில பெற்றோர் தங்களின் டீனேஜ் குழந்தைகளுடன் பேசி எப்போதெல்லாம் மொபைல் இண்டர்னெட் உபயோகிக்கலாம் என்பது பற்றி எழுத்து மூலம் காண்டிராக்டே போட்டுக்கொள்கிறார்களாம், இந்த எழுதப்பட்ட காண்டிராக்ட் கட்டுப்பாடு பற்றிய ஒரு சீரியஸ்னெஸ் தருகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

    குழந்தைகளுடன் நிறையப்பேசவேண்டும்.

    ஆம், மொபைல் இண்டர்னெட்டில் இருந்து தடுக்க மட்டுமில்லை, சாதாரணமாகவே குழந்தைகளை நன்கு புரிந்து கொள்ள, பெற்றோர் அவர்களுடன் அதிகமாகப்பேசுதல் வேண்டும். அவர்களின் விருப்பு வெறுப்புக்கள், அவர்களின் ஆசாபாசங்கள், அவர்களின் நண்பர்கள், அவர்களின் சந்தோஷ வருத்த தருணங்கள் பற்றியெல்லாம் தாய் தகப்பனுக்கு நன்றாகத்தெரிந்திருக்க அவர்களுடன் நிறையப் பேச வேண்டும்.

    மொபைலும் இண்டர்னெட்டும் குடும்பத்தின் உறவுப்பாலத்தை அசைத்து விட்டதென்னவோ உண்மைதான்.

    "நேத்து வீட்ல கரண்ட் இல்ல. மொபைலும் சார்ஜ் போயிடுச்சு! கொஞ்ச நேரம் அப்பா அம்மாவோட பேசிட்டு இருந்தேன். எனக்கே ஆச்சரியம் என்ன தெரியுமா, ரெண்டு பேரும் நல்ல மாதிரியாத்தான் தெரியறாங்க!"

    இப்படிச்சொல்லும் குழந்தைகளின் பெற்றோர் உடனே முழித்துக்கொள்ள வேண்டும்!

    • சரியான உறக்கம் அமையாத உடல்களில் பலவிதமான பாதிப்புகள் வருகின்றன.
    • உண்ணும் நேரத்தில் உணவைத் தவறவிட்டால் அது உடம்பில் பலவிதத் தொந்தரவுகளை உருவாக்கி விடுகிறது.

    உறக்கத்தின் மேன்மைகளை அறிந்து கொள்ளத் தயாராகும் உன்னத வாசகர்களே! வணக்கம்.

    வாழ்வியலில் "உறக்கம் என்பது மரணத்தைப் போன்றது!; உறங்கி விழிப்பது புதிதாகப் பிறப்பதைப் போன்றது!' என்று தத்துவ நோக்கில் வள்ளுவப் பெருந்தகை திருக்குறளில் குறிப்பிடுவார். அவ்வளவு பெரிய அளவிற்குத் தத்துவக் கண்ணோட்டத்தில் நாம் உறக்கத்தைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டாம். காலப் போக்கில் அது விளங்கி விடும்.

    பெரும்பாலும் நமது அன்றாட வாழ்வில், ஒரு நாளைக்கு மூன்றில் ஒருபங்கு நேரத்தை நாம் உறங்கிக் கழிக்கிறோம் என்று அறிவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். உண்மையிலேயே நாம் உறங்கும் நேரத்தை உறங்கிக் 'கழி'க்கிறோமா? உறங்கிக் 'களி'க்கிறோமா?. கழித்தலுக்கும் களித்தலும் வேறுபாடு உண்டு. கழித்தல் என்பது, பொழுதை உறங்கிப் போக்குவது; ஆனால் களிப்பது என்பது, பொழுதை உறங்கி அனுபவிப்பது. உறங்கி அனுபவிக்கும் மனிதனே விழிப்புணர்வுள்ள மனிதனாக இருப்பான். ஒரு மணி நேர உறக்கத்தைக்கூட, எட்டுமணிநேர உறக்கத்தைப் போல ஆழ்ந்து அனுபவித்து உறங்குபவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

    மனித வாழ்க்கைக்கு உணவும் தண்ணீரும் எவ்வளவு அவசியமோ, உறக்கமும் அவ்வளவு அவசியமானதாகக் கருதப்படுகிறது. உணவுக்கென நேரத்தை ஒதுக்கி உண்ணப் போவதைப்போல உறக்கத்திற்கும் நேரத்தை ஒதுக்கிக் கட்டாயம் உறங்கச் செல்லவேண்டும். உண்ணும் நேரத்தில் உணவைத் தவறவிட்டால் அது உடம்பில் பலவிதத் தொந்தரவுகளை உருவாக்கி விடுகிறது. உறக்கமும் அப்படித்தான்; சரியான நேரத்தில், சரியான கால அளவில் தூங்கவில்லையென்றால், உடல் அளவில் மட்டுமல்ல, மன அளவிலும் பெரும் பிரச்சினைகளை அது கொண்டுவந்து சேர்த்துவிடும்.

    சிலர் நேரத்திற்கு உண்பதை விட்டுவிட்டுக், கிடைக்கும் நேரத்திலெல்லாம் வயிற்றை நிரப்பிக்கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்ட பெருந்தீனியும் பெருநோய்களைக் கொண்டுவந்து தந்து விடும். அதைப்போல நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதைத் தூங்கியே கழிப்பது என்று கருத்தாய்ச் சிலபேர் இருப்பார்கள். அப்படிப்பட்ட தூங்கு மூஞ்சிகளுக்கும் வாழ்க்கை விடியாமலேயே போய் விடும். பசிக்கும்போது உண்பது, தாகம் எடுக்கும்போது தண்ணீர் பருகுவது, அதைப்போல உறக்கம் வரும்போது உறங்குவது, இதையே பழக்கப்படுத்தி வழக்கமாக்கிக் கொண்டால் உறக்கத்தின் மூலமாகவும் உன்னத சிகரங்களை எட்டிப் பிடிக்கலாம்.

    நமது உறக்கத்தின் மூலமாகவே மூளை புத்துணர்வு அடைகிறது. பகலில் விழித்திருந்து நாம் செயல்படும்போது நமது உடம்பில் சேரும் தீமைவிளைவிக்கும் நச்சு வேதிப்பொருள்களெல்லாம், நாம் உறங்கும்போதுதான் வெளியேற்றப் படுவதாக ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். நமது உடம்பின் பாகங்கள் ஒவ்வொன்றும் ஒழுங்கமைக்கப் படுவதும் நாம் உறங்கும் நேரத்தில்தான். ஒவ்வொரு உறக்க இரவிலும் நாம் சீரமைக்கப்பட்டால் ஒவ்வொரு விழிப்பு விடியலும் நமக்குப் புதிய பிறப்பாகத்தானே அமையும்.

    நாம் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கின்றோமா என்பதை நாம் உறங்கிக் கொண்டிருக்கும்போது கண்டுபிடிக்க முடியாது. உறங்கி விழித்தபிறகுதான் உணர்ந்து கண்டுபிடிக்க முடியும். விழித்தெழுந்த பிறகு உடலிலும் மனத்திலும் ஏற்படும் சுறுசுறுப்பையும் சோர்வின்மையையும் வைத்தே நாம் நன்றாக உறங்கினோமா என்பதை அறிய முடியும்.

    சரியான உறக்கம் அமையாத உடல்களில் பலவிதமான பாதிப்புகள் வருகின்றன. உடல் பருமனாவது, இரத்த அழுத்தம் பெருகுவது, இதயக் கோளாறுகளுக்கு ஆளாவது, மன அழுத்தத்தில் ஆழ்ந்துபோவது போன்றவை அவற்றில் சில பாதிப்புகள்.

    சுந்தர ஆவுடையப்பன்

    சுந்தர ஆவுடையப்பன்

    மனிதர்கள், குழந்தையாகப் பிறந்ததுமுதல், முதியவர்களாக வளரும் வரை பருவம்தோறும் அவர்கள் தூங்கும் கால அளவுகள் மாற்றம் பெறுகின்றன. ஒருவர் இவ்வளவு நேரந்தான் உறங்கவேண்டும் என்கிற காலநிர்ணயம் இல்லையென்றாலும் அவர்கள் குறைந்தபட்சம் தூங்கவேண்டிய காலத்திற்குத் தூங்கியே ஆகவேண்டும்.

    வளரும் குழந்தைகள் ஒருநாளைக்குக் குறைந்தபட்சம் 16 மணி நேரத்திலிருந்து 18 மணிநேரம் தூங்கவேண்டும் என்று மருத்துவர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். அப்படித் தூங்கினால்தான் அவர்களுக்கு முறையான மூளை வளர்ச்சியேற்படும் என்கிறார்கள். உடல், மன ரீதியான சீரான வளர்ச்சிக்கு இந்தத் தூக்கக் கணக்கு அவசியமானதாகும்.

    அதேபோல பள்ளிக்குப் போகும் சிறுவர்கள் ஒருநாளைக்கு ஒரு இரவுக்கு 9 மணி முதல் 10 மணி நேரம் தூங்க வேண்டும். வளர்ந்த பெரியவர்கள் ஓர் இரவுக்கு 7 மணி முதல் 9 மணிநேரம் தூங்கியாக வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இரவில் இடையிடையே எழுந்து உறங்கும் நிலைக்கு ஆளாவதால் அவர்களின் உறங்கும் நேரங்கள் தடைப்பட்டதாகவே இருக்கும்.

    இந்தக் காலக்கணக்குகள் இன்றைய தொலைக்காட்சி, சமூக ஊடகங்களின் ஆதிக்கத்தால் மனித வாழ்வில் முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது. ஊடகங்களோ கைபேசிகளோ இல்லாத அந்தக் காலத்தில், இரவுநேரம் வந்து இருட்டியதுடன், கொஞ்சநேரக் கதைப் பேச்சுகளுடன், இரவு எட்டுமணிக்கே மொத்தக் கிராமமும் உறங்கிவிடும்; உதயக்கதிர் தோன்றிய பிறகுதான் கண்விழிக்கும். இன்றோ எல்லாம் தலைகீழாகி விட்டது. உறங்கும் நேரத்தைவிட மின்னணுச் சாதனங்களோடு கழிக்கும் நேரம் அதிகமாகிவிட்டது. அதனால் வாழ்வில் மகிழும் நேரத்தைவிட வருந்தும் நேரமும் அதிகமாகிவிட்டது.

    இன்றைய மென்பொருள் உலகில், பணிபுரிபவர்கள் எப்போது உறங்குகிறார்கள்! எப்போது விழிக்கிறார்கள்! என்பது தெரியாமலேலேயே உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி உழைப்பதனால் அவர்கள் பணியில் இலக்குகளை எளிதில் எட்டிப் பிடிக்கலாம். ஆனால் அவர்களின் உடல் ஆரோக்கியக் குறியீட்டு இலக்குகளை எட்டிப்பிடிப்பது எப்போதும் கடினம். சிலர் வார நாட்களான திங்கள் முதல் வெள்ளிவரை ஒரு நாளைக்கு நாலைந்து மணி நேரங்களே தூங்கி, இழந்த தூக்கத்தை சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் முழுவதும் தூங்கி ஈடு செய்து கொள்வதாகக் கூறுவர். அப்படித் தூங்குவதால் இழந்த தூக்கத்தைச் சரிசெய்து கொள்ளவே முடியாது.

    நல்ல தூக்கத்தை 'அடித்துப்போட்ட மாதிரி' என்பார்கள். தன்னை மறந்து தூங்குவதே தூக்கம். ஆயினும் ஒவ்வொரு மனிதனும் தூங்கும்போது ஒரு இரவுக்கு இரண்டு மணி நேரமாவது கனவு காண்பதாகக் கூறுகிறார்கள். கனவுகள் சிலருக்கு வண்ணக் கனவுகளாகவும், சிலருக்குக் கறுப்பு வெள்ளைக் கனவுகளாகவும் வருகின்றன. கனவுகள் வருவது நல்லதா? என்னென்ன மாதிரிக் கனவுகள் வந்தால் என்னென்ன பலன்கள்? என்றெல்லாம் ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.

    உறங்கும்போது வருகின்ற கனவுகள், நமது மனவியல் உணர்வுகளுக்கு வடிகால்களாக அமைகின்றன. மன அழுத்தத்தோடும், பெருத்த எதிர்பார்ப்புகள் மற்றும் ஏமாற்றத்தோடும் உறங்கச் சென்றால் பயங்கரக் கனவுகள் வருமாம். அதனால் உறங்கச் செல்லும் முன் சிறு பிரார்த்தனைகள் மற்றும் தியானங்களோடு படுக்கச் செல்ல வேண்டும். தொடர்ந்து பயங்கரக் கனவுகளின் துரத்தல்கள் இருந்தால் மனநல மருத்துவரைப் பார்ப்பது நல்லது.

    ஒருவர் ஒரு மனநல மருத்துவரைப் பார்க்கச் சென்றார். அந்த மருத்துவர் 'உறக்கச் சிறப்பு மருத்துவர்'. எவ்வளவு நோய்வாய்ப் பட்டவருக்கும் தன்னுடைய சிகிச்சை மூலமாக நிம்மதியான உறக்கத்தை வரவழைத்து விடுவதில் கெட்டிக்காரர்.

    சொல்லுங்க! எவ்வளவு நாளாக தூக்கமில்லாமத் தவிக்கிறீங்க?" மருத்துவர் கேட்டார்.

    'தூக்கமெல்லாம் குறையில்லாமல்தான் வருது டாக்டர்!; ஆனா நல்லாத் தூங்கிட்டு இருக்கிறப்ப படக்கு படக்குன்னு முழிப்பு வந்திடுது!" நோயாளர் சொன்னார்.

    "வீட்டுல நீங்க கட்டில்ல படுப்பீங்களா? தரையில படுப்பீங்களா?" – மருத்துவர்.

    "கட்டில்லதான் படுப்பேன் டாக்டர். படுத்த பத்துநிமிடத்தில அற்புதமாத் தூக்கம் வரும். ஆனா அடுத்த அஞ்சு நிமிடத்துல கட்டிலுக்கு கீழ இருந்து யாரோ கூப்பிடுற மாதிரி கேட்கும். படக்குன்னு முழிச்சு, டபக்குன்னு கட்டில விட்டு இறங்கிக் கீழ பார்த்தா ஒன்னுமே இருக்காது!- நோயாளர்.

    "இம்புட்டுத் தானே! இன்னைக்கு இரவில் இருந்து கட்டிலுக்குக் கீழ படுத்துப் பாருங்க! நிம்மதியாத் தூங்குங்க!" ஆலோசனை கூறினார் மருத்துவர்.

    "அதையும் செஞ்சு பார்த்துட்டேன் டாக்டர்! பிரயோசனமில்லை. கட்டிலுக்குக் கீழ படுத்தாலும் பத்து நிமிடத்தில அற்புதமாத் தூக்கம் வந்திடுது!. ஆனா அடுத்த அஞ்சு நிமிடத்தில கட்டிலுக்கு மேல இருந்து யாரோ கூப்பிடுற மாதிரி இருக்குது!. படக்குன்னு கண்ணுமுழிச்சு, டபக்குன்னு எந்திருச்சு, கட்டிலுக்கு மேல பார்த்தா ஒன்னுமில்ல!- நோயாளர் பாவமாய்ச் சொன்னார்.

    "ஓகோ! கேக்க கொஞ்சம் சிக்கலாத்தான் இருக்குது!" மருத்துவர் சொன்னார்,"ஐயா உங்க நோயைக் குணப்படுத்த குறைஞ்சபட்சம் ஆறுமாசம் ஆகலாம்!; அதிகபட்சம் ஆறு வருடம்கூட ஆகலாம். மாசத்துக்கு ஒருதடவை இங்க வந்து என் கிட்ட மருந்து வாங்கிட்டுப் போகணும். மருந்து மற்றும் மருத்துவச் செலவு ஒரு மாசத்துக்கு மூவாயிரம் ரூபாய் ஆகும். சரின்னா இப்பவே சிகிச்சைய ஆரம்பிச்சிடுவோம்; இந்த மாச பீஸ் மூவாயிரத்தை எடுத்து வைங்க!". நோயாளரும் ஒத்துக்கொண்டு பணத்தைக் கொடுத்து சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டார்.

    ஒருமாதத்திற்கான மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்ற நோயாளர், ஒரு வாரத்திலேயே அந்த மனநல மருத்துவரைப் பார்க்கத் திரும்ப வந்து விட்டார். " என்னங்க என்ன பிரச்சினை?. ஒரு வாரத் துக்குள்ள எல்லாம் மருந்து வேலை செய்யாது! பொறுமையா இருக்கணும்!" என்று மருத்துவர் ஆலோசனை சொன்னார். நோயாளர் சொன்னார், "டாக்டர் மாதம் மூவாயிரம் ரூபாய் செலவில் நீங்க சொன்ன வைத்தியத்தை என் வீட்டுக்காரம்மா நூறுரூபா செலவில் முடிச்சு வைச்சுட்டாங்க! இப்ப இந்த ஒரு வாரமா நிம்மதியாத் தூங்கிறேன்!" .

    "என்ன? நூறு ரூபாய் செலவிலயா? கொஞ்சம் விவரமாச் சொல்லப்பா?" என்று ஹேமநாத பாகவதர் பாணியில் மருத்துவர் கேட்டார்.

    "டாக்டர்! எனக்கு என்ன வியாதி? கட்டிலுக்கு மேல படுத்திருந்தா... கீழ யாரோ கூப்பிடுற மாதிரி இருக்கு! கட்டிலுக்குக் கீழ படுத்திருந்தா... கட்டிலுக்கு மேல இருந்து யாரோ கூப்பிடுற மாதிரி இருக்கு! இதனால நிம்மதியான தூக்கம் வரல!; இது தானே! நீங்க குணப்படுத்த மாசம் மூவாயிரம் செலவாகும்னு சொன்னீங்க!. என் மனைவி என்ன பண்ணாங்க தெரியுமா?. ஒரு தச்சுவேலைக்காரரைக் கூப்பிட்டு அவர் கையில நூறு ரூபாயைக் குடுத்துக், கட்டில்கால் நாலையும் அறுத்து விடச் சொல்லிட்டாங்க! இப்பக் கட்டிலுக்கு மேலும் கிடையாது! கீழும் கிடையாது!; நிம்மதியான தூக்கம்!". படுத்தவுடன் நிம்மதியாக உறங்குவதற்கு,

    நாள்தோறும் உறங்கப் போகும் நேரத்தை ஒரே நேரமாக வழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்!.உறங்கப் போகுமுன் 20, 30 நிமிடங்கள் மெலிதான நடைப்பயிற்சியோ உடற்பயிற்சியோ மேற்கொள்ள வேண்டும்.உறங்கச் செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாகவே தொலைக் காட்சி, கைபேசிகள் பார்ப்பதைத் தவிர்த்து விட வேண்டும். ஆழ்ந்த தியானம் மற்றும் பிரார்த்தனைகள் அருமையான நித்திரைக்கு வாசல்கள்.

    தொடர்புக்கு 9443190098

    • நாம் அனைவருமே பொலிவான, தழும்புகள் இல்லாத, பிரகாசமான முகத்தோடு இருக்க வேண்டும் என தான் ஆசைப்படுகிறோம்.
    • பிக்கோ லேசர் சிகிச்சை முறையானது விரைவான ஒரு சிகிச்சை முறையாகும்.

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள். அந்த வகையில் நம் உடல் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருப்பதில் சரும ஆரோக்கியம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

    எல்லாருடைய எண்ணமும் வயதாக கூடாது என்று தான் இருக்கும். அதிலும் பெண்கள் தங்கள் சரும ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் கொண்டவர்களாக இருப்பார்கள். வயதாகுவது என்பது ஒரு இயற்கையான செயலாகும்.

    இதை நம்மால் மாற்றவோ, நிரந்தரமாக நிறுத்தவோ முடியாது. நாமும் நம் சருமம் வயதாகுவதை தடுக்க எவ்வளவோ முயற்சிகளை செய்வது உண்டு. மேற்பூச்சு கிரீம்கள், காஸ்ட்லி மேக் அப் பொருட்கள் கொண்டு, தங்களை அழகுபடுத்திக் கொள்வது உண்டு.

    அப்படி பயன்படுத்தும் பொருட்களால் சரும பிரச்சனை ஏற்பட்டு நம் அழகையும், சருமத்தையும் பாதிக்கிறது. சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக ஒருவருக்கு அரிப்பு ரேஷஸ் உள்ளிட்ட பல அறிகுறிகள் ஏற்படுகின்றன. எனவே சருமத்தில் ஏற்படும் கோளாறுகளுக்கு சரியான நேரத்தில் தகுந்த சிகிச்சை பெறுவது அவசியமாகிறது.

    சரும பிரச்சனைக்கு என்று பல வகையான சிகிச்சைகள் உள்ளது. அதன் மூலம் சருமத்தில் இருந்து மீண்டும் இழந்த அழகினை பெற்றுக் கொள்ளலாம். இன்றைய காலக்கட்டத்தில், சரும பராமரிப்பு மற்றும் அழகுக்கலை சார்ந்த சிகிச்சை முறைகளில் நவீன தொழில் நுட்பங்கள் நாள்தோறும் வளர்ந்து வருகின்றன.

    சருமத்தை மாசற்ற முறையில் பராமரிப்பு மற்றும் சருமப் புனரமைப்பு சிகிச்சைகளில் அவை சிறந்த முறையில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் பிக்கோசெகண்ட் லேசர் டெக்னாலஜி சிகிச்சை என்பது மிகவும் புதுமையான அறிமுகம்.

    தற்போது கிடைக்கும் லேசர் தொழில்நுட்பங்களில் மிகவும் நவீனமானது இந்த பிக்கோசெகண்ட் லேசர் சிகிச்சை தான். இந்த சிகிச்சையானது மிகவும் பாதுகாப்பான லேசர் சிகிச்சை ஆகும். முக அழகுக்கும், உடல் முழுக்கவும் பயன்படுத்த ஏற்றது. மிக விரைவிலேயே கவனிக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நிரந்தரமான தீர்வையும் வழங்குகிறது.

    பிக்கோசெகண்ட் லேசர் டெக்னாலஜி என்றால் என்ன, அது எப்படி செயல்படுகிறது. நம் முக அழகு மற்றும் சருமத்தின் பொலிவைக் காக்க அது எப்படி உதவுகிறது என்பது பற்றி பார்ப்போம்.

    நாம் அனைவருமே பொலிவான, தழும்புகள் இல்லாத, பிரகாசமான முகத்தோடு இருக்க வேண்டும் என தான் ஆசைப்படுகிறோம். எந்த வயதினராக இருந்தாலும் அவர்களுக்கு எப்போதும் தோன்றுவது ஒன்றே ஒன்று தான். அது என்னவென்றால் நமக்கு எவ்வளவு வயது ஆனாலும் நம்முடைய முகத்தில் முகச்சுருக்கங்கள் வந்து விடக்கூடாது என்பது தான்.

    முகச் சுருக்கம் வராமல் நாம் எப்போதும் இளமையான தோற்றத்துடனேயே இருக்க விரும்புவோம். அப்படி நாம் எப்போதும் முக சுருக்கம் வராமல் இளமையுடன் இருப்பதற்கு நவீனத் தோல் சிகிச்சை முறையான பிக்கோலேசர் தொழில்நுட்ப சிகிச்சை பெரிதும் உதவி வருகிறது. இந்த சிகிச்சையானது இளமை தோற்றத்தை வெளிப்படுத்தும்.

    முகப் பருக்களால் ஏற்படும் தழும்புகள், முகத்தில் சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகள், மங்கு, கரும்புள்ளிகள், சருமத்தில் ஏற்படும் நிறமாற்றங்கள், தோல் சுருக்கம் மற்றும் வயதாவதால் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை நமது தன்னம்பிக்கையை மிகவும் பாதிக்கின்றன.

    அப்படி நமது தன்னம்பிக்கையை பாதிக்காமல் இருப்பதற்கும், இவை அனைத்தையும் சரி செய்வதற்கும் இந்த நவீனத் தொழில்நுட்ப சிகிச்சையான பிக்கோ லேசர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

    இன்றைய கால கட்டத்தில் டாட்டூ கலாச்சாரம் அதிகமாக உள்ளது. முதலில் ஆசைப்பட்டு டாட்டூ போட்டாலும், எப்போதாவது அதனை அழித்து விடலாம் என்ற எண்ணம் தோன்றும். அப்போது அழிக்க முடியவில்லையே என கஷ்டப்பட வேண்டாம். நாம் டாட்டூ என்ற பச்சை குத்திய அடையாளங்களை அழிக்கவும் இந்த பிக்கோ லேசர் சிகிச்சை முறை மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது.

    பிக்கோ லேசர் சிகிச்சை முறையானது விரைவான ஒரு சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சை முறை மிகவும் பாதுகாப்பானதும் கூட. இந்த சிகிச்சையானது அறுவை சிகிச்சை செயல்முறையோ அல்லது நமது சருமத்தை துளைத்தோ செய்யப்படும் சிகிச்சையோ கிடையாது.

     

    உடலுக்குள் ஊடுருவாமல், வெளியில் இருந்தவாறே செய்யப்படும் சிகிச்சை தான் பிக்கோ லேசர் சிகிச்சை. இந்த சிகிச்சையை ஏராளமானோர் செய்துள்ளனர். இந்த சிகிச்சை பலருக்கும் சிறப்பான பயன்களை அளித்துள்ளது. அதற்கு அறிவியல் ரீதியான ஆதாரங்களும் ஏராளமாக உள்ளன.

    சருமம் மற்றும் அழகுக்கலையில் சிறந்த சிகிச்சை முறையாக உள்ள இந்த பிக்கோ லேசர் சிகிச்கையானது பல்வேறு சருமம் சார்ந்த பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது. முகத்தில் தழும்பு, விபத்தில் ஏற்படும் காயத் தழும்புகள், முகத்தில் சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகள், சுருக்கம் ஆகியவற்றை நீக்கும் எளிமையான சிகிச்சையாகவும் இந்த சிகிச்சை முறையானது உள்ளது.

    இந்த சிகிச்சையில் சருமத்தின் குறிப்பிட்ட பகுதியில் அல்ட்ரா லேசர் கதிர் செலுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட தோல் பகுதியானது சரி செய்யப்படுகிறது.

    தோலில் செலுத்தப்படும் லேசர் கதிர்கள் முதலில் பாதிப்புக்குரிய தோல் பகுதியை மிக சிறியதாக உடைக்கிறது. அதனை தொடர்ந்து, தோலின் இயற்கையான செயல்பாடுகள் மூலம் பாதிப்புக்குள்ளான பகுதி முற்றிலும் வெளியேற்றப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு பிறகு தீக்காயங்கள் ஏற்பட்டது போல இருக்காது.

    முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகள், பிக்கோ லேசர் சிகிச்சையில் லேசர் கதிர்களால் ஏற்படும் வெப்பத்தின் மூலம் சரி செய்யப்படுகிறது. டாட்டூ எனப்படும் பச்சை குத்துவதற்கு பல்வேறு வண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்டு வந்த லேசர் தொழில்நுட்பத்தில் குறிப்பிட்ட சில நிறங்களை மட்டுமே அகற்ற முடியும். ஆனால் பிக்கோ லேசர் தொழில்நுட்ப சிகிச்சையில் அனைத்து நிறங்களிலும் போடப்பட்ட பச்சை குத்திய தழும்புகளையும் அகற்றி விடலாம். லேசர் கதிர்கள் டாட்டூக்களில் பட்டு, மிக சிறியதாக அந்தத் தழும்புகளை உடைத்து வெளியேற்றி விடும்.

    இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒரே சிகிச்சையில் தழும்புகளை சரி செய்ய முடியாது. அதிகபட்சம் 5 முதல் 6 கட்டங்களாக இந்த சிகிச்சையை மேற்கொண்டால் படிப்படியாக தழும்புகள் அழிக்கப்பட்டு விடும். டாட்டூக்களின் அளவைப் பொறுத்தும் சிகிச்சை பல்வேறு கட்டங்களாக திட்டமிடப்படும். மச்சம் போன்றவற்றை அகற்றுவதற்கும் இந்த சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.

    இந்த தொழில் நுட்பத்தில் குறிப்பிட்ட தோல் பகுதிகளில் துல்லியமாக லேசர் கதிர்கள் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் தோலின் பிற பகுதிகளில் பாதிப்போ, தீக்காயங்களோ, நிறமாற்றமோ எதுவுமே இருக்காது.

     

    டாக்டர். பவித்ரா, கே.எம்.சி.எச். மருத்துவமனை, கோவை

    டாக்டர். பவித்ரா, கே.எம்.சி.எச். மருத்துவமனை, கோவை

    இந்த சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக நாம் மருத்துவமனையில் தங்கி கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒரு மணி நேரத்தில் முடிக்கக்கூடிய எளிமையான சிகிச்சை முறையே பிக்கோ லேசர் சிகிச்சை.

    சிகிச்சை பெற்ற பின்னர் நாம் இதற்காக ஓய்வெடுக்கவோ, பிற பாதுகாப்பு செயல்முறைகளை பின்பற்றவோ தேவையில்லை. நாம் எப்போதும் போல இருக்கலாம். அதிகபட்சமாக சன்ஸ்கிரீன் கிரீம் மட்டும் போட்டாலே போதும்.

    இது ஒரு அறுவை சிகிச்சை முறை இல்லை என்பதால் எந்தவிதமான பக்க விளைவுகளும் இருக்காது. இந்த சிகிச்சைக்கு முன்பும், சிகிச்சைக்கு பின்பும் செய்ய வேண்டியவை என்னென்ன என்பதையும் டாக்டர்கள் தெளிவாக விவரித்து விடுவார்கள். அதனை பின்பற்றினாலே போதுமானது.

    பிக்கோ லேசர் தொழில்நுட்ப சிகிச்சைக்கு பிறகு சருமத்தில் கொலாஜன்கள் உற்பத்தியாவது இயல்பாக தூண்டப்படுகிறது. இதன் மூலம் சருமம் இளமைத் தோற்றத்துடன் மென்மையாக காணப்படும். நமது உடலில் எங்கும் சுருக்கங்களும் இருக்காது. இந்த நவீன பிக்கோ லேசர் தொழில்நுட்ப சிகிச்சையானது கொங்கு மண்டலமான கோவையில் கே.எம்.சி.ஹெச் ஆஸ்பத்தி ரியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தொடர்புக்கு:

    0422-4323104

    • லட்சுமியிடம் மும்மூர்த்திகளில் யார் பொறுமையானவர் என்பதை தெரிந்து கொள்ளவே இவ்வாறு நடந்து கொண்டதாக கூறி விளக்கம் அளித்தார்.
    • ஸ்ரீசாரங்கபாணி கோவிலுக்கு எப்படியாவது ராஜகோபுரம் அமைத்துவிட வேண்டும் என்று உறுதி பூண்டார் அந்தப் பக்தர்.

    வைணவ தலங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம் ஆலயங்களுக்கு அடுத்தபடியாக பக்தர்களிடம் அதிக வரவேற்பை பெற்று இருப்பது கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி ஆலயம் ஆகும். 108 திவ்ய தேசங்களில் இது 12-வது திவ்ய தேசமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

    கும்பகோணத்தில் உள்ள பழமையான வைணவ தலங்களில் சாரங்கபாணி ஆலயம்தான் மிகமிக பழமையானது. இந்த ஆலயத்து பெருமாளால்தான் நாலாயிர திவ்ய பிரபந்தம் இந்த உலகத்துக்கு கிடைத்தது. பஞ்சரங்க திருத்தலங்களில் இந்த ஆலயமும் ஒன்றாக போற்றப்படுகிறது.

    பொதுவாக வைணவ தலங்களில் ஆழ்வார்கள் தங்களது பிரபந்தங்களால் பெருமாளை அழகுற வர்ணித்து பாடி இருப்பார்கள். அவை அனைத்தும் பாடல் பெற்ற தலங்களாக அழைக்கப்படுகின்றன. திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை 11 ஆழ்வார்களும், திருப்பதி வெங்கடாஜலபதியை 10 ஆழ்வார்களும் மங்களாசாசனம் செய்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக 7 ஆழ்வார்கள் கும்பகோணம் சாரங்கபாணியை புகழ்ந்து பாடி மங்களாசாசனம் செய்துள்ளனர்.

    இத்தகைய சிறப்புடைய கும்பகோணம் சாரங்கபாணி ஆலயத்தின் தல வரலாற்றை முதலில் தெரிந்து கொள்வோம். பிருகு மகரிஷி ஒரு தடவை வைகுண்டம் சென்று இருந்தார். மும்மூர்த்திகளில் யார் மிகவும் பொறுமைசாலி என்பதை தெரிந்து கொள்ள முடிவு செய்து இருந்த அவர் திருமாலை பரிசோதிப்பதற்காகவே வைகுண்டம் சென்றிருந்தார்.

    திருமாலின் மார்பில் பிருகு மகரிஷி எட்டி உதைத்தார். அதை திருமால் கண்டு கொள்ளவில்லை. ஆனால் அருகில் இருந்த லட்சுமிக்கு கடும் கோபம் ஏற்பட்டது. உங்கள் மார்பில் நான் இருக்கும் நிலையில் பிருகு மகரிஷி உதைக்க வந்ததும் தடுக்காதது ஏன் என்று சண்டையிட்ட லட்சுமி திருமாலை பிரிந்து சென்று விட்டார்.

    இதை கண்ட பிருகு மகரிஷி மனம் வருந்தி திருமாலிடம் மன்னிப்பு கேட்டார். பிறகு லட்சுமியிடம் மும்மூர்த்திகளில் யார் பொறுமையானவர் என்பதை தெரிந்து கொள்ளவே இவ்வாறு நடந்து கொண்டதாக கூறி விளக்கம் அளித்தார். பிறகு உனக்கு நான் தந்தையாக இருக்க விரும்புகிறேன். என் மகளாக பிறக்க வேண்டும் என்று வேண்டினார்.

    இதை கேட்டு மனம் இரங்கிய லட்சுமி, பிருகு மகரிஷி மகளாக பிறக்க சம்மதித்தாள். அவள் உத்தரவுபடி பிருகு மகரிஷி புண்ணிய பூமியான கும்பகோணத்தில் தவம் இருந்தார். அப்போது புனித தீர்த்த குளத்தில் தாமரை மலரில் லட்சுமி அவதரித்தாள். அவளுக்கு கோமளவல்லி என்று பெயரிட்ட பிருகு மகரிஷி லட்சுமியை வளர்த்து திருமாலுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

    இந்த திருமணத்திற்காக திருமால் வில் ஏந்தி வந்தார். வில் என்றால் சாரங்கம் என்றும் ஒரு அர்த்தம் உண்டு. இதனால் திருமாலுக்கு சாரங்கபாணி என்ற பெயர் ஏற்பட்டது. தாமரை மலரில் லட்சுமி அவதரித்ததால் இந்த தலத்தை லட்சுமியின் அவதார தலம் என்று சொல்கிறார்கள்.

    இந்த தலத்து கருவறையில் கோமளவல்லியுடன் சாரங்கபாணி அருள்பாலிக்கிறார். கருவறையை சுற்றி நரசிம்மரின் அவதார சிலைகள் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. கோமளவல்லியை திருமணம் செய்வதற்காக சாரங்கபாணி தேரில் வந்தார். இதை பிரதிபலிக்கும் வகையில் சுவாமி சன்னதியை தேர் அமைப்பில் கட்டி உள்ளனர். அந்த தேர் அமைப்பு மிக சிறந்த கலை படைப்பாக போற்றப்படுகிறது. தேரின் குதிரைகள், யானைகள், சக்கரங்கள் கல்லால் ஆனவை. தேரின் இருபுறங்களிலும் உத்திராயண, தட்சாயண வாசகங்கள் உள்ளன. தேர் சக்கரம் மிக பிரமாண்ட மாக அழகுற அமைந்துள்ளது. வெளிநாட்டவர்கள் இந்த ஆலயத்துக்கு வரும்போது இந்த தேர் அமைப்பை பார்த்து வியந்து போகிறார்கள்.

    ஆனால் தமிழர்கள் இந்த கலை படைப்பை கண்டு கொள்ளாமலேயே இருக்கிறார்கள். கும்பகோணத்துக்கு யாத்திரை செல்லும்போது தவறாமல் அவசரப்பட்டு திரும்பாமல் நின்று நிதானமாக இந்த கலைப்படைப்பை பார்த்து விட்டு வரவும்.

    இதே பகுதியில் சந்தானகிருஷ்ணன் அருள்பாலிக்கிறார். அவரை வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகமாகும். மூலவர் சாரங்க பாணிக்கு பயத்தம் பருப்பு, வெல்லம், நெய் கொண்டு தயாரிக்கும் கும்மாயம் என்ற நைவேத்தியத்தை சிறப்பாக படைப்பார்கள். அதற்கு காணிக்கை செலுத்துவது நல்லது.

    இந்த தலத்து சாரங்கபாணிக்கு திவ்ய பிரபந்தம் தந்தவர் என்ற சிறப்பு உண்டு. ஒரு தடவை நாதமுனி என்பவர் சாரங்கபாணியை வழிபட வந்தார். அப்போது சில பக்தர்கள் சுவாமியின் சிறப்புகளை பாடி, "ஓராயிரம் பாடல்களில் இந்த பத்து அடங்கும்" என்று முடித்தனர். இதை கேட்ட நாதமுனி ஆயிரம் பாடல்கள் உள்ளதா? என்று ஆச்சரியப்பட்டார்.

    அந்த ஆயிரம் பாடல்களையும் தேடி தொகுக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் எப்படி அவற்றை தேடுவது என்று தெரியவில்லை. அப்போது அவரது கனவில் வந்த சாரங்கபாணி, "நீ ஆழ்வார்திருநகரிக்கு சென்று நம்மாழ்வாரை வழிபடு. அவருக்கு உதவி செய்வார்" என்றார். அதன்படி நாதமுனி ஆழ்வார்திருநகரிக்கு வந்து நம்மாழ்வாரை வழிபட்டார். அதன் பலனாக ஆயிரம் பாடலுக்கு பதில் நான்கு ஆயிரம் பாடல்கள் கிடைத்தன. அவை தான் நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று புகழப்படுகின்றன. இந்த தலத்தில் தாயாரை திருமணம் செய்ய வந்த திருமால் ஒரு இடத்தில் ஒளிந்தாராம். அந்த இடத்தில் பாதாள சீனிவாசர் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தலத்தில் சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்டத்தில் இருந்து திருமால் நேரடியாக இந்த தலத்துக்கு வந்ததால் இவரை வணங்கினாலே முக்தி கிடைத்து விடும் என்ற ஐதீகம் உள்ளது. எனவேதான் முக்தி பாதைக்கு வழிவகுக்கும் சொர்க்கவாசல் இந்த தலத்தில் இல்லை என்று சொல்கிறார்கள்.

    இந்த தலத்தை உபய பிரதான திவ்யதேசம் என்றும் சொல்வார்கள். உற்சவருக்கு மூலவருக்கான பூஜைகள் செய்யப்படுவதால் அப்படி அழைக்கப்படுகிறது. அதுபோல இந்த தலத்தில் சாரங்க பாணியை மாமனார் வீட்டோடு இருக்கும் மாப்பிள்ளை என்று சொல்கிறார்கள். லட்சுமி இந்த தலத்தில் அவதரித்ததால் மாப்பிள்ளையாக வந்த திருமால் இங்கு தங்கி விட்டதாக சொல்கிறார்கள்.

    இந்த தலத்தில் எத்தனையோ அற்புதங்கள் நடந்துள்ளன. உதாரணத்துக்கு இரண்டு சொல்லலாம். ஒவ்வொரு திவ்ய தேசமாகச் சென்று பெருமாளின் திருப்பணியில் ஈடுபட்டு அவரை தரிசித்துச் சென்ற திருமழிசை ஆழ்வார், கும்பகோணத்திற்கும் சென்றார். அங்கே சயன நிலையில் இருந்த சாரங்கபாணி பெருமாளைப் பார்த்ததும் திருமழிசை ஆழ்வாருக்கு ஒரு விசித்திரமான கோபம் பெருமாள் மீது ஏற்பட்டது.

    அதாவது, 'கொள்ளிடத்திற்கும் காவிரிக்கும் நடுவில் இருக்கும் ஸ்ரீரங்கத்தில் பெருமாள் ஆனந்தமாக சயனித்து இருப்பது போல் இங்கே கும்பகோணத்திலும் காவிரி, அரசலாறு இவற்றின் நடுவே பெருமாள் சயனித்திருக்கிறாரே.. பக்தனான தான் வந்து எதிரே நிற்பது கூடத் தெரியாமல் அப்படி என்ன சயனம்?' இப்படி ஒரு விளையாட்டுக் கோபம்.

    அந்தக் கோபத்தோடு, "அப்படியென்ன உனக்கு பெருமாளே களைப்பு? எடுத்த அவதாரங்கள் ஒவ்வொன்றிலும் சிரமப்பட்ட களைப்பா?" இப்படிக் கேள்வி மேல் கேள்வி கேட்டு விட்டு கடைசியில், "நான் வந்திருப்பது தெரியவில்லையா? எழுந்திருந்து பேசும்" என்றார். இதைக் கேட்டதும், பக்தனின் அன்புக்குக் கட்டுப்பட்ட பெருமாள், சயன நிலையில் இருந்தவாறே சற்று எழுந்தார். அதைக் கண்டதும், ஆழ்வாருக்கு தவறு செய்து விட்டோமே என்று மனசாட்சி குத்தியது.

    'வீணாகப் பெருமாளை சிரமப்படுத்துகிறோமே! அவருடைய சயன நிலையைக் கெடுக்கிறோமே!' என்று தவித்துப் போனார். உடனே அவசர அவசரமாக, 'எழுந்திருந்தது போதும், சயனித்துக் கொள்ளும்' என்று சொல்வது போல், 'வாழி கேசவனே' என்று மங்களாசாசனம் செய்தார். சயனத்திலிருந்து எழுந்த பெருமாள், அப்படியே உத்தான சயன நிலையில் நிலைத்து அருளி சேவை சாதித்தார். இன்றும் கும்பகோணம் சாரங்கபாணி ஆலயத்தில் இந்த நிலையிலேயே பெருமாள் காட்சி அளிக்கிறார்.

    பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மற்றொரு சம்பவம் வருமாறு:-

    கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி கோவில் மடப்பள்ளியில் சாமிக்கு நைவேத்தியம் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்த லட்சுமி நாராயணப் பெருமாள் என்னும் பக்தருக்கு நீண்ட நாட்களாக ஒரு குறை இருந்துவந்தது. பெருமாளின் 108 திவ்விய தேசங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாக மூன்றாவதாக உள்ள ஸ்ரீசாரங்கபாணி கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லையே என்பதுதான் அந்தக் குறை.

    ஸ்ரீசாரங்கபாணி கோவிலுக்கு எப்படியாவது ராஜகோபுரம் அமைத்துவிட வேண்டும் என்று உறுதி பூண்டார் அந்தப் பக்தர்.

    ராஜகோபுர திருப்பணி என்றால் சும்மாவா? இப்போது கோடிக் கணக்கில் ரூபாய் செலவாகும் என்றால், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சில லட்சங்களையாவது செலவு செய்ய வேண்டுமே?

    ஆனால் மடப்பள்ளியில் நைவேத்தியம் செய்துவரும் லட்சுமி நாராயணப் பெருமாளால் அவ்வளவு பெரிய தொகையை புரட்டுவது என்பது இயலாத காரியம்தான். அதற்காக தளர்ந்து போய்விடவில்லை அவர். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று எண்ணியவர், ராஜகோபுர திருப்பணிக்கான வேலைகளை லட்சிய வெறியோடு செய்யத் தொடங்கினார். 'என் ஆயுள் முழுக்க ஓடி உழைத்தாவது ராஜகோபுரம் கட்டியே தீருவேன்' என்று உறுதி எடுத்துக் கொண்டார்.

    "பக்தனுக்கு என் மீது இவ்ளோ பற்றுதலா!" என்று அந்த வேளையிலே சாரங்கபாணி எண்ணினாரோ என்னவோ... ராஜகோபுர திருப்பணிக்கு பலரிடம் இருந்தும் லட்சுமி நாராயணப் பெருமாளுக்கு உதவிகள் தேடி வந்தன. ராஜகோபுரம் கட்டுவதையே தனது லட்சியமாகக் கொண்டு செயல்பட்டதால், வாழ்க்கை பற்றி லட்சுமி நாராயணப் பெருமாள் துளியும் சிந்திக்கவில்லை. அவரது திருமண வயதும் கடந்துவிட்டது.

    ஆண்டுகள் பல கடந்த நிலையில், லட்சுமி நாராயணப் பெருமாளின் மனதில் உதித்த திட்டம் நிறைவேறும் நாள் நெருங்கியது. ஆம்... ராஜகோபுரம் கட்டி முடித்தாகிவிட்டது. அன்பர்கள் பலரது முயற்சியால் பிரமாண்டமாக எழுந்து நின்ற ராஜகோபுரத்தை இமைக்க மறந்து ரசித்தார் அவர். ஸ்ரீசாரங்கபாணி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டப்பட்டது, கும்பகோணத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமைந்தது.

    அன்று தீபாவளித் திருநாள். பிரம்மசாரியாக வாழ்ந்து, ஸ்ரீசாரங்க பாணிக்கே தனது வாழ்வை அர்ப்பணித்த அடியாரான லட்சுமி நாராயணப் பெருமாள் மரணம் அடைந்து பரமபதம் அடைந்தார். கும்பகோணம் மாநகர் வாழ் வைஷ்ணவ பெருமக்கள் எல்லாம் துயரம் அடைந்தனர். 'இனி, இப்படியொரு பக்தரை நாம் எப்போது காணப் போகிறோமோ...' என்று ஏங்கினர். லட்சுமி நாராயணப் பெருமாள்தான் பிரம்மசாரி ஆயிற்றே... அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்ய யாருமே இல்லை! எல்லோரும், 'அய்யோ பாவம்' என்றார்கள். அப்போது, "நான் இருக்கிறேன்..." என்று மக்கள் கூட்டத்தை விலக்கிக்கொண்டு வந்தான் ஓர் சிறுவன்.

    முந்தைய நாள் முழுக்கக் கண் விழித்திருந்து அழுதானோ என்னவோ... சோகம் அப்பிய அவனது முகம் சற்று வீக்கம் கண்டிருந்தது. தாரை தாரையாய் வடித்த கண்ணீரின் கறை முகத்தில் படிந்திருந்தது.

    'சொந்தத் தந்தையை இழந்ததுபோல் தவிக்கும் இந்தச் சிறுவன் யார்?' என்று மக்கள் யோசித்தனர்... லட்சுமி நாராயணப் பெருமாளின் பூதஉடலுக்குத் தானே இறுதிச்சடங்கு செய்வதாகச் சிறுவன் கூறினான். இதைக் கேட்ட கும்பகோணம் மக்கள், அது பெருமாளின் கட்டளையாகத்தான் இருக்கும் என்று கருதி சம்மதித்தனர்.

    ஒருவழியாக, இறுதிச்சடங்கு முடிந்தது. தான் வந்த காரியத்தை நிறைவேற்றி முடித்த சிறுவன், மக்கள் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து மறைந்தான். பொதுமக்களுக்கு ஆச்சரியம்! மறுநாள் அதைவிடப் பெரிய ஆச்சரியம், ஸ்ரீசாரங்கபாணி கோவிலில் காத்திருந்தது.

    அன்று காலை ஸ்ரீசாரங்கபாணியின் சந்நிதியை வழக்கம்போல் திறந்தார் கோவில் அர்ச்சகர். பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த ஆடை ஈரமாக இருந்தது. அதோடு, அவரது கையில் தர்ப்பைப்புல்லும் இருந்ததைக் கண்டு வியந்தார் அர்ச்சகர். "பகவானே... அப்படியென்றால் நேற்று பரமபதம் அடைந்த பக்தனுக்குச் சிறுவனாக வந்து இறுதிச்சடங்கு செய்தது நீதானா?" என்றுக் கூறி மெய்சிலிர்த்தார் அவர். இந்தத் தகவலை அறிந்த கும்பகோணம் மக்களும் மிகவும் பரவசப்பட்டுப் போனார்கள்.

    அன்று முதல் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் அமாவாசை (தீபாவளி) அன்று, தனது பக்தர் லட்சுமி நாராயணப் பெருமாளுக்காக கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி சிராத்தம் செய்கிறார். இவரது திருச்சந்நிதிக்கு இடதுபுறம், தாயாரை தரிசித்து விட்டு வரும் வழியில் தூண் ஒன்றில் சிலை உருவில் கை கூப்பிய நிலையில் காணப்படும் லட்சுமி நாராயணப் பெருமாளை நாமும் பார்க்கலாம்.

    • குடும்பநலனை விட தேசநலமே முக்கியம் என்று கருதி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • பிரதமராக இருந்தபோது பூரண மதுவிலக்கை கொண்டு வந்தார்.

    இன்று (பிப்ரவரி 29-ந்தேதி) முன்னாள் பிரதமர் மொரார்ஜிதேசாய் பிறந்தநாள். இந்தியாவின் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் இந்திய வரலாற்றில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியவர். நேர்மைக்கு இலக்கணமாக வாழ்ந்தவர். பாகிஸ்தானின் உயரிய விருதான நிஷான்-இ-பாகிஸ்தான் என்ற விருதை பெற்ற ஒரே இந்தியர் என்ற பெருமைக்குரியவர்.

    சுதந்திர போராட்ட வீரரான மொரார்ஜிதேசாய் 1896-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ந்தேதி குஜராத் மாநிலம் குல்தார் மாவட்டத்தில் படேலி என்ற கிராமத்தில் பிறந்தார். அவரது பிறந்தநாள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் வரும். பிப்ரவரி 29-ந்தேதியே (லீப் வருடம்) அதற்கு காரணம். தனது 99 ஆண்டுகால வாழ்க்கையில் 25 முறைதான் அவர் பிறந்தநாள் கொண்டாடினார் என்பது விசித்திரமான உண்மை.

    மும்பையில் பட்டப்படிப்பு முடித்த மொரார்ஜி தேசாய் 'சிவில்சர்வீஸ்' தேர்வில் வெற்றி பெற்று 12 ஆண்டுகள் மும்பை மாகாணத்தில் உதவி கலெக்டராக பதவி வகித்தார். 1930-ம் ஆண்டு சுதந்திரப் போராட்டம் தீவிரம் அடைந்த காலத்தில் காந்தியடிகளின் அழைப்பை ஏற்று அரசு பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். குடும்பநலனை விட தேசநலமே முக்கியம் என்று கருதி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்.

    'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின்போது கைதாகி 5 ஆண்டுகள் சிறையில் கழித்தார். 1931-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக பதவி வகித்தார். 1937-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி பம்பாய் மாகாண தேர்தலில் போட்டியிட்டது. இதில் மொரார்ஜிதேசாய் வெற்றிபெற்று விவசாயம் மற்றும் கூட்டுறவு வருவாய் துறை மந்திரியாக பதவியேற்றார். 1946-ம் ஆண்டு பம்பாய் மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. மொரார்ஜி தேசாய் உள்துறை மந்திரி ஆனார். இந்தியா விடுதலை அடைந்தபிறகு 1952-ம் ஆண்டு பம்பாய் மாகாணத்தில் முதல்-மந்திரி ஆக பொறுப்பேற்றுக்கொண்டார்.

    பம்பாய் மாகாணம், மராட்டியம், குஜராத் என்று 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டது. இந்த பிரிவுக்கு மொரார்ஜி எதிர்ப்பு தெரிவித்து முதல்-மந்திரி பதவியை விட்டுவிலகினார்.

    1958-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரி ஆனார். 1963-ம் ஆண்டு காமராஜர் திட்டத்தின்கீழ் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    இதன்படி காமராஜர் தமிழக முதல்-அமைச்சர் பதவியில் இருந்து வெளியேறினார். தேசாயும் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். 1969-ல் மொரார்ஜி ஸ்தாபன காங்கிரஸ் கட்சியில் பணிபுரிந்தார். 1975-ம் ஆண்டு இந்திராகாந்தி அவசரநிலையை பிரகடனபடுத்தியபோது மொரார்ஜி கைது செய்யப்பட்டு ரகசிய காவலில் வைக்கப்பட்டார். 19 மாதம் சிறைத்தண்டனைக்கு பிறகு 1977 ஜனவரி மாதம் விடுதலையானார்.

    அதே ஆண்டு மார்ச் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவர் தலைமையில் ஜனதா கட்சி கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றது. தேசாய் குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1977-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந்தேதி இந்திய பிரதமராக பதவி ஏற்றார்.

    பிரதமராக இருந்தபோது பூரண மதுவிலக்கை கொண்டு வந்தார். தங்கத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்தார். கதர் மற்றும் கைத்தறி தொழிலுக்கு மறுவாழ்வு கொடுத்தார். ஜனதா கட்சியில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக இரண்டு ஆண்டுகளில் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

    மொரார்ஜிதேசாய் நேர்மைக்கும் உண்மைக்கும் உதாரணமாக திகழ்ந்தவர். அவர் பம்பாய் மாநிலத்தில் மந்திரியாக இருந்தபோது நடந்த சம்பவம் இது. மொரார்ஜிதேசாய் மகள் மருத்துவக்கல்லூரியில் படித்துவந்தார். ஒரு பாடத்தில் தோல்வி அடைந்து விட்டார். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தந்தையிடம் அனுமதி கேட்டார். ஆனால் தேசாய் அதற்கு மறுத்துவிட்டார். தான் அமைச்சராக இருப்பதால் மகளுக்கு சலுகை காட்டிவிட்டார் என்ற பழிச்சொல் வந்துவிடும் என்பதே அதற்குகாரணம். இதன்விளைவாக அவரது மகள் தற்கொலை செய்துகொண்டாள். தனது மகளின் இழப்பை மவுனமாக தாங்கிகொண்டார்.

    ஜனதா சாப்பாடு திட்டம் என்ற சாப்பாட்டு திட்டம் தேசாய் பிரதமராக இருக்கும்போது கொண்டுவரப்பட்டது. உணவகங்களில் ஒரு ரூபாய்க்கு நல்ல சாப்பாடு கொடுக்க வேண்டும். இதுதான் ஜனதா சாப்பாடு.

    இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே ஓட்டல் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

    வரதட்சணையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதில் மொரார்ஜி தீவிரமாக முயற்சி மேற்கொண்டார். தான் கலந்துகொள்ளும் திருமண விழாவில் அது தலைகாட்டியது என்று கேள்விப்பட்டால் உடனே வெளியேறி விடுவார்.

    ஒரு முறை ராமேசுவரம் கோவிலுக்கு தரிசனத்துக்கு வந்தபோது சாமி தரிசனத்துக்கு ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்தி வரிசையில் நின்று வழிபட்டார்.

    பிரதமராக இருந்த மொரார்ஜிதேசாய் இறுதிகாலத்தில் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்துவந்தார். வீட்டு உரிமையாளர் தொடர்ந்த வழக்கில் தேசாய் குடும்பம் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனால் அதிர்ச்சியிலும், அவமானத்திலும் உடைந்துபோன தேசாயின் மருமகள் மனநிலை பாதிக்கப்பட்டு மாடியில் இருந்து கீழே விழுந்து மரணம் அடைந்தார்.

    மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனதும் அவரது ஆதரவாளர்கள் இந்திராகாந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாதிட்டனர். ஆனால் தேசாயோ ''தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதன் மூலம் மக்கள் ஏற்கனவே இந்திராவை தண்டித்து விட்டார்கள். வேறு தண்டனை தேவை இல்லை'' என்று கூறிவிட்டார். நீண்ட ஆயுளுக்கு சிறுநீரைக் குடிப்பதே காரணம் என்று இவர் கூறியது பலரால் விமர்சிக்கப்பட்டது.

    நெஞ்சில் உரத்துடனும், நேர்மைதிறத்துடனும் செயல்பட்டு வாழ்நாள் எல்லாம் மக்கள்சேவை செய்த மொரார்ஜிதேசாய் 1995-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி தனது 99-வது வயதில் மறைந்தார்.

    மொரார்ஜிதேசாய் நாட்டுக்கு ஆற்றிய சேவையை பாராட்டி மத்தியஅரசு அவருக்கு உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது.

    • ஒரு நல்ல படத்திற்குத் தேவையானது மூன்று விஷயங்கள்.
    • திரைப்படப் பயணம் வெற்றி மேல் வெற்றியாக மாறி அவரைப் புகழேணியின் உச்சிக்கு ஏற்றியது.

    திரைத் துறையில் நகல் எடுப்பவராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னால் உலகில் உள்ள லட்சக்கணக்கான மக்களை தியேட்டருக்கு வரவழைத்து நாற்காலியின் நுனியில் நடுநடுங்கும்படி அமர வைத்த மர்மக் கதை மன்னர் ஒருவர் உண்டு! அவர் யார் தெரியுமா? அவர் தான் மாஸ்டர் ஆப் சஸ்பென்ஸ் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட ஆல்பிரட் ஹிட்ச்காக்!

    இதில் சுவையான விஷயம் என்னவெனில் தனது திகில் படங்களை தன்னால் தியெட்டரில் அமர்ந்து பார்க்க முடியாது என்பதை அவரே ஒத்துக் கொண்டதுதான்! எப்படித்தான் மக்கள் தனது திகில் படங்களைப் பார்க்கிறார்களோ என்று வியந்தார் அவர். இவரைப் பற்றிய சுவையான விஷயங்கள் ஏராளம் உண்டு. அவற்றைப் பார்ப்போம்.

    பிறப்பும் இளமையும்: ஆல்பிரட் ஜோசப் ஹிட்ச்காக் 1899ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் நாள் இங்கிலாந்திலுள்ள லேடன்ஸ்டோன் என்னுமிடத்தில் பிறந்தார். இவர் தந்தையார் ஒரு பலசரக்கு வியாபாரி.

    இளம் வயதிலேயே மோசமான ஒரு அனுபவத்தை இவர் தந்தையார் இவருக்குத் தந்தார். இவரது ஐந்தாம் வயதில் இவர் வீட்டில் ஒழுங்காக இல்லை என்று எண்ணி ஒரு கடிதத்தை இவர் கையில் கொடுத்து அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் சென்று கொடுக்குமாறு கூறினார் தந்தை. இவரும் அப்படியே செய்தார்.

    சிறையில் அடைத்து வைக்குமாறு கூறப்பட்டிருந்தது. லாக்-அப்பில் சிறிது நேரம் இருந்த இவருக்கு வாழ்நாள் முழுவதும் போலீசைக் கண்டால் பயம் ஏற்பட்டது. ஆனால் இவர் தான் பின்னால் மர்மக்கதை தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் திகழ்ந்தார்.

    லண்டனில் பொறியியலும் கலையையும் கற்ற இவருக்கு கதை எழுதுவதில் ஈடுபாடு ஏற்பட்டது. 1920-ல் இவர் டைட்டில் கார்ட் என்று கூறப்படும் ஒரு திரைப்படத்தின் போக்கு பற்றி பிலிமும் வசனமும் எழுதும் கார்டுகளைத் தயாரிப்பவர் ஆனார். அந்தக் காலத்திய திரைப்படங்கள் மவுனப் படங்கள். ஆகவே இந்த டைட்டில் கார்ட் மிக முக்கியம். அத்தோடு காபி ரைட்டர் எனப்படும் நகல் எடுப்பவராக வசனங்களை எழுதுவதும் இவரது தொழிலாக ஆனது.

    பாரமவுண்ட் பிலிம்சில் 1922-ல் அவர் ஒரு சின்ன படத்தை எடுத்தார். 1925-ல் கொலையை மையமாக வைத்த 'தி பிளஷர் கார்டன்' என்ற முழு நீளப் படத்தையும் எடுத்தார்.

    திருமணம்: 1926-ல் திரைப்பட எடிட்டராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஆல்மா ல்யூசி ரெவிலி என்பவரை ஹிட்ச்காக் மணம் புரிந்தார். கணவரின் எல்லா திரைப்பட முயற்சிகளிலும் ஆல்மா ஒரு பங்கு வகித்தார்.

    இயல்பாகவே மற்றவரை பயமுறுத்தி ஆனந்திப்பது ஹிட்ச்காக்கின் வழக்கமாக ஆனது. குறும்புத்தனமும் ஏராளம். 39 ஸ்டெப்ஸ் என்ற படத்தில் நடிக்க வந்த நடிக நடிகையரின் கையில் விலங்கு மாட்டி விட்டு சாவி தொலைந்து விட்டதே என்று கூறி அவர்களைத் திடுக்கிட வைத்தார்.

    அதே போல கரப்பான், எலிகளைக் கண்டால் பயப்படுவோருக்கு அவற்றை பார்சலில் அனுப்பி வைப்பதும் இவருக்குப் பிடித்தமான ஒரு பழக்கம்! இந்த வேடிக்கைகள் எல்லாம் ஸ்டுடியோ செட்டில் இருப்பவரை பயமுறுத்தும்; திகைப்படைய வைக்கும்!

    ஹாலிவுட்டிற்குப் பயணம்: காலம் வேகமாக மாறத் தொடங்கியது. படங்கள் அனைத்தும் பேசும் படங்களாயின. பின்னால் அனைத்தும் வண்ணப்படங்களாக ஆயின. இங்கிலாந்தை விட்டு அமெரிக்காவில் ஹாலிவுட்டுக்குச் செல்ல எண்ணினார் ஹிட்ச்காக்.

    அவர் 1940-ல் அமெரிக்கா சென்று கால் பதித்தார். அவர் கால் பதித்த நேரம் முதல் அமெரிக்காவே நடுநடுங்கி ஆட ஆரம்பித்தது. 7 வருட ஒப்பந்தம் ஒன்றை டேவிட் ஓ. செல்ஸ்நிக் என்பவருடன் செய்து கொண்ட அவரது திரைப்படப் பயணம் வெற்றி மேல் வெற்றியாக மாறி அவரைப் புகழேணியின் உச்சிக்கு ஏற்றியது.

    இவரது புகழுக்குக் காரணம் அனைவரது பயமும் திகிலுமே தான்! ஒவ்வொரு மனிதரின் மனதின் ஓரத்திலும் பயம் இருக்கிறது என்கிறார் ஹிட்ச்காக்!

    ச.நாகராஜன்

    ஒரு காட்சியை அமைக்க இவரது கற்பனை வளமும் இவர் மேற்கொண்ட கடுமையான உழைப்பும் இணைந்து இவரது படங்களைப் பார்க்க அனைவரையும் தூண்டியது; ரசிகர்களை ஈர்த்தது. சஸ்பென்ஸ் மன்னனாக இவர் மாறினார்.

    ஒரு காட்சியை மூன்று வருடங்கள் கழித்துப் பார்த்தாலும் அதில் ஒரு குறையும் காண முடியாதபடி அது இருக்க வேண்டும் என்பது இவரது கொள்கை.

    சைக்கோ மற்றும் தி பேர்ட்ஸ்: ஹிட்ச்காக் எடுத்த படங்களில் சைக்கோ, தி பேர்ட்ஸ், டயல் எம். பார் மர்டர், ரியர் விண்டோ உள்ளிட்ட பல படங்கள் மிகவும் புகழ் பெற்றவையாகும்.

    தனது படங்களில் நடிக்க வருபவர்களை கால்நடையை நடத்துவது போல நடத்த வேண்டும் என்று இவர் கூறியதாகச் சொல்வதுண்டு.

    ஆனால் இவரிடம் படாதபாடு பட்டவர்கள் நடிகைகளே. அவர்களது அங்க அசைவு, கண் பார்வை, புன்சிரிப்பு, நடை, உடைகள், கேச அலங்காரம் என எல்லாவற்றிலும் முடிவு எடுப்பவர் இவரே.

    கதாநாயகி கிரேஸ் கெல்லி இவரிடம் அகப்பட்டுக் கொண்ட பெரும் நடிகை. ரியர் விண்டோ, டு கேட்ச் எ தீப், டயல் எம் பார் மர்டர் ஆகிய மூன்று ஹிட்ச்காக்கின் வெற்றிப் படங்களில் நடித்த இவர், பின்னால் மொனாகோ இளவரசரைக் கரம் பிடித்தார். 'டு கேட்ச் எ தீப்' என்ற படத்தில் வரும் கார் ரேஸ் காட்சி அருமையாகப் படம் பிடிக்கப்பட்ட ஒரு காட்சியாகும்.

    1960-ல் எடுக்கப்பட்ட சைக்கோ படத்தின் முடிவை யாரும் தெரிந்து கொள்ளக் கூடாது என்று அந்த நாவலின் பிரதிகள் முழுவதையும் இவர் வாங்கி விட்டார். அத்தோடு படம் ஆரம்பித்த பின்னர் யாரும் தியேட்டருக்குள் வரக் கூடாது என்றும் உத்தரவு போட்டார். அதை தியேட்டர் உரிமையாளர்களும் அப்படியே கடைப்பிடித்தனர். 109 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம் இவருக்கு 320 லட்சம் டாலரை ஈட்டித் தந்தது. இவரது தயாரிப்பு செலவு எட்டுலட்சத்து ஏழாயிரம் டாலர்கள்.

    குளியலறைக் காட்சி 78 கேமராக்களை வைத்து 45 வினாடிகளில் 52 'கட்'களுடன் படமாக்கப்பட்டது. இதில் கதாநாயகியாக நடித்த நடிகை ஜேனட் லீயின் கண் பார்வையை மட்டும் 26 முறை படமாக்கினார் ஹிட்ச்காக்!

    இதில் நடிப்பவர்கள் எந்தக் காட்சியைப் பற்றியும் முடிவைப் பற்றியும் யாருக்கும் சொல்லக் கூடாது என்று உறுதிமொழியையும் எடுக்கச் சொன்னார் ஹிட்ச்காக். அத்தோடு தொலைக்காட்சியில் தனக்காகப் பணியாற்றிய குழுவினரையே படம் பிடிக்க அழைத்தார்.

    1963-ல் எடுக்கப்பட்ட தி பேர்ட் படத்திற்கு 3000 நிஜப் பறவைகளும் இன்னும் இரண்டு லட்சம் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட பல்லாயிரம் மெக்கானிக் பறவைகளும் பயன்படுத்தப்பட்டன.

    பறவைகள் கேமராவைப் பார்த்து வர வேண்டும் என்பதற்காக ஒரு இறைச்சித் துண்டு காமராவின் லென்ஸ்களுக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது.

    பறவைகள் தாக்கும் காட்சியை இன்று பார்த்தாலும் பார்ப்பவர் கதிகலக்கம் அடைவது இயல்பே. இதில் கதாநாயகியாக நடித்தவர் டிப்பி ஹெட்ரன். 119 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில் ஹெட்ரனைப் பறவைகள் தாக்கும் காட்சி மட்டும் 7 நாட்கள் படமாக்கப்பட்டது. இதில் நடித்த அவர் ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த அதிர்ச்சியில் இருந்து விடுபட!

    லண்டனில் பேர்ட் திரைப்படத்தைப் பார்த்து விட்டு தியேட்டரில் இருந்து வெளியேறிய ரசிகர்கள் அலறிவிட்டார்கள். தாங்கள் திரைப்படத்தில் பார்த்து விட்டு வந்த பறவைகள் நிஜமாகவே அலறும் சத்தத்தைக் கேட்டு! ஆம், வெளியே யாருக்கும் தெரியாதபடி மரக்கிளைகளில் வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர்களில் பறவைகள் அலறும் ஒலி ஒலிபரப்பப்பட்டது!

    இசையை ஹிட்ச்காக் பயன்படுத்திய விதம் அனைவராலும் பிரமிக்க வைக்கும்படி அமைந்திருந்தது. ஒரு காட்சி முடியும்போது அடுத்த காட்சி ஆரம்பிக்கும் சில விநாடிகளில் அவர் இசையைப் பயன்படுத்திய விதம் அனைவரையும் வியப்படைய வைத்தது!

    இப்படி ஹிட்ச்காக்கைப் பற்றிய ஏராளமான செய்திகள் உண்டு.

    முக்கியமான காட்சிகளைப் பார்க்கவில்லையே என்று யாரும் கவலைப்பட வேண்டாம். இந்த இணையதள யுகத்தில் இந்த மூன்று நிமிடக் காட்சிகளை இணையதளத்தில் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். (நிச்சயம் பார்க்கப்பட வேண்டியவை டு கேட்ச் எ தீப் – கார்ரேஸ், சைக்கோ -குளியலறைக் காட்சி, தி பேர்ட் - பறவைகள் தாக்கும் பைனல் அட்டாக் காட்சி)

    அவரை வருத்திய ஒரே விஷயம்தனது உடலைப் பற்றி அவர் வெகுவாக அதிருப்தி கொண்டிருந்தார். அப்படி ஒரு பருமன்! வாழ்நாள் முழுவதும் அவரை வருந்தச் செய்த விஷயம் இது தான்!

    மறைவு: 1980-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ம் நாள் ஹிட்ச்காகக் சிறுநீரகக் கோளாறால் லாஸ் ஏஞ்சல்ஸில் தனது இல்லத்தில் மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் பெவர்லி ஹில்சில் நடைபெற்றது. அவரது உடல் எரிக்கப்பட்டு, அஸ்தி பசிபிக் மகா சமுத்திரத்தில் தூவப்பட்டது.

    அறுபது ஆண்டுகளில் அவர் எடுத்த படங்கள் 50.

    46 முறை அகாடமி விருதுக்காக அவர் பரிந்துரைக்கப்பட்டாலும் ஒரு முறை கூட அவர் அந்த விருதைப் பெறவில்லை. என்றாலும் கூட லட்சோபலட்சம் ரசிகர்களின் மனதில் அவர் பெற்றிருக்கும் இடம் அந்த விருதை விடப் பெரியதே!

    2018-ல் அமெரிக்க நேஷனல் பிலிம் பதிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதுகாக்கப்பட வேண்டிய படங்களில் அவரது எட்டுப் படங்கள் இடம் பெற்றுள்ளன.

    அவருக்கு க்னைட் விருது 1980-ல் அவர் மறைவதற்கு நான்கு மாதங்கள் முன்பாக பிரிட்டிஷ் அரசால் வழங்கப்பட்டது.

    வெற்றிக்குக் காரணம்: ஏராளமான நகைச்சுவை கலந்த பொன்மொழிகளை அவர் உதிர்த்துள்ளார். அவற்றில் அவர் கண்ட அனுபவ உண்மைகள் பொதிந்திருக்கின்றன. எடுத்துக்காட்டிற்கு இரண்டு இதோ:

    ஒரு நல்ல படத்திற்குத் தேவையானது மூன்று விஷயங்கள். 1. ஸ்க்ரிப்ட் 2. ஸ்கிரிப்ட் 3.ஸ்கிரிப்ட் (கதையின் எழுத்து வடிவம்)

    ஒரு படத்தின் நீளம் பார்ப்பவர் டாய்லெட் டுக்குப் போக வேண்டும் என்ற தாக்குப் பிடிக்கும் நேரத்தை விடக் குறைவாகவே இருக்க வேண்டும். தனது வெற்றிக்கான காரணத்தைப் பற்றி அவரே கூறி இருக்கிறார் இப்படி: தர்க்கத்தை விட முக்கியமானது கற்பனை வளம்.

    இமாஜினேஷன் என்ற இதே காரணத்தை தனது வெற்றிக்குக் காரணமாகக் கூறிய இன்னொருவர் - உலகின் ஆகப் பெரும் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்!

    நகல் எடுப்பவரை லட்சோபலட்சம் மக்களின் மனதில் ஏற்றி வைத்த கற்பனை வளம் வெற்றிக்கு வழி காட்டும் அஸ்திவாரம் அல்லவா!

    தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

    ×