search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    அய்யா வைகுண்டர் நிகழ்த்திய மகிமை
    X

    அய்யா வைகுண்டர் நிகழ்த்திய மகிமை

    • திருவிதாங்கூர் மன்னன் அய்யாவை மண்டியிட்டு வணங்கினான்.
    • கொடிமரத்தை 3 முறை வலம் வந்து வணங்கி அய்யா வைகுண்டரை மிக அருகில் தரிசிக்கலாம்.

    எங்கெல்லாம் அநீதிகள் நடக்கிறதோ, அங்கெல்லாம் தர்மத்தை காக்க நான் அவதரிப்பேன் என்றார் ஸ்ரீமன் நாராயணர். அதன்படி அவர் யுகம்தோறும் அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க அவதரித்துள்ளார்.

    அதில் 10-வது அவதாரமாக கலி எனப்படும் மாய எண்ணங்களை அழித்து தர்ம சிந்தனைகளை ஏற்படுத்தி மக்களை நல்வழிப்படுத்த ஸ்ரீமன் நாராயணர் எடுத்த அவதாரம் தான் அய்யா வைகுண்டர்.

    சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு...

    தமிழகத்தின் தென் கோடியில் உள்ள இன்றைய குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்டு இருந்தது. அந்த கால சூழலில் ஜாதிய கொடுமைகள் மேலோங்கி இருந்தது. கீழ்சாதிகள் என பாகுபாட்டால் 18 சாதி மக்கள் சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆளானார்கள்.

    தாழ்ந்த சாதி எனப்படுபவர்கள் முழங்காலுக்கு கீழே வேட்டி அணியக்கூடாது, பெரிய மீசை வைக்க கூடாது, செருப்பு அணிந்து செல்லக்கூடாது, பெண்கள் தோள்சீலை அணிய கூடாது, தாலி அணிந்திருக்க கூடாது என பலவாறான கொடுமைகள் அரங்கேறின. இந்த சூழலில்தான் குமரி மாவட்டம் சாஸ்தான்கோவில் விளை எனப்படும் சாமிதோப்பில் அன்னை வெயிலாளின் வயிற்றில் அய்யா வைகுண்டர் அவதரித்தார். 24-வது வயதில் இறைவனின் நியமப்படி, திருச்செந்தூர் கடலில் தீர்த்தமாடச்சென்று அக்கடலிலேயே சங்கமித்தார்.

    3 நாட்கள் கடலுக்குள் விஞ்சை பெற்று 3-ம் நாளில் வைகுண்ட சுவாமியாக அவதரித்தார் மகா விஷ்ணு. அவரது அவதாரம் நிகழ்ந்த நாள் மாசி மாதம் 20-ந்தேதி அதிகாலை வேளை.

    செந்தூர் கடலில் அவதரித்த அவர் நேராக சாமிதோப்புக்கு வந்தார். தாழக்கிடப்பாரை தற்காப்பதே தருமம் என்று சாதிய கொடுமைக்கு ஆளாகி கூனி குறுகி கிடந்தமக்களை தலை நிமிர செய்தார். யாருக்கும் அஞ்சி நடக்காதீங்கோ, சட்டம் மறவாதே தன்னளவு வந்தாலும், காணிக்கை வேண்டாதீங்கோ, கைக்கூலி கேளாதீங்கோ என மக்களுக்கு நல் அறிவுரைகளை கூறியதோடு, மக்களை பிரித்தாண்டு கொடுமை படுத்தியவர்களுக்கு அவர்கள் செய்யும் செயலை உணரச்செய்தார்.

    அய்யா வைகுண்டர் காலத்தில் தீண்டாமை, மூடநம்பிக்கை இவற்றில் ஊறிப்போயிருந்த மக்கள் எல்லாம் அய்யாவை தெய்வமாக கொண்டாடினார்கள். இது மேல்மட்ட மக்களை பொறாமைப்பட வைத்தது. அவர்கள் திருவிதாங்கூர் மன்னன் சுவாதி திருநாளிடம் புகார் செய்தார்கள்.


    கலி வயப்பட்ட மன்னனும் தனது படைகளை அனுப்பி அய்யாவை சிறைபிடித்து வர செய்தான். தனது தவக்காலமான 5-ம் வருடம் இறுதியில் அய்யாவை கயிற்றினால் கட்டி சாலையில் இழுத்து சென்றார்கள். அய்யாவை கொல்வதற்கு பல வகைகளில் முயற்சி செய்தார்கள். சாராயத்தில் விஷத்தை கலந்து கொடுத்தனர். வத்தல் அறைக்குள் நெருப்பு போட்டு அய்யாவை அடைத்தனர்.

    சுண்ணாம்பு காளவாயில் வைத்து நீற்றினர். பாலில் விஷம் கலந்து கொடுத்தனர். கட்டைகளை அடுக்கி தீயை வைத்து நீந்திக்கொள் என்று அய்யாவை அதில் தூக்கி போட்டனர். எல்லாவற்றையும் புன்முறுவலோடு பொறுமையாக ஏற்ற அய்யா வைகுண்ட சுவாமியை இறுதியாக புலியை பட்டினிபோட்டு அடைத்து வைத்திருந்த கூண்டில் அய்யாவை அடைத்தனர். புலியோ அய்யாவை வணங்கி அவர் திருவடியில் கிடந்தது. அதன்பிறகே அய்யாவை இறைவன் அவதாரம் என உணர்ந்தனர். திருவிதாங்கூர் மன்னன் அய்யாவை மண்டியிட்டு வணங்கினான்.

    சமதர்ம சமுதாயத்தை உருவாக்க அவர் பட்ட இன்னல்கள், கொடுமைகளும் ஏராளம். எல்லாவற்றையும் அமைதியுடனும், பொறுமையுடன் சகித்தவாறு அடிமைத்தழையில் கட்டுண்டு கிடந்தவர்களை மீட்டார். பொறுத்து இருங்க மக்கா, பூலோகம் ஆளவைப்பேன் என்று மக்களை ஒரு நிரப்பாய் வாழ வைத்தார்.

    ஒருவருக்கொருவர் அன்பாய் இருந்து வாழுங்கள் என்று அன்பு வழியை போதித்தார். நடந்தது, நடப்பது, நடக்கபோவது என முக்காலமும் உணர்த்தும் அகிலத்திரட்டு என்னும் புனித நூலை அருளினார். அன்பால் மக்கள் ஒருங்கிணைந்து வாழ அன்புக்கொடி மக்கள் என மக்களை அழைத்தார். எல்லோரும் ஓரு குலம், எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பதை அன்றே நடைமுறைக்கு கொண்டு வந்தார்.

    ஜோதி வழிபாட்டையும் உனக்குள்ளே இறைவன் இருக்கிறான் என உணர்த்த கண்ணாடி முன் நின்று வழிபடும் முறையையும் ஏற்படுத்தினார். மக்கள் பயன்படுத்தும் பொருட்களில் கூட வேறுபாடுகள் இருக்க கூடாது என முத்திரி கிணறு என பொது கிணறுகள், வழிபடுவதற்காக தாங்கல்கள், பதிகள் அமைத்தார்.

    ஒடுக்கப்பட்ட ஆண்கள் முழங்காலுக்கு கீழ் வேட்டி கட்டக் கூடாது. அங்க வஸ்திரம் அணியக் கூடாது என்று அரசாங்க சட்டம் இருந்த அந்த கால கட்டத்தில் தலைப்பாகை அணிந்து தான் இறைவழிபாடு செய்யவேண்டும் என்றும், பெண்கள் தோள் சீலை அச்சம் இன்றி அணிய வேண்டும் என்றும், மனோதத்துவ ரீதியாக புத்தி போதித்து தம் மக்களை தலை நிமிர்ந்து நிற்க செய்தார்.

    தீண்டாமை என்னும் தீயசக்தியை வேரோடு பிடுங்கும் விதத்தில் திருமண்ணை எடுத்த தம் பக்தர்களின் நெற்றியில் தொட்டு நாமம் சாற்றினார். உங்களுக்கு தெரிந்த பாசையில் இறைவனை போற்றி நீங்களே பணிவிடை செய்யுங்கள் என்று காலை, மாலை இருவேளையும் உகப்படிப்பையும், மதியம் உச்சிப்படிப்பையும் தம் மக்களுக்கு அறிமுகபடுத்தி வழிபடச் செய்தார்.

    எளியோர், வறியோர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் சமமாக அமர்த்தி சாப்பாடு கொடுத்து சமபந்தி போஜனம் நடத்தினார். சாதிக்கொரு கிணறு என்றிருந்த காலத்தில், எல்லோரும் ஒரே கிணற்று நீரை குளிக்கவும், குடிக்கவும் செய்தார். கூட்டு வழிபாட்டு மூலமே கலி என்கிற மாய அரக்கனை வேட்டையாட முடியும் என்று தர்ம நெறிகளை போதித்தார்.

    மகா விஷ்ணுவின் அவதாரமாய் முப்பொருளும் ஒரு பொருளாய் உதித்த வைகுண்டரின் தலைமைப் பதியாக இன்று சாமிதோப்பு விளங்குகிறது. அய்யாவே முன்நின்று முட்டப்பதி, பூப்பதி, அம்பலப்பதி, தாமரைக்குளம் பதி மற்றும் பல பதிகளை அமைத்தார். இன்று அய்யா வைகுண்டசாமி வழிபாட்டு ஆலயங்கள் இந்தியா முழுவதும் மட்டுமின்றி வெளி நாடுகளிலும் விழுதுகளாய் படர்ந்து பரவி வருகிறது.

    அய்யா வைகுண்டரின் தலைமைப்பதி எனப்படுவது சாமிதோப்பு. சாமிதோப்பில் அய்யா வைகுண்டர் 6 ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார். அவர் மூன்று நிலையில் தவம் மேற்கொண்டதாக அகிலம் கூறுகிறது. மூன்று நிலைகளும் மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த நோக்கங்களை கூறும் போது அகிலம்,

    "முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே

    தத்தமுள்ள இரண்டாம் தவசு சாதிக்காமே

    மூன்றாம் தவசு முன்னுரைத்த பெண்ணாட்கும் நன்றான முற்பிதிரு நல்ல வழிகளுக்கும்"

    மேலும் தவத்தின் இருப்பு முறையும் நிலைக்கு நிலை மாறுபட்டதாக கூறப்படுகிறது. முதல் 2 வருடங்களும் அவர் 6 அடி குழியிலும், அடுத்த 2 ஆண்டுகள் தரையிலும், கடைசி 2 ஆண்டுகள் உயர்ந்த பீடமிட்டு தவம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் தவம் புரிந்த கால கட்டத்தில் பச்சரிசிப் பால் தவிர வேறெந்த உணவு உட்கொள்ளவில்லை. குறைவாகப் பேசினார்.

    சாமிதோப்பு பதிக்குள் நுழைவதற்கு முன்பாக, அய்யா உருவாக்கிய முத்திரிக் கிணற்றில் நீர் இறைத்து நீராடி, அந்தக் கிணற்றை வலம் வந்து வழிபட்டு செல்ல வேண்டும்.

    அய்யாவின் பதிக்கு சென்றதும் அய்யா வைகுண்டர் தவம் இருந்த வடக்குவாசலை "சிவசிவ சிவசிவா அரகர அரகரா" என்று உச்சரித்து 5 முறை சுற்றி அய்யாவிடம் மாப்பு கேட்டு, ஏழு நிலை ராஜகோபுரம் தாண்டி, தருமபதியின் கிழக்குப் பார்த்த முகப்பு வாசலை அடைய வேண்டும். முகப்பு வாசலில் இருந்தே அய்யா வைகுண்டரைத் தரிசிக்கலாம். கொடிமரத்தை 3 முறை வலம் வந்து வணங்கி அய்யா வைகுண்டரை மிக அருகில் தரிசிக்கலாம். அய்யா வைகுண்டரின் பள்ளியறையை வலம் வரும் வழியில் அய்யா வைகுண்டர் மானிட அவதாரத்தில் பயன்படுத்திய கட்டில் வைக்கப்பட்டுள்ள அறையைக் காணலாம்.

    பள்ளியறை தரிசனம் முடித்ததும் தருமபதியின் உள் பிராகாரத்தை வலம் வரலாம். அவ்வாறு வலம் வருகையில், கேரள கட்டடக்கலை முறையில் அமைந்து உள்ள அய்யா வைகுண்டர் கருவறையின் பொன் விமானத்தைத் தரிசிக்கலாம்.

    தருமபதி மட்டுமல்ல, இங்கே பின்பற்றப்படும் அத்தனை வழிபாட்டு முறைகளும் வித்தியாசமானவை. தீப ஆராதனை கிடையாது. தேங்காய் உடைக்க மாட்டார்கள். கற்பூரம், சாம்பிராணி, ஊதுவத்தி ஆகியவற்றுக்கும் இங்கே இடமில்லை.

    வெற்றிலை- பாக்கு, மல்லிகைப்பூ, துளசி, பிச்சிப்பூ, பன்னீர், முழு எலுமிச்சைப் பழம் ஆகியவற்றைக் கொண்டு வந்தால் போதும். இவை வழிபாட்டுக்குப் பிறகு, இனிமமாக(பிரசாதமாக) அனைவருக்கும் சரிசமமாகத் தரப்படும்.

    'காணிக்கை வேண்டா(து)ங்கோ…' என்று அய்யா வைகுண்டரே சொல்லியிருப்பதால், தருமபதிகளில் உண்டியல்கள் கிடையாது. இங்கே பிரதானமாக வலியுறுத்தப்படுவது… 'உங்களால் முடிந்த தருமத்தைச் செய்யுங்கள்' என்பதுதான்.

    'தருமம் செய்து தழைத்திருங்கோ…'

    என்பது அய்யா வைகுண்டரின் வாக்கு என்பதால், இங்கே வரும் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த தருமத்தைச் செய்கிறார்கள். அதாவது, தருமபதிகளில் நடைபெறும் அன்னதானத்துக்குத் தேவையான, தங்களால் முடிந்த நிதி உதவியை மனமுவந்து தருகின்றனர் மக்கள்.

    Next Story
    ×