search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மலரும் நினைவுகள் மீனா: ராமேஸ்வரத்தில்.... நடுக்கடலில்....
    X

    மலரும் நினைவுகள் மீனா: ராமேஸ்வரத்தில்.... நடுக்கடலில்....

    • மிகப்பெரிய இக்கட்டில் சிக்கி மீண்டோம். அதை இன்று நினைத்தாலும் உடம்பெல்லாம் சிலிர்க்கும்.
    • ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டு மரங்களில் வந்தவர்கள் மீனா... மீனா... என்று பயங்கர மாக கத்தினார்கள்.

    அதோ நடுக்கடலில் நிற்குது பாருங்கள் கப்பல்! அந்த கப்பலுக்குத்தான் போகப் போகிறோம் என்றதும் ராமேஸ்வரம் கடற்கரை மணலில் நின்றபடி கடலுக்குள் நின்ற கப்பலை பார்த்தேன்... வாவ்... சூப்பர்... அப்போதே துள்ளி குதிக்க வேண்டும் போல் இருந்தது.

    செங்கோட்டை!

    அர்ஜுனுடன் நான் நடித்த படம். அவருடன் நான் நடித்த முதல் படமும் அதுதான். நல்ல கதை. புதிய டைரக்டர் சி.வி.சசிகுமார்.

    இந்த படத்திற்கான சில காட்சிகள்தான் கப்பலில் வைத்து படமாக்கப்பட்டது. அதற்காக நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலுக்கு சிறிய படகு மூலம் அழைத்து செல்ல ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

    அது சிறிய படகு. அந்த படகில் நான், என் அம்மா படகோட்டி மட்டும் இருந்தோம். படகு புறப்பட்டதும் ஜாலியாகத்தான் இருந்தது. அசைந்தாடிய படகும்... பரந்து விரிந்த கடலும் பயணத்தை உற்சாகப்படுத்தியது.


    ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் நினைக்க கூட இல்லை. சில நிமிடங்களில் எங்கிருந்துதான் அவ்வளவு கூட்டம் வந்தது...? எப்படி திரண்டது...? என்று தெரியவில்லை. ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டு மரங்களில் வந்தவர்கள் மீனா... மீனா... என்று பயங்கர மாக கத்தினார்கள். கடல் இரைச்சலையும் தாண்டி அவர்கள் போட்ட சத்தம் என் காதுகளை துளைத்தது.

    சரி ரசிகர்கள்தான்...! நம்மை பார்க்க ஆர்வத்துடன் வந்திருக்கிறார்கள் பார்த்த சந்தோசத்தில் கத்துகிறார்கள்! திரும்பி சென்று விடுவார்கள் என்று நினைத்து நானும் அவர்களை பார்த்து சிரித்தபடியே கை காட்டினேன்.

    கடலில் படகு சென்ற போது அலை உயரும் போது உயர்ந்தும், உடனே கவிழ்வது போல் தாழ்ந்தும் சென்றது. அது மனதுக்குள் பயத்தை கிளப்பியது.

    அந்த நேரத்தில் படகுகளில் வந்தவர்களும் எங்கள் படகை சூழ்ந்து கொண்டு வழி விடாமல் முற்றுகையிட்டபடி அவர்கள் படகால் எங்கள் படகை மோதினார்கள். இதனால் படகு தண்ணீரில் கவிழ்வது போல் தள்ளாடியது. நான் பயந்து நடுங்கினேன். பிளீஸ்... வழி விடுங்கள் என்று கெஞ்சினேன். ஆனால் அதை யாரும் காதில் வாங்கவே இல்லை.

    நிறைய சாக்லெட்டுகள் வாங்கி வந்திருக்கிறார்கள். அதை என் மீது தூக்கி வீசினார்கள். தண்ணீருக்குள் படகு அங்கும் இங்கும் ஆடியதும் என் இதயம் பயத்தில் ஆடியது. படகை கெட்டியாக பிடித்துக் கொண்டேன். அழுகை, அழுகையாக வந்தது. ஆனால் அவர்களோ எங்கள் மீது பரிதாபப்பட்டதாக தெரியவில்லை.

    படகில் உட்கார்ந்து இருந்த பிறகும் நாங்கள் பயந்தோம். ஆனால் அவர்களோ கட்டுமரங்களில் எழுந்துநின்று ஆடினார்கள்.

    அவர்களை தாண்டி எங்களால் செல்ல முடியவில்லை. நடுக்கடலிலேயே தவித்து கொண்டிருந்தோம்.

    ரொம்ப நேரம் ஆகியும் நாங்கள் கப்பலுக்கு செல்லாததால் கப்பலின் மேல் தளத்துக்கு வந்து எங்கள் படகு வருகிறதா? என்று படக்குழுவினர் பார்த்துள்ளார்கள்.

    அப்போது நடுக்கடலில் எங்கள் படகை முற்றுகையிட்டு வழிவிடாமல் தடுத்து தொந்தரவு செய்ததை பார்த்திருக்கிறார்கள்.

    உடனே மாஸ்டர் கனல் கண்ணன் ஒரு படகில் அங்கிருந்து விரைந்து வந்து திரண்டிருந்தவர்களை திட்டி எச்சரித்து விரட்டினார். அதன் பிறகுதான் எங்களால் அங்கிருந்து நகர முடிந்தது. மிகப்பெரிய கண்டத்தில் இருந்து மீட்கப்பட்டது போல் இருந்தது.

    ஒரு சின்ன சீன்தான் எடுத்தார்கள். அதற்காக மிகப்பெரிய இக்கட்டில் சிக்கி மீண்டோம். அதை இன்று நினைத்தாலும் உடம்பெல்லாம் சிலிர்க்கும்.

    அந்த படம் அதிரடி படம் மட்டுமல்ல. வலுவான கதையம்சம் கொண்டது. கதைப்படி அக்ரஹாரத்தை சேர்ந்த நான் அய்யர் பாஷைதான் பேச வேண்டும். பேசினேன் அது எனக்கு புதிய அனுபவம்.


    அந்த படத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் எனக்கு தோழியாக இருப்பார். நிஜமாகவே ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை அந்த பாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தார்கள்.

    "பாடு பாடு பாரத பண்பாடு

    மேலை நாடும் போற்றிடும்

    பண்பாடு...." என்ற பாடலுக்கு நானும் அந்த பெண்ணும் ஆடுவோம். அது எனக்கு ரொம்ப பிடித்தது.

    பாடலில் பண்பாட்டை பற்றி பெருமையாக பேசப்பட்டது போல் அந்த பெண்ணும் நமது பண் பாட்டை பற்றி அடிக்கடி நிறைய விஷயங்களை என்னிடம் கேட்டு தெரிந்து கொண்டார்..

    'வெண்ணிலவே வெள்ளை

    பூவே வா.... வா...

    வெட்கம் என்னும்

    ஆடை வேண்டாம் வா... வா..' என்ற டூயட் பாடல் காட்சிகள் வாகினி ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டது.

    நிறைய காஸ்ட்யூமில் அந்த காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது அர்ஜுனுக்கு குழந்தை பிறந்திருந்தது. அதனால் படப்பிடிப்புக்கு அடிக்கடி தாமதமாக வரவேண்டிய சூழல்.

    அவர் தாமதமாக வந்ததில் எனக்கு சந்தோசம். ஏன் என்றால் என் சம்பந்தப்பட்ட குளோசப் காட்சிகளை நிதானமாக முன் கூட்டியே எடுத்து விடுவார்கள். எங்கள் வீடும் பக்கத்தில் இருந்ததால் கூடுதல் சந்தோசம். ஓய்வு நேரத்தில் வீட்டுக்கு சென்று விடுவேன். இந்த சந்தோசம் எல்லோருக்கும் இருப்பது தானே? இந்த மீனாவுக்கும் ஏற்பட்டதில் தப்பில்லையே?

    இதை நான் அர்ஜுனிடமே சொல்லி இருக்கிறேன். புகழ் பெற்ற டெல்லி செங்கோட்டை போல செங்கோட்டை படமும் பெரும் புகழை தேடி தந்தது.

    அடுத்து வந்தது ஒரு சூப்பர் டூப்பர் படம். தமிழ்நாடே கொண்டாடிய வித்தியாசமான படம். அது என்ன படம் என்று யோசிக்கிறீங்களா...? அது சஸ்பென்ஸ்....

    அடுத்த வாரம் சொல்கிறேன்!

    (தொடரும்)

    Next Story
    ×