search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பெற்றோரின் பொறுப்பு என்ன?
    X

    பெற்றோரின் பொறுப்பு என்ன?

    • மொபைல் போனும் இண்டர்னெட்டும் சாப்பாடு தூக்கத்தைவிட முக்கியமாகப்போய்விட்ட காலத்தில் இருக்கிறோம்.
    • சந்தோஷ வருத்த தருணங்கள் பற்றியெல்லாம் தாய் தகப்பனுக்கு நன்றாகத்தெரிந்திருக்க அவர்களுடன் நிறையப் பேச வேண்டும்.

    "என்னடி மொபைலிலேயே இத்தன நேரமா பாக்கறியே?"

    "சும்மா இரும்மா! இதெல்லாம் உனக்குப்புரியாது!"

    நீங்கள் இந்த வகை அம்மாவாக இருக்கக்கூடவே கூடாது!

    எண்பதுகளில் பரிட்சை ஹாலுக்கு கால்குலேட்டர் கொண்டு வரக்கூடாது என்றாலோ, காலேஜுக்கு பாவாடை தாவணிதான் போட்டுக்கொள்ள வேண்டும், சுடிதாரெல்லாம் அனுமதிக்க முடியாது என்றால் வாய் பேசாமல் ஒப்புக்கொண்ட தலைமுறை நாம்.

    ஆனால் பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வரக்கூடாது என்றால் உண்ணாவிரதமிருக்கும் தலைமுறை இப்போது! சுதந்திரம் என்றால் நாமறிந்தது காந்தி வாங்கித்தந்தது. ஆனால் இப்போது சுதந்திரம் என்னும் வார்த்தையின் அர்த்தமே வேறு.

    "காலேஜுலேர்ந்து வந்ததுலேர்ந்து அந்த மொபைல் போனையே நோண்டிட்டு இருக்கியே! கொஞ்சம் என்னொட உட்கார்ந்துதான் பேசேன்!"

    "அட என்னம்மா! நீ அடிக்கடி என்னோட சுதந்திரத்துல தலையிடறே. எனக்கு "மீ டைம்" (தானே தனியாகச்செலவிடும் நேரமாம்!) தரணும்! சும்மா குறுக்கிடாதே!"

    மொபைல் போனும் இண்டர்னெட்டும் சாப்பாடு தூக்கத்தைவிட முக்கியமாகப்போய்விட்ட காலத்தில் இருக்கிறோம். எட்டாவது பிறந்த நாளுக்கு மொபைல் போன் வாங்கித்தரவில்லை என்று ஒரு சிறுமி தற்கொலையே பண்ணிக்கொண்டுவிட்ட அவலம் நடந்து சில காலம் கூட ஆகவில்லை.

    ஆக, நம் வீட்டுக்குழந்தைகள் சுதந்திரமாக மொபைல் போனும் கம்ப்யூட்டரில் இண்டெர்னெட்டும் பயன்படுத்துவார்கள் என்பது நமக்கு விதிக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. அந்தகண்றாவி இண்டெர்னெட்டில் கிடைக்காத சமாச்சாரம் இல்லை. தெய்வீக விஷயங்களிலிருந்து தீவிரவாதம் வரையும் ஆன்மீகத்திலிருந்து அடல்ட்ஸ் ஒன்லி வரையும் பாழாய்ப்போன எல்லாம் இருக்கும் சவுகரியம்.

    நம் குழந்தைகள் எதை எப்படிப்பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்காணிப்பது இயலாது. அதான் சொன்னேனே சுதந்திரம் என்னும்வார்த்தையை தூக்கி நம் முன்னே போடுவார்கள். ஆகவே அவர்களை வழி நடத்துவது மிக மிக அவசியம்.

    இந்த வழி நடத்துதல் அவ்வளவு சுலபமில்லை. இண்டர்னெட் அல்லது ஆன்லைன் பயன்படுத்துதல் பற்றி நமக்கே அரைகுறைதான். தொழில் நுட்பமும் அதன் வசதிகளூம் நாளுக்கொன்றாய் மாறி முன்னேறி வருவதால் நாமே இன்னும் கற்றுக்கொள்ளும் நிலையில்தான் இருக்கிறோம். ஆகவே இதை வைத்து நம் குழந்தைகளை வழி நடத்துதல் சிரமமான காரியம்.

    விரவிக்கிடக்கும் சமூக வலைத்தளங்கள் ஆன்லைன் தளங்கள் மொபைல் செயலிகள் போன்றவை ஒரு அடர்ந்த காட்டை விட பயங்கரமானதாக ஆகிவிட்டிருக்கின்றன. இந்தக்காட்டினுள் எப்படி பாதுகாப்பாக வலம் வந்து பயன் அடையலாம் என்பது பற்றி நாம் இளைய சமுதாயத்தை வழி நடத்தியாக வேண்டும்.

    முதல் காரியமாக என்னென்ன செயலிகளை உங்கள் குழந்தை உபயோகிக்கிறாள் என்பதை நீங்கள் நன்கு அறிந்துகொள்ள வேண்டும். நீங்கள் அதில் ஒரு கண் வைத்திருக்கிறீர்கள் என்பது அவளுக்கும் தெரியவேண்டும்.

    'நேத்து ஏதோ புது டோன் கேட்டேனே! எந்த செயலியை டவுன்லோடு பண்ணியிருக்கே?"

    "அம்மா! நீ என்ன ஷெர்லக் ஹோல்ம்ஸா? அது வந்து…ரியா சொன்னாம்மா! இந்த செயலில லேடஸ்ட் பேஷன்ல்லாம் வர்ரதாம்! அம்மா ப்ளீஸ்! இந்த செயலி மட்டும் இருக்கட்டும்மா!"

    அது!

    அதே சமயம் அப்படியே விட்டுடக்கூடாது.

    "எங்க எனக்கு காமி! நானும் டவுன்லோடு பண்ணிக்கறேனே! எனக்கும் லேட்ஸ்ட் பேஷன் தெரிஞ்சா உனக்கு தெச்சுப்போடலாமோனோ!"

    அவர்கள் பார்க்கும் செயலிகளை நீங்களும் தரவிறக்கம் செய்து உபயோகித்துப்பார்த்து நம் குழந்தைக்கு தோதான செயலிதானா என்பதை உறுத்திப்படுத்திக்கொள்ளலாம்.

    அடுத்ததாக சில சின்ன வரைமுறைகள் கொண்டு வரவேண்டும்.

    "இதப்பார்! நீ கேட்டேன்னு மொபைல் வாங்கிக்கொடுத்தாச்சு! ஆனா ராத்திரி எட்டு மணிக்கு சாப்பிட வரும்போது அணைச்சுடணும். அது நம்ம வீட்ல நீ சொல்லுவியே "மீ டைம்"னு அது மாதிரி "எல்லோருக்குமான டைம்! யாரும் மொபைல்ல பேசவோ இல்ல அதை நோண்டவோ கூடாது!"

    நல்ல விஷயம் தான் ஆனால் இதில் ஒரு முக்கிய சமாச்சாரம் இருக்கிறது! நீங்களும் இந்த டிஸிப்ளினுக்கு பணிந்து வரவேண்டும். நீங்கள் "மாதிரி"யாக திகழ்ந்தால்தான் குழந்தைகளுக்கும் ஒரு பொறுப்பு வரும். அதை விட்டுவிட்டு எட்டு மணிக்கு மேல் நீங்க மொபைல் பயன்படுத்த, அதைப்பார்த்த குழந்தை,

    "நீ மட்டும் மொபைல் பேசறியே" என்று கேட்கும்போது, "வாயை மூடு! அதிகப்பிரசங்கி" என்பது தப்பாட்டம்!

    எனக்குத்தெரிந்த ஒரு குடும்பத்தில் செவ்வாய்க்கிழமை வீட்டில் மொபைல் போனுக்குத்தடை. வீட்டுக்கு வந்துவிட்டால் யாரும் செவ்வாயன்று மொபைல் போன் உபயோகப்படுத்த மாட்டார்கள். மொபைல் இண்டர்னெட்டுக்கு வெளியேயும் உலகம் உண்டு என்பது புரிய வேண்டும்.


    பர்சனல் விவரங்களைக்கொடுக்கக்கூடாது என்பதை நீங்கள் குழந்தைகளுக்கு வலியுறுத்த வேண்டும். முக்கியமாக தன் போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் தாராளமாக வெளியிடுவது தடுக்கப்பட வேண்டும்.

    "அம்மா! இதப்பாரேன்! என் ப்ரெண்ட் ரியா எத்தனை அழகழகா போட்டொ போட்டுண்டிருக்கா!"

    குழந்தை காட்டும்போது நீங்களே அந்த ரியாவின் விபரங்களை தளங்களிலிருந்து தரவிரக்கம் செய்து காண்பித்து அவளுக்குப்புரிய வைக்க வேண்டும்!

    "பாத்தியா? இது போல யார் வேணா டவுன்லோடு பண்ணி தப்பா உபயோகப்படுத்த முடியும்! ரியாகிட்டயும் சொல்லு!"

    குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை தூண்டிவிடும் பலப்பல விஷயங்களை இணையத்தின் மூலம் தாய்மார்கள் கண்டறிந்து வீட்டிலேயே சொல்லித்தந்து ஒவ்வொரு குழந்தையும் எந்த விதத்திலும் வாய்ப்புக்கள் குறையப்பெற்றதில்லை என்று முன்னேற்ற முடியுமே...

    அமெரிக்காவில் சில பெற்றோர் தங்களின் டீனேஜ் குழந்தைகளுடன் பேசி எப்போதெல்லாம் மொபைல் இண்டர்னெட் உபயோகிக்கலாம் என்பது பற்றி எழுத்து மூலம் காண்டிராக்டே போட்டுக்கொள்கிறார்களாம், இந்த எழுதப்பட்ட காண்டிராக்ட் கட்டுப்பாடு பற்றிய ஒரு சீரியஸ்னெஸ் தருகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

    குழந்தைகளுடன் நிறையப்பேசவேண்டும்.

    ஆம், மொபைல் இண்டர்னெட்டில் இருந்து தடுக்க மட்டுமில்லை, சாதாரணமாகவே குழந்தைகளை நன்கு புரிந்து கொள்ள, பெற்றோர் அவர்களுடன் அதிகமாகப்பேசுதல் வேண்டும். அவர்களின் விருப்பு வெறுப்புக்கள், அவர்களின் ஆசாபாசங்கள், அவர்களின் நண்பர்கள், அவர்களின் சந்தோஷ வருத்த தருணங்கள் பற்றியெல்லாம் தாய் தகப்பனுக்கு நன்றாகத்தெரிந்திருக்க அவர்களுடன் நிறையப் பேச வேண்டும்.

    மொபைலும் இண்டர்னெட்டும் குடும்பத்தின் உறவுப்பாலத்தை அசைத்து விட்டதென்னவோ உண்மைதான்.

    "நேத்து வீட்ல கரண்ட் இல்ல. மொபைலும் சார்ஜ் போயிடுச்சு! கொஞ்ச நேரம் அப்பா அம்மாவோட பேசிட்டு இருந்தேன். எனக்கே ஆச்சரியம் என்ன தெரியுமா, ரெண்டு பேரும் நல்ல மாதிரியாத்தான் தெரியறாங்க!"

    இப்படிச்சொல்லும் குழந்தைகளின் பெற்றோர் உடனே முழித்துக்கொள்ள வேண்டும்!

    Next Story
    ×