என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • உடல் பருமனுக்கு சில நோய்நிலைகளும் காரணமாக உள்ளன.
    • முதுமையில் உணவுக்கட்டுப்பாடு என்பது ஆரோக்கியத்திற்கும், ஆயுளுக்கும் மிக மிக அவசியம்.

    "பசித்த பின் புசி" என்பது வழக்கு மொழி. ஆனால் மூன்று வேளைக்கும் மருந்து உட்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், பசியில்லாமலே உணவை உட்கொள்வது முதுமையில் வாடிக்கை. இது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். முதுமையில் சேரக்கூடாத ஒன்று உடல் எடை. ஏனெனில் உடல் பருமன் பல்வேறு நோய்நிலைகளோடு தொடர்புடையது.

    உடல் பருமன் எனும் ஒரு நோய்நிலையானது சர்க்கரை நோய், புற்றுநோய், மிகை ரத்த அழுத்தம், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள், பித்தப்பை கல்லடைப்பு, பக்க வாதம் போன்ற பல்வேறு நாட்பட்ட நோய்களோடு கைகோர்த்து, முதுமையை வருத்தும். ஆயுளைக் குறைக்கும்.

    முதுமையில் முழங்கால் மூட்டு வலி வருவதற்கான முக்கிய காரணங்களுள் உடல் பருமன் ஒன்றாக உள்ளது. ஏனெனில் உடலின் மொத்த எடையைத் தாங்க வேண்டிய பொறுப்பு நமது முழங்கால் மூட்டுகளுக்கு உள்ளது. ஏற்கனவே மூட்டுக்கள் தேய்மானம் அடைந்த நிலையில், அதன் மேல் கூடுதல் பாரம் ஏற்றுவது மூட்டுக்களை மேலும் துன்புறுத்துவதற்கு நிகர். எனவே உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்வது மூட்டுகளுக்கும் நல்லது.

    உடல் பருமனுக்கு சில நோய்நிலைகளும் காரணமாக உள்ளன. எனவே முதுமையில் உடல் பருமனுக்கு காரணமான நோய்நிலையை கண்டறிவதும் அவசியம். அதிமுக்கியமாக தைராய்டு சுரப்பு கோளாறு (ஹைபோ தைராய்டு நிலை) மற்றும் ஹார்மோன் சுரப்பிகளின் கோளாறுகள் அதில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.


    மேலும் முதுமையில் பல்வேறு நோய்நிலைகளுக்கு எடுத்துக்கொள்ளும் ஸ்டீராய்டுகள், வலிப்பு மருந்துகள், மன அழுத்தம் போக்கும் மருந்துகளும், நீரிழிவு கட்டுப்பட வழங்கும் சில மாத்திரைகளும் உடல் பருமன் உண்டாக காரணமாவதால், மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி எடுப்பதே நல்லது. பல வருடங்களுக்கு முன்னர் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை ஆலோசனை இல்லாமல் தாங்களாகவே எடுப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

    உடல் பருமனுக்கு ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பதும் காரணமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்பு செல்களில் உற்பத்தியாகும் 'அடிபோகைன்' எனும் வேதிக்காரணிகள் இன்சுலின் எதிர்ப்பை உண்டாக்கி, சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் வரும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. இதனால் உடலின் உள்ளுறுப்புகளில் படியும் கொழுப்பு பல்வேறு தொந்தரவுகளை உண்டாக்கிவிடும். எனவே உடலில் கொழுப்பு படியாமல் பார்த்துக்கொள்வது உடல் நலத்திற்கு நல்லது.

    சித்த மருத்துவம் கூறும் கபம் தான் உடல் பருமனுக்கு முக்கிய காரணமாகிறது. உடலில் கபம் அதிகரிப்பதே கொழுப்பு அதிகமாகும் நிலைக்கு அடித்தளமிடுகிறது. 'எத்திய ஐயம் எழுந்திடிற் கிட்டாதே' என்கிறது திருமூலரின் திருமந்திரம். அதாவது 'ஐயம்' எனும் கபம் கூடினால் மருந்துகளுக்கு நோய் வசப்படாது என்பது பொருள். ஆகவே முதுமையில் கொழுப்பு எனும் கபம் உடலில் அதிகரிக்காமல் தடுக்கும் சித்த மருந்துகளை நாடுவது ஆயுளைக் கூட்டும்.

    சித்த மருத்துவத்தில் 'தூல ரோகம்' என்று சொல்லப்படும் உடல் பருமனை குறைக்க பல்வேறு மூலிகைகள் சொல்லப்பட்டுள்ளன. சித்த மருத்துவ மூலிகைகளான கடுக்காய், நிலாவாரை, மரமஞ்சள், குங்கிலியம், கொள்ளு, மந்தாரை, கோடாம்புளி, திரிபலை ஆகியனவும், வெந்தயம், பூண்டு, சீரகம், சோம்பு, கொத்துமல்லி விதை (தனியா), சீரகம், மஞ்சள், சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்த திரிகடுகு ஆகிய அஞ்சறைப்பெட்டி சரக்குகளும் உடலில் கொழுப்பினைக் குறைத்து உடல் பருமனைக் குறைக்க உதவுவதாக உள்ளன.


    கோடாம்புளி எனும் பழம்புளி தற்காலத்தில் உடல் எடை குறைக்க உலகம் முழுவதிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள எச்.சி.ஏ எனும் ஹைட்ராக்சி சிட்ரிக் அமிலம் எனும் வேதிப்பொருள் அதிக பசியைத் தடுப்பதோடு, அதில் உள்ள 'கார்சினால்' வேதிப்பொருள் உடலில் உள்ள கொழுப்பினைக் குறைக்க உதவுவதாக உள்ளன. எனவே இந்த பழம்புளியை சாதாரண புளிக்கு பதிலாக ரசத்தில் பயன்படுத்த உடல் பருமன் குறைய உதவும்.

    கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த திரிபலை சூரணம் முதுமையில் பல்வேறு நோய்களுக்கு பலன் அளிக்கக்கூடியது. உடல் எடையைக் குறைக்க தினமும் இரவில் ஒரு தேக்கரண்டி அளவுக்கு திரிபலை சூரணம் வெந்நீரில் கலந்து தொடர்ந்து எடுத்து வர பயன் தரும். அல்லது கடுக்காய் எனும் கபத்தைக் குறைக்கும் மூலிகையை இரவில் எடுத்துக்கொள்வதும் நல்லது.

    இன்னும் சில மூலிகைகள் இன்றைய நவீன அறிவியல் சுட்டிக்காட்டும் கணையத்தில் உள்ள 'லிபேஸ்' எனும் நொதியின் செயல்பாட்டை தடுத்து உடல் பருமனைக் குறைக்க வழி வகை செய்வதாக உள்ளன. ஆவாரை, லவங்கப்பட்டை, சோம்பு, பாகல்காய், வல்லாரை, வெந்தயம், கடலழிஞ்சில், மாவிலை, கருஞ்சீரகம், பெருங்காயம், மரமஞ்சள் ஆகியன அவற்றுள் சில. மேற்கூறிய மூலிகைகள் சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்காக பயன்படுத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இவற்றை மருத்துவர் ஆலோசனைப்படி நாடுவதும் நற்பலன் தரும்.

    "கொழுத்த உடலுக்கு கொள்ளு" என்பது மருத்துவ பழமொழி. உணவில் கொள்ளு சேர்ப்பது பல்வேறு நன்மைகளை அளிக்கக்கூடியது. குறைந்த சர்க்கரை சத்தும், அதிக புரதச்சத்தும், நார்ச்சத்தும் கொண்ட உணவு இது. இதனை மாலை வேளையில் எடுத்துக்கொள்வது நல்லது. நீரிழிவு, உடல் பருமன், ரத்தத்தில் அதிகரித்த கொழுப்பு நிலை ஆகிய அனைத்திலும் பயனளிக்கும்.

    தில்லைவாணன்

    தில்லைவாணன்

    உடல் எடையைக் குறைக்கும் தேநீரில் தற்காலத்தில் அதிகம் சேர்க்கப்படும் மூலிகைப் பொருளாக 'திருநெல்வேலி சென்னா' எனும் 'நிலாவாரை' உள்ளது. உலக அளவில் மலமிளக்கியாக இதன் செயல்பாடும், பயன்பாடும் அதிகம். சமீப காலங்களில் இது உடல் பருமனைக் குறைக்கவும் உதவுவதாக பல்வேறு ஆய்வுகள் கூறுவது சிறப்பு, சித்த மருத்துவத்தில் உள்ள நிலாவாரை சூரணம் அத்தகைய பண்புகளை உடையது. இதனை அரை தேக்கரண்டி அளவுக்கு இரவில் வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவும்.

    "எத்தை சொன்னாலும் கேட்கும் நத்தைசூரி" என்பது வாய்மொழி. 'சுடுகாடுமீட்டான்' என்ற புனைபெயரும் இதற்குண்டு. இது ரத்தத்தில் உள்ள கொழுப்பினைக் குறைத்து உடல் பருமன் குறைய வழிவகை செய்யும். சிறப்புமிக்க நத்தை சூரியின் விதையை இளவறு ப்பாக வறுத்து காபி கொட்டைக்கு பதிலாக பயன்படுத்தி தேநீராக்கி அருந்தி வருவது ம் பலன் தரும்.

    மூலிகைகள் ஒருபுறமிருக்க, மருந்தாகும் அஞ்சறைப்பெட்டியை அலசுவது நலத்திற்கு நலம் பயக்கும். தினசரி 4 பல் பூண்டும், தேக்கரண்டி வெந்தயமும், கருஞ்சீரகம் மற்றும் லவங்கப்பட்டை சேர்ந்த தேநீரும் சேர்த்துக்கொண்டால் இரத்தத்தில் உள்ள கொழுப்பு குறைந்து, உடல் பருமன் குறைய வழிவகை செய்யும்.

    கடைசரக்கான வெந்தயம் அதிகப்படியான நார்சத்துக்களைக் கொண்டது. இது ரத்தத்தில் உள்ள கொழுப்பினைக் குறைத்து உடல் எடையைக் குறைக்க உதவும். அதே போல் தனியா, சோம்பு மற்றும் சீரகம் சார்ந்த கசாயம் அவ்வப்போது எடுத்துக்கொள்வதும் உடல் எடையைக் குறைக்க உதவும் எளிய வழிமுறை.

    'பெருஞ்சீரகம்' எனும் சோம்பு உடல் பருமனைக் குறைக்க நல்ல பலன் அளிக்கக்கூடியதாக உள்ளது. அத்தகைய மகத்துவமுள்ள சோம்பினை இளவறுப்பாக வறுத்து கசாயமிட்டு அவ்வப்போது குடித்து வர நன்மை பயக்கும். அல்லது சோம்பு தேநீர் செய்தும் குடித்து வரலாம். டீத்தூளை தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அத்துடன் சோம்பு பொடி சேர்த்து காய்ச்சி சிறிது நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடித்து வர உடல் எடையைக் குறைக்க உதவும்.

    பச்சை தேநீர் (கிரீன் டீ) எடுக்க இயலாதவர்கள், சீரகத்தை தண்ணீருடன் அவ்வப்போது கொதிக்கவைத்து குடித்து வர உடலில் கொழுப்பின் அளவு குறைந்து உடல் எடை குறைய உதவும். ஆதலால் சீரக தண்ணீரை 'ஏழைகளின் கிரீன் டீ' எனலாம். சீரகத்தின் மருத்துவ செயல்பாட்டிற்கு வேதிப்பொருள் 'குமினால்டிஹைடு என்ற வேதிப்பொருள் காரணமாக உள்ளது.

    அஞ்சறைப்பெட்டி சரக்குகளான கருஞ்சீரகத்தில் உள்ள 'தைமோகுயினோன்' வேதிப்பொருளும், க்ரீன் டீயில் உள்ள 'கடிச்சின், பூண்டில் உள்ள 'அலிசின்' ஆகிய வேதிப்பொருட்கள் கொழுப்பைக் குறைக்கும் முக்கிய மூலக்கூறுகளாக உள்ளன.

    கொத்துமல்லி விதை, ஏலக்காய், சீரகம், சுக்கு இவற்றை சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக்கி அடிக்கடி அருந்தி வருவது உடல் பருமனை சிரமம் இன்றி குறைக்க உதவும். இது பாதுகாப்பான வீட்டு வைத்திய முறை.

    முதியவர்கள் எளிமையாக இடுப்பின் சுற்றளவை வைத்து உடல் பருமனைக் கணிக்கலாம். பொதுவாக இடுப்பு சுற்றளவு ஆண்களுக்கு 90 செமீ, பெண்களுக்கு 80 செமீ வரை இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்கின்றன தரவுகள். இடுப்பின் சுற்றளவு அதற்கு கூடுதலாக இருப்பின் உடல் பருமனாக கருதப்படும். இதனைக் கொண்டு உடல் பருமனைக் கணித்து நடைப்பயிற்சி, யோகாசனப்பயிற்சி மற்றும் உணவு முறைகளை திட்டமிடுவது அவசிய தேவை.

    முதுமையில் எழுந்து நடக்க கூட முடியாத நிலையில், நடைப்பயிற்சியும், உடல் பயிற்சியும் மேற்கொண்டு உடல் பருமனைக் குறைப்பது என்பது மிகக்கடினம் தான். இத்தகைய சூழலில் உடல் எடையைக் குறைப்பதற்கு இருக்கும் ஒரே நம்பிக்கை பாதை 'உணவு முறை' மட்டும் தான். எனவே முதுமையில் உணவுக்கட்டுப்பாடு என்பது ஆரோக்கியத்திற்கும், ஆயுளுக்கும் மிக மிக அவசியம்.

    தொடர்புக்கு: drthillai.mdsiddha@gmail.com

    • ஏழாம் இடத்தில் இருந்து சனி பகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் கண்டக சனி ஏற்படுகிறது.
    • ஒரு ஜாதகத்தில் சனி, சந்திரன் சம்பந்தம் இருந்தால் உருவாகும் கடுமையான கருணையற்ற தோஷமாகும்.

    சிம்ம ராசி

    தலைமைப் பண்பு கொண்டு அனைவரிடமும் அன்போடு நடக்கும் கம்பீர மனம் படைத்த சிம்ம ராசி அன்பர்களே..

    ராசி சக்கரத்தில் 5-வது ராசி சிம்மமாகும். இதன் அதிபதி சூரியன்.

    உலகில் உள்ள உயிர்கள் தோன்றுவத்றகு காரணமாக இருப்பவர் சூரியன். இதன் கதிர் வீச்சு இல்லாத இடமே இல்லை எனும் வகையில் உலகமே சூரிய ஒளியில் தான் இயங்குகிறது. அதனால் இதனை ராஜகிரகம் என்பார்கள். இது ராஜகிரகம் என்பதால் காட்டு விலங்குகளின் அரசன் சிங்கம் என்பதால் சிம்ம ராசிக்கு சிங்கத்தின் உருவம் தரப்பட்டுள்ளது. இதன் அதிபதி சூரியன் என்பதாலும் இதன் உருவம் சிங்கம் என்பதாலும் இதில் பிறந்தவர்கள் அதிகார தோரணையும் மிடுக்கும், தைரியமும் எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவமும் உள்ளவர்களாக இருப்பார்கள். தற்போது கோட்சாரத்தில் சிம்ம ராசியினருக்கு கண்டகச் சனியின் ஆதிக்கம் உள்ளது.

    சமீபகாலமாக ஜாதகம் பார்க்க சிம்ம ராசியை சார்ந்த நபர்கள் அதிகமாக வந்து கொண்டு இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக 1978 நவம்பர் மாதம் முதல் 1980 மே மாதம் வரை பிறந்த சிம்ம ராசியினர் ஜோதிடம் பார்க்க வருகிறார்கள். இந்த கால கட்டத்தில் பிறந்தவர்களின் சுய ஜாதகத்தில் சிம்ம ராசியில் சனி பகவான் ராகுவுடனும் கேது பகவான் கும்ப ராசியிலும் சஞ்சரிப்பார்கள். தற்போது கோட்சாரத்தில் கும்பத்தில் பயணிக்கும் சனிபகவான் சிம்ம ராசியினரின் ஜனன கேது, ராகுவை தொடர்பு கொள்வதால் தொழில் உத்தி யோகத்தில் ஒரு நிலையற்ற தன்மை, நண்பர்கள் தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்களால் மன உளைச்சல், ஆரோக்கிய கேடு. ஊர் மாற்றம், நாடு மாற்றம், கணவன்-மனைவி பிரிவினை என பல்வேறு இன்னல்களை அனுபவிக்க நேரிடும். இதற்கு காரணம் கண்டகச் சனியின் ஆதிக்கமா? பிறப்பு ஜாதகத்தில் உள்ள ராகு, கேதுக்களா? இதற்கு தீர்வு உள்ளதா போன்றவற்றை இந்தக் கட்டுரையில் காணலாம்.

    சனி பகவான்

    ஒரு மனிதனின் வினைப் பதிவிற்கு ஏற்ப தசா புத்திக்கு ஏற்ப வாழ்வியல் மாற்றத்தை தருவது கோட்சார கிரகங்கள். அந்த வகையில் கர்ம வினைப் பதிவை வெளிப்படுத்தும் வருட கிரகங்களான குரு, சனி, ராகு, கேதுவின் பெயர்ச்சிகள் தசாபுத்திகள் மனிதர்களுக்கு மிகப் பெரிய சுப அசுப மாற்றத்தை தருகிறது. அதே போல் சுப கிரகங்கள் சுப பலனைத் தரும். அசுப கிரகங்கள் அசுப பலனைத் தரும் என்ற கருத்தும். தவறானது. முழுச் சுப கிரகமான குரு பகவானின் தசை, கோட்சார காலத்தில் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனவர்களும் இருக்கிறார்கள். சனி, ராகு, கேதுவின் தசையில், கோட்சாரத்தில் வளமை அடைந்தவர்களும் உள்ளார்கள் என்பது மறுக்க முடியாத நிதர்சனமான உண்மை.

    ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஒரே கிரகம் சனியாகும். ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும். அதே நேரத்தில் சனியால் யோக பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு. ஆகையால் தான் 'சனியைபோல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை' என்றும், 'சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்' என்றும் கூறுவார்கள்.

    அதாவது தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றுபவரும் சனிபகவான் தான். வாழ்க்கை எனும் படிக்கட்டில் நியாயம். தர்மத்தை மதிக்காதவர்களுக்கு நியாயத் தீர்ப்பு வழங்குபவரும் சனி பகவான் தான். ஜாதகத்தில் எல்லா கிரகங்களுக்கும் தசா, புக்தி, அந்தரங்களுக்கு ஏற்ப பலன் தரும். ஆனால் சனீஸ்வரருக்கு மட்டும் தசா புக்திகளுடன், கோட்ச்சார பலமும் அதிகமாகும். எத்தனை பெரிய யோக ஜாதகமாக இருந்தாலும் அந்த ஜாதகத்திற்கு ஏற்ப சனி தனது தீர்ப்பை கொடுத்துதான் தீருவார்.

    ஒருவர் செய்த பாவங்களும் அவருக்கு எப்படி திரும்ப கிடைப்பது என்றால் அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச்சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் சனி பகவான் தயவு தாட்சண்யமின்றி கடுமையாக தண்டிக்கிறார். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் எல்லோருக்கும் பாதிப்பு எல்லா காலத்திலும் தொடர்வது கிடையாது. சுருக்கமாக சந்திரன், ராகு, கேது, சனி, செவ்வாய் தசை புக்தி அந்தர காலங்களிலும், லக்ன ரீதியான 6,8,12ம் இடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசை, புக்தி, அந்தர காலங்களில் பாதிப்பு மிகுதியாக இருக்கும். சாதகமான தசை, புக்தி நடப்பவர்களும் நல்ல பலன்களே நடைபெறும். சனி பெயர்ச்சி ஒருவர் ராசியில் இருக்கும் சந்திரனுடன் சேர்ந்த கிரகங்களைப் பொறுத்தே அமைகிறது.

    கண்டகச் சனி

    சனி பகவான் சந்திரனுக்கு முன் அல்லது சந்திரனுக்கு பின் அல்லது சந்திரனோடு சேர்ந்து பயணித்தால் அதற்கு ஏழரைச் சனி என்று பெயர். அதே போன்று கோட்சாரத்தில் ராசிக்கு ஏழாம் இடத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்யும் நிலையே கண்டகச் சனியாகும். ஏழாம் இடத்தில் இருந்து சனி பகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் கண்டக சனி ஏற்படுகிறது. ஏழாமிடம் என்பது நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள் , வாழ்க்கைத் துணை, சமுதாய நட்பு ஆகியவற்றைப் பற்றிக் கூறுமிடம். 7-ம் இடத்தில் நிற்கும் சனி பகவான் தனது 3-ம் பார்வையால் 9-ம் இடம் எனும் பாக்கிய ஸ்தானத்தையும் 7-ம் பார்வையால் ராசியையும் 10-ம் பார்வையால் சுக ஸ்தானத்தையும் பார்வையிடுவார். சனி பார்வை பட்ட இடம் பாழ் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 9-ம் இடத்தைப் பார்ப்பதால் தொழில், உத்தியோகம் மற்றும் உயர்கல்விக்காக பெற்றவர்களை, பிள்ளைகளை, குடும்பத்தை பிரிந்து பூர்வீகத்தை விட்டு வெகுதூரம் செல்ல நேரும்.

    ராசியை 7-ம் பார்வையால் பார்ப்பதால் மன சஞ்சலம், காரியத் தடை, ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். 10-ம் பார்வையால் சுக ஸ்தானத்தை பார்ப்பதால் அதிக நாள் வைத்தியம் செய்ய வேண்டிய நோய் தாக்கம், சொத்துகளால், தாய் வழி உறவுகளால் சங்கடங்களை சந்திப்பார்கள்.

    கண்டகச் சனி என்ன செய்யும்?

    தான் நின்ற இடத்தின் மூலமாகவும் தனது பார்வை பலத்தாலும் எந்த ஒரு செயலை செய்ய சிறப்பான சூழல் இருந்தாலும் பல சிரமங்களைப் சந்திக்க வேண்டி வரும். இந்த காலத்தில் ஒருவர் எண்ணியதை குறித்த நேரத்தில் முடிப்பது சிரமம், சுப காரியங்கள் திட்டமிடுதல் நடக்காமல் போகலாம். கணவன்-மனைவி உறவுக்குள் இருந்த நல்லிணக்கம் குறையும். இதுவரை உங்கள் வார்த்தைக்கு மதிப்பு தந்த வாழ்க்கைத் துணை உங்கள் கருத்திற்கு எதிர்மறையாக செயல்பட ஆரம்பிப்பார்கள். வேலை தேடுபவர்களுக்கு சரியான வேலை கிடைக்காது. பணியில். இருப்பவர்களுக்கு பணியிடச் சூழல் சாதகமாக இருக்காது திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். எடுத்த காரியங்கள் நடைபெறுவதில் தடை ஏற்படும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சரிவர இருக்காது. வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டு குடும்பத்தில் பிரிவுகள் ஏற்படும். பொதுத் தொண்டில் இருப்பவர்களுக்கும், மக்களுக்கும் இடையே பகை ஏற்படும். நன்றாக மதிப்பெண்கள் பெற்று வந்த குழந்தைகளின் படிப்பில் மந்தம் ஏற்படும். முதியவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். கழுத்தைப் பிடிக்கும் அளவிற்கு பிரச்சினை இருக்கும். எப்படி குரல் வளையைப் பிடித்தால் மூச்சு விட சிரமம் ஏற்படுமோ அதே போன்று அதிக அளவிற்கு தாங்க முடியாத மன உளைச்சல் இருக்கும்.

    சிம்ம ராசியும், கண்டகச் சனியும்

    சிம்ம ராசியினருக்கு குறிப்பாக 1978 நவம்பர் மாதம் முதல் 1980 மே மாதம் வரை பிறந்தவர்களுக்கு சனி பகவானை விட ராகு கேதுக்களால் பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது. இந்த கால கட்டத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் ராகு பகவான் சிம்ம ராசியில் சனி பகவானுடனும் கேது பகவான் கும்ப ராசியிலும் சஞ்சரித்தார்கள். இது இரண்டு பகை கிரகங்களால் ஏற்படும் வாழ்க்கைப் போராட்டம் எனலாம். கோட்சார சனியின் பயணப்பாதையில் நிற்கும் பிறப்பு கேதுவும். கோட்சார சனியைப் பார்க்கும் பிறந்த கால ராகுவும், கோட்சார சனியின் பார்வை பெறும் பிறந்த கால சந்திரனும், கோட்சார சனியின் பார்வை பெறும் பிறந்த கால சனியினால் ஏற்பட்ட கிரக சம்பந்தம் பல விதமான வாழ்வியல் மாற்றத்தை பிரதி பலிக்கிறது.

    ஐ.ஆனந்தி

    ஐ.ஆனந்தி

     சனி + ராகு/ கேது சேர்க்கை

    ஒருவருக்கு தொழிலை உத்தியோகத்தை வழங்கக்கூடிய சனி பகவானுக்கும், தடை, தாமதம், காரிய பிரதிகூலம் வழங்கும் ராகு/ கேது சம்பந்தம் எந்த விதத்தில் இருந்தாலும் எதை செய்தாலும் தவறாகவே முடியும். கடுமையான உத்தியோக, தொழில் தடையை ஏற்படுத்தும். வாழ்வில் எவ்வளவு உயரமாக சென்றாலும் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தும். சிலர் புதிய தொழில் முயற்சியில் நல்ல தொழிலை, உத்தியோகத்தை இழக்கிறார்கள். மிகுதியான பண இழப்பை சந்திக்கிறார்கள்.

    உத்தியோகத்திற்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறுவார்கள். சொந்த ஊரில் பூர்வீகத்தில் பூர்வீக சொத்தில் குடியிருக்க விடாது. சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் நிலை அல்லது மிகவும் அடிமைத்தனமான வேலை செய்யும் நிலை அல்லது குறைந்த ஊதியத்திற்காக அதிக நேரம் வேலை செய்தல், இரண்டு, மூன்று நபரின் வேலையை சேர்த்து செய்து ஒரு நபரின் சம்பளம் பெறுதல் போன்ற நிலையை ஏற்படுத்தும். நன்கு படித்திருந்தாலும் தன் தகுதிக்கு சம்பந்தமில்லாத தகுதிக் குறைவான இடத்தில் குறைவான சம்பளத்தில் வேலை செய்யும் சூழ்நிலை ஏற்படும். சட்டத்திற்குப் புறம்பான அல்லது சட்டத்திற்கு உட்படாத வேலை செய்ய நேரும் அல்லது உயர் அதிகாரிகள், முதலாளிகள், உடன் பணிபுரி பவர்களால் வேலையில் ஆர்வம் குறையும். சிலருக்கு சொல்லிக் கொள்ளும்படியான வேலையில்லாமல் வாழும் சூழ்நிலை ஏற்படும். நல்ல திறமை இருந்தும் சரியாக சம்பாதிக்காமல் வருமானம் இல்லாமல் இருப்பார்கள்.

    புனர் பூ தோஷம்

    ஒரு ஜாதகத்தில் சனி, சந்திரன் சம்பந்தம் இருந்தால் உருவாகும் கடுமையான கருணையற்ற தோஷமாகும். கோட்சார சனி சுய ஜாதக சந்திரனை தொடர்பு கொள்வதால் ஏற்படும் தோஷமாகும். சுய ஜாதகத்திற்கும் கோட்சாரத்திற்கும் சனி, சந்திரன் சம்பந்தம் தொடர்பு எந்த விதத்தில் இருந்தாலும் புனர்பூ தோஷ அமைப்பாகும். இது எந்த ஒரு செயலை செய்தாலும் அது மிக பெரிய தடை, காலதா மதத்தை செய்யும். சனி மந்தம், இருள்.

    சந்திரன் வேகம், சந்திரன் ஒளி. இப்படி எல்லாமே எதிரும் புதிருமாக அமைந்துள்ளதால் சனியும், சந்திரனும் எந்த வகையிலாவது சம்பந்தம் பெற்றால் புனர்பூ தோஷம் செயல்படும். ஒரு சிலருக்கு கோச்சார ரீதியாக குறுகிய கால பாதிப்பு இருக்கும். புனர்பூ அமைப்பு இருப்பவர்களுக்கு தூக்கமின்மை இருக்கும். இந்த தோஷமானது எப்போதுமே ஆழ்மனதில் ஒர் இனம்புரியாத சோகத்தை வைத்து இருப்பதுடன் சின்ன சின்ன விசயங்களில் கூட பய உணர்வைத் தரும். மேலும், கோட்சாரத்திலோ அல்லது தசா/புக்தியிலோ சனி மற்றும் சந்திரன் தொடர்புபடும் போது இனம் புரியாத கவலைகள் மற்றும் துக்கங்களை தரும். மன சஞ்சலத்தின் உச்சகட்ட சேர்க்கை இந்த புனர்பூ அமைப்பு. மேலும் புனர்பூ அமைப்பு வாழ்வில் கடுமையாக சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று திருமணத் தடை இரண்டாவது அதீத தொழில் தடை.

    பரிகாரம்

    சிம்ம ராசியினர் நாகாபரணம் தரித்த சிவனை கண்டகச் சனி முடியும் வரை வழிபட சாதகமான பலனை உணர முடியும். கணவன், மனைவி உறவுக்குள் ஒற்றுமை வலுப்பட குடும்பத்தில் அமைதியை கடைப்பிடிப்பது நல்லது. கண்டக சனி இருக்கும் போது வாழ்க்கைத் துணையுடன் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.

    எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் யோசித்து செயல்படுங்கள். அது உங்களுக்கு நற்பலன்களை அதிகரிக்கும். சிம்ம ராசிக்கு 7-ம் இடத்தில் சனி-சந்திரன் சம்பந்தம் ஏற்படுவதால் ஆசைகளை குறைக்கும் போது புனர் பூதோஷம் வலிமை இழக்கும். அனைத்து சிம்ம ராசிகளுக்கும் ஒரே மாதிரியான பலன் நடைபெறுவதில்லை.

    ஒவ்வொருவருக்கும் அவரவரின் ஜாதக அமைப்பை தசா புத்தியை பொருத்து பலன் மாறுபடும். இந்த தகவல் பொதுநலம் கருதி தரப்பட்டுள்ளது.

    நவ கிரகங்களில் எல்லா கிரகங்களுக்கும் நன்மை, தீமை செய்கின்ற அதிகாரம் உண்டு. ஆனால் சனி மட்டுமே கெடுபலன்கள் தருவார் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கிறது . எந்த கிரக தசா புக்தி மூலம் ஒருவருக்கு கெடுதல் வந்தாலும் சனிபகவானால் தான் பிரச்சனை வருகிறது என்பது பலரின் நம்பிக்கை. இது போன்ற மூட நம்பிக்கையை கைகழுவி உண்மையான காரணம் அறிந்து வழிபாடு செய்வது மிகச் சிறப்பு.

    • சகட தோஷம் 2 விதமாக சொல்லப்படுவது உண்டு.
    • பணம் மட்டுமல்ல பதவியிலும் கூட சகட தோஷம் விளையாட்டு காட்டும்.

    வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி பிரச்சினைகள், போராட்டங்கள் இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு பணம் சேரும் விஷயத்தில் பிரச்சினைகள் இருக்கலாம். சிலருக்கு குடும்பம், மனைவி, வாரிசுகள் போன்றவர்களால் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும்.

    இதற்கு அடிப்படையாக இருப்பது ஜாதக ரீதியிலான ஏதாவது ஒரு தோஷம் என்று ஜோதிடர்கள் சொல்வது உண்டு. அது என்ன தோஷம்? எப்படி நிவர்த்தி செய்வது? என்பது தான் முக்கியமானது.

    சில வகை தோஷங்கள் பரிகாரமோ அல்லது பூஜைகளோ அல்லது தான தர்மமோ செய்து விட்டால் குறையும் அல்லது கட்டுப்படும். சில பிரச்சினைகள் விருந்தாளி போல வருவதும், போவதுமாகவே இருக்கும். திடீரென கையில் பணம் சேரும், அடுத்த மாதமே கையில் ஒரு பைசா இல்லாத நிலை தான் காணப்படும்.

    வாழ்க்கை சக்கரத்தில் இந்த மாதிரி பணம் வருவதும், போவதுமாக இருந்தால் அதுவும் ஒரு வகை தோஷம் தான். அதை சகட தோஷம் என்று ஜாதக ரீதியாக சொல்வார்கள். சகடம் என்றால் சக்கரம் என்று அர்த்தமாகும். சக்கரம் சுற்றும் போது ஒரு பகுதி ஒரு நேரத்தில் கீழே இருக்கும், அடுத்த நேரத்தில் மேலே செல்லும். வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் இப்படி மேலும், கீழும் செல்வதை சக்கரத்துடன் ஒப்பிட்டு நமது முன்னோர்கள் அதை சகட தோஷம் என்று வரையறுத்து இருக்கிறார்கள்.

    இந்த சகட தோஷத்தில் ஒருவரது ஜாதகத்தில் உருவாக்குவது குருவும், சந்திரனும் தான். குருவும், சந்திரனும் வரும் ஜாதகத்தில் சரியான சேர்க்கைப்படி அமைந்திருந்தால் அந்த ஜாதகக்காரர் வாழ்க்கையில் எல்லா செல்வங்களும் பெற்று ஓகோ என்று இருப்பார். அதை சகட யோகம் என்பார்கள்.

    அதே சமயத்தில் குருவும், சந்திரனும் சரியான கட்டங்களில் இல்லாமல் மாறுபட்ட அம்சங்களுடன் காணப்பட்டால் அது தோஷசத்திற்கு வழிவகுக்கும். அதாவது ஜாதகத்தில் குரு பகவானுக்கு சந்திரன் 6, 8 மற்றும் 12-ம் இடங்களில் இருக்கும் பட்சத்தில் அதை சகட தோஷம் என்று சொல்வார்கள்.


     நவகிரகங்களில் குருபகவான் செல்வம் தருவதை குறிப்பவர் ஆவார். அது போல சந்திரனையும் குபேர சம்பத்து தருபவர் என்று அழைப்பார்கள். இந்த இரண்டுமே சரியில்லாத பட்சத்தில் வாழ்க்கை அடிக்கடி போராட்டமாக மாறி வருவது உண்டு. செல்வம் தேடுவதற்காக ஓடிக்கொண்டே இருக்கும் நிலை சிலருக்கு ஏற்படுவதுண்டு.

    இன்னொரு வகையில் சொல்வதாக இருந்தால் ஜாதகத்தில் சகட தோஷம் இருப்பவர்கள் பொருளாதார ரீதியாக ஏற்ற, இறக்கத்துடன் தான் இருப்பார்கள். அந்த ஏற்ற, இறக்கங்கள் குருவும், சந்திரனும் எப்படி? எப்படி அமைகிறார்கள் அல்லது மாறுகிறார்கள் என்பதை பொறுத்து இருக்கும்.

    சிலருக்கு குறுகிய காலத்தில் நிறைய பணம் வரும். கார், பங்களா என்று வாங்கி குவிப்பார்கள். ஆனால் உறவினரோ அல்லது நண்பரோ மிக முக்கியமான காலக்கட்டத்தில் செய்யும் ஏதாவது ஒரு துரோகம் அவர்களை மீண்டும் அதாள பாதாளத்துக்கு கொண்டு போய் நிறுத்திவிடும்.

    பணம் மட்டுமல்ல பதவியிலும் கூட சகட தோஷம் விளையாட்டு காட்டும். சிலருக்கு எதிர்பாராமல் மந்திரி பதவி கூட கிடைக்கும். சில மாதங்களிலேயே கொடுத்த வேகத்தில் பதவியை பறித்து விடுவார்கள். இதற்கு காரணமே சகட தோஷம் தான்.

    சகட தோஷத்திற்கு முன்ஜென்ம வினைகளையும், சில ஜோதிடர்கள் காரணமாக சொல்வது உண்டு. எது எப்படி இருந்தாலும் சகட தோஷம் வந்து விட்டாலே அது பணம் மற்றும் பொருட்களை தருவதும், பறிப்பதுமாக இருப்பதால் வாழ்க்கையில் நிம்மதியே இருக்காது. ஒரு வித விரக்தி வந்துவிடும்.

    சகட தோஷம் 2 விதமாக சொல்லப்படுவது உண்டு. சகட தோஷம் உள்ள ஜாதகர் புனர்பூசம், பூசம், அனுசம், விசாகம், பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்து இருந்தால் அவரை ஏழ்மை நிலையில் இருந்து நல்ல வசதி உள்ள மனிதராக மாற்றி பிறகு மீண்டும் ஏழ்மை நிலைக்கே தள்ளுவதாக இருக்கும்.

    இரண்டாவது வகையில் சகட தோஷசம் உள்ள ஜாதகாரர் அஸ்வின், பரணி, ஆயில்யம் (4-ம் பாதம்), பூராடம், மூலம், ரேவதி (4-ம் பாதம்), ஆகிய நட்சத்திரத்தில் பிறந்து இருந்தால் அவர்கள் மிகப்பெரிய வசதியில் இருந்து பிறகு கஷ்டமான நிலைக்கு தள்ளப்பட்டு மீண்டும் வசதியான நிலைக்கு மாறுவார்கள்.


    இந்த இரண்டு நிலையில் தான் சகட தோஷம் நல்லதையும் செய்யும், கெட்டதையும் செய்யும். இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு எப்போது நல்லது நடக்கும், எப்போது தீயது நடக்கும் என்பதெல்லாம் கணிக்க முடியாத அல்லது சொல்ல முடியாத நிலையில் தான் இருக்கும். அதனால் தான் சகட தோஷம் என்பது வாழ்நாள் முழுக்க ஒட்டிக்கொண்டே இருக்கும் தோஷம் என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.

    ஆனால் நாம் நினைத்தால் சகட தோஷத்தில் இருந்து விடுபட முடியும். அல்லது குறைந்த பட்சம் சகட தோஷத்தை கட்டுப்படுத்தவாவது முடியும். இதற்கு என்று சில பரிகாரங்கள் நமது முன்னோர்களால் வரையறுத்து வைக்கப்பட்டு உள்ளன.

    சகட தோஷம் இருப்பவர்கள் நவகிரகங்களில் குருவையும், சந்திரனையும் மனதார வழிபட வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் இதற்காக ஒதுக்கி கொள்ள வேண்டும். திங்கட்கிழமைகளில் சந்திர வழிபாடு செய்ய வேண்டும். சந்திரனுக்கு உகந்த பூ, பழங்கள், நைவேத்தியமாக வைத்து வழிபட வேண்டும்.

    அது போல வியாழக்கிழமைகளில் குரு பகவான் வழிபாடு செய்ய வேண்டும். குருவுக்கு உகந்த மலர்கள், மஞ்சள் ஆடை, நைவேத்தியங்கள் செய்து வைப்பது நல்லது.

    வீட்டில் இருந்தே பரிகாரம் செய்ய வேண்டும் என்று சிலர் நினைப்பது உண்டு. அத்தகைய நிலையில் இருப்பவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் வழக்கமான வழிபாட்டை முடித்து விட்டு 108 தடவை ஓம் நமச்சிவாய என்ற 5 எழுத்து மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை உச்சரிக்க, உச்சரிக்க சகட தோஷத்தின் பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வரும்.

    வசதி, வாய்ப்பு இருப்பவர்கள் அமாவாசையில் பித்ரு தர்பணம் செ்யத பிறகு பசு மாட்டுக்கு பச்சரிசி கலந்த தவிட்டை உணவாக கொடுக்கலாம். அகத்திக்கீரையையும் சேர்த்து கொடுக்கலாம். இந்த பரிகாரத்திற்கு அதிக சக்தி உண்டு.

    ரியல் எஸ்டேட், கமிஷன் வியாபாரம், சில்லறை வியாபாரிகள் சகட தோஷத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால் முன்னேற்றம் என்பது கானல் நீர் போல இருக்கிறது என்று கருதுவது உண்டு. அந்த குழப்ப நிலையை தவிர்க்க தமிழ் கடவுளான முருகன் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வர வேண்டும்.

    சிலருக்கு ராசி கல் மோதிரம் அணிவது விருப்பம் இருக்கும். அந்த மாதிரி இருப்பவர்கள் மோதிரத்தில் யானை முடி பதித்து அணியலாம். யானை முடி சேர்த்து அணிவது சகட தோஷத்தை முறியடித்து கஜகேசரி யோகத்தை கொண்டு வரும் என்று சொல்கிறார்கள்.

    எந்திர தகடுகளில் நம்பிக்கை இருப்பவர்கள் ராஜராஜேஸ்வரி எந்திரத்தை வைத்து பூஜைகள் செய்து வந்தால் சகட தோஷத்தை கட்டுப்படுத்த முடியும்.

    தானம், தர்மங்களும் இந்த தோஷத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. கோவில் வாசலில் அமர்ந்திருக்கும் வயதான பெண்களுக்கு வஸ்திர தானம் செய்யலாம். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வாழும் இல்லங்களுக்கு சென்று உணவு, உடை வழங்கலாம். இது மாறி மாறி வரும் துன்பத்தை துடைத்து எரியும் சக்தி கொண்டது.

    பவுர்ணமி வழிபாடு மூலம் சந்திர பகவானை குளிர்ச்சி படுத்த முடியும் என்பதால் பவுர்ணமி தோறும் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டால் இந்த தோஷத்தில் இருந்து விடுபட வாய்ப்பு உள்ளது. பவுர்ணமி தினத்தன்று முழு நிலவுக்கு தீபாராதனை காட்டி வழிபடுவது நல்லது.

    பவுர்ணமி நாளில் சித்தர்கள் அடங்கி இருக்கும் ஜீவ சமாதியில் ஒரு வித எழுச்சி உண்டாகும். அந்த சமயத்தில் ஜீவ சமாதிக்கு சென்று வழிபட்டால் இந்த தோஷம் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்கிறார்கள்.

    ஆலயங்களில் நடக்கும் தேராட்டங்களை பார்ப்பதும், அந்த தேரோட்டத்திற்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பதும் இந்த தோஷ நிவர்த்தி க்கு உதவி செய்யும். சென்னையில் வசிப்பவர்கள் பங்குனி மாதம் உத்திர தினத்தன்று மயிலாப்பூர் கபா லீஸ்வரர் ஆலயத்தில் நடக்கும் தேரோட்டத்தை பார்ப்பது நல்லது. ஆலயங்களில் உழவார பணிகளை மேற்கொள்வதும் சகட தோஷத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என்ற குறிப்பு உள்ளது.

    • எனக்கு ஜோடியாக தாடி வைத்த கெட்-அப்பில் சரத்குமார் சார். எல்லோரும் ஸ்டுடியோவில் ரெடியாக காத்திருந்தோம்.
    • ஒன்றரை நாள் ஓய்வு கிடைத்ததால் அந்த ஓய்வு நேரத்தையும் வீணாக்காமல் ஏதாவது இடங்களை சுற்றி பார்க்கலாம் என்று முடிவு செய்தோம்.

    கண்ணில் கருப்பு நிறத்தில் பிரேம் போட்ட கண்ணாடி தலையில் கொண்டை போட்டு நிறைய பூ வைத்து அம்மா கெட்-அப்பில் நான் இருந்தால் எப்படி இருந்திருக்கும்? அதுவும் 1994-களில்...?

    உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்றால் 'நாடோடி மன்னன்' திரைப்படத்தை பார்க்க வேண்டும். அதற்காக 1958-ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த நாடோடி மன்னன் அல்ல.

    1995-ல் சரத்குமார் சாருடன் நான் நடித்து வெளியான நாடோடி மன்னனை பார்க்க வேண்டும்.

    அந்த படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கிய நாளில் அம்மா கெட்-அப்பில் நான்... எனக்கு ஜோடியாக தாடி வைத்த கெட்-அப்பில் சரத்குமார் சார். எல்லோரும் ஸ்டுடியோவில் ரெடியாக காத்திருந்தோம்.

    வி.ஐ.பி. வரப்போகிறார் என்ற பரபரப்பில் ஸ்டுடியோ முழுவதும் எல்லோரும் பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தார்கள்.

    சரியான நேரத்துக்கு அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மா காரில் வந்து இறங்கினார். வழக்கமான புன்சிரிப்புடன் கைகளை கூப்பி வணங்கிய படியே உள்ளே வந்தவரை பார்த்து அனைவரும் வணக்கம் தெரிவித்தோம். அவரும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார்.

    கலைக் குடும்பத்தினரை பார்த்ததும் அவரும் உற்சாக மூடுக்கு மாறிவிட்டார். விளக்கேற்றி படப்பிடிப்பை தொடங்கி வைத்து வாழ்த்து தெரிவித்தார். சிறிது நேரம் எங்களோடு அமர்ந்து பேசிவிட்டு சென்றது மறக்க முடியாதது.

    ஆம்ஸ்டர்டாம்...!

    ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்து நாட்டின் தலைநகர். உலக அளவில் சுற்றுலா பயணிகளை கவரும் நகரம். அந்த நகரத்தில்தான் படப் பிடிப்புக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

    எனது முதல் ஐரோப்பிய நாட்டு பயணம் அது. எனவே எப்போது புறப்படுவோம் என்ற குஷி மூடிலேயே இருந்தேன். அந்த நாளும் வந்தது. முதல் ஐரோப்பிய நாட்டு பயணம். அந்த நாடு எப்படி இருக்கும்? என்ற கற்பனை கனவுகளுடனேயே அந்த நாட்டை சென்றடைந்தேன்.

    நாங்கள் சென்றது வசந்த காலம். மார்ச் முதல் மே வரையிலான இந்த காலத்தில் தான் பிரசித்தி பெற்ற துலிப் மலர்கள் அங்கு மலரும். ஆம்ஸ்டர் டாம் துலிப் மலர் தோட்டங்களுக்கு பிரபலம்.

    பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் இந்த பூந்தோட்டங்களின் அழகை பார்க்க இரண்டு கண்கள் போதாது.

    அந்த மலர் தோட்டத்தில் தான் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டு இருந்தார்கள். நாங்கள் சென்றது குளிர் காலம் முடியும் நேரம். எனவே துலிப் மலர்களும் பூத்து ஓயும் காலத்தை நெருங்கி இருந்தது.

    4 நாட்கள் அங்கு ஷூட்டிங் நடத்த திட்டமிட்டு இருந்தார்கள். ஷூட்டிங் தொடங்கியது. காலை யிலேயே ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றுவிட் டோம். ரொம்ப நேரம் ஷூட்டிங் நடந்தது போல் இருந்தது.

    இன்னும் மாலை நேரம் வரவில்லையா... என்று மனம் எண்ணியது.

    கடிகாரத்தை பார்த்தேன் இரவு 9 மணி ஆகியிருந்தது. ஆனாலும் சூரியன் மறைய வில்லை. பகல் பொழுதாகவே தெரிந்தது. நான் எதுவும் புரியாமல் டைரக்டரிடம் சென்று கேட்டேன். அப்போதுதான் சொன்னார் கள். அங்கு பகல் பொழுது அதிகமாம். இருட்டுவதற்கு இரவு 9 மணிக்கு மேல் ஆகும் என்றார்கள்.

    இரவு வரை ஷூட்டிங் நடக்கும். இப்படியே நேரம் காலம் பார்க்காமல் தொடர்ந்து படப்பிடிப்பு... இதனால் 4 நாட்கள் நடத்த வேண்டிய ஷூட்டிங்கை 2½ நாட்களில் முடிந்துவிட்டது.


    ஒன்றரை நாள் ஓய்வு கிடைத்ததால் அந்த ஓய்வு நேரத்தையும் வீணாக்காமல் ஏதாவது இடங்களை சுற்றி பார்க்கலாம் என்று முடிவு செய்தோம்.

    நாங்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து பக்கத்தில் ஒரு சுற்றுலா தலம் இருப்பதாக கூறினார்கள். பக்கத்தில் என்று தானே சொல்கிறார்கள். நடந்து போவோம் என்று முடிவு செய்து நடந்தோம். நாங்கள் சென்ற ரோடு மேடு, பள்ளம் நிறைந்து இருந்தது. கருங்கற்களால் அமைக்கப்பட்டிருந்த சாலையின் அமைப்பே அப்படித்தான் என்றார்கள்.

    நான் 'மாடர்ன்' உடையில் 'ஹை' ஹீல்ஸ் செருப்பும் அணிந்து நடந்ததால் என்னால் வேகமாக நடக்க முடியவில்லை. சரத் சார் படுவேகமாக நடந்து கொண்டிருந்தார்.

    கல் பதித்த ரோட்டில் ஹீல்ஸ் செருப்பு அணிந்து நடக்கவே சிரமமாக இருந்தது. கால் கடுமையாக வலித்தது. அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு 'சரத் சாரிடம்... இன்னும் எவ்வ ளவு தூரம் சார்' என்றேன்.

    இன்னும் கொஞ்ச தூரம்தான்மா... வா... என்று சொல்லி சொல்லியே இரண்டு மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்திருப்போம்.

    ஒரு இடத்தில் சென்றதும் அங்கிருந்த செக்போஸ்டில் எங்களை தடுத்து நிறுத்தி அடையாள அட்டை கேட்டார்கள். நாங்கள் பாஸ்போர்ட் உள்பட எல்லாவற்றையும் ஓட்டல் அறையில் வைத்துவிட்டு சென்றிருந்தோம். எனவே எங்களிடம் அடையாள அட்டை எதுவும் இல்லை.

    மீண்டும் ஓட்டலுக்கு நடந்து சென்று பாஸ்போர்ட்டை எடுத்து வரலாமா என்று யோசித்தோம். ஆனால் அவ்வளவு தூரம் மீண்டும் நடக்க முடியாது என்று அந்த இடத்தை பார்ப்பதையே கைவிட்டு விட்டு ஓட்டலுக்கு திரும்ப முடிவு செய்தோம்.

    கால்டாக்சிக்காக காத்து நின்றோம். நாங்கள் நிற்பதை பார்த்ததும் அந்த வழியாக சென்ற கார் ஒன்று எங்கள் அருகில் வந்து நின்றது. அது பென்ஸ் சொகுசு கார். டிரைவர் எங்களிடம் விசாரித்தார்.

    நாங்கள் கால் டாக்சிக்காக காத்து நிற்கிறோம் என்றதும் இதுவும் கால் டாக்சிதான் வாங்க' போகலாம் என்றார். எங்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. கால் டாக்சியாக பென்ஸ் காரா...?

    அந்த காலகட்டத்தில் நம் நாட்டில் பென்ஸ் காரே குறைவாகத்தான் புழக்கத்தில் இருந்தது. அதுவும் பணக்காரர்களிடம் மட்டுமே இருந்தது. அதனால் தான் வாடகை காராக பென்ஸ் கார் பயன்படுத்துவதை பார்த்து ஆச்சரியப்பட்டோம்.

    பின்னர் அந்த காரில் ஏறி ஓட்டலுக்கு திரும்பினோம். அப்புறம் என்ன...? பேக்-அப்தான். மறக்க முடியாத ஆம்ஸ்டர்டாம் நினைவுகளுடன் எங்களையும் சேர்த்து சுமந்தபடி ஆகாயத்தில் பறந்தது விமானம்.

    அடுத்ததாக ராமேஸ்வரம் கடலில் தத்தளித்து கரை சேர்ந்த திரிலிங்கான அனுபவத்துடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

    (தொடரும்...)

    • தமிழ்நாட்டில் முருக வழிபாடு மிக அதிகம்.
    • ஆன்மீகத்திலும் முன்னேற வேண்டும்.

    காலம் காலமாக இந்து மதத்தில் மக்கள் குறிப்பாக தமிழக மக்கள் இந்த இரண்டு தெய்வங்களை தன் வீட்டு செல்லப் பிள்ளைப் போல் வைத்துக் கொள்வார்கள்.

    ஒருவர் பிள்ளையார். மற்றொருவர் முருக பிரான். பிள்ளையார் நம் குழந்தைகளின் பெஸ்ட் பிரண்ட்.

    எங்கள் வீட்டிலும் பிள்ளையார் வைத்திருந்தோம். எங்கள் வீட்டு பிள்ளைகள், தெருவில் உள்ள பிள்ளைகள் இவர்கள் அனைவருக்கும் பிரண்ட், பார்ட்னர் இந்த பிள்ளையார்தான். அனைவருக்கு கிடைக்கும் மார்க்கின் தன்மைக்கு ஏற்ப பிள்ளையார் நன்கு கவனிக்கப்படுவார். குறிப்பாக ஐஸ்கிரீம், சாக்லேட் இந்த மாதிரியான விசேஷ பிரசாதங்கள் அவருக்கு அளிக்கப்படும். மார்க் யாருக்கேனும் சற்று குறைந்து விட்டால் 'உர்' என்ற முகத்தோடு அவருக்கு இட்லி, தோசை, தயிர் சாதம் கொடுக்கப்படும்.

    எந்நேரமும் சாக்லேட், ஐஸ்கிரீம் என 'பிசு பிசு'வென்று இருப்பார். அவரை திரும்ப தேய்த்து குளிப்பாட்டி விட 'அப்பாடா' என்ற நிம்மதி பெருமூச்சு நமக்கு இருக்கும். பிள்ளையார் 'பால் சாப்பிடுகிறார்' என்று ஒரு கால கட்டத்தில் பிரபலமாக பேசப்பட்டது. எங்கள் வீட்டு பிள்ளையாரின் தும்பிக்கையில் ஸ்பூனால் பாலை எடுத்து 'குடி குடி' என இந்த பிள்ளைகள் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமில்லை.

    இப்படி கதை நீளும். இது ஒவ்வொரு வீட்டிலும் வித்தியாசமாக நிகழும். நிகழ்ந்து கொண்டும் இருக்கும். ஆனால் பெரியோர்கள் 'மகா கணபதி' என பயபக்தியோடு வழிபடுவர். அரச மரத்தடி பிள்ளையாரின் மகிமையினை அனைவரும் அறிவர். பிள்ளையாரை வணங்காத எந்த பூஜையும் இல்லை.


    இதுவே முருக பிரானிடம் வரும்போது தமிழ்க் கடவுள் என்றும், அழகின் உருவம் என்றும் வெற்றிகளைத் தருபவர் என்றும் போற்றப்படுகின்றார். தமிழ்நாட்டில் முருக வழிபாடு மிக அதிகம். அண்ணனும், தம்பியும் லேசுபட்டவர்கள் அல்ல. இன்று முருக பிரானைப் பற்றி சற்று கூடுதலாக ஒரு செய்தியினை பகிர்ந்து கொள்வோம்.

    அருணகிரி நாதரைப் பற்றி கேள்விப்படாதவர்கள் குறைவு எனலாம். 1370-ல் தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரி நாதர். மிக நன்கு கல்வி கற்றவர். தேர்ந்தவர். அவரது இளமை கால வாழ்க்கையினை அவர் முறையாய் வாழவில்லை. இதனால் பொருளும் இழந்து, உடலும் பெருநோயால் பாதிக்கப்பட்டது. வீட்டை விட்டு வெளியேறி மனம் போன போக்கில் சென்றார். வழியில் ஒரு பெரியவர் இவரிடம் முருகக் கடவுளைப் பற்றி சொல்லி 'ஓம் சரவண பவ' என்ற மந்திரத்தையும் போதித்தார். இருப்பினும் நொந்து இருந்த அருணகிரிநாதர் திருவண்ணாமலை கோபுரத்தின் மீது ஏறி குதித்து தன் உயிரை விட தீர்மானித்தார். அந்த நேரம் 'அருணகிரி நில்' என்ற சொல் கேட்க முருகன் அருணகிரி நாதர் முன்பு தோன்றி தன் வேலால் நாவில் 'சரவண பவ' என்ற மந்திரத்தை எழுதினார். அருணகிரிநாதருக்கு யோக மார்க்கம் தெரிந்தது. மெய்ஞானம் புரிந்தது. வாழ்க்கை மாறியது. உடல் நோய் நீங்கி விட்டது.

    இது அநேகருக்குத் தெரிந்த சம்பவம்தான். மற்றொரு சம்பவத்தினையும் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். முருக பிரான் இரண்டாம் முறையாக அருணகிரி நாதருக்கு காட்சிகொடுத்த இடம் பற்றி தெரியுமா?

    அண்ணாமலையார் கோவிலில் கம்பத்து இளையனார் சந்நதியில் இந்நிகழ்வு நடைபெற்றது.

    எந்த கோவிலிலும் நாம் உள்ளே நுழைந்தவுடன் முழு முதற் கடவுள் எனப்படும் பிள்ளையாரைத்தான் வணங்குவோம். திருவண்ணாமலையிலும் ராஜ கோபுரத்தில் விநாயகர்தான் வீற்றிருப்பார். சன்னதியில் வரும்போது அங்கு முருகப் பிரான் இருப்பார்.

    சம்பத்தாண்டான் என்ற தேவி உபாசகர் இருந்தார். அவருக்கும் அருணகிரிநாருக்கும் ஒருமுறை போட்டி ஒன்று நடந்தது.

    யார் தனது கடவுளை எல்லோர் முன்னிலையிலும் சபையில் நிறுத்துகின்றரோ அவரே சிறந்தவர் என்பது தான் இந்த போட்டி. முதலில் சம்பத்தாண்டான் தான் வழிபடும் காளியை அழைத்தார். ஆனால் அன்னை காளி வரவில்லை.

    இதையடுத்து அருணகிரிநாதர் முருக பிரானை வேண்டினார். திருப்புகழை மனமுருகி பாடினார். தன்னை முழுமையாய் அர்ப்பணித்து பாடினார். அப்பொழுது தான் அந்த அதிசயம் நடந்தது. அங்கிருந்த மண்டபத்து தூண் வெடித்தது. அதில் முருக பிரான் மயிலோடு காட்சி அளிக்க அனைவரும் ஆனந்த பரவசம் ஆகினர். இப்படி அருணகிரிநாதர் இரண்டாம் முறையாக தரிசனம் பெற்றார். முருகன் காட்சி அளித்த அந்த இடம் மிக புனிதமாக கருதப்படுகிறது.

    கமலி ஸ்ரீபால்

    கமலி ஸ்ரீபால்

    அந்த சன்னதி கம்பத்து இளையனார் சன்னதி என்று அழைக்கப்படுகின்றது. திருவண்ணாமலை மகான் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் கூட இங்கு அமர்ந்து தான் தவம் செய்வார்.

    இதனை நாம் இங்கு குறிப்பிடுகின்றோம். காரணம் உண்டு. அகத்திய மகரிஷியினை மாமுனி என்பர். எல்லா கால கட்டத்திலும் புராணங்களில் இடம் பெற்றவர். அவர் மாமுனி சித்தர் விஞ்ஞானி, மருத்துவர், ஜோதிடர் என குறிப்பிடப்படுபவர். இவரது அசாத்திய சாதனைகள், நிகழ்வுகள் கேட்பவரை பிரம்மிக்க வைக்கும்.

    அகத்திய மாமுனியின் குரு முருகப் பிரான்தான். அத்தகைய இடத்தினை திருவண்ணாமலை கோவிலில் சென்று பார்த்து வழிபாடு செய்வோமே.

    இந்த இடத்தில் அமர்ந்து சிறிது நேரம் தவம் செய்வோமே. கட்டாயம் இல்லை. விருப்பமுள்ளவர்களுக்காக இக்கட்டுரை இங்கு எழுதப்பட்டு உள்ளது. முருக பக்தர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாமே என்ற கருத்தில் எழுதப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலையில் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள், ஸ்ரீ ரமண மகரிஷி, ஸ்ரீயோகி ராம் சுரத்குமார், அண்ணாமலையார், சிவனின் கிரிரூபம் இவை ஒவ்வொருவருக்கும் அவசியம் செல்ல வேண்டும்.

    14-2 என்ற தேதி வரும் ஒரு வாரத்திற்கு முன்பே உலகெங்கிலும் 'காதலர் தின' கொண்டாட்டம் தொடங்கி விடும். உணவகங்கள் நிரம்பி வழியும். ஒரு ரோஜா பூ ரூ.100-க்கு கூட விற்கும். இந்த தினத்தினை கல்யாணமானவர்கள் கூட, தம்பதிகளாக எந்த வயதிலும் கொண்டாடுகின்றனர். இன்று இது உலகெங்கிலும் சர்வ சாதாரண நிகழ்வு ஆகி விட்டது. இதனைப் பற்றி நான் எதுவும் கருத்து கொள்ளவில்லை. இது அவரவர் விருப்பம் அவ்வளவே.

    ஆனால் நான் இங்க குறிப்பிட விரும்புவது இந்த நாளுக்கு முதல் நாளான 13-ந்தேதி என்பதனைப் பற்றி தான் காஞ்சி மகா பெரியவர் என்று கூறப்படும் ஸ்ரீ மகா சந்திரசேகரேந்திர சுவாமிகள் அவர்களைப் பற்றி. 13-ந்தேதி இந்த நன்னாளில் ஒரு குறிப்பு படித்தேன். அதனை பகிர்ந்து கொள்கிறேன்.

    * 13.2.1907-ம் ஆண்டு மகா பெரியவர் சந்யாசம் ஏற்று காஞ்சி மடாதிபதியானார்.

    * அப்போது இவரது வயது 10

    * நான்கு வேதம், ஆறு சாஸ்திரங்கள், புராணங்கள் இவைகளை கற்றவர்.

    * சுமார் 18 மொழிகளில் எழுத படிக்கத் தெரிந்தவர்.

    * கால் நடையாகவே சென்றவர்.

    * கொசுக் கடியிலேயே வாழ்ந்தவர். ஏனெனில் தூங்கும் இடம் மாட்டுத் தொழுவம், அறை என்றால் மின் விசிறி கிடையாது.

    * சிறிதளவு நெல்பொரி ஊற வைத்து அதனை ஒரு வேளை உணவாக பல காலம் எடுத்துக் கொண்டவர்.

    * பிற மத தலைவர்களும் வந்து பார்த்து பேசி, மரியாதை அளித்தனர்.

    * பல பிரபல தலைவர்கள், மத நம்பிக்கை அற்றவர்கள் கூட அவரை மதித்தனர்.

    * அவரவர் மத வழிப்படி அவரவர் வாழ வேண்டும் என்று அறிவுறுத்தியவர்.

    * பல அற்புதங்களை நிகழ்த்தினாலும் எதுவுமே நடக்காதது போல் அமைதி காப்பவர்.

    * கூட்டுப் பிரார்த்தனை, மோட்ச தீபம் என்ற முறைகளை ஏற்படுத்தியவர்.

    * நடமாடும் காஞ்சி காமாட்சி அம்மனாகவே பார்க்கப்பட்டவர். இது கதையல்ல. நாம் கண்ணால் பார்த்த நிஜம். மிக சமீபத்தியது. இவரை வணங்கி நாமும் நம்மை முன்னேற்றி கொள்ளலாம். இப்படிப் பட்டவர்களும் நம் காலத்தில் நாம் பார்க்கும் படி வாழ்வது நம் பாக்கியம் என நினைக்கலாம்.

    இதெல்லாம் எனக்கு வேண்டாம் என்று நினைப்பவர்கள் அவர்கள் போன்ற ஆத்ம உறுதியினை சிறிதளவாவது வளர்த்துக் கொள்ளலாமே. வாழ்க்கையில் சில பாடங்களை, தேவைகளை நம் முன்னோர்கள் கூறிய கருத்துகளை கேட்டு கற்றுக் கொள்ளலாம். படித்து கற்றுக் கொள்ளலாம். சில கடுமையான அனுபவ ரீதியாகவும் கற்றுக் கொள்ளலாம்.

    * இரண்டு வேளை பசியினை தாங்க முடிகின்றதா?

    * கையில் குறைந்தது ரூ.20 இல்லாமல் வாழ முடிகின்றதா?

    * 'அய்யோ பாவம்' என எதிரே முதலைக் கண்ணீர் விட்டு நம் திசையையே எட்டிப் பார்க்காத உறவுகள், நண்பர்கள் இவர்களால் நாம் கற்கும் பாடம் வலியோடு கூடியது. நல்லவர்களைப் பார்த்து நாம் கற்கும் பாடம் முயற்சியும் புரிதலும் கொண்டது. எளிதான வழியினைத் தேர்ந்தெடுப்போமே.

    * தங்கம், வைடூரியம், வைரம் வைத்து கூட செருப்புகள் உள்ளன. ஆனால் யாரும் அதனை தலையில் வைத்துக் கொள்ள முடியுமா? ஆக வாழ்வில் எதுவும் முறையாக எளிமை யாக நடந்தாலே போதும். இந்த எண்ணத்தினை மனதில் அழியாது பதித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    * வாழ்விலும் முன்னேற வேண்டும். ஆன்மீகத்திலும் முன்னேற வேண்டும். அதற்கு சில வழிமுறைகளை நாம் பின்பற்றுவது அவசியம்.

    • 6 மணிக்கு மேல் பராமரிப்பு தேவையென்றால், ஒவ்வொரு நிமிடமும் $1 அதிகமாகக் கட்டணம் செலுத்தவேண்டி இருக்கும்.
    • இளம் வயதிலேயே குழந்தை பெற்றுக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

    இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளும் படிப்பு, பணி காரணமாக தனியாக வெளிநாடுகளில் சென்று வருடக் கணக்கில் தங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள். அதிகக் கட்டுப்பாடுடன் வளரும் குழந்தைகள், முதல் முறையாக முழுமையான சுதந்திரம் பெறும்போது, காணாததைக் கண்டது போன்ற ஒரு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அது அவர்களின் வாழ்க்கைச் சூழல் மட்டுமன்றி பெற்றோரின் கனவு, நம்முடைய இந்தியப் பண்பாடு கலாச்சாரம் அத்தனையையும் பதம் பார்த்துவிடுகிறது.

    அந்த வகையில் குழந்தை வளர்ப்பு என்பது தற்காலங்களில் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் பெரும் சவாலாகத்தான் இருக்கிறது. குறிப்பாக அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் கூட்டுக்குடும்பம் என்ற வாழ்க்கை முறை முற்றிலும் அந்நியமாகிப்போன நிலையில் குழந்தைகளின் பராமரிப்பு பெரும்பாலும் கேள்விக்குறியாகிவிடுகிறது. இன்றைய வாழ்க்கை முறையில் கணவன் மனைவி என இருவரும் வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அடிப்படையிலேயே அங்குள்ள பெண்களுக்கு பொருளாதாரச் சுதந்திரம் என்பது முக்கியத் தேவையாக உள்ளது. சிறார்கள் தங்கள் 14 வயதிலேயே வேலைக்குச் செல்ல வாய்ப்பிருக்கும் நிலையில் பள்ளிக் காலங்களிலேயே ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைவரும் பெரும்பாலும் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கேனும் சம்பாதிக்க முனைகிறார்கள்.


    இளம் வயதிலேயே குழந்தை பெற்றுக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். சிலர் ஓராண்டு வரையிலாவது குழந்தையை வீட்டிலிருந்து பார்த்துக் கொள்கிறார்கள். மற்றபடி குழந்தைகள் பெரும்பாலும் பாதுகாப்பு விடுதிகளில்தான் வளர்கிறார்கள்.

    இங்கு பெண்கள் பெரும்பாலும் குழந்தைகள் பாதுகாப்பு விடுதி நடத்துவதை முக்கியத் தொழிலாகவேக் கொண்டுள்ளார்கள். பெரிய அளவில் நடத்துபவர்கள் அதற்கென்று தனிப்பட்ட வளாகத்தில் சகல வசதிகளுடன் காப்பகம் வைத்துள்ளார்கள். குழந்தைகளின் வயதிற்கேற்றவாறு தனித்தனி பாதுகாவலர்களையும் நியமித்துக் கொள்கிறார்கள். சிறிய அளவிலும் குடியிருக்கும் வீட்டிலேயே ஒரு சில குழந்தைகளைப் பாதுகாக்கும் பணியையும் மேற்கொள் கிறார்கள். இதில் முக்கியமான ஒரு விசயம் நம் இந்தியர்கள் பெரும்பாலும் அமெரிக்கர்கள் நடத்தும் விடுதியைவிட, இந்தியர்கள் நடத்தும் விடுதியிலேயே தங்கள் குழந்தையைச் சேர்க்க விரும்புகிறார்கள். அதேபோன்று அமெரிக்கர்களும் இதே நிலையில்தான் இருக்கிறார்கள். காரணம் கலாச்சார இடைவெளிதான். கலாச்சாரங்களுக்கு ஏற்றவாறு உணவுப் பழக்கங்களிலும் மாற்றம் ஏற்படுவதும் இயற்கைதானே.

    உலகின் பெரும்பாலான பகுதிகளைப் போலவே அமெரிக்காவிலும் பெற்றோர் இருவரும் வேலை செய்வதால், குழந்தைகளை பள்ளி முடிந்ததும், தாங்கள் வேலை முடிந்து வரும்வரை கிட்டத்தட்ட மாலை 3 முதல் 6 மணி வரை 3 மணி நேரம் இணைக்கப்பட்ட பள்ளியில் பராமரிப்பை ஏற்கிறார்கள். 3 மணிநேரத்திற்கு ஒரு குழந்தைக்கு மாதத்திற்கு ஏறத்தாழ $900 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள்.

    6 மணிக்கு மேல் பராமரிப்பு தேவையென்றால், ஒவ்வொரு நிமிடமும் $1 அதிகமாகக் கட்டணம் செலுத்தவேண்டி இருக்கும். பெரும்பான்மையானவர்கள் ஒற்றைத் தாயாக இருப்பதால் வாழ்வாதாரத்திற்காக உழைப்பதுடன் குழந்தை பராமரிப்பும் பெரும் சவாலாகவே உள்ளது. வெகுசிலரே தங்களின் பெற்றோரின் உதவியைப் பெற்று 2 குழந்தைகளுக்கு கிட்டத்தட்ட $1800 சேமிக்க முயல்கிறார்கள். இந்தியாவிலும் தெற்காசிய நாடுகளிலும் இதுபோன்ற நடைமுறைகள் மிகவும் பலனளிப்பதைக் காணமுடிகின்றது.


    சில குழந்தைகள் 9-ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து வேலை செய்யத் தொடங்குகிறார்கள். அரசுப் பள்ளிகளில் தரமான இலவசக் கல்வி கிடைத்தாலும் பல்கலைக்கழகக் கல்விக் கட்டணம் அதிகமாக உள்ளதால் ஒற்றைத் தாயால் அதைச் சமாளிக்க முடிவதில்லை. பெரும்பாலானக் குழந்தைகள் பள்ளிக் கல்வியோடு கல்வியை முடித்துவிட்டு பணிக்குச் செல்லத் தயாராகிறார்கள். பல்வேறு துணைக் கலாச்சாரங்களைக் கொண்டுள்ள இந்நாட்டில் அனைத்து அமெரிக்கர்களுக்கும் பொதுவான பெற்றோருக்குரிய முறை என்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. பொருளாதாரத்திற்கும், சமூக சுதந்திரத்திற்காகவும் தங்கள் குழந்தைகளை இளம் வயது முதலே தயார்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றனர். தங்கள் பிள்ளைகள் வளர வளர அவர்களுக்குப் பொறுப்புகளையும், சுதந்திரங்களையும் வழங்க முனைகின்றனர். குழந்தையின் திறன்கள், ஆர்வங்களின் அடிப்படையில் தங்கள் குழந்தைகள் சமூக, கல்வி, கலை, விளையாட்டு என வெற்றிகளுக்கு இடையில் சமநிலையில் இருக்க விரும்புகிறார்கள். அவர்களுக்கான வெற்றிப்பாதையை அமைப்பதில் பெரு முயற்சி எடுக்கவும் முனைகிறார்கள். அமெரிக்கப் பெற்றோர்கள் பொதுவாக தங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதில் தெளிவான கருத்து கொண்டவர்களாக இருக்கின்றனர்.

    பொதுவாகக் குழந்தைகள் எளிதாகத் தாங்கள் வாழும் இடங்களுக்குத் தகுந்தவாரு தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்கிறார்கள். நாகரிகத்தில் பெரிதும் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில், நம் நாட்டின் சூழலில் வளர்ந்த பெற்றோர்களின் குழந்தைகள் அங்கிருக்கும் குழந்தைகள் போல நடந்து கொள்ளும்போது அந்தப் பெற்றோர்களுக்கு அதன் தாக்கம் சற்று அதிகமாகத்தான் இருக்கும் என்பதற்கான எடுத்துக்காட்டுதான் கீழ்கண்ட இந்த சம்பவம்.

    சந்துரு, தம் 8 வயது மகனை, "ஏன் எப்பொழுது பார்த்தாலும் வீடியோ கேம் விளையாடிக் கொண்டேயிருக்கிறாய். ." என்று கேட்கப்போக, அவன் அதைத் துளியும் சட்டை செய்யாமல் தன் விளையாட்டில் கவனமாக இருந்திருக்கிறான். பல முறை கேட்டும் பதில் இல்லாதலால், கோபம் தலைக்கேற, தந்தை தன் மகனின் முதுகில் ஒரு தட்டு தட்டி விட்டார். அவ்வளவுதான். மளமளவென எழுந்து சென்ற அந்தச் சிறுவன் நேரே போய் ஒருவரும் சற்றும் எதிர்பாராத வகையில், தொலைபேசியை எடுத்து 911 என்ற எண்ணிற்கு அழைப்பு விடுத்துவிட்டான்… இது அமெரிக்க நாடுகளில் சர்வ சாதாரணமாக நடக்கக்கூடிய நிகழ்வுதான் என்றாலும், மகன் செய்த செயலால் நொடியில் அந்தக் குடும்பமே ஆடிப்போய்விட்டது.

    911 என்பது அமெரிக்கா நாடுகளுக்கான அவசரகாலச் சூழ்நிலைகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் தொலைபேசி எண். வேறு எந்த நோக்கத்திற்காகவும் இதைப் பயன்படுத்துவது சட்டப்படிக் குற்றம். 911 அழைப்பைத் தவறாகப் பயன்படுத்துதல் தண்டனைக்குரிய செயலாகும். இதற்கு அதிகப்படியான அபராதமும், சிறைவாசமும் அளிக்கப்படலாம்.

    சந்துருவின் குழந்தை இந்த 911 எண்ணிற்கு அழைப்பு விடுத்த சில மணித்துளிகளில் காவல்துறையினர் வரவும், அதற்குள் கணவனும், மனைவியும் மகனிடம் காலில் விழாதக் குறையாக மன்னிப்புக் கேட்டு, அவனை காவலர்களிடம் தெரியாமல் எண்ணை அழுத்தி விட்டதாகச் சொல்லச் சொல்லி கெஞ்சிக் கேட்டு சம்மதிக்க வைப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டதை சொல்லி ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்ததை, துளியும் கவலை இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் சம்பந்தப்பட்ட அந்த குழந்தை. இதுபோன்று தவறான பழக்க வழக்கங்களும், அதிகப்படியான சுதந்திரமும் பெற்றோருக்கு அச்சமூட்டுவதாக இருக்கிறது. பெண் குழந்தைகளின் வளர்ப்பு மேலும் கருத்தில் கொள்ளத்தக்கது.


    குழந்தைகள் பள்ளிப் பேருந்தில், ஒவ்வொரு தெரு முனையிலும் பொறுமையாக நின்று குழந்தைகளை ஏற்றிச் செல்வதிலாகட்டும், பெற்றவர்களோ அல்லது பொறுப்பாளர்களோ உடன் இல்லாமல் பேருந்தில் ஏற்றவோ, இறக்கி விடவோ முடியாது என்பதில் உறுதியாக இருப்பதும் போன்று எத்தனையோ விசயங்கள் ஆச்சரிய மேற்படுத்தக்கூடியது.

    - பவள சங்கரி

    • மனிதன் என்றால் நமக்குள்ளாக வெவ்வேறு விடைகள் வரும்.
    • இறைவனுடைய கருணையினால் இந்த பிரபஞ்சத்திலே தோற்றுவிக்கப்பட்ட உயிரினங்களின் எண்ணிக்கை 84 லட்சம் ஆகும்.

    இந்த பிரபஞ்சத்திலே இறைவனால் படைக்கபட்ட தோற்ற பொருட்களிலே ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தத்துவம் உண்டு. உதாரணத்திற்கு பச்சை மிளகாய் என்றால் அதன் தத்துவம் காரம், நெல்லிக்காய் என்றால் துவர்ப்பு, ஆப்பிள் என்றால் இனிப்பு என்று சொல்லுவோம். ஆனால் மனிதன் என்றால் நமக்குள்ளாக வெவ்வேறு விடைகள் வரும். அது தான் மனிதனின் சிறப்பு.

    இறைவனுடைய கருணையினால் இந்த பிரபஞ்சத்திலே தோற்றுவிக்கப்பட்ட உயிரினங்களின் எண்ணிக்கை 84 லட்சம் ஆகும். அதில் 3.84 லட்சம் யோனி பேதங்கள் உள்ளது. இதில் கடைசியாக தோற்றுவிக்கப்பட்ட உயிரினம் தான் நாம் என்று சொல்லக்கூடிய மனிதர்கள், மனிதருக்கு பிறகு இறைவன் எந்த உயிரினத்தையும் படைக்கவிலலை. ஆனால், மனிதன்தான் இறையின் வேலையை மெய்ஞான, விஞ்ஞான உதவியோடு பல கண்டுபிடிப்புகளை படைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கு காரணம், மற்ற தோற்ற பொருட்களுக்கு ஒரு தத்துவம் என்றால், மனிதருக்கு மட்டும் 96 தத்துவங்கள் அடங்கி இருக்கிறது. இவை அனைத்தையும் நமக்குள் உள்ள அறிவே ஆண்டு கொண்டு இருக்கிறது. இதன் சிறப்பு என்னவென்றால் அந்த அறிவே நமக்குள் தெய்வமாக விளங்கி கொண்டு இருக்கிறது.

    இந்த தத்துவத்தை தெரிந்து கொண்டால் தான் நான் யார் என்பது புரியும்.

    அன்பர்களே, இந்த 96 தத்துவங்களில் முக்கியமானது தச வாயுக்கள் (பத்து) மற்றும் தச நாடிகளும் (பத்து) ஆகும். இந்த ஆயுளை நிர்ணயிக்கின்ற தச வாயுக்கள் மற்றும் தச நாடிகளையும் நாம் தெரிந்து கொண்டால் தான் நாடி சுத்தி பிராணாயாமத்தின் மூலம், மரணத்தை வெல்ல முடியும்.

    தச வாயுக்கள்:

    1. பிராணன் 2. அபானன் 3. உதானன் 4. சமானன் 5. வியானன் 6. ஞாகன் 7. கூர்மன் 8. கிருகரன் 9. தேவ தத்தன் 10 தனஞ்செயன்.

    பிராணனின் இருப்பிடம் இருதயம். இரத்தத்தை அடித்து வெளித்தள்ளி, உடலின் ஒவ்வொரு செல்களுக்கும் செலுத்துதல் மற்றும் நமக்கு பசி, தாகத்தை உண்டாக்குதல், ஆகாரத்தை ஜீரணிக்க செய்தல்.

    அபானன் என்பது மூலாதாரமாகிய குதத்துக்கும், குய்யத்துக்கும் இடைப்பட்ட இடம் ஆகும். இது சிறுநீர், மலம், சுக்கில சுரோணிதமாகிய விந்து நாதத்தை வெளியேற்றும்.

    உதானன் என்பது நமது தொண்டை பகுதியில் இருந்து சாப்பிடும் உணவை விழுங்கி, சப்த தாதுக்கள் என்று சொல்லப்படுகின்ற இரசம்-ரத்தம்-தசை-, கொழுப்பு-எலும்பு-மஜ்ஜை,- விந்து நாதமாக பிரிந்து, பிறகு மலச்சுழிவை மலப்பையில் தள்ளும்.

    சமானன் என்பது நாபி சக்கரத்தில் உள்ளது. பசி, தாகம், செரிமானம் மற்றும் உடலின் வெப்பமாகிய 98.4 க்கு சரி செய்யும்.

    வியானன் என்பது உடல் எங்கும் நிறைந்து, உடலின் மேல் விழும் தோல் உணர்ச்சியாகிய ஸ்பரிசம் உணர்வை உணர்வதற்கு உதவி செய்கிறது.

    நாகன் என்பது தொண்டை பகுதியில் இருக்கும். இது நமது வாய் வழியாக எந்த திட, திரவ உணவு உள்ளே சென்றாலும் அது நமக்கு ஒத்து வராது என்று தெரிந்துவிட்டால், உடனே வாந்தி உணர்ச்சியை தூண்டி, இந்த உடலுக்கு உதவாத தீமையை ஏற்படுத்த கூடிய அந்த திட, திரவ உணவை வெளியே தள்ள உதவி செய்யும்.

    கூர்மன் என்பது நமது வலது, இடது கண்களை திறந்து மூடவும், கண்ணீரை வெளியே தள்ளுவதற்கும் உதவி செய்கிறது.

    கிருசுரன் என்பது மூக்கில் இருந்து கொண்டு, வாசனை உணர்வை உண்டாக்கி, நுகர்வதற்கும் ஒவ்வாத பொருள் உள்ளே செல்லும் போது தும்மலை உண்டாக்கவும் செய்யும்.

    தேவ தத்தன் என்பது மார்பில் இருந்து கொண்டு கொட்டாவியையும் மற்றும் விக்கலையும் உண்டாக்க செய்யும்.


    தனஞ்செயன் என்பது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை வெளியே தள்ளும். இந்த வாயுவை தவிர, மற்ற 9 வாயுக்களும், மரணத்தின் போது பிராணனுடன் சேர்ந்து வெளியேறிவிடும். இந்த தஞ்செயன் வாயு மட்டும் வெளியேறாமல் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், நாம் பொதுவாக இறைவனை தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று சொல்வோம். அது போல் தூணிலும், துரும்பிலும் இருக்கும் இறைவன் ஒரு இறந்த சடலத்தில் உள்ளும் இருக்கிறார் என்ற தத்துவத்தை உணர செய்வதற்காக இருக்கும். இது ஒருவர் இறந்தவுடன் இந்த வாயு மட்டும் வெளியேறாமல் அந்த உடலை வீங்க செய்யும். நம் உடலில் உள்ள நவ துவாரங்கள் (9 ஓட்டைகள்) வழியாக நுரை, மற்றும் நீரை வரசெய்யும். மேலும் உடலை நாற்றம் அடிக்க செய்யும். உடலை இடுகாட்டுக்கு கொண்டு போய், தீ மூட்டியவுடன் பாதி உடல் தீயில் வெந்த பிறகு டப் என்ற சத்தத்துடன் வெடித்து பிரியும். உதே உடலை எரிக்காமல், புதைக்கும்போது, உடலின் மாமிசம் மண்ணாகும் வரை இருந்து பிறகு பிரியும். இறந்த ஒரு நபரை உயிருடன் மீண்டு வர செய்த யோகிகள் இந்த தனஞ்செயன் வாயு உதவியுடன் தான் செய்தார்கள் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் இந்த வாயு ஆனது ஒரு இறந்த உடலில் 72 மணி நேரம் இருக்கும். ஜீவ சமாதியில் இருக்கும் யோகிகளுக்கு உடலில் இருந்து இந்த பத்து வித வாயுக்களும் வெளியேறுவது இல்லை. அவர்களுக்கு உடல், மன இயக்கம் இருக்காது, உயிர் இயக்கம் மட்டும் இருக்கும்.

    அடுத்ததாக தச நாடிகள் என்று சொல்லப்படுகின்ற 10 நாடிகளை பற்றி பார்ப்போம்.

    1. இடகலை 2. பிங்கலை 3. சுழுமுனை 4. சிகு பை 5. புருடன் 6. காந்தாரி 7. அத்தி 8. அலம்புடை 9. சங்கினி 10. குகு.

    இடகலை என்பது வலது கால் பெருவிரலில் தொடங்கி இடது பக்க நாசியில் (மூக்கு) முடியும் (இடது பக்க நரம்பு) இதை சந்திர நாடி என்றும் மாத்ரு (அம்மா) நாடி என்றும் அழைப்பர்.

    பிங்கலை என்பது இடதுகால் பெரு விரலில் தொடங்கி வலது நாசியில் முடியும் (வலது பக்க நரம்பு). இதை சூரிய நாடி என்றும் பித்ரு (அப்பா) நாடி என்றும் அழைப்பர்.

    சுழுமுனை என்பது மூலாதாரத்தில் தொடங்கி, முதுகு தண்டின நடுவே பிரயாணம் செய்து 72,000 நாடிகளுக்கும் ஆதாரமாக நடு நிலையாய் இருந்து சிரசில் (தலை) முடியும் (நடு நரம்பு) ஆகும். இதை குரு நாடி அல்லது அருள் நாடி என்று அழைப்பர். நம் மனது அமைதி நிலைக்கு செல்வதற்கும், தியானத்தில் வெற்றி பெறுவதற்கும், சித்தி, அடைவதற்கும் துணை புரியும்.

    சிகுவை என்பது உள் நாக்கில் நின்று திடமற்றும் திரவ உணவுகளை விழுங்க செய்யும் (உள் நாக்கு நரம்பு).

    புருடன் என்பது வலது கண்ணில் இருந்து செயல்படும் (வலக் கண் நரம்பு)

    காந்தாரி என்பது இடக் கண்ணில் இருந்து செயல்படும் (இடக் கண் நரம்பு)

    அத்தி என்பது வலது காதில் இருந்து செயல்படும் (வலச் செவி நரம்பு)

    அலம்புடை என்பது இடது காதில் இருந்து செயல்படும் (இடச்செவி நரம்பு)

    சங்கினி என்பது ஆண், பெண் ஜனன உறுப்பின் வாய் திறக்க உதவும் (சுருவாய் நரம்பு)

    குகு என்பது குதத்தில் நிற்கும் (மலவாய் நரம்பு)

    அந்த தச வாயுக்கள் மற்றும் தச நாடிகளோடு சேர்த்து நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்கின்ற பஞ்ச பூதங்களும் நம் உடலில் இருக்கின்ற ஆதார சுக்கரங்களான மூலதாரம். சுவாதி ஷ்டானம், மணிபூரகம், அனாசுதம், விசுக்தி, ஆக்கினை என்கின்ற 6 ஆதாரங்களும் (7வது ஆதாரமாகிய துரியம் என்பது பரமாத்தா எனவே, இதனோடு சேராது) சேர்த்து 31 தத்துவங்கள் (வாயு - 10, நாடி 10, பஞ்சபூதம் 5 மற்றும் ஆதாரம் 6) தான் நம் அன்றாட வாழ்வையும். நமது விதியையும் நிர்ணயிக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நம் பிராணன் என்று சொல்லுகின்ற சுவாசத்தை நிர்ணயம் செய்கிறது. சரி, இப்போது நம் சுவாவத்தை பற்றி தெரிந்து கொள்ள மெதுவாக அகம் நோக்கி பிரயாணத்தை தொடர்வோம்.

    நமது உடல் கடந்து வெளியில் இருக்கின்ற வாயுவை வளிமண்டல வாயு என்கிறோம். நாம் ஒரு முறை மூச்சை உள்ளே இழுக்கும் போது எப்படி உள்ளே இழுக்கிறோம்.. அதில் எந்த வாயுக்கள் உள்ளே வந்து பிராண சக்தியாக மாறுகிறது. அதே போல வெளிவிடும் போது எப்படி மாறுகிறது என்று பார்ப்போம்.

    இப்படி இந்த பிராணன் என்கின்ற மூச்சு, நமது உடல் முழுவதும் பரவி வியாபிக்கிறது. இது இல்லை என்றால் நாம் இல்லை. எனவே, தான் சித்தர்கள், காயமே (உடல்) இது பொய்யடா, காற்றடைத்த பையடா என்று சொன்னார்கள். இந்த மூச்சு தான் நாம் இறைவனுடைய கணக்குப்படி நாள் ஒன்றுக்கு 21600 சுவாசங்கள் செய்ய வேண்டும் என்று கணக்கிடப்பட்டு அதன்படி மூச்சை உபயோகம் செய்பவர்களுக்கு 120 ஆண்டுகள் ஆயுள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த 21600 மூச்சுகள் நம்முள் எப்படி இயங்குகிறது. எந்தெந்த நேரத்தில் இயங்குகிறது. அப்படி இயங்கும் போது நம்முடைய ஆயுளை எப்படி நிர்ணயிக்கிறது என்பதை பார்க்கும்போது விந்தையாக இருக்கும். இந்த 120 ஆண்டுகள் இறைவனால் நமக்கு நிர்ணயிக்கப்பட்ட வாழ்க்கை என்றால் நாம் ஏன் அதற்கு முன்பே இறந்து விடுகிறோம் என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. அதை தான் நாம் கர்மா என்றும் நம்முடைய பதிவுகள் என்றும் விதி என்றும் கூறுகிறோம்.

    இந்த விதி என்கின்ற கர்மா தான் நமது மூச்சின் எண்ணிக்கை வழியாக நமது ஆயுளை நிர்ணயம் செய்கிறது என்றால், நம்மில் எத்தனை பேர் நம்புவோம். ஆனால் நாம் நம்பிதான் ஆக வேண்டும். அடுத்ததாக இந்த கர்மா என்கின்ற விதி நம்மூச்சோடு எப்படி சேர்க்கிறது. அதிலிருந்து தப்பித்து கொள்ள இந்த பிராணாயாமம் எப்படி அருள் புரிகிறது என்பதை அடுத்த தொடரில் ஆராய்ச்சி செய்வோம்.

    • மனஅழுத்தம் தலை முதல் கால் வரை பல அறிகுறிகளை தோற்றுவிக்கிறது
    • நம்மைப் பற்றி எப்படி சிந்திப்பார்கள்? என்பதை நம்மால் கணிக்கமுடியாது. அதையும் நம்மால் மாற்றவும் இயலாது.

    மனம் என்பது இதயத்தில் இருப்பதாகவும், சிலர் மூளைக்குள் இருப்பதாகவும் நம்புகிறார்கள். ஆனால் எண்ணங்களின் கோர்வைதான் மனம். உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் மனம் வேதியியல் பொருளாக உள்ளது என்பதுதான் உண்மை. எனவேதான் மனம் பாதிக்கும்போது, உடலின் அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படுகிறது.

    இன்றைய காலகட்டத்தில் மனஅழுத்தம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் ஒன்றோடு ஒன்றாகிவிட்டது போல்தான் உள்ளது. எனவே மனஅழுத்தத்தை எப்படி கண்டறிவது? எப்படி சமாளிப்பது? என்பதை அனைவரும் அறிந்து கொள்வது அவசியம்.

    அப்போது தான் வாழ்வியல்முறை மாற்றங்களினால் ஏற்படும் நோய்களில் இருந்து விலகி இருக்கலாம், நம் ஆயுட்காலத்தையும் நீட்டிக்கலாம்.

    மனஅழுத்தத்தினால் ஏற்படும் அறிகுறிகள்:

    மனஅழுத்தம் தலை முதல் கால் வரை பல அறிகுறிகளை தோற்றுவிக்கிறது. அதில் மிக முக்கியமானவைகள் இதோ... தலைவலி, முடிஉதிர்தல், உடல்சோர்வு, செயல்களில் பிடித்தம் இல்லாமை.

    கழுத்து வலி, உடல் சதையில் இறுக்கம், தோள்பட்டை வலி, நெஞ்சுவலி, நெஞ்சு படபடப்பு, உடலில் சதைகள் துடித்தல், பசியின்மை, மலம் வெளியேறுவதில் சிக்கல், உறக்கமின்மை, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிக கோபப்படுதல், தலைசுற்றல், மற்றவர்களுடன் சரளமாகப் பேச தயங்குவது, அதிக சத்தம் கேட்டால் நெஞ்சு படபடப்பு, தாம்பத்திய உறவில் நாட்டமின்மை, உடலில் ஒரு சில பகுதிகளில் அழுத்துவது போன்ற உணர்வு.

    மனஅழுத்தத்தை கண்டறிவதற்கு பரிசோதனைகள் எதுவும் தேவையில்லை. அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து உங்கள் எண்ணங்களை நீங்கள் கவனித்தாலே போதும். நீங்கள் மனஅழுத்தத்துடன் இருக்கிறீர்களா? இல்லையா? என்பது உங்களுக்கே புரியும். அப்படி மனஅழுத்தம் இருப்பின், எதனால் ஏற்பட்டது? அதற்கு தீர்வு ஏதேனும் உள்ளனவா? என்பதை சிந்திக்க வேண்டும்.

    மனஅழுத்தத்தை சமாளிக்க 4 "A"-வைப் பின்பற்றுங்கள் உங்கள் மனஅழுத்ததிற்கு காரணமான காரணி என்ன? என்பதைக் கண்டறிந்து இந்த 4 "A"-வில் எதில் உங்களுக்கு பொருத்தமானது என்பதை நீங்களே தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். உங்கள் மனஅழுத்தத்தை சமாளிப்பதற்கு தவிர்த்தல் (Avoid), மாற்றிக்கொள்ளுதல் (Alter), ஏற்றுக்கொள்ளுதல் (Accept), அதனோடு வாழப் பழகிக்கொள்ளுதல் (Adapt)

    ஆகிய நான்கு "A" பற்றி புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

    1. தவிர்த்தல் (Avoid) - உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தும் காரணியைக் கண்டுபிடித்து, அதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். உதாரணத்திற்கு, சிலரைப் பார்க்கும்போது மனஅழுத்தம் ஏற்படின் அவர்களைப் பார்பதைத் தவிர்க்க வேண்டும். பார்ப்பதைத் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அவர்களோடு இருக்கும் நேரங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

    ஆனால் நம் வாழ்க்கையில் எல்லா பிரச்சனைகளையும் தவிர்க்க இயலாது. எனவே தவிர்க்க முடியாத பிரச்சனைகள் இருப்பின், அதை எப்படி மாற்றிக்கொண்டு சமாளிப்பது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

    2. மாற்றிக்கொள்ளுதல் (Alter) - உங்களால் தவிர்க்க முடியாத சிக்கல்களை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உதாரணத்திற்கு நீங்கள் எப்போதும் செல்லும் பாதையில் நெரிசல் இருப்பின் வேறு ஏதேனும் மாற்று வழி உள்ளதா? என்பதைக் கண்டறிந்து அதில் பிரயாணிக்கலாம்.

    மாற்று வழி இல்லாத பட்சத்தில்அதே வழியில்தான் செல்லவேண்டும், நெரிசலை எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்று இருப்பின், என்ன செய்ய வேண்டும்? சற்று விரைவாகப் புறப்பட்டு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முயற்சிக்க வேண்டும். மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் செல்லும்போது, உங்களுக்குப் பிடித்தப் பாடல்களைக் கேட்கலாம்.

    அதை விடுத்து அவரச அவசரமாகக் புறப்பட்டு அதே பாதையில் செல்லும்போது மனஅழுத்தம் அதிகரிக்கத்தான் செய்யும். இப்படி எதிர்க்கொள்ள த்தான் வேண்டும் என்ற ஒரு சூழல் ஏற்படும்போது அதை நாம் எப்படி மனஅழுத்தம் இல்லாமல் மாற்றிக் கொள்ளலாம் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

    3. ஏற்றுக்கொள்ளுதல் (Accept) - சிலப்பிரச்சனைகளை நம்மால் தவிர்க்கவும் முடியாது, மாற்றிக் கொள்ளவும் முடியாது. அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? அதை அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஏற்றுக்கொண்டு அதனோடு எப்படி வாழ்வது என்பதைப்பற்றி சிந்தித்துச் செயல்பட வேண்டும். உதாரணத்திற்கு,

    நமக்கு நெருக்கமானவர்களின் மரணம் அல்லது ஏமாற்றம் இவை இரண்டையும் நடந்து முடிந்த பின் அதைப் பற்றியேச் சிந்தித்து கொண்டு நிகழ்காலத்தில் செய்ய வேண்டிய கடமைகளைச் சரிவரசெய்யாமல் இருப்பதே இம்மன அழுத்த நோய்க்கு மிகவும் முக்கியமான காரணம். எனவே அதை ஏற்றுக் கொண்டு, நிகழ்காலத்தில் வாழப் பழக வேண்டும்.

     

    மரு.அ.வேணி

    4. அதனோடு வாழப் பழகிக்கொள்ளுதல் (Adapt) - நம்மால் மாற்ற முடியாத நிறைய விசயங்கள் மனித வாழ்க்கையில் உண்டு. உதாரணத்திற்கு, பிறர் எப்படி நம்மிடம் பழகுகிறார்கள் அவர்களது சுபாவம் என்ன? மனோபாவம் என்ன? அவர்கள் எப்படி நம்மிடம் பேசுவார்கள்? இதைப்பற்றி ஓரளவுதான் நம்மால் கணிக்க முடியும்.

    நம்மைப் பற்றி எப்படி சிந்திப்பார்கள்? என்பதை நம்மால் கணிக்கமுடியாது. அதையும் நம்மால் மாற்றவும் இயலாது. நம்மால் மாற்ற முடிந்த ஒரு விசயம் என்ன? நம்மை நாமே மாற்றிக் கொள்வது. ஆம், உலகில் உள்ள மற்றவர்களின் சுபாவங்களையோ, பழக்கவழக்கங்களையோ மாற்ற முயற்சிப்பதை விட நாம் நம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள, மன அழுத்ததிலிருந்து விடுபட, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சிந்திப்பது தான் சாலச்சிறந்தது.

    இது கூறுவதற்கு மிக எளிது, ஆனால் செயலில் பின்பற்றுவது என்பது, கொஞ்சம் சிரமமான ஒன்று தான். ஆனால் முடியாதது அல்ல. நம் மனத்தை அவ்வப்போது விலகி நின்று பார்க்கப்பழக வேண்டும்.

    நம்மை மாற்றிக்கொண்டு ஒவ்வொரு செயல்களாகச் செய்யச்செய்ய சிறிதுசிறிதாக மனஅழுத்தங்கள் விலகி, மனத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் உருவாகும். எனவே பொறுமையாக முயற்சிகளை செய்ய வேண்டும்.

    மனஅழுத்தத்துடன் வாழ்க்கையில் சாதனை புரிவதைவிட, மனமகிழ்ச்சியுடன் வாழ்க்கையை வாழ்வதுதான் மிகவும் முக்கியம் என்பதை மனத்தில் நிறுத்தி நம் உடலுக்கும் மனத்துக்கும் நாம் செய்ய வேண்டியவற்றை அனுதினமும் சரியாக செய்தோமேயானால் இம்மன அழுத்த நோயிலிருந்து நாம் எப்போதுமே விலகி இருக்கலாம் என்பது உறுதி. 

    • வீடு மனைகளைப் பொருத்தவரை, விற்பனை செய்பவருக்கு நல்ல விலை என்பது கூடுதலான விலைக்கு விற்பதே ஆகும்.
    • எல்லாவற்றிலும் நியாயத்தை எதிர்பார்க்கும் தரமான வாசகர்களே! வணக்கம்!.

    உலகம் இன்று வணிகமயமாகி விட்டது என்று எல்லாரும் பேசுகிறோம். வணிகமயம் என்றால் என்ன? வணிகம் என்றால் என்ன?. ஒரு பொருளையோ அல்லது சேவையையோ உரியவரிடமிருந்து பெற்று மற்றொருவருக்கு விலைக்கு வழங்குவது வணிகம். விலைக்குப் பெறும்போது உள்ள பணமதிப்பைவிட, விற்கும்போது கூடுதலான பணமதிப்பில் வழங்குவது வணிகம் ஆகும்.

    அந்த அடிப்படையில் கொள்முதல் பணமதிப்பிற்கும், விற்பனைப் பண மதிப்பிற்கும் இடையேயுள்ள கூடுதலான பணப்பயனை நாம் 'லாபம்' என்கிறோம். அதுவே கொள்முதல் மதிப்பை விட விற்பனை மதிப்புக் குறைந்து போனால் அதனை 'நஷ்டம்' என்கிறோம். வணிகம் என்பது லாப நோக்கம் உடையது என்பதில் இருவேறு கருத்தில்லை; அதே நேரத்தில் நட்டத்திற்காக யாரும் வணிகத்தில் ஈடுபடப் போவதுமில்லை;ஆயினும் எதிர்பாராமல் வணிகத்தில் நட்டம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. பலன் அல்லது பயனை எதிர்பார்த்தே இன்றைய மனிதர்களின் செயல்பாடுகள் இருப்பதையே வணிக நோக்கு என்கிறோம்.

    ஒரு செருப்புக்கடை. நவீன முறையில் அக்கடை செருப்புக்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்வதால் அதனை 'ஷோரூம்' என விளம்பரப் படுத்தி இருந்தனர். அந்தக் கடையில் அன்றுதான் புதிதாக ஒரு நடுத்தர வயதாளர், விற்பனையாளர் வேலைக்குச் சேர்ந்திருந்தார். அந்தக் கடைக்குத்தான் அவர் புதியவரே யொழிய செருப்பு விற்பனைத் துறையில் பத்தாண்டுகளுக்கும் மேலான அனுபவம் நிறைந்தவர். அவர் விற்பனை செய்யும் அழகை அக்கடையின் முதலாளி எட்டநின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

    கடைக்கு வந்த ஒரு வாடிக்கையாளர் வெகுநேரமாக செருப்புகளை ஆராய்ச்சி செய்து ஒரு ஜோடி செருப்பைத் தேர்ந்தெடுத்தார்; விலை என்ன என்று விற்பனையாளரிடம் கேட்டார்; 800 ரூபாய் எனப்பதில் வந்தது. தான் பக்கத்திலுள்ள ஊரிலிருந்து வருவதாகவும், தற்சமயம் தன்னிடம் 400 ரூபாய் மட்டுமே இருப்பதாகவும், 400 ரூபாயை வாங்கிக்கொண்டு செருப்புகளைத் தந்தால், மீதமுள்ள 400ஐ நாளை நிச்சயம் கொண்டுவந்து தருவேன் என்றும் கேட்டார் வாடிக்கையாளர்.

    எதையும் யோசிக்காமல், செருப்புகளைப் பெட்டிக்குள் போட்டு,"400 ரூபாய் பணத்தைக் கல்லாவில் முதலாளியிடம் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்" என்று சொல்லிவிட்டார் விற்பனையாளர். "இவர் ஒரு மரியாதைக்கு, முதலாளியாகிய நம்மிடம் கூட ஒரு வார்த்தை கேட்காமல் இப்படிச் செய்கிறாரே!" என்று நினைத்துக்கொண்டே ஒன்றும் பேசாமல் 400ஐ வாங்கிக் கல்லாவில் போட்டுவிட்டுச் செருப்பைக் கொடுத்து வாடிக்கையாளரை அனுப்பியும் விட்டார் முதலாளி.

    பிறகு மெதுவாக விற்பனையாளரை அருகே அழைத்தார் முதலாளி," அந்த வாடிக்கையாளர் உனக்குத் தெரிந்தவரா?" என்று கேட்டார். "எனக்குத் தெரியாது. முன்னே பின்னே பார்த்ததுகூடக் கிடையாது" என்றார் விற்பனையாளர். "அப்படியானால் எந்த நம்பிக்கையில் அவர் நாளை நமது கடையைத் தேடிவந்து மீதமுள்ள 400 ரூபாயைத் தந்து விடுவார் என்று கொடுத்தனுப்பினாய்? அவர் நாளை வரவில்லையென்றால் நமக்கு 400 ரூபாய் நட்டம்தானே!. அதை எனக்கு யார் தருவார்? உன் சம்பளத்தில் இருந்துதானே பிடிக்க நேரிடும்? என்று கேட்டார் முதலாளி.

    இப்போது அனுபவம் வாய்ந்த அந்த விற்பனையாளர் பேசத் தொடங்கினார். " ஐயா, முதலாவது, அந்தச் செருப்பை 400 ரூபாய்க்கே கொடுத்தாலும் நமக்கு நட்டம் வராது!. ஏனெனில் அதன் கொள்முதல் விலை ரூபாய் 350 என்பது ரகசியக் குறியீட்டில் அதில் எழுதப் பட்டிருக்கிறது. இரண்டாவது, அந்தப் பெட்டிக்குள் நான் வைத்திருக்கும் இரண்டு செருப்புகளும் ஒரே காலுக்கு மட்டுமே பொருந்தக் கூடியவை. இரண்டு ஜோடிகளை எடுத்து அவருக்குத் தெரியாமல், ஒருகாலுக்குப் பொருந்தும் இரண்டு செருப்புகளை ஒரு ஜோடிபோல வைத்துக் கொடுத்தனுப்பி இருக்கிறேன். வீட்டுக்குப் போனவுடன் போட்டுப் பார்ப்பார்; நாளைக்கு அல்ல, இன்று மாலையே கூட வந்து செருப்பு மாறிப்போனதைப் புகாராகச் சொல்லி மாற்றி வாங்கிக்கொண்டு பணத்தையும் தந்துவிட்டுச் செல்வார்" என்றார். விற்பனையாளரின் திறமைகண்டு அதிர்ந்து போனார் கடைமுதலாளி.

    ஒரே காலுக்குப் பொருந்தும் இரண்டு செருப்புகளை, ஒருஜோடிபோலத் தந்தது விற்பனையாளரின் திறமை என்றாலும், சந்தடி சாக்கில் 350 ரூபாய் செருப்பை 800 ரூபாய்க்கு விற்கத் துணிந்த முதலாளியின் திறமையை எந்த வணிகத்தில் சேர்ப்பீர்கள்?. அந்த வாடிக்கையாளர், திரும்பவராமல் இருந்திருந்தால் ஒருவேளை இது நியாய வணிகமாக ஆகியிருக்கும்; ஆனால் பொருந்தாத ஜோடிகளால் இது, ஏமாந்த நட்ட வணிகமாக அல்லவா மாறியிருக்கும்?.

    வணிகம் என்பது ஒரு தொழில்; அதில், மற்ற தொழில்களைப் போல, உழைப்பிற்கேற்ற ஊதியம் என்பதைப் போலல்லாமல், மூலதனத்திற்கேற்ற லாபம் என்பதே சரியாக இருக்கும். மற்ற தொழில்களில், அறிவும், உடலுழைப்பும் மூலதனங்களாக அமைகின்றன. ஆனால், வணிகத்தில், கூடுதலாகப் பணம் முதன்மை முதலீடாக அமைகிறது. இங்கே பணம் வணிகத்தில் முதலீடு ஆகும் காலம் முதற்கொண்டு, விற்பனையாகிப் பணமாகத் திரும்பி வரும் காலம்வரை கிடப்பில் இருந்தாலும் அதற்கும் ஒரு வட்டித்தொகை வந்தே ஆக வேண்டும்.

    வணிகத்தில் கொடுப்பவர், கொள்பவர் என இருதிறத்தவர் உண்டு. கொடுப்பவர் என்றால் பொருள்களை விலைபேசிக் கொடுப்பவர் என்று பொருள். கொள்பவர் என்றால் பொருளை உரிய விலை கொடுத்து வாங்கிக் கொள்பவர் என்று பொருள். விற்பவர் பொருளின் தரமறிந்து, பொருளின் மதிப்பறிந்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும்; வாங்குபவர் உரிய பணம்கொடுத்துப் பெற்றுக் கொள்ளவேண்டும். இதில் அதிக லாபம் வைத்து வணிகம் நிகழ்த்தப்பட்டால், விற்பவர் ஏமாற்றுக்காரராகவும், வாங்குபவர் ஏமாளியாகவும் கருதப்படுவர். வணிகத்தில் பொருள்கள் குறித்த பொய்யான தகவல்கள், விளம்பரங்களாகவோ, உறுதிகளாகவோ வழங்கப் படக் கூடாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்கத் தமிழ் இலக்கியமாகிய பட்டினப்பாலை, வணிகத்தின் மேன்மைத் தன்மைகளைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

    ''நெடு நுகத்துப் பகல்போல

    நடுவுநின்ற நல்நெஞ்சினோர்

    வடுஅஞ்சி வாய்மொழிந்து

    தமவும் பிறவும் ஒப்ப நாடிக்

    கொள்வதூஉம் மிகை கொளாது

    கொடுப்பதூஉம் குறைகொடாது

    பல்பண்டம் பகர்ந்து வீசும்"

    சுந்தர ஆவுடையப்பன்

    சுந்தர ஆவுடையப்பன்

    தம்முடைய பொருளை விற்கும்போது வாங்குபவர் மனநிலைக்கு மாறிக்கொண்டு, என்ன விலைக்கு விற்றால் வாங்குபவர் மனம்நோகாமல் வாங்குவாரோ அந்த விலைக்கு விற்கும் நியாய வணிகத்தைப் பட்டினப்பாலை வலியுறுத்துகிறது. விற்பவர் அதிகவிலைகூறி விற்றுவிடக் கூடாது; வாங்குபவர் குறைந்த விலைக்கு வாங்கியும் விடக்கூடாது.

    மதுரையில் ஒரு நில வணிகம் செய்யும் தரகரை அவரது கடையில் சந்தித்தேன். அவரது கடை முகப்பில், " இங்கு நல்ல விலைக்கு வீட்டு மனைகள் விற்கவும் வாங்கவும் அணுகவும்" என்று விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருந்தது. எனக்கு உடனே பெருத்த சந்தேகம் பற்றிக்கொண்டது. வீடு மனைகளைப் பொருத்தவரை, விற்பனை செய்பவருக்கு நல்ல விலை என்பது கூடுதலான விலைக்கு விற்பதே ஆகும். ஆனால் வாங்குபவருக்கு நல்ல விலை என்பதோ, மிகக் குறைந்த விலைக்கு வாங்குவதே ஆகும். இந்த இருவரும் ஏற்றுக்கொள்ளும் 'நல்ல விலை' என்பது என்ன? என்று தரகரிடம் கேட்டேன். 'அதை இருவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் முடிவு செய்வதற்குத்தான் நாங்கள் இருக்கிறோம்' என்று தரகர் பதில் சொன்னார். எது எப்படியாயினும் தரகருக்கு நல்ல 'தரகுப்பணம்' கிடைக்கும் வகையில் முடிவாவதே 'நல்ல விலையோ'?.

    திருவள்ளுவரும் பட்டினப்பாலையின் நெறியில் நின்று வணிகம் செய்பவர்களை நீதிவழங்கும் நியாயவான்களுக்கு நேராக வைத்தே மதிப்பிடுகிறார். நீதி வழங்கும் மிக உயரிய பணிக்கு இணையாக வணிகம் செய்யும் பணி போற்றப்படுகிறது. அதனால்தான் நீதிமன்றத்தில் தராசு நீதி வழங்கும் குறியீடாகப் போற்றப்படுவதுபோல, பலசரக்குக் கடைகளில் தராசு நிறுத்து வழங்கும் நியாயப் பணிகளில் ஈடுபடுத்தப் படுகின்றது.

    வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

    பிறவும் தமபோற் செயின்

    இந்தத் திருக்குறளில், நீதி வழங்குவதைப்போல வாணிகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தவே இதனை நடுவு நிலைமை அதிகாரத்தில் வைத்தார் திருவள்ளுவர். ஒருவனுக்கு நீதி வழங்கித் தீர்ப்புச் சொல்வதற்குமுன், குற்றவாளியின் இடத்தில் தம்மைவைத்து எண்ணி ஆராய்ந்தே வழங்க வேண்டும் என்கிறார். வாங்குகிற நுகர்வோர் நிலைக்கு இறங்கிச் சென்றால், விற்போர் யாரும் கொள்ளை லாபம் வைத்துப் பொருள்களை வணிகம் செய்யும் அவல் நிலை ஏற்படாது.

    வணிகத்தில் பொருள்களுக்கான விற்பனை வரி ஒரே சீராக விதிக்கப்படுவது போல, பொருள்களுக்கான விற்பனைவிலை நிர்ணயிப்பிலும் ஒரே சீரான தன்மை பின்பற்றப்பட்டால் அது நியாய வணிகமாக மாறிப்போகும்.

    சான்றாகப், பொள்ளாச்சியில் தென்னந் தோப்பில், வெட்டப்படும் போது உற்பத்தியாளரிடம் 20 ரூபாய் விலை பெறும் இளநீர், மூன்று நாளில் சென்னைக்கு வந்து விற்பனையாகும்போது அது இரண்டு மடங்குக்குமேல் விலைபெற்று விடுகிறது. காரணம், உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் இடையில் குறைந்த பட்சம் மூன்று பேர்களிடையே கைமாறி வணிகம் நிகழ்ந்து விடுகிறது. இந்த வணிகத்தில், உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோரை விட, இடைத்தரகர்களே அதிகப் பலனை அனுபவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒரு சாலையோரத்தில் ஒரு கிராமத்துப் பெண்மணி, தனது தோட்டத்தில் பழுத்த வாழைப் பழங்களைக் கூடையில் வைத்து விற்றுக் கொண்டிருந்தார். அவரிடம் 'வாழைப்பழம் ஒரு சீப்பு எவ்வளவு?' எனக் கேட்டேன். '25 ரூபாய்' என்றார்.'சரி கொடுங்கள்' என்று பேரம் பேசாமல் 25 ரூபாயை நீட்டினேன். அவர் அதிர்ந்து போனார்.

    பொதுவாக இப்படி விலை கேட்பவர்கள் பேரம்பேசி வாங்குவார்கள்; அதற்கேற்றவாறு விலையில் 5ரூபாய் அதிகம் சொல்வோம் என நினைத்துச் சொல்லியிருப்பார் போல. நான் 25 ரூபாயை நீட்டியதும், ஒரு சீப்பு வாழைப்பழத்தோடு, கூடுதலாக ஒரு நாலுபழத்தையும் கொடுத்து, .இந்தாங்கையா இதையும் கொண்டுபோய் பிள்ளைகளுக்குக் குடுங்க! சாப்பிடட்டும்!. என்றார். உண்மையில் இதுதான் நியாய வணிகம். யாருக்கும் பாதிப்பு வராமல், இருதரப்பும் மகிழும் வண்ணம் நிகழ்த்தப்படுவது.

    அளவுக்கு அதிகமாக லாபம் வைத்துச் சம்பாதிப்பதெல்லாம் நிலைப்பது கிடையாது. மற்றவரை நோகவைத்து ஈட்டுகிற சம்பாத்தியம் நம்மையும் நோகவைத்துப் போய்விடும் என்பதே வள்ளுவம்.

    அழக்கொண்ட எல்லாம் அழப் போம்!

    நலமான வணிகமே நலம்தரும்!

    தொடர்புக்கு 9443190098

    • நீரிழிவு வருவதற்கு இதுதான் காரணம் என்ற வரையறுத்து கூறய இயலாது.
    • சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு புண் ஏற்பட்டால் அது குணமாக நீண்ட நாளாகும். எடையை ஒரே சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.

    அழகான பங்களா, கார், குறிப்பறிந்து பம்பரமாய்ச் சுற்றும் பணியாளர்கள், இப்படி வசதியோடு வாழ்பவர்கள் ஏராளம். ஆனால் அவர்கள் குடிப்பதோ கோதுமைக் கஞ்சி, கேப்பைக்கூழ், சர்க்கரை இல்லாத காபி.கேட்டால் எனக்கு டையபாடிஸ் என்ற நாகரீகப் பாணியில் பதில் சொல்வார்கள்.

    சர்க்கரை வியாதிக்கு சித்த மருத்துவத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஆதிமுத்திரம், மது மேகம், நீரிழிவு என்று பெயர்கள் சூட்டி உள்ளனர். ஆனால் 17-ம் நூற்றாண்டின் கடைசியில் தான் சீறுநீரில் சர்க்கரை இருந்தால் நீரிழிவு என்று கண்டுபிடித்து நவீன மருத்துவம் பெயர் சூட்டியது.

    உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் நீரிழிவு வியாதி வியாபித்துள்ளது. சுமார் 15 கோடி மக்கள் உலகம் முழுவதும் இவ்வியாதியில் பாதிக்கப்பட்டு உள்ளனர். பணக்காரர்கள் மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத் நீரையும் இவ்வியாதி விடுவதில்லை. இருதய நோய், புற்று நோய் ஆகியவைகளுக்கு அடுத்து இன்று அமெரிக்காவில் நீரிழிவு நோயினால்தான் அதிகம் பேர் மரணமடைகிறார்களாம்.

    நமது நாட்டில் சுமார் 60 லட்சம் மக்கள் இவ்வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்புறத்தை விட நகர்ப்புறத்தில் உள்ளவர்களைத்தான் இந்நோய் அதிகமாகப் பிடித்துள்ளது. 15 வயதிலிருந்து 30 வயது வரை அரை சதவீதம் பேருக்கும் 30 வயதிலிருந்து 40 வயது வரை 1 சதவீதம் பேருக்கும், 40-க்கு மேற்பட்ட வயதுடையோரிடம் 4 சதவீதம் மக்களும் இதனால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிகிறது.


    குறிப்பாக 90 சதவீதம் வயதானவர்களிடம் இந்த நோய் காணப்படுகிறது. தந்தையும், தாயும் நீரிழிவுக்காரராக இருந்தால் பிள்ளைகளுக்கு 100 சதவீதம் இந்நோய் வர வாய்ப்புள்ளது. தாயோ, தந்ைதயோ இருவரின் ஒருவர் நீரிழிவுக்காரராக இருந்தால் 25 சதவீதம் பிள்ளைகளுக்கு தொடர வாய்ப்புள்ளது. மேலும் நீரிழிவு உள்ளவர்களின் 75 சதவீதம் அதிகம் எடையுள்ளவர்கள் என்று புள்ளி விபரம் கூறுகிறது.

    நமது உடலில் கணையம் என்ற உறுப்பு உள்ளது. அது சுரக்கும் நீரால்தான் நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை ஜீரணிக்கப்படுகிறது. நம் எல்லோருடைய ரத்தத்தில் சர்க்கரை, குளுக்கோஸ் வடிவத்தில் சிறிதளவு இருக்கிறது. இந்த குளுக்கோஸ் ரத்தத்தில் இருந்தால்தான் திசுக்கள், மூளை, சிவப்பணு ஆகியவை பலம் பெறும். சாதாரணமாக மனித ரத்தத்தில் 100 மில்லிக்கு 150 மில்லி கிராம் வீதம் சர்க்கரை மாவுப் பொருள், புரதம், கொழுப்பு ஆகியவை உள்ளன.

    மாவுப் பொருள் எரிக்கப்பட்டு சக்தி வெளிப்படுகிறது. அவ்வாறு எரிக்கப்படும்போது கணையம் சுரக்கும். கணையத்தில் உள்ள நீரில் இன்சுலின்தான் க்ரியா ஊக்கிரியாக வேலை செய்கிறது. இன்சுலின் சுரப்பு கூடினாலோ குறைந்தாலோ தவறு. இன்சுலின் அதிகமாக சுரந்தால் உடல் சக்திக்கு வேண்டிய சர்க்கரையின் அளவு குறைந்து சர்க்கரை வறட்சி நோய் ஏற்படுகிறது.

    குறைவாக சுரந்தால் உணவில் உள்ள சர்க்கரைப் பொருள் சரியாக ஜீரணிக்காமல் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடிக் கொண்டே போனால் அதிகப்படியான சர்க்கரை சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது. அதற்காக சிறுநீர் அடிக்கடி வெளியேறுகிறது. இதைத்தான் நீரிழிவு நோய் என்கிறோம்.

    நீரிழிவு ஒரு குறிப்பிட்டவர்களுக்குத்தான் வரும் என்றில்லை, ஏழை, பணக்காரன், ஆண், பெண் இருபாலாருக்கும் வரலாம். அடிக்கடி மகப்பேறு உள்ள பெண்கள் இதனால் பதிக்கப்படுகின்றனர் நீரிழிவு வருவதற்கு இதுதான் காரணம் என்ற வரையறுத்து கூறய இயலாது.

    ஆனால் வயது, பருத்த உடல், பரம்பரையாக நோயுறுதல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஆகிவையினாலும் வரலாம். உடலுக்கு அதிக வேலை தராதவருக்கும், உடல் பயிற்சி செய்யதவாருக்கும், இனிப்பு பலகாரங்கள் சாப்பிடுவதில் அதிக நட்டம் உள்ளவர்களுக்கும் நீரிழிவு வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

    நீரிழிவுக்காரர் கை கால் கழுவும் போதும், குளிக்கும்போதும், வெந்நீரை உபயோகிக்க வேண்டும். நகங்களை வெட்டி தூய்மையாக வைத்திருக்க வேண்டும், காலணிகளை கண்டிப்பாக அணிய வேண்டும். சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு புண் ஏற்பட்டால் அது குணமாக நீண்ட நாளாகும். எடையை ஒரே சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.

    நீரிழிவுக்காரர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு மிக மிக அவசியம். பொதுவாக இவர்கள் நாக்குக்கு அடிமையாகக் கூடாது. வயிறு புடைக்க உண்ணுவதை தவிர்க்க வேண்டும். 2 வேளை அல்லது 3 வேளை என்ற வயிறு நிறைய உண்பதை விட அதே உணவைச்வைச் சிறு சிறு இடைவெளி விட்டுக் குறைந்த அளவு உண்ண வேண்டும். மாவுச் சத்து அதிகமுள்ள அரிசி, கேரட், பீட்ரூட், உருளைக் கிழங்கு வகைகளையும் சர்க்கரை அதிகமுள்ள இனிப்புப் பலகாரங்கள்., பிஸ்கட், சாக்லெட், ஐஸ்கிரிம் மற்றும் குளிர் பானங்கள் இவற்றை அறவே நீக்க வேண்டும்.

    இத்தகைய உணவுப்பொருட்கள் ரத்தத்தில் சர்க்கரையை அதிகப்படுத்தும் தன்மை உடையவை. நீரிழிவு நோய் உடையவர்களுக்குத் தாகமும் ஆயாசமும் அதிகமாக இருக்கும். அவர்கள் தக்காளி ஜூஸ், தண்ணீர், மோர் இவைகளை ஏராளமாக பருகலாம். பழச்சாறுகளைப் பருகக் கூடாது. ஆனால் பழங்களை புரத உணவுடன் சேர்த்து உண்ணலாம். கேழ்வரகு, கோதுமை ஆகியவை நீரிழிவுக்காரர்களுக்கு முற்றிலும் ஏற்ற உணவு.

    பப்பாளிக்காய், புடலங்காய், தக்காளி, வெண்டைக்காய், காலிப்ளவர், முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய் ஆகியவற்றில் மிக மிக குறைவாக புரதச்சத்து உள்ளதால் இவைகளை அதிகமாக உண்ணலாம். இத்தகைய மாவுக் கட்டுப்பாடும். லேசான உடற்பயிற்சியும் ஆசனங்களும் சர்க்கரை வியாதிக்காரர்களை விரைவில் குணமடையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

    பலநூறுஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பதினெண் சித்தர்களால் அருளப்பட்ட சித்த மருத்துவத்தால் முற்றிலும் குணமாக்க கூடிய வியாதி, நீரிழிவு. மான் கொம்பு. ஆமையோடு சீனாக்காரம் ஆகியவைகளைச் சுத்தி செய்து பஸ்பமாக்கி கொடுப்பதால் நீரிழிவு குணமாகிறது. கல்யாணி (சுடுகாட்டுமல்லிகை) என்னும் மூலிகைச் சர்க்கரை நோயாளியின் புண்ணிற்கு அருமருந்தென்றும், சர்க்கரை கொல்லி என்று குறிப்படப் பெறும் சிறு குறிஞ்சான் என்னும் பச்சிலையால் மது மேகம் குணமாகும். மருதம் பட்டை, நாவல் பட்டை, ஆலம் விழுது இவை வகைக்கு 50 கிராம் எடுத்துத் தட்டி லிட்டர் நீரில் போட்டு, சுண்டக் காய்ச்சி வடித்துப் பாதியைக் காலையிலும், மீதியை மாலையிலும் குடிக்கலாம்.

    நெல்லிக்காய்ச் சாறு 100 மில்லி, தேன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் கலந்து வெறும் வயிற்றில் குடித்துவர அதிக மூத்திர ரோகம் கட்டுப்படும்.

    ஆடையொட்டி இலை, நாவல் மரத்துப்பட்டை, மாங்கொட்டைப் பருப்பு ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து 1/2லிட்டர் தண்ணீரில் போட்டு மண் சட்டியில் ஊற்றிக் காய்ச்சி வடிகட்டி அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை, மூன்று வேளை குடித்துவர நீரிழிவு நோய் முற்றும் நீங்கும்.

    கீழா நெல்லி 50 கிராம், மிளகு 25 கிராம், 1 லிட்டர் தண்ணீரில் தட்டிப் போட்டு 100 மி.லி ஆக சுண்ட வைத்துக் கொண்டு 100 மிளகுத் தூள் செய்து போட்டு அரை அவுன்ஸ் வீதம் காலை மாலை, குடித்துவர 3 வாரங்களில் நீரிழிவு நீங்கிவிடும்.

    ஆலம்பட்டை, ஆலமரத்து வேர்ப்பட்டை இவைகளை பச்சையாக வகைக்கு 50 கிராம் எடுத்து ஒரு மண் சட்டியில் போட்டு 1 குவளை நீர் விட்டு நன்றாக ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர நீரிழிவு குணமாகும். (ஆனால் நீண்ட நாள் இம்மருந்தைச் சாப்பிட்டு வரவேண்டும்)


    உலர்ந்த வெள்ளருகுச் சமூலம் 50 கிராம் எடுத்துப் பொன் வறுவலாக வறுத்து 2 லிட்டர் தண்ணீரில் போட்டு 100 மில்லியாக வற்ற வைத்து வேளைக்கு மிகையாக தினம் காலை, மாலை குடிக்க ஆரம்ப நீரிழிவு 10 நாட்களில் குணமாகும். (தினமும் புதிதாக இந்தக் கஷாயம் தயார் செய்து கொள்ள வேண்டும்).

    முள்ளங்கியைத் திருகி நிழலில் உலர்த்தி நெய், பனங்கற்கண்டு, தேன், பேரிச்சம் பழம் முதலியவை சேர்த்து லேகியமாகச் செய்து காலை, ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர நீரிழிவு நோய் விரைவில் குணமாகும்.

    நிறையக் கீரையைச் சமைத்துத் தினமும் பகல் உணவில் தொடர்ந்து உண்டு வரத் தணியாத தாகம் தணிந்து நீரிழிவு குணமாகும். 

    • அன்னங்களைப் பார்த்தவாறே சற்றுநேரம் அமைதியாய் இருந்த புத்தர், விழிகளை மூடி தியானத்தில் ஆழலானார்.
    • நம் மனமும் ஓர் ஏரிதான். அதன் இயல்பு எப்போதும் கலக்கமில்லாமல் தெளிந்து அமைதியாக இருப்பதுதான்.

    புத்தர் தன் சீடர்களுடன் பயணப்பட்டுச் சென்று கொண்டிருந்தார்.

    அவர்கள் செல்லும் வழியில் பூத்துக்குலுங்கும் மலர்வனம் ஒன்றும் சற்றுத் தொலைவில் ஓர் அழகிய ஏரியும் தென்பட்டன.

    மலர்வனத்தில் பலவண்ண மலர்கள் சிலுசிலுவென்று தென்றல் காற்றில் அசைந்தாடின. அந்தப் பிரதேசத்தின் இயற்கை அழகு பார்க்கும் எவர் மனத்தையும் கொள்ளை கொள்வதாக இருந்தது.

    மலர்வனத்தில் சற்றுநேரம் தங்கி தியானத்தில் ஈடுபடலாம் என முடிவு செய்தார் புத்தர். மலர்வனத்தின் நடுவே இருந்த அரச மரத்தின் நிழலில் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டார். அவரின் முகப்பொலிவு அந்த இடத்தையே பிரகாசப்படுத்தியது.

    அங்கிருந்து பார்த்தால் தொலைவில் இருந்த ஏரியின் அழகிய காட்சி தென்பட்டது. பற்பல வெள்ளை நிற அன்னங்கள் ஏரியில் உல்லாசமாக நீந்திக் கொண்டிருந்தன.

    அன்னங்களைப் பார்த்தவாறே சற்றுநேரம் அமைதியாய் இருந்த புத்தர், விழிகளை மூடி தியானத்தில் ஆழலானார். அவர் சீடர்களெல்லாம் எதிரே அமர்ந்து தியானம் செய்யலானார்கள்.

    அப்போது மலர்வனத்தின் வெளியே இருந்த மண்பாதை வழியே ஒருவன் ஓர் எருமை மாட்டை ஓட்டிக் கொண்டு சென்றான். அவன் மாட்டோடு ஏரியை நெருங்கினான். அந்த எருமையை ஏரித் தண்ணீரில் நீராட்டுவதே அவன் எண்ணம்.

    அவன் எருமையை ஏரியில் இறங்கச் செய்து ஏரித் தண்ணீரால் அதன் முதுகைச் சுத்தம் செய்யலானான். மிரட்சியுடன் அவனையும் எருமையையும் பார்த்த அன்னங்கள் அவன் இருந்த பகுதியை விட்டுவிட்டு ஏரியிலேயே சற்றுத் தூரத்தில் நீந்தத் தொடங்கின.

    இப்போது அதே பாதையில் வேகவேகமாக ஓடிவந்தான் இன்னொருவன். அவன் விழிகள் பரபரவென அங்குமிங்கும் பார்த்தன. அவன் பெரும் கலக்கத்தில் இருக்கிறான் என்பதை அவன் முகமே காட்டியது.

    திடீரென அவன் விழிகள் மலர்வனத்தை நோக்கின. அரச மரத்தடியில் தியானம் செய்தவாறு அமர்ந்திருந்த புத்தர்மேல் அவன் பார்வை பதிந்தது.

    யார் இந்தத் துறவி? செதுக்கி வைத்த சிலைபோல் அமர்ந்திருக்கிறாரே? எப்படித் தன் மனத்தை முழுமையாய்க் கட்டுப்படுத்தி அவரால் இப்படி அமர்ந்திருக்க முடிகிறது? தன் மனம் எண்ணற்ற நினைவுகளின் சுமையில் அலைபாய்கிறதே?

    அவர் மனம் பூரண சாந்தியுடன் இருக்கிறது என்பதைக் கள்ளம் கபடமற்ற அவரின் முகமே புலப்படுத்துகிறது. நினைவுகளின் சுமையில் இருந்து விடுபட்டு மனச்சாந்தி பெறுவது எப்படி என்பதை அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்வோம் என்று அவன், புத்தரை நோக்கி மெல்ல நடக்கலானான். அவரின் சீடர்களைத் தாண்டிச் சென்று முன்னே வந்து அமர்ந்துகொண்டான். புத்தர் எப்போது கண்மலர்வார் என வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.

    சிறிதுநேரம் சென்றது. தியானத்தை அப்போதைக்கு முடித்துக்கொண்ட புத்தர் மெல்லத் தன் விழிகளைத் திறந்தார். தன்னைத் தொடர்ந்து வரும் தன் சீடர் கூட்டத்தின் இடையே யார் இந்தப் புதியவன்?

    தன் முன்னே அமர்ந்திருந்த புதியவனைக் கருணை பொங்கப் பார்த்தார். `யாரப்பா நீ? உனக்கு என்ன வேண்டும்?` எனப் பரிவு பொங்கக் கேட்டார்.

    தன்னை யாராகிலும் ஒருவர் இப்படி அன்போடு கேட்கமாட்டாரா என்றே காத்திருந்தது போல் அவன் விம்மி விம்மி அழலானான்.

    புத்தர் அவன் அழுது முடிக்கும்வரை அமைதி காத்தார். பின் ஆறுதல் தொனிக்கும் சொற்களில் `ஏனப்பா அழுகிறாய்?` எனக் கேட்டார். அவன் விம்மியவாறே பேசலானான்:

    `சாமி. எனக்கு வாழ்வில் ஏராளமான கஷ்டங்கள். கடன் வாங்கி என் ஒரே மகளுக்கு விமரிசையாகத் திருமணம் செய்தேன். அவள் திடீரெனக் காலமாகிவிட்டாள். இடிபோல் தாக்கிய அந்த நிகழ்வால் என் மனைவிக்குப் பித்துப் பிடித்துவிட்டது. பொருளாதாரக் கஷ்டமும் அதிகமாகியுள்ளது.

    மகளின் திருமணத்திற்காக யாரிடமெல்லாம் கடன் வாங்கினேனோ அவர்கள் ஒன்றுகூடி என்னை நெருக்குகிறார்கள். என் மனம் கலங்கிக் குழம்புகிறது. நிம்மதியே இல்லை. இரவு தூக்கமில்லை.

    நான் எனக்குக் கடன் கொடுத்தவர்களிடம் தவணை வாங்கி, மெல்ல மெல்ல என் கடனை அடைத்துவிடுவேன். என் மனைவியையும் வைத்தியத்தால் குணப்படுத்தி விட முடியும். காலமான என் மகள் பற்றிய நினைவுகளும் காலப்போக்கில் மங்கும். இதெல்லாம் எனக்குப் புரிகிறது.

    ஆனால் இவை நடப்பதற்கு முன்னால் என் மனத்தின் அளவுகடந்த கலக்கத்தால் நான் என்ன ஆவேன் என்றே எனக்குத் தெரியவில்லை. நானும் என் மனைவிபோல் பைத்தியம் ஆவேனா அல்லது என் மகளைப் போல் இறந்தே போவேனா என இரவும் பகலும் எண்ணியெண்ணிக் குழம்புகிறேன்.

    நீங்கள்தான் என் மனக் கலக்கத்தில் இருந்து நான் விடுபட எனக்கு ஒரு வழி சொல்லவேண்டும்!`

    புத்தர் தாயன்போடு அவனையே சற்றுநேரம் பார்த்தவாறிருந்தார். பிறகு அவனைப் பார்ப்பதை விட்டுவிட்டு ஏரியைப் பார்க்கலானார்.

    எருமை மாட்டை நீராட்டியவன் இப்போது தன் பணியை முடித்திருந்தான். மெல்ல மாட்டை அழைத்துக் கொண்டு வந்த வழியே திரும்பிச் சென்றான்.

    சீடர்களிடம் ஒரு மண்பானையைக் கேட்டு வாங்கினார் புத்தர். பானையை கலக்கத்தோடு இருந்தவனின் கையில் கொடுத்தார்.

    அன்பனே! குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் வேண்டும். அங்கிருக்கும் ஏரிக்குச் சென்று இந்தப் பானை நிறையத் தண்ணீர் மொண்டு வா!

    அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தன் மனக் கலக்கத்தில் இருந்து விடுபட அறிவுரை கேட்டால் குடிப்பதற்குப் பானையில் நீர் கொண்டுவரச் சொல்கிறாரே?

    இருக்கட்டும். மாபெரும் ஞானி இவர் என்று பார்த்தாலே தெரிகிறது. இவருக்குப் பணிவிடை செய்வதால் ஒன்றும் கெட்டுவிடாது.

    `அப்படியே ஆகட்டும் சாமி!` என்ற அவன் பானையோடு ஏரியை நோக்கிச் சென்றான். இப்போது புத்தரும் அவரது சீடர்களும் ஏரியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    ஏரியில் நீர் சேந்துவதற்காகப் பானையைத் தண்ணீரில் அமிழ்த்தப் போன அவன் திகைத்தான். குடிப்பதற்கு அல்லவா நீர் கேட்டார் அந்த மகான்? இதென்ன ஏரிநீர் இப்படிச் சேறும் சகதியுமாகக் குழம்பிக் கிடக்கிறது? இதை எப்படிக் குடிநீராகக் கொண்டு கொடுப்பது?

    தயங்கிய அவன் வெறும் பானையோடு மறுபடி புத்தரைத் தேடி வந்தான். புத்தர் தண்ணீர் கிடைத்ததா என வினவினார்.

    `சாமி. யாரேனும் மாட்டைக் குளிப்பாட்டி இருக்க வேண்டும். எதனாலோ ஏரி நீர் சேறும் சகதியுமாகக் குழம்பியுள்ளது. குடிப்பதற்கு அது பயன்படாது!`

    புத்தர் அமைதி ததும்ப முறுவல் பூத்தார். பிறகு சீடர்களிடம் அவனுக்குச் சாப்பிடக் கனிகளைக் கொடுக்கச் சொன்னார். சீடர்கள் தாங்கள் வைத்திருந்த கனிகளில் சிலவற்றை அவனுக்கு வழங்கிப் பசியாறச் சொன்னார்கள்.

    அவர்களின் அன்பால் நெகிழ்ந்த அவன் கனிகளை உண்டு பசியாறினான். இப்படிக் கொஞ்ச நேரம் சென்றது.

    இப்போது புத்தர் அவனிடம் அதே மண்பானையைக் கொடுத்து ஏரியிலிருந்து குடிநீர் எடுத்து வருமாறு மீண்டும் பணித்தார்.

    குழம்பிய ஏரியில் இருந்து மறுபடியும் குடிநீரா எனத் தானும் குழம்பிய அவன், மகானின் சொல்லைத் தட்டக்கூடாது என்று எண்ணியவனாய் அதே ஏரிக்கு மறுபடி சென்றான்.

    என்ன ஆச்சரியம்! இப்போது ஏரி நீர் தெளிந்திருந்தது. சேறும் சகதியும் அதன் அடிப்பகுதியில் போய்ப் பதிந்து விட்டன. அன்னங்கள் முன்போலவே ஏரியின் எல்லாப் பகுதிகளிலும் நீந்தத் தொடங்கியிருந்தன.

    பானை நிறைய நீரை மொண்டுகொண்ட அவன் புத்தரை நோக்கி வந்தான். அவர் பாதங்களில் தண்ணீர் நிறைந்த பானையை வைத்துவிட்டு வணங்கி நின்றான். பரிவோடு அவனைப் பார்த்த புத்தர் அவனிடம் கேள்வி கேட்கலானார்:

    `அன்பனே! அப்போது குழம்பியிருந்த அதே ஏரியில்தானே இப்போது நீ தண்ணீர் எடுத்தாய்?`

    `ஆமாம் சாமி!`

    `அப்போது குழம்பியிருந்த ஏரி இப்போது தெளிந்திருந்தது அல்லவா?`

    `ஆமாம்.`

    `அதைத் தெளியவைக்க நீ என்ன செய்தாய்?`

    நான் ஒன்றுமே செய்யவில்லை சாமி. குழம்பிய ஏரி சற்றுநேரம் சென்றதும் தானாய்த் தெளிந்து விட்டது. 

    திருப்பூர் கிருஷ்ணன்

    திருப்பூர் கிருஷ்ணன்

    `அன்பனே! நம் மனமும் ஓர் ஏரிதான். அதன் இயல்பு எப்போதும் கலக்கமில்லாமல் தெளிந்து அமைதியாக இருப்பதுதான். ஆனால் நினைவுகள் என்ற எருமைகள் நம் மன ஏரியைக் கலக்கிக் குழப்புகின்றன.

    அப்போது மீண்டும் மீண்டும் எதையாவது நினைத்துக் குழம்பாமல் அமைதியாக இருந்தால் போதும். நினைவுச் சகடுகள் தானே அடங்கிவிடும். மனத்தில் அதன் இயல்பான சாந்தி மீண்டும் வெளிப்பட்டுத் தோன்றும்.

    நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நாம் கட்டுப்படுத்த இயலாது. ஆனால் நம் மனத்தை நாம் கட்டுப்படுத்த முடியும்.

    எதையும் பொருட்படுத்தாமல் இருந்தால் ஏரி தானே தெளிந்ததுபோல் நம் மனமும் தானே அமைதியாகித் தெளிவடையும். தெளிவடைந்த அமைதியான மனம் உடையவர்களுக்கு எந்தக் கவலையும் தோன்றாது. அவர்கள் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும்.

    மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்யவேண்டாம். அதை அப்படியே விட்டு விட்டால் போதும்.

    சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அது தனக்குத்தானே சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. மனதை சமாதானப்படுத்தும் விதத்தைப் பற்றிச் சிந்திக்கவும் வேண்டாம். அது தன்னிச்சையாக. நம்முடைய முயற்சியின்றி நடக்கும்.

    புத்தரின் விளக்கத்தைக் கேட்ட அவன் பிரமிப்பில் ஆழ்ந்தான். புத்தரின் உபதேசத்தைக் கூர்மையாய்க் கேட்டுக்கொண்டார்கள் சீடர்கள்.

    `வாழ்வின் இந்த அடிப்படை உண்மையை உங்கள் அருளால் இன்று புரிந்துகொண்டேன் சாமி!` என்றான் அவன். அவனது விழிகளில் பக்திக் கண்ணீர் வழிந்தது.

    தொடர்புக்கு:

    thiruppurkrishnan@gmail.com

    • ஆப்பிள் கணினி இல்லாத இடமே உலகில் இப்போது இல்லை.
    • பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் ஸ்டீவ்ஸ் ஆரேகானில் ரீட் கல்லூரியில் சேர்ந்தார்.

    ஆப்பிள் எப்படி இருக்கிறது?

    ஆப்பிள் எப்படி இருக்கிறது என்று கேட்டால் அந்தக் காலத்தில் சுவையாக இருக்கிறது என்று பதில் வரும்!

    அதே கேள்வியை இந்தக் காலத்தில் மாணவ மாணவியரிடம் கேட்டுப் பாருங்கள், "பிரமாதமா இருக்கு, எல்லா வேலையையும் பாஸ்டா செய்யுது" என்று சொல்வார்கள்.

    ஆப்பிள் கணினி இல்லாத இடமே உலகில் இப்போது இல்லை.

    அத்தோடு உங்கள் கையில் இருக்கும் ஐபாட், ஐபோன் இவற்றையெல்லாம் உலகிற்கு அளித்து உலகின் போக்கையே மாற்றிய ஒருவர் யார் தெரியுமா? அவர் தான் ஸ்டீவ் ஜாப்ஸ்!

    நவீன சாதனங்களைப் பயன்படுத்தி வாழ்க்கையில் நாளும் முன்னேறுபவர்கள், இசை கேட்டு அனுபவிப்பவர்கள், குடும்பம், உறவு, நண்பர்களிடம் பேசி மகிழ்பவர்கள் ஆகிய அனைவரும் நன்றி சொல்ல வேண்டியது இந்த அமெரிக்கருக்குத் தான்!

    பிறப்பும் இளமையும்: ஸ்டீவ் ஜாப்ஸ் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் 1955-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி பிறந்தார்.

    சிரியாவில் பிறந்த அப்துல்பட்டா ஜான் ஜண்டலிக்கும், ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த அமெரிக்கரான ஜோன் கரோல் ஷியபிளுக்கும் அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த போது, திருமணமாகாத நிலையில் பிறந்தவர் தான் ஸ்டீவ் ஜாப்ஸ். இருவரும் ஜாப்ஸை தத்துக் கொடுக்க முடிவு செய்தனர்.

    அதன் படி பால் ரெய்ன்ஹோல்ட் ஜாப்சுக்கும் அவர் மனைவி கிளாரா ஜாப்சுக்கும் குழந்தை தத்து கொடுக்கப்பட்டது. பால் ஒரு மெக்கானிக். தச்சு வேலை செய்ததால் அவர் ஒரு கார்பெண்டரும் கூட! தனது பையன் ஸ்டீவ்சுக்கு அவர் அடிப்படை எலக்ட்ரானிக்ஸைக் கற்றுத் தந்தார். ரேடியோ, டெலிவிஷன் பெட்டிகளில் இருந்து பாகங்களை எப்படிப் பிரிப்பது, அவற்றை எப்படி மீண்டும் இணைப்பது என்பதை அவர் சொல்லித் தரவே ஸ்டீவ்சுக்கு எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் மீது ஒரு அபாரமான ஈடுபாடு ஏற்பட்டது.

    பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் ஸ்டீவ்ஸ் ஆரேகானில் ரீட் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் அங்கு கட்டணம் மிக அதிகம்; அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஆறே மாதங்களில் அதை விட்டு வெளியேறினார். அடுத்த 18 மாதங்களில் தன் கையெழுத்து வன்மையைக் காட்டிப் பல்வேறு விதமாக எழுதுவதை க்ரியேடிவாகச் செய்ய ஆரம்பித்தார்.

    இந்தியாவிற்கு வருகை: இந்த நிலையில் அவருக்கு ஆன்மீக தாகம் ஏற்பட்டது. ஆகவே இந்தியாவிற்கு 1974-ம் ஆண்டு வந்தார். டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பஸ்சில் செல்வது அவரது வழக்கம்.

    அவர் நாடி வந்த நீம் கரோலி பாபாவோ 1973-ம் ஆண்டு செப்டம்பர் மாதமே மரணம் அடைந்திருந்தார். ஆகவே அவர் ஹைடகன் பாபாஜி என்ற இன்னொரு மகானைச் சந்தித்தார். ஏழு மாதங்கள் இந்தியாவில் இருந்து விட்டு தியான முறைகளைக் கற்ற பின்னர் அமெரிக்கா திரும்பினார் ஸ்டீவ்ஸ்.

    புத்த மதத்தின் ஜென் பிரிவில் அவருக்கு அபார ஈடுபாடு ஏற்பட்டது. வாழ்க்கையின் இறுதி வரை ஜஜென் என்னும் தியான முறையில் அவர் ஈடுபட்டார்.

    ஆப்பிள் நிறுவனத்தின் தோற்றம்:

    எலக்ட்ரானிக்சில் நிபுணரான அவர் வீடியோ கேம்களுக்கான சர்க்யூட் போர்டைத் தயாரிக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் தான் அவருக்கு வோஜ்னியக் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவருடன் இணைந்து தொலைபேசி நெட் ஒர்க்கிற்கான ப்ளூ பாக்ஸ்களை செய்ய ஆரம்பித்தார். இதுவே ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை நிறுவுவதற்கான அடிப்படையாக அமைந்தது. 1976-ம் ஆண்டு ஸ்டீவிசின் வீட்டிலிருந்த ஒரு காரேஜில் ஆப்பிள் கணினி நிறுவனம் வோஜ்னிக் மற்றும் ரொனால்ட் வெய்ன் ஆகியோருடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டது.


    மளமளவென்று உயர்ந்த நிறுவனத்தில் 1984-ம் ஆண்டு அதிகாரப் போட்டி ஏற்பட்டது. ஸ்டீவ்ஸ் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். மனம் தளராத அவர் நெக்ஸ்ட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து வெற்றி நடை போட ஆரம்பித்தார். ஆப்பிள் நிறுவனம் நலிவடைந்து விடவே, 1997-ம் ஆண்டு ஸ்டீவ்ஸ் மீண்டும் ஆப்பிளின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அதை உலகின் தலை சிறந்த நிறுவனமாக ஆக்க முயற்சிகளை மேற்கொண்டார். ஐபாட், ஐபோன் என உலகமே அவரது அறிமுகப்படைப்புகளால் "ஆட்டம்" போட ஆரம்பித்தது. அவரைப் பற்றிய நூற்றுக் கணக்கான அதிசய சம்பவங்கள் உண்டு. எடுத்துக்காட்டிற்கு ஒன்றாக இதைச் சொல்லலாம்:

    கார் நம்பர் பிளேட் பொருத்துவதைப் பற்றி கலிபோர்னியாவில் ஒரு விசித்திரமான விதி உண்டு. நம்பர் வழங்கிய பின்னர் ஆறு மாதம் வரை புது காரில் நம்பர் பிளேட்டைப் பொருத்தாமல் ஓட்டலாம். இந்த விதியைப் பயன்படுத்திக் கொண்ட ஸ்டீவ் ஜாப்ஸ் ஒவ்வொரு மாதமும் புதுக் காரை அதே மாடலில் மாற்றிக் கொண்டே இருந்தார். ஆகவே அவரது மெர்ஸிடஸ் பென்ஸ் SL 55 AMG மாடல் காரில் ஒரு போதும் நம்பர் பிளேட்டை அவர் பொருத்தியதே இல்லை! இதற்கான காரணம் என்ன என்பது யாருக்கும் தெரியாது! ஒருவேளை 'வித்தியாசமாக யோசி' என்ற அவரது வாழ்க்கை தாரக மந்திரமே இதற்கு காரணமாக இருந்திருக்கலாம்!!

    உலகின் மிகச் சிறந்த உரை: ஸ்டான்போர்டில் 2005 ஜூன் மாதம் 12-ம் தேதி அவர் ஆற்றிய உரை உலகின் மிகச் சிறந்த உரைகளில் ஒன்றாக அனைவராலும் போற்றப்படுகிறது. அதில் அவர் தன் வாழ்க்கையை மூன்று கதைகளில் சுருக்கமாக வர்ணித்திருந்தார். முதல் கதை– புள்ளிகளை இணைப்பது. இதில் ஸ்டீவ்ஸ் தான் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருந்தது பற்றியும் வீட்டின் தரையில் படுத்திருந்து, கோவில்களில் சாப்பிட்டு அநேக வித கஷ்டங்களுக்கு உள்ளானதை விவரித்து அதனால் உள்ளுணர்வையும் தன்னம்பிக்கையையும் பெற்றதை விவரிக்கிறார். பத்து ஆண்டு கடினமாக உழைத்து மெகின் டோஷ் கம்ப்யூட்டரை வடிவமைத்ததையும் அவர் உருக்கமாக எடுத்துரைத்தார்

    இரண்டாவது கதை – காதலும் இழப்பும் (Love and Loss) பற்றிய கதை: இதில் இருபதாம் வயதில் ஆப்பிள் நிறுவனத்தை துவங்கிய அவர் பத்தே ஆண்டுகளில் 200 கோடி டாலர்கள் சம்பாதித்து 4000 பேரை வேலையில் அமர்த்த முடிந்ததை நினைவு கூர்கிறார். "முப்பது வயதில் என்னுள் எழுந்த வெறிக்கு அளவே இல்லை. ஆனால் என் நிறுவனத்தில் இருந்தே நான் வெளியேற்றப்பட்டேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நெக்ஸ்ட் மற்றும் பிக்சர் ஆகிய நிறுவனங்களைத் தோற்றுவித்தேன்", என்று தெரிவித்த அவர், பிரபலமான அனிமேஷன் திரைப்படமான டாய் ஸ்டோரி உருவான கதையைத் தெரிவித்தார். நெக்ஸ்ட் நிறுவனத்தை ஆப்பிள் விலைக்கு வாங்கியதையும் தான் மீண்டும் ஆப்பிளுடன் இணைந்ததையும் அவர் இரண்டாம் கதையில் நினைவு கூர்கிறார்.

    அடுத்து மூன்றாவது கதை இறப்பு. இதில் அவருக்குப் பிடித்த வாசகமான, "ஒவ்வொரு நாளையும் உங்கள் வாழ்வின் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்தால் ஒரு நாள் நீங்கள் நினைப்பது சரியாகி விடும். இன்று தான் எனது வாழ்க்கையின் கடைசி நாள் என்றால் நான் இன்று செய்ய நினைப்பதைச் செய்ய விரும்புவேனா என்று ஒவ்வொரு நாள் காலையும் என்னைக் கண்ணாடியில் பார்த்துக் கேட்பேன்" என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

    ச.நாகராஜன்

    ச.நாகராஜன்

    கணையம் என்றால் என்ன என்றே தெரியாத தனக்குக் கணையத்தில் புற்று நோய் வந்ததை அவர் உருக்கமாகக் குறிப்பிட்டு, டாக்டர்கள் இது குணப்படுத்த முடியாத வியாதி. நீங்கள் இன்னும் மூன்று அல்லது அதிக பட்சம் ஆறு மாதங்கள் மட்டுமே வாழ முடியும் என்று கூறியதைச் சொல்லி தான் வாழ்நாளின் இறுதியை நோக்கிச் செல்வதை வெளிப்படுத்தினார். அத்துடன் இறுதியில், "உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறைவு. ஆகவே அதை வீணாக்காதீர்கள். மற்றவர்கள் கூறியவற்றை வேதவாக்காக நினைத்து வாழ்க்கையை நிர்ணயிக்காமல் உங்கள் உள்ளுணர்விற்கு மதிப்பளியுங்கள் என்று அறிவுரை பகர்ந்தார். பசியோடு இருங்கள்; புதிய சிந்தனைகளோடு வாழுங்கள் என்ற முத்திரை வாசகத்துடன் தன் உரையை அவர் முடித்தார்.

    சிறப்பான கருத்துக்களை அனுபவத்தின் வாயிலாக உருக்கமாக பேசி அனைவரையும் உருக வைத்த அவரது உரை இன்று வரை அறிஞர்களால், இளைஞர்களுக்கும் கணினி துறையில் நுழைவோருக்கும் மேற்கோளாகச் சுட்டிக் காட்டப்பட்டு வருகிறது.

    தனது முதல் கணினியின் விலையை 666 டாலர் என அவர் நிர்ணயித்தார். இது கிறிஸ்தவக் கொள்கையின் படி பாவகரமான எண் என்றும் சாத்தானின் எண் என்றும் பலரும் அவதூறைப் பரப்பினர். ஆனால் அவரோ அசரவே இல்லை.

    666 டாலரில் ஒரு கணினியின் விலை என்று ஆரம்பித்து 2014இல், 666 பில்லியன் டாலர்களை நிறுவனத்தின் மொத்த மதிப்பாக இருக்கும் அளவு அவர் ஆப்பிள் நிறுவனத்தை உயர்த்தினார்.

    ஆப்பிள் நிறுவனத்தில் ஸ்டீவ் ஜாப்சின் சம்பளம் ஒரு ஆண்டிற்கு ஒரே ஒரு டாலர் தான்! உலகின் எந்த தலைமை அதிகாரியும் இப்படி ஒரு சம்பளத்தைப் பெற்றதாக சரித்திரமே இல்லை! பின்னால் இதைப் பின்பற்றி பேஸ் புக்கின் தலைமை அதிகாரியான மார்க் ஜுகர்பெர்க்கும் ஆண்டிற்கு ஒரு டாலர் சம்பளம் பெறுவதை வழக்கமாகக் கொண்டார். 55 லட்சம் ஷேர்களைக் கொண்டு 2011-ல் ஒவ்வொரு பங்கிற்கும் 377 டாலரை மதிப்பாகக் கொண்ட ஆப்பிள் பங்குகள் அவரிடம் இருந்ததால், "தான் வாங்கிய சம்பளத்தில் பெரிதாக இழப்பு ஒன்றும் இல்லை" என்று அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். "ஆண்டுக்கு 50 செண்ட்களை என் முகத்தைக் காட்டுவதற்காகவும் இன்னும் ஒரு 50 செண்ட்களை எனது திறனுக்காகவும் நான் பெற்றேன்" என்றார் அவர்!

    2003-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவருக்கு கணையத்தில் புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற டாக்டர்களின் யோசனையை ஸ்டீவ்ஸ் முதலில் மறுத்து வந்தார். பின்னால் இதற்காகப் பெரிதும் வருந்தினார்.

    மறைவும் வாழ்க்கைத் தத்துவமும்: புதிதாகக் கணையம் பதியம் செய்யப்பட்ட போதும் கூட அவரால் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை. 2011-ம் ஆண்டு அக்டோபர் 5-ந் தேதி மதியம் 3 மணிக்கு அவர் இல்லத்திலேயே காலமானார். உலகின் அனைத்துத் தரப்பு மக்களும் அவரது மறைவிற்கு இரங்கினர்.

    தனது முன்னேற்றம் பற்றி அவர் ஒரு முறை கூறினார் இப்படி: "சில சமயம் வாழ்க்கை, உங்கள் தலையைச் செங்கல்லால் அடிக்கும். நம்பிக்கையை இழக்காதீர்கள்! நான் செய்ததை எல்லாம் நான் நேசித்துச் செய்தேன் என்ற ஒன்று தான் என்னை முன்னேற வைத்தது என்பது மட்டும் நிச்சயம்!"

    ஸ்டீவ் ஜாப்ஸின் இந்த வார்த்தைகளே அவர் வாழ்க்கையில் வெற்றி பெற மேற்கொண்ட வாழ்க்கைத் தத்துவம் என்று கொள்ளலாம்.

    ஆப்பிள் கணினி, ஐபாட், ஐபோன் மற்றும் அதன் நவீன மாற்றங்களுடனான சாதனங்கள் உலகில் இருக்கும் வரை ஸ்டீவ் ஜாப்சின் பெயரும் நிலைத்திருக்கும் அல்லவா!

    எதையும் நேசித்து செய்து வெற்றி பெற்ற இந்த மனிதரை உலகம் நேசிப்பதில் என்ன வியப்பு இருக்கிறது?

    தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

    ×