என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

அமெரிக்காவில் சவாலான குழந்தை வளர்ப்பு
- 6 மணிக்கு மேல் பராமரிப்பு தேவையென்றால், ஒவ்வொரு நிமிடமும் $1 அதிகமாகக் கட்டணம் செலுத்தவேண்டி இருக்கும்.
- இளம் வயதிலேயே குழந்தை பெற்றுக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளும் படிப்பு, பணி காரணமாக தனியாக வெளிநாடுகளில் சென்று வருடக் கணக்கில் தங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள். அதிகக் கட்டுப்பாடுடன் வளரும் குழந்தைகள், முதல் முறையாக முழுமையான சுதந்திரம் பெறும்போது, காணாததைக் கண்டது போன்ற ஒரு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அது அவர்களின் வாழ்க்கைச் சூழல் மட்டுமன்றி பெற்றோரின் கனவு, நம்முடைய இந்தியப் பண்பாடு கலாச்சாரம் அத்தனையையும் பதம் பார்த்துவிடுகிறது.
அந்த வகையில் குழந்தை வளர்ப்பு என்பது தற்காலங்களில் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் பெரும் சவாலாகத்தான் இருக்கிறது. குறிப்பாக அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் கூட்டுக்குடும்பம் என்ற வாழ்க்கை முறை முற்றிலும் அந்நியமாகிப்போன நிலையில் குழந்தைகளின் பராமரிப்பு பெரும்பாலும் கேள்விக்குறியாகிவிடுகிறது. இன்றைய வாழ்க்கை முறையில் கணவன் மனைவி என இருவரும் வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அடிப்படையிலேயே அங்குள்ள பெண்களுக்கு பொருளாதாரச் சுதந்திரம் என்பது முக்கியத் தேவையாக உள்ளது. சிறார்கள் தங்கள் 14 வயதிலேயே வேலைக்குச் செல்ல வாய்ப்பிருக்கும் நிலையில் பள்ளிக் காலங்களிலேயே ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைவரும் பெரும்பாலும் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கேனும் சம்பாதிக்க முனைகிறார்கள்.
இளம் வயதிலேயே குழந்தை பெற்றுக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். சிலர் ஓராண்டு வரையிலாவது குழந்தையை வீட்டிலிருந்து பார்த்துக் கொள்கிறார்கள். மற்றபடி குழந்தைகள் பெரும்பாலும் பாதுகாப்பு விடுதிகளில்தான் வளர்கிறார்கள்.
இங்கு பெண்கள் பெரும்பாலும் குழந்தைகள் பாதுகாப்பு விடுதி நடத்துவதை முக்கியத் தொழிலாகவேக் கொண்டுள்ளார்கள். பெரிய அளவில் நடத்துபவர்கள் அதற்கென்று தனிப்பட்ட வளாகத்தில் சகல வசதிகளுடன் காப்பகம் வைத்துள்ளார்கள். குழந்தைகளின் வயதிற்கேற்றவாறு தனித்தனி பாதுகாவலர்களையும் நியமித்துக் கொள்கிறார்கள். சிறிய அளவிலும் குடியிருக்கும் வீட்டிலேயே ஒரு சில குழந்தைகளைப் பாதுகாக்கும் பணியையும் மேற்கொள் கிறார்கள். இதில் முக்கியமான ஒரு விசயம் நம் இந்தியர்கள் பெரும்பாலும் அமெரிக்கர்கள் நடத்தும் விடுதியைவிட, இந்தியர்கள் நடத்தும் விடுதியிலேயே தங்கள் குழந்தையைச் சேர்க்க விரும்புகிறார்கள். அதேபோன்று அமெரிக்கர்களும் இதே நிலையில்தான் இருக்கிறார்கள். காரணம் கலாச்சார இடைவெளிதான். கலாச்சாரங்களுக்கு ஏற்றவாறு உணவுப் பழக்கங்களிலும் மாற்றம் ஏற்படுவதும் இயற்கைதானே.
உலகின் பெரும்பாலான பகுதிகளைப் போலவே அமெரிக்காவிலும் பெற்றோர் இருவரும் வேலை செய்வதால், குழந்தைகளை பள்ளி முடிந்ததும், தாங்கள் வேலை முடிந்து வரும்வரை கிட்டத்தட்ட மாலை 3 முதல் 6 மணி வரை 3 மணி நேரம் இணைக்கப்பட்ட பள்ளியில் பராமரிப்பை ஏற்கிறார்கள். 3 மணிநேரத்திற்கு ஒரு குழந்தைக்கு மாதத்திற்கு ஏறத்தாழ $900 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள்.
6 மணிக்கு மேல் பராமரிப்பு தேவையென்றால், ஒவ்வொரு நிமிடமும் $1 அதிகமாகக் கட்டணம் செலுத்தவேண்டி இருக்கும். பெரும்பான்மையானவர்கள் ஒற்றைத் தாயாக இருப்பதால் வாழ்வாதாரத்திற்காக உழைப்பதுடன் குழந்தை பராமரிப்பும் பெரும் சவாலாகவே உள்ளது. வெகுசிலரே தங்களின் பெற்றோரின் உதவியைப் பெற்று 2 குழந்தைகளுக்கு கிட்டத்தட்ட $1800 சேமிக்க முயல்கிறார்கள். இந்தியாவிலும் தெற்காசிய நாடுகளிலும் இதுபோன்ற நடைமுறைகள் மிகவும் பலனளிப்பதைக் காணமுடிகின்றது.
சில குழந்தைகள் 9-ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து வேலை செய்யத் தொடங்குகிறார்கள். அரசுப் பள்ளிகளில் தரமான இலவசக் கல்வி கிடைத்தாலும் பல்கலைக்கழகக் கல்விக் கட்டணம் அதிகமாக உள்ளதால் ஒற்றைத் தாயால் அதைச் சமாளிக்க முடிவதில்லை. பெரும்பாலானக் குழந்தைகள் பள்ளிக் கல்வியோடு கல்வியை முடித்துவிட்டு பணிக்குச் செல்லத் தயாராகிறார்கள். பல்வேறு துணைக் கலாச்சாரங்களைக் கொண்டுள்ள இந்நாட்டில் அனைத்து அமெரிக்கர்களுக்கும் பொதுவான பெற்றோருக்குரிய முறை என்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. பொருளாதாரத்திற்கும், சமூக சுதந்திரத்திற்காகவும் தங்கள் குழந்தைகளை இளம் வயது முதலே தயார்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றனர். தங்கள் பிள்ளைகள் வளர வளர அவர்களுக்குப் பொறுப்புகளையும், சுதந்திரங்களையும் வழங்க முனைகின்றனர். குழந்தையின் திறன்கள், ஆர்வங்களின் அடிப்படையில் தங்கள் குழந்தைகள் சமூக, கல்வி, கலை, விளையாட்டு என வெற்றிகளுக்கு இடையில் சமநிலையில் இருக்க விரும்புகிறார்கள். அவர்களுக்கான வெற்றிப்பாதையை அமைப்பதில் பெரு முயற்சி எடுக்கவும் முனைகிறார்கள். அமெரிக்கப் பெற்றோர்கள் பொதுவாக தங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதில் தெளிவான கருத்து கொண்டவர்களாக இருக்கின்றனர்.
பொதுவாகக் குழந்தைகள் எளிதாகத் தாங்கள் வாழும் இடங்களுக்குத் தகுந்தவாரு தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்கிறார்கள். நாகரிகத்தில் பெரிதும் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில், நம் நாட்டின் சூழலில் வளர்ந்த பெற்றோர்களின் குழந்தைகள் அங்கிருக்கும் குழந்தைகள் போல நடந்து கொள்ளும்போது அந்தப் பெற்றோர்களுக்கு அதன் தாக்கம் சற்று அதிகமாகத்தான் இருக்கும் என்பதற்கான எடுத்துக்காட்டுதான் கீழ்கண்ட இந்த சம்பவம்.
சந்துரு, தம் 8 வயது மகனை, "ஏன் எப்பொழுது பார்த்தாலும் வீடியோ கேம் விளையாடிக் கொண்டேயிருக்கிறாய். ." என்று கேட்கப்போக, அவன் அதைத் துளியும் சட்டை செய்யாமல் தன் விளையாட்டில் கவனமாக இருந்திருக்கிறான். பல முறை கேட்டும் பதில் இல்லாதலால், கோபம் தலைக்கேற, தந்தை தன் மகனின் முதுகில் ஒரு தட்டு தட்டி விட்டார். அவ்வளவுதான். மளமளவென எழுந்து சென்ற அந்தச் சிறுவன் நேரே போய் ஒருவரும் சற்றும் எதிர்பாராத வகையில், தொலைபேசியை எடுத்து 911 என்ற எண்ணிற்கு அழைப்பு விடுத்துவிட்டான்… இது அமெரிக்க நாடுகளில் சர்வ சாதாரணமாக நடக்கக்கூடிய நிகழ்வுதான் என்றாலும், மகன் செய்த செயலால் நொடியில் அந்தக் குடும்பமே ஆடிப்போய்விட்டது.
911 என்பது அமெரிக்கா நாடுகளுக்கான அவசரகாலச் சூழ்நிலைகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் தொலைபேசி எண். வேறு எந்த நோக்கத்திற்காகவும் இதைப் பயன்படுத்துவது சட்டப்படிக் குற்றம். 911 அழைப்பைத் தவறாகப் பயன்படுத்துதல் தண்டனைக்குரிய செயலாகும். இதற்கு அதிகப்படியான அபராதமும், சிறைவாசமும் அளிக்கப்படலாம்.
சந்துருவின் குழந்தை இந்த 911 எண்ணிற்கு அழைப்பு விடுத்த சில மணித்துளிகளில் காவல்துறையினர் வரவும், அதற்குள் கணவனும், மனைவியும் மகனிடம் காலில் விழாதக் குறையாக மன்னிப்புக் கேட்டு, அவனை காவலர்களிடம் தெரியாமல் எண்ணை அழுத்தி விட்டதாகச் சொல்லச் சொல்லி கெஞ்சிக் கேட்டு சம்மதிக்க வைப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டதை சொல்லி ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்ததை, துளியும் கவலை இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் சம்பந்தப்பட்ட அந்த குழந்தை. இதுபோன்று தவறான பழக்க வழக்கங்களும், அதிகப்படியான சுதந்திரமும் பெற்றோருக்கு அச்சமூட்டுவதாக இருக்கிறது. பெண் குழந்தைகளின் வளர்ப்பு மேலும் கருத்தில் கொள்ளத்தக்கது.
குழந்தைகள் பள்ளிப் பேருந்தில், ஒவ்வொரு தெரு முனையிலும் பொறுமையாக நின்று குழந்தைகளை ஏற்றிச் செல்வதிலாகட்டும், பெற்றவர்களோ அல்லது பொறுப்பாளர்களோ உடன் இல்லாமல் பேருந்தில் ஏற்றவோ, இறக்கி விடவோ முடியாது என்பதில் உறுதியாக இருப்பதும் போன்று எத்தனையோ விசயங்கள் ஆச்சரிய மேற்படுத்தக்கூடியது.
- பவள சங்கரி






