என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    முதுமையில் உடல் பருமனும், தீர்வுகளும்
    X

    முதுமையில் உடல் பருமனும், தீர்வுகளும்

    • உடல் பருமனுக்கு சில நோய்நிலைகளும் காரணமாக உள்ளன.
    • முதுமையில் உணவுக்கட்டுப்பாடு என்பது ஆரோக்கியத்திற்கும், ஆயுளுக்கும் மிக மிக அவசியம்.

    "பசித்த பின் புசி" என்பது வழக்கு மொழி. ஆனால் மூன்று வேளைக்கும் மருந்து உட்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், பசியில்லாமலே உணவை உட்கொள்வது முதுமையில் வாடிக்கை. இது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். முதுமையில் சேரக்கூடாத ஒன்று உடல் எடை. ஏனெனில் உடல் பருமன் பல்வேறு நோய்நிலைகளோடு தொடர்புடையது.

    உடல் பருமன் எனும் ஒரு நோய்நிலையானது சர்க்கரை நோய், புற்றுநோய், மிகை ரத்த அழுத்தம், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள், பித்தப்பை கல்லடைப்பு, பக்க வாதம் போன்ற பல்வேறு நாட்பட்ட நோய்களோடு கைகோர்த்து, முதுமையை வருத்தும். ஆயுளைக் குறைக்கும்.

    முதுமையில் முழங்கால் மூட்டு வலி வருவதற்கான முக்கிய காரணங்களுள் உடல் பருமன் ஒன்றாக உள்ளது. ஏனெனில் உடலின் மொத்த எடையைத் தாங்க வேண்டிய பொறுப்பு நமது முழங்கால் மூட்டுகளுக்கு உள்ளது. ஏற்கனவே மூட்டுக்கள் தேய்மானம் அடைந்த நிலையில், அதன் மேல் கூடுதல் பாரம் ஏற்றுவது மூட்டுக்களை மேலும் துன்புறுத்துவதற்கு நிகர். எனவே உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்வது மூட்டுகளுக்கும் நல்லது.

    உடல் பருமனுக்கு சில நோய்நிலைகளும் காரணமாக உள்ளன. எனவே முதுமையில் உடல் பருமனுக்கு காரணமான நோய்நிலையை கண்டறிவதும் அவசியம். அதிமுக்கியமாக தைராய்டு சுரப்பு கோளாறு (ஹைபோ தைராய்டு நிலை) மற்றும் ஹார்மோன் சுரப்பிகளின் கோளாறுகள் அதில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.


    மேலும் முதுமையில் பல்வேறு நோய்நிலைகளுக்கு எடுத்துக்கொள்ளும் ஸ்டீராய்டுகள், வலிப்பு மருந்துகள், மன அழுத்தம் போக்கும் மருந்துகளும், நீரிழிவு கட்டுப்பட வழங்கும் சில மாத்திரைகளும் உடல் பருமன் உண்டாக காரணமாவதால், மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி எடுப்பதே நல்லது. பல வருடங்களுக்கு முன்னர் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை ஆலோசனை இல்லாமல் தாங்களாகவே எடுப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

    உடல் பருமனுக்கு ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பதும் காரணமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்பு செல்களில் உற்பத்தியாகும் 'அடிபோகைன்' எனும் வேதிக்காரணிகள் இன்சுலின் எதிர்ப்பை உண்டாக்கி, சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் வரும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. இதனால் உடலின் உள்ளுறுப்புகளில் படியும் கொழுப்பு பல்வேறு தொந்தரவுகளை உண்டாக்கிவிடும். எனவே உடலில் கொழுப்பு படியாமல் பார்த்துக்கொள்வது உடல் நலத்திற்கு நல்லது.

    சித்த மருத்துவம் கூறும் கபம் தான் உடல் பருமனுக்கு முக்கிய காரணமாகிறது. உடலில் கபம் அதிகரிப்பதே கொழுப்பு அதிகமாகும் நிலைக்கு அடித்தளமிடுகிறது. 'எத்திய ஐயம் எழுந்திடிற் கிட்டாதே' என்கிறது திருமூலரின் திருமந்திரம். அதாவது 'ஐயம்' எனும் கபம் கூடினால் மருந்துகளுக்கு நோய் வசப்படாது என்பது பொருள். ஆகவே முதுமையில் கொழுப்பு எனும் கபம் உடலில் அதிகரிக்காமல் தடுக்கும் சித்த மருந்துகளை நாடுவது ஆயுளைக் கூட்டும்.

    சித்த மருத்துவத்தில் 'தூல ரோகம்' என்று சொல்லப்படும் உடல் பருமனை குறைக்க பல்வேறு மூலிகைகள் சொல்லப்பட்டுள்ளன. சித்த மருத்துவ மூலிகைகளான கடுக்காய், நிலாவாரை, மரமஞ்சள், குங்கிலியம், கொள்ளு, மந்தாரை, கோடாம்புளி, திரிபலை ஆகியனவும், வெந்தயம், பூண்டு, சீரகம், சோம்பு, கொத்துமல்லி விதை (தனியா), சீரகம், மஞ்சள், சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்த திரிகடுகு ஆகிய அஞ்சறைப்பெட்டி சரக்குகளும் உடலில் கொழுப்பினைக் குறைத்து உடல் பருமனைக் குறைக்க உதவுவதாக உள்ளன.


    கோடாம்புளி எனும் பழம்புளி தற்காலத்தில் உடல் எடை குறைக்க உலகம் முழுவதிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள எச்.சி.ஏ எனும் ஹைட்ராக்சி சிட்ரிக் அமிலம் எனும் வேதிப்பொருள் அதிக பசியைத் தடுப்பதோடு, அதில் உள்ள 'கார்சினால்' வேதிப்பொருள் உடலில் உள்ள கொழுப்பினைக் குறைக்க உதவுவதாக உள்ளன. எனவே இந்த பழம்புளியை சாதாரண புளிக்கு பதிலாக ரசத்தில் பயன்படுத்த உடல் பருமன் குறைய உதவும்.

    கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த திரிபலை சூரணம் முதுமையில் பல்வேறு நோய்களுக்கு பலன் அளிக்கக்கூடியது. உடல் எடையைக் குறைக்க தினமும் இரவில் ஒரு தேக்கரண்டி அளவுக்கு திரிபலை சூரணம் வெந்நீரில் கலந்து தொடர்ந்து எடுத்து வர பயன் தரும். அல்லது கடுக்காய் எனும் கபத்தைக் குறைக்கும் மூலிகையை இரவில் எடுத்துக்கொள்வதும் நல்லது.

    இன்னும் சில மூலிகைகள் இன்றைய நவீன அறிவியல் சுட்டிக்காட்டும் கணையத்தில் உள்ள 'லிபேஸ்' எனும் நொதியின் செயல்பாட்டை தடுத்து உடல் பருமனைக் குறைக்க வழி வகை செய்வதாக உள்ளன. ஆவாரை, லவங்கப்பட்டை, சோம்பு, பாகல்காய், வல்லாரை, வெந்தயம், கடலழிஞ்சில், மாவிலை, கருஞ்சீரகம், பெருங்காயம், மரமஞ்சள் ஆகியன அவற்றுள் சில. மேற்கூறிய மூலிகைகள் சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்காக பயன்படுத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இவற்றை மருத்துவர் ஆலோசனைப்படி நாடுவதும் நற்பலன் தரும்.

    "கொழுத்த உடலுக்கு கொள்ளு" என்பது மருத்துவ பழமொழி. உணவில் கொள்ளு சேர்ப்பது பல்வேறு நன்மைகளை அளிக்கக்கூடியது. குறைந்த சர்க்கரை சத்தும், அதிக புரதச்சத்தும், நார்ச்சத்தும் கொண்ட உணவு இது. இதனை மாலை வேளையில் எடுத்துக்கொள்வது நல்லது. நீரிழிவு, உடல் பருமன், ரத்தத்தில் அதிகரித்த கொழுப்பு நிலை ஆகிய அனைத்திலும் பயனளிக்கும்.

    தில்லைவாணன்

    உடல் எடையைக் குறைக்கும் தேநீரில் தற்காலத்தில் அதிகம் சேர்க்கப்படும் மூலிகைப் பொருளாக 'திருநெல்வேலி சென்னா' எனும் 'நிலாவாரை' உள்ளது. உலக அளவில் மலமிளக்கியாக இதன் செயல்பாடும், பயன்பாடும் அதிகம். சமீப காலங்களில் இது உடல் பருமனைக் குறைக்கவும் உதவுவதாக பல்வேறு ஆய்வுகள் கூறுவது சிறப்பு, சித்த மருத்துவத்தில் உள்ள நிலாவாரை சூரணம் அத்தகைய பண்புகளை உடையது. இதனை அரை தேக்கரண்டி அளவுக்கு இரவில் வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவும்.

    "எத்தை சொன்னாலும் கேட்கும் நத்தைசூரி" என்பது வாய்மொழி. 'சுடுகாடுமீட்டான்' என்ற புனைபெயரும் இதற்குண்டு. இது ரத்தத்தில் உள்ள கொழுப்பினைக் குறைத்து உடல் பருமன் குறைய வழிவகை செய்யும். சிறப்புமிக்க நத்தை சூரியின் விதையை இளவறு ப்பாக வறுத்து காபி கொட்டைக்கு பதிலாக பயன்படுத்தி தேநீராக்கி அருந்தி வருவது ம் பலன் தரும்.

    மூலிகைகள் ஒருபுறமிருக்க, மருந்தாகும் அஞ்சறைப்பெட்டியை அலசுவது நலத்திற்கு நலம் பயக்கும். தினசரி 4 பல் பூண்டும், தேக்கரண்டி வெந்தயமும், கருஞ்சீரகம் மற்றும் லவங்கப்பட்டை சேர்ந்த தேநீரும் சேர்த்துக்கொண்டால் இரத்தத்தில் உள்ள கொழுப்பு குறைந்து, உடல் பருமன் குறைய வழிவகை செய்யும்.

    கடைசரக்கான வெந்தயம் அதிகப்படியான நார்சத்துக்களைக் கொண்டது. இது ரத்தத்தில் உள்ள கொழுப்பினைக் குறைத்து உடல் எடையைக் குறைக்க உதவும். அதே போல் தனியா, சோம்பு மற்றும் சீரகம் சார்ந்த கசாயம் அவ்வப்போது எடுத்துக்கொள்வதும் உடல் எடையைக் குறைக்க உதவும் எளிய வழிமுறை.

    'பெருஞ்சீரகம்' எனும் சோம்பு உடல் பருமனைக் குறைக்க நல்ல பலன் அளிக்கக்கூடியதாக உள்ளது. அத்தகைய மகத்துவமுள்ள சோம்பினை இளவறுப்பாக வறுத்து கசாயமிட்டு அவ்வப்போது குடித்து வர நன்மை பயக்கும். அல்லது சோம்பு தேநீர் செய்தும் குடித்து வரலாம். டீத்தூளை தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அத்துடன் சோம்பு பொடி சேர்த்து காய்ச்சி சிறிது நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடித்து வர உடல் எடையைக் குறைக்க உதவும்.

    பச்சை தேநீர் (கிரீன் டீ) எடுக்க இயலாதவர்கள், சீரகத்தை தண்ணீருடன் அவ்வப்போது கொதிக்கவைத்து குடித்து வர உடலில் கொழுப்பின் அளவு குறைந்து உடல் எடை குறைய உதவும். ஆதலால் சீரக தண்ணீரை 'ஏழைகளின் கிரீன் டீ' எனலாம். சீரகத்தின் மருத்துவ செயல்பாட்டிற்கு வேதிப்பொருள் 'குமினால்டிஹைடு என்ற வேதிப்பொருள் காரணமாக உள்ளது.

    அஞ்சறைப்பெட்டி சரக்குகளான கருஞ்சீரகத்தில் உள்ள 'தைமோகுயினோன்' வேதிப்பொருளும், க்ரீன் டீயில் உள்ள 'கடிச்சின், பூண்டில் உள்ள 'அலிசின்' ஆகிய வேதிப்பொருட்கள் கொழுப்பைக் குறைக்கும் முக்கிய மூலக்கூறுகளாக உள்ளன.

    கொத்துமல்லி விதை, ஏலக்காய், சீரகம், சுக்கு இவற்றை சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக்கி அடிக்கடி அருந்தி வருவது உடல் பருமனை சிரமம் இன்றி குறைக்க உதவும். இது பாதுகாப்பான வீட்டு வைத்திய முறை.

    முதியவர்கள் எளிமையாக இடுப்பின் சுற்றளவை வைத்து உடல் பருமனைக் கணிக்கலாம். பொதுவாக இடுப்பு சுற்றளவு ஆண்களுக்கு 90 செமீ, பெண்களுக்கு 80 செமீ வரை இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்கின்றன தரவுகள். இடுப்பின் சுற்றளவு அதற்கு கூடுதலாக இருப்பின் உடல் பருமனாக கருதப்படும். இதனைக் கொண்டு உடல் பருமனைக் கணித்து நடைப்பயிற்சி, யோகாசனப்பயிற்சி மற்றும் உணவு முறைகளை திட்டமிடுவது அவசிய தேவை.

    முதுமையில் எழுந்து நடக்க கூட முடியாத நிலையில், நடைப்பயிற்சியும், உடல் பயிற்சியும் மேற்கொண்டு உடல் பருமனைக் குறைப்பது என்பது மிகக்கடினம் தான். இத்தகைய சூழலில் உடல் எடையைக் குறைப்பதற்கு இருக்கும் ஒரே நம்பிக்கை பாதை 'உணவு முறை' மட்டும் தான். எனவே முதுமையில் உணவுக்கட்டுப்பாடு என்பது ஆரோக்கியத்திற்கும், ஆயுளுக்கும் மிக மிக அவசியம்.

    தொடர்புக்கு: drthillai.mdsiddha@gmail.com

    Next Story
    ×