search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    அமெரிக்க மக்கள் கொண்டாடும் நன்றி நவிலல் நாள்
    X

    அமெரிக்க மக்கள் கொண்டாடும் நன்றி நவிலல் நாள்

    • அமெரிக்க அதிபரின் இல்லமான வெள்ளை மாளிகையில் வான்கோழிகளுக்கு மன்னிப்பு வழங்கும் சடங்கும் நடைபெறும்.
    • தம் வாழ்வில் நிறைந்திருக்கும் செல்வத்திற்காக நன்றி செலுத்துவதற்கும், ஒற்றுமையின் உணர்வைக் கொண்டாடுவதற்கும் இது ஒரு சிறந்த நேரமாகக் கருதுகிறார்கள்.

    அமெரிக்காவில் நன்றி செலுத்துதல் நாள் என்பது நம் நாட்டின் தைப்பொங்கல் திருநாள் போன்று ஒரு வகை அறுவடைத் திருநாள். கனடாவில் தோற்றம் பெற்ற நன்றி நவிலல் தினம் அமெரிக்க முதற்குடிகளின் பாரம்பரியத்திலும், ஐரோப்பியரும் சேர்ந்து கொண்டாடும் அறுவடைத் திருநாளாகும். நவம்பர் மாதத்தின் நான்காம் வியாழக்கிழமையன்று நன்றி நவிலல் நாள் கொண்டாடப்படுகிறது. இது அரசியல், சமூக, கலாச்சார, சமய முக்கியத்துவம் வாய்ந்த நாளாகவும் உள்ளது. மொத்தத்தில் ஒரு குடும்ப விழாவாகவே கொண்டாடப்படுகிறது.

    உறவினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் இந்த விழா நாளில் ஊரே திருவிழாக் கோலம் பூண்டுவிடுகிறது. விருந்தும், கேளிக்கையும், மரபுவழிச் சமையலுடன் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. வான்கோழியை முழுக்கோழியாக அவித்தும், பொரித்தும் சமைப்பர். மக்காச் சோளம், கிரான்பெரி பழங்கள், சக்கரை பூசணி கேக் போன்ற உணவுகளை உண்ணுவர்.

    கால்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளும் நடக்கும். கடவுளுக்கு நன்றி செலுத்தும் வழிபாடுகளும் நடப்பது வழக்கம். அமெரிக்கர்கள், ஐரோப்பிய குடியேறிகளுடன், அனைத்து நாட்டு மக்களும் நல்லுறவு பேணுதற்கும் இவ்விழா பயன்படுகிறது.

    நன்றியுணர்வுடன் தொடங்கும் எந்த ஒரு காரியமும் தன்னம்பிக்கை, நேர்மறையான சிந்தையைத் தூண்டுவதோடு, இதனால் அச்சத்தையும் வெல்ல முடியும் என்ற பரவலான நம்பிக்கை இவர்களிடம் உள்ளது. பிரச்சனைகள் உட்பட நம்மிடம் உள்ள அனைத்திற்கும் நாம் முற்றிலும் நன்றியுள்ளவர்களாக இருக்கும்போது அச்சமின்றி வெற்றிகரமாக செயல்பட முடியும் என்ற வகையில் நன்றியுணர்வைப் பின்பற்றுபவர்கள் மிகவும் ஆக்கபூர்வமானவர்கள் என்கிறார்கள்.

    அதனால் துன்பத்திலிருந்து விரைவாக மீண்டு வருவதோடு, வலுவான சமூக உறவுகளைக் கட்டமைக்கக் கூடியவர்களாக இருக்க முடியும் என்றும், நன்றியுணர்வுடன் இருக்கும்போது பெருமளவிலான ஆற்றல், நம்பிக்கை, உறுதிப்பாடு, உற்சாகம், விழிப்புணர்வு ஆகியவற்றை விளைவிப்பதாகவும் ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளதைக் குறிப்பிடுகிறார்கள்.

    நன்றிநவிலல் கொண்டாட்டம் இலையுதிர் கால இலைகளுடன் விடுமுறை அலங்காரம், வான்கோழிப் பதார்த்தங்கள், இனிப்புகள் என்று வீட்டு அலங்காரத்தோடு, சாப்பாட்டு மேசைகளையும் பிரகாசமாக்குகிறது.

    வழக்கமாக தனிக்குடும்பமாக வாழ்பவர்கள், பெற்றோர், சகோதர, சகோதரிகள் போன்ற நீட்டிக்கப்பட்ட குடும்பத்தினருடனும் மகிழ்ந்துக் கொண்டாடும் வகையில் கூடுதல் நாற்காலிகள் போன்றவற்றை அடித்தளத்திலிருந்து மேலே இழுத்துக்கொண்டு வருவார்கள்.

    அடிக்கடி சந்திக்க வாய்க்காத உறவினர்கள் அந்த நாளுக்காக ஒன்றுகூடுவதால் கொண்டாட்டத்திற்கும் மகிழ்ச்சிக்கும் குறைவிருப்பதில்லை. ஏராளமான உணவு வகைகளைச் சாப்பிடுவதுடன், கால்பந்துப் போட்டிகளையும், அணிவகுப்புகளையும் ஒன்றாக அமர்ந்து கண்டுகளிக்க விரும்புகிறார்கள்.

    பெரும்பாலும் இரவு உணவு நேரத்தின்போது உறவுகள் ஒன்றுகூடி, அலங்கரிக்கப்பட்டு, மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்ட சாப்பாட்டு அறையில், பாரம்பரியமான மைய உணவான வறுத்த வான்கோழியுடன், இனிப்பு வகைகள், பீர் போன்ற மதுபானங்கள், திராட்சை இரசம் போன்றவையும் வேண்டுமளவில் வழங்கப்படுகின்றன.

    குடும்பங்கள் ஒன்றுகூடி விருந்து உண்பதற்கு ஏற்ப அமெரிக்காவைச் சுற்றியுள்ள பெரிய நகரங்களிலும், உணவகங்கள் நன்றி தின சிறப்பு உணவுகளை உருவாக்குவதால் வீட்டில் சமைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதில்லை.

    நன்றி செலுத்துதலுக்கு அடுத்த நாள் கருப்பு வெள்ளி என அழைக்கப்படும் விடுமுறையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று நாடு முழுவதும் உள்ள கடைகள் விடிய விடியத் திறந்திருப்பதுடன் சிறப்பான தள்ளுபடிகளையும் வழங்குகின்றன. இக்காலங்களில் கருப்பு வெள்ளி விற்பனை மிகவும் பிரபலமாகிவிட்டன. கறுப்பு வெள்ளி இப்போது அமெரிக்காவில் பரபரப்பான ஷாப்பிங் நாட்களில் ஒன்றாக அறியப்பட்டு, அதன் சொந்த பாரம்பரியமாகவும் மாறியுள்ளது.

    நன்றி செலுத்தும் வார இறுதியில் அடுத்த ஆண்டு மொத்தத்திற்கும் பெரும்பாலும் தேவையான அனைத்து விதமானப் பொருட்களையும் தள்ளுபடி விலையில், பரவலான விளம்பரங்களால் எளிதாக வாங்க முடிகிறது.

    நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நன்றி தெரிவிக்கும் நாளில் தங்கள் குடும்பங்களைப் பார்க்கப் பயணிக்கின்றனர். வருடத்தின் மிகவும் பரவலாகப் பயணம் செய்யும் நாட்களில் ஒன்றான இந்நாளில் விமானங்களும், புகைவண்டிகளும் நிரம்பி வழிவதோடு, பயண தாமதங்களும், சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாகவே இருக்கின்றன.

    நன்றி செலுத்தும் நேரம் அமெரிக்காவில் உள்ள வான்கோழிகளுக்கு மட்டும் மோசமான நேரமாம். நாட்டின் வேடிக்கையான மரபுகளில் ஒன்று, அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒரு வான்கோழிக்கு மன்னிப்பு வழங்குவது. நேரம் நன்றாக இருக்கும் பறவையின் உயிர் காப்பாற்றப்படுகிறது.

    20-ம் நூற்றாண்டின் மையப்பகுதியில் தொடங்கி, அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒவ்வொரு ஆண்டும் ஒன்று அல்லது இரண்டு வான்கோழிகளை மன்னித்து, மனிதாபிமானத்துடன் அந்தப் பறவைகளை படுகொலையிலிருந்து காப்பாற்றி ஒரு பண்ணைக்கு அனுப்பினாராம். இதையடுத்து இதனையே ஒரு சடங்காக பல அமெரிக்கத் தலைவர்களும் அந்த வான்கோழி மன்னிப்புச் சடங்கைச் செய்கிறார்கள். அமெரிக்க அதிபரின் இல்லமான வெள்ளை மாளிகையில் வான்கோழிகளுக்கு மன்னிப்பு வழங்கும் சடங்கும் நடைபெறும்.


    நியூயார்க் நகரில் மேசி வர்த்தக நிறுவனம் மூலமாக ஊர்வலம் நடத்தப்படுகிறது. இதில் பல ஊர்களிலிருந்தும் மக்கள் குழந்தை குட்டிகளுடன் வந்து கலந்துகொள்வது வழக்கம். இன்னிசை முழங்க துண்டுத் தாள்களும்மேலிருந்து மழைபோல் தூவப்படுகிறது. இந்த ஊர்வலத்தில் சாந்தா கிளாசு எனும் கிறிஸ்துமஸ் தாத்தாவும் தோன்றி குழந்தைகளைக் குதூகலப்படுத்துகிறார்.

    இவையனைத்திற்கும் முத்தாய்ப்பாக மலிவு விலையில் குவிக்கப்படும் பொருட்களை மக்கள் சாரி சாரியாகச் சென்று வாங்குவதும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

    தம் வாழ்வில் நிறைந்திருக்கும் செல்வத்திற்காக நன்றி செலுத்துவதற்கும், ஒற்றுமையின் உணர்வைக் கொண்டாடுவதற்கும் இது ஒரு சிறந்த நேரமாகக் கருதுகிறார்கள்.

    அமெரிக்கக் கலாச்சாரத்தில் ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்டுள்ள, நன்றி செலுத்துதல் நாள் வட அமெரிக்காவில் ஐரோப்பிய குடியேற்றவாசிகளின் ஆரம்ப நாட்களைக் குறிக்கிறது. இன்று நன்றியறிதல் ஒற்றுமை, பெற்றுள்ள அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

    Next Story
    ×