search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    திருப்பதி பெருமாளுக்கு பச்சை கற்பூரம்!
    X

    திருப்பதி பெருமாளுக்கு பச்சை கற்பூரம்!

    • திருமலையில் இருந்தவர் திருமலை நம்பி.
    • அனந்தாழ்வார் தான் வந்த வேலையான நந்தவனம் அமைக்கும் வேலையை செய்ய ஆரம்பித்தார்.

    பச்சை கற்பூரம்: பச்சை கற்பூரம் என்று சொன்னாலே தெய்வீக மணம் ஞாபகத்திற்கு வரும். குறிப்பாக திருப்பதி பெருமாள் சன்னதி ஞாபகத்திற்கு வரும். ஆக்கப்பூர்வமாக மனதினை மாற்றி விடும் சக்தி பச்சை கற்பூரத்தின் நறுமணத்திற்கு உண்டு. உணவின் சுவைக்காக கூட பச்சை கற்பூரம் சேர்க்கப்படுகின்றது. இதற்கு நிறைய மருத்துவ குணங்களையும் பயன்படுத்துவார்கள். ஆயினும் இதனை மிகக் குறைவாகவே பயன்படுத்துவார்கள்.

    திருப்பதியில் பெருமாளுக்கு நெற்றிக்கு இடுவதில் பச்சை கற்பூரம் முக்கிய பங்கு வகிக்கும். சரி. ஆனால் பெருமாளின் தாடையிலும் பச்சை கற்பூரம் சாற்றப்படுகின்றது. இது ஏன் என்று தெரியுமா?

    ஸ்ரீரங்கம் எனப்படும் திருவரங்கத்தில் பெருமாளின் சேவையிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் ஸ்ரீராமானுஜர். ஸ்ரீராமானுஜருக்கு ஒரு குறை எப்போதும் மனதில் இருந்தது. திருவேங்கடவருக்கு அதாவது ஏழுமலையானுக்கு ஒரு நந்தவனமும், தபோவனமும் அமைக்க இன்னமும் முடியவில்லையே என தவித்தார்.

    ஸ்ரீராமானுஜர் ஒருநாள் தன் சீடர்களிடம் கேட்கிறார். 'நீங்கள் யாராவது ஏழுமலையானுக்கு அன்றாடம் மாலை கட்டி தரும் பாக்கியத்தினை ஏற்றுக் கொள்வீர்களா? என்று கேட்கின்றார். பலரும் அமைதியாகவே இருந்தனர். அனந்தாழ்வார் என்ற சீடர் மட்டும்தான் அந்த கைங்கர்யத்தை ஏற்றுக் கொள்வதாக முன் வந்தார். ஸ்ரீராமானுஜருக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. அனந்தாழ்வாரும் தனது மனைவியோடு திருமலைக்கு வந்தார்.

    திருமலையில் இருந்தவர் திருமலை நம்பி. இவர் ஸ்ரீராமானுஜரின் தாய் மாமன். இவர் அனந்தாழ்வாரும் அவரது மனைவியும் தங்க எளிய ஏற்பாடுகள் செய்தார். அவர்களால் முடிந்தது குடிசை அமைத்துத்தந்தார். அனந்தாழ்வார் தான் வந்த வேலையான நந்தவனம் அமைக்கும் வேலையை செய்ய ஆரம்பித்தார். நறுமணமுள்ள பூச்செடிகளை நட்டார். தனது குருவின் பெயரால் 'ராமானுஜ நந்தவனம்' என்று பெயரும் சூட்டினார். இன்றும் அந்த நந்தவனம் அதே பெயரில் உள்ளது.


    கோடை காலத்தில் நந்தவனத்திற்கு தண்ணீர் வேண்டுமே. அதற்காக அனந்தாழ்வார் குளம் வெட்டத் தொடங்கினார். குளத்தில் நீர் சேர்த்து வைத்தால் நந்தவனத்திற்கு எப்போதும் தண்ணீர் கிடைக்கும் என்று குளம் வெட்டும் பணியினைத் தொடர்ந்தார். தனியாக வேலை செய்த அவருடன் அவருடைய மனைவியும் உடன் சேர்ந்து வேலை செய்தார்.

    வெட்டும் மண்ணை எடுத்து வெளியே சற்று தள்ளி கொட்ட வேண்டும் அல்லவா. அனந்தாழ்வார் மண்ணை வெட்ட அவரது மனைவி அதனை தலையில் சுமந்து மறுபக்கம் சென்று கொட்டினார். அந்த பெண்மணி அப்போது கருவுற்று இருந்தார்.

    இதனைக் கண்ட ஒரு சிறுவன் அங்கு ஓடி வந்தான். அவன் தானும் இந்த பணியில் உதவுவதாகக் கூறினான். அனந்தாழ்வார் இதனை 'வேண்டாம்' என மறுத்தார். அந்த பையனோ கூலி கூட வேண்டாம். ஆனால் நானும் இந்த பணியினைச் செய்கின்றேன் என்றார். அப்படியும் அனந்தாழ்வார் கண்டிப்பாய் வேண்டாம் என்று சொல்லி அந்த பையனை அனுப்பி விட்டார். இறைவனுக்கு முழுமையாக தானும் தன் மனைவியும் மட்டுமே செய்ய வேண்டும் என்பதில் அனந்தாழ்வார் உறுதியாக இருந்தார்.

    அனந்தாழ்வார் சொல்லியும் போகாத அந்த சிறுவன் ஒரு பக்கம் மறைந்து நின்றார். அனந்தாழ்வாரின் மனைவியைப் பார்த்து 'அம்மா, நான் மண் சுமந்தால் உங்கள் கணவர் கோபிப்பார். ஆகவே நான் இங்கு மறைந்து நிற்கின்றேன். நீங்கள் இதுவரை மண்ணை கொண்டு வாருங்கள். அதன் பிறகு கரைபக்கம் நான் சென்று கொட்டி விடுகின்றேன்' என அன்போடு வேண்டினான். அந்த சிறுவனின் அன்பை அன்னையால் மீற முடியவில்லை.

    'சரி' என்றார். வேலை சற்று வேகம் கூடியது.

    இதனால் அனந்தாழ்வாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 'என்ன சீக்கிரமாக மண்ணை கொட்டி விட்டு வருகிறாயே' என மனைவியிடம் கேட்டார். மனைவியும் 'ஆமாம். எனக்கு சோர்வு தெரியவில்லை. அதனால் வேகமாக செய்து விடுகிறேன்' என்றார்.

    சிறிது நேரம் சென்று அனந்தாழ்வார் மண் கொட்டிய பகுதியை பார்க்க வந்தார். அங்கு அந்த சிறுவன் ஓடி ஓடி மண்ணைக் கொட்டிக் கொண்டு இருந்தான். இதனைப் பார்த்த அனந்தாழ்வாருக்கு கோபம் வந்து விட்டது. தன் கடப்பாரையை எடுத்து வீசினார். இதனால் சிறுவன் தாடையில் காயம் ஏற்பட்டது. அதில் இருந்து ரத்தம் கொட்டியது. சிறுவன் ஓடி விட்டான்.


    மறுநாள் காலையில் கருவறையைத் திறந்த அர்ச்சகருக்கு அதிர்ச்சியானது. பெருமாளின் தாடையில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அர்ச்சகர் செய்வதறியாது பதறினார். 'அனந்தாழ்வாரை அழைத்து வா' என அசரீரி கேட்டது. அர்ச்சகர் அனந்தாழ்வாரை அழைக்க இருவரும் பெருமாள் சன்னதிக்கு ஓடோடி வந்தனர். பெருமாளின் தாடையில் ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. அனந்தாழ்வாரின் கண்களுக்கு பெருமாள் சிறுவனாக காட்சி அளித்தார்.

    அனந்தாழ்வார் கதறி விட்டார். 'பெருமாளே வந்தது நீங்கள் தான் என்று நான் அறியாமல் இருந்து விட்டேனே' என கண்ணீர் விட்டு அழுதார். மன்னித்து விடுங்கள் என்றார். பெருமாள் அனந்தாழ்வாரை நோக்கி, "அனந்தாழ்வார் உன் கைகளால் தொடுத்து மலர் மாலைகளை நீ அளிக்கும் போது நான் மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறேன். ஆனால் கர்ப்பிணியான உன் மனைவி மண் சுமக்கும்போது எனக்கு பொறுக்கவில்லையே" என்றார்.

    அனந்தாழ்வார் பெருமாளின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். சரி பெருமாளின் தாடையில் ரத்தம் வடிகின்றதே என்ன செய்வது? அப்போது தாடையில் சிறிது பச்சை கற்பூரம்வை என்று குரல் கேட்க அதுபடியே அர்ச்சகரும் செய்தார். பெருமாளின் தாடையில் ரத்தம் வடிவது நின்றது. பெருமாள் தாடையில் பச்சை கற்பூரம் வைக்கும் பழக்கம் இன்று வரை தொடர்கின்றது.

    திருப்பதி திருமலைவாசலை தரிசிக்க செல்லும் போது பிரதான வாசலின் வலது பக்கத்தில் இந்த கடப்பாரை இன்னும் தொங்க விடப்பட்டு இருக்கும். திருப்பதி செல்லும் போது அவசியம் இந்த கடப்பாரையையும் பார்க்கலாம்.

    அதிகமாக மருத்துவம் எழுதி பழகி விட்டது. ஆன்மீகம் எழுதும் பொழுது சில மருத்துவ செய்திகள் உடனே எழுத வேண்டும் என்ற வேகத்தினை, ஆர்வத்தினை ஏற்படுத்துகின்றன. கோடை வேறு வந்து விட்டதா? சில எளிய மாற்றங்களை உணவு முறையில் சொல்லலாமே என்று மனம் சொன்னது. சமீபத்தில் நான் பார்த்த காட்சி இதனை எழுதச் சொன்னது. இரண்டு தள்ளு வண்டியில் மிக அருமையான, பிரஷ் ஆன பழங்களை குவித்து விற்றனர். பார்க்கவே நன்கு இருந்தது. பக்கத்தில் ஒரு சுவீட் ஸ்டால். பழ வியாபாரியிடம் வந்த மக்கள் குறைவு. சுவீட் ஸ்டாலில் நிறைவாக இருந்தது. அருகில் இருந்த ஆன்மீக பெரியவர்- அவர்தான் நான் எழுதும் கட்டுரைகளுக்கு பல செய்திகளைத் தருவார்-அவர் திடீரென பழங்களின் தன்மையினை பற்றி பேசினார். அதனை அப்படியே குறிப்பெடுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பொதுவில் பழங்கள் மிக எளிதில் ஜீரணமாகி விடும். அதனால் தான் ஆன்மீக பயணத்தில் இருப்பவர்கள் பழங்களை எடுத்துக் கொண்டனர் என்றார்.


    * அன்னாசி பழம்-சில துண்டுகள் எடுத்துக் கொண்டால் ரத்த சோகை ஏற்படாது. அடிக்கடி ஒரு சில துண்டுகளே போதும்.

    * விளாம்பழம்-இதனை நகர மக்கள் மறந்து விட்டனர். சுண்ணாம்பு, விட்டமின் ஏ சத்து அதிகம். சிறிது வெல்லம் கலந்து சாப்பிட வேண்டும். கண் பார்வை குறைந்து இருப்பவர்கள் இதனை அடிக்கடி பயன்படுத்தலாம். கிருமிகளை அழிக்கும் குணம் விளாம்பழத்திற்கு உண்டு.

    * மாதுளம் பழமும் சரி, தோலும் சரி ஜீரண மண்டலத்தையே சீராக வைக்கும்.

    * ஆரஞ்சு பழத்தில் வைட்டமின்கள் கொட்டி கிடக்குது. கொய்யாபழம்- குறிப்பாக பல நாட்கள் தொடர்ந்து நோயாளிகள் இதனை அன்றாடம் சாப்பிட்டு வந்தால் அநேக நல்ல மாற்றம் கிடைக்கும்.

    * திராட்சையில் கறுப்பு திராட்சையை அதிக மருத்துவ குணங்கள் கொண்டதாக சொல்லுவர். திராட்சை சாற்றினை அடிக்கடி அரை டம்ளர் அளவு அருந்தி வர வேண்டும்.

    * எலுமிச்சை சாறு நீரில் (அ) வெது வெதுப்பான நீரில் கலந்து அன்றாடம் குடிக்கலாம். இதன் பலனை 2 பக்கங்கள் எழுதலாம். எளிமையாக கிடைக்கும். இதன் பலன்கள் பெரிது என்றார்.

    * 2 பேரீச்சம்பழம் அன்றாடம் எடுத்துக் கொள்ளலாம். நரம்புகள் பலப்படும். பல் வியாதி நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

    * பப்பாளி பழ அருமையை இன்று நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள். ஆயினும் கிராம புறங்களில் இந்த பழம் அப்படியே யாரும் எடுக்காமல் தரையில் கொட்டி வீணாகி இருக்கின்றது. இது மாதிரி பலன் அளிக்கும், எளிதாக கிடைக்கும் பழங்கள் சில உள்ளன. இதனால் நரம்புகள் பலப்படுகின்றன. கிராம புறங்களில் குழந்தைகளின் நல்ல மூளை பலத்திற்கும், நரம்புகள் பலத்திற்கும் இப்படி வீணாக கொட்டி யாரும் பழங்களை உபயோகித்து அவர்களை ஆரோக்கியமான குழந்தைகள் ஆக்கலாமே.

    ஆப்பிள்-உடம்பு சரியில்லாதவர்களை பார்க்கச் சொல்லும் பொழுது தெரிந்தோ, தெரியாமலோ 'ஆப்பிள்' வாங்கிச் செல்வார்கள். தலை முதல் கால் வரை என்பார்களே அது போல் உடலின் அனைத்து மண்டலங்களும் பாதுகாக்கப்படும்.

    * வாழைப்பழம் எந்த பிறவியிலும் சிறந்ததே. * பேயன் வாழை. பச்சை வாழை வெப பத்தை உடலில் குறைக்கும். உடல் குளிர்ச்சியில் இருக்கும். * மஞ்சள் வாழை குடலை சுத்தப்படுத்தி விடும், * ரஸ்தாளி கண், உடல் இரண்டிற்கும் வலுவினை அளிக்கும். பொதுவில் ரஸ்தாளி பழத்தினை உடல் எடை அதிகம் இருப்பவர்கள் அடிக்கடி எடுத்துக் கொள்வதை தவிர்ப்பார்கள். * செவ்வாழை பழம் ஜீரண மண்டலம், குறிப்பாக கல்லீரலுக்கு சிறந்த உணவு ஆகும். கண் எரிச்சல், வறட்சி என்பவர்கள் கற்பூர வாழையினைப் பயன்படுத்தலாம். * நாவல் பழம்- தாகம் தணிக்கும். நீரிழி விற்கு சிறந்த தீர்வு. வயிற்றுப் புண், குடல் புண் தீரும்.

    மாம்பழம் கூட ராஜகனி தான். இப்படி இறைவன் நமக்கு அள்ளி நன்மைகளைத் தருகிறார். முறையாக பயன் படுத்திக் கொள்ளலாமே என்றார்.

    Next Story
    ×