search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    முதுமையில் சிறுநீர் அடக்க முடியாமைக்கு காரணங்களும் தீர்வுகளும்
    X

    முதுமையில் சிறுநீர் அடக்க முடியாமைக்கு காரணங்களும் தீர்வுகளும்

    • நரம்பு சார்ந்த நோய்நிலைகள் ஒருபுறமிருக்க, மன அழுத்தத்தாலும் சிறுநீர் அடக்க முடியாத நிலை உண்டாகிறது.
    • எளிமையாக கடுக்காய் கபத்தைக் குறைத்து புராஸ்டேட் சுரப்பியின் வீக்கத்தைக் குறைத்து நற்பலன் தரும்.

    உலகம் முழுவதிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு ஆயுட்காலம் கொஞ்சம் அதிகம் தான். ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 62.7 ஆண்டுகள் என்றும், பெண்களின் சராசரி ஆயுள் காலம் 66 ஆண்டுகள் என்றும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு வாழ்நாள் அதிகம் உள்ளது. இதனால் முதுமையில் ஆண்களை விட பெண்கள் கூடுதலாகவே முதுமையில் உடல்நல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமும், அவசியமும் உள்ளது.

    முதுமையில் அதிகம் பேர் தூக்கத்தை தொலைப்பதற்கு முக்கிய காரணமாய் இருப்பது சிறுநீர் அடங்காமை நிலை (Urine Incontinence) தான். சொட்ட சொட்ட சிறுநீர் விழுதலும், சிறுநீர் கழிக்கும் முன்னமே காலோடு விழுதலும், அதனை அடக்க முடியாமல் போதலும், முக்கியமாக இரவில் அதிக முறை சிறுநீர் கழித்து தூக்கம் கெட்டு உடலும், மனமும் குன்றுதலும் முதுமைக்கு மிகப்பெரும் சிரமங்கள் தான்.

    இந்த நிலைமை 65 வயதை தொடும் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேருக்கு மேலாக காணப்படுவதாக உள்ளது. முக்கியமாக 55 சதவீதம் பெண்களுக்கு சிறுநீர் அடக்க முடியாமை தொந்தரவு வாழ்க்கைத் தரத்தைக் குறைப்பதாக உள்ளது.

    பொதுவாகவே முதுமையில் ஏற்படும் நரம்புத் தளர்ச்சியால் சிறுநீரை சேமித்து வைக்கும் சிறுநீர்ப்பையானது, சிறுநீரை அடக்க முடியாமல் அடிக்கடி வெளியேற்றும் சூழல் உண்டாகிவிடுகிறது. மேலும் முதுமையில் ஏற்படும் நீரிழிவு, பார்கின்சன் எனும் நடுக்கு வாதம், பிற நரம்பு மண்டல நோய்நிலைகளிலும் சிறுநீர்ப்பை தனது இயல்பான தன்மையை இழந்து, சிறுநீர் அடக்க முடியாத நிலைக்கு பாதை அமைக்கிறது.

    நரம்பு சார்ந்த நோய்நிலைகள் ஒருபுறமிருக்க, மன அழுத்தத்தாலும் சிறுநீர் அடக்க முடியாத நிலை உண்டாகிறது. இதனால் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய சூழல் உண்டாகி தூக்கம் கெட்டு துக்கம் சேருவது தான் அதிகம். இந்த சிறுநீர் அடக்கமுடியாத நிலையால் சிறுநீர்ப்பாதை தொற்றுக்களும் அடிக்கடி உண்டாகும் அபாயம் உள்ளது.

    மேலும் முதுமையில் நாட்பட்ட நோய்நிலைகளுக்கு எடுத்துக்கொள்ளும் சிறுநீர்பெருக்கி மருந்துகளும், மிகை ரத்த அழுத்தம் குறைக்கும் மருந்துகளும், மன அழுத்தம் போக்கும் மருந்துகளும், இதய நோய்க்காக வழங்கப்படும் மருந்துகளும், சிறுநீர் அடக்க முடியாத நோய்நிலைக்கு துணை போவதாக உள்ளன. ஆகவே மருத்துவர் ஆலோசனை பெற்று மருந்துகளை எடுப்பது நலம்.

    சித்த மருத்துவக் கூற்றுப்படி முக்குற்றங்களில் வாதக்குற்றம் பாதிப்படைவது சிறுநீர் அடக்க முடியாத நிலைக்கு காரணமாக உள்ளது. எனவே வாதம் தணித்து நரம்புகளை வன்மைப்படுத்தும் மருந்துகளும், வாதம் அதிகரிக்காத உணவு முறையும் பின்பற்ற இந்நோய்நிலையில் நற்பலன் காண முடியும்.

    சித்த மருத்துவ மூலிகைகளான அமுக்கரா கிழங்கு, தொட்டாற்சிணுங்கி, பூனைக்காலி விதை, சிற்றாமுட்டி, வல்லாரை, நீர்பிரமி, எட்டி, சாதிக்காய், சாதிபத்திரி போன்ற நரம்புக்கு வன்மை தரும் மூலிகைகளும், நெருஞ்சில், மூக்கிரட்டை, மஞ்சள், மாவிலங்கு ஆகிய சிறுநீர்ப்பாதை தொற்றுக்களைத் தடுக்கும் மூலிகைகளும் பயன்படுத்த நல்ல பலன் தருவதாக உள்ளன.

    மேற்கூறிய மூலிகைகள் மட்டுமின்றி, நரம்புக்கு வன்மைத் தரக்கூடிய கருப்பு உளுந்தினை கஞ்சியாக்கி குடித்து வருவதும் மூத்திரப்பை பலவீனத்தைக் குறைத்து, சிறுநீர் அடங்காத நிலையில் பலன் தரும். சித்த மருந்தான உளுந்து தைலத்தை தினமும் அடிவயிற்றில் பூசி வருவதும் நன்மை பயக்கும்.

    முதுமையில் பெண்களுக்கு நரம்பு தளர்ச்சியால் உண்டாகும் சொட்டு மூத்திரமும், சிறுநீர் அடக்கமுடியாத நிலையையும் போன்று ஆண்களுக்கு முதுமையில் உண்டாகும் புராஸ்டேட் சுரப்பியின் வீக்கத்தால் (BPH/Prostatomegaly) உண்டாகும் மூத்திரப்பையின் வாய்ப்பகுதி நெருக்கப்பட்டு சிறுநீர் கழிப்பதில் பல்வேறு தொந்தரவுகளை உண்டாக்கும். 40 வயதிலேயே சிலருக்கு புராஸ்டேட் சுரப்பியின் வீக்கம் உண்டாகிவிடுகிறது. 80 வயதைத் தொடும் 90 சதவீதம் ஆண்களுக்கு புராஸ்டேட் சுரப்பு வீக்கமடைவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    இதனால் சிறுநீர் அடக்க முடியாத நிலை, இரவில் அதிகம் சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழித்து வந்த சில நிமிடங்களில் மீண்டும் சிறுநீர் கழிக்கும் எண்ணம் தோன்றுவது ஆகிய பல குறிகுணங்கள் உண்டாகி முதுமையில் ஆண்களைத் துன்புறுத்தும்.

    நாட்பட்ட புராஸ்டேட் சுரப்பி வீக்கத்தில் முழுவதும் சிறுநீர் அடைப்பு உண்டானால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழலும் உருவாகும். அதுமட்டுமின்றி சிலருக்கு பின்னாளில் புராஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பும் உள்ளதால் மேற்கூறிய அறிகுறிகளுக்கு மருத்துவர் ஆலோசனை எப்போதும் அவசியம்.

    சித்த மருத்துவத்தின் அடிப்படையான 96 தத்துவத்தின்படி தசவாயுக்களும், தசநாடிகளும் உடல் இயங்கியலில் முக்கிய பங்காற்றுகின்றன. அதன்படி சிறுநீர் கழித்தல், மலம் கழிப்பது ஆகிய உடல் இயக்க செயல்பாடுகள் பத்து வாயுக்களில் அபானன் வாயுவின் செயல்பாடாக சித்த மருத்துவம் கூறுகின்றது. இந்நோய் நிலையில் உடலில் அதிகமாகும் கபத்தின் வளர்ச்சியால் அபானன் வாயுவின் செயல்பாடு தடை ஏற்பட்டு சிறுநீர் கழிக்க சிரமத்தை உண்டாக்குவதாக உள்ளது.

    உடலில் சேரும் கபமே, புராஸ்டேட் வீக்கத்தை உண்டாக்கி நோயினை உண்டாக்குவதாக உள்ளதால் அத்தகைய கபம் போக்கி, வீக்கம் குறைக்கும் மூலிகை மருந்துகளை சித்த மருத்துவர் ஆலோசனைப்படி நாடுவது நலம் பயக்கும்.

    நெருஞ்சில், சதாவேரி, மாவிலங்கப்பட்டை, மூக்கிரட்டை, மஞ்சள், கழற்சிக்காய், கடுக்காய், வல்லாரை, முருங்கை ஆகிய மூலிகைகள் புராஸ்டேட் சுரப்பியின் வீக்கத்தைக் குறைத்து குறிகுணங்களைக் குறைப்பதாக உள்ளன. இதுமட்டுமின்றி இன்னும் பல பற்பம், மெழுகு போன்ற சித்த மருந்துகளும் இந்நோய்நிலையில் உதவக்கூடும்.

    நெருஞ்சில் முள்ளினைப் பொடித்து பாலில் கலந்து கொதிக்க வைத்து எடுத்துக்கொள்வது இந்நோய்நிலையில் நற்பலன் தரும். நெருஞ்சில் இலை மற்றும் கருவேப்பிலை கொண்டு நடந்த ஆய்வில் இந்த மூலிகைகளின் கூட்டு புராஸ்டேட் சுரப்பியால் வீக்கம் கொண்ட நோயாளிகளின் குறிகுணங்கள் வெகுவாக குறைவதாக ஆய்வுகள் கூறுவது சிறப்புமிக்கது.

    டெஸ்டோஸ்டீரோன் எனும் ஹார்மோன் சுரப்பு புராஸ்டேட் சுரப்பியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகிறது. இந்த ஹார்மோன் 5-ஹைட்ராக்ஸி டெஸ்டோஸ்டீரோன் எனும் கூடுதல் செயல் விளைவுள்ள ஹார்மோனாக நமது உடலில் மாறுகிறது. இதற்கு 5-ஆல்பா-ரிடெக்டேஸ் எனும் நொதி முக்கிய காரணமாக உள்ளது.

    எனவே மேற்கூறிய நொதியின் செயல்பாட்டை தடுப்பதன் மூலம் டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் செயலைக் குறைத்து புராஸ்டேட் சுரப்பியின் வளர்ச்சியைத் தடுக்க முடியும். சித்த மருத்துவ மூலிகைகளில் உள்ள பீட்டா சைட்டோஸ்டீரால், ஸ்டிக்மா ஸ்டீரால், லூபியோல், குர்சிட்டின், கடிச்சின், கெம்ப்பெரோல், மிரிஸ்டிக் அமிலம், லினோலெயிக் அமிலம், லாரிக் அமிலம், இ.ஜி.சி.ஜி. ஆகிய பல்வேறு தாவர வேதிப்பொருட்கள் மேற்கூறிய நொதியின் செயல்பாட்டைத் தடுத்து புராஸ்டேட் சுரப்பியின் வீக்கத்தைக் குறைப்பதாக உள்ளதை பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

    எளிமையாக கடுக்காய் கபத்தைக் குறைத்து புராஸ்டேட் சுரப்பியின் வீக்கத்தைக் குறைத்து நற்பலன் தரும். ஒரு தேக்கரண்டி அளவுக்கு கடுக்காய் சூரணத்தை வெந்நீரில் கலந்து இரவில் எடுத்துக்கொள்வதும் அல்லது கடுக்காய் லேகியம் எனும் சித்த மருந்தை எடுத்துக்கொள்வதும் இந்நோய் நிலையில் பெரும்பயன் அளிக்கும். கடுக்காயில் உள்ள இஜிசிஜி எனும் வேதிப்பொருள் மருத்துவ தன்மைக்கு காரணமாகிறது.

    அதே போல் மற்றொரு எளிய மூலிகையான முருங்கை கீரையை முதுமையில் அவ்வப்போது சூப் வைத்து குடித்து வருவதும் புராஸ்டேட் நோயின் தாக்கத்தைக் குறைக்க உதவும். கபத்தைக் குறைக்கும் மற்றொரு மூலிகையான கொள்ளு கொண்டு செய்யப்படும் கொள்ளு ரசமும் அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ள இந்நோய் நிலையில் பலனைத் தரும்.

    முளை கட்டிய தானியங்கள்

    துத்தநாகச் சத்து குறைபாட்டினால் புராஸ்டேட் சுரப்பியின் உருப்பெருக்கம் (hypertrophy) உண்டாவதாக சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே துத்தநாக சத்துள்ள இறைச்சி, கடல் மீன்கள், முளை கட்டிய தானியங்கள், கொட்டை வகைகள் இவற்றை நாடுவது புராஸ்டேட் சுரப்பின் வளர்ச்சியைத் தடுக்க உதவும். பாரம்பரிய அரிசியான மாப்பிள்ளைச் சம்பா அரிசியில் இயற்கையாகவே இச்சத்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    இந்நோய் நிலையில் அதிமுக்கியமாக மாலை நேரத்தில் குடிக்கும் தண்ணீரின் அளவைக் குறைப்பது நல்லது. இது இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதைக் குறைக்க உதவும். அதே போல் நீர்பெருக்கி காய்கறிகளை தவிர்ப்பதும் நல்லது.

    உணவு முறைக்கும், வாழ்வியல் முறைக்கும், புராஸ்டேட் சுரப்பியின் வீக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. நல்ல உடல் பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ளும் முதியவர்களுக்கு புராஸ்டேட் நோயின் தாக்கம் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுவது சிறப்பு.

    மருத்துவர் சோ.தில்லைவாணன்

    அதே போல் அசைவ உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்பு சார்ந்த உணவுகளைக் குறைத்து, நார்ச்சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்ப்பது புராஸ்டேட் நோய்நிலையில் பலன் தருவதாக உள்ளதை ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சுட்டிக்காட்டுகின்றது. இன்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கூறுவதைத் தான் ஆதி மருத்துவமாம் சித்த மருத்துவமும் கூறியுள்ளது. அத்தகைய வழிமுறைகளை பின்பற்றி வாழ்வது முதுமையில் நோய்களை துரத்தி நலத்தை வரவழைக்கும்.

    தொடர்புக்கு:

    drthillai.mdsiddha@gmail.com

    8056040768

    Next Story
    ×