என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

ஞானவாசலை திறக்கும் வாசி
- மூச்சானது சாதாரணமாக வலது, இடது நாசிகளில் மாறிமாறி ஓடிக்கொண்டு இருக்கும்.
- மகான் மாணிக்க வாசகர் நம் உடலிலே 9 வாசல்கள் உள்ளது.
வாசகர்களே, சில உடற்பயிற்சிகள் மூலமாக மூச்சை நாசிகளில் மாற்றும் முறை பற்றி ஜீவ பிரம்ம ஐக்கிய வேதாந்த ரகசியம் என்கின்ற நூலில் மகான் சச்சிதானந்த யோகீலவரர் அவர்களாலும் அதையே உபாயத்தோடு வேதாதிரி மகரிஷி அவர்களாலும் விளக்கப்பட்டுள்ளது.
மூச்சானது சாதாரணமாக வலது, இடது நாசிகளில் மாறிமாறி ஓடிக்கொண்டு இருக்கும். இடது நாசியை தாயாருடைய நாடி என்றும் வலது நாசியை தந்தையுடைய நாடி என்றும் சுமுமுனை நாடியை குருநாடி என்றும் அழைக்கிறோம். ஒவ்வொரு ஒரு மணி நேரம் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை இந்த சுவாசம் மாறி நடந்து கொண்டே இருக்கும். எனவே நாடி சுத்தி பிராணாயாமம் மூலமாக ஒரு மனிதர் குரு நாடியை இயக்கலாம் என்கிறார்கள்.
இதை மகரிஷி அவர்கள், எளிய முறை குண்டலினி யோக தியான பயிற்சிகளிலும், எளிய முறை குண்டலினி யோக உடற்பயிற்சிகளிலும் நமக்கு ஒரு உபாயமாகவே அளித்து இருக்கிறார். குறிப்பாக உடற்பயிற்சியில் கை பயிற்சி, நரம்பு தசை நார் மூச்சு பயிற்சியிலும், காயகல்பம் பயிற்சியிலும் மற்றும் நித்தியானந்த தவத்திலும் இந்த உபாயங்களை கொடுத்து இருக்கிறார். எனவே, குண்டலினி யோகத்தின் திறவு கோள் நாடி சுத்தி பிராணாயாமம் என்று சித்தர்களால் சொல்லப்படுகிறது.
மனிதர்கள், உலகத்தில் பகுத்தறிவை பயன்படுத்தி எவ்வளவு தான் கற்றாலும் தன்னை அறியாததால், 95 சதவீதம் மக்கள் இறைவனை தன்னில் இருந்து வேறு படுத்தி பார்க்கிறார்கள். ஞானம் பெற்றவர்களுடைய நிலைகளை ஆராய்ந்து பார்ப்பதற்கு, அறிவு திறன் விரிவடையாததால் இந்த நிலை ஏற்பட்டு நடமாடும் கற்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். எனவே, மனிதர்கள் தன் கருவை உணர்வதற்கு, குண்டலினி யோகம், மற்றும் ஆத்ம வித்தை என்ற இரண்டு வழிகள் உள்ளது என்று மகான்கள் கூறுகின்றனர்.
குண்டலினி யோகத்தின் மூலம் நமது நாடிகளை சுத்தம் செய்து கொள்ளலாம். தியானத்தின் மூலமாக நமது மூலாதாரத்தில் உறங்கி கொண்டு இருக்கும் குண்டலினி சக்தியை மேல் எழுப்பி, நமது முன்னோர்கள் மூலமாக நாம் பெற்ற சஞ்சித கர்ம வினை பதிவுகளையும், நமது 3 வயது முதல் இந்த நிமிடம் வரை, நாம் செய்த பிராப்த கர்மாவின் பதிவுகளையும் ஒழித்து அதன் பின்பு ஆத்ம தரிசனம் பெறலாம் என்று உபதேசங்கள் கூறுகிறது.
மனிதர்களுடைய உடல், மனம், உயிர் தத்துவங்களான 96ல், 59 தத்துவங்கள் ஸ்தூல தத்துவங்களாகவும், 36 சூக்கும தத்துவங்களாகவும், 1 அதி சூக்கும தத்துவமாகவும் உள்ளது என்பதை நாம் அறிவோம்.
இதில், சூக்கும தத்துவத்தில் உள்ள 36ல், அந்த கரணம் என்று சொல்லப்படும் மனம், புத்தி, சித்து, அகங்காரம் என்ற நான்கும்தான் மனிதர்கள் ஆகிய நாம் மீண்டும், மீண்டும் பிறப்பதற்கும், இறப்பதற்கும் காரணமாக அமைகிறது. இதில் குறிப்பாக சித்தம்தான் எண்ணங்களின் பாசறை என்றும் நம் கர்மாவின் மூலஸ்தானம் என்றும் சொல்லப்படுகிறது.
இதில் இந்த சித்தம் அழிந்தால், நமது நெஞ்சின் மூலப்பொருளை காண முடியும். அதாவது, சித்தத்தை நாசம் செய்தால்தான் மற்ற மூன்று கரணங்களும் அழியும்.
இதையேதான் சித்தர்கள் பாடலிலே, சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி, சப்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி என்கிறார்கள்.
இதையே அருட் பிரகாச வள்ளளார் "கையளவு இல்லாத நடுக்கண் புருவ பூட்டு கண்டு களி கொண்டு திறந்துண்டு நடு நாட்டு மணிக்கதவை திறப்பாயோ மறைப்பை எல்லாம் நீங்கி" என்று குறிப்பிடுகிறார். அதாவது ஜோதி நிலையை பார்ப்பதற்கு, உடலின் சிரசு பகுதியில் வாசல் ஒன்று உள்ளது. அது மிக மிக நுண்ணிய சவ்வினால் மூடப்பட்டு உள்ளது என்றும் மாயா சக்தி என்கின்ற 6 திரைகள் மறைப்பை எல்லாம் நீக்கி, பூட்டை திறந்தால் 7ம் திரை கடந்து மணிக்கதவு திறந்து தரிசனம் கிடைக்கும் என்கிறார்.
இதையே, மகான் மாணிக்க வாசகர் நம் உடலிலே 9 வாசல்கள் உள்ளது. அதன் வழியாக சுவாசம் சென்று, சுவாச கணக்கு தீர்ந்தவுடன் மரணம் ஏற்படுகிறது. ஆனால், 10வது வாசல் ஒன்று உள்ளது. இதை யாரும் அறிவதில்லை. அதை திறந்தவர்களே ஞானம் பெற்றவர்கள் ஆகிறார்கள். அது நமது சிரசு பகுதியில் புருவ மத்திக்கு உள்ளே உள்ளது. அதனை திறப்பதற்கான சாவிதான் வாசி என்கிறார்.
இதையே, மகரிஷி ஒரு கவியிலே புருவத்திடை உந்தன் பூவிரலால் தொட்டு எந்தன் உயிர் உணர்த்தி என்று இந்த ஆக்கினை தவமாக கொடுத்து இருக்கிறார்.
இதையே, பட்டிணத்தார் ஒரு கவியிலே, "வாசிதனை பார்த்து மகிழ்ந்து உன்னை போற்றாமல், காசி வரை போய் திரிந்து கால் அலுத்தேன் பூரணமே" என்கிறார். அதாவது நாம் தேடும் சிவம், நமக்குள்ளேயே உள்ளது என்கிறார்.
பொதுவாக நாம் காசிக்கு செல்வது எதற்காக என்றால் நமது கர்மவினை பதிவுகளை போக்கி கொள்வதற்காக என்று அறிந்ததே. காசிக்கு சென்று வந்தவர்களிடம் கங்கா நீராடல் சிறப்பாக முடிந்ததா என்று நாம் கேட்க வேண்டும்.
மனவளக்கலை பேராசிரியர்கள் கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்
ஏனென்றால் காசியில் கங்கை நீரில் நீராடும் போது பொதுவாக மூன்று முறை நீரில் மூழ்கி எழுந்திருப்பார்கள். அதற்கு என்ன பொருள் என்றால், முதல் முறை மூழ்கும் போது ஸ்மரணா என்று சொல்லி மூழ்கி எழுந்தால் முன்னோர்கள் மூலமாக நாம் பெற்ற கர்மவினை பதிவுகளில் இருந்து தப்பித்து கொள்வதற்கும், இரண்டாம் முறை மூழ்கி எழும்போது ஸ்மரணா என்று சொல்லி நாம் செய்த கர்ம வினைகளில் இருந்து தப்பித்து கொள்வதற்கும், மூன்றாம் முறை ஸ்மரணா என்று சொல்லி மூழ்கி எழும்போது இனி நாம் வாழ வேண்டிய வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்று பிராத்தனை செய்து நீராட வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு காசி சென்று நீராட பாக்கியம் கிடைத்திருக்கிறது.
அப்படி அந்த வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு சித்தர்கள் சொல்லும் உபதேசம் என்னவென்றால் வாரணாசி என்னும் அபிமூர்த்தம் தனை மனதில நினைத்து தியானம் செய்திடு என்கின்றனர். அதாவது காசிக்கு மற்றொரு பெயர் வாரணாசி. வேறு ஒரு அர்த்தமும் உள்ளது.
நாசி என்றால் மூக்கு. மூக்குக்கு மேலே, புருவ மத்திக்கு நடுவே உள்ள இடத்தில் மனதை வைத்து மூச்சை சமன்படுத்தி தியானம் செய்தால், உட்கார்ந்த இடத்தில் இருந்தே காசிக்கு சென்று வந்த பலன் கிடைக்கும் என்கின்றனர். எனவே நாம் ஒரு முறை ஆக்கினை தவம் செய்தால் ஒரு முறை காசிக்கு சென்று வந்த பலன் கிடைக்கும்.
இதையே பட்டிணத்தார் மற்றொரு பாடலிலே "ஈராறு தன் கணக்குள் இருந்து கூத்து ஆடினதை காணாமல் அறிவிழந்தேன் பூரணமே" என்கிறார். (ஈராறு என்றால் 2X6 12 அங்குலம் மூச்சு காற்று). நமது சுவாசத்தின் அளவு 12 அங்குலம் ஆகும். இதில் 12 அங்குலம் வெளியே சென்று 8 அங்குலம் மட்டும் உள்ளே வருகிறது. எனவே 4 அங்குலம் சுவாசம் ஒவ்வொறு முறையும் நஷ்டம் அடைந்து நமக்கு மரணம் ஏற்படுகிறது. இந்த நஷ்டம் அடையக்கூடிய 4அங்குலம் சுவாசத்தை உள்ளே செலுத்தி, 12 அங்குல சுவாச கதியையும், உள்ளேயே ஒட செய்தால் ஞான வாசலை திறப்பதற்கான சக்தி கிடைக்கும்.
மற்றொறு சித்தர் பாடலிலே
"ஐவர்க்கு நாயகன், அவ்வூர் தலைமகன்
உய்யக் கொண்டு ஏறும் குதிரை மற்று
ஒன்றுண்டு
மெய்யார்க்கு பற்று கொடுக்கும் கெடாது
போய்
பொய்யாரை தள்ளி விழுந்திடுந்தானே"
என்கிறார்.
அதாவது ஐவர் என்பது பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் என்கின்ற பஞ்ச வாயுக்கள் ஆகும். மற்றொரு குதிரை என்பது வாசி யோகம். இதை நித்திய ஜீவன் என்கிறார். இது தான் ஆத்மாவில் இணைக்கும் வேலையை செய்கிறது. எனவே நாடி சுத்தி பிராணாயாமத்திற்கு எவ்வளவு முக்கியம் கொடுத்து இருக்கிறார்கள் என்பது இந்த சித்தர்கள் பாடல் மூலமாக தெரிகிறது.
இந்த காற்று வெளியே இருக்கும் போது வளிமண்டல வாயு என்று பெயர். நாம் மூச்சை உள்ளே இழுக்கும் போது இந்த வாயு சென்றவுடன் பிராணணாக மாறி விடுகிறது. இதுவே வயிற்றுக்கு உள்ளே செல்லும் போது சமானனாக மாறி விடுகிறது (செரித்தல்). செரித்தலில், கெட்டதை பிரித்து நல்லதை உள்ளேயே தங்க வைத்து, கெட்டதை வெளியே தள்ளும் போது அபானனாக மாறுகிறது. சத்துக்களை பிரித்து நமது மூளையில் தங்குவது தான் உதானன். பிறகு உடல் முழுக்க இதை பரவ விடுவது வியானன்.
இந்த பஞ்ச வாயுக்களையும் நாம் தெளிவாக வைத்தால் நோய் வராது. இது நாடி சுத்தி பிராணாயாமத்தில் கிடைக்கிறது. அதேபோல் மகரிசியால் உருவாக்கப்பட்ட உடற்பயிற்சியில் கை பயிற்சியின் நிலை 3, 4 மற்றும் 5ல் இந்த பஞ்ச வாயுக்கள் சமன் பெற்று உடல் முழுவதும் பிராண சக்தி சீராக இயக்கம் பெறுகிறது.
சமானன் என்பது சரியான உணவு + பிராண சக்தி. சரியான உணவு என்பது குளுக்கோஸ் சத்து. பிராண சக்தி என்பது எனர்ஜி+ Co2. இந்த Co2 ஆனது அபானனாக வெளியேறும். எனர்ஜி மேல் நோக்கும் போது உதானன், அதுவே பரவும்போது வியானன்.
இந்த இயக்க சக்தியை நாடி சுத்தி மூலம் முறைபடுத்தும் போது உமிழ்நீர் சரியான முறையில் சுரக்கும். இந்த உமிழ் நீரிலே 24 வகையான புரோட்டீன் சத்து உள்ளது. முக்கியமாக நரம்பு வளர்ச்சி ஒவ்வொரு மூளை நரம்புகளுக்கும் இணைப்பு பாலமாக இருக்கும். உதாரணத்திற்கு ஒரு விஷயத்தை கேட்டால் அல்லது ஒரு காட்சியை பார்த்தால் 10 வருடங்களுக்கு பிறகு கூட அப்படியே வரித்து காட்டும். இப்படி அற்புதமான பல விந்தைகளை வெளிப்படும் ஒரு அற்புதமான பயிற்சிதான் இந்த சரகலை.
சரம் அடுத்த இதழில்தொடரும். போன்: 9444234348






