search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    குடியுரிமை திருத்தச்சட்டம் சர்ச்சை ஆனது ஏன்?
    X

    குடியுரிமை திருத்தச்சட்டம் சர்ச்சை ஆனது ஏன்?

    • குடியுரிமை என்பது அவரது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள நாடு.
    • ஒரு நாட்டின் மைய அரசால் தேசியக் குடியுரிமை விதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

    "நேஷனாலிட்டி" (தேசியம்) மற்றும் "சிட்டிசன்ஷிப்" (குடியுரிமை) ஆகிய இரண்டுக்கும் இடையே நுணுக்க வேறுபாடே உள்ளது.

    தனிநபரின் பிறந்த இடம் அல்லது வம்சாவளியைக் குறிப்பது தேசியம். குடியுரிமை என்பது அவரது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள நாடு. சில நாடுகளில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட குடியுரிமை கொண்டவராக இருக்க முடியும். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட "நேஷனாலிட்டி" கொண்டவராக இருக்க முடியாது அல்லவா?

    எனவே குடியுரிமைச் சட்டம் உலகெங்கிலும் "கொடுக்கும் சட்டம்" என்று கருதப்படுகிறது. உரிமையைப் பறிப்பவை முடக்கும் சட்டங்கள். எடுத்துக்காட்டாக பொது அமைதி காரணங்களுக்காகப் பிறப்பிக்கப்படும் சில சட்டங்கள் ஆகும்.

    ஒரே சட்டம் இரண்டுமாக இருக்க முடியாது. ஆனால் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் குடியுரிமைச் சட்டம் 2019 மற்றும் அதன் திருத்த விதிகள் பல்வேறு பாகு பாடுகள் காரணமாக அப்படி இருப்பதாகச் சட்ட நிபுணர்கள் கருதுகிறார்கள்.

    ஒரு நாட்டின் மைய அரசால் தேசியக் குடியுரிமை விதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆனால் சட்ட விதிகள் ஒரே சீராக இல்லாத காரணத்தால் எந்த நாட்டின் குடியுரிமையையும் பெற்றிருக்காத நிலை, இரட்டைக் குடியுரிமை போன்ற சிக்கல்கள் எழுந்தன. அவற்றை முடிவுக்கு கொண்டு வர நெதர்லாந்தின் ஹேக் நகரில் ஒரு மாநாடு 1930ல் நடந்தது.

    அதில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதை பல நாடுகள் ஏற்றுக் கொண்டன. திருமணமான பெண்களின் தேசியக் குடியுரிமை சார்ந்த உடன்படிக்கை 1957ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. எந்த நாட்டின் தேசியக் குடியுரிமையையும் பெற்றிராத நிலைக்குத் தீர்வு காணக் கூடிய வேறு சில உடன்படிக்கைகள் 60களுக்குப் பிறகே ஏற்றுக் கொள்ளப்பட்டன.

    சர்வதேசச் சட்டப்படி ஒரு நாட்டின் அரசு தன் தேசியக் குடியுரிமையைக் காப்பதற்காக ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் தலையிடலாம். எனவே குடியுரிமைச் சட்டத் திருத்தம் கொண்டுவர இந்திய அரசுக்கு உரிமை இருக்கிறது. தடுக்கும் உரிமை மாநிலங்களுக்கு இல்லை.

    இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 11 குடியுரிமை குறித்த சட்டம் இயற்றுவதற்கு வகை செய்தது. அதன் அடிப்படையில் "இந்தியக் குடியுரிமைச் சட்டம்-1955" இயற்றப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட காலத்திற்கு முன்பு இந்தியாவில் குடியிருந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு அதன் மூலம் வழி செய்யப்பட்டது.

    இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கான விதிகள் பின் வருமாறு:-

    1. பிறப்பால் அடைதல்: இந்தியக் குடியுரிமைச் சட்டம்-1955-ன் பிரிவு 3-ன் படி, அரசியல் அமைப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்ட தேதிக்கு முன் இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும்.

    2. மரபுவழிக் குடியுரிமை: இந்தியக் குடியுரிமைச் சட்டம் பிரிவு 4 இதற்கு வகை செய்கிறது. ஒருநபர் 26.01.1950 க்குப் பின்போ அல்லது 1992-ம் ஆண்டு திருத்தப்பட்ட இந்தியக் குடியுரிமைச் சட்டத்திற்கு முன்போ வெளிநாட்டில் பிறந்திருந்து அவருடைய தந்தை இந்தியக் குடிமகனாக இருந்தால், அவர் மரபுவழிக் குடியுரிமை பெறத் தகுதி உள்ளவர்.

    3. பதிவு செய்தல்: குறிப்பிட்ட வருடங்கள் இந்தியாவில் வாழ்ந்திருந்தால் உரிய அனுமதிகளுடன் இந்தியக் குடிமகன் என்ற பதிவைப் பெறலாம். இது அனைத்து நாட்டினருக்கும் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது.

    இதில் இப்போது ஒரு முக்கிய திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு மட்டும் விலக்குத் தரப்படுள்ளது. இவற்றிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப்பிரிவினர்கள் சில குறிப்பிட்ட நிபந்தனைகள் அடிப்படையில் குடியுரிமைக் பெறலாம்.

    வெளிநாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் இந்தியக் குடிமகனாக முடியாது. அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள். அல்லது முகாம் மற்றும் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

    ஆனால் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் சட்டத் திருத்தம் மூலம் அவர்களை இந்தியக் குடிமகனாக அங்கீகரிக்க வழிவகை செய்யப்படுகிறது. ஆனால் அந்தப் பட்டியலில் இஸ்லாமியர்கள் இல்லை. இந்துக்களான இலங்கைத் தமிழர்களும் இல்லை. அவர்களும் பவுத்தமதவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தான் என்ற வாதததை ஏற்றுக்கொள்ள மத்திய அரசு மறுத்து விட்டது.

    பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்து, சீக்கியர்கள், பவுத்தர், சமணர், பார்சி, கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு மட்டும் சலுகை தரப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்பதே திருத்தம். கெடு தேதி நீட்டிக்கப்பட்டு 2014-ம் ஆண்டு டிசம்பர் 31- ந் தேதிக்கு முன் குடியேறிய மேற்கண்ட பிரிவினர் (அதாவது பா.ஜனதா ஆட்சிக்கு வந்த வருடம்) இந்தியக் குடியுரிமை பெற வழி செய்யப்பட்டுள்ளது.

    குடியுரிமைச் சட்டத்திருத்த விதிகள் அமலுக்கு வந்ததை வடகிழக்கு மாநிலங்கள் பெரிய அளவுக்கு எதிர்க்கின்றன. ஏன்?

    வங்கதேசத்திலிருந்து வந்த இரண்டு லட்சம் வங்காள இந்து அகதிகள் அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தங்கி உள்ளனர். புதிய சட்டத் திருத்தம் மூலம் வங்கதேச அகதிகள் மேலும் அதிகரிப்பார்கள்.

    அது அஸ்ஸாமின் பூர்வகுடி ஜனத்தொகை விகிதாச்சாரத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும். அவர்கள் சொந்த பூமியில் சிறுபான்மை ஆகும் அபாயம் உள்ளது.

    அஸ்ஸாமில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறிய தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) நடவடிக்கை முன்பு மேற்கொள்ளப்பட்டது. அதற்கான காலக்கெடு 1971-ம் ஆண்டு மார்ச் 24 என்று நிர்ணயிக்கப்பட்டது.

    ஆனால் புதிய குடியுரிமை சட்டத்திருத்தம் 2014 டிசம்பர் 31 வரை வங்கதேச இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்க வழி செய்கிறது. அவர்கள் இதற்கு முன் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்.ஆர்.சி.) விலக்கப்பட்டிருந்தவர்கள்.

    அதே நேரத்தில் காலங்ககாலமாய் வட கிழக்கின் வனப் பகுதிகளில் வாழந்துவரும் ஆதிவாசிகள் தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற முடியவில்லை. அவர்கள் மேல்முறையீடு செய்துவிட்டு கோர்ட்டுக்கும், வீட்டுக்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் வங்கதேச இந்துக்களுக்கு சுலப விலக்கு கிடைத்துள்ளது.

    தராசு ஷ்யாம்

    தேசியக் குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) மதத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. ஆனால், குடியுரிமை சட்டத் திருத்தம் மதத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பல அமைப்புகள் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை எதிர்க்கின்றன.

    நுழைவு அனுமதிப் படிவம் (இன்னர்-லைன் பர்மிட்) மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் அருணாசலப்பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய பகுதிகளுக்குச் சட்டத் திருத்தத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    அதாவது குடியுரிமை சட்டத்திருத்தம் இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் பொதுவானது அல்ல. எனவே தமிழ்நாடு மாதிரி லட்சக்கணக்கான இலங்கை அகதிகள் இருக்கும் மாநிலத்திற்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்பதே நியாயமானது.

    குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்பாளர்கள் கூறுவது என்ன?

    1. மதச்சார்பின்மை எனும் இந்தியாவின் அடித்தளத்தை இது சிதைக்கிறது.

    2. மதத்தை அடிப்படையாகக் கொண்டு குடியுரிமை வழங்கப்படக் கூடாது. ஏன் என்றால் மதத்தின் பெயரால் ஒருவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம். ஆனால் சட்டத்திருத்தம் மதப்பாகு பாட்டிற்கு அப்பட்டமான அங்கீகாரம் தருகிறது.

    3. குடியுரிமை சட்டத் திருத்தம் "சட்டத்தின் முன் அனைவரும் சமம்!" என்ற கோட்பாட்டைப் செல்லாததாக்குகிறது.

    4. மதப்பாகுபாட்டால் அகதிகளான சிறு பான்மையினரின் பாதுகாப்புக்காகத்தான் சட்டத் திருத்தம் என்றால் இஸ்லாமியர்களைச் சேர்த்து இருக்க வேண்டும். பாகிஸ்தான் அகமதியாக்களையும், மியான்மர் ரோகிஞ்சாக்களையும் (அந்தந்த நாடுகளில் பெரும்பான்மை மதப் பிரிவினரின் அடக்குமுறைக்கு உள்ளான இஸ்லாமியர்கள்) ஏன் சேர்க்கவில்லை?

    5. இலங்கையில் இன்னல்களையும், பவுத்த பேரின வாதத்தையும் சந்தித்து வரலாறு காணாத மானுட சோகத்திற்கு உள்ளான ஈழத்தமிழர்களை ஏன் விட்டுவிட்டார்கள்?

    சட்டத்திருத்தத்தை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?

    1. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளும் இஸ்லாமியப் பெரும்பான்மை நாடுகள். ஒன்று அரசே இஸ்லாமிய அரசாக இருக்கிறது, அல்லது அங்கு இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

    2. அவர்கள் அங்குள்ள சிறுபான்மை மக்களைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு தேவை.

    3. அதற்காகத்தான் குடியுரிமைச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. குடியுரிமை பெற அவர்கள் அனுபவிக்கும் துயரங்களைப் போக்குவதற்குப் புதிய சட்டத் திருத்தம் வழி வகுக்கும்.

    4. சட்டத்திருத்தம் குடியுரிமை வழங்குவதற்காகத்தானே தவிர பறிப்பதற்காக அல்ல.

    வங்கதேசப்பிரிவினையின் (1970-71) போதும், இடி அமீன் காலத்தில் (1972) உகாண்டாவில் இந்தியர்கள் தாக்கப்பட்டபோதும் வேறு சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி சிறப்புச் சலுகைக் குடியுரிமை ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே புதிய சட்டத் திருத்தமே தேவை இல்லை என்பதே உண்மை.

    ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வியூகங்களுக்காக குடியுரிமைச் சட்ட திருத்தத்தைப் பயன்படுத்துகிறது பாரதிய ஜனதா.

    மேற்குவங்கத்தில் வங்கதேச எல்லையில் அடர்த்தியாக வாழும் "நாம சூத்திரா" வகைப் பிரிவினர் இந்துக்கள். கங்கை நன்னீர் மற்றும் கழிமுகப்பகுதிகளில் மீன் பிடித்தல் மற்றும் சதுப்பு நிலச் சாகுபடி செய்தல் ஆகியவை அவர்களது வாழ்வியல்.

    மாநில எல்லைகள் இல்லாத காலத்தில் இன்றைய மேற்கு வங்கத்தின் அண்டை மாநிலங்களிலும் நாமசூத்திரர்கள் குடியேறி உள்ளனர். வரலாற்றால் மறக்கடிக்கப்பட்ட அவர்களுக்குக் குடியுரிமை என்ற ஒன்று இருப்பதே தெரியாது. 2019 தேர்தல் காலத்தில் அவர்கள் வாக்குகளைக் கவர பாரதிய ஜனதா முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றது.

    மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளில் அது 40 சதவீத வாக்குகளைப் பெற்று 18 இடங்களைக் கைப்பற்றியது. 2024ல் நாமசூத்திர வாக்கு வங்கியால் மொத்தம் உள்ள அத்தனை இடங்களையும் அள்ளிவிடலாம் என்று நினைக்கிறது பாரதிய ஜனதா. அதற்குக் குடியுரிமைச் சட்டத் திருத்தம் உதவும் என்பது அதன் கணக்கு.

    இந்துக்களான நாமசூத்திரர்கள் மத்தியில் இப்போது குடியுரிமைக் கனவு ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் அண்டை மாநில விழிப்புணர்வு இயக்கங்கள் எதிர்க்கின்றன. தேசவிரோத முத்திரை குத்தப்பட்டு அவை அடக்கி ஒடுக்கப்படுகின்றன.

    சுருக்கமாகச்சொன்னால், குடியுரிமைச் சட்டதிருத்தம் வாக்கரசியலுக்காக இந்து-முஸ்லிம் பிரிவினைவாதத்தை முன்னெடுக்கிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள காலகட்டத்தில் பா. ஜ. ஆதரவு அதிகம் உள்ள வட மாநிலங்களில் இந்து ஓட்டு வங்கியை மேலும் ஒருமுனைப்படுத்த முனைகிறது பாரதிய ஜனதா என்பது தான் உண்மை.

    ஓட்டுக்காக நாட்டைப் பிளவுபடுத்துவது பேராபத்து.

    Next Story
    ×