search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    முழு உடல் பரிசோதனை அவசியம் ஏன்?
    X

    முழு உடல் பரிசோதனை அவசியம் ஏன்?

    • நமது உடலில் ஏதாவது ஒரு நோய் வருவதற்கு முன்பே அதனை கண்டறிந்து நமது உடல் நலனை பாதுகாத்துக் கொள்ளலாம்.
    • முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என நீங்கள் நினைத்தால் அன்றைய தினம் காலையில் டீ, காபி உள்பட எதுவுமே சாப்பிடாமல் செல்லுங்கள்.

    'லேசாகத் தலைவலிக்கிறது' என்று சொன்னால் கூட, அனைவரும் சொல்லும் முதல் வார்த்தை ஆஸ்பத்திரிக்கு சென்று முழு உடல் பரிசோதனை செய்து பார் என்பது தான்.

    அந்த அளவுக்கு படித்தவர்கள் முதல் படிக்காத பாமரர்கள் வரை அனைவரது மனதிலும் பதிவாகி விட்ட ஒரு வார்த்தையாகி விட்டது முழு உடல் பரிசோதனை.

    இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் நாம் நமது உடல் நலனை நன்றாக கவனித்து கொள்கிறோமா என்று நம்மை நாமே முதலில் கேட்டு பார்த்தால், இல்லை என்று தான் சொல்ல தோன்றும். அந்தளவுக்கு உடல் நலனை பற்றி அக்கறைப்படுவதற்கோ அல்லது கவலைப்படுவதற்கோ நமக்கு அதற்கான நேரம் இருப்பதே இல்லை.

    உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதைப் பொறுத்தவரை பலரும் நோய் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றே நினைக்கின்றனர்.

    நோய் அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கும் வரை காத்திருக்கின்றனர். உதாரணத்துக்குத் தலைச்சுற்றல், மயக்கம் வந்தால் உயர் ரத்த அழுத்தம் இருக்க வாய்ப்புள்ளது. அதிகமாகச் சிறுநீர் கழிப்பது, புண் ஆறத் தாமதம் ஆகிறது என்றால் நீரிழிவு நோய் வந்துவிட்டது என்று அர்த்தம். இப்படி நோய் வந்த பிறகு உடலை போட்டு சிரமப்படுத்துவதைவிட, அந்த நோய் தலையெடுக்கும் முன்பே அதனை கண்டுபிடித்து, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து சிகிச்சை மேற்கொள்வது தான் புத்திசாலித்தனமானது. உடல் வலி மற்றும் அறுவை சிகிச்சை போன்றவற்றையும் தவிர்த்து விடலாம். இதற்கு முழு உடல் பரிசோதனை முக்கியம்.

    எல்லோரும் முழு உடல் பரிசோதனை செய்து கொள் என்று சொல்கிறார்களே உண்மையில், முழு உடல் பரிசோதனை என்பது என்ன, அது யாருக்கு அவசியம், அதில் செய்யப்படும் பரிசோதனைகள் மூலம் என்னென்ன நோய்களைக் கண்டறிய முடியும்? என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

    நமது உடலில் ஏதாவது ஒரு நோய் வருவதற்கு முன்பே அதனை கண்டறிந்து நமது உடல் நலனை பாதுகாத்துக் கொள்ளலாம். அந்த வகையில் முழு உடல் பரிசோதனையானது அதற்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது. இன்றை இளம் தலைமுறையினரிடம் 'நோய் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்' என்ற மனநிலையே மேலோங்கி நிற்கிறது. நோய் முற்றிய பின்னரே ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். முன்னதாகவே பார்த்து விட்டால் நன்றாக இருக்கும்.

    இருந்தாலும், எல்லோரும் இந்த பரிசோதனை செய்து கொண்டு தான் ஆக வேண்டும் என்பதில்லை. பொதுவாக, 35 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, ரத்தப் புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற ஏதாவது மரபு வழி நோய்கள் இருந்தால் அந்தக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் 35 வயதுக்கு முன்பாக இந்தப் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது. பல்வேறு நோய் அறிகுறிகள் உள்ளவர்களும் இந்த சோதனையை மேற்கொள்ளலாம். இதுமட்டுமின்றி தங்கள் உடம்பில் நோய் இருக்கிறதா? இல்லையா? என்பதை பார்க்க விரும்புபவர்களும் முழு உடல் பரிசோதனை செய்து பார்த்து கொள்ளலாம்.

    புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள், ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுபவர்கள் போன்றோர் வருடத்துக்கு ஒரு முறை கட்டாயம் இந்த பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். அதிக டென்ஷன் உள்ள வேலைகளை செய்வோர், ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களும் செய்ய வேண்டும். உடல் உழைப்பு இல்லாமல் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்கள் எந்த நோய் இல்லாவிட்டாலும் 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் தொடக்க நிலை மற்றும் முற்றிய நிலையில் உள்ள நோய்களை நாம் கண்டறிய முடியும். அப்படி கண்டறிந்தால் அதற்கான சிகிச்சைகளை அப்போதே தொடங்கி அதனை செய்து கொள்ள முடியும். இதற்கு முழு உடல் பரிசோதனை மிகவும் அவசியமானது.

    முழு உடல் பரிசோதனை செய்து விட்டோம் பல நாட்கள் கழித்து தான் முடிவுகள் வரும் என எண்ண வேண்டாம். ஒரே நாளிலேயே அதன் முடிவுகளும் உடனே தெரிவிக்கப்பட்டு விடுகிறது.

    என்னென்ன பரிசோதனைகள்?

    பொதுவாக ரத்தம், சிறுநீர், மலம் தொடர்பான பரிசோதனைகள், மார்பக எக்ஸ்ரே, காது, மூக்கு, தொண்டை, பல், கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ஈசிஜி, டிஎம்டி, எக்கோ, கார்டியோ கிராம், பெண்களுக்கு மேமோகிராம், ஆஞ்சியோ கிராம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இந்த முழு உடல் பரிசோதனையில் உள்ளது. இதுமட்டுமின்றி முழு உடல் பரிசோதனை செய்ய வருபவர்களிடம் அவர்களின் பழக்க வழக்கங்கள் பற்றியும் கேட்டு அறியப்படும். அப்போது அவர்களுக்கு இந்த சிகிச்சை முறையிலோ அல்லது வேறு ஏதாவது சந்தேகங்கள் இருந்து எங்களிடம் கேட்பவர்களுக்கு அதற்கான விளக்கத்தையும் கொடுக்கிறோம்.

    இந்த முழு உடல் பரிசோதனையில், நோய் அறிகுறிகளுக்கு ஏற்பவும் பரிசோதனைகள் விரிவடைந்து கொண்டே செல்கின்றது. முழு உடல் பரிசோதனையின்போது ஏதேனும் நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டால், அதை உறுதி செய்வதற்காக கூடுதல் பரிசோதனைகள் தேவைப்படும். முழு உடல் பரிசோதனையின்போது அந்த நபருக்கு கூடுதல் பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனையானது சலுகை கட்டணத்திலேயே செய்யப்பட்டு வருகின்றன.

    முழு உடல் பரிசோதனை செய்யும்போது, நமது உடலில் உள்ள பல், கண், காது, மூக்கு, தொண்டை போன்ற பல உறுப்புகளில் ஏற்படும் நோய்களை முன்கூட்டியே நாம் தெரிந்துகொள்ள முடியும். ரத்த பரிசோதனையில் ரத்த சோகை, ரத்தப் புற்றுநோய், நீரிழிவு நோய் பாதிப்பு தெரியவரும். நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு, அளவைக் கண்டறிவதன் மூலம் இதயத்தின் இயங்கும் தன்மையை அறியலாம்.

    இந்த சோதனையின் மூலம் மாரடைப்பு அபாயத்தையும் முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் அதனை தடுப்பதற்கான மருத்துவ சிகிச்சையையும் நாம் எடுத்து கொள்ளலாம்.

    இ.சி.ஜி., டி.எம்.டி.(ட்ரெட் மில் டெஸ்ட்) மற்றும் ஆன்ஜியோகிராம் மூலம் மாரடைப்பு நோயை கண்டுபிடிக்கலாம். ரத்த அழுத்த அளவு பரிசோதனையில் ரத்தக் கொதிப்பு வாய்ப்புகளைக் கண்டறியலாம். எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் மற்றும் புராங்கைட்டிஸ் பரிசோதனை மூலம் நுரையீரல் பாதிப்பு, நுரையீரல் புற்றுநோய் மற்றும் நிமோனியா பாதிப்புகளை கண்டறியலாம். இதன் மூலம் ஏற்பட வாய்ப்புள்ள மாரடைப்பு, பக்கவாதத்தையும் கண்டுபிடிக்கலாம். மேமோகிராம் பரிசோதனை மூலம் மார்பக புற்றுநோயைக் கண்டறியலாம்.

    அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கல்லீரல் இயக்கம், கொழுப்பு படிந்த கல்லீரல், கல்லீரலில் ஹெபடைடீஸ் பாதிப்பு, கல்லீரலில் சிரோசிஸ் மற்றும் புற்றுநோய் பாதிப்புகளைக் கண்டறியலாம்.

    இத்தகைய பரிசோதனைகள் மூலம் பித்தப்பைக் கற்கள், குடல் மற்றும் குடலுக்கு வெளியே உள்ள பாகங்களில் ஏற்படும் பாதிப்புகள், சிறுநீரக செயல்பாடு, புராஸ்டேட் புற்றுநோய் அபாயம், பெண்களுக்கு கர்ப்பப்பை ஆகியவற்றில் தோன்றும் சாதாரணக் கட்டிகள் முதல் புற்றுநோய் வரை இந்த சிகிச்சை முறையின் மூலம் கண்டறிந்து விட முடியும்.

    டாக்டர்கள் ஜோசப், ஸ்மித்தா அசோக் கே.எம்.சி.எச். மருத்துவமனை, கோவை.

    முழு உடல் பரிசோதனை மேற்கொள்பவர்களுக்கு பரிசோதனையின்போது ஏதாவது பாதிப்புகள் கண்டறியப்பட்டால், எந்த நோய் இருக்கிறதோ, அந்தந்த நோய்களுக்கு ஏற்ப துறை ரீதியான மருத்துவர்களிடம் அழைத்து செல்லப்படுவார்கள்.

    அந்த மருத்துவர்கள், அவர்களுக்கு அந்த நோயின் தன்மை குறித்தும், எந்த நிலைமையில் உள்ளது, அதனை எப்படி சரி செய்ய வேண்டும், அதற்கான சிகிச்சை முறை என்பதையும் விரிவாக விளக்கி கூறுவார்கள். மேலும் அவர்களுக்கு தேவையான ஆலோசனையை வழங்குவதுடன், அந்த நோய்க்கான உரிய சிகிச்சைகளையும் மேற்கொண்டு அவர்களை அந்த நோயில் இருந்து முற்றிலும் குணப்படுத்தி விடுவார்கள்.

    முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என நீங்கள் நினைத்தால் அன்றைய தினம் காலையில் டீ, காபி உள்பட எதுவுமே சாப்பிடாமல் செல்லுங்கள். ஏதாவது நோய்க்கு மருந்து சாப்பிடுபவர்களாக நீங்கள் இருந்தால், அது தொடர்பான மருத்துவ அறிக்கையை கையுடன் எடுத்து சென்று டாக்டர்களிடம் காண்பித்து விட்டு, முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    எங்களது ஆஸ்பத்திரியில், முழு உடல் பரிசோதனை செய்ய நீங்கள் விரும்பினால் எங்களது மையத்துக்கு முன்கூட்டியே போன் செய்து பதிவு செய்து வைத்து கொள்ளுங்கள். ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் தவிர மற்ற அனைத்து தினங்களிலும் இந்த மையமானது செயல்பட்டு வருகிறது.

    வருமுன் காப்பதே சிறந்தது என்ற வாக்கியத்திற்கு ஏற்ப நாம் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் இருப்பதற்கு நாம் ஆண்டிற்கு ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது மிகவும் அவசியமானது. அப்படி செய்து கொண்டோமேயானால் நாம் இந்த பூமியில் இருக்கும் வரை சந்தோஷத்துடனும், உற்சாகத்துடனும் நமது பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கலாம்.

    தொடர்புக்கு:

    73393 33485

    Next Story
    ×