என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • சந்திரன் பற்றி புராணங்களிலும், வேதங்களிலும் ஏராளமான குறிப்புகள் உள்ளன.
    • சந்திரனுக்கு சூரியன், புதன் ஆகிய இரண்டும் நட்பு கிரகங்கள் ஆகும்.

    நவக்கிரகங்கள் ஒவ்வொன்றின் இருப்பிடம், நகரும் திசை, பார்க்கும் பார்வை ஆகியவற்றை பொறுத்து அவை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்கள் சுபமாக இருந்தால் வாழ்க்கையில் நல்லது நடக்கும். இல்லையென்றால் அவை தோஷமாக மாறி விடும்.

    அந்த வகையில் சந்திரன் கிரகத்துக்கும் மனிதர்கள் வாழ்க்கையில் நல்லது-கெட்டது செய்யும் ஆற்றல் உண்டு. ஒருவரது மனநலம் எப்படி இருக்கிறது என்பதை தீர்மானிக்கும் ஆற்றல் சந்திரனுக்கு மட்டுமே உண்டு. அதுபோல மூதாதையர்களை பற்றி அறிந்து கொள்ளவும் சந்திரன் உதவி செய்கிறது.

    ஜோதிடர்கள் சந்திரனை மாத்ருகாரகன் என்று சொல்வார்கள். அதாவது சந்திரன் தாயாரை குறிப்பதை இப்படி சொல்கிறார்கள். சந்திரன் பற்றி புராணங்களிலும், வேதங்களிலும் ஏராளமான குறிப்புகள் உள்ளன. மகாவிஷ்ணுவின் இருதயத்தில் தோன்றியவர் என்று சந்திரனை சொல்வார்கள்.

    பாற்கடல் கடையப்பட்டபோது லட்சுமிக்கு முன்னதாக இவர் தோன்றியதாகவும் குறிப்புகள் உள்ளன. பெரும்பாலான புராணங்களில் அத்திரி முனிவருக்கும், அனுசுயாவுக்கும் மகனாக பிறந்தவர் சந்திரன் என்று சொல்லப்பட்டு உள்ளது. சிவபெருமானின் இடது கண்ணாக இவர் திகழ்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    வெண்மைதான் இவருக்கு பிடித்த நிறம் ஆகும். அதனால்தான் வெள்ளை குதிரையை இவரது வாகனமாக வரையறுத்துள்ளனர். வெள்ளை உடை, முத்து, ஈயம் போன்றவை இவரோடு தொடர்புடையவை. மன்மதனுடைய வெண் கொற்றக் குடையாகவும் இவர் திகழ்கிறார்.

    தட்சனின் 27 மகள்கள் 27 நட்சத்திரங்களாக கருதப்படுகிறார்கள். இந்த 27 பெண்களையும் சந்திரன் திருமணம் செய்துள்ளார். அந்த 27 பேரில் ரோகிணியிடம் மட்டும் சந்திரன் அதிக அன்பும், பாசமும் காட்டியதாக மற்ற பெண்கள் புகார்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த தட்சன் சந்திரனை சாபமிட்டதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. அந்த சாபம் காரணமாகவே சந்திரன் ஒளியிழந்து தேய்பிறை ஆனதாக சொல்லப்படுகிறது.

    சந்திரனுக்கு சூரியன், புதன் ஆகிய இரண்டும் நட்பு கிரகங்கள் ஆகும். செவ்வாய், வியாழன், சனி, சுக்கிரன் ஆகியவை சமநிலை கொண்டவை. ராகு, கேது இரண்டும் பகை கிரகங்கள் ஆகும். இந்த கிரகங்களின் அமைப்பு அடிப்படையில்தான் ஒருவரது ஜாதகத்தில் சந்திரதோஷம் இருக்கிறதா? என்பதை அறிய முடியும்.

    ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் நன்றாக உச்சம் பெற்று இருந்தால் சுகவாழ்வு அமையும். ஜாதகக்காரரின் தாயால் செல்வம் கிடைக்கும். தாய் மூலம் கிடைக்க வேண்டிய அனைத்து நன்மைகளையும் அந்த ஜாதகக்காரர் பெறுவார். அதே சமயத்தில் சந்திரன் சரியில்லாத நிலையில் இருந்தால் அது தோஷமாக மாறி பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும்.

    பொதுவாக சந்திரனுக்கு பல கிரக நிலைகள் உள்ளன. ராகுவும், சந்திரனும் சேர்ந்து இருந்தால் அது சந்திர தோஷமாக கருதப்படும். அதுபோல ஜாதகத்தில் சந்திரன் ராகு பார்வையாக இருந்தால் அதுவும் சந்திர தோஷமாகும். சந்திரன் கேதுவுடன் இணைந்து இருந்தாலும் அதையும் சந்திர தோஷம் என்பார்கள்.

    மேலும் ஜாதகத்தில் சந்திரன் பார்வையில் வேறு ஏதேனும் தோஷ கிரகங்கள் இருந்தால் அந்த தோஷத்துடன் சேர்ந்து சந்திர தோஷமாக மாறவும் வாய்ப்பு உள்ளது. சிலரது ஜாதகத்தில் சூரியனும், சந்திரனும் சேர்ந்து இருக்கும். அதுவும் தோஷம் உள்ள அமைப்புதான்.

    இப்படி சந்திர தோஷம் இருந்தால் அது முதலில் மனதைதான் பாதிக்கும். இதன் காரணமாக மன அழுத்தம் ஏற்படும். தூக்கம் தொலைந்து விடும். இதனால் நாளடைவில் உடல் பலகீனமாகி விடலாம். உடல் வலி இருந்து கொண்டே இருக்கும்.


    சந்திர தோஷம் பெண்களை பாதிக்கும் பட்சத்தில் அவர்கள் கர்ப்பம் தரிப்பதில் பிரச்சினைகள் உண்டாகும். மனச்சோர்வை தரும். சில பெண்களுக்கு சந்திர தோஷம் நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தி விடும். மனம் குழப்ப நிலையிலேயே இருக்கும். இதன் காரணமாக எந்த முடிவையும் உடனடியாக எடுக்க முடியாது.

    பொதுவாக சந்திர தோஷம் இருந்தால் அடிக்கடி மன உளைச்சல் உண்டாகும். சுய முயற்சி அல்லது படைப்பாற்றல் பாதிக்கப்படும். உறவினர்கள், நண்பர்களால் அடிக்கடி பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தவறான புரிதல்களை ஏற்படுத்தும் ஆற்றலும் சந்திரனுக்கு உண்டு.

    இத்தகைய பிரச்சினைகளில் இருந்து மீள வேண்டுமானால் சில பரிகாரங்களை அவசியம் செய்ய வேண்டும். பரிகாரம் செய்தால்தான் சந்திர தோஷம் கட்டுப்படும் அல்லது குறையும். விரதம் இருப்பதன் மூலம் சந்திர தோஷத்தை நிரந்தரமாக நிவர்த்தி செய்யலாம். சந்திரனுக்குரிய திங்கட்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.

    குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வழிபட்டு 9 வாரங்கள் விரதம் இருந்தால் சந்திர தோஷம் விலகும் என்பது ஐதீகம். தானம் செய்வதன் மூலமாகவும் இந்த தோஷத்தில் இருந்து விடுபடலாம். அரிசி, தானியங்கள், கற்பூரம், வெண்ணிற ஆடை, வெள்ளி, சங்கு, சந்தனம், வெள்ளைப் பூக்கள், சர்க்கரை, தயிர், முத்து போன்றவற்றை தானம் செய்தால் சந்திரனின் அனுகிரகத்தை பெற முடியும்.

    சந்திரன் போற்றி தெரிந்து கொண்டு தினமும் அதை படிப்பது மிகவும் நல்லது. இல்லையெனில் மகா மிருத்யுஞ்சய மந்திரத்தை தினமும் உச்சரிப்பது பயன் உள்ளதாக இருக்கும். யோகா பயிற்சிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் தினமும் பிராணயாமம் செய்து வந்தால் சந்திர தோஷம் விலகுவதாக சித்தர்கள் கணித்துள்ளனர்.

    ஆலய வழிபாடுகள் மூலம் இந்த தோஷத்தில் இருந்து விடுபட நினைப்பவர்கள் விநாயகரை வணங்கி வந்தால் கைமேல் பலன் உண்டு. துர்க்கா சப்தசதி வழிபாடு செய்வதாலும் பலன் உண்டு. திங்கட்கிழமைகளில் பால் அல்லது அரிசி பாயாசம் செய்து இறைவனுக்கு படைத்து ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யலாம்.

    பவுர்ணமி நாட்களில் சந்திரனை வழிபாடு செய்ய வேண்டும். வாய்ப்பு இருப்பவர்கள் சந்திரன் ஒளியில் அமர்ந்து சந்திரனுக்குரிய 108 போற்றிகளை சொல்லி வந்தால் சந்திரன் மனமகிழ்ந்து நல்லது செய்வார் என்பது நம்பிக்கையாகும். 'ஓம்' எனும் மந்திரத்தை சந்திரனை பார்த்துக் கொண்டே உச்சரிப்பதும் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்.

    சில சந்திர தோஷம் ஆளுமை, ஆரோக்கியத்தை பாதிப்பதாக இருக்கும். அத்தகைய நிலையில் இருப்பவர்கள் முத்து ரத்தின மோதிரம் அணியலாம் என்று சொல்கிறார்கள். வசதி உள்ளவர்கள் சந்திரன் எந்திரத்தை வைத்து பூஜை செய்யலாம்.

    ஆலயங்களுக்கு செல்லும்போது நவக்கிரகங்களில் சந்திர பகவானுக்கு பாலாபிஷேகம் செய்து வெள்ளை உடை அணிவித்து வெள்ளை அல்லி மலர்களால் அலங்காரம் செய்து வழிபட வேண்டும். இந்த சமயத்தில் சந்திரனுக்குரிய காயத்ரி மந்திரம் சொல்வது மிகப்பெரிய நன்மையை தரும்.

    சந்திரனுக்குரிய ஆலயங்களான திருப்பதி, திங்களூர் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதும் நல்லது. அதுபோல சந்திரனுடன் தொடர்புடைய திருவெண்காடு, திருமாந்துரை, திருவாரூர், திருநெல்லிகா, திருவலிதாயம் (சென்னை பாடி), திருப்பழூவூர், மகேந்திரப்பள்ளி, திருபந்தாந்தால், கும்பகோணம், திருப்புணல்வாயல், சீர்காழி, திருத்திலதைபதி ஆகிய ஆலயங்களுக்கும் சென்று வழிபடலாம்.

    சந்திரனுக்குரிய மாதமாக ஆடி மாதத்தை நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர். அந்த மாதத்தில் சந்திரனுக்குரிய வழிபாடுகளை செய்வது கூடுதல் நன்மைகளை தரும். ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களை சந்திர திசையில் பிறந்தவர்களாக ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. இவர்கள் சந்திரனை எந்த அளவுக்கு வழிபடுகிறார்களோ அந்த அளவுக்கு மகிழ்ச்சியும், செல்வமும் கிடைக்கும்.

    சந்திரனுக்குரிய திசை வடக்கு. எனவே சந்திரன் மூலம் பலன் பெற விரும்புவர்கள் எப்போதும் வடக்கு திசையை நோக்கி தொடங்குவது வெற்றிகளை தரும்.

    • சிலரது அரசியல் வாழ்க்கை சரித்திரத்தில் இடம் பெறுகிறது.
    • தேர்தல் நடக்கும் காலகட்டத்தில் குடிமக்கள் அவர்களுடைய வாக்கை அவர்கள் விரும்பியவருக்கு வாக்களிக்கலாம்.


    உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை உற்று நோக்கி கொண்டு உள்ளது. ஜனநாயக நாடான இந்தியா பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் தேசிய மலரான தாமரை அன்று மலர்ந்த பூவாக இந்தியாவை ஆட்சி செய்து கொண்டு இருக்கிறது. நடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை அள்ளப் போகும் கட்சி எது என்ற ஆவலில் உலக நாடுகள் மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    மன்னர் ஆட்சி போய் உலகெங்கும் மக்களாட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. மக்களாட்சி என்பது சுதந்திரமான தேர்தல். முறைப்படி மக்கள் தேர்ந்தெடுக்கும் அரசாங்கம். இதில் மக்கள் அல்லது அவர்களுடைய பிரதிநிதிகள் ஆட்சி அதிகாரம் பெற்றிருப்பார்கள்.

    தேர்தல் நடக்கும் காலகட்டத்தில் குடிமக்கள் அவர்களுடைய வாக்கை அவர்கள் விரும்பியவருக்கு வாக்களிக்கலாம். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மக்களின் பிரதிநிதிகளாவார்கள். அவர்கள் 5 ஆண்டு காலம் வரை பதவி வகிப்பார்கள். 5 ஆண்டுகளுக்கொருமுறை ஆட்சியாளர்களை மாற்றி மக்கள் தங்கள் உரிமையை நிலைபடுத்தும் பாராளுமன்றத் தேர்தல் இந்தியாவில் 19.4.2024 முதல் 1.6.2024 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவு ஜூன் 4-ம் தேதி தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் சேவை செய்ய பலர் விரும்பினாலும் தேர்தலில் வெற்றி பெற்று சிலர் மட்டுமே வெற்றி வாகை சூடுகிறார்கள். சிலரது அரசியல் வாழ்க்கை சரித்திரத்தில் இடம் பெறுகிறது. அரசியலுக்காக உயிர் தியாகம் செய்த பலரது பெயர் கூட வெளியில் தெரியாமல் போய்விடுகிறது. ஜோதிட ரீதியாக அரசியலில் ஜொலிப்பவர் யார்? இந்த 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கோட்சார கிரகங்களின் நிலைப்படி சுய ஜாதகப்படி தாமரை மலருமா? போன்ற பல தகவல்களைப் பார்க்கலாம்.

    சூரியன்: ராஜ கிரகம். அரச பதவி, அரசு மூலம் அனுகூலம், தலைமைப் பண்பு, நிர்வாகத்திறன், ஆளுமைத் தன்மை, பொறுப்புணர்வு, ராஜதந்திரம் ஆகியவற்றை வழங்கும் கிரகம். சந்திரன், தூயமனம், பொறுமை, நிதானம், தன்னடக்கம், அன்பு போன்றவைற்றை தரும் கிரகம்.

    செவ்வாய் : வேகம், விவேகம், ஊக்கம், வெற்றி, பாதுகாத்தல், செயல்திறன், உடல் வலிமை, தைரியத்தை வழங்கும் கிரகம்.

    புதன்: புத்தி சாதுர்யம், பேச்சுத் திறமை, ராஜதந்திரம், லாபநஷ்டம் அறியும் திறன் பற்றிக் கூறும் கிரகம்


    குரு: ஒழுக்கம், நேர்மை, நியாயம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நிதி, நீதியை பயன்படுத்தும் விதம் போன்றவற்றை வெளிப்படுத்தும் கிரகம்.

    சுக்கிரன்: ஆடம்பரம், உல்லாச நாட்டம் பற்றி தெரிவிக்கும் கிரகம்.

    சனி: பொதுஜன ஆதரவு, சளைக்காமல் உழைக்கும் தன்மை, மக்கள் சக்தி, மக்கள் ஆதரவு, பிறரின் கஷ்ட நஷ்டங்களை புரிதல் ஆகியவற்றை கூறும் கிரகம்.

    ராகு: எதிரிகளை நேரம் பார்த்து வீழ்த்தும் தைரியம், பழகும் தன்மையை அறிய உதவும் கிரகம்.

    கேது: சட்ட நுணுக்கம், ஆன்மீக நாட்டம், பிரச்சினையை தீர்க்கும் திறன், ஆகிய ஞானத்தை வெளிப்படுத்தும் கிரகம்.

    பன்னிரு பாவகங்களும் அரசியலும்.

    லக்ன பாவகம்: எண் ஜான் உடம்புக்கு சிரசே பிரதானம். அரசியலில் ஈடுபட விரும்பும் ஜாதகரின் தோற்றம் அனைவரையும் வசீகரிக்கும் தன்மையுடையதாக இருப்பது அவசியம். ஜாதகரின் விதி, வாங்கி வந்த வரம், கொடுப்பினை ஆகியவற்றின் அடிப்படையில் லக்னம் வலிமை பெற வேண்டும்.

    இரண்டாம் பாவகம்: தனது வாக்கு சாதுர்யத்தால் இனிமையாகப் பேசி அனைவரையும் கவரும் தன்மையுடன் இருக்க வேண்டும்.கொடுக்கும் வாக்குறுதியை காப்பாற்றும் நாணயம் மிகுந்திருப்பது நல்லது.

    மூன்றாம் பாவகம்: 3-ம் பாவகம் என்பது உப ஜெய ஸ்தானம். திட்டமிடுதலில் திறமையுடையவராக இருப்பதுடன் எடுத்த முயற்சியில் வெற்றி பெறுவதற்குத் தேவையான தைரியம், வேகம், விவேகம், சிந்திக்கும் திறன் மிக்கவராக இருத்தல் அவசியம். அனைத்து விதமான சகாயமும் தேடி வர வேண்டும். விசுவாசமான வேலையாட்கள் இருக்க வேண்டும். கூப்பிட்ட குரலுக்கு ஒடி வரும்படியாக தொண்டர்களின் ஆதரவு வேண்டும்.

    நான்காம் பாவகம்: சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப புரிந்து செயல்படும் கல்வி ஞானம் மிக அவசியம்.

    ஐந்தாம் பாவகம்: பூர்வ புண்ணிய ஸ்தான வலிமையுடன் புத்திக் கூர்மை, எதிர்காலம் பற்றி உணர்ந்து யோசிக்கும் ஆழ்ந்த ஞானம் நிரம்பி இருக்க வேண்டும். தூய்மையான சிந்தனை, நிதி நிலைமையை சீராக்கி நீதியை நிலை நாட்டும் ஆழ்மன சிந்தனை, நிறைந்திருக்க வேண்டும்.

    ஐ.ஆனந்தி

    ஐ.ஆனந்தி

    ஆறாம் பாவகம்: இரண்டாவது உப ஜெய ஸ்தானம். தேர்தல் களத்தில் போட்டியிடும் வாய்பை வழங்கும் பாவகம். எதிரி என்ற ஒருவன் இருந்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையை அடைய முடியும். ஒரு அரசியல்வாதியின் சிந்தனையில் எப்பொழுதும் தனது அரசியல் எதிரியை எப்படி வீழ்த்துவது என்ற நோக்கம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். எதிரிகளை வெல்லும் திறமையுடன், ஆரோக்கியம் நிரம்பியவராக இருக்க வேண்டும். அத்துடன் நாட்டின் பொருளாதாரத் தேவைகளை சரி செய்யும் திறமை மிக மிக அவசியம். ஜனன கால ஜாதகத்தில் ஆறாமிடம் வலிமை பெற்றவர்களுக்கு அரசியலில் வெற்றி வாய்ப்பு உறுதி.

    ஏழாம் பாவகம்: ஒரு அரசியல்வாதிக்கு கூட்டணிக் கட்சியின் ஒத்துழைப்பும் வாக்காளர்களின் ஆதரவும், கட்சி நண்பர்களின் அனுசரணையும் மிக மிக அவசியம். ஏழாம் பாவகம் வலுப் பெற்றவர்களுக்கு நிரந்தரமான வாக்காளர்கள் இருப்பார்கள். வாழ்நாள் முழுவதும் ஆதரவு தரும் கூட்டணிக் கட்சிகள் இருக்கும். பொது ஜனத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பார்கள். பொதுமக்கள் இவர்களின் ஆணைக்கு காத்து இருப்பார்கள். கட்டுப்பட்டு நடப்பார்கள்.

    எட்டாம் பாவகம்: விபரீத ராஜ யோகம், தீர்க்க ஆயுள், வம்பு, வழக்கை எதிர்கொள்ளும் பக்குவம் எட்டாம் பாவகம் வலிமை பெற்றவர்களுக்கே சாத்தியம்.

    ஒன்பதாம் பாவகம்: பாக்கிய ஸ்தான வலிமை பெற்றவர்களுக்கே தேர்தலில் வெற்றி பெறும் அதிர்ஷ்டம். தொடர்ந்து பதவியில் நீடிக்கும் வாய்ப்பும் தேடி வரும்.

    பத்தாம் பாவகம்: பத்தாம் பாவகம் வலிமை பெற்றவர்களுக்கு பதவியை நிர்வகிக்கும் திறமை, அதிகாரத்தை பயன்படுத்தும் திறன், தலைமைப் பண்புகள் நிரம்பி இருக்கும்.

    பதினொன்றாம் பாவகம்: 3-வது உப ஜெய ஸ்தானம் . 3-ம் பாவத்திற்கு பாக்கிய ஸ்தானம் 11-ம்மிடமான லாபம் ஸ்தானம். ஒன்பதாம் பாவத்தின் பாவத் பாவம்.தேர்தல் வெற்றியின் மூலம் கிடைக்கும் வளர்ச்சி.

    பன்னிரெண்டாம் பாவகம்: சேவை மனப்பான்மை, தொண்டு புரியும் மனநிலை அரசியலுக்கான கிரக அமைப்புகள் ஒருவர் பதவியில் அமரவும் தன் வாழ்நாள் முழுவதும் அனைத்து முயற்சியிலும், அனைத்து செயலிலும் வெற்றிவாகை சூடவும் ஜனன கால ஜாதகத்தில் லக்னம் மற்றும் லக்னாதிபதி வலிமை பெற வேண்டும். அத்துடன் சனி பகவானின் வலிமை மிக மிக அவசியம்.சனி கொடுத்தால் எவர் தடுப்பார். சனியின் உதவி இல்லாது யாரும் பதவியில் அமர முடியாது.மிகக் குறிப்பாக கால புருஷ ஒன்பதாம் அதிபதி குருவும் கர்மாதிபதி சனியின் சம்பந்தம் எந்த விதத்தில் இருந்தாலும் அரசியல் வாய்ப்பு உண்டு. மேலும் கால புருஷ ஐந்தாம் அதிபதி சூரியன் மற்றும் கர்மாதிபதி சனியின் சம்பந்தம் எந்த விதத்தில் இருந்தாலும் அரசியல் ஆதாயம் உண்டு. ஒரு ஜாதகத்தில் அதிக கிரகங்கள் புஷ்கர நவாம்ச பாதத்தில் இருந்தாலும் சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் சாதனை மனிதராக உலகை வலம் வருவார்கள். இத்தகைய அமைப்பு உடைய ஜாதகம் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.

    மேலும் ஒருவருக்கு வெற்றியை வழங்குவதில் உப ஜெய ஸ்தானமான 3,6,11-ம் பாவகத்தின் பங்கு அளப்பரியது. லக்ன பாவத்தின் பாவத் பாவம் 3-ம் பாவகம். ஒருவர் தான் எடுத்த முயற்சியில் வெற்றி பெற விடாமுயற்சி வேண்டும். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பது பழமொழி. முயற்சி உடையோர் புகழ்ச்சி அடைவர் என்பது புதுமொழி. முயன்றால் முடியாதது இந்த உலகில் எதுவும் இல்லை. தோல்வியை வெல்ல முயற்சி என்னும் ஆயுதம் ஏந்த வேண்டும். 2வது உப ஜெயமான ஆறாம் பாவகம் என்பது எதிரி பாவகம். தேர்தலில் தன்னுடன் போட்டியிடும் எதிரியை வெல்ல 6ம் பாவக வலிமை மிக மிக அவசியம். 6ம் பாவகம் வலுப்பெற்றவர்கள் எந்தப் போட்டியிலும் வென்று தனக்கென்று ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொள்வார்கள். ஒருவருக்கு எல்லாவிதமான வாழ்வியல் வெற்றியைப் பெற்றுத் தருவது ஆறாம் பாவகமே. லாபம், மேன்மை, ஆதாயம், அபிலாஷைகள் பூர்த்தியாவது 11ம் பாவகம். ஒரு ஜாதகத்தில் 3,6,11-ம் பாவகங்கள் இணைந்து செயல்பட்டால் எதிரிகள் மண்டியிடுவார்கள்.

    தாமரை தொடர்ந்து மலருமா?

    கடந்த 10 ஆண்டு காலமாக பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் தாமரை சின்னத்தின் மூலம் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதம மந்திரியாக நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறார். தொடர்ந்து அவர் 3ம் முறையாக ஆட்சி அமைப்பாரா? சாதாரண குடும்பத்தில் பிறந்த அவரின் ஜாதகம் நாடாளும் யோகம் பெற என்ன கிரக அமைப்பு உள்ளது போன்றவற்றை பார்க்கலாம். 17.9.1950 அன்று காலை 11மணிக்கு வாட்நகர், குஜராத்தில் மிக சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். ஜென்ம லக்னம் விருச்சிகம். ஜென்ம நட்சத்திரம் அனுஷம் 2. அவருக்கு லக்னப்புள்ளி விசாகம் 4 (புஷ்கராம்சம்) ஜென்ம நட்சத்திரம் அனுஷம் 2 எனும் சனியின் நட்சத்திரம். புஷ்கராம்சம் ஒரு ஜாதகத்தின் வலிமைமையை நிர்ணயம் செய்வது லக்னப்புள்ளி. லக்னம், லக்னாதிபதி. மோடி ஜாத கத்தில் லக்னம் லக்னாதிபதி செவ்வாய் லக்னத்தில் ஆட்சி பெற்று லக்னாதிபதியும், லக்னப்புள்ளியும் விசாகம் 4 எனும் புஷ்கராம்ச சாரம் பெற்றது முதல் தரமான யோகம். பாக்கிய அதிபதி சந்திரன் லக்னத்தில் நீச பங்க ராஜ யோகம் பெற்று அனுஷம் 2 எனும் புஷ்காரம்ச பாதத்தில் அமர்ந்திருப்பது மேலும் சிறப்பு.

    அடுத்த படியாக பொதுமக்களை குறிக்கும் சனியின் வலிமை. வாக்காளர்கள் மற்றும் பொது மக்களை குறிக்கும் சனி பகவான் பொது ஜன தொடர்பை குறிக்கும் 7-ம் அதிபதி சுக்ரனுடன் 10-ல் நின்று தனது 10-ம் பார்வையால் 7-ம்மிடமான சமுதாய தொடர்பு ஸ்தானத்தை பார்ப்பதால் இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஒருவருக்கு வெற்றி மேல் வெற்றி தரும் உப ஜெய ஸ்தானங்களான 3,6,11-ம் பாவகங்கள் 3 - சனி, 6- செவ்வாய், 11 - புதன் சுப வலுப்பெற்றதால் எதிரிகளால் இவரை நெருங்க முடியவில்லை. மேலும் கால புருஷ 9-ம் அதிபதி குருவும், கால புருஷ 10-ம் அதிபதி சனியும் ஒருவரை ஒருவர் பார்ப்பது தர்ம கர்மாதிபதி யோகம்.

    எதிரியை வெல்லக் கூடிய 6-ம்மிடம் எனும் உப ஜெய ஸ்தான அதிபதி, லக்னாதிபதி செவ்வாயே நடப்பில் தசை நடத்துவது மேலும் பக்கபலமாக நின்று எதிரியை வெல்லும் வலிமையை வழங்கி வருகிறது. இது போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இவரின் ஜாதகத்தில் நிறைந்துள்ளதால் இவர் உலகப் புகழ் பெற்றுள்ளார்.உலகெங்கும் அவரது புகழ் பரவி அந்தஸ்து கவுரவம் உயர்ந்து கொண்டே செல்கிறது.

    அதனால் தான் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் வெற்றி மழையில் நனைந்து வருகிறார்.

    இவரது ஜென்ம நட்சத்திரமான அனுஷத்தின் தாரை வடிவமான தாமரை சின்னமும் வெற்றிக்கு உதவி செய்கிறது.

    இது போன்று பல்வேறு சிறப்பு அம்சங்கள் நரேந்திர மோடி ஜாதகத்தில் உள்ளதால் தாமரை மீண்டும் மலர்ந்து 3வது முறையாக இந்தியாவை ஆட்சி செய்யும் வாய்ப்புள்ளது. அதே போல் இது மோடியின் ஜாதகம் என்று பத்திரிகை சோஷியல் மீடியாவில் வருவது. அதன் அடிப்படையில் தான் நாம் கருத்து சொல்கிறோம். சுய ஜாதகத்தின் உண்மை தன்மை நமக்கு தெரியாது. மேலும் இந்தியா முழுவதும் நடக்கும் தேர்தல் தேசம் முழுமைக்குமான தேர்தல் என்பதால் தேசம் முழுமைக்கும் உள்ள கோட்சார அமைப்பையும் கணக்கிட வேண்டும். கோட்சார கிரகங்களே ஒருவரின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கிறது. மேலே கூறியபடி பன்னிரண்டு பாவகங்கள் வலிமையும், நவ கிரகங்களின் அனுகிரகமும் நிறைந்த ஜாதகருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும்.

    மனித பிறவி எடுத்த ஸ்ரீ கிருஷ்ண பகவான் அனைத்து பண்புகளையும் ஒருங்கே பெற்றவர். மகாபாரதத்தில் குருஷேத்திரப் போரில் சனாதன தர்மத்தின் படி போரில் அரசியல் ராஜ தந்திரத்தை கடைபிடித்து சத்தியத்தை நிலை நாட்டியவர். கீதா உபதேசத்தின் மூலம் மனிதர்கள் வாழ்க்கைத் தத்துவத்தை உபதேசித்தவர் என்பதால் சுய ஜாதகத்தில் கிரகங்கள், பாவகங்கள் வலிமை குன்றியவர்கள் கிருஷ்ண பரமாத்மா குதிரை வாகனத்தில் அமர்ந்த மகாபாரதக் காட்சியை வைத்து வழிபட அரசியல் வெற்றியும் ஞானமும் கிடைக்கும்.

    • ழக்கமாக டைரக்டர்கள் வந்தால் கதையை ரத்தின சுருக்கமாக சொல்வார்கள் அவ்வளவுதான்.
    • டைரக்டரும் காட்சிகளை ரசித்து ரசித்து படமாக்கியதால் நானும் உற்சாகமாக நடித்தேன்.

    தமிழ் திரை உலகில் ஒரு வித்தியாசமான டைரக்டர் சேரன்!

    எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி என்பார்களே அதே போல் சேரன் புதுமாதிரி டைரக்டர். அவரது படங்களும் புது மாதிரியாக இருக்கும்.

    நான் கே.எஸ்.ரவிக்குமார் சார் டைரக்ஷனில் நட்டாமை படத்தில் நடித்து கொண்டிருந்தபோது அவரிடம் உதவி இயக்குனராக சேரன் பணியாற்றி கொண்டிருந்தார். அதனால் எங்களுக்குள் பார்த்து பழகிய பரிச்சயம் உண்டு. திடீரென்று ஒரு நாள் அவரிடம் இருந்து போன் கால் வந்தது. என்னை சந்திக்க வேண்டும் என்றார்.

    வீட்டுக்கு வாங்களேன் என்றேன். வீட்டுக்கு வந்தவரின் கையில் ஒரு பெரிய புத்தகம் வைத்திருந்தார். எப்படியும் 1000 பக்கங்களுக்கு மேல் இருக்கும்.

    அமர்ந்து பேச தொடங்கியதும், மேடம் நான் முதல் முதலாக ஒரு படம் இயக்கப் போகிறேன்...! என்றார்.

    ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்கள் என்றேன். உடனே அவர் நான் இயக்கப்போகும் படத்தில் நீங்கள் தான் ஹீரோயினாக நடிக்கனும் என்றார். திடீரென்று அவர் அப்படி சொன்னதும், புது டைரக்டர். கதை எப்படி இருக்கும்? எதுவும் புரியாமல் இருந்த என்னிடம் அவர் தனது கையில் வைத்திருந்த அந்த பெரிய புத்தகத்தை நீட்டினார். அதை வாங்கி கொண்டு 'இது என்ன'? என்றேன். கதை, காட்சிகள் எல்லாம் அதில் இடம் பெற்றுள்ளது என்றார். எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.

    வழக்கமாக டைரக்டர்கள் வந்தால் கதையை ரத்தின சுருக்கமாக சொல்வார்கள் அவ்வளவுதான்.

    ஆனால் இவர் என்ன இப்படி ஒரு பெரிய புத்தகத்தையே தந்திருக்கிறாரே என்று நினைத்து ஆச்சரியப்பட்டேன்.


    உடனே நீங்கள் படித்து பார்த்து விட்டு பதில் சொல்லுங்கள் என்று அவர் கூறி விட்டு கிளம்பி சென்றார். புத்தகத்தை விரித்து படிக்க தொடங்கினேன். அது வெறும் புத்தகம் அல்ல. படத்தின் முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை ஒவ்வொரு காட்சியாக எழுதி இருந்தார்.

    அந்த காட் சிக்கான லொகேசன், நடிகர், நடிகை யின் கா ஸ்ட்யூம், பேச வேண்டிய வச னங்கள் ஒவ்வொரு காட்சி யிலும் இடம் பெற வேண்டிய பொரு ட்கள் வரை எல்லாமும் இடம் பெற்று இருந்தது. அதை படித்த போது கதை படித்தது போல் இல்லை. படத்தில் நடிக் கும் முன்பே முழு படமும் கண் முன் விரிந்தது போல் இருந்தது. எனக்கு மிக வும் பிடித்து இருந்தது. அவரிடம் 'ஓ.கே.' என்று சொல்லி விட்டேன்.

    குறிப்பிட்ட தேதியில் படப்பிடிப்பு தொடங்கியது. கோபி செட்டிப்பாளையம் பகுதியில் தான் முக்கால்வாசி படப்பிடிப்பு.

    நான் பாவாடை தாவணியில் தமிழ் பாரம்பரியம், குடும்ப கட்டுப்பாடோடு வளரும் பெண். பச்சை கலர் பாவாடை, சிவப்பு கலர் தாவணி, இரட்டை ஜடை போட்ட பின்னலுடன் தலையில் ரிப்பன் கட்டியிருப்பேன்.

    பெரும்பாலும் கிராமத்து லொகேஷன். ஆனாலும் அந்த காலம் வெயில் காலம். கடுமையான வெயில் வறுத்தெடுத்தது. சில காட்சிளில் காலில் செருப்பு போடாமல் நடிக்க வேண்டும். கொதிக்கும் வெயிலில் கால் சூட்டில் தவிப்பேன்.

    சேரனை பொறுத்தவரை ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து படமாக்குவார். எனக்கு ஜோடி பார்த்திபன் சார். அவரை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. நினைத்த மாத்திரத்தில் கவிதை மழையை கொட்டுவார். கவிதையிலேயே வர்ணித்து வான் உயரத்தில் நம்மை தூக்குவார். திடீரென்று அதே கவிதையில் டம்மென்று கீழே போட்டு விடுவார்.

    நான் அதனாலேயே அவரை பார்த்ததும் சார், கவிதை யெல்லாம் வேண்டாம். ஆளை விடுங்கள் என்று கிண்டல் செய்வேன்.

    என்னுடைய பிறந்த நாளுக்காக கண்ணா... மீனா...? என்ற நாலே வரியில் ஒரு கவிதை. அதில் கண் படத்துடன் பிரமாண்டமாக பிரேம் போட்டு எனக்கு பரிசளித்தார். அது எங்கள் வீட்டின் முன்னறையில் இடம் பெற்றுள்ளது.

    ஷூட்டிங்கை பொறுத்த வரை தொடங்குவது தெரி யும். அதன் பிறகு எப்போது முடியும்? எப்போது தூங்க செல்கிறோம் என்ற கணக்கே கிடையாது.

    அந்த அளவுக்கு இரவு பகலாக ஓய்வு இல்லாமல் படப்பிடிப்பு நடந்தது. டைரக்டரும் காட்சிகளை ரசித்து ரசித்து படமாக்கியதால் நானும் உற்சாகமாக நடித்தேன். ஒவ்வொரு காட்சி யையும் ரசித்து நடித்தேன்.

    பகலில் வெயிலிலும், இரவில் தூக்க மில்லாமலும் நடித்ததால் என் முகத்தில் அடிக்கடி பரு (பிம்பிள்) வந்து கஷ்டப்படுத்தியது.


    கண்ணாடி முன்னால் நின்று பார்க்கும் போது முகத்தில் பெரிய அளவில் பரு வந்திருக்கும் . அதை பார்த்ததும் எனக்கு கஷ்டமாக இருக்கும். அய்யோ நாளை அழகான காட்சி... இந்த பிம்பிளோடு நடித்தால் நல்லா இருக்காதே என்று மேக்கப் மேனை நீங்கள் என்ன செய்வீர்களோ, எனக்கு முகத்தில் இருக்கும் பிம்பிள் வெளியே தெரியக்கூடாது என்பேன். அவரும் என்னவெல்லாமோ போட்டு மறைக்க போராடுவார். ஆனாலும் பிம்பிள் லேசாக தெரியும். அந்த படத்தில் ஆரம்பத்தில் வரும் காட்சிகளில் எனது வலது கன்னத்தில் பிம்பிள் இருப்பது நன்றாகவே தெரியும்.

    என்னை ஒழுங்காக தூங்கவிடாமலும், சாப்பிட விடாமலும் ஓய்வே தராமல் நடிக்க வைத்ததால் தான் இப்படி பிம்பிள் வருகிறது என்று படக்குழுவினரிடம் அடிக்கடி கூறுவேன்.

    எனது குடும்பம் கட்டுப்பாடான ஜமீன்தார் குடும்பம். ஜமீன்தாருக்கு விசுவா சமான வேலைக்காரர் பாத்தி ரத்தில் பார்த்திபன். எங்களுக்குள் காதல். அதை சொன்னால் வீட்டில் ஏற்பார்களா? குடும்ப கவுரவம் என்ன ஆகும்? என்று வெளியே சொல்லா மலே தற்கொலை செய்து கொள்வேன். அதே சிதையில் இருந்து பார்த்திபன் உயிரை மாய்த்து கொள்வது போல் 'கிளைமாக்ஸ்' காட்சி. 'கண்ணம்மா வளர்ந்தாள்...

    மீண்டும் கண்ணம்மாவை பற்றிய ருசிகர தகவல்களுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்...

    (தொடரும்...)

    • நீங்கள் உங்களை உற்று கவனியுங்கள். சிலரை உங்களுக்கு காரணமே இல்லாமல் பிடிக்கும்.
    • உண்மைகளை உணர்ந்து முறையாக வாழ்வது நம் கையில்தான் இருக்கின்றது.

    நமக்கு ஒரு பழக்கம் இருக்கின்றது. ஏதாவது சங்கடம் ஏற்படும்போது 'என் கர்மா' என்று சொல்கின்றோம். 'நான் என்ன பாவம் செய்தேனோ. இப்படி கஷ்டப்படுகின்றேன்' என்று சொல்கின்றோம். வாழ்வில் ஒவ்வொரு வரும் அவரவர் வாழ்வின் போது கர்மாவை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றோம். அவை நல்ல கர்மாவாகவும் இருக்கலாம். தீய கர்மாவாகவும் இருக்கலாம். நம் வாழ்வின் செயல்கள் மூலம் நாம் நல்லதையும் பெறலாம். தீயதையும் பெறலாம். பிறருக்கு நல்லதையும் செய்யலாம். தீயதையும் செய்யலாம். நிறைய தோல்விகள், ஏமாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த தோல்விகளையும் ஏமாற்றங்களையும் பிறருக்கும் ஏற்படுத்துகின்றோம்.

    வாழ்வில் இந்த அம்மா, இந்த அப்பா என எந்த ஒரு உறவினையும் நம்மால் தேர்வு செய்து பிறக்க முடியவில்லை. கல்யாணம் தேர்வு செய்து நடப்பதுதான். குடும்பத்தார் பார்த்து ஏற்படுத்தும் திருமணத்தில் பெண்ணோ, மாப்பிள்ளையோ இதுவரை எங்கு இருந்தார்கள்? நமக்குத் தெரியாது. முன்பின் அறியாத அன்புதான் காதல் திருமணம். ஆக இதில் நமக்கு என்று என்ன பங்கு இருக்கின்றது. அனைத்தும் விதிபடி நடக்கின்றது.

    எங்கிருந்தோ ஒருவர் நண்பர் என வருகிறார். அவரால் நாம் கடும் சிக்கலில் இருந்து மீள்வதும் நடக்கின்றது. கடும் சிக்கலில் விழுவதும் நடக்கின்றது. ஆக அந்த நபர், நம் கர்ம வினைப்படி அனுப்பப்படுகின்றார்.

    உறவு என்ற பெயரில் தொல்லை தருபவர்கள்தான் ஏராளம். என்ன நடக்கின்றது என்று புரிந்து கொள்ள முடியாததுதான் வாழ்க்கை.

    நமது தேவைக்காக முன்னேற்றத்திற்காக உழைக்கின்றோம். ஆனால் முடிவு? கர்ம வினையால் நிர்ணயிக்கப்படுகின்றது. கர்மவினைக்கு ஏற்ப ஒருவர் நல்லவற்றின் பக்கம் ஈர்க்கப்படுகின்றார் அல்லது தீயவற்றின் பக்கம் தரதரவென இழுத்து செல்லப்படுகின்றார்.

    நீங்கள் உங்களை உற்று கவனியுங்கள். சிலரை உங்களுக்கு காரணமே இல்லாமல் பிடிக்கும். சிலரை நீங்கள் காரணமேயின்றி வெறுப்பீர்கள். ஏன்? என நீங்களே உங்களுக்குள் ஆழ்ந்து யோசியுங்கள். விடை கிடைக்கும்.

    நன்மையும், தீமையும் பிறர் தர வாரா என்பர். ஆக நாம் இன்று எப்படி வாழ்கிறோம் என்பது இருக்கட்டும். இனி எப்படி வாழப் போகின்றோம் என்பதற்கு இத்தகு உண்மைகளை உணர்ந்து முறையாக வாழ்வது நம் கையில்தான் இருக்கின்றது.

    நான் பத்து புண்ணியம் செய்தேன். இரண்டு பாவம் செய்தேன். ஆக இந்த 2 பாவத்தினை கழித்து 8 புண்ணியம் மீதம் என் கையில் உள்ளது என்று விதிக்கு கணக்கு கிடையாது. பாவத்திற்கான தண்டனையும், புண்ணியத்திற்கான நன்மையும் தனித்தனியே கிடைக்கும் வினோத கணக்கு ஆகும்.

    மனம் பதறாது, சிதறாது, அலையாது இருந்து விட்டால் பிரச்சினையே இல்லை. அதுதான் பல்லாயிரம் வருடங்களாக மனிதன் படாத பாடுபடுகின்றானே. இதனை கட்டுப்படுத்த மனிதனுக்கு பக்தி மார்க்கமும் சிறந்த வழியாகவே கருதப்படுகின்றது. அதனால்தான் இன்று வரை பக்தி மார்க்கம் வலுத்து இருக்கின்றது.

    இறைவனின் புராணங்களை படிப்பது மனதினை வெகுவாய் பதப்படுத்தும். பாகவதம் படித்தாலும் சரி, பைபிள் படித்தாலும் சரி, குரான் படித்தாலும் சரி அன்றாடம் புனித நூல்களில் சில பக்கமாவது படிக்க வேண்டும்.

    ஜீசஸ் என்றோ, அல்லா என்றோ, கிருஷ்ணா, ராமா என்றோ சப்தமாகவோ, மன திற்குள்ளாகவோ வழிபாடு செய்து கொண்டே இருக்கலாம்.

    சுத்தமான இலைகள், பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம்.

    தன்னையே இறைவனுக்கு மனதார கொடுத்து விடலாம். இந்த உடலும் நீயே, ஆத்மாவும் நீயே என்று உயர்ந்த நிலையில் பக்தி கொள்ளலாம்.

    கமலி ஸ்ரீபால்

    கமலி ஸ்ரீபால்

     எனக்கு எதற்குமே நேரமில்லை என்பவரிடம் மகா பெரியவர் கூறிய

    "ஹரி நாராயண துரித நிவாரண பரமானந்த

    சதாசிவ சங்கர

    ஸ்ரீ ராம ஜெயம் ராம ராமா

    நமச்சிவாய

    இப்படி ஒரு மந்திரத்தினை நடக்கும் போதும், சமைக்கும் போதும் கூட சொல்லலாம்.

    இதனை கிறிஸ்தவ மதப்படி 'தேங்யூ ஜீசஸ்', இஸ்லாம் மதப்படி 'அல்லா' என்றும் கூறலாம். ஆனால் இவை அனைத்துமே மனதிற்கும், நரம்பு மண்டலத்திற்கும் உறுதி செய்பவை ஆகும்.

    நம் கடமைகளை நாம் சரியாக செய்து விட்டு. பலனை கடவுளிடம் விட்டு விடுவோமே.

    வாழ்வில் மற்றொரு விஷயம். சாபங்கள் பெறாமல் இருப்பதற்கு மனம் போனபடி கோபத்தில் தகுந்த காரணமில்லாமல் ஒருவருக்கு தரும் சாபம் பலிக்காது. தகுந்த காரணம் இருந்தாலும் ஒருவர் சாபம் கொடுக்கும் போது தன் தவ பலத்தின் அதிக சக்தியினை இழந்து விடுகின்றார் என்பதனையும் புராணங்கள் கூறுகின்றன. ஒருவரின் மனம் அடுத்தவரின் நடவடிக்கையால் மிகவும் நொந்து போனாலே அடுத்தவருக்கு அது மிகப்பெரிய சாபமாக அமையும். ஒருவரை சற்று கட்டுப்படுத்த முடியாத கோபத்தினால் திட்டும் போது கூட கடுமையான வார்த்தைகள் சொல்லாமல் 'வாழ்க வளமுடன்' என்று சொல்லி விடுங்கள். நமக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால் சில சாபங்கள் ஏற்படாமல் ஒருவர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

    பித்ரு சாபம்: நம் முன்னோர்கள் தாய், தந்தை, உறவில் பிள்ளை வழி திதி செய்ய பிள்ளைகள் இல்லாமல் இறப்பவர்கள் இவர்களுக்கு எளிய முறையில் திதி கொடுப்பது.

    பெண் சாபம்: பெண்ணுக்கு எந்த வகையில் தவறு, துரோகம் செய்தாலும் கடும் தோஷம் ஏற்படும்.

    எத்தனை வயது ஆனாலும் நாம் சிலவற்றினை கட்டாயம் கடை பிடிக்க வேண்டும். அதில் ஒன்று அன்றாடம் சிறிது நேரமாவது மவுனமாய் இருப்பது. இங்கு மவுனம் என்பது வாய் பேசாமல் இருப்பது மட்டுமல்ல. கைகள் காட்டாது இருப்பது மட்டும் அல்ல. மனம் பேசாமல் இருப்பதுதான். நொடிக்கு நூறு விஷயங்களை மின்னல் போல் கொண்டு வரும் பலம் படைத்த மனதினை ஒரு நொடி எதுவும் நினையாது வைப்பதே கடும் தவம்தான். மனம் அலையாது இருக்க அமைதி வேண்டும்.

    * அமைதி என்பது எங்கும் வெளியில் இல்லை. அவரவரிடம்தான் இருக்கின்றது.

    * அமைதிதான் உலகின் மிகப்பெரிய அதிர்ஷ்டம். பொக்கிஷம். விலை மதிப்பு இல்லாதது.

    * அமைதி காக்கும் ஒரு வழி அதிகம் பேசாது இருப்பதுதான்.

    * மவுனத்தினை விட நன்மை பயக்கும் என்றால் மட்டுமே ஓரிரு வார்த்தைகள் பேசலாம். இது ஆன்ம பலத்தினைக் கூட்டும்.

    * ஒரு ஆங்கில கருத்து ஒன்று இருக்கின்றது அதன் தமிழாக்கம்

    'என்னுடைய மவுனத்தினை உன்னால் புரிந்து கொள்ள

    முடியவில்லை என்றால் என்னுடைய வார்த்தைகளையும்

    உன்னால் புரிந்து கொள்ள முடியாது'

    * உங்கள் மவுனம் உங்களுக்கு அநேக விஷயங்களை புரிய வைக்கும். இந்த புரிதல் ஏற்படும்போது மனிதனுக்கு ஞானம் ஏற்படுகின்றது.

    * சில விஷயங்களை எத்தனை பணம் இருந்தாலும் திரும்ப பெற முடியாது. இயற்கையின் சக்தி, இறைவனின் சக்தி, இறைவனின் சக்தி அப்படிப்பட்டது.

    * போய் விட்ட உயிரினை திரும்ப வரவழைக்க முடிவதில்லை.

    * கோபத்தில் கொட்டி விட்ட வார்த்தைகளை ரப்பர் கொண்டு அழித்து விட முடிவதில்லை.

    * காலத்தில் கற்காத கல்வியினை 40 வயதிற்கு மேல் படித்தாலும் வேலை கிடைப்பதில்லை.

    * அனைவரும் அறிந்த ஒன்று காலம் என்ற வார்த்தையின் முக்கியத்துவம் ஆகும்.

    பல மகான்களின் தத்துவ பாடல்களை நம் காது மட்டும் கேட்டால் போதாது. மனமும் கேட்க வேண்டும். அடிக்கடி கேட்க வேண்டும். அன்றாடம் கேட்க வேண்டும்.

    பட்டினத்தார் பாடல்களை கண்டிப்பாய் படிக்க வேண்டும். இதெல்லாம் 50 வயதிற்கு மேல் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் சிறு வயதில் இருந்தே சிறிது சிறிதாய் வாழ்வின் உண்மையினை உணர்த்தலாம்.

    'ஆடுகிற ஆட்டமும் ஓடுகிற ஓட்டமும்

    ஒருநாள் ஓயும்போது

    கூடுகிற கூட்டம் தான் சொல்லும்

    நீ யார் என்பதை

    கோபமாய் பேசினால் குணத்தை இழப்பாய்

    வேகமாய் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்

    வெட்டியாய் பேசினால் வேலையை இழப்பாய்

    அதிகமாக பேசினால் அமைதியை இழப்பாய்

    ஆணவமாய் பேசினால் அன்பை இழப்பாய்

    சிந்தித்து பேசினால் சிறப்போடு வாழ்வாய்.

    நிலையில்லாத வாழ்க்கை

    வாழ்க்கை எனும் நீண்ட பயணத்தில் கடைசி வரை கூட வருவது யார்?

    குவித்து கொட்டியுள்ள செல்வம் வீட்டோடு இருக்கும்.

    மனைவி வாசல் வரை வருவாள்

    மகன் சுடுகாடு வரை வருவான்

    கடைசி வரை நம்மை விடாது உடன் இருப்பதும்

    வருவதும் நாம் செய்யும் நன்மைகளும், தீமைகளும் மட்டுமே.

    இத்தகு கருத்துக்களை பாடல்களாக நமக்கு படிக்க கடினமாய் இருப்பினும் மொழி பெயர்ப்புகளாக இதுபோல் வலைதளத்தில் இருப்பதனை அன்றாடம் படிக்க வேண்டும்.

    • அன்றாட வாழ்வியலில் பெருகிவரும் தகவல் தொடர்பு வளர்ச்சியே பெரும் பிரச்சினைதான்.
    • இணையத்தின் மூலமே அனைத்துப் பயன்களும் எனும்போது, பிரச்சினைகளும் அவற்றின் மூலமாகத்தானே வரும்.

    பிரச்சினைகளை எதிர்கொள்ள எப்போதும் தயங்காத துணிச்சல் மிக்க வாசகர்களே! வணக்கம்.

    எல்லாப் புத்தகங்களுக்கும் கடைசிப்பக்கம் என்று ஒன்று உண்டு; எல்லாக் கதைகளுக்கும் முடிவு என்பது ஒன்று உண்டு. எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு என ஒன்று உண்டு. வாழ்க்கையில் தீர்வுகளை மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தால் பிரச்சினைகளை யார் எதிர்கொள்வது?; முடிவுகளை மட்டுமே ருசித்துப்பார்க்க நினைத்தால் முடிவுகளை அடைய முயலும்போது ஏற்படும் சிரமங்களை யார் அனுபவிப்பது?.

    தயாராவோம் நண்பர்களே! இலக்கை நோக்கிய நமது ஒவ்வொரு பயணத்திலும், எதிர்வரும் சவால்களையும் பிரச்சினைகளையும் மகிழ்ச்சியோடு எதிர்கொள்ளத் துணிச்சலோடு திட்டமிடுவோம். வேதனைகள் இன்றிச் சாதனைகள் ஏது?; பிரச்சினைகள் இன்றித் தீர்வுகள் ஏது?.

    அதனால் பிரச்சினைகளை வரவேற்கக் கற்றுக்கொள்வோம். பசி வந்தால்தான் உணவுக்கான உழைப்பை மேற்கொள்ளக் கற்றுக்கொள்வோம். பிணி வந்தால்தான் நோயின்றி உடம்பைக் காத்திடும் உபாயங்களைப் பழக்கிக் கொள்வோம். பகை/போட்டி இருந்தால்தான் உறங்கிடும்போதும் விழிப்புணர்வோடு இருந்திடும் சுறுசுறுப்பைக் கற்றுக்கொள்வோம்.

    அதனால் பிரச்சினைகளைக் கொண்டாடுவோம்.

    எந்த அறிவும் இல்லாமல், எதைப்பற்றிய புரிதலும் அக்கறையும் இல்லாமல், வெறும் சோற்றுப் பிண்டங்களாக இருக்கும் மனிதர்களுக்கு எப்போதும் பிரச்சினைகளே உருவாவதில்லை. சிந்திக்கிற மூளையே இல்லாதவர்களுக்கு எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் அது பிரச்சினைதான் என்பதை எப்படி உணர்ந்துகொள்ள முடியும்?. சிந்திக்கத் தெரிந்தவர்களே அதிகம் மகிழவும் செய்கிறார்கள்!; அதிகம் அல்லாடவும் செய்கிறார்கள்.

    அன்றாட வாழ்வியலில் பெருகிவரும் தகவல் தொடர்பு வளர்ச்சியே பெரும் பிரச்சினைதான். நாளுக்கு நாள் வளர்வதாக உள்ள இன்றைய அறிவுலக வளர்ச்சியே சாதாரண மனிதனுக்கு இன்னும் பிரச்சினைதான். செல்பேசிகள் வந்தவுடனே தகவல் பரிமாற்ற வளர்ச்சி எங்கேயோ செல்லத் தொடங்கிவிட்டது. ஆனாலும் இன்றும் நான் பட்டன் போனைத்தான் உபயோகிப்பேன்! ஸ்மார்ட் போன்களுக்கு மாற மாட்டேன் என்றால் அதள பாதாளத்திற்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம்.

    ஒரு செல்பேசிக்குள், கடிகாரம், நாள்காட்டி, பஞ்சாங்கம், வங்கி, பள்ளிக்கூடம், கல்லூரி, காவல் நிலையம், உணவு விடுதி, பலசரக்கு, காய்கறி, ரெயில், பேருந்து பயணங்கள், விளையாட்டு, பொழுதுபோக்கு, வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், ஓவியம், நாட்டியம், இலக்கியம், நூலகம், பத்திரிகைகள், அரசாங்கக் கட்டணப் பரிமாற்றங்கள், யூடியூப், வாட்ஸ்அப், டுவிட்டர்,

    இன்ஸ்டாகிராம், இமெயில், இணையம் என உலகில் உள்ள அனைத்தும் அடங்கி விட்டபிறகு, அதனைக் கற்றுக் கொள்ளாவிட்டால் எப்படி?.


    இணையத்தின் மூலமே அனைத்துப் பயன்களும் எனும்போது, பிரச்சினைகளும் அவற்றின் மூலமாகத்தானே வரும். உதாரணத்திற்கு, வங்கிக்குச் செல்லாமலேயே வீட்டிலிருந்தபடி, ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனை அல்லது, மொபைல் வங்கிச் சேவை மூலம் எங்குள்ள ஒருவருக்கும் பணம் அனுப்பவோ அவரிடமிருந்து பெறவோ முடியும் என்று இப்போது வந்து விட்டது. அதே நேரத்தில், இந்தத் தளத்தில் கைதேர்ந்த திருடர்கள் இடைப்புகுந்து வங்கிச் சேமிப்பைத் துடைத்து எடுத்துச் சென்றுவிடவும் செய்கிறார்கள்.

    பெறுகிற அறிவு எவ்வளவு நுட்பமானதோ, அதன் வழியாக வருகிற பிரச்சினைகளும் அதி நுட்பமானவையாகவே இருக்கின்றன. அவற்றிற்கேற்ற வண்ணம் விழிப்புணர்வோடு பிரச்சினைகளை அனுகுகிறவர்களே வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள்.

    பிரச்சினைகள் எப்போதும் பிரச்சினைகளாகவே இருக்கின்றன. அவற்றிற்கான தீர்வுகளைப்பற்றி யோசிக்காமல், நம்மில் பெரும்பாலோர் அந்தப் பிரச்சினைகளுக்கு யார் உரிமையாளர்?, யார் காரணகர்த்தா? என்பதை ஆராய்வதிலேயே நேரத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறோம். ஏற்படுகிற எல்லாப் பிரச்சினைகளுக்கும் நம்மைச் சுற்றியுள்ள அடுத்தவர்களே காரணம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். அல்லது யாராவது ஒருவரைக் காரணமாக்கிக் குற்றம் சுமத்தி மகிழ்கிறோம். வசதியாக ஒன்றை மறந்து விடுகிறோம். "தீதும் நன்றும் பிறர் தர வாரா!" என்பது கணியன் பூங்குன்றனின் வாழ்வியல் கணக்கன்றோ?.

    பிரச்சினைகளில் பெரிய பிரச்சினை என்றும் சிறிய பிரச்சினை என்றும் எதுவுமில்லை. மனம் சோர்ந்துபோகாமல் அவற்றை எதிர்கொள்ளும் சூழல் மற்றும் நேரத்தைப் பொறுத்ததாகவே தீர்வுகள் அமைகின்றன. 'என்னால் தீர்க்க முடியாத பிரச்சினை அது!' என்று எதையாவது நீங்கள் சுட்டிக்காட்டுவீர்கள் ஆனால், இந்த உலகில் மனிதனை விடவா அவன் சந்திக்கும் பிரச்சினைகள் பெரியவை? என்று ஒருகனம் யோசித்துப் பார்த்தால் பிரச்சினைகள் தூசாகிப் போகும். துணிந்தவர் முன் எதுவுமே துக்கம் தருவதில்லை.

    சாதனை இலக்குகளை உருவாக்கும்போதே, வரப்போகும் எதிர்விளைவுகளையும் பக்க விளைவுகளையும் ஒருசேர யோசித்துத் திட்டமிட வேண்டும். இதனை வள்ளுவர் "எதிரதாக் காக்கும் அறிவு" என்று குறிப்பிடுகிறார். இப்படிப்பட்ட அறிவுடையாருக்கு அதிர வருகிற நோய் வராது என்பதும் அவரது கணிப்பு. அனுபவசாலிகளின் முன் அனுபவங்கள், தாமே அனுபவித்தறிந்த உண்மைகள் இவற்றையெல்லாம் உபகரணங்களாக வைத்துப் பிரச்சினைகள் உருவாகும் முன்னரே தடுத்தழித்திட வேண்டும்.

    ஒருமுறை நோய் வந்தபோது பட்டபாடுகள், செய்த மருத்துவ முறைகள், இவற்றை அனுபவங்களாக வைத்துக்கொண்டு அதே போன்றதொரு நோய் அறிகுறி மீண்டும் தோன்றும்போதே எச்சரிக்கையாக இருந்துவிட்டால் அந்த நோய்ப் பிரச்சினையிலிருந்து தப்பித்து விடலாம். வாழ்க்கையில் நோய் மட்டுமல்ல, குடும்பத்தில், அலுவலகத்தில் எதிர்ப்படுகிற எல்லாப் பிரச்சினைகளுக்கும் வருமுன்னர்க் காக்கும் சிகிச்சைமுறை நல்ல பலனளிக்கும்.

    சுந்தர ஆவுடையப்பன்

    சுந்தர ஆவுடையப்பன்

    நமக்கு வரும் பிரச்சினைகள் நமக்கு எதிரானவை அல்ல; நமக்குத் தேவையானவற்றை இன்னும் செம்மையாகச் செய்து கொள்ள நம்மை ஈடுபடுத்தும் ஆபத்து உதவிகள். சிலர் பிரச்சினைகளுக்குத் தீர்வு பிரச்சினைகளே என நினைத்து எதிர்மறை நோக்கில் செயல்படத் தொடங்கி விடுவர். ஒருவர் அடிக்க வருகிறார் என்றால், திரும்ப அவரை அடிக்கச் செல்வது பிரச்சினையை மேலும் பிரச்சினையாக்கும். பொறுமையும், சகிப்புத் தன்மையுமே நிரந்தர வெற்றியின் ஆயுதங்கள் என்று மகாத்மா காந்தியடிகள் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

    ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி பத்துப் பதினைந்து ஆடுகளை வளர்த்து வந்தார். அவர் வீட்டுக்கு அருகில் ஒரு வேட்டைக்காரர் குடும்பத்தோடு குடி வந்தார். வேட்டைக்காரருக்கு இரண்டு சிறுவர்கள்: இரண்டு வேட்டை நாய்களும் உண்டு. நாள்தோறும் வேட்டைக்காரரோடு காட்டுக்குச் சென்று மிருகங்களைக் கவ்விப்பிடித்து, அவர் வேட்டையாடுவதற்கு அவை உதவி வந்தன.

    வீட்டிலிருக்கும்போதும் அந்த வேட்டைநாய்கள் சும்மா இருப்பதில்லை; பக்கத்திலிருக்கும் விவசாயியின் வீட்டுக்குள் புகுந்து அங்குள்ள ஆடுகளைக் கடித்து வைக்கத் தொடங்கின. வேட்டைக்காரரைப் பார்த்து விவசாயி முறையிட்டார்," ஐயா வீட்டிலிருக்கும்போது, உங்கள் வேட்டை நாய்களைக் கட்டிப் போடுங்கள்!; எங்கள் வீட்டுக்குள் புகுந்து ஆடுகளைச் சேதப்படுத்துகின்றன!." வேட்டைக்காரர் பிரச்சினையை மேலும் வளர்ப்பதுபோலப் பேசினார், " நீ உன் ஆடுகளைக் கட்டிப்போடு! எனது நாய்கள் வேட்டைநாய்கள்! அவற்றால் மிருகங்களைக் கடிக்காமல் சும்மா இருக்க முடியாது!" என்று கர்ஜித்தார்.

    பிரச்சினையை ஊர்ப்பஞ்சாயத்தாரிடம் எடுத்துச் சென்றார் விவசாயி. "வேட்டைக்காரன் முரடன், அவனிடம் நட்போடு நடந்துகொள்!" என்று விவசாயிக்கு அறிவுரை கூறி அனுப்பினர் பஞ்சாயத்தார்.

    இந்தப் பிரச்சினையை எப்படி அணுகினால் சுமூகமான தீர்வை விவசாயி அடைய முடியும்?. பஞ்சாயத்தார் வேட்டைக்காரரை அழைத்து உன் நாயைக் கட்டிப்போடு! என்று உத்தரவிட்டாலும் அவர் கேட்கப் போவதில்லை. மீண்டும் ஆட்டுக்குட்டிகளை நாய் கடித்தால், நான் என்ன செய்வது? என விலகிக் கொள்ளவும் செய்வார். விவசாயி பேசாமல் வீட்டைக் காலிபண்ணி வேறுபக்கமாகப் போகலாம் என்றால் அந்த வீடு அவருக்குப் பூர்வீகச் சொந்த வீடு.

    "நட்போடு நடந்து கொள்ளுங்கள்!" என்று பஞ்சாயத்தார் சொன்ன அந்த ஒரு சொல்லை யோசனையில் வைத்துக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பினார்

    விவசாயி. அந்த ஒற்றைச் சொல்லில் இந்தப் பிரச்சினைக்கான வழி பிறந்திருப்பதாக நினைத்துச் செயலிலும் ஈடுபட்டார். தன் வீட்டில் இருந்த இரண்டு குட்டி ஆடுகளை இரண்டு கைகளிலும் அரவணைப்பாய் எடுத்துக்கொண்டு, வேட்டைக்காரர் வீட்டு வாசலில் நின்றார். அங்கே விளையாடிக்கொண்டிருந்த வேட்டைக்காரரின் இரண்டு மகன்களையும் அருகே அழைத்தார். ஆளுக்கொரு ஆட்டுக்குட்டியைப் பரிசாகக் கொடுத்தார்.

    "இந்த இரண்டு ஆட்டுக்குட்டிகளையும் கவனமாகப் பார்த்து வளர்த்து ஆளாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு!" என்று சொல்லிக் கொடுத்தார் விவசாயி. பெற்றுக்கொண்ட சிறுவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி. அன்று முதல் ஆட்டுக்குட்டிகளை நண்பர்களைப் போல பாவித்து அந்தச் சிறுவர்கள், அவற்றோடு விளையாடி மகிழ்ந்தனர்.

    தனது மகன்கள் ஆட்டுக்குட்டிகளோடு பிரியமாய் விளையாடுவதைப் பார்த்த வேட்டைக்காரர், வேட்டை நாய்களைக் கட்டிப் போடத் தொடங்கினார். அன்றுமுதல் விவசாயிக்கு இருந்த நாய்ப் பிரச்சினை முடிவுக்கு வந்தது. ஆம்!. நாள்தோறும் ஒன்றிரண்டு ஆடுகளை இழந்து வந்த விவசாயி அன்போடும் நட்போடும் அன்று இழந்த இரண்டு ஆடுகளோடு பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டு வந்து விட்டார்.

    பிரச்சினைகள் எப்போதும் உள்ளவை. அவற்றை அணுகும் முறைகளினாலேயே அவற்றோடு உறவு கொண்டாடி மகிழலாம். முல்லா நசுருதீன் தனக்கு அற்புதமான ஆற்றல் வந்துவிட்டதாக ஒருநாள் மக்களுக்கு அறிவித்தார். பிரார்த்தனைகள் மூலமாகவே எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம் எனத் தெரிவித்தார்.

    பிரார்த்தனை மூலமாக அசைக்க முடியாத மலையையும் கூட அசைக்கலாம்; நகர்த்தலாம் என்று தெரிவித்த அவர். ஒருநாள் ஒருபெரிய மலைக்கு முன்னால் அமர்ந்து பிரார்த்தனை பண்ணத் தொடங்கினார். நான் பண்ணுகிற பிரார்த்தனையின் ஆற்றலால், இந்த மலையை என்னை நோக்கி நகர்ந்து வரச் செய்யப்போகிறேன் என்றார்.

    ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம், மூன்று மணிநேரம், நான்கு மணிநேரம் ஆயிற்று!. மலை அசைந்து கூடக் கொடுக்கவில்லை; முல்லாவை நோக்கி நகர்ந்து வரவுமில்லை. பார்த்தார் முல்லா, முழந்தாள் போட்டவண்ணம் மலையை நோக்கி இவர் நகரத் தொடங்கிவிட்டார். முல்லாவின் செயலை மக்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர்.

    முல்லா சொன்னார், "பிரச்சினைகளுக்கான தீர்வுகள் நம்மை நோக்கி வரவில்லையென்றால், நாம்தாம் தீர்வுகளை நோக்கி நகரத் தொடங்க வேண்டும்". வெகு ஆழமான வார்த்தைகள் இவை.

    எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் இருக்கின்றன. சில தீர்வுகள் பிரச்சினைகளுக்கு வெளியே இருக்கலாம்; பல தீர்வுகள் அவற்றிற்கு உள்ளேயே இருக்கின்றன. பிரச்சினைகள் நம்மைச் சோர்வடைய வைக்கின்றன என எண்ணுவோர் வாழும் ஆற்றலைத் தவற விட்டவர்கள்.

    பிரச்சினைகள் நம்மைச் சுறுசுறுப்பாக்குகின்றன என எண்ணுவோர் நொடிதோறும் வாழும் பெருமை பெற்றவர்கள்.

    தொடர்புக்கு - 9443190098

    • முடக்குவாதம் வந்தால் உடலில் எந்த செயல்பாடும் இல்லாமல், அனைத்து இயக்கங்களும் அப்படியே நின்று வீட்டில் முடக்கி போட்டு விடும்.
    • சிலருக்கு யூரிக் ஆசிட் அளவு அதிகமாவதால் மூட்டுக்களில் வலி ஏற்படலாம்.

    நம் உடலின் நோய் எதிர்ப்புத்திறன் நமது உடலுக்கே எதிராக செயல்படும் போது பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனை தன்னெதிர்ப்பு நோய்கள் என அழைக்கிறோம்.

    இந்த தன்னெதிர்ப்பு நோய்களிலும் பல வகைகள் உள்ளது. இதில் பொதுவாக எல்லோராலும் அறியப்படுவது தான் முடக்குவாதம் அல்லது சரவாங்கி மூட்டுவாதம். இது இந்த பெயர் மட்டுமல்லாது பல்வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

    முடக்குவாதம் குறித்தும், அது யாரை தாக்கும், அந்த நோய் பாதிப்பின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

    பல நோய்களின் கூட்டு வெளிப்பாடு தான் இந்த முடக்குவாதம். முடக்குவாதம் வந்தால் உடலில் எந்த செயல்பாடும் இல்லாமல், அனைத்து இயக்கங்களும் அப்படியே நின்று வீட்டில் முடக்கி போட்டு விடும்.

    முடக்குவாதம் என்றவுடன் எல்லோரும் அது எலும்பு தொடர்பான நோய், மூட்டுவலி என்று நினைத்து விடுகிறார்கள். இது மூட்டு தசைகள், இணைப்பு திசுக்கள் போன்றவற்றுடன் தொடர்புடையது. உடலின் பல்வேறு உறுப்புகளையும் பாதிக்க கூடியது தான் முடக்குவாதம்.


    முடக்குவாதத்திலும் பல வகைகள் உள்ளன. வயது மூப்பு காரணமாக ஏற்படுகிற ஆர்த்தரைட்டிஸ் பிரச்சினை ஆஸ்டோ ஆர்த்தரைட்டிஸ் என அழைக்கப்படுகிறது. இது நமது உடம்பில் உள்ள எலும்பு மூட்டுகள் தேய்வதால் உண்டாகிறது.

    பொதுவாக எல்லோரும் அறிந்த இன்னொரு வகையானது, சொரியாசிஸ் ஆர்த்தரைட்டிஸ். இது சொரியாசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும். மற்றொன்று முதுகு தண்டுவாதம். முதுகு தண்டுவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதுகு மற்றும் கழுத்து பகுதிகளில் பாதிப்பு ஏற்படும். மூட்டு பகுதிகளிலும் வலி இருக்கும்.

    சிலருக்கு யூரிக் ஆசிட் அளவு அதிகமாவதால் மூட்டுக்களில் வலி ஏற்படலாம். இது கவுட் ஆர்த்தரைட்டிஸ் என அழைக்கப்படுகிறது. கை மற்றும் கால் மூட்டுகளில் வலியும் வீக்கமும் ஏற்படுவதே இதன் அறிகுறியாகும். இதுமட்டுமின்றி மூட்டுகளில் வலியுடன் இறுக்கமும் ஏற்படும்.

    காலையில் எழுந்தவுடன் அனைவரும் கை, கால்களை அசைந்து கொடுப்போம். ஆனால் இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களால் தங்கள் கை, கால்களை நீட்டவோ, மடக்கவோ முடியாது. இவ்வளவு ஏன் அவர்களது அன்றாட பணிகளை கூட தங்களால் செய்ய முடியாது. அதற்கும் கூட யாராவது உதவ வேண்டிய நிலையே இருக்கும். தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் வரை இந்த வலியானது இருக்கும். சிலருக்கு 1 மணி நேரத்திற்கு மேலாகவும் அல்லது அதற்கு மேற்பட்ட நேரம் வரையும் இருக்க வாய்ப்புள்ளது. இதனை காலை விறைப்பு(மார்னிங் ஸ்டெப்னஸ்) எனவும் குறிப்பிடுகிறோம்.

    பொதுவாகவே சர்க்கரை நோய், இதய அடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் குறித்து மக்களுக்கு அந்தளவு விழிப்புணர்வு இருப்பதில்லை. நோய் முற்றிய நிலைக்கு வந்த பிறகே பலருக்கும் தனக்கு அந்த நோய்கள் இருப்பது தெரிய வரும்.

    அதுபோன்று தான் ஆர்த்தரைட்டிஸ் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு இல்லை. மூட்டுகளில் சிறிய வலிதானே என்று, மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை கண்டு கொள்ளலாமல் விட்டு விடுகின்றனர்.


    அப்படி நாம் கண்டு கொள்ளாமல் விடுவதால் நோய் முற்றி பிற்காலத்தில் சிதைவுகள்(டிபார்மைட்டிஸ்) ஏற்பட்டு விடும். இதன் மூலம் கை, கால்கள் வளைந்து போகவும் வாய்ப்புள்ளது. அப்படி கை, கால்கள் வளைந்து போனால் மீண்டும் அதனை சரி செய்வது என்பது இயலாத ஒன்றாகிவிடும்.

    எனவே ஆரம்பத்திலேயே இந்த பிரச்சினையை கண்டுபிடித்து முறையான சிகிச்சை பெற வேண்டும். அப்படி சிகிச்சை பெற்றுக் கொண்டோமானால் ஆர்த்தரைட்டிஸ் பாதிப்புகளை நாம் தவிர்க்க முடியும்.

    ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் நோய் எந்த வயதிலும், எந்த வயதினருக்கும் வரலாம். ஆனால், நடுத்தர வயது உடையவர்களுக்கு அதிகமாக வருகிறது. அதிலும் குறிப்பாக ஆண்களை விட பெண்களையே இந்த நோயானது அதிகமாக தாக்கும்.

    மாதவிடாய் ஆரம்பிக்கும் வளர் இளம் பருவம் முதல் மாதவிடாய் நிற்கும் வரையிலான இனப்பெருக்க காலக்கட்டத்தில் இது வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். கை, கால், மூட்டு வீங்குதல், வலி, உடல் சோர்வு, காய்ச்சல், நாள்பட்ட வறட்டு இருமல், மூச்சுத்திணறல் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள்.

    ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் மூட்டுகளை பாதித்து சிதைவுகளை மட்டும் ஏற்படுத்தாது. மாறாக நமது உடலில் உள்ள வேறு சில பாகங்களையும் தாக்க கூடியது.

    குறிப்பாக கண்ணில் பலவித உபாதைகளை ஏற்படுத்தும். இதனால் கண்களில் வறட்சி, கண் சிவந்து விடுதல் மற்றும் வலி ஏற்படும். இந்த நோய் நுரையீரல் ஐ.சி.டி. என்னும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடியது.

    நாள்பட்ட ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் இருப்பவர்களுக்கு மாரடைப்பு போன்ற பிரச்சினைகளும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் ஏற்படுவதற்கு மரபணு, சூழல் மாசுபாடு, தொற்று என பல்வேறு காரணங்கள் உள்ளன.

    இந்த பிரச்சினை உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் இந்த நோய் வந்துவிடுமோ என அச்சப்படலாம். அந்த பயம் அவர்களுக்கு வேண்டாம். ஏனென்றால், மரபணு மூலமாக இது வருவதற்கான வாய்ப்பு என்பது ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

    ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் உள்ளவர்கள் வழக்கமான உணவு பழக்கத்தை விட்டு, ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அதாவது பழங்கள், காய்கறிகள் அதிகளவில் நமது உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் கவர்கள், பாக்கெட்டில் அடைக்கப் பட்டிருக்கும் உணவுகள் மற்றும் துரித உணவு வகைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக புகைப்பிடிப்பவராக இருந்தால் அதனை அறவே தவிர்த்து விட வேண்டும்.

    ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் உள்ளவர்களுக்கு 6 வாரங்களுக்கும் மேலாக மூட்டுப்பகுதிகளில் வலி இருக்கும். இந்த வலியானது மற்ற மூட்டுகளிலும் பரவி விடும். இந்த மாதிரியான நோய்த்தொற்று அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு முதலில் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் ரத்த அணுக்களின் அளவினை பரிசோதிப்போம்.


    பிறகு உடலின் உள்ளுறுப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் பார்ப்போம். தைராய்டு சுரப்பி எவ்வாறு இயங்குகிறது என சில மருத்துவ பரிசோதனைகளையும் செய்து பார்த்து இதனை கண்டறிவோம்.

    ருமட்டாய்டு நோயின் வீரியம் எந்த அளவில் உள்ளது என்பதை அறிய ருமட்டாய்டு பேக்டர் மற்றும் ஆண்டி சிசிபி போன்ற சிறப்பு பரிசோதனைகள் உள்ளது. இதன் மூலம் நோயின் வீரியத்தன்மையை பார்த்து, அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படும்.

    ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் உள்ள நோயாளிகள் சிகிச்சைக்காக வரும் போது ஏதேனும் வலி நிவாரணி கொடுப்பார்களா, அதனால் சிறுநீரகம் பாதிக்கப்படுமா என அச்சம் அடைய தேவையில்லை. அவர்களுடைய சிறுநீரகம் நல்ல நிலையில் இயங்கினால் மட்டுமே இதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ள முடியும் என்பதாலும், சிலருக்கு வாழ்நாள் முழுவதற்குமான சிகிச்சை தேவைப்படும் என்பதாலும் சிறுநீரகத்தின் செயல்திறன் பாதிக்காத வகையில் சிகிச்சை முறைகள் இருக்கும்.

    நோயினால் பாதிக்கப்பட்டோர் முன்பு போல ஸ்டிராய்டு, வலி நிவாரணி குறித்து அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை. நவீன சிகிச்சையில் கொடுக்கப்படும் மருந்துகள் டி.எம்.ஏ.ஆர்.டி.எஸ் எனப்படும். இந்த மருந்துகள் சிறிது, சிறிதாக நோயின் பாதையை மாற்றக்கூடியது. இதனால் வலி நிவாரணி இல்லாமல், ஸ்டீராய்டு மருந்துகள் இல்லாமல் நோயின் தீவிரத்தை சிறிது, சிறிதாக குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோயாளிகள் வாழ முடியும்.

    சில நோயாளிகளுக்கு இந்த மருந்தினால் குணம் ஆகவில்லை என்றால் அவர்களுக்கு இந்த மருந்து ஒத்துக்கொள்ளவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். அதற்கு வேறு சில நவீன சிகிச்சை முறைகளும் தற்போது உள்ளன.

    நவீன சிகிச்சை முறைகள் மூலம் நவீன மருந்துகளை வழங்கினால் நோயின் தாக்கம் குறைந்து விடும். எனவே இதுபோன்ற பாதுகாப்பான மருந்துகளையே எடுத்துக்கொள்ள வேண்டும். மற்ற நோய்களுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்புபவர்களை டாக்டர்கள் நீங்கள் ஒய்வெடுங்கள் என்று சொல்வார்கள்.

    ஆனால் இந்த நோயில் இருந்து குணம் அடைந்து செல்பவர்களை நாங்கள் ஒய்வெடுங்கள் என்று சொல்லமாட்டோம். மூட்டுகள் ஆரோக்கியமாகவும், இயல்பாக இயங்கவும் சில பயிற்சிகள் அவசியம் என்பதால் ஒய்வு வேண்டாம் என்று சொல்கிறோம். அவர்களால் முடிந்தளவு சிறிய, சிறிய உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். தங்களுடையே அன்றாட பணிக்கு யாரையும் எதிர்பார்க்காமல் தாங்களே செய்து கொள்ள வேண்டும். எப்போதுமே உங்களது மூட்டுகளுக்கு பயிற்சியானது அவசியம். அப்படி பயிற்சி செய்வது மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கும், அவை இயல்பாக இயங்குவதற்கும் மிகவும் அவசியமானது.

    எனவே மூட்டுகளில் வலி அல்லது இறுக்கம் போன்றவை இருந்தால் லேசாக தானே என்று விட்டு விடாமல் டாக்டர்களை சந்தித்து, அதற்கான ஆலோசனைகளையும் பெற்று நலமான வாழ்வு வாழலாம்.

    தொடர்புக்கு: 73393 33485

    • நம்முடைய உடல் மொழியை நாம் தெரிந்து கொண்டால், நம் உடலை பற்றி சரியாக கணிக்க முடியும்.
    • மன அழுத்தம் ஏற்பட்டு, வாழ்வில் எந்த விஷயத்திலும் முடிவுகள் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

    வாசகர்களே, பிராணாயாமம் யோகம் என்பது ஒரு கணிதம் ஆகும். கணிதம் என்பது என்றும் மாறாது. இந்த பிராணாயாமம் என்பது நமக்கு எப்படி உதவி செய்யும் என்பதை பார்ப்போம். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன், கணித மேதை ராமானுஜம் ஆகியவர்கள் ஆல்பா நிலைக்கு வந்துதான் சாதனைகள் படைத்தனர் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    பொதுவாக யோகம் என்றால் உடல் மனம், உயிரை இணைத்தல் அல்லது உள்வாங்குதல் என்று பொருள். நம்முடைய உடல் மொழியை நாம் தெரிந்து கொண்டால், நம் உடலை பற்றி சரியாக கணிக்க முடியும்.

    உதாரணத்திற்கு நாம் உற்சாகமாக இருந்தால், அதே நேரம் நமது மூச்சை கவனித்தால், உடல் செல்கள் நடனமாடுவதை உணரலாம். ஆனால் நாம் சோகமாக இருக்கும்போது நமது செல்களும் சோகமாக இருக்கும்.

    சோகமாக இருக்கும்போது, அதே நிலை தொடர்ந்தால், மன அழுத்தம் உருவாகும். இதனால் நம் உடலில் வளர்சிதை மாற்றம் (மொட்டபாலிசம்) சரிவர இயங்காது. அந்த நேரத்தில் உடலில் நச்சுக்கள் உருவாகும்.

    நச்சுக்கள் என்பது செல்கள் உடைதல் என்று பொருள். அதாவது 4 ஆக்சிஜன் அணுக்கள் இரண்டாக உடைய ஆரம்பிக்கும். இதனால் இருக்கின்ற செல்கள் வேலை செய்யாமல், மற்ற புதிய செல்களையும் உருவாக்காது.

    இதனால் உயிரகந்தடுப்பிகள் (Antioxidant) உருவாக்காது. இதன் விளைவு தான் நமக்கு கோபம், மறதி, மன அழுத்தம் ஏற்பட்டு, வாழ்வில் எந்த விஷயத்திலும் முடிவுகள் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது தான் முதல் நிலை ஆகும்.

    இதன் காரணமாக, இரண்டாம் நிலையாக உடல்வலி, நடந்தால் படி ஏறினால் மூச்சு திணறல் ஏற்படும். இதனால் மூன்றாம் நிலையாக ஜீரண மண்டலம் பாதிக்கப்பட்டு வயிற்று புண் (அல்சர்) ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை குறைபாடு போன்ற பிரச்சினைகள் நம்மை தேடி வரும்.

    அடுத்து நான்காம் நிலையாக உடலில் உள்ள ராஜ உறுப்புக்களான, சிறுநீரகங்கள், கண்கள், நுரையீரல், கல்லீரல், இருதயம் போன்றவை பாதிக்கப்படுகிறது.


    எனவே, முதல் நிலை வரும் போதே உடற்பயிற்சி பிரணாயாமம் செய்தால் நாம் இந்த பிரச்சினைகளில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

    எனவே நாம் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு வீதம் இயக்கினால் நமது ஆயுள் கூடும் என்பது சித்தர்களின் கூற்று ஆகும். இந்த நிலையில் நாம் சுவாசித்தால், 24 மணி நேரத்திற்கு 21600 மூச்சுக்கள் விடுவோம்.

    அது எப்படி உருவாகிறது என்பதை கீழ்க்காணும் அட்டவணையில் பார்ப்போம்...

    மூச்சு செயல்படும் விதத்தின் நேரம் மற்றும் மூச்சு எண்ணிக்கை:

    மூலாதாரம்:

    6.00 முதல் 6.40 மணி வரை

    600 எண்ணிக்கை

    சுவாதிஷ்டானம்:

    6.40 முதல் 1.20 மணி வரை

    6000 எண்ணிக்கை

    மணிபூரகம்:

    1.20 முதல் 8.00 மணி வரை

    6000 எண்ணிக்கை

    அனாகதம்:

    8.00 முதல் 2.40 மணி வரை

    6000 எண்ணிக்கை

    விசுக்தி:

    2.40 முதல் 3.46 மணி வரை

    1000 எண்ணிக்கை

    ஆக்கினை:

    3.46 முதல் 4.53 மணி வரை

    1000 எண்ணிக்கை

    சகஸ்ராதாரம்:

    4.53 முதல் 6.00 மணி வரை

    1000 எண்ணிக்கை

    இது மனிதர்களுடைய மூச்சு கணக்கு என்றால், ஐந்தறிவு படைத்த விலங்குகள் எப்படி உயிர் வாழ்கிறது என்பதை ஆராய்ந்து அதன் ஆயுட்காலத்தை கண்டுபிடித்தார்கள்

    (1 நிமிடத்திற்கு)

    விலங்குகளின் மூச்சு எண்ணிக்கை மற்றும் ஆயுள் காலம்:

    முயல்:

    38-39 மூச்சு எண்ணிக்கை / 8 ஆண்டு

    புறா:

    36-37 மூச்சு எண்ணிக்கை / 8-9 ஆண்டு

    குரங்கு:

    31-32 மூச்சு எண்ணிக்கை / 13-14 ஆண்டு

    நாய்:

    28-29 மூச்சு எண்ணிக்கை / 20-21 ஆண்டு

    குதிரை:

    18 மூச்சு எண்ணிக்கை / 48-50 ஆண்டு

    யானை:

    11-12 மூச்சு எண்ணிக்கை / 160 ஆண்டு

    சர்ப்பம்:

    7-8 மூச்சு எண்ணிக்கை / 250 ஆண்டு

    ஆமை:

    3-4 மூச்சு எண்ணிக்கை / 450 ஆண்டு

    பேராசிரியர்கள் கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

    பேராசிரியர்கள் கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்


    இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது என்றால், வேகமாக சுவாசிக்கும் பிராணிகளின் வாழ்நாள் குறையும் என்பதும், மெதுவாக சுவாசிக்கும் பிராணிகளின் வாழ்நாள் கூடும் என்பதும் புலனாகிறது.

    மனிதர்களை பொறுத்தவரை, ஒரு நிமிடத்திற்கு 15 சுவாசம் செய்தால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம். ஆனால் நாம் இந்த யோகத்திற்கு சிறு வயதில் இருந்தே வரவில்லை. நடுத்தர வயதில்தான் உணர்ந்து வருகிறோம். எனவே நாம் விட்ட மூச்சுக்களை பிடிக்க வேண்டும் என்றால் இந்த மூச்சு பயிற்சி மற்றும் நாடி சுத்தி பிராணாயாமம் செய்து 100 வயது வரையாவது வாழலாம். ஆனால் கர்மா என்கின்ற விதி நம்மை விடாது. அது மிகவும் ஆபத்தானது. நம்மை அச்சப்பட வைத்து தேவையற்ற பயத்தை ஏற்படுத்திவிடும். நமது இந்த அச்ச உணர்வில் இருந்து விடுபட வேண்டும் என்றால், நமது சுவாசம் மெதுவாக இருக்க வேண்டும். அப்படி செய்தால்தான் ஆயுள் அதிகம் ஆகும். எனவே நாம் முறையாக சுவாசித்தால் எல்லாம் முறையாக நடைபெறும். இல்லையென்றால் தேவையற்ற குழப்பங்களுக்கு வழி வகுக்கும்.

    பொதுவாக நாம் ஆக்சிஜன் வாயுவை மற்ற வாயுக்களோடு உள்ளே இழுத்து நச்சு வாவுவான கார்பன்-டை-ஆக்சைடை மற்ற வாயுக்களோடு வெளிவிடுகிறோம். ஆனால் தாவரங்களை பார்த்தால் நமக்கு நேர்மாறாக கார்பன்-டை-ஆக்சைடு உள்ளே இழுத்து, ஆக்சிஜனை வெளிவிடும். இந்த முறை சூரியன் மறைகின்ற வரை நடக்கும்.

    மாலை, சூரியன் மறைவுக்கு பிறகு தாவரங்கள், நம்மை போல, ஆக்சிஜனை உள் இழுத்து, நச்சு வாயுவை வெளிவிடும். எனவேதான் நம் முன்னோர்கள் பகலில் மரங்களின் அடியில் படுக்கலாம். இரவில் படுக்கக்கூடாது என்று சொன்னார்கள். அதே போல் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பிராண சக்தி குறைவாக இருக்கும். எனவே தான் நம் முன்னோர்கள் கூட்டம் வரும் விஷேச நாட்களில், மாவிலை தோரணம் கட்டுவார்கள். காரணம், என்னவென்றால், மாவிலை நச்சுவாயுவை உள் இழுத்து, தன்னிடம் உள்ள பிரோஹிஸ்பிடின் என்ற வாயுவை காற்றில் பறக்க விடும். இது, காற்றில் கலந்து உள்ள நோய் கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் அழித்துவிடும். மேலும், மாவிலைக்கு பக்தி மார்க்கதிலே, துர்தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தி உள்ளது என்று கூறுவார்கள்.

    பொதுவாக நாம் சுவாசத்தை உள் இழுக்கும் போது பிராண சக்தி மட்டும் இன்றி, பிரபஞ்ச சக்தியையும் சேர்த்து தான் உட்சுவாசம் செய்கிறோம். எனவே பிராண சக்திக்கு கட்டுப்பாடு எதுவும் இல்லை. அது நம் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் ஊடுறுவி செல்கிறது. எனவே தான் நாம் மூச்சை மெதுவாக உள்இழுத்து மெதுவாக வெளிவிட வேண்டும் என்று கூறுகிறோம்.

    எனவே, நாடி சுத்தி பிராணாயாமத்தை அதிகாலை எழுந்தவுடன் செய்ய வேண்டும். இரவு படுக்கும்முன், நாளை காலை பயிற்சி செய்ய வேண்டும் என்று மனதிற்கு கட்டளை இட்டால், அதிகாலை எழும்போதே பயிற்சி செய்ய வேண்டும் என்கின்ற நினைப்பு வரும். நம் மனதை விட நமக்கு ஒரு விஷயத்தை நினைவூட்டும் கருவி இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை.

    மனம் என்பது உயிரின் படர்கை நிலை என்பதை வேதாந்திரி மகரிஷி மிகவும் எளிதாக எல்லோருக்கும் புரியும்படி கூறுகிறார். எனவே நாம் நமது மனக் கதவை திறக்க வேண்டும் என்றால் இந்த பயிற்சி அவசியம் ஆகிறது.

    உன் மனக் கதவை திறந்த பின், நீ இறைவனிடம் கேட்க வேண்டியது எதுவும் இல்லை. ஏனெனில் எனக்கு தேவை எதுவும் இல்லை. அப்படி என்றால் என் வாழ்க்கையையும் குடும்பத்தையும் நடத்துவதற்கு பொருள்வேண்டமா என்கின்ற கேள்வி எழும். மனக் கதவை திறந்து விட்டால், உனக்கு தேவையானதை எப்போது எங்கு, யார் மூலமாக, எவ்வளவு எப்படி கொடுக்க வேண்டும் என்பது இறைவனுக்கு தெரியும்.

    ஏன் இப்படி குறிப்பிடுகிறோம் என்றால் நாம் தாயின் வயிற்றில் கருவாக உருவாகும் போதே அந்த நொடி பொழுதினிலே நாம் யாருக்கு பிறக்க வேண்டும் என்னவாக பிறக்க வேண்டும் எங்கு பிறக்க வேண்டும் என்கின்ற எட்டு கட்டளைகள், கருவிலே கர்மவினை பதிவுகளாக பதிவாகிறது. எனவே அது அது நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும் என்பதை நாம் ஏற்று கொள்ள வேண்டும்.

    எனவே நாடி சுத்தி பிராணாயாமம் என்பது மனதை அறியும் ஒரு பயிற்சி. நம் மனதில் இருந்து எழுகின்ற எண்ணங்கள் மூலமாக வருகின்ற செயல்களின் விளைவு ஒன்று இன்பமாகவோ அல்லது துன்பமாகவோ அமையும்.

    இன்பம் அதிகமாக வரும்போது நமக்கு இன்பத்தை மேலும் பெருக்கி கொள்ள வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றும். அதே சமயம் அந்த இன்பமே நமக்கு அதிகமாகும்போது அதுவே நமக்கு துன்பத்தை கொடுக்கும். இப்போது இன்பத்தை பெருக்கும் எண்ணங்கள் மறைந்து துன்பத்தை போக்கி கொள்ள வேண்டிய எண்ணங்கள் தோன்றும்.

    இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் மனதில் உதிக்கின்ற எண்ணங்கள் மூலமாக வரும் விளைவு ஒன்று இன்பமாகவோ அல்லது துன்பமாகவோ அமையும். இருக்கின்ற ஒரு மனம் எப்படி இன்பம் மற்றும் துன்பமாக இரட்டை வேடம் போடுகிறது. என்பதை பற்றி நாம் சிந்திப்பது இல்லை.

    அப்படி என்றால் என் மனதில் உதிக்கின்ற எண்ணங்கள் இன்பத்தை மட்டும் கொடுக்க வேண்டும் துன்பத்தை கொடுக்கக் கூடாது என்று மனதிற்கு கட்டளை இட்டால் போதுமா என்றால் போதாது.

    துன்பமே இல்லாத இன்பம் எங்கு உள்ளது என்பதை ஆராய்சி செய்ய வேண்டும். அந்த தன்பம் இல்லாத இன்பத்தை நாம் வெளியில் தேடினால் கிடைக்காது. அது நமக்கு உள்ளேயே உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.

    இதற்கு நம் ஆராய்ச்சி அகம் நோக்கிய பயணம் மேற்கொள்ள வேண்டும். அதற்கு, புறஉல கோடு தொடர்பில் இருக்கின்ற நமது ஞான இந்திரியங்கள் என்கின்ற தோல், நாக்கு, மூக்கு, கண், காது இந்த ஐந்து புலன்களை புற உலகோடு உள்ள தொடர்பை துண்டித்து அக உலகிற்கு திருப்பி விட வேண்டும். இந்த மடை மாற்றும் வித்தையை பற்றி ஆராய்ச்சி செய்வோம்.

    போன்: 9444234348

    • இதயம் இடைவிடாமல் தூங்கிவிடாமல் துடிப்பதற்கு எல்லா உடல் இயக்கங்களுக்கும் தசைகள் தேவை.
    • தாவர அடிப்படையிலான உணவுகளில் சில அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இல்லாமல் இருக்கலாம்.

    நம் வீட்டு குழந்தைகள் அல்லது பெரியவர்களிடம் புரதசத்து உள்ள உணவுகள் யாவை என்ற ஒரு கேள்வியை கேட்டு பாருங்கள். இந்த கேள்வியை லட்சக்கணக்கான மக்களுக்கு ஆரோக்கிய விழிப்புணர்வை யூடியூப் தளத்தின் மூலமாக ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நான், எனது வீட்டில் உள்ள குழந்தைகளிடமும் பெரியவர்களிடமும் கேட்டபோது திரு திரு வென விழித்தார்கள். பின்பு ஒருவழியாக சமாளித்து சில பதில்களை அளித்தார்கள். அவர்கள் அளித்த பதிலை கேட்டு நான் திருதிருவென விழித்தேன். அப்பொழுதுதான் உணர்ந்தேன், விழிப்புணர்வை முதலில் வீட்டிலிருந்து ஆரம்பித்து இருக்க வேண்டும் என்று !.

    ஏனென்றால் அவர்கள் அளித்த பதில்கள் அப்படி. முதல் பதில், பழங்களில் அதிக புரதம் உள்ளது என்றார்கள். பின்பு காய்கறிகள் என்றார்கள். பின்பு ஒரு படி மேலே போய் ரசம் என்றார்கள்!! பழம், காய்கறிகளை கூட என்னால் பொறுத்துக்கொள்ள முடியும். ரசத்தில் புரதம் அதிகம் என்று ஒரு குண்டை தூக்கி போட்டதை தான் இப்பொழுது வரை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எனினும் பரவாயில்லை. அவர்கள் கூறிய உணவுகள் அனைத்தும் ஆரோக்கிய உணவுகள் என்பதால் என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு என்னுடைய புராணத்தை ஆரம்பித்தேன். என் மகள் மட்டுமே சிக்கினாள். மீதி பேர் நான் கண்ணிமைக்கும் நேரத்தில் என் முதுகுக்கு பின் மறைந்து ஓடி விட்டார்கள்!!. சரி விடுங்கள் விஷயத்திற்கு வருவோம்.

    புரதம் (புரோட்டின்) என்பது மனித உடலின் சீரான இயக்கத்துக்கு மிகவும் தேவையான ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். நம்முடைய அன்றாட நடவடிக்கைகளுக்கும் நமது உடல், ஒவ்வொரு கணமும் நமது தசைகளை நம்பியே உள்ளது. நமது தசைகளே நம்முடைய இயக்கம்.

    நான் என் பெண்ணிடம் கூறினேன் " உன் கண் பார்வை செம்மையாக இருக்க உன் கண் இமை தசைகள் ஒரு நாளைக்கு 19000 முறை துடிக்கிறதே எப்படி? நாளொன்றுக்கு உனது நுரையீரல் 22000 முறை சுருங்கி விரிகிறதே எப்படி? நாளொன்றுக்கு 1 லட்சம் முறை உனது இதயம் துடிக்கிறதே, எப்படி? நீ காலையில் எழுந்தவுடன் நடக்க ஆரம்பிக்கிறாய், பள்ளிக்கு போகிறாய், படிக்கிறாய். இப்படி நடப்பதற்கு உன் உடலில் எத்தனை தசைகள் வேலை செய்கின்றன தெரியுமா? 200 தசைகள். ஒரு அடி நீ முன் எடுத்து வைக்க வேண்டுமென்றால் உன் உடலுக்குள் 200 தசைகள் அசைந்தால் தான் அது முடியும். தெரியுமா?" இப்படியே நான் பராசக்தி படத்தில் சிவாஜி பேசுவது போல் அடுக்கடுக்காக பேசிக்கொண்டே போக, என் முதுகுக்கு பின்னே எஸ்கேப் ஆன அனைத்து ஜீவராசிகளும் இப்பொழுது என் கண்முன் மீண்டும் தோன்றினார்கள். எனக்கும் ஒரு உற்சாகம் பிறந்தது.

    நான் எனது உரையை தொடர்ந்தேன். "கேளுங்கள் மக்களே, கேளுங்கள். நீங்கள் கண் இமைப்பதற்கு, பேசுவதற்கு, நடப்பதற்கு, ஓடுவதற்கு, தூங்குவதற்கு, உங்கள் நுரையீரல் விரிந்து ஆக்சிஜனை முழுங்குவதற்கு, உங்கள் இதயம் இடைவிடாமல் தூங்கிவிடாமல் துடிப்பதற்கு எல்லா உடல் இயக்கங்களுக்கும் தசைகள் தேவை. அந்த தசைகள் எதனால் செய்யப்பட்டது என தெரியுமா? ஒரு ரப்பர் பந்து போல அடித்தாலும் திரும்பி மேலெலுகிறது உங்கள் தசை. ஒரு ரப்பர் பேண்ட் போல இழுத்தாலும் நன்றாக இழுக்கப்படுவதற்கு ஏதுவாக ஈடுகொடுக்கிறது உங்கள் தசை. அடித்தாலும், அதை வாங்கி தாங்கி கொள்கிறது. இப்படிப்பட்ட தசை சிமெண்டாலோ, கற்களாலோ உருவாகவில்லை. புரதம் என்ற அற்புத மூலக்கூறினால் தான் உண்டாகி இருக்கிறது.


    இந்த புரதம் இல்லையெனில் நமது உடல் இல்லை. நமது உடல் தசைகளுக்கு மட்டுமல்ல, நமது உடல் திசுக்கள் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளுதல், நொதி உற்பத்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி செயல்பாடு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த புரதம். எனவே இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும், புரத உணவுகள் எவ்வளவு முக்கியமென்று. ஆதலால்…." நான் உரையை நீட்டிக்கொண்டிருக்கும் போது திடீரென இடைமறித்தால் என் மகள்..

    "சரி அப்பா, இப்போது எனக்கு பதில் கூறுங்கள். என்னுடைய டீச்சர் புரதம் சைவ உணவுகளிலும் கிடைக்கும், அசைவ உணவுகளிலும் கிடைக்கும், என்று கூறினார். அதுமட்டுமில்லை, இன்னொரு கேள்வியும் என் டீச்சர் கேட்டார். அவர் உங்கள் யூடியூப் பாலோவர் என்பதால் எந்த புரதம் சிறந்தது? சைவமா? அசைவமா? என்று உங்களிடம் கேட்டு வரசொன்னார்" என்று ஒரு கேள்விக்கணையை வீசி என்னை திக்குமுக்காட செய்தாள்.

    என்பதிலை தொடர்ந்தேன்.. நமது இந்திய உணவுகளில் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, கொண்டைக்கடலை பருப்பு, வெள்ளை உளுந்து, கறுப்பு உளுந்து, பச்சை பயறு, நிலக்கடலை, தட்டை பயறு, ராஜ்

    கார்திகேயன்

    கார்திகேயன்

    மா பயறு/தாத்தா பயறு, பச்சை பீன்ஸ், மொச்சை பயறு, பின்டோ பயறு (pinto beans), பாதாம், முந்திரி, பிஸ்தா, அக்ரோட், பிரேசில் பருப்பு, ஹேசல்நட்

    (hazel nut),காயவைத்த விதைகள் - எள் விதை, சூரியகாந்தி விதைகள், ஆளி விதைகள், சீயா விதைகள், பூசணி விதைகள், வெந்தயம், பாலக்கீரை, அமராந்த் கீரை மற்றும் காளான்கள் போன்ற தாவர அடிப்படையிலான உணவுகள் அருமையான புரத ஊட்டச்சத்துக்கள் வழங்குகிறது.

    இப்பொழுது மேலை நாட்டில் இருந்து இந்தியாவில் பிரபலமாகி வரும் சோயா பீன்ஸ், சோயாவின் மதிப்புகூட்டு உணவுகளான டோபூ (tofu), டெம்பே (tempeh), சோயா சங்ஸ் (soya chunks), மற்றும் ஓட்ஸ், குயினோவா (quinoa) போன்ற முழு தானியங்களிலும் தாவர அடிப்படையிலான புரத சத்து நமக்கு கிடைக்கிறது.


    ஆக இவ்வளவு உணவுகளில் புரதம் இருந்தாலும், தாவர அடிப்படையிலான உணவுகளில் சில அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இல்லாமல் இருக்கலாம். இந்த அமினோ அமிலங்கள் புரதத்தின் முக்கியமான கட்டுமான தொகுதிகளாகும் (building blocks).

    இதே அசைவ மூலக்கூறுகளான விலங்குகளில் இருந்து பெறப்படும் இறைச்சி, முட்டை, மீன், பால் மற்றும் பால் சார்ந்த தயிர், பன்னீர், சீஸ் போன்றவற்றில் உள்ள புரதமானது உயர் உயிரியல் மதிப்பு கொண்டது. இந்த அசைவ புரதமானது, எல்லா அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் போதுமான விகிதத்தில் கொண்டிருக்கிறது. மேலும் விலங்கு புரதங்களில் இரும்பு,துத்தநாகம்,வைட்டமின் பி12 மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு முக்கியமானவை.

    இப்பொழுது என் பெண் மீண்டும் இடைமறித்தால், "அப்பா, ஏன் இப்படி நீட்டி முழக்கிக்கிட்டு இருக்கீங்க. அசைவ புரதம் தான் பெஸ்ட் அப்படின்னு ஒரே வார்த்தையில் முடிக்க வேண்டியது தானே?" என்றாள்.

    "இல்லடி தங்கம், கொஞ்சம் பொறுமையா கேளு, நீ நினைக்கிற மாதிரி டக்குனு இந்த முடிவுக்கு வர முடியாது. ஏன் தெரியுமா?

    சைவ உணவுகள் இதய நோய், உயர் ரத்த அழுத்தம், டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் சில புற்று நோய்களின் அபாயத்தை குறைப்பது உட்பட பல ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையது.

    தாவர அடிப்படையிலான புரதங்கள் பொதுவாக நிறைவுற்ற கொழுப்புகள் (saturated fat) மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக இருப்பதால், அவை இருதய ஆரோக்கியத்திற்கு சாதகமாக அமைகின்றன். மேலும் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த உணவு, பெரும்பாலும் சைவத்துடன் தொடர்புடையது. ஏராளமான ஆக்சிஜனேற்றங்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்களை சைவ உணவுகள் வழங்குகிறது, மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறது.

    அசைவ உணவுகளுடன் ஒப்பிடும்போது சைவ உணவுகள் கணிசமான அளவு குறைந்த கார்பன் அளவைக் கொண்டுள்ளன. கால்நடை வளர்ப்பு, குறிப்பாக மாட்டிறைச்சி உற்பத்தி, கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றம், காடழிப்பு மற்றும் நீர் மாசுபாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிக்கிறது.

    சைவம் பெரும்பாலும் விலங்கு நலன் மற்றும் கொடுமையற்ற வாழ்வுக்கான அக்கறைகளால் தூண்டப்படுகிறது. இறைச்சி உட்கொள்வதைத் தவிர்ப்பதன் மூலம், தனிநபர்கள் விலங்குகள் மீது தங்கள் இரக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள் மற்றும் இறைச்சித் தொழிலில் தங்கள் ஈடுபாட்டைக் குறைக்கிறார்கள்.

    மறுபுறம், அசைவ உணவுகளும் ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். விலங்கு புரதங்கள் முழுமையான புரதங்களாகக் கருதப்படுகின்றன, அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் உகந்த விகிதத்தில் வழங்குகின்றன. குறிப்பாக விளையாட்டு வீரர்கள் அல்லது தீவிர உடல் செயல்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு இது தசைகளின் தொகுப்பு மற்றும் பழுதுபார்ப்பிற்கு குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். கூடுதலாக, விலங்கு பொருட்கள் ஹீம் இரும்பின் சிறந்த ஆதாரங்களாக இருக்கின்றன, இது தாவர உணவுகளில் காணப்படும் ஹீம் அல்லாத இரும்புடன் ஒப்பிடும்போது உடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது, இது இரும்புச்சத்து குறைபாடு ரத்த சோகையைத் தடுப்பதில் முக்கியமானது".

    மீண்டும் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவதை போல, மீண்டும் என் சேஷ்ட குமாரத்தி இடைமறித்தாள், "அப்பா, ரொம்ப குழப்பறீங்க. சைவ உணவுகள் ஆரோக்கியத்துக்கு நல்லது, சுற்றுசூழலுக்கு நல்லது, விலங்கு நலன் பாதுகாப்புக்கு நல்லது அப்படின்னுலாம் சொல்றீங்க, ஆனால் உடல் வலிமைக்கு அசைவ புரதமும் தேவைங்கிறீங்க. முடிவா என்னதான்பா சொல்றீங்க. என் டீச்சருக்கும் நான் ஒரு நல்ல பதில் சொல்லனும். சொல்லுங்க"

    "கண்ணு, நீ ஏற்கனவே என்கிட்ட ஒரு கேள்வி கேட்ட ஞாபகம் இருக்கா? முட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிலிருந்து முட்டை வந்ததா? ன்னு"

    என் பெண், "ஓ, நீங்க அப்படி வரீங்களா…இதெல்லாம் போங்கு ஆட்டம். கரெக்டா பதில் சொல்லுங்க"

    நான், "கண்ணு, சைவ மற்றும் அசைவ உணவுகளுக்கு இடையே சிறந்த புரத மூலத்தை தீர்மானிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. இரண்டு உணவு முறைகளும் தனித்துவமான நன்மைகள் வழங்குகின்றன.

    சைவ உணவுகள் ஒட்டுமொத்த ஆரோக்கியம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் நெறிமுறைக் கொள்கைகளை மேம்படுத்துவதில் சிறந்து விளங்குகின்றன, அதே சமயம் அசைவ உணவுகள் தசை வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு முக்கியமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுடன் உயர்தர புரதத்தை வழங்குகின்றன.

    இறுதியில், சைவம் மற்றும் அசைவ புரத மூலங்களுக்கு இடையிலான தேர்வு தனிப்பட்ட விருப்பத்தேர்வுகள்), ஊட்டச்சத்து தேவைகள், சுகாதார இலக்குகள், நெறிமுறை நம்பிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் கவலைகள் ஆகியவற்றைப் பொறுத்தது.

    பல்வேறு வகையான புரத மூலங்களை பயன்படுத்துவது, தாவர அடிப்படையிலானது மற்றும் விலங்குகளில் இருந்து பெறப்பட்டது என இரண்டும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை ஆதரிக்கும். ஒரு சீரான மற்றும் சமநிலையான உணவுமுறைக்கு வழிவகுக்கும். என்னம்மா புரிஞ்சுதா?"

    என் பெண் "அப்பா, எனக்கு புரிஞ்சுதோ இல்லையோ, இந்த மாதிரி நான் என் டீச்சர்கிட்ட பதில் சொன்னா, அடுத்த வாட்டி எங்க டீச்சர் உங்ககிட்ட கேள்வியே கேக்க மாட்டாங்க. அது மட்டும் எனக்கு நல்லா புரியுது!!"

    E-Mail ID: karthikspm@gmail.com

    • இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் மனஅழுத்தம் காரணமாக உடலின் இயற்கை நிகழ்வு தொந்தரவு தரும் விதமாக மாறியுள்ளது.
    • கலியாண முருங்கை இலையின் சாறை தொடர்ச்சியாக 2 அல்லது 3 மாதங்கள் வரை காலை மாலை இருவேளையும் எடுத்துக்கொள்ளலாம்.

    மாதவிடாய் என்பது பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளில் ஒன்றான கருப்பையிலிருந்து யோனியின் வழியாக குருதியுடன் சேர்த்து கருப்பையின் உள்சதை சவ்வும் வெளியேறும் நிகழ்வை குறிக்கிறது. சராசரியாக 10 முதல் 16 வயதில் மாதவிடாய் சுழற்சி தொடங்கி 45 முதல் 50 வயதில் முடிவுறுகிறது. 21 முதல் 35 நாட்களுக்கு ஒரு முறை மூன்று முதல் ஏழு நாட்கள் நடக்கும் இந்த நிகழ்வு இயல்பான உடலியல் ஆகும். சரியான இடைவேளையில் மாதவிடாய் ஏற்படுவது பெண்களின் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான நல்ல அறிகுறியாகும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் மனஅழுத்தம் காரணமாக உடலின் இயற்கை நிகழ்வு தொந்தரவு தரும் விதமாக மாறியுள்ளது.

    பெரும்பாலும் முறையற்ற மாதவிடாய், வாழ்க்கை முறை மாற்றத்தினால் ஏற்படுகிறது. துரித உணவுகள் மற்றும் உடற்பயிற்சி இன்மை இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் உடல் எடை அதிகரித்து ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டு சினைப்பை நீர்க்கட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

    உலக சுகாதார மையம் திருமண வயதில் இருக்கும் பெண்களில் 8- 13 சதவீதம் பேர் pcos பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 70 சதவீதம் பேர் இன்னும் pcos பிரச்சனை இருப்பதை கண்டறியாமல் உள்ளனர் என்றும் கூறுகின்றது.


    இந்த pcos பிரச்சனையால் பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாய் 90 நாட்களுக்கு மேல் ஏற்படாமல் இருப்பது முகம், மார்பு, முதுகு அல்லது பிட்டம் ஆகியவற்றில் அதிக ரோம வளர்ச்சி, தலைமுடி உதிர்தல், முகப்பரு, கழுத்து, அக்குள், மார்பகம் மற்றும் தொடை இடுக்குகளில் கருமை நிறம், கவலை, மனச்சோர்வு, உடல் எடை அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படுகிறது.

    இதை சீர் செய்யாமல் விடும் பட்சத்தில் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், எண்டோமெட்ரியல் புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பெண்கள் தங்கள் வேலைகளுக்குக்கிடையில் சத்தான உணவு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி Pcos பிரச்சனை ஏற்படாமல் தடுப்பது மிகவும் சிறந்ததாகும்.

    கழற்சி விதையை பொடித்து, அதற்கு கால் எடை அளவு மிளகு பொடி சேர்த்து தினம் 1/2 ஸ்பூன் காலை மாலை தேனில் கலந்தோ மோரில் கலந்தோ அருந்தி வரலாம்.

    கருஞ்சீரகம், மரமஞ்சள், சதகுப்பை சம அளவு எடுத்து பொடி செய்து, வெல்லம் சிறிது சேர்த்து 1/2 ஸ்பூன் அளவு காலை மாலை சோம்பு கஷாயத்தில் அருந்தலாம்.

    நடுத்தர வயது பெண்கள் Adenomyosis என்னும் கருப்பை சதைகட்டியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மாதவிடாயின்போது கடுமையான வயிற்று வலி, அதிகமான உதிரப்போக்கு, இடுப்பில் கத்தியால் வெட்டுவது போன்ற கூர்மையான வலி, உடலுறவின் போது வலி போன்றவை ஏற்படுகிறது.

    பெரும்பாலும் மாதவிடாய் நின்ற பிறகு Adenomyosis அறிகுறிகள் மறைந்துவிடும். ஏனெனில் எண்டோமெட்ரியல் திசு வளர்ச்சியை தூண்டுவிக்கும் ஈஸ்ட்ரோஜன் என்ற பெண் ஹார்மோன் மாதவிடாய் சுழற்சி முடிவுற்ற பிறகு குறையத்துவங்குகிறது. இதன் காரணமாக குறிகுணம் குறையத்துவங்கும்.

    கலியாண முருங்கை இலையின் சாறை தொடர்ச்சியாக 2 அல்லது 3 மாதங்கள் வரை காலை மாலை இருவேளையும் எடுத்துக்கொள்ளலாம். இது மாதவிடாயின் போது ஏற்படும் வலியை குறைப்பதுடன் கட்டி குறைய வழி வகுக்கும்.

    மேலும் வாழைப்பூச்சாறு, அருகம்புல் சாறு, இலவங்கப்பட்டை கஷாயம், ஆடாதோடை இலை கற்கம், கீழாநெல்லி இலை கற்கம் போன்றவை அளவு கடந்து போகும் மாதவிடாயை கட்டுக்குள் கொண்டு வரும்.

    அடுத்ததாக 30 முதல் 50 வயது வரை உள்ள பெண்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் நார்த்திசு கட்டி என்னும் Uterine Fibroid ஆல் பாதிக்கப்படுகின்றனர். கருப்பையில் உருவாகும் இந்த மென்மையான கட்டிகள் சிலருக்கு அறிகுறிகள் ஏதும் ஏற்படுத்துவதில்லை. சிறு விதை அளவு முதல் பெரிய பந்து அளவு வரை இருக்கிற இக்கட்டிகளால் அதிக வலி மற்றும் அதிக குருதிபெருக்கு ஏற்படும். கட்டிகள் பெரிதாக வளரும்போது சிறுநீர்ப்பையை அழுத்தும். அதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க ஏற்படும். சிலருக்கு மலச்சிக்கல், தொடர்ச்சியான கருச்சிதைவு, கருவுறாமை கூட ஏற்படுகிறது.


    பொதுவாக இது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களின் சமநிலையின்மை மற்றும் மரபணு மாற்றங்களால் ஏற்படுகிறது என கருதப்படுகிறது. புற்றுநோயாக மாறும் வாய்ப்பு இக்கட்டிகளில் மிக குறைவாகவே உள்ளது.

    உலகில் 10 சதவீத பெண்கள் Endometriosis என்னும் நோய் நிலையால் பாதிக்கப்படுகின்றனர். கருப்பையின் புறணி திசு போன்ற ஒரு திசு கருப்பை குழிக்கு வெளியே வளரும்போது Endometriosis என்று அழைக்கப்படுகிறது. மாதவிடாய் காலத்தில் கருப்பை திசுக்களை போலவே இந்த திசுவும் சிதைந்து உதிரபோக்கு ஏற்படும். இருப்பினும் சில நேரம் இந்த இரத்தம் தேங்கி, சுற்றியுள்ள திசுக்களின் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது.இதனால் மாதவிடாயின் முதல் 2 நாட்கள் கடுமையான தசைப்பிடிப்புகள் ஏற்படும்.

    மேலும் மாதவிடாயின் போதும், மாதவிடாய்களுக்கு இடையிலும் அதிக உதிரப்போக்கு, மலம் மற்றும் சிறுநீரில் இரத்தம், நீங்காத சோர்வு மற்றும் களைப்பு ஏற்படும்.

    அடுத்தது கருப்பை வாய் அழற்சி (cervicitis) குறித்து காணலாம். கருப்பை வாயில் வீக்கம் ஏற்படும்போது அது கருப்பை வாய் அழற்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய் தொற்று பரவக்கூடிய அல்லது பரவாத வகையில் இருக்கலாம். அறிகுறிகள் பெண்களுக்கு பெண்கள் மாறுபட்டு காணப்படுகிறது.

    கருப்பை வாய் அழற்சியால் சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல், மாதவிடாய் இடைநாட்களில் குருதிகசிவு, காய்ச்சல், வயிற்று வலி போன்ற அறிகுறிகள் காணப்படும். பெண்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் கருப்பை வாய் அழற்சியால் பாதிக்கப்படுகிறார்கள்.

    தைராய்டு ஹார்மோனில் மாற்றம் ஏற்பட்டாலும் மாதவிடாய் பாதிக்கப்படுகிறது. மாதவிடாய் சரியாக இருப்பதற்கு தைராய்டு ஹார்மோனின் சமநிலை அவசியமாகும். இச்சுரப்பி இனப்பெருக்க உறுப்புடன் நேரடி தொடர்பை கொண்டுள்ளது. எனவே Hypothyroidism மற்றும் Hyperthyroidism இரண்டும் மாதவிடாய் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

    நுணா இலை 3 அல்லது 5 எடுத்து, அதனுடன் தனியா 1 ஸ்பூன் சேர்த்து கஷாயம் செய்து தினமும் காலை பருகிவரலாம். இதனால் தைராய்டு ஹார்மோனின் சமநிலையின்மை சீர் செய்யபடுகிறது.

    முறையற்ற மாதவிடாய்க்கு மற்றொரு காரணம் இடுப்பு அழற்சி நோய் (Pelvic Inflammatory Disease). இந்த அழற்சி நோய் பெரும்பாலும் கிளாமிடியா, கொனோரியா போன்ற நோய் தொற்றால் ஏற்படுகிறது.


    இது இனப்பெருக்க உறுப்புகளான கருப்பை, சினைப்பை போன்றவற்றை பாதிக்கும். வயிற்றின் கீழ் மந்தமான வலி, மஞ்சள் அல்லது பச்சை நிற யோனி கசிவு, மாதவிடாய் ஒழுங்கின்மை, மாதவிடாய் சுழற்சிகளுக்கு இடையில் குருதிபோக்கு, குமட்டல், வாந்தி போன்றவை குறிகுணங்களாக உள்ளது. பெரும்பான்மையான பெண்களுக்கு குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக இது உள்ளது. இந்நோய் சிலருக்கு எண்டோமெட்ரியல் பயாப்ஸி, கருத்தடை சாதனம் பொருத்துதல், கருக்கலைப்பு போன்றவைகளுக்கு உட்படுவதால் ஏற்படுகிறது. வெட்சி பூ என்றழைக்கப்படும் இட்லி பூவை சிறிது எடுத்து கஷாயம் செய்து அதில் சிறிது கற்கண்டு சேர்த்து பருகி வர இடுப்பு பகுதியில் ஏற்பட்ட தாபிதம் சிறிது குறையும்.

    மேலும் ஆளிவிதையை பொடி செய்து பாலிலிட்டு காய்ச்சி, சர்க்கரை சேர்த்து கிளறி கொட்டைபாக்களவு எடுத்து வர இடுப்பு அழற்சியால் ஏற்படும் குறிகுணங்கள் நன்கு குறையும்.

    பெரும்பாலான பெண்கள் 50 வயதிற்கு மேல் கருப்பை, கருப்பைவாய், மற்றும் சினைப்பை புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோய் எந்த வயதிலும் பெண்களுக்கு வர கூடும். ஆனால் பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களையே தாக்குகிறது. தொடக்க நிலையில் குறிகுணங்கள் புறக்கணிக்கத்தக்க அளவு அற்பமானதாக இருப்பதால் நோயாளிகள் அதில் சிறிதும் கவனம் செலுத்துவதில்லை. வலிகள் ஆரம்பத்தில் இருப்பதில்லை. கசிவுகள் மட்டும் ஓரளவிற்கு அதிகப்படும். முதலில் அளவு கடந்து காணப்படுகின்ற வெண் தீட்டு பின்பு இரத்தம் கலந்து காணப்படும். பின்பு கசிவுகள் மஞ்சள் பழுப்பு வண்ணத்தை பெறுகின்றன. தசைகள் அழுகத்துவங்கியவுடன் கசிவுகள் பழுப்பு நிறமாகின்றன. இவற்றில் நோய் கிருமிகள் சேரும்போது முடைநாற்றம் வீசத் தொடங்கும்.

    சிலசமயம் மாதவிடாய் காலங்களில் உதிரம் போகும் காலம், அளவு கடந்து காணப்படுகிறது அல்லது மாதவிடாய் ஏற்பட்ட ஓரிரண்டு நாட்களில் மீண்டும் இரத்தம் கலந்த செங்கல் நிற மங்கலமான கசிவு காணப்படுகிறது. புணர்ச்சியின் பின்பும், மலத்தை முயற்சி செய்து கழிக்கும்போதும் சில சமயங்களில் உதிரப்போக்கு ஏற்படுகிறது. நாள்போக்கில் அருகிலுள்ள உறுப்புகளுக்கும் பரவி அதற்கேற்ப குறிகுணம் ஏற்படுகிறது. எனவே இந்த நோயை பொறுத்தவரை ஆரம்பத்திலேயே கண்டு உறுதிசெய்து, தொடக்கத்திலேயே வளர்ச்சியை தடை செய்ய வேண்டும்.

    எனவே 35 முதல் 65 வயது வரை உள்ள பெண்கள் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை PAP மற்றும் HPV (Human Papilloma Virus) பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். இந்த இரண்டு பரிசோதனைகளுக்கும் மருத்துவர்கள் கருப்பை வாயில் இருந்து மாதிரியை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி அசாதாரண செல்கள் கண்டறிகின்றனர். அதன் மூலம் கர்ப்பப்பை வாய் புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரி செய்யலாம்.

    மேலும் மாதவிடாய் கோளாறுகளான அதிக உதிரபோக்கு அல்லது குறைவான உதிரபோக்கு, மாதவிடாய்க்கு இடையில் குருதி கசிவு, மாதவிடாயின் போதோ அதற்கு முன்னர் பின்னரோ அதிகப்படியான வலி போன்ற குறிகுணங்கள் உள்ளவர்கள் மருத்துவர்களை அணுகி அவர்கள் தேவைக்கேற்ப பரிந்துரைக்கும் இடுப்புப்பகுதி பரிசோதனைகளை தயங்காமல் செய்து கொள்ளவேண்டும்.

    பின்பு நோய்நிலைக்கேற்ப, மூலிகை மருத்துவம் விரும்புபவர்கள் சித்த மருத்துவ துறையில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு முடித்த அருகிலுள்ள மருத்துவர்களை அணுகி அவர்கள் கூறும் உணவு முறை, வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் மருத்துவ முறையை பின்பற்றி நலம் பெறலாம்.

    • பெண்கள் வணிகத்தில் எப்படி முன்னேறலாம் என்று ஒரு புத்தகத்தை எழுதினார்.
    • பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தனி ஒரு அறக்கட்டளையை தன் செலவில் மேரி ஆரம்பித்தார்.

    ஆணாதிக்கம் நிறைந்த சமுதாயத்தில் பெண்களும் முன்னேற வேண்டும் என்ற கூச்சலை நிறையப் பார்க்கிறோம்; ஆனால் பெண்கள் இன்னும் ஆணுக்கு நிகராக சம உரிமையை உலகளாவிய விதத்தில் எல்லா நாடுகளிலும் பெறவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

    பெண்களின் அழகுக்கு அழகூட்டி, மெருகை ஏற்றி அவர்களது தன்னம்பிக்கையை மேம்படுத்தி லட்சக்கணக்கானோரை ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க வைத்த பெருமை ஒரு பெண்மணியைச் சேரும். அதுவும் இந்த மகத்தான காரியத்தை அவர் ஓசைப்படாமல் செய்தார். அவர் தான் மேரி கே ஆஷ்.

    பிறப்பும் இளமையும்: மேரி அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஹாட் வெல்ஸ் என்ற இடத்தில் 1918-ம் ஆண்டு மே மாதம் 12-ம் நாள் பிறந்தார். தந்தை எட்வர்ட் அலெக்சாண்டர். தாயார் லுலா வெம்பெர் ஹேஸ்டிங்ஸ் வாக்னர்.

    லுலா ஒரு சிறந்த நர்ஸ். பின்னால் பெரிய உணவு விடுதி ஒன்றின் மேலாளராக ஆனார். ஹூஸ்டனில் படித்த மேரி பட்டம் பெற்றார். 17-ம் வயதிலேயே மணம் முடித்து மூன்று குழந்தைகளையும் பெற்றார். இரண்டாம் உலகப் போரில் பணி புரிந்த அவரது கணவர் போர் முடிந்தவுடன் திரும்பி வந்தார். விவாகரத்து ஆனது. பின்னர் அவர் ஜார்ஜ் என்பவரை மணந்தார்.

    முதலில் வீடு வீடாகச் சென்று புத்தகங்களை விற்க ஆரம்பித்தார் அவர். பின்னர் வீடுகளுக்குத் தேவையான தயாரிப்புகளை வீடு வீடாகச் சென்று விற்கலானார்.

    சோதனை வந்தது: ஒரு நாள் அவரை ஒதுக்கி விட்டு அவரால் பயிற்சி கொடுக்கப்பட்ட ஒருவருக்கு பதவி உயர்வு தரப்படவே மனம் வெறுத்துப் போனார் அவர். அப்போது அவருக்கு வயது 45.

    1963-ல் கம்பெனியை விட்டு வெளியேறிய அவர், பெண்கள் வணிகத்தில் எப்படி முன்னேறலாம் என்று ஒரு புத்தகத்தை எழுதினார்.

    ஆனால் ஆச்சரியப்படும் விதத்தில் அந்தப் புத்தகம் அவருக்கே வணிகத்தை ஆரம்பிக்க உத்திகளைக் கற்றுக் கொடுத்தது; அவர் கணவர் ஜார்ஜுடன் பியூடி பை மேரி கே என்ற நிறுவனத்தை 1963-ல் ஆரம்பித்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கணவர் மாரடைப்பினால் அதே வருடம் மரணமடைந்தார். மேரி தனது மூத்த பையன் பென் ரோஜர்சிடமிருந்து 5000 டாலர் வாங்கினார்.

    மேரி கே காஸ்மெடிக்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவி துணிந்து தனது விற்பனையை ஆரம்பித்தார். பெண்களுக்கான ஒப்பனைப் பொருள்களை அவரே தயாரித்தார். அத்தோடு பெண்களை உயரிய நிலைக்கு உயர்த்த வேண்டும் என்பதும் அவரது திட்டமாக ஆனது.

    ஆகவே விற்பனையில் தனக்கென ஒரு புதிய உத்தியை அவர் மேற்கொண்டார். நேரடி விற்பனை முறை தான் அது! வீடு வீடாகச் சென்று வாடிக்கையாளர்களைச் சந்தித்து அவருக்கே உரித்தான படி அழகு சாதனப் பொருள்களைச் சுட்டிக் காட்டி அவர்களை அலங்கரித்து பின்னர் விருப்பமிருந்தால் தனது பொருள்களை அவர்களை வாங்க வைப்பது தான் அவரது வழி!

    தனது ஒப்பனைப் பொருள்களை விற்பதற்கு பல பெண்களை அவர் பயிற்றுவித்தார். அவர்களை தனது சொந்த மகள்களாகவே அவர் பாவித்து அனைத்தையும் கற்றுக் கொடுத்தார்.

    ச.நாகராஜன்

    ச.நாகராஜன்

    தாய் தந்த ஊக்கம்: கடுமையான போட்டி மிகுந்த சந்தையில் அவருக்கு ஏற்பட்ட சோதனைகள் பல. ஆனால் அப்போதெல்லாம் அவர் தனது தாயார் தன்னிடம் கூறிய சொற்களை நினைவு கூர்வார் மேரி.

    அவர் தாயார் அவரிடம் கூறிய சொற்கள் : "உன்னால் முடியும் மேரி!"

    மெல்ல மெல்ல வளர்ந்த நிறுவனம் அவருக்கு 980லட்சம் டாலரை ஈட்டித் தந்தது. 120 கோடி டாலருக்கும் மேலாக விற்பனை அதிகரித்தது. 80000 பேர் அவரிடம் வேலை பார்த்து முன்னேறினர்.

    இன்று 46 நாடுகளில் அவரது தயாரிப்புகள் பெருமளவில் விற்பனை ஆகின்றன. (அமெரிக்க டாலரின் இன்றைய மதிப்பு ஒரு டாலர் = சுமார் 83 ரூபாய்)

    அழகுக்கு அழகூட்டுங்கள்: பெண்கள் எப்போதுமே இல்லத்திலும் சரி, வெளியிலும் சரி அழகுடன் விளங்க வேண்டும் என்று நமது நூல்கள் சொல்கின்றன. பகட்டிற்காகவோ அல்லது ஆடம்பரத்திற்காகவோ அல்ல; அது ஒரு உற்சாகமான மேம்பாடுடன் கூடிய சமுதாயத்தின் அடையாளம் என்பதற்காக!

    சவுந்தரியம் எனப்படும் அழகு என்பது தான் என்ன? கணம் தோறும் கணம் தோறும் புதுமையைக் கொள்வது சவுந்தர்யம்.- கணம் தோறும் வியப்பு! கணம் தோறும் புதுமை. இதுவே சவுந்தர்யம்!

    இதை இயற்கை முறையில் எளிமையாக அதிகம் செலவின்றி செய்ய உதவுவது காஸ்மெடிக்ஸ் எனப்படும் ஒப்பனைப் பொருள்கள்.

    பெண் என்பவள் யார்? அன்றாடம் குளித்து, அழகிய ஆடை அணிந்து, நெற்றியில் சித்திரம் கூடிய திலகம் இட்டு, கண்ணுக்கு மை 'எழுதி', காதணி பூட்டி, மூக்கணி புனைந்து, கூந்தலைச் சீவி சிங்காரித்து மலர் சூடி, அழகுற உடை அணிந்து, கால் ஆபரணம் அணிந்து, உடலுக்கு சுகந்த வாசனை சேர்த்து, அழகிய வளையல்களை அணிந்து, பாதங்களுக்குச் செம்பஞ்சுக் குழம்பு தீட்டி, மேகலை அணிந்து, வாய் சிவக்க தாம்பூலம் தரித்து, மோதிர விரலில் மோதிரம் அணிந்து, சாதுரியத்துடன் இதர அலங்கார வகைகளையும் செய்து கொண்டு இல்லத்திற்கும் சமுதாயத்திற்கும் நலம் சேர்த்து அனைவரையும் மேலே உயர்த்துபவளே பெண் என்று நம் நூல்கள் பெருமையுறக் கூறுகின்றன!

    மேரி காஸ்மெடிக்ஸ் தயாரிப்புகள்: இந்த வகையில் பெண்களுக்குரிய லிப்ஸ்டிக், மேனி பளபளப்பாக இருக்க உதவும் கிரீம்கள், சருமத்தை மென்மையாகக் காட்ட வல்ல ஒப்பனைப் பொருள்கள் என ஏராளமானவற்றைத் தயாரித்தார் மேரி.

    உலகில் பெண்களுக்கான பத்து சிறந்த கம்பெனிகளுள் ஒன்று என்ற பாராட்டைப் பெறும் அளவில் தன் நிறுவனத்தை உயர்த்தினார் மேரி. இன்று மேரி காஸ்மெடிக்ஸ் 200 தயாரிப்புகளைக் கொண்டுள்ளது.

    அதை விற்பதற்கென உலகெங்கும் 30 லட்சம் பெண்கள் ஆலோசகர்களாக உள்ளனர். ஆலோசகர்கள் இரு விதமாக சம்பாதிக்க முடியும். ஒன்று தன்னால் சில பெண்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களையும் விற்பனை ஆலோசகர் ஆக்குவது. இன்னொன்று – பொருள்களை விவரித்து அதை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து அதன் லாபத்தில் ஒரு பகுதியைப் பெறுவது.

    ஊக்கமூட்டும் பரிசுகள்: தனது நிறுவனத்தில் வேலை பார்த்தோருக்கு வெறும் சம்பளத்தை மட்டும் தரவில்லை மேரி. ஜெனரல் மோட்டார்ஸ் தனது நிறுவனத்திற்கென பிரத்யேகமாக தயாரித்த அழகிய கார்களையே பரிசாக வழங்கினார். 1969-ல் அதன் விலை 5900 டாலர்கள். ஐந்து பேருக்கு ஐந்து கார்களை பரிசாக வழங்கினார் அவர்.

    தனது பையில் கொண்டு செல்லும் வண்ணத்தட்டின் வண்ணத்தையும், உதட்டுச் சாய வண்ணமான இளஞ்சிவப்பையும் தனது நிறுவனத்தின் சார்பில் வாங்கும் கார்களுக்கு வண்ணமாகப் பூசச் செய்தார்.

    கெடில்லாக், செவர்லெட் கார்களில் மூன்று மாடல்களை உருவாக்கி அந்த மூன்று வகை கார்களை அவரவர் விற்பனை சாதனைக்குத் தக்கபடி பரிசளிக்க ஆரம்பித்தார் மேரி. சாலைகளில் இந்தக் கார்கள் அடிக்கடி ஓடும் போது அது அனைவருக்கும் பரவசத்தை ஊட்டியது. இந்தப் பரிசளிப்பு இன்றளவும் தொடர்கிறது. 2016-ம் ஆண்டு வரை விலை மதிப்புள்ள 6032 கார்கள் பரிசாக அளிக்கப் பட்டிருப்பதில் இருந்தே இந்த நிறுவனத்தின் சாதனையை புரிந்து கொள்ளலாம்.

    அது மட்டுமின்றி விற்பனை சாதனையாளர்கள் அனைவருக்கும் தாராளமாக வைர மோதிரங்கள், மேலே அணியும் கோட்டுகள் உள்ளிட்ட பல பரிசுப் பொருள்கள் அவரால் வழங்கப்பட்டன. இவரது நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 150 பெண்மணிகள் பத்து லட்சம் டாலருக்கு மேல் சம்பாதித்து மற்றவரை வியக்க வைத்தனர்.

    சுற்றுப்புறச் சூழல் மேம்பாடு: தான் வாழ்கின்ற சமுதாயத்திற்கென என்ன செய்வது என்று யோசித்த மேரி, சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டிற்காக முதன் முதலாக மறு சுழற்சிப் பொருள்களைத் தயாரிக்க ஆரம்பித்தார்.

    1995-ம் ஆண்டு தனது நிறுவனத்தின் உலகத் தலைமையகத்தை டெக்சாசில் அவர் கட்டி முடித்தார். 34 ஏக்கர் பரப்பளவில் ஆறு லட்சம் சதுர அடியில் 13 மாடிக் கட்டிடமாக அமைந்த இதை அண்ணாந்து பார்த்து அனைவரும் வியந்தனர்!

    அறக்கட்டளை: பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தனி ஒரு அறக்கட்டளையை தன் செலவில் மேரி ஆரம்பித்தார். இது பெண்களை இல்லங்களில் கொடுமைப்படுத்துவதில் இருந்து காப்பதற்கும் பெண்கள் கேன்சரால் பாதிக்கப்பட்ட போது உதவுவதற்கும் முன் வந்தது.

    மறைவு: வயது மூப்பின் காரணமாக 83ம் வயதில் டெக்சாசி தனது இல்லத்தில் 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ம் நாள் அவர் மறைந்தார். வாழ்ந்த காலத்திலும், வாழ்நாளுக்குப் பிறகும் அவரைத் தேடி பல விருதுகள் வந்து குவிந்தன.

    ஊக்கமூட்டும் பொன்மொழிகள்: அவரது ஊக்கமூட்டும் பொன்மொழிகள் பெண்களுக்கு புது வாழ்வையே காண்பித்தது.

    அவற்றில் சில:

    ஒப்பனைப் பொருள்களை விற்பதை மட்டும் நாம் செய்யவில்லை. நாம் வாழ்க்கையையே மாற்றுகிறோம்.

    ஒவ்வொருவரும் மற்றவர் கண்ணுக்குத் தெரியாதபடி, "என்னை முக்கியமானவனாக உணரச் செய்யுங்கள்'' என்று பொறிக்கப்பட்ட ஒரு போர்டைத் தன் கழுத்தில் அணிந்து கொண்டிருக்கிறார். மற்றவருடன் பணியாற்றும் போது இதை மறந்து விடாதீர்கள்.

    வெற்றியாளருக்கும் மற்றவருக்கும் உள்ள வித்தியாசம் அசாதாரணமான மன உறுதி தான்!

    கடவுள் உன்னைத் திறனுடையவரா அல்லது திறனற்றவரா என்று கேட்கவில்லை. நீ செயல்புரியத் தயாராக இருக்கிறாயா என்று தான் கேட்கிறார்.

    உலகில் மூன்று விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒரு காரியத்தை முடிப்பவர், ஒரு காரியம் முடிக்கப்படுவதைப் பார்ப்பவர், அட, அது எப்படி முடிந்தது என்று வியப்பவர்! இந்த மூவரில் நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள் என்பதை நீங்களே தேர்ந்தெடுங்கள். நான் முதலாவது வகையைச் சேர்ந்தவளாக இருக்கத் தீர்மானித்தேன். ஒருபோதும் மனம் தளர்ந்து பாதியில் விட்டு விடாதீர்கள். அடுத்த முயற்சி வெற்றியைத் தரும் ஒன்று தான் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்.

    பாரதியார் காட்டிய பெண்!

    "திறமையால் இங்கு மேனிலை சேர்வோம்

    தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்"

    என்ற மகாகவி பாரதியாரின் வார்த்தைகளை மெய்ப்பித்தவர் மேரி ஆஷ் கே என்றால் அது மிகையாகாது!

    தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

    • பங்குனி மாதம் சூரியன் மேஷ ராசிக்கு உச்சத்தை நோக்கி சென்று கொண்டு இருப்பார்.
    • கிரகங்கள் உச்ச வீட்டை நோக்கி செல்லும் போது பூமிக்கு மிக அருகில் இருக்கும்.

    பவுர்ணமி...

    சூரியன் மற்றும் நிலாவிற்கு நடுவே பூமி வரும் நாளே பவுர்ணமியாகும். அன்று சூரியனின் முழு வெளிச்சமும் நிலாவின் முன்பக்கத்தின் மேல் முழுமையாக பதிவதால் நிலா வெளிச்சத்துடன் தோற்றமளிக்கும். பூமியின் மேல்மட்ட பகுதியில் நிலாவின் ஈர்ப்புவிசை தாக்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.

    நிலாவின் நற்சக்தி வேலை செய்யும்போது, ரத்தஓட்டமும் பிராண சக்தியும் இயல்பாகவே மேல்நோக்கி பயணம் செய்யும். அன்று அனைவரின் குணமும் எதுவாக இருந்தாலும், அது மேம்படும். தியான நிலையில் இருந்தால் தியானநிலை ஆழமாகிறது. அன்பு நிறைந்தவர் என்றால், அன்று அன்பு பெருக்கெடுக்கும். பயம் நிறைந்தவராய் இருந்தால், உங்கள் பயவுணர்வு இன்னும் அதிகரிக்கும். அளப்பறிய சக்தியையும் விழிப்புணர்வையும் வழங்கும் ஆத்மக்காரகன் சூரியனும், மனோகாரகன் சந்திரனும் சம சப்தமாக பார்ப்பதால் சூரியகலை, சந்திரகலை சமநிலை பெற்று மனிதர்களின் மனம் ஒரு நிலைப்பட்டு மனதில் சாந்தமும் அமைதியும் ஏற்படும். மனம் ஒரு நிலைப்படும் போது செய்யப்படும் பூஜைகள், வழிபாடுகள், தான தர்மங்கள் பல மடங்காக உடனே பலன் தரும். இந்தப் பவுர்ணமி தினமானது மாதம் ஒரு முறை வந்தாலும் பங்குனி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு பல தனிச் சிறப்புக்கள் உள்ளன. பங்குனி மாதம் சூரியன் மேஷ ராசிக்கு உச்சத்தை நோக்கி சென்று கொண்டு இருப்பார். கிரகங்கள் உச்ச வீட்டை நோக்கி செல்லும் போது பூமிக்கு மிக அருகில் இருக்கும். அதன் வலிமையும் மிகுதியாக இருக்கும். உச்ச கிரகங்களின் கதிர் வீச்சு பூமிக்கு மிகுதியாக கிடைக்கும்.

    ஆத்மகாரகனான சூரியனும் மனோகாரகனான சந்திரனும் பலம் பெறும் பவுர்ணமிக்கு மிகுதியான சக்தி உண்டு. சூரியன் தன் முழு வலிமையுடன் சந்திரனை பார்க்கும் பவுர்ணமி நாளில் சூரிய ஒளியால் பகல் பொழுதும் , சந்திர ஒளியால் இரவு பொழுதும் பிரகாசமாகவும் வெளிச்சமாகவும் இருக்கும் போது மனிதர்களின் பூஜைகள், வழிபாடுகள், தான தர்மங்கள் பல மடங்காகி புண்ணிய பலன் மிகுதியாகும்.

    உத்திரம் காலபுருஷ 5-ம் அதிபதியான பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியான சூரியனின் நட்சத்திரம். இதன் முதல் பாதம் சிம்ம ராசியிலும் மீதமுள்ள மூன்று பாதங்கள் கால புருஷ 6-ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானமான கன்னி ராசியிலும் உள்ளது. 5ம்மிடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம், பூர்வீகம், குலதெய்வம், அதிர்ஷ்டம், காதல், ஆழ்மன சிந்தனை, நல்லது, கெட்டது ஆகியவற்றை அறியு மிடம். 6-ம்மிடம் என்பது பிறவிக் கடன், பொருள் கடன், எதிரி, கர்ம வினை தாக்கத்தால் ஏற்படும் நோய் போன்றவற்றை கூறுமிடம். இதன் உள் தத்துவம் தீராத கர்ம வினையால் ஏற்படும் பிறவிப்பிணிகளை தீர்க்கும் வலிமை கொண்டது எனப் பொருள்.

    உத்திரம் நட்சத்திரம் சூரியனின் வீடான சிம்மத்திலும் புதனின் வீடான கன்னியிலும் கால புருஷ 5, 6-ம்மிடத்துடன் சம்பந்தம் பெறுவதால் மனிதர்களின் வினைப் பதிவில் உள்ள கர்ம வினைகளை நீக்கும் வல்லமை உண்டு. இதற்கு உதாரணமாக சுவாமி ஐயப்பன் உத்திரம் நட்சத்திரத்தில் சாஸ்தாவாக பிறந்து தான் பெற்றவரத்தால் மக்களை துன்புறுத்திய மகிஷியை வதம் செய்ததை கூறலாம்.

    முன்னோர்கள் அதாவது தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் ஒருவரின் குல தெய்வமாகும். குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை என்பதால் குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவசியமானதாகும். வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்துக்கு செய்யவேண்டியதை செய்து வழிபட்டால் குலம் தழைத்து சந்ததியினர் சந்தோஷமாக வாழ்வார்கள். குலத்தில் தோன்றியதே குல தெய்வம். குல தெய்வம் என்பது ஒரு குலத்தில் தோன்றி சமூகம் அல்லது பல குடும்பங்கள் விளங்க தங்கள் உயிரையே கொடுத்து குலத்தை காப்பாற்றியவர்கள்.

    ஒவ்வொரு சமூகத்திற்கும் குறிப்பிட்ட தெய்வமே குல தெய்வமாக இருக்கும். அவர்கள் கும்பிடும் இடம் மாறுமே தவிர குலதெய்வம் மாறாது. பல தெய்வங்கள் இருந்தாலும் குலதெய்வ வழிபாடு என்பது ஒரு குடும்பத்திற்கு மிகவும் அவசியம் நாம் நினைக்கும் அல்லது நினைப்பதற்கு முன்பு நமக்குத் தேவையான உதவிகளைக் குலதெய்வம் செய்யும் என்பது பல காலமாக நம்பப்பட்டு வருகிறது. ஒரு குடும்பத்தில் எந்த சுப காரியங்கள் என்றாலும் முன்னோர்கள் வழிபாடு , குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியமாகும். ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

    ஆண்டிற்கு ஒரு முறையாவது குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமாகும். எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு வருடம் ஒரு முறையாவது செல்ல வேண்டும்.

    பங்குனி உத்திரமும், குல தெய்வ வழிபாடும்.

    பங்குனி உத்திரம் என்பது பவுர்ணமியும் உத்திரம் நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளாகும். மற்ற மாதங்களில் வரும் பவுர்ணமியைக் காட்டிலும் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இணையும் போது தோன்றும் பவுர்ணமி நிலவு மிகப் பெரியதாகவும் மிகப்பிரகாசமாகவும் தோன்றும். மற்றொரு சிறப்பு என்னவென்றால், தமிழ் மாதங்களில் பனிரெண்டாவது மாதம் பங்குனி, அதே போல் நட்சத்திர வரிசையில் பனிரெண்டாவது நட்சத்திரம் உத்திரம். பங்குனி உத்திரம் இந்துக்களின் புனித நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    சாஸ்தா, அய்யனார் கோவில்களில் பங்குனி உத்திரத்தன்று சென்று வழிபடுவதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். மனிதர்களின் பிறவிப்பிணி தீர்க்கும் வலிமை உத்திரம் நட்சத்திரம் மற்றும் பவுர்ணமிக்கு இருப்பதால் அன்றைய தினம் குல தெய்வத்தை , காவல் தெய்வங்களை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். மற்ற நாட்களில் குல தெய்வத்தை வழிபடுவதை விட பங்குனி உத்திரம் அன்று வழிபடுவது நல்ல பலனைப் பெற்றுத் தரும். அன்று குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று குல வழக்கப்படி பூஜைகள் அபிஷேக ஆராதனை செய்து பொங்கல் படையல் இட்டு குடும்பத்தோடு ஒற்றுமையாக வழிபட்டால் புண்ணிய பலன்கள் கூடும். முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.பங்குனி உத்திரத்தன்று வெளியூரில் வெளிநாட்டில் வசிப்பவர்கள் தவிர்க்க இயலாத காரணத்தால் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றால் அனைத்திற்கும் ஆதாரமான சூரிய பகவானை வணங்கி விட்டு உங்கள் வீட்டில் இருந்து எந்த திசையில் குலதெய்வம் இருக்கிறதோ அந்த திசையை நோக்கி குல தெய்வத்தை வணங்க வேண்டும்.

    அதன் பிறகு வீட்டின் பூஜை அறையில் இருக்கும் குலதெய்வத்திற்கு படையல் இட்டு மனம் உருகி வழிபாடு செய்ய வேண்டும்

    ஐ.ஆனந்தி

    ஐ.ஆனந்தி

    ஸ்ரீ அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில்

    பொதுவாக நீர் நிலைகள், கடலோரத்தில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு மனிதர்களின் கர்ம வினைகளை தீர்க்கும் வலிமை உண்டு. அதனால் தான் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று வரும் பக்தர்களுக்கு சுபிட்சம் ஏற்படுகிறது.

    இதே போல் அனைவருக்கும் நல்லன வழங்குவதில் ஸ்ரீ அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில் முன்னிலை வகிக்கிறது. இந்த கோவிலை சுற்றி மூன்று புறமும் நீரும் ஒரு புறம் செம்மண் நிலமும் சூழ்ந்துள்ளது.

    திருச்செந்தூர் அருகில் உள்ள மேலபுதுக்குடி என்ற ஊரில் செம்மண் நிறைந்த தேரி பகுதியில் வற்றாத நீர் சுரக்கும் நற்சுனையின் அருகில் பூரண, புஷ்கலா தேவியருடன், அருஞ்சுனை காத்த அய்யனார் அருள்பாலித்து வருகிறார். அய்யனார் ஒரு கிராம தெய்வம். சிவபெருமான், திருமால் ஆகியோரின் இருபெரும் சக்தியாக தோன்றியவர் அவர். 'அய்யன்' என்றால் 'தலைவன்' என்று பொருள். இங்கு செம்மண் நிறைந்த தேரி பகுதியில் வற்றாத நீர் சுரக்கும் நற்சுனையின் அருகில் பூரண, புஷ்கலா தேவியருடன் அருஞ்சுனை காத்த அய்யனார் அருள்பாலித்து வருகிறார்.

    குளிர்ந்த தாயுள்ளத்துடன், பக்தர்களை காத்து அருளைச் சொரிவதால் இவர் 'அருஞ்சுனை காத்த அய்யனார்' என்று அழைக்கப்பட்டார். முற்காலத்தில் இவர் ஒற்றை தாழை மரத்தின் கீழ் இருந்ததால், 'தாழையடி அய்யனார்', 'தாழைமுத்து அய்யனார்' என்ற பெயர்களில் வணங்கப்பட்டார். வாழை, நாவல்மரங்கள் நிறைந்த புதர்களில் இவர் வீற்றிருப்பதால், 'நாவற்கனியான்' என்ற பெயரும் அவருக்கு உண்டு. இது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சமூகத்தினரின் குல தெய்வமாக உள்ளது. இந்த தலம் குறிப்பிட்ட சமுகத்திற்கு பாத்தியப்பட்டதாக இருந்தாலும் திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் மேலப்புதுக்குடி சென்று ஸ்ரீ அருஞ்சுனை காத்த அய்யனார் சமேத பூரண, புஷ்கலையை வணங்கி ஆசி பெறுகின்றனர். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்பட்டாலும் மேலப்பு துக்குடியில் 10 நாட்கள் வெகு விமரிசையாக நடத்தப்படும் திருவிழா பிரசித்து பெற்றவை.

    ஆண்டுதோறும் இந்த கப்பல் குல தெய்வத்தினை வழிபட மக்கள் திரளாகப் பங்குனி உத்திரத்தன்று செல்வதுண்டு. இங்கு சென்று வருபவர்களுக்கு குழந்தையின்மை, திருமணத் தடை நீங்கும். தொழில் முன்னேற்றமடையும், கடன் நிவர்த்தியாகும். எண்ணங்களும், லட்சியங்களும் ஈடேறும்.

    சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் நிலையில், சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

    இந்த கிரகணத்தின் போது, சந்திரன் பூமியின் நிழலின் வெளிப்புற விளிம்புகள் வழியாக மட்டுமே செல்லும். இந்த சந்திர கிரகணம் இந்திய நேரப்படி பகலில் கிரகணம் நிகழ்வதால் அதை நாம் பார்க்க முடியாது. இந்தியாவில் தோஷ காலம் பொருந்தாது என்பதால் கோவில்களில் நடை அடைக்கப்படாது. பங்குனி உத்திர தினம், பவுர்ணமி என்பதால் முருகன், சிவ ஆலயங்களில் வழக்கம் போல திருவிழாக்கள் நடைபெறும்.

    எல்லா மனிதனுக்கும் ஏதோ ஒரு பிரச்சினை இருந்து கொண்டு தான் இருக்கும் என்ற உண்மை தெரியாது. அவர்களின் வேதனை மட்டுமே அவர்களுக்கு தெரிந்த ஒன்றாக இருக்கும்.

    அதனால் பிரச்சினையைக் கண்டு அஞ்சிக் கொண்டு இருந்தால் தீர்ந்து விடுவதில்லை. தீராத, தீர்க்க முடியாத சில சிக்கல்களுக்கும், மன பயத்திற்கும் சில பரிகாரங்களை செய்து மன நிம்மதியை தேடிக்கொள்ள முடியும். மனம், உடல் சம்பந்தப்பட்ட அனைத்து இன்னல்களுக்கும் தீர்வு கிடைக்க பிரபஞ்சம் வழங்கிய உபாயமே பவுர்ணமி பூஜையாகும். குலம் தெரியாமல் போனாலும் குல தெய்வம் தெரியாமல் போகக்கூடாது குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்கக்கூடாது என்பது பழமொழிகள். எனவே பங்குனி உத்திர நாளில் குல தெய்வத்தை வழிபட்டு சகல ஐஸ்வர்யங்களும் பெற வாழ்த்துகள்.

    • நொச்சி இலைக்கு வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உள்ளது.
    • வர்ம மருத்துவ முறைகளை நாடுவதால் முதுமையில் வலி நிவாரணி மருந்துகளை ஓரங்கட்ட முடியும்.

    முதுமையில் வயது அதிகரிக்க அதிகரிக்க மாத்திரைகளின் பயன்பாடும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. ஒருகட்டத்தில் மருந்து மாத்திரைகள் இல்லாமல், முதுமை நகராது என்ற சூழலும் உண்டாகிவிடுகிறது. அத்தகைய சூழல் முதுமைக்கு மிகவும் சவாலான ஒன்று தான்.

    ஏனெனில் அதிக மருந்துகள் பயன்பாடு உடலுக்கு பல்வேறு பின்விளைவுகளை தருவதாக நவீன ஆய்வுகள் சுட்டிக்காட்டு கின்றன. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் இந்நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்காவில் அதிக இறப்புகளை உண்டாக்கும் நோய்நிலைகள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பது மருந்துகளின் எதிர்பாராத பின்விளைவுகள் என்கின்றன ஆய்வுத்தகவல்கள். இது மிகவும் அதிர்ச்சிகரமான ஒன்று தான்.

    அமெரிக்காவுக்கே அத்தகைய நிலை என்றால் வளர்ந்து வரும் நாடான நமக்கு சொல்லவே வேண்டாம். எண்ணிப்பார்க்கவே கவலையாக உள்ளது. ஏனெனில் வணிக ரீதியாக மாறிவிட்ட மருத்துவம், அடுக்கடுக்கான மருந்துகளை எழுதி பழக்கப்படுத்தி விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் முதியோர்கள் தான்.

    ஆயுளை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் வேறு வழியின்றி அத்தகைய மருந்துகளை நாடும் முதியவர்கள் கொஞ்சம் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை பின்பற்றத் துவங்குவது அவசியமான ஒன்று.

    எதற்கெடுத்தாலும் மருந்து மாத்திரைகள் என்ற நிலையை புறந்தள்ளி கொஞ்சம் பாரம்பரியமாக பழகி வந்த வெளிப்புற சித்த மருத்துவ முறைகளை கையாளத் துவங்க வேண்டும். இதன் மூலம் பல்வேறு நோய்நிலைகளுக்கு உள் மருந்துகள் இல்லாமலே, நல்லதொரு பலனை எட்ட முடியும். சித்த மருத்துவத்தில் வெளிப்புற சிகிச்சை முறைகளைப் பற்றி உள் மருத்துவ முறைகளுக்கு இணையாக சொல்லப்பட்டுள்ளது. சித்த மருத்துவம் மருத்துவ முறைகளை அக மருத்துவம், புற மருத்துவம் எனறு இரண்டாக பிரித்து கூறுகின்றது.

    அதன்படி உள் (அக) மருந்துகள் மொத்தம்-32. வெளி (புற) மருந்துகள் மொத்தம்-32. இத்தகைய புற மருந்துகளை முதுமையில் பயன்படுத்த துவங்குவது உள்பிரயோக மருந்துகளை குறைக்க உதவும். வெளி சிகிச்சையிலே தீர்வினை எட்ட முடியும்.

    சித்த மருத்துவ வெளிப்புற சிகிச்சை முறைகளான கட்டு, பற்று, ஒற்றடம், பூச்சு, வேது, வர்மம், தொக்கணம் ஆகிய சிகிச்சை முறைகள் முதுமையில் நல்ல பலன் தரக்கூடியதாக உள்ளன. சித்த மருத்துவ தைலங்கள் பற்றி பெரும்பாலான முதியவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் மருந்து மாத்திரைகளை எடுத்து சளைத்துப் போன மூட்டுவலிக்கு ஒரே நம்பிக்கை இந்த தைலங்கள் தான்.

    வீக்கம் இருப்பின் பிண்ட தைலம் எனும் மருந்தும், வேதனை இருப்பின் வலியைக் குறைக்கும் வாத கேசரி தைலம் எனும் மருந்தும் பேருதவி புரியும். வலுவிழந்த மூட்டுக்களை வலிமையாக்க உளுந்து தைலம் எனும் சித்த மருந்து உதவும். இவ்வாறு நோய்நிலைகளுக்கு தகுந்தாற் போல் தைலங்களைப் பயன்படுத்தி மூட்டுநோய்களை வெளிப்புற சிகிச்சையால் வெல்ல முடியும். இத்தகைய தைலங்களை நோய்நிலைமை அறிந்து மருத்துவர் ஆலோசனையுடன் பயன்படுத்துவது நல்ல பலன் தரக்கூடும்.

    சித்த மருந்தான சிற்றாமுட்டி தைலம் மூட்டு நோய்நிலைகளில் பெரும்பயன் தரக்கூடியது. சிற்றாமுட்டியின் (சிற்று+ஆம்+முட்டி) பெயர்க்காரணத்தை ஆராய்ந்தால் மூட்டுகளில் தங்கிய ஆமத்தை நீக்கும் என்று பொருள்படுவதாக உள்ளது சிறப்பு. மூட்டுகளில் தங்கும் 'ஆமம்' அவ்விடத்தில் வீக்கத்தையும், தேய்மானத்தையும் உண்டாக்கும் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகின்றது. ஆக, இந்த தைலம் முதுமையில் உண்டாகும் மூட்டுக்களின் தேய்மானத்தைக் குறைத்து மூட்டுகளை பாதுகாக்கும்.

    மூட்டுக்கள் சார்ந்த வலி மற்றும் வேதனையில் சித்த மருத்துவ தைலங்களை வெளிப்புறமாக தடவி ஒற்றடமிட கூடுதல் பலன் கிடைக்கும். மூட்டுக்களில் வீக்கம் உள்ள நிலையில் எளிமையாக மஞ்சள் பொடி மற்றும் கல்லுப்பு சேர்த்து வறுத்து துணியில் முடிந்து ஒற்றடமிடலாம். உப்புக்கும், மஞ்சளுக்கும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உள்ளது.

     அதே போல் நொச்சி இலையும் பல்வேறு மருத்துவ நன்மைகளை தரவல்லது. நொச்சி இலைகளை வெந்நீரில் போட்டு காய்ச்சி மூட்டுக்களில் ஒற்றடமிட நற்பலன் கிடைக்கும். வீக்கம், வேதனை குறையும்.

    நொச்சி இலைக்கும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உள்ளது. தழுதாழை எனும் வாதமடக்கி இலையை காய்ச்சிய ஆமணக்கு எண்ணெயில் தொட்டு ஒற்றடமிட்டு வருவதும் மூட்டுவலியை குறைக்க உதவும். குதிகால் வலியில் எருக்கிலை, எலுமிச்சை இவற்றை சேர்த்து துணியில் முடிந்து நல்லெண்ணெயில் சூடாக்கி தொடர்ந்து ஒற்றடம் கொடுத்து வர மருந்தில்லாமலே நல்ல குணம் காண முடியும்.

    பல்வேறு மூட்டு (ஆர்த்ரைட்டீஸ்) நோய்நிலைகளில் வீக்கம் குறைக்கும் மூலிகைகளான நொச்சி இலை, தழுதாழை, வாத நாராயண இலை, மஞ்சணத்தி ஆகிய இலைகளை உலர வைத்து அத்துடன் மஞ்சள் சேர்த்து பொட்டலமாக கட்டி வைத்துக் கொண்டு அவ்வப்போது ஒற்றடமிட பயன்படுத்தலாம்.

    பற்று போடும் பழக்கம் பாட்டி வைத்தியமாக நம்முடன் பயணித்து வருவது நாம் அறிந்ததே. நோய்நிலைக்கு ஏற்றார் போல் மூலிகைகளை அல்லது சித்த மருந்துகளை பற்றாக்கி போடுவதும் அதிக நன்மைகளை தரவல்லது. மூட்டுக்கள் வீக்க நிலையில் 'அமுக்கரா சூரணம்' எனும் சித்த மருந்தை முட்டை வெண்கருவுடன் குழைத்து பற்றுபோடுவது வீக்கம் குறைத்து பயனளிக்கும். இது தவிர மூசாம்பர பற்று, முட்டை பற்று போன்றவைகளும் பலன் தருவதாக உள்ளன.

    'உளுந்து பற்று' மூட்டு வலி, முதுகு வலி போன்ற பல நிலைகளில் பயன்தர வல்லது. கருப்பு உளுந்துடன், முருங்கை இலை, ஆவாரை இலை சேர்த்து பொடித்து முட்டை வெண்கருவுடன் பற்றாக்கி மூட்டு வலி, முதுகு வலி உள்ள இடங்களில் போட்டு வர நற்பலன் தரும். இது மூட்டுகளுக்கு வன்மையைத் தரக்கூடியது.

    ஆஸ்துமாவில் மருந்து மாத்திரைகளோடு மார்பில் வெற்றிலை ஒற்றடம் கொடுக்க விரைவில் நிவாரணம் கிடைக்கும். கற்பூராதி தைலம் எனும் சித்த மருந்தை மார்பில் தடவி கோதுமை தவிட்டினை வறுத்து லேசான சூட்டில் ஒற்றடம் கொடுக்க நோய்நிலை யில் முன்னேற்றம் கிடைக்கும். மேலும் ஆஸ்துமாவில் வேது பிடிப்பதும் நற்பலன் தரும். இருமல் அதிகம் இல்லாத போது நொச்சி இலை, மிளகு சேர்த்து காய்ச்சி வேது பிடிக்க குறிகுணம் குறையும்.

    அதே போல் மேல் சுவாசப்பாதை ஒவ்வாமையால் உண்டாகும் (பீனிசம்) மூக்கடைப்பு நிலையில் மஞ்சள் கொம்பினை சுட்டு முகர்தல் பலன் தரும். இந்நிலையில் நொச்சி இலை, மஞ்சள், தைல இலைகளை போட்டு வேது பிடிப்பது மூக்கடைப்பைக் குறைத்து நிம்மதியான தூக்கம் வர உதவி புரியும். மூக்கில் ஏற்படும் சளிச்சவ்வு வீக்க நிலையில் சித்த மருந்தான 'நாசிரோக நாசி தைலத்தை' வாரம் ஒருமுறை மூக்கில் நசியம் விடுவது பலன் தரக்கூடும். இதற்கு 'சுக்கு தைலம்' எனும் சித்த மருந்தையும் மருத்துவர் ஆலோசனைப்படி பயன்படுத்துவது நல்லது.

    பீனிசம், ஆஸ்துமா, ஆசனவாய் நோய்கள் ஆகியவற்றில் புகை போடும் பழக்கமும் சித்த மருத்துவத்தில் உண்டு. உதாரணமாக மஞ்சள் புகையை குறிப்பிடலாம். இத்தகைய புகை போடும் மருத்துவத்தை நோய்நிலைக்கு ஏற்ப முதுமையில் பயன்படுத்துவது நற்பலன் தரும்.

    நாட்பட்ட வலி நோய்நிலைகளில் சித்த மருத்துவத்தின் 'வர்மச் சிகிச்சை' நல்ல பலன் தரக்கூடியது. வர்மப் புள்ளிகள் தூண்டுதலால் வலி நிவாரணி தன்மையுள்ள இயற்கை ஹார்மோன்கள் உடலில் தூண்டப்படுவதாக உள்ளது. வர்ம மருத்துவ முறைகளை நாடுவதால் முதுமையில் வலி நிவாரணி மருந்துகளை ஓரங்கட்ட முடியும்.

    வேப்பிலை மற்றும் வேப்பம்பட்டை புகை அல்லது நொச்சி இலை மற்றும் மஞ்சள் சேர்த்து புகை போடுவது முதியோர்கள் குடியிருக்கும் வீட்டில் தொற்றுக்கிருமிகள் வராமல் தடுக்க உதவும். இவ்வாறு நோய்நிலைக்கு தகுந்தாற்போல் புகை சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம். 

    மருத்துவர் சோ.தில்லைவாணன்

    மருத்துவர் சோ.தில்லைவாணன்

    தலைவலி, நீர்க்கோவை (சைனுசைடிஸ்) ஆகிய நிலைகளில் நீர்க்கோவை மாத்திரை எனும் சித்த மருந்தை பயன்படுத்த நல்ல பலன் அளிக்கும், குறிகுணங்கள் குறைந்து நல்ல தூக்கம் வரும். நீரிழிவு நோய்நிலையில் உண்டாகும் கை கால் எரிச்சலுக்கு பிண்ட தைலம் போன்ற மருந்துகளை காலில் தடவி வர எரிச்சல் குறையும்.

    முதுமையில் உண்டாகும் தோல் வறட்சியில் சித்த மருந்துகளான அருகம்புல் தைலம், புங்கன் தைலம், வெட்பாலை தைலம் ஆகியவற்றை மேல்பூச்சாக பயன்படுத்தலாம். மேலும் தோலில் உண்டாகும் அரிப்பினைத் தடுக்கும் மருந்து மாத்திரைகளுக்கு பதிலாக மேற்கூறிய அருகன் தைலத்துடன், மத்தன் தைலம் சேர்த்து பயன்படுத்து அரிப்பு, நமைச்சல் குறைக்க உதவும்.

    புள்ளி விவரங்களின் படி, கிட்டத்தட்ட 36 சதவீதம் முதியோர்கள் மருத்துவர் பரிந்து ரைப்படி தினசரி 5 மருந்துகளையும், மேலும் 80 சதவீதம் முதியோர்கள் தினசரி இரண்டு மருந்துகளையும், மருத்துவர் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்கின்றனர். ஆக முதுமையில் மேலும் மருந்து மாத்திரைகளை கூட்டாமல் இருக்க, வெளிப்புற சிகிச்சை முறைகளை நாடுவது நல்லது.

    சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள வெளிப்புற சிகிச்சை முறைகள் முதுமைக்கு அவசியமாகும் மாபெரும் புதையல்கள். இத்தகைய சிறப்புமிக்க மருத்துவ முறைகளை நாடுவது உள்மருந்துகளின் பயன்பாட்டைக் குறைத்து, உள்மருந்துகளின் பின்விளைவுகளைக் தடுத்து, ஆரோக்கியமான நாட்களை நோக்கி முதுமையை நகர்த்தும்.

    தொடர்புக்கு:

    drthillai.mdsiddha@gmail.கம

    8056040768

    ×