search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சைவமா? அசைவமா?
    X

    சைவமா? அசைவமா?

    • இதயம் இடைவிடாமல் தூங்கிவிடாமல் துடிப்பதற்கு எல்லா உடல் இயக்கங்களுக்கும் தசைகள் தேவை.
    • தாவர அடிப்படையிலான உணவுகளில் சில அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இல்லாமல் இருக்கலாம்.

    நம் வீட்டு குழந்தைகள் அல்லது பெரியவர்களிடம் புரதசத்து உள்ள உணவுகள் யாவை என்ற ஒரு கேள்வியை கேட்டு பாருங்கள். இந்த கேள்வியை லட்சக்கணக்கான மக்களுக்கு ஆரோக்கிய விழிப்புணர்வை யூடியூப் தளத்தின் மூலமாக ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நான், எனது வீட்டில் உள்ள குழந்தைகளிடமும் பெரியவர்களிடமும் கேட்டபோது திரு திரு வென விழித்தார்கள். பின்பு ஒருவழியாக சமாளித்து சில பதில்களை அளித்தார்கள். அவர்கள் அளித்த பதிலை கேட்டு நான் திருதிருவென விழித்தேன். அப்பொழுதுதான் உணர்ந்தேன், விழிப்புணர்வை முதலில் வீட்டிலிருந்து ஆரம்பித்து இருக்க வேண்டும் என்று !.

    ஏனென்றால் அவர்கள் அளித்த பதில்கள் அப்படி. முதல் பதில், பழங்களில் அதிக புரதம் உள்ளது என்றார்கள். பின்பு காய்கறிகள் என்றார்கள். பின்பு ஒரு படி மேலே போய் ரசம் என்றார்கள்!! பழம், காய்கறிகளை கூட என்னால் பொறுத்துக்கொள்ள முடியும். ரசத்தில் புரதம் அதிகம் என்று ஒரு குண்டை தூக்கி போட்டதை தான் இப்பொழுது வரை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எனினும் பரவாயில்லை. அவர்கள் கூறிய உணவுகள் அனைத்தும் ஆரோக்கிய உணவுகள் என்பதால் என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு என்னுடைய புராணத்தை ஆரம்பித்தேன். என் மகள் மட்டுமே சிக்கினாள். மீதி பேர் நான் கண்ணிமைக்கும் நேரத்தில் என் முதுகுக்கு பின் மறைந்து ஓடி விட்டார்கள்!!. சரி விடுங்கள் விஷயத்திற்கு வருவோம்.

    புரதம் (புரோட்டின்) என்பது மனித உடலின் சீரான இயக்கத்துக்கு மிகவும் தேவையான ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். நம்முடைய அன்றாட நடவடிக்கைகளுக்கும் நமது உடல், ஒவ்வொரு கணமும் நமது தசைகளை நம்பியே உள்ளது. நமது தசைகளே நம்முடைய இயக்கம்.

    நான் என் பெண்ணிடம் கூறினேன் " உன் கண் பார்வை செம்மையாக இருக்க உன் கண் இமை தசைகள் ஒரு நாளைக்கு 19000 முறை துடிக்கிறதே எப்படி? நாளொன்றுக்கு உனது நுரையீரல் 22000 முறை சுருங்கி விரிகிறதே எப்படி? நாளொன்றுக்கு 1 லட்சம் முறை உனது இதயம் துடிக்கிறதே, எப்படி? நீ காலையில் எழுந்தவுடன் நடக்க ஆரம்பிக்கிறாய், பள்ளிக்கு போகிறாய், படிக்கிறாய். இப்படி நடப்பதற்கு உன் உடலில் எத்தனை தசைகள் வேலை செய்கின்றன தெரியுமா? 200 தசைகள். ஒரு அடி நீ முன் எடுத்து வைக்க வேண்டுமென்றால் உன் உடலுக்குள் 200 தசைகள் அசைந்தால் தான் அது முடியும். தெரியுமா?" இப்படியே நான் பராசக்தி படத்தில் சிவாஜி பேசுவது போல் அடுக்கடுக்காக பேசிக்கொண்டே போக, என் முதுகுக்கு பின்னே எஸ்கேப் ஆன அனைத்து ஜீவராசிகளும் இப்பொழுது என் கண்முன் மீண்டும் தோன்றினார்கள். எனக்கும் ஒரு உற்சாகம் பிறந்தது.

    நான் எனது உரையை தொடர்ந்தேன். "கேளுங்கள் மக்களே, கேளுங்கள். நீங்கள் கண் இமைப்பதற்கு, பேசுவதற்கு, நடப்பதற்கு, ஓடுவதற்கு, தூங்குவதற்கு, உங்கள் நுரையீரல் விரிந்து ஆக்சிஜனை முழுங்குவதற்கு, உங்கள் இதயம் இடைவிடாமல் தூங்கிவிடாமல் துடிப்பதற்கு எல்லா உடல் இயக்கங்களுக்கும் தசைகள் தேவை. அந்த தசைகள் எதனால் செய்யப்பட்டது என தெரியுமா? ஒரு ரப்பர் பந்து போல அடித்தாலும் திரும்பி மேலெலுகிறது உங்கள் தசை. ஒரு ரப்பர் பேண்ட் போல இழுத்தாலும் நன்றாக இழுக்கப்படுவதற்கு ஏதுவாக ஈடுகொடுக்கிறது உங்கள் தசை. அடித்தாலும், அதை வாங்கி தாங்கி கொள்கிறது. இப்படிப்பட்ட தசை சிமெண்டாலோ, கற்களாலோ உருவாகவில்லை. புரதம் என்ற அற்புத மூலக்கூறினால் தான் உண்டாகி இருக்கிறது.


    இந்த புரதம் இல்லையெனில் நமது உடல் இல்லை. நமது உடல் தசைகளுக்கு மட்டுமல்ல, நமது உடல் திசுக்கள் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளுதல், நொதி உற்பத்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி செயல்பாடு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த புரதம். எனவே இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும், புரத உணவுகள் எவ்வளவு முக்கியமென்று. ஆதலால்…." நான் உரையை நீட்டிக்கொண்டிருக்கும் போது திடீரென இடைமறித்தால் என் மகள்..

    "சரி அப்பா, இப்போது எனக்கு பதில் கூறுங்கள். என்னுடைய டீச்சர் புரதம் சைவ உணவுகளிலும் கிடைக்கும், அசைவ உணவுகளிலும் கிடைக்கும், என்று கூறினார். அதுமட்டுமில்லை, இன்னொரு கேள்வியும் என் டீச்சர் கேட்டார். அவர் உங்கள் யூடியூப் பாலோவர் என்பதால் எந்த புரதம் சிறந்தது? சைவமா? அசைவமா? என்று உங்களிடம் கேட்டு வரசொன்னார்" என்று ஒரு கேள்விக்கணையை வீசி என்னை திக்குமுக்காட செய்தாள்.

    என்பதிலை தொடர்ந்தேன்.. நமது இந்திய உணவுகளில் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, கொண்டைக்கடலை பருப்பு, வெள்ளை உளுந்து, கறுப்பு உளுந்து, பச்சை பயறு, நிலக்கடலை, தட்டை பயறு, ராஜ்

    கார்திகேயன்

    மா பயறு/தாத்தா பயறு, பச்சை பீன்ஸ், மொச்சை பயறு, பின்டோ பயறு (pinto beans), பாதாம், முந்திரி, பிஸ்தா, அக்ரோட், பிரேசில் பருப்பு, ஹேசல்நட்

    (hazel nut),காயவைத்த விதைகள் - எள் விதை, சூரியகாந்தி விதைகள், ஆளி விதைகள், சீயா விதைகள், பூசணி விதைகள், வெந்தயம், பாலக்கீரை, அமராந்த் கீரை மற்றும் காளான்கள் போன்ற தாவர அடிப்படையிலான உணவுகள் அருமையான புரத ஊட்டச்சத்துக்கள் வழங்குகிறது.

    இப்பொழுது மேலை நாட்டில் இருந்து இந்தியாவில் பிரபலமாகி வரும் சோயா பீன்ஸ், சோயாவின் மதிப்புகூட்டு உணவுகளான டோபூ (tofu), டெம்பே (tempeh), சோயா சங்ஸ் (soya chunks), மற்றும் ஓட்ஸ், குயினோவா (quinoa) போன்ற முழு தானியங்களிலும் தாவர அடிப்படையிலான புரத சத்து நமக்கு கிடைக்கிறது.


    ஆக இவ்வளவு உணவுகளில் புரதம் இருந்தாலும், தாவர அடிப்படையிலான உணவுகளில் சில அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இல்லாமல் இருக்கலாம். இந்த அமினோ அமிலங்கள் புரதத்தின் முக்கியமான கட்டுமான தொகுதிகளாகும் (building blocks).

    இதே அசைவ மூலக்கூறுகளான விலங்குகளில் இருந்து பெறப்படும் இறைச்சி, முட்டை, மீன், பால் மற்றும் பால் சார்ந்த தயிர், பன்னீர், சீஸ் போன்றவற்றில் உள்ள புரதமானது உயர் உயிரியல் மதிப்பு கொண்டது. இந்த அசைவ புரதமானது, எல்லா அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் போதுமான விகிதத்தில் கொண்டிருக்கிறது. மேலும் விலங்கு புரதங்களில் இரும்பு,துத்தநாகம்,வைட்டமின் பி12 மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு முக்கியமானவை.

    இப்பொழுது என் பெண் மீண்டும் இடைமறித்தால், "அப்பா, ஏன் இப்படி நீட்டி முழக்கிக்கிட்டு இருக்கீங்க. அசைவ புரதம் தான் பெஸ்ட் அப்படின்னு ஒரே வார்த்தையில் முடிக்க வேண்டியது தானே?" என்றாள்.

    "இல்லடி தங்கம், கொஞ்சம் பொறுமையா கேளு, நீ நினைக்கிற மாதிரி டக்குனு இந்த முடிவுக்கு வர முடியாது. ஏன் தெரியுமா?

    சைவ உணவுகள் இதய நோய், உயர் ரத்த அழுத்தம், டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் சில புற்று நோய்களின் அபாயத்தை குறைப்பது உட்பட பல ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையது.

    தாவர அடிப்படையிலான புரதங்கள் பொதுவாக நிறைவுற்ற கொழுப்புகள் (saturated fat) மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக இருப்பதால், அவை இருதய ஆரோக்கியத்திற்கு சாதகமாக அமைகின்றன். மேலும் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த உணவு, பெரும்பாலும் சைவத்துடன் தொடர்புடையது. ஏராளமான ஆக்சிஜனேற்றங்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்களை சைவ உணவுகள் வழங்குகிறது, மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறது.

    அசைவ உணவுகளுடன் ஒப்பிடும்போது சைவ உணவுகள் கணிசமான அளவு குறைந்த கார்பன் அளவைக் கொண்டுள்ளன. கால்நடை வளர்ப்பு, குறிப்பாக மாட்டிறைச்சி உற்பத்தி, கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றம், காடழிப்பு மற்றும் நீர் மாசுபாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிக்கிறது.

    சைவம் பெரும்பாலும் விலங்கு நலன் மற்றும் கொடுமையற்ற வாழ்வுக்கான அக்கறைகளால் தூண்டப்படுகிறது. இறைச்சி உட்கொள்வதைத் தவிர்ப்பதன் மூலம், தனிநபர்கள் விலங்குகள் மீது தங்கள் இரக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள் மற்றும் இறைச்சித் தொழிலில் தங்கள் ஈடுபாட்டைக் குறைக்கிறார்கள்.

    மறுபுறம், அசைவ உணவுகளும் ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். விலங்கு புரதங்கள் முழுமையான புரதங்களாகக் கருதப்படுகின்றன, அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் உகந்த விகிதத்தில் வழங்குகின்றன. குறிப்பாக விளையாட்டு வீரர்கள் அல்லது தீவிர உடல் செயல்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு இது தசைகளின் தொகுப்பு மற்றும் பழுதுபார்ப்பிற்கு குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். கூடுதலாக, விலங்கு பொருட்கள் ஹீம் இரும்பின் சிறந்த ஆதாரங்களாக இருக்கின்றன, இது தாவர உணவுகளில் காணப்படும் ஹீம் அல்லாத இரும்புடன் ஒப்பிடும்போது உடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது, இது இரும்புச்சத்து குறைபாடு ரத்த சோகையைத் தடுப்பதில் முக்கியமானது".

    மீண்டும் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவதை போல, மீண்டும் என் சேஷ்ட குமாரத்தி இடைமறித்தாள், "அப்பா, ரொம்ப குழப்பறீங்க. சைவ உணவுகள் ஆரோக்கியத்துக்கு நல்லது, சுற்றுசூழலுக்கு நல்லது, விலங்கு நலன் பாதுகாப்புக்கு நல்லது அப்படின்னுலாம் சொல்றீங்க, ஆனால் உடல் வலிமைக்கு அசைவ புரதமும் தேவைங்கிறீங்க. முடிவா என்னதான்பா சொல்றீங்க. என் டீச்சருக்கும் நான் ஒரு நல்ல பதில் சொல்லனும். சொல்லுங்க"

    "கண்ணு, நீ ஏற்கனவே என்கிட்ட ஒரு கேள்வி கேட்ட ஞாபகம் இருக்கா? முட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிலிருந்து முட்டை வந்ததா? ன்னு"

    என் பெண், "ஓ, நீங்க அப்படி வரீங்களா…இதெல்லாம் போங்கு ஆட்டம். கரெக்டா பதில் சொல்லுங்க"

    நான், "கண்ணு, சைவ மற்றும் அசைவ உணவுகளுக்கு இடையே சிறந்த புரத மூலத்தை தீர்மானிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. இரண்டு உணவு முறைகளும் தனித்துவமான நன்மைகள் வழங்குகின்றன.

    சைவ உணவுகள் ஒட்டுமொத்த ஆரோக்கியம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் நெறிமுறைக் கொள்கைகளை மேம்படுத்துவதில் சிறந்து விளங்குகின்றன, அதே சமயம் அசைவ உணவுகள் தசை வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு முக்கியமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுடன் உயர்தர புரதத்தை வழங்குகின்றன.

    இறுதியில், சைவம் மற்றும் அசைவ புரத மூலங்களுக்கு இடையிலான தேர்வு தனிப்பட்ட விருப்பத்தேர்வுகள்), ஊட்டச்சத்து தேவைகள், சுகாதார இலக்குகள், நெறிமுறை நம்பிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் கவலைகள் ஆகியவற்றைப் பொறுத்தது.

    பல்வேறு வகையான புரத மூலங்களை பயன்படுத்துவது, தாவர அடிப்படையிலானது மற்றும் விலங்குகளில் இருந்து பெறப்பட்டது என இரண்டும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை ஆதரிக்கும். ஒரு சீரான மற்றும் சமநிலையான உணவுமுறைக்கு வழிவகுக்கும். என்னம்மா புரிஞ்சுதா?"

    என் பெண் "அப்பா, எனக்கு புரிஞ்சுதோ இல்லையோ, இந்த மாதிரி நான் என் டீச்சர்கிட்ட பதில் சொன்னா, அடுத்த வாட்டி எங்க டீச்சர் உங்ககிட்ட கேள்வியே கேக்க மாட்டாங்க. அது மட்டும் எனக்கு நல்லா புரியுது!!"

    E-Mail ID: karthikspm@gmail.com

    Next Story
    ×