search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சாபம் பெறாமல் வாழும் வழிகள்!
    X

    சாபம் பெறாமல் வாழும் வழிகள்!

    • நீங்கள் உங்களை உற்று கவனியுங்கள். சிலரை உங்களுக்கு காரணமே இல்லாமல் பிடிக்கும்.
    • உண்மைகளை உணர்ந்து முறையாக வாழ்வது நம் கையில்தான் இருக்கின்றது.

    நமக்கு ஒரு பழக்கம் இருக்கின்றது. ஏதாவது சங்கடம் ஏற்படும்போது 'என் கர்மா' என்று சொல்கின்றோம். 'நான் என்ன பாவம் செய்தேனோ. இப்படி கஷ்டப்படுகின்றேன்' என்று சொல்கின்றோம். வாழ்வில் ஒவ்வொரு வரும் அவரவர் வாழ்வின் போது கர்மாவை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றோம். அவை நல்ல கர்மாவாகவும் இருக்கலாம். தீய கர்மாவாகவும் இருக்கலாம். நம் வாழ்வின் செயல்கள் மூலம் நாம் நல்லதையும் பெறலாம். தீயதையும் பெறலாம். பிறருக்கு நல்லதையும் செய்யலாம். தீயதையும் செய்யலாம். நிறைய தோல்விகள், ஏமாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த தோல்விகளையும் ஏமாற்றங்களையும் பிறருக்கும் ஏற்படுத்துகின்றோம்.

    வாழ்வில் இந்த அம்மா, இந்த அப்பா என எந்த ஒரு உறவினையும் நம்மால் தேர்வு செய்து பிறக்க முடியவில்லை. கல்யாணம் தேர்வு செய்து நடப்பதுதான். குடும்பத்தார் பார்த்து ஏற்படுத்தும் திருமணத்தில் பெண்ணோ, மாப்பிள்ளையோ இதுவரை எங்கு இருந்தார்கள்? நமக்குத் தெரியாது. முன்பின் அறியாத அன்புதான் காதல் திருமணம். ஆக இதில் நமக்கு என்று என்ன பங்கு இருக்கின்றது. அனைத்தும் விதிபடி நடக்கின்றது.

    எங்கிருந்தோ ஒருவர் நண்பர் என வருகிறார். அவரால் நாம் கடும் சிக்கலில் இருந்து மீள்வதும் நடக்கின்றது. கடும் சிக்கலில் விழுவதும் நடக்கின்றது. ஆக அந்த நபர், நம் கர்ம வினைப்படி அனுப்பப்படுகின்றார்.

    உறவு என்ற பெயரில் தொல்லை தருபவர்கள்தான் ஏராளம். என்ன நடக்கின்றது என்று புரிந்து கொள்ள முடியாததுதான் வாழ்க்கை.

    நமது தேவைக்காக முன்னேற்றத்திற்காக உழைக்கின்றோம். ஆனால் முடிவு? கர்ம வினையால் நிர்ணயிக்கப்படுகின்றது. கர்மவினைக்கு ஏற்ப ஒருவர் நல்லவற்றின் பக்கம் ஈர்க்கப்படுகின்றார் அல்லது தீயவற்றின் பக்கம் தரதரவென இழுத்து செல்லப்படுகின்றார்.

    நீங்கள் உங்களை உற்று கவனியுங்கள். சிலரை உங்களுக்கு காரணமே இல்லாமல் பிடிக்கும். சிலரை நீங்கள் காரணமேயின்றி வெறுப்பீர்கள். ஏன்? என நீங்களே உங்களுக்குள் ஆழ்ந்து யோசியுங்கள். விடை கிடைக்கும்.

    நன்மையும், தீமையும் பிறர் தர வாரா என்பர். ஆக நாம் இன்று எப்படி வாழ்கிறோம் என்பது இருக்கட்டும். இனி எப்படி வாழப் போகின்றோம் என்பதற்கு இத்தகு உண்மைகளை உணர்ந்து முறையாக வாழ்வது நம் கையில்தான் இருக்கின்றது.

    நான் பத்து புண்ணியம் செய்தேன். இரண்டு பாவம் செய்தேன். ஆக இந்த 2 பாவத்தினை கழித்து 8 புண்ணியம் மீதம் என் கையில் உள்ளது என்று விதிக்கு கணக்கு கிடையாது. பாவத்திற்கான தண்டனையும், புண்ணியத்திற்கான நன்மையும் தனித்தனியே கிடைக்கும் வினோத கணக்கு ஆகும்.

    மனம் பதறாது, சிதறாது, அலையாது இருந்து விட்டால் பிரச்சினையே இல்லை. அதுதான் பல்லாயிரம் வருடங்களாக மனிதன் படாத பாடுபடுகின்றானே. இதனை கட்டுப்படுத்த மனிதனுக்கு பக்தி மார்க்கமும் சிறந்த வழியாகவே கருதப்படுகின்றது. அதனால்தான் இன்று வரை பக்தி மார்க்கம் வலுத்து இருக்கின்றது.

    இறைவனின் புராணங்களை படிப்பது மனதினை வெகுவாய் பதப்படுத்தும். பாகவதம் படித்தாலும் சரி, பைபிள் படித்தாலும் சரி, குரான் படித்தாலும் சரி அன்றாடம் புனித நூல்களில் சில பக்கமாவது படிக்க வேண்டும்.

    ஜீசஸ் என்றோ, அல்லா என்றோ, கிருஷ்ணா, ராமா என்றோ சப்தமாகவோ, மன திற்குள்ளாகவோ வழிபாடு செய்து கொண்டே இருக்கலாம்.

    சுத்தமான இலைகள், பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம்.

    தன்னையே இறைவனுக்கு மனதார கொடுத்து விடலாம். இந்த உடலும் நீயே, ஆத்மாவும் நீயே என்று உயர்ந்த நிலையில் பக்தி கொள்ளலாம்.

    கமலி ஸ்ரீபால்

    எனக்கு எதற்குமே நேரமில்லை என்பவரிடம் மகா பெரியவர் கூறிய

    "ஹரி நாராயண துரித நிவாரண பரமானந்த

    சதாசிவ சங்கர

    ஸ்ரீ ராம ஜெயம் ராம ராமா

    நமச்சிவாய

    இப்படி ஒரு மந்திரத்தினை நடக்கும் போதும், சமைக்கும் போதும் கூட சொல்லலாம்.

    இதனை கிறிஸ்தவ மதப்படி 'தேங்யூ ஜீசஸ்', இஸ்லாம் மதப்படி 'அல்லா' என்றும் கூறலாம். ஆனால் இவை அனைத்துமே மனதிற்கும், நரம்பு மண்டலத்திற்கும் உறுதி செய்பவை ஆகும்.

    நம் கடமைகளை நாம் சரியாக செய்து விட்டு. பலனை கடவுளிடம் விட்டு விடுவோமே.

    வாழ்வில் மற்றொரு விஷயம். சாபங்கள் பெறாமல் இருப்பதற்கு மனம் போனபடி கோபத்தில் தகுந்த காரணமில்லாமல் ஒருவருக்கு தரும் சாபம் பலிக்காது. தகுந்த காரணம் இருந்தாலும் ஒருவர் சாபம் கொடுக்கும் போது தன் தவ பலத்தின் அதிக சக்தியினை இழந்து விடுகின்றார் என்பதனையும் புராணங்கள் கூறுகின்றன. ஒருவரின் மனம் அடுத்தவரின் நடவடிக்கையால் மிகவும் நொந்து போனாலே அடுத்தவருக்கு அது மிகப்பெரிய சாபமாக அமையும். ஒருவரை சற்று கட்டுப்படுத்த முடியாத கோபத்தினால் திட்டும் போது கூட கடுமையான வார்த்தைகள் சொல்லாமல் 'வாழ்க வளமுடன்' என்று சொல்லி விடுங்கள். நமக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால் சில சாபங்கள் ஏற்படாமல் ஒருவர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

    பித்ரு சாபம்: நம் முன்னோர்கள் தாய், தந்தை, உறவில் பிள்ளை வழி திதி செய்ய பிள்ளைகள் இல்லாமல் இறப்பவர்கள் இவர்களுக்கு எளிய முறையில் திதி கொடுப்பது.

    பெண் சாபம்: பெண்ணுக்கு எந்த வகையில் தவறு, துரோகம் செய்தாலும் கடும் தோஷம் ஏற்படும்.

    எத்தனை வயது ஆனாலும் நாம் சிலவற்றினை கட்டாயம் கடை பிடிக்க வேண்டும். அதில் ஒன்று அன்றாடம் சிறிது நேரமாவது மவுனமாய் இருப்பது. இங்கு மவுனம் என்பது வாய் பேசாமல் இருப்பது மட்டுமல்ல. கைகள் காட்டாது இருப்பது மட்டும் அல்ல. மனம் பேசாமல் இருப்பதுதான். நொடிக்கு நூறு விஷயங்களை மின்னல் போல் கொண்டு வரும் பலம் படைத்த மனதினை ஒரு நொடி எதுவும் நினையாது வைப்பதே கடும் தவம்தான். மனம் அலையாது இருக்க அமைதி வேண்டும்.

    * அமைதி என்பது எங்கும் வெளியில் இல்லை. அவரவரிடம்தான் இருக்கின்றது.

    * அமைதிதான் உலகின் மிகப்பெரிய அதிர்ஷ்டம். பொக்கிஷம். விலை மதிப்பு இல்லாதது.

    * அமைதி காக்கும் ஒரு வழி அதிகம் பேசாது இருப்பதுதான்.

    * மவுனத்தினை விட நன்மை பயக்கும் என்றால் மட்டுமே ஓரிரு வார்த்தைகள் பேசலாம். இது ஆன்ம பலத்தினைக் கூட்டும்.

    * ஒரு ஆங்கில கருத்து ஒன்று இருக்கின்றது அதன் தமிழாக்கம்

    'என்னுடைய மவுனத்தினை உன்னால் புரிந்து கொள்ள

    முடியவில்லை என்றால் என்னுடைய வார்த்தைகளையும்

    உன்னால் புரிந்து கொள்ள முடியாது'

    * உங்கள் மவுனம் உங்களுக்கு அநேக விஷயங்களை புரிய வைக்கும். இந்த புரிதல் ஏற்படும்போது மனிதனுக்கு ஞானம் ஏற்படுகின்றது.

    * சில விஷயங்களை எத்தனை பணம் இருந்தாலும் திரும்ப பெற முடியாது. இயற்கையின் சக்தி, இறைவனின் சக்தி, இறைவனின் சக்தி அப்படிப்பட்டது.

    * போய் விட்ட உயிரினை திரும்ப வரவழைக்க முடிவதில்லை.

    * கோபத்தில் கொட்டி விட்ட வார்த்தைகளை ரப்பர் கொண்டு அழித்து விட முடிவதில்லை.

    * காலத்தில் கற்காத கல்வியினை 40 வயதிற்கு மேல் படித்தாலும் வேலை கிடைப்பதில்லை.

    * அனைவரும் அறிந்த ஒன்று காலம் என்ற வார்த்தையின் முக்கியத்துவம் ஆகும்.

    பல மகான்களின் தத்துவ பாடல்களை நம் காது மட்டும் கேட்டால் போதாது. மனமும் கேட்க வேண்டும். அடிக்கடி கேட்க வேண்டும். அன்றாடம் கேட்க வேண்டும்.

    பட்டினத்தார் பாடல்களை கண்டிப்பாய் படிக்க வேண்டும். இதெல்லாம் 50 வயதிற்கு மேல் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் சிறு வயதில் இருந்தே சிறிது சிறிதாய் வாழ்வின் உண்மையினை உணர்த்தலாம்.

    'ஆடுகிற ஆட்டமும் ஓடுகிற ஓட்டமும்

    ஒருநாள் ஓயும்போது

    கூடுகிற கூட்டம் தான் சொல்லும்

    நீ யார் என்பதை

    கோபமாய் பேசினால் குணத்தை இழப்பாய்

    வேகமாய் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்

    வெட்டியாய் பேசினால் வேலையை இழப்பாய்

    அதிகமாக பேசினால் அமைதியை இழப்பாய்

    ஆணவமாய் பேசினால் அன்பை இழப்பாய்

    சிந்தித்து பேசினால் சிறப்போடு வாழ்வாய்.

    நிலையில்லாத வாழ்க்கை

    வாழ்க்கை எனும் நீண்ட பயணத்தில் கடைசி வரை கூட வருவது யார்?

    குவித்து கொட்டியுள்ள செல்வம் வீட்டோடு இருக்கும்.

    மனைவி வாசல் வரை வருவாள்

    மகன் சுடுகாடு வரை வருவான்

    கடைசி வரை நம்மை விடாது உடன் இருப்பதும்

    வருவதும் நாம் செய்யும் நன்மைகளும், தீமைகளும் மட்டுமே.

    இத்தகு கருத்துக்களை பாடல்களாக நமக்கு படிக்க கடினமாய் இருப்பினும் மொழி பெயர்ப்புகளாக இதுபோல் வலைதளத்தில் இருப்பதனை அன்றாடம் படிக்க வேண்டும்.

    Next Story
    ×