search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பிரச்சினைகளைக் கொண்டாடுவோம்!!
    X

    பிரச்சினைகளைக் கொண்டாடுவோம்!!

    • அன்றாட வாழ்வியலில் பெருகிவரும் தகவல் தொடர்பு வளர்ச்சியே பெரும் பிரச்சினைதான்.
    • இணையத்தின் மூலமே அனைத்துப் பயன்களும் எனும்போது, பிரச்சினைகளும் அவற்றின் மூலமாகத்தானே வரும்.

    பிரச்சினைகளை எதிர்கொள்ள எப்போதும் தயங்காத துணிச்சல் மிக்க வாசகர்களே! வணக்கம்.

    எல்லாப் புத்தகங்களுக்கும் கடைசிப்பக்கம் என்று ஒன்று உண்டு; எல்லாக் கதைகளுக்கும் முடிவு என்பது ஒன்று உண்டு. எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு என ஒன்று உண்டு. வாழ்க்கையில் தீர்வுகளை மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தால் பிரச்சினைகளை யார் எதிர்கொள்வது?; முடிவுகளை மட்டுமே ருசித்துப்பார்க்க நினைத்தால் முடிவுகளை அடைய முயலும்போது ஏற்படும் சிரமங்களை யார் அனுபவிப்பது?.

    தயாராவோம் நண்பர்களே! இலக்கை நோக்கிய நமது ஒவ்வொரு பயணத்திலும், எதிர்வரும் சவால்களையும் பிரச்சினைகளையும் மகிழ்ச்சியோடு எதிர்கொள்ளத் துணிச்சலோடு திட்டமிடுவோம். வேதனைகள் இன்றிச் சாதனைகள் ஏது?; பிரச்சினைகள் இன்றித் தீர்வுகள் ஏது?.

    அதனால் பிரச்சினைகளை வரவேற்கக் கற்றுக்கொள்வோம். பசி வந்தால்தான் உணவுக்கான உழைப்பை மேற்கொள்ளக் கற்றுக்கொள்வோம். பிணி வந்தால்தான் நோயின்றி உடம்பைக் காத்திடும் உபாயங்களைப் பழக்கிக் கொள்வோம். பகை/போட்டி இருந்தால்தான் உறங்கிடும்போதும் விழிப்புணர்வோடு இருந்திடும் சுறுசுறுப்பைக் கற்றுக்கொள்வோம்.

    அதனால் பிரச்சினைகளைக் கொண்டாடுவோம்.

    எந்த அறிவும் இல்லாமல், எதைப்பற்றிய புரிதலும் அக்கறையும் இல்லாமல், வெறும் சோற்றுப் பிண்டங்களாக இருக்கும் மனிதர்களுக்கு எப்போதும் பிரச்சினைகளே உருவாவதில்லை. சிந்திக்கிற மூளையே இல்லாதவர்களுக்கு எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் அது பிரச்சினைதான் என்பதை எப்படி உணர்ந்துகொள்ள முடியும்?. சிந்திக்கத் தெரிந்தவர்களே அதிகம் மகிழவும் செய்கிறார்கள்!; அதிகம் அல்லாடவும் செய்கிறார்கள்.

    அன்றாட வாழ்வியலில் பெருகிவரும் தகவல் தொடர்பு வளர்ச்சியே பெரும் பிரச்சினைதான். நாளுக்கு நாள் வளர்வதாக உள்ள இன்றைய அறிவுலக வளர்ச்சியே சாதாரண மனிதனுக்கு இன்னும் பிரச்சினைதான். செல்பேசிகள் வந்தவுடனே தகவல் பரிமாற்ற வளர்ச்சி எங்கேயோ செல்லத் தொடங்கிவிட்டது. ஆனாலும் இன்றும் நான் பட்டன் போனைத்தான் உபயோகிப்பேன்! ஸ்மார்ட் போன்களுக்கு மாற மாட்டேன் என்றால் அதள பாதாளத்திற்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம்.

    ஒரு செல்பேசிக்குள், கடிகாரம், நாள்காட்டி, பஞ்சாங்கம், வங்கி, பள்ளிக்கூடம், கல்லூரி, காவல் நிலையம், உணவு விடுதி, பலசரக்கு, காய்கறி, ரெயில், பேருந்து பயணங்கள், விளையாட்டு, பொழுதுபோக்கு, வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், ஓவியம், நாட்டியம், இலக்கியம், நூலகம், பத்திரிகைகள், அரசாங்கக் கட்டணப் பரிமாற்றங்கள், யூடியூப், வாட்ஸ்அப், டுவிட்டர்,

    இன்ஸ்டாகிராம், இமெயில், இணையம் என உலகில் உள்ள அனைத்தும் அடங்கி விட்டபிறகு, அதனைக் கற்றுக் கொள்ளாவிட்டால் எப்படி?.


    இணையத்தின் மூலமே அனைத்துப் பயன்களும் எனும்போது, பிரச்சினைகளும் அவற்றின் மூலமாகத்தானே வரும். உதாரணத்திற்கு, வங்கிக்குச் செல்லாமலேயே வீட்டிலிருந்தபடி, ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனை அல்லது, மொபைல் வங்கிச் சேவை மூலம் எங்குள்ள ஒருவருக்கும் பணம் அனுப்பவோ அவரிடமிருந்து பெறவோ முடியும் என்று இப்போது வந்து விட்டது. அதே நேரத்தில், இந்தத் தளத்தில் கைதேர்ந்த திருடர்கள் இடைப்புகுந்து வங்கிச் சேமிப்பைத் துடைத்து எடுத்துச் சென்றுவிடவும் செய்கிறார்கள்.

    பெறுகிற அறிவு எவ்வளவு நுட்பமானதோ, அதன் வழியாக வருகிற பிரச்சினைகளும் அதி நுட்பமானவையாகவே இருக்கின்றன. அவற்றிற்கேற்ற வண்ணம் விழிப்புணர்வோடு பிரச்சினைகளை அனுகுகிறவர்களே வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள்.

    பிரச்சினைகள் எப்போதும் பிரச்சினைகளாகவே இருக்கின்றன. அவற்றிற்கான தீர்வுகளைப்பற்றி யோசிக்காமல், நம்மில் பெரும்பாலோர் அந்தப் பிரச்சினைகளுக்கு யார் உரிமையாளர்?, யார் காரணகர்த்தா? என்பதை ஆராய்வதிலேயே நேரத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறோம். ஏற்படுகிற எல்லாப் பிரச்சினைகளுக்கும் நம்மைச் சுற்றியுள்ள அடுத்தவர்களே காரணம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். அல்லது யாராவது ஒருவரைக் காரணமாக்கிக் குற்றம் சுமத்தி மகிழ்கிறோம். வசதியாக ஒன்றை மறந்து விடுகிறோம். "தீதும் நன்றும் பிறர் தர வாரா!" என்பது கணியன் பூங்குன்றனின் வாழ்வியல் கணக்கன்றோ?.

    பிரச்சினைகளில் பெரிய பிரச்சினை என்றும் சிறிய பிரச்சினை என்றும் எதுவுமில்லை. மனம் சோர்ந்துபோகாமல் அவற்றை எதிர்கொள்ளும் சூழல் மற்றும் நேரத்தைப் பொறுத்ததாகவே தீர்வுகள் அமைகின்றன. 'என்னால் தீர்க்க முடியாத பிரச்சினை அது!' என்று எதையாவது நீங்கள் சுட்டிக்காட்டுவீர்கள் ஆனால், இந்த உலகில் மனிதனை விடவா அவன் சந்திக்கும் பிரச்சினைகள் பெரியவை? என்று ஒருகனம் யோசித்துப் பார்த்தால் பிரச்சினைகள் தூசாகிப் போகும். துணிந்தவர் முன் எதுவுமே துக்கம் தருவதில்லை.

    சாதனை இலக்குகளை உருவாக்கும்போதே, வரப்போகும் எதிர்விளைவுகளையும் பக்க விளைவுகளையும் ஒருசேர யோசித்துத் திட்டமிட வேண்டும். இதனை வள்ளுவர் "எதிரதாக் காக்கும் அறிவு" என்று குறிப்பிடுகிறார். இப்படிப்பட்ட அறிவுடையாருக்கு அதிர வருகிற நோய் வராது என்பதும் அவரது கணிப்பு. அனுபவசாலிகளின் முன் அனுபவங்கள், தாமே அனுபவித்தறிந்த உண்மைகள் இவற்றையெல்லாம் உபகரணங்களாக வைத்துப் பிரச்சினைகள் உருவாகும் முன்னரே தடுத்தழித்திட வேண்டும்.

    ஒருமுறை நோய் வந்தபோது பட்டபாடுகள், செய்த மருத்துவ முறைகள், இவற்றை அனுபவங்களாக வைத்துக்கொண்டு அதே போன்றதொரு நோய் அறிகுறி மீண்டும் தோன்றும்போதே எச்சரிக்கையாக இருந்துவிட்டால் அந்த நோய்ப் பிரச்சினையிலிருந்து தப்பித்து விடலாம். வாழ்க்கையில் நோய் மட்டுமல்ல, குடும்பத்தில், அலுவலகத்தில் எதிர்ப்படுகிற எல்லாப் பிரச்சினைகளுக்கும் வருமுன்னர்க் காக்கும் சிகிச்சைமுறை நல்ல பலனளிக்கும்.

    சுந்தர ஆவுடையப்பன்

    நமக்கு வரும் பிரச்சினைகள் நமக்கு எதிரானவை அல்ல; நமக்குத் தேவையானவற்றை இன்னும் செம்மையாகச் செய்து கொள்ள நம்மை ஈடுபடுத்தும் ஆபத்து உதவிகள். சிலர் பிரச்சினைகளுக்குத் தீர்வு பிரச்சினைகளே என நினைத்து எதிர்மறை நோக்கில் செயல்படத் தொடங்கி விடுவர். ஒருவர் அடிக்க வருகிறார் என்றால், திரும்ப அவரை அடிக்கச் செல்வது பிரச்சினையை மேலும் பிரச்சினையாக்கும். பொறுமையும், சகிப்புத் தன்மையுமே நிரந்தர வெற்றியின் ஆயுதங்கள் என்று மகாத்மா காந்தியடிகள் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

    ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி பத்துப் பதினைந்து ஆடுகளை வளர்த்து வந்தார். அவர் வீட்டுக்கு அருகில் ஒரு வேட்டைக்காரர் குடும்பத்தோடு குடி வந்தார். வேட்டைக்காரருக்கு இரண்டு சிறுவர்கள்: இரண்டு வேட்டை நாய்களும் உண்டு. நாள்தோறும் வேட்டைக்காரரோடு காட்டுக்குச் சென்று மிருகங்களைக் கவ்விப்பிடித்து, அவர் வேட்டையாடுவதற்கு அவை உதவி வந்தன.

    வீட்டிலிருக்கும்போதும் அந்த வேட்டைநாய்கள் சும்மா இருப்பதில்லை; பக்கத்திலிருக்கும் விவசாயியின் வீட்டுக்குள் புகுந்து அங்குள்ள ஆடுகளைக் கடித்து வைக்கத் தொடங்கின. வேட்டைக்காரரைப் பார்த்து விவசாயி முறையிட்டார்," ஐயா வீட்டிலிருக்கும்போது, உங்கள் வேட்டை நாய்களைக் கட்டிப் போடுங்கள்!; எங்கள் வீட்டுக்குள் புகுந்து ஆடுகளைச் சேதப்படுத்துகின்றன!." வேட்டைக்காரர் பிரச்சினையை மேலும் வளர்ப்பதுபோலப் பேசினார், " நீ உன் ஆடுகளைக் கட்டிப்போடு! எனது நாய்கள் வேட்டைநாய்கள்! அவற்றால் மிருகங்களைக் கடிக்காமல் சும்மா இருக்க முடியாது!" என்று கர்ஜித்தார்.

    பிரச்சினையை ஊர்ப்பஞ்சாயத்தாரிடம் எடுத்துச் சென்றார் விவசாயி. "வேட்டைக்காரன் முரடன், அவனிடம் நட்போடு நடந்துகொள்!" என்று விவசாயிக்கு அறிவுரை கூறி அனுப்பினர் பஞ்சாயத்தார்.

    இந்தப் பிரச்சினையை எப்படி அணுகினால் சுமூகமான தீர்வை விவசாயி அடைய முடியும்?. பஞ்சாயத்தார் வேட்டைக்காரரை அழைத்து உன் நாயைக் கட்டிப்போடு! என்று உத்தரவிட்டாலும் அவர் கேட்கப் போவதில்லை. மீண்டும் ஆட்டுக்குட்டிகளை நாய் கடித்தால், நான் என்ன செய்வது? என விலகிக் கொள்ளவும் செய்வார். விவசாயி பேசாமல் வீட்டைக் காலிபண்ணி வேறுபக்கமாகப் போகலாம் என்றால் அந்த வீடு அவருக்குப் பூர்வீகச் சொந்த வீடு.

    "நட்போடு நடந்து கொள்ளுங்கள்!" என்று பஞ்சாயத்தார் சொன்ன அந்த ஒரு சொல்லை யோசனையில் வைத்துக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பினார்

    விவசாயி. அந்த ஒற்றைச் சொல்லில் இந்தப் பிரச்சினைக்கான வழி பிறந்திருப்பதாக நினைத்துச் செயலிலும் ஈடுபட்டார். தன் வீட்டில் இருந்த இரண்டு குட்டி ஆடுகளை இரண்டு கைகளிலும் அரவணைப்பாய் எடுத்துக்கொண்டு, வேட்டைக்காரர் வீட்டு வாசலில் நின்றார். அங்கே விளையாடிக்கொண்டிருந்த வேட்டைக்காரரின் இரண்டு மகன்களையும் அருகே அழைத்தார். ஆளுக்கொரு ஆட்டுக்குட்டியைப் பரிசாகக் கொடுத்தார்.

    "இந்த இரண்டு ஆட்டுக்குட்டிகளையும் கவனமாகப் பார்த்து வளர்த்து ஆளாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு!" என்று சொல்லிக் கொடுத்தார் விவசாயி. பெற்றுக்கொண்ட சிறுவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி. அன்று முதல் ஆட்டுக்குட்டிகளை நண்பர்களைப் போல பாவித்து அந்தச் சிறுவர்கள், அவற்றோடு விளையாடி மகிழ்ந்தனர்.

    தனது மகன்கள் ஆட்டுக்குட்டிகளோடு பிரியமாய் விளையாடுவதைப் பார்த்த வேட்டைக்காரர், வேட்டை நாய்களைக் கட்டிப் போடத் தொடங்கினார். அன்றுமுதல் விவசாயிக்கு இருந்த நாய்ப் பிரச்சினை முடிவுக்கு வந்தது. ஆம்!. நாள்தோறும் ஒன்றிரண்டு ஆடுகளை இழந்து வந்த விவசாயி அன்போடும் நட்போடும் அன்று இழந்த இரண்டு ஆடுகளோடு பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டு வந்து விட்டார்.

    பிரச்சினைகள் எப்போதும் உள்ளவை. அவற்றை அணுகும் முறைகளினாலேயே அவற்றோடு உறவு கொண்டாடி மகிழலாம். முல்லா நசுருதீன் தனக்கு அற்புதமான ஆற்றல் வந்துவிட்டதாக ஒருநாள் மக்களுக்கு அறிவித்தார். பிரார்த்தனைகள் மூலமாகவே எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம் எனத் தெரிவித்தார்.

    பிரார்த்தனை மூலமாக அசைக்க முடியாத மலையையும் கூட அசைக்கலாம்; நகர்த்தலாம் என்று தெரிவித்த அவர். ஒருநாள் ஒருபெரிய மலைக்கு முன்னால் அமர்ந்து பிரார்த்தனை பண்ணத் தொடங்கினார். நான் பண்ணுகிற பிரார்த்தனையின் ஆற்றலால், இந்த மலையை என்னை நோக்கி நகர்ந்து வரச் செய்யப்போகிறேன் என்றார்.

    ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம், மூன்று மணிநேரம், நான்கு மணிநேரம் ஆயிற்று!. மலை அசைந்து கூடக் கொடுக்கவில்லை; முல்லாவை நோக்கி நகர்ந்து வரவுமில்லை. பார்த்தார் முல்லா, முழந்தாள் போட்டவண்ணம் மலையை நோக்கி இவர் நகரத் தொடங்கிவிட்டார். முல்லாவின் செயலை மக்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர்.

    முல்லா சொன்னார், "பிரச்சினைகளுக்கான தீர்வுகள் நம்மை நோக்கி வரவில்லையென்றால், நாம்தாம் தீர்வுகளை நோக்கி நகரத் தொடங்க வேண்டும்". வெகு ஆழமான வார்த்தைகள் இவை.

    எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் இருக்கின்றன. சில தீர்வுகள் பிரச்சினைகளுக்கு வெளியே இருக்கலாம்; பல தீர்வுகள் அவற்றிற்கு உள்ளேயே இருக்கின்றன. பிரச்சினைகள் நம்மைச் சோர்வடைய வைக்கின்றன என எண்ணுவோர் வாழும் ஆற்றலைத் தவற விட்டவர்கள்.

    பிரச்சினைகள் நம்மைச் சுறுசுறுப்பாக்குகின்றன என எண்ணுவோர் நொடிதோறும் வாழும் பெருமை பெற்றவர்கள்.

    தொடர்புக்கு - 9443190098

    Next Story
    ×