search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    2024 பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் தாமரை மலருமா?
    X

    2024 பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் தாமரை மலருமா?

    • சிலரது அரசியல் வாழ்க்கை சரித்திரத்தில் இடம் பெறுகிறது.
    • தேர்தல் நடக்கும் காலகட்டத்தில் குடிமக்கள் அவர்களுடைய வாக்கை அவர்கள் விரும்பியவருக்கு வாக்களிக்கலாம்.


    உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை உற்று நோக்கி கொண்டு உள்ளது. ஜனநாயக நாடான இந்தியா பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் தேசிய மலரான தாமரை அன்று மலர்ந்த பூவாக இந்தியாவை ஆட்சி செய்து கொண்டு இருக்கிறது. நடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை அள்ளப் போகும் கட்சி எது என்ற ஆவலில் உலக நாடுகள் மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    மன்னர் ஆட்சி போய் உலகெங்கும் மக்களாட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. மக்களாட்சி என்பது சுதந்திரமான தேர்தல். முறைப்படி மக்கள் தேர்ந்தெடுக்கும் அரசாங்கம். இதில் மக்கள் அல்லது அவர்களுடைய பிரதிநிதிகள் ஆட்சி அதிகாரம் பெற்றிருப்பார்கள்.

    தேர்தல் நடக்கும் காலகட்டத்தில் குடிமக்கள் அவர்களுடைய வாக்கை அவர்கள் விரும்பியவருக்கு வாக்களிக்கலாம். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மக்களின் பிரதிநிதிகளாவார்கள். அவர்கள் 5 ஆண்டு காலம் வரை பதவி வகிப்பார்கள். 5 ஆண்டுகளுக்கொருமுறை ஆட்சியாளர்களை மாற்றி மக்கள் தங்கள் உரிமையை நிலைபடுத்தும் பாராளுமன்றத் தேர்தல் இந்தியாவில் 19.4.2024 முதல் 1.6.2024 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவு ஜூன் 4-ம் தேதி தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் சேவை செய்ய பலர் விரும்பினாலும் தேர்தலில் வெற்றி பெற்று சிலர் மட்டுமே வெற்றி வாகை சூடுகிறார்கள். சிலரது அரசியல் வாழ்க்கை சரித்திரத்தில் இடம் பெறுகிறது. அரசியலுக்காக உயிர் தியாகம் செய்த பலரது பெயர் கூட வெளியில் தெரியாமல் போய்விடுகிறது. ஜோதிட ரீதியாக அரசியலில் ஜொலிப்பவர் யார்? இந்த 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கோட்சார கிரகங்களின் நிலைப்படி சுய ஜாதகப்படி தாமரை மலருமா? போன்ற பல தகவல்களைப் பார்க்கலாம்.

    சூரியன்: ராஜ கிரகம். அரச பதவி, அரசு மூலம் அனுகூலம், தலைமைப் பண்பு, நிர்வாகத்திறன், ஆளுமைத் தன்மை, பொறுப்புணர்வு, ராஜதந்திரம் ஆகியவற்றை வழங்கும் கிரகம். சந்திரன், தூயமனம், பொறுமை, நிதானம், தன்னடக்கம், அன்பு போன்றவைற்றை தரும் கிரகம்.

    செவ்வாய் : வேகம், விவேகம், ஊக்கம், வெற்றி, பாதுகாத்தல், செயல்திறன், உடல் வலிமை, தைரியத்தை வழங்கும் கிரகம்.

    புதன்: புத்தி சாதுர்யம், பேச்சுத் திறமை, ராஜதந்திரம், லாபநஷ்டம் அறியும் திறன் பற்றிக் கூறும் கிரகம்


    குரு: ஒழுக்கம், நேர்மை, நியாயம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நிதி, நீதியை பயன்படுத்தும் விதம் போன்றவற்றை வெளிப்படுத்தும் கிரகம்.

    சுக்கிரன்: ஆடம்பரம், உல்லாச நாட்டம் பற்றி தெரிவிக்கும் கிரகம்.

    சனி: பொதுஜன ஆதரவு, சளைக்காமல் உழைக்கும் தன்மை, மக்கள் சக்தி, மக்கள் ஆதரவு, பிறரின் கஷ்ட நஷ்டங்களை புரிதல் ஆகியவற்றை கூறும் கிரகம்.

    ராகு: எதிரிகளை நேரம் பார்த்து வீழ்த்தும் தைரியம், பழகும் தன்மையை அறிய உதவும் கிரகம்.

    கேது: சட்ட நுணுக்கம், ஆன்மீக நாட்டம், பிரச்சினையை தீர்க்கும் திறன், ஆகிய ஞானத்தை வெளிப்படுத்தும் கிரகம்.

    பன்னிரு பாவகங்களும் அரசியலும்.

    லக்ன பாவகம்: எண் ஜான் உடம்புக்கு சிரசே பிரதானம். அரசியலில் ஈடுபட விரும்பும் ஜாதகரின் தோற்றம் அனைவரையும் வசீகரிக்கும் தன்மையுடையதாக இருப்பது அவசியம். ஜாதகரின் விதி, வாங்கி வந்த வரம், கொடுப்பினை ஆகியவற்றின் அடிப்படையில் லக்னம் வலிமை பெற வேண்டும்.

    இரண்டாம் பாவகம்: தனது வாக்கு சாதுர்யத்தால் இனிமையாகப் பேசி அனைவரையும் கவரும் தன்மையுடன் இருக்க வேண்டும்.கொடுக்கும் வாக்குறுதியை காப்பாற்றும் நாணயம் மிகுந்திருப்பது நல்லது.

    மூன்றாம் பாவகம்: 3-ம் பாவகம் என்பது உப ஜெய ஸ்தானம். திட்டமிடுதலில் திறமையுடையவராக இருப்பதுடன் எடுத்த முயற்சியில் வெற்றி பெறுவதற்குத் தேவையான தைரியம், வேகம், விவேகம், சிந்திக்கும் திறன் மிக்கவராக இருத்தல் அவசியம். அனைத்து விதமான சகாயமும் தேடி வர வேண்டும். விசுவாசமான வேலையாட்கள் இருக்க வேண்டும். கூப்பிட்ட குரலுக்கு ஒடி வரும்படியாக தொண்டர்களின் ஆதரவு வேண்டும்.

    நான்காம் பாவகம்: சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப புரிந்து செயல்படும் கல்வி ஞானம் மிக அவசியம்.

    ஐந்தாம் பாவகம்: பூர்வ புண்ணிய ஸ்தான வலிமையுடன் புத்திக் கூர்மை, எதிர்காலம் பற்றி உணர்ந்து யோசிக்கும் ஆழ்ந்த ஞானம் நிரம்பி இருக்க வேண்டும். தூய்மையான சிந்தனை, நிதி நிலைமையை சீராக்கி நீதியை நிலை நாட்டும் ஆழ்மன சிந்தனை, நிறைந்திருக்க வேண்டும்.

    ஐ.ஆனந்தி

    ஆறாம் பாவகம்: இரண்டாவது உப ஜெய ஸ்தானம். தேர்தல் களத்தில் போட்டியிடும் வாய்பை வழங்கும் பாவகம். எதிரி என்ற ஒருவன் இருந்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையை அடைய முடியும். ஒரு அரசியல்வாதியின் சிந்தனையில் எப்பொழுதும் தனது அரசியல் எதிரியை எப்படி வீழ்த்துவது என்ற நோக்கம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். எதிரிகளை வெல்லும் திறமையுடன், ஆரோக்கியம் நிரம்பியவராக இருக்க வேண்டும். அத்துடன் நாட்டின் பொருளாதாரத் தேவைகளை சரி செய்யும் திறமை மிக மிக அவசியம். ஜனன கால ஜாதகத்தில் ஆறாமிடம் வலிமை பெற்றவர்களுக்கு அரசியலில் வெற்றி வாய்ப்பு உறுதி.

    ஏழாம் பாவகம்: ஒரு அரசியல்வாதிக்கு கூட்டணிக் கட்சியின் ஒத்துழைப்பும் வாக்காளர்களின் ஆதரவும், கட்சி நண்பர்களின் அனுசரணையும் மிக மிக அவசியம். ஏழாம் பாவகம் வலுப் பெற்றவர்களுக்கு நிரந்தரமான வாக்காளர்கள் இருப்பார்கள். வாழ்நாள் முழுவதும் ஆதரவு தரும் கூட்டணிக் கட்சிகள் இருக்கும். பொது ஜனத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பார்கள். பொதுமக்கள் இவர்களின் ஆணைக்கு காத்து இருப்பார்கள். கட்டுப்பட்டு நடப்பார்கள்.

    எட்டாம் பாவகம்: விபரீத ராஜ யோகம், தீர்க்க ஆயுள், வம்பு, வழக்கை எதிர்கொள்ளும் பக்குவம் எட்டாம் பாவகம் வலிமை பெற்றவர்களுக்கே சாத்தியம்.

    ஒன்பதாம் பாவகம்: பாக்கிய ஸ்தான வலிமை பெற்றவர்களுக்கே தேர்தலில் வெற்றி பெறும் அதிர்ஷ்டம். தொடர்ந்து பதவியில் நீடிக்கும் வாய்ப்பும் தேடி வரும்.

    பத்தாம் பாவகம்: பத்தாம் பாவகம் வலிமை பெற்றவர்களுக்கு பதவியை நிர்வகிக்கும் திறமை, அதிகாரத்தை பயன்படுத்தும் திறன், தலைமைப் பண்புகள் நிரம்பி இருக்கும்.

    பதினொன்றாம் பாவகம்: 3-வது உப ஜெய ஸ்தானம் . 3-ம் பாவத்திற்கு பாக்கிய ஸ்தானம் 11-ம்மிடமான லாபம் ஸ்தானம். ஒன்பதாம் பாவத்தின் பாவத் பாவம்.தேர்தல் வெற்றியின் மூலம் கிடைக்கும் வளர்ச்சி.

    பன்னிரெண்டாம் பாவகம்: சேவை மனப்பான்மை, தொண்டு புரியும் மனநிலை அரசியலுக்கான கிரக அமைப்புகள் ஒருவர் பதவியில் அமரவும் தன் வாழ்நாள் முழுவதும் அனைத்து முயற்சியிலும், அனைத்து செயலிலும் வெற்றிவாகை சூடவும் ஜனன கால ஜாதகத்தில் லக்னம் மற்றும் லக்னாதிபதி வலிமை பெற வேண்டும். அத்துடன் சனி பகவானின் வலிமை மிக மிக அவசியம்.சனி கொடுத்தால் எவர் தடுப்பார். சனியின் உதவி இல்லாது யாரும் பதவியில் அமர முடியாது.மிகக் குறிப்பாக கால புருஷ ஒன்பதாம் அதிபதி குருவும் கர்மாதிபதி சனியின் சம்பந்தம் எந்த விதத்தில் இருந்தாலும் அரசியல் வாய்ப்பு உண்டு. மேலும் கால புருஷ ஐந்தாம் அதிபதி சூரியன் மற்றும் கர்மாதிபதி சனியின் சம்பந்தம் எந்த விதத்தில் இருந்தாலும் அரசியல் ஆதாயம் உண்டு. ஒரு ஜாதகத்தில் அதிக கிரகங்கள் புஷ்கர நவாம்ச பாதத்தில் இருந்தாலும் சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் சாதனை மனிதராக உலகை வலம் வருவார்கள். இத்தகைய அமைப்பு உடைய ஜாதகம் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.

    மேலும் ஒருவருக்கு வெற்றியை வழங்குவதில் உப ஜெய ஸ்தானமான 3,6,11-ம் பாவகத்தின் பங்கு அளப்பரியது. லக்ன பாவத்தின் பாவத் பாவம் 3-ம் பாவகம். ஒருவர் தான் எடுத்த முயற்சியில் வெற்றி பெற விடாமுயற்சி வேண்டும். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பது பழமொழி. முயற்சி உடையோர் புகழ்ச்சி அடைவர் என்பது புதுமொழி. முயன்றால் முடியாதது இந்த உலகில் எதுவும் இல்லை. தோல்வியை வெல்ல முயற்சி என்னும் ஆயுதம் ஏந்த வேண்டும். 2வது உப ஜெயமான ஆறாம் பாவகம் என்பது எதிரி பாவகம். தேர்தலில் தன்னுடன் போட்டியிடும் எதிரியை வெல்ல 6ம் பாவக வலிமை மிக மிக அவசியம். 6ம் பாவகம் வலுப்பெற்றவர்கள் எந்தப் போட்டியிலும் வென்று தனக்கென்று ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொள்வார்கள். ஒருவருக்கு எல்லாவிதமான வாழ்வியல் வெற்றியைப் பெற்றுத் தருவது ஆறாம் பாவகமே. லாபம், மேன்மை, ஆதாயம், அபிலாஷைகள் பூர்த்தியாவது 11ம் பாவகம். ஒரு ஜாதகத்தில் 3,6,11-ம் பாவகங்கள் இணைந்து செயல்பட்டால் எதிரிகள் மண்டியிடுவார்கள்.

    தாமரை தொடர்ந்து மலருமா?

    கடந்த 10 ஆண்டு காலமாக பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் தாமரை சின்னத்தின் மூலம் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதம மந்திரியாக நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறார். தொடர்ந்து அவர் 3ம் முறையாக ஆட்சி அமைப்பாரா? சாதாரண குடும்பத்தில் பிறந்த அவரின் ஜாதகம் நாடாளும் யோகம் பெற என்ன கிரக அமைப்பு உள்ளது போன்றவற்றை பார்க்கலாம். 17.9.1950 அன்று காலை 11மணிக்கு வாட்நகர், குஜராத்தில் மிக சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். ஜென்ம லக்னம் விருச்சிகம். ஜென்ம நட்சத்திரம் அனுஷம் 2. அவருக்கு லக்னப்புள்ளி விசாகம் 4 (புஷ்கராம்சம்) ஜென்ம நட்சத்திரம் அனுஷம் 2 எனும் சனியின் நட்சத்திரம். புஷ்கராம்சம் ஒரு ஜாதகத்தின் வலிமைமையை நிர்ணயம் செய்வது லக்னப்புள்ளி. லக்னம், லக்னாதிபதி. மோடி ஜாத கத்தில் லக்னம் லக்னாதிபதி செவ்வாய் லக்னத்தில் ஆட்சி பெற்று லக்னாதிபதியும், லக்னப்புள்ளியும் விசாகம் 4 எனும் புஷ்கராம்ச சாரம் பெற்றது முதல் தரமான யோகம். பாக்கிய அதிபதி சந்திரன் லக்னத்தில் நீச பங்க ராஜ யோகம் பெற்று அனுஷம் 2 எனும் புஷ்காரம்ச பாதத்தில் அமர்ந்திருப்பது மேலும் சிறப்பு.

    அடுத்த படியாக பொதுமக்களை குறிக்கும் சனியின் வலிமை. வாக்காளர்கள் மற்றும் பொது மக்களை குறிக்கும் சனி பகவான் பொது ஜன தொடர்பை குறிக்கும் 7-ம் அதிபதி சுக்ரனுடன் 10-ல் நின்று தனது 10-ம் பார்வையால் 7-ம்மிடமான சமுதாய தொடர்பு ஸ்தானத்தை பார்ப்பதால் இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஒருவருக்கு வெற்றி மேல் வெற்றி தரும் உப ஜெய ஸ்தானங்களான 3,6,11-ம் பாவகங்கள் 3 - சனி, 6- செவ்வாய், 11 - புதன் சுப வலுப்பெற்றதால் எதிரிகளால் இவரை நெருங்க முடியவில்லை. மேலும் கால புருஷ 9-ம் அதிபதி குருவும், கால புருஷ 10-ம் அதிபதி சனியும் ஒருவரை ஒருவர் பார்ப்பது தர்ம கர்மாதிபதி யோகம்.

    எதிரியை வெல்லக் கூடிய 6-ம்மிடம் எனும் உப ஜெய ஸ்தான அதிபதி, லக்னாதிபதி செவ்வாயே நடப்பில் தசை நடத்துவது மேலும் பக்கபலமாக நின்று எதிரியை வெல்லும் வலிமையை வழங்கி வருகிறது. இது போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இவரின் ஜாதகத்தில் நிறைந்துள்ளதால் இவர் உலகப் புகழ் பெற்றுள்ளார்.உலகெங்கும் அவரது புகழ் பரவி அந்தஸ்து கவுரவம் உயர்ந்து கொண்டே செல்கிறது.

    அதனால் தான் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் வெற்றி மழையில் நனைந்து வருகிறார்.

    இவரது ஜென்ம நட்சத்திரமான அனுஷத்தின் தாரை வடிவமான தாமரை சின்னமும் வெற்றிக்கு உதவி செய்கிறது.

    இது போன்று பல்வேறு சிறப்பு அம்சங்கள் நரேந்திர மோடி ஜாதகத்தில் உள்ளதால் தாமரை மீண்டும் மலர்ந்து 3வது முறையாக இந்தியாவை ஆட்சி செய்யும் வாய்ப்புள்ளது. அதே போல் இது மோடியின் ஜாதகம் என்று பத்திரிகை சோஷியல் மீடியாவில் வருவது. அதன் அடிப்படையில் தான் நாம் கருத்து சொல்கிறோம். சுய ஜாதகத்தின் உண்மை தன்மை நமக்கு தெரியாது. மேலும் இந்தியா முழுவதும் நடக்கும் தேர்தல் தேசம் முழுமைக்குமான தேர்தல் என்பதால் தேசம் முழுமைக்கும் உள்ள கோட்சார அமைப்பையும் கணக்கிட வேண்டும். கோட்சார கிரகங்களே ஒருவரின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கிறது. மேலே கூறியபடி பன்னிரண்டு பாவகங்கள் வலிமையும், நவ கிரகங்களின் அனுகிரகமும் நிறைந்த ஜாதகருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும்.

    மனித பிறவி எடுத்த ஸ்ரீ கிருஷ்ண பகவான் அனைத்து பண்புகளையும் ஒருங்கே பெற்றவர். மகாபாரதத்தில் குருஷேத்திரப் போரில் சனாதன தர்மத்தின் படி போரில் அரசியல் ராஜ தந்திரத்தை கடைபிடித்து சத்தியத்தை நிலை நாட்டியவர். கீதா உபதேசத்தின் மூலம் மனிதர்கள் வாழ்க்கைத் தத்துவத்தை உபதேசித்தவர் என்பதால் சுய ஜாதகத்தில் கிரகங்கள், பாவகங்கள் வலிமை குன்றியவர்கள் கிருஷ்ண பரமாத்மா குதிரை வாகனத்தில் அமர்ந்த மகாபாரதக் காட்சியை வைத்து வழிபட அரசியல் வெற்றியும் ஞானமும் கிடைக்கும்.

    Next Story
    ×