search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பெருமாள் கோவிலில் மனித உருவில் நந்திதேவர்!
    X

    பெருமாள் கோவிலில் மனித உருவில் நந்திதேவர்!

    • தாயாருக்கு 9 வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, பாசிப்பயறு சுண்டல் வைத்து பிரார்த்தித்து வர நினைத்த காரியம் கைகூடும்
    • தலத்தில் ஏழு தீர்த்தங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது சோழர்கள் தலைநகராக விளங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

    கும்பகோணத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது நாதன்கோவில். இந்த ஊரில் ராஜராஜசோழன் எழுப்பிய மிகப்பழமையான ஆலயம் இருக்கிறது. இந்தக் கோவிலில் இருந்தபடி இன்றைக்கும் அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறார் பெருமாள். இங்கு, மூலவரின் திருநாமம் - ஸ்ரீவிண்ணகரப் பெருமாள்: ஸ்ரீநாகநாதர் என்றும் அழைப்பர்.

    கருவறையில் இவருக்கு முன்னே, ஸ்ரீதேவி மற்றும் ஸ்ரீபூதேவியுடன் ஸ்ரீஜெகந்நாதபெருமாள் எனும் திருநாமத்துடன் உற்சவரும் காட்சி தருகிறார்.

    ஸ்ரீபிரம்மா, திருமாலின் விக்கிரகத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட அற்புதத் தலம் இது! இத்தகைய சிறப்புடைய நாதன்கோவிலை, திருநந்திபுர விண்ணகரம் எனப் போற்றுகிறது தல புராணம். நந்தி, சிவபெருமானின் வாகனம். அந்த நந்தி பெயரில் பெருமாளுக்கு உரிய இடம் அழைக்கப்படுகிறது. அந்த பெருமாள் குடிகொண்டிருக்கும் தலத்துக்கு சிவனாரின் வாகனமான நந்தியின் பெயர் வந்தது எப்படி தெரியுமா?

    ஒருமுறை, மகாவிஷ்ணுவைத் தரிசிக்க வைகுண்டத்துக்கு நந்திதேவர் சென்றார். ஆனால், துவாரபாலகர்களான ஜயனும் விஜயனும் அவரைத் தடுத்து நிறுத்தினார்கள். அதையும் மீறி நந்திதேவர் உள்ளே செல்ல முயன்றார். இதனால் கோபம் கொண்ட இருவரும், "உஷ்ண நோயால் உன் தேகம் பாதிக்கப் பட்டு. அவதிப்படுவாயாக!" எனச் சாபமிட்டனர்.

    இந்த நோயால் அவதிப்பட்ட நந்திதேவர், சிவபெருமானிடம் முறையிட்டார். அப்போது, "திருமகள் கடும் தவம் இருந்து, திருமாலின் இதயத்தில் இடம் பிடித்த தலமான நாதன்கோவி லுக்குச் சென்று தவம் செய்தால், சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கப் பெறுவாய்" என்று அருளினார் சிவபெருமான்.

    அதன்படி, இந்தத் தலத்துக்கு நந்திதேவர் வந்தார். திருமாலை எண்ணிக் கடும் தவம் மேற்கொண்டார். இதில் மகிழ்ந்த பெருமாள் அவருக்கு காட்சி கொடுத்து ஆசிர்வதித்தார். அதோடு நந்தியின் சாபத்தையும் போக்கியருளினார். அப்போது திருமாலிடம் நந்திதேவர். "என்னைப் போலவே தோல் நோயால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து தங்களைத் தரிசித்தால், அந்த நோயைத் தாங்கள் தீர்த்தருள வேண்டும். இதன் நினைவாக, இந்தத் திருத்தலம் அடியேனின் பெயரால் அழைக்கப்படவேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார். அைத ஏற்றுக்கொண்ட மகாவிஷ்ணு, 'அப்படியே ஆகட்டும்' என அருளினார். அதன்படி, இன்றளவும் தோல் நோய்களைத் தீர்த்து அருளி வருகிறார் பெருமாள். இங்கே, மனித உருவில் காட்சி தரும் நந்திதேவரை கருவறையிலேயே தரிசிக்கலாம்.

    திருமாலின் இதயத்தில் இடம்பிடிக்க, செண்பக மரத்தடியில் ஸ்ரீமகாலட்சுமி தவம் செய்த தலம் என்பதால், இங்கு மரத்தடியில் ஸ்ரீசெண்பகவல்லித் தாயாராக, கிழக்குப் பார்த்தபடி, தவம் செய்யும் கோலத்தில் காட்சி தருகிறாள்.

    சுக்லபட்ச அஷ்டமி நாளில், இங்கு ஸ்ரீசூக்த ஹோமம் சிறப்புற நடைபெறுகிறது. தொடர்ந்து எட்டு சுக்லபட்ச அஷ்டமி நாட்களில் இந்தத் தலத்துக்கு வந்து,ஸ்ரீசூக்த ஹோமத்தில் பங்கேற்று,ஸ்ரீசெண்பகவல்லித் தாயாரை தரிசித்து வணங்கினால், தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்பது ஐதீகம். மேலும் திருமணத் தடை அகலும்; கஷ்டங்கள் யாவும் விலகும். சந்திர மற்றும் பித்ரு தோஷங்கள் நீங்கும்; லட்சுமி கடாட்சமாக வாழலாம் என்பது ஐதீகம்!

    மனித உருவில் காட்சி தரும் நந்திதேவரை வணங்கி வழிபட, நோய்கள் நீங்கப் பெறலாம்; இழந்த பதவியை அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இந்த ஆலய மூலஸ்தான கோபுரத்தில் நந்தியும், பிரம்மாவும் பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளனர். இது இக்கோவிலின் சிறப்புக்களில் ஒன்று. இக்கோவிலில் இறைவன் மேற்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

    பெருமாளின் 108 திவ்ய தேச தலங்களில் இந்த தலமும் ஒன்றாகும். இது 21 வது திவ்ய தேச கோவிலாக போற்றப்படுகிறது. இக்கோவில் நந்திபுரம், நாதன் கோவில், திருதந்திபுர விண்ணகரம் ஆகிய மற்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. இக்கோவில் தட்சிண ஜகந்நாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

    கோவில் தனிச்சிறப்பு :

    * பெருமாளுக்கு முன் நந்தி காட்சி தரும் தலம்

    * திருமாலின் திருமார்பில் திருமகள் உறையும் பாக்கியம் பெற்ற தலம்

    * திருமண தடை நீக்கும் தலம்

    சந்திர தோஷ பரிகார தலமாகவும் இக்கோவில் உள்ளது. இத்தல பெருமாள் கையில் வாள், வில், சக்கரம், தண்டாயுதம், சங்கு ஆகிய ஆயுதங்களுடன் அருள்பாலிக்கிறார். நந்தி சாப விமோசனம் பெற்ற தலம் என்பதால் சன்னதி, ஊர், தீர்த்தம் என அனைத்தும் நந்தியை முதன்மைப்படுத்தியே காணப்படும்.

    வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஆனி மாத பவித்ரோற்சவம், அட்சய திருதியை போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

    தாயாருக்கு பிரார்த்தனை:

    திருமணப் பிரார்த்தனைக்கு இது உகந்த தலமாகும். தாயாருக்கு 9 வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, பாசிப்பயறு சுண்டல் வைத்து பிரார்த்தித்து வர நினைத்த காரியம் கைகூடும்.

    திருமணத்தடை உள்ளவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர, குழந்தை பாக்கியம் பெற, வழக்குகளில் சாதகமான தீர்ப்பு பெற, நரம்பு சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் சிறந்த பலன் கிடைக்கும். வேண்டுதல் நிறைவேறியவர்கள் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் வழிபடுகின்றனர்.

    கோவில் விபரங்கள் :

    மூலவர் - நாதநாதன், விண்ணகரப் பெருமாள் யோக ஸ்ரீனிவாசன், தாயார் செண்பகவல்லி, உற்சவர் - ஜெகந்நாதன்

    தல விருட்சம் - செண்பக மரம்

    தீர்த்தம் - நந்தி தீர்த்த புஷ்கரணி

    கோலம் - வீற்றிருந்த திருக்கோலம்

    நந்திக்கே முதன்மை

    மூன்று நிலை ராஜகோபுரங்களுடன் அமைந்த இந்த தலத்தின் குளம் நந்தி தீர்த்தம் என்றும், விமானம் நந்தி விமானம் என்றும் அழைக்கப்படுகின்றன. மூலஸ்தானத்தில் சீனிவாசப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேர்ந்து காட்சி தருகிறார்.

    சிவன் கோவில்களில் மட்டுமே காணப்படும் நந்தி, இத்தலத்தில் மூலஸ்தானத்தின் முன் காட்சி தருகிறார். செண்பகவல்லி தாயாருக்கு தனி சந்நிதி உண்டு. இந்த தலத்தில் ஏழு தீர்த்தங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது சோழர்கள் தலைநகராக விளங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

    காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இந்த கோவில் நடை திறந்திருக்கும்.

    Next Story
    ×