என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- வெளிநாடு செல்லும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்.
- வெளிநாட்டு கல்லூரிகளின் கல்வி ஆண்டானது செப்டம்பர் மாதம் தொடங்குகிறது.
கடந்த வாரம் நமது மாணவர்கள், வெளிநாடுகளில் சென்று மருத்துவக்கல்வி கற்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களான 18-11-2021 புதிய தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகள், நீட் தகுதி மதிப்பெண் மற்றும் இன்னபிற விவரங்களை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, தற்போது மேலும் சில முக்கியமான விவரங்களை தெரிந்து கொள்வோம்.
வெளிநாடு செல்லும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்:
1) புதிய தேசிய மருத்துவ ஆணையத்தின் 18-11-2021 அரசாணைக்கு பின்பாக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கான முதல் தகுதியாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு இருந்த தகுதிச் சான்றிதழ் பெறும் நடைமுறை இதன்மூலம் நீக்கப்பட்டுள்ளது.
2) முதலில் மாணவர்கள் இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகள் மற்றும் அவ்வப்போது தரப்படும் அறிவிப்புகள் குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அதன் இணையதளமான www.nmc.org.in ல் சென்று இது குறித்து சரியான விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
3) மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் கல்லூரியானது உலக சுகாதார மையத்தின் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ளதா என்பதை அதன் இணையதளமான www.wdoms.org-ல் சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
4) மேலும் மேற்சொன்ன www.wdoms.org என்ற இணையதளத்திலேயே அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளின் இணையதள முகவரியும் குறிப்பிடப்பட்டிருக்கும். இதன்வழியே கல்லூரிகளைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இதன்மூலம் கல்லூரிகளின் போலியான இணையதள முகவரிகளை தவிர்த்து கல்லூரிகளைப் பற்றிய சரியான விவரங்களை பெற முடியும்.
5) முக்கியமாக இன்றைய நவீன தொழில்நுட்ப காலகட்டத்தில் சமூக ஊடகங்களில் ஏராளமான போலியான விளம்பரங்களும், தவறான செய்திகளும் பல்வேறு வழிகளில் பகிரப்படுகின்றன. அதனை அப்படியே நம்பாமல், அதன் உண்மைத் தன்மையை மேற்கண்ட தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் உலக சுகாதார மையத்தின் இணையதளங்களில் சரிபார்த்து கொள்ள வேண்டும்..
சரியான மருத்துவக் கல்வி /ஆலோசகர் நிறுவனத்தை தேர்வு செய்வது எப்படி?
*ஒரு மாணவர் வெளிநாடு சென்று மருத்துவக்கல்வி பயில வேண்டும் என்று முடிவெடுத்தால் முதலில் ஒரு சரியான கல்வி ஆலோசகரை / நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் எளிதாக தங்களுக்குத் தேவையான கல்லூரியை அடையாளம் காண இயலும்.
*முதலில் அந்த நிறுவனம் முறையாக அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும்.
*பின்னர் அவர்களுக்கு இந்த துறையில் உண்மையில் எத்தனை ஆண்டுகள் அனுபவம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
*மற்றும் மேற்படி நிறுவனத்திற்கும், வெளிநாடுகளில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கும் நேரடி தொடர்பு உள்ளதா என்பதை அவர்களின் கல்லூரிகளுடனான ஒப்பந்தங்களைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
*மேலும் முக்கியமாக மேற்கண்ட நிறுவனமானது ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு மட்டும் மாணவர்களை அனுப்புகிறார்களா? அல்லது பல்வேறு நாடுகளுக்கும் மாணவர்களை அனுப்புகிறார்களா? எனத் தெரிந்து கொள்வது மிக அவசியம். ஏனென்றால் ஒரு நாட்டிற்கு மட்டும் மாணவர்களை அனுப்பும் நிறுவனத்தார் அந்த ஒரு நாட்டினைப் பற்றி மட்டுமே உயர்வாக சொல்லுவார்கள். இது ஒரு சரியான வழிகாட்டுதலாக அமையாது.
*மாணவர்களின் 6 வருட கல்வி காலத்திற்கும் அந்த நிறுவனம் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறதா என்பதை முறையான ஒப்பந்தம் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
*நிறுவனமானது மாணவர்கள் எளிதில் அணுகும் வகையில் பல்வேறு கிளை அலுவலகங்களை கொண்டுள்ளதா அல்லது ஒரே இடத்தில் உள்ளதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
*மிக முக்கியமாக சரியான பதிவு செய்யப்பட்ட நிறுவனம் வழியாக மட்டுமே, மாணவர்கள் வெளிநாடு செல்ல வேண்டும். ஏற்கனவே அங்கு பயிலும் மாணவர்கள், தெரிந்த உறவினர் என்பது போன்ற நபர்கள் மூலம் செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அவ்வாறானவர்களால் ஏதேனும் அவசர காலங்களில் மாணவர்களுக்கு சரியாக உதவ இயலாது. உதாரணமாக தற்போது உக்ரைன் போர் சூழலில் அவ்வாறு சென்ற மாணவர்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகினர்.
கல்லூரி கட்டணங்கள் மற்றும் பிற செலவுகள் குறித்து:
1)மாணவர்கள் அவர்களின் கல்லூரி கட்டணத்தை நேரடியாக கல்லூரியில் சென்றோ அல்லது வங்கி மூலமாக ஸ்விப்ட்பரிவர்த்தனை வழியாகவோ நேரடியாக கல்லூரிக்கு செலுத்த வேண்டும். தற்போது எல்லா வங்கிகளும் இது மாதிரியான ஸ்விப்ட் பரிவர்த்தனையை செய்கின்றன. அனுப்பும் நிறுவனத்திடம் கல்லூரி கட்டணத்தை செலுத்துவதை தவிர்க்க வேண்டும்.
2)இந்தியாவில் செலுத்தும் அட்மிஷன், விசா, விமான கட்டணம் போன்ற செலவுகளுக்கு பணம் செலுத்திய பின் முறையாக ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.
3)ரஷ்யா போன்ற நாட்டில் கல்லூரி கட்டணமானது அவர்களின் கரன்சியானலும், மற்ற நாடுகளில் பெரும்பாலும் அமெரிக்க டாலரிலும், போலந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் ரூபல்லிவிலும் பெறப்படுகிறது. எனவே பண பரிமாற்றம் குறித்து இணையதளத்தில் சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
4)மிக முக்கியமாக வெளிநாடுகளில் எல்லாவற்றிலுமே இளங்கலை (எம்.பி.பி.எஸ், எம்.டி.) படிப்பிற்கு எந்தவிதமான ஸ்காலர் ஷிப்பும் கல்லூரிகளோ வெளிநா டுகளோ தருவதில்லை. அவ்வாறு கல்வி உதவித் தொகை தருகின்றன என பகிரப்படும் போலியான விவரங்களை மாணவர்கள் கவனமுடன் தவிர்த்து விட வேண்டும்.
5)எல்லாவற்றையும் விட முக்கியமாக 6 வருட கல்வி கட்டணத்தையும் மொத்தமாக முதலிலேயே கட்டினால் டிஸ்கவுண்ட் தரப்படும் என்பது போன்ற போலியான விளம்பரங்களை நம்ப வேண்டாம். அவ்வாறு எந்த வெளிநாட்டு கல்லூரி நிர்வாகமும் எப்போதுமே தெரிவித்தது இல்லை

வெளிநாட்டு கல்லூரிகளில் அட்மிஷன் முதல் கல்லூரி செல்வது வரை:
அட்மிஷன்:
முதலில் மாணவர்கள் அவர்களுடைய 12-ம் வகுப்பு மதிப்பெண் மற்றும் நீட் மதிப்பெண் சான்றிதழை கொண்டு விரும்பும் கல்லூரியை தேர்வு செய்து அட்மிஷனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)
அதன் பின்னர் முக்கியமான ஆவணமான கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) எடுத்தல் வேண்டும். தற்போதைய நடைமுறையில்எபாஸ்போர்ட் எடுப்பது மாணவர்களுக்கு மிக எளிதானது.பாஸ்போர்ட் எடுக்கத் தேவைப்படும் ஆவணங்கள்:
(a)மாணவனின் ஆதார் கார்டு
(b) மாணவனின் 10-ம் வகுப்பு சான்றிதழ்
(c)மாணவனின் பிறப்பு சான்றிதழ்
(d)பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1,500- மற்றும் விண்ணப்ப முகவர் கட்டணம் அதிக பட்சமாக ரூ.500 -. நமது தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 15 நாட்களுக்குள் பாஸ்போர்ட் கிடைத்து விடுவது குறிப்பிடத்தக்கது.
(e) பாஸ்போர்ட் கிடைத்தவுடன் மாணவர்கள் அட்மிஷனுக்கு அணுகிய நிறுவனத்தினரிடம் அதன் நகலை மாணவர்கள் விசா பெறும் பொருட்டு ஒப்படைக்க வேண்டும்.
விசா
மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி கற்க செல்லும் போது கண்டிப்பாக மாணவர்கள் விசா வில் மட்டும்தான் செல்ல வேண்டும். வேறு எளிமையான வழிகளான டூரிஸ்ட் விசா போன்றவை மூலம் செல்லக்கூடாது. தற்போது என்.எம்.சி. ஆனது மாணவர்களின் பாஸ்போர்ட் – ஐயும் சரிபார்ப்பு செய்கின்றது.
கிர்கிஸ் குடியரசு போன்ற சில நாடுகளில் மாணவர்களின் விசா ஒரே நாளில் மிக எளிமையாக கிடைக்கப் பெறுகிறது. இதன்மூலம் பாஸ்போர்ட் கிடைப்பதில் தாமதம் ஆனாலும் மாணவர்கள் அதனால் கல்லூரி செல்வது தடையாகாது.
1.பெரும்பாலான மற்ற நாடுகளில் விசா பெறுவதற்கான மிக முக்கிய ஆவணமான வெளிநாட்டு கல்லூரி மற்றும் அரசாங்கத்தால் தரப்படும் இன்விடேஷன் எனப்படும் கடிதம் பெறுவதற்கு குறைந்தது 7 நாட்கள் முதல் 1 மாதம் வரை ஆகிறது.
2.அதன்பின் விசா அலுவலகத்தில் தேவையான சான்றுகளுடன் சமர்ப்பித்தால் மாணவர் விசா கிடைப்பதற்கு அதிகபட்சம் 1 மாதத்திற்குள் விசா கிடைத்து விடும்.
3.பெரும்பாலும் கிர்கிஸ் குடியரசு, ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், கஜகிஸ்தான், அர்சீனியா போன்ற நாடுகளுக்கு VISA பெற தேவைப்படும் ஆவணங்கள்:
a) கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)
b) அட்மிஷன் லெட்டர்
c) இன்விடேஷன் (அந்த நாட்டு அரசாங்க அனுமதிக் கடிதம்)
d) குறிப்பிட்ட இரத்தப் பரிசோதனை
e) இன்சூரன்ஸ்
இதுதவிர தென் அமெரிக்கா, ஜார்ஜியா, போலந்து, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு சற்று விரிவான ஆவணங்களும், மாணவர்கள் விசா அலுவலகத்திற்கு நேரில் இன்டர்வியூ செல்ல வேண்டிய நடைமுறைகளும் உள்ளன.
சான்றிதழ் சரிபார்ப்பு:
மாணவர்கள் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக அவர்களின் பள்ளி சான்றிதழ்கள் இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் பல்வேறு சமயங்களில் போலி சான்றிதழ்கள் பற்றி செய்திகள் வந்துள்ளன. எனவே வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகள், இந்திய மாணவர்களின் சான்றிதழ்கள் இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் சரிபார்ப்பு செய்திருந்தால் மட்டுமே அதனை உண்மை என ஏற்றுக் கொள்கின்றன.
எனவே மாணவர்கள் அட்மிஷன் பெற்ற பின்பு அந்த நிறுவனத்தார் மூலமாகவே மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு வேலைகளை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
மொத்தத்தில் மேற்சொன்ன அட்மிஷன், பாஸ்போர்ட், சான்றிதழ் சரிபார்ப்பு, விசா போன்ற நடைமுறைகளை முடிப்பதற்கு குறைந்தபட்சம் 30 நாட்கள் முதல் அதிகபட்சம் 90 நாட்கள் வரை ஆகி விடும்.
வெளிநாட்டில் கல்லூரிகள் திறப்பு:
பெரும்பாலான வெளிநாட்டு கல்லூரிகளின் கல்வி ஆண்டானது செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. அக்டோபர் இறுதி வரை கல்லூரிகள், இந்திய மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கு அனுமதி அளிக்கின்றன.
கல்லூரி விடுமுறை:
பெரும்பாலும் ஜூலை, ஆகஸ்டு என்ற இரு மாதங்கள் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதில் பங்களாதேஷ் போன்ற ஒரு சில நாடுகள் ஜனவரி, மற்றும் ஜூன் என இரு முறைகளில் மாணவர் சேர்க்கை செய்கின்றன.
பல்வேறு நாடுகளின் கல்வி முறை, கல்லூரி விவரம், கல்விக் கடன், மாணவர்கள் கல்வி முடித்தபின் இந்தியாவில் பதிவு செய்வதற்கான தேர்வு முறை பற்றிய விவரங்களை வரும் வாரங்களில் பார்க்கலாம்.
மருத்துவக்கல்வி ஆலோசகர்
அனிதா காமராஜ்
செல்: 94980 88890
- வராகரின் பாதாளப் பிரவேசத்திற்கு சாட்சிபோல ஈசன் இத்தலத்தில் லிங்க உருவில் அருள்பாலிக்கிறார்.
- கற்களின் பழமை நம்மை ஆயிரம் வருடங்களுக்கு பின்னால் அழைத்துச் செல்கிறது.
படைத்தல் தொழிலை செய்யும் பிரம்மாவுக்கு நம்மால்தான் உலகம் இயங்குகிறது எனும் அகங்காரம் ஏற்பட்டது. அவர் தன் அருகே இருந்த விஷ்ணுவிடம், "உமக்குத் தெரியுமா, நீர் என்னதான் உயிர்களைக் காத்தாலும், நான் படைக்கவில்லையென்றால் உமக்கே வேலை இல்லை" என கேலி பேசினார்.
"பிரம்மனே, நீர் படைப்பது இருக்கட்டும். அந்த ஜீவனை காக்க வேண்டாமா? அதனுடைய சந்தோஷம் முக்கியமில்லையா? உன்னுடைய படைப்புகளுக்கு அழகு சேர்ப்பதே நான்தான். நான் காக்கவில்லையெனில் உன் படைப்புகள் அழிய வேண்டியதுதான். பிறகு உமக்கென்ன வேலை இருக்கிறது. அதனால் என் தொழில்தான் உயர்ந்தது. இதில் இருந்தே நான் தான் உயர்ந்தவன் என்பது எல்லோருக்கும் தெரியும் என்று ஈசனை விஷ்ணு எதிர்வாதம் செய்தார்.
அப்போது அவர்கள் மத்தியில் ஒளியொன்று ஊடுருவியது. சட்டென்று நெருப்பு பிழம்பாக மாறியது. அதாவது அனல் கக்கும் தூணாக ஈசன் வானையும், பூமியையும் ஊடுருவி சுழன்று நின்றார். பிரம்மாவும், விஷ்ணுவும் பிரமிப்போடு ஈசனை பார்த்தார்கள்.
எங்கெல்லாம் நான் எனும் அகங்காரம் முற்றுகிறதோ அங்கெல்லாம் ஞானப் பிழம்பாக ஈசன் வந்திறங்குவது, ஞானம் எனும் சிவத்திற்கு அந்நியமாக வேறெந்த வஸ்துவும் இல்லையெனக் காட்டும் தத்துவம்தான்.
"உங்களுக்குள் யார் பெரியவர் என்பதுதானே உங்களின் வாதம்? அதை நான் சொல்லலாமா?" என்று கேட்டார்.
"ஆகா... சிவனாரின் தீர்ப்புக்கு உலகமே கட்டுப்படுமே. நாங்கள் ஏற்கமாட்டோமா என்ன!" என இருவரும் சேர்ந்தே பதில் உரைத்தனர்.
"என் இந்த அக்னி ரூபமான உருவின் அடியையும், முடியையும் உங்கள் இருவரில் முதலில் யார் காண்கிறாரோ அவரே பெரியவர்" என்றார் ஈசன்.
இதைச் சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே பிரம்மா அன்னப்பறவையாக வானோக்கிப் பறந்தார். ஆதியில் வராக அவதாரம் எடுத்த பெருமாள், மீண்டும் வராகமாக பூமியை குடைந்தார். அப்படி ஹரியான விஷ்ணு, வராகராக பூமியை துவாரமிட்டு குடைந்த தலமே 'அரிதுவார மங்கலம்'. இந்தப் புராணம் திருவண்ணாமலை பாதாளேஸ்வரர் புராணத்தோடு தொடர்பு கொண்டது.
அண்ணாமலையில் அக்னி மலையாக சிவன் இருக்க, ஹரி எனும் அரி பூமியை குடைந்து ஈசனின் அடியை தேடிய தலம் இதுவேயாகும். இதற்குப் பிறகு பிரம்மாவாலும், விஷ்ணுவாலும் முடி-அடி காண இயலாது திகைத்து ஈசனையே சரணடைந்தனர்.
ஈசனின் அடியைக் காண பூமியைத் தோண்டி தோல்வியோடு மீண்டும் விஷ்ணு வெளிவந்த தலமும் இந்த அரித்துவாரமங்கலம்தான். இத்தலத்தை தேனொழுகும் தமிழில் நாயன்மார்கள் 'திரு அரதைப் பெரும்பாழி' என்றனர்.
சோழர் கால தொன்மையில் கோயில் இன்றும் மிளிர்கிறது. இது பஞ்ச ஆரண்யத் தலங்களுள் ஒன்று. கிழக்கு நோக்கி, ராஜகோபுரம் கம்பீரத்தோடு நிமிர்ந்திருக்கிறது. எதிரே திருக்குளம் அமைந்துள்ளது. கோயிலுக்குள் நுழைந்தவுடன் வலப்புற மண்டபத்தில் ஈசனும், அம்பாளும் தனித்தனி சன்னதிகளில் வீற்றிருக்கின்றனர்.
வராகரின் பாதாளப் பிரவேசத்திற்கு சாட்சிபோல ஈசன் இத்தலத்தில் லிங்க உருவில் அருள்பாலிக்கிறார். அதனாலேயே ஈசனுக்கு முன்பு பாழி என்றழைக்கப்படும் பள்ளம் உள்ளது. இதற்குள் தான் வராகராக திருமால் திருவடியை தேடிச் சென்றதாக ஐதீகம்.
ஏதோ ஒரு அரூபமான... விவரித்தலுக்கு அப்பாற்பட்ட சக்தியொன்று அங்கு மையமிட்டிருப்பதை பாதாளேஸ்வரர் சந்நதியில் உணரலாம். வராகர் அதல, விதல, சுதல, பாதாளம் என்று ஊடறுத்து சென்ற இடம் இதுதான். இத்தல ஈசனை சரணாகதி அடைந்தால் அண்ணாமலையானின் நிஜ தரிசனம் கிடைக்கும் என்பது தலம் கூறும் ரகசியம்.
அம்பாள், நேற்றுதான் திருமணம் முடித்த பெண் போல, பேரழகோடு நின்ற கோலத்தில் அருள்பரப்புகிறாள். அருளையும், ஆனந்தத்தையும் பொழியும் கண்கள், எப்போதும் மெல்லிய புன்னகையில் நம் கவலைகளை விரட்டும் அநாயாசத் தோற்றம்.
பெண்களில் அழகே இவள்தான் என்பதால், அலங்கார அம்மை என்று இத்தலத்தில் அழைக்கப்படுகிறாள். திருமணமாகாத பெண்கள் அம்பாளிடம் வேண்டிக்கொண்டு கல்யாண அலங்காரத்திற்கு தகுதியாகி வருவதை இங்கு வெகு சகஜமாக காணலாம்.
அம்பாளை தரிசித்து அருகேயே உள்ள வன்னிமர நிழலில் அமரலாம். மரத்தடியிலேயே பிள்ளையார் சிலைகள். தியானம் செய்ய சிறந்த இடமாக இது விளங்குகிறது. கோயிலின் பிரகாரத்தை சுற்றி வந்தால் தெற்கே தட்சிணா மூர்த்தியையும், மேற்கே லிங்கோத்பவரையும், வடக்கே பிரம்மாவையும் தரிசிக்கலாம். வலம் வரும் போதே சோழர்களின் கலைநுணுக்கத்தை பார்க்கலாம்.
கற்களின் பழமை நம்மை ஆயிரம் வருடங்களுக்கு பின்னால் அழைத்துச் செல்கிறது. ராஜகோபுரத்தின் இடப்பக்கத்தில் உள்ள மண்டபத்தில், நீண்ட மேடைபோன்ற அமைப்பில் பிள்ளையார், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சூரியன், சந்திரன், சுந்தரர், சம்பந்தர், மற்றும் பைர வரை தரிசிக்கலாம்.
அதே போல பாதாளேஸ்வரர் சந்நதிக்கு அருகில் கஜலட்சுமியையும், மாரியம்மனையும் தரிசிக்கலாம். அம்பாள் சந்நதிக்கும், இறைவன் சந்நதிக்கும் இடையே இருக்கும் சுவரில் வராகம் போன்ற புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. மேற்குப் பிரகாரத்தில் அம்மன் சந்நதிக்கும், சுவாமி சந்நதிக்கும் இடையில் சோமாஸ்கந்த மூர்த்தியின் சந்நதி அமைந்துள்ளது.
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இந்தக் கோயிலை வலம் வந்து வணங்கி எழுந்தால் அதிக பலன்கள் கிடைக்கும். கும்பகோணத்தி்ல இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் இத்தலம் உள்ளது. தஞ்சாவூரில் இருந்தும் செல்லலாம்.
- சூரியன் இத்தலத்தில் வழிபட்டு அதிக ஒளியைப் பெற்றான்.
- கும்பகோணத்தில் இருந்து திருப்புறம்புயம் செல்லும் ரோட்டில் 8 கி.மீ., தூரத்தில் இன்னம்பூர் ஆலயம் உள்ளது.
பள்ளிகள், கல்லூரிகளில் தற்போது மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாணவ-மாணவிகளை கல்விக்கூடங்களில் சேர்க்கும் முன்பு கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோவிலில் வழிபாடு செய்தால், குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம்.
ஏனெனில் இன்னம்பூர் ஆலய தல வரலாறு அதற்கு ஏற்ப அமைந்து உள்ளது. சோழமன்னனின் கணக்கரான சுதன்மன் ஒருமுறை காட்டிய கணக்கில் சந்தேகம் ஏற்பட்டது.
உரிய கணக்கை சரியாகக் காட்டும்படி சோழ மன்னன் கடுமையான உத்தரவிட்டான். உடனே சுதன்மன் சரியான கணக்கு காட்டினான். என்றாலும் தன் மீது பழி வந்துவிட்டதே என எண்ணிய அவர், சிவனை வேண்டினார். உடனே சிவன் சுதன்மனின் வடிவத்தில் மன்னனிடம் சென்று சந்தேகத்தை போக்கினார்.
சுதன்மன் சற்றுநேரம் கழித்து கணக்குடன் செல்லவே, "ஏற்கனவே காட்டிய கணக்கை மீண்டும் ஏன் காட்ட வருகிறீர்?'' என சோழ மன்னன் கேட்டான். அதன்பிறகு தான் தனக்குப் பதிலாக இறைவனே வந்து கணக்கு காட்டிய விபரத்தை மன்னனிடம் எடுத்துரைத்தார். வருத்தப்பட்ட மன்னன், சுதன்மனிடம் மன்னிப்பு கேட்டதுடன், ஈசனுக்கு கோயிலும் எழுப்பினான்.
சுவாமிக்கு 'எழுத்தறிநாதர், அட்சரபுரீஸ்வரர்' என்ற திருநாமம் ஏற்பட்டது. 'அட்சரம்' என்றால் 'எழுத்து'. இது சுயம்புலிங்கம் என்பதால் 'தான்தோன்றியீசர்' என்றும் பெயர் உள்ளது. அகத்தியருக்கு இறைவன் இலக்கணம் உபதேசித்த தலம் இது. அம்பாள் கொந்தார் குழலம்மை என்னும் சுகந்த குந்தலாம்பாளுக்கு தனி சன்னதி உள்ளது. நித்திய கல்யாணி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. ஆக இரண்டு அம்பாள் சன்னதிகள் உள்ளன.
சூரியன் இத்தலத்தில் வழிபட்டு அதிக ஒளியைப் பெற்றான். அவனுக்கு 'இனன்' என்றும் பெயர் உண்டு. இறைவனை சூரியன் நம்பி வழிபட்டதால் 'இனன் நம்பு ஊர்' என்று பெயர் ஏற்பட்டு பிறகு அது 'இன்னம்பூர்' என்று மாறிவிட்டது. பள்ளியில் சேர உள்ள குழந்தைகள் பள்ளியில் சேருவதற்கு முன்னதாக இங்கு வந்து அர்ச்சனை செய்து கொள்ளலாம். இங்கு நெல்லில் எழுத பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு செம்பருத்தி பூவை தட்டில் பரப்பி எழுத பயிற்சி தரப்படுகிறது. பேச்சுத்திறமை இல்லாதவர்கள், படிப்பறிவு இல்லாதவர்களுக்கு நாக்கில் நெல் கொண்டு எழுதப்படுகிறது.
இதனால் அறிவுக்கூர்மை பெறும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியத்துக்காக இங்குள்ள அர்த்தநாரீஸ்வரருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்கின்றனர்.
இங்குள்ள கஜப்பிருஷ்ட விமானம் யானை படுத்திருப்பது போன்று உள்ளது. இதில் ஐந்து கலசங்கள் உள்ளன. இவை சிருஷ்டி (படைத்தல்), ஸ்திதி (காத்தல்), சம்ஹாரம் (அழித்தல்), திரோபவம் (மறைத்தல்), அனுக்கிரகம் (அருளல்) என்றும் ஐந்து தொழில்களை இறைவன் செய்வதைக் குறிக்கிறது. இந்த ஆலயம் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
- தாயிடமிருந்து மகளுக்கு வந்த அரிய குணம் இயற்கையை நேசிப்பது.
- நூலைப் படைத்த ராக்கேல், மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்தார்.
பலர் தடைகளைச் செய்த போதிலும் விடாது போராடி பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களையும் உயிரினங்களையும் காத்த ஒரு அதிசயப் பெண்மணி ராக்கேல் கார்சன். அமெரிக்க ஜனாதிபதி கென்னடியையே ஒரு கமிட்டி அமைக்க வைத்து தனது கூற்றை நியாயப்படுத்திய இந்த அமெரிக்கப் பெண்மணி அதிகம் அறியப்படாதவர். ஆனால் அரிய செயலைச் செய்தவர். இவரைப் பற்றித் தெரிந்து கொள்வது இயற்கை ஆர்வலர்களுக்கு உத்வேகம் ஊட்டும்.
பிறப்பும் இளமையும்: அமெரிக்காவில் பென்சில்வேனியாவில் 27-5-1907-ல் ராக்கேல் கார்சன் சாதாரணமான நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு டிராவலிங் சேல்ஸ்மென். ஆகவே பெரும்பாலும் வீட்டில் இருக்க மாட்டார். தாயோ ஒரு இசைப் பாடகி. மகளின் புத்தி கூர்மையைக் கண்டு வியந்த தாய், தனது பெண்ணை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். பணம் பெரிய பிரச்சனையாக இருந்தது. தங்களுக்குச் சொந்தமாக இருந்த நிலத்தை விற்றார். படிப்புக்கு வழி வகுத்தார்.
தாயிடமிருந்து மகளுக்கு வந்த அரிய குணம் இயற்கையை நேசிப்பது. இயற்கைக்கு ஊறு விளைவிப்போரை அவரால் சிறுவயதிலிருந்தே பொறுக்க முடியாது. பொங்கி எழுவார். இது பின்னால் உலக மக்களுக்குப் பெரிய நன்மையைச் செய்தது!
இளம் வயது எழுத்தாளர்: எட்டாம் வயதிலேயே ராக்கேல் சின்னச் சின்னக் கதைகளை எழுத ஆரம்பித்தார். அந்தக் காலத்தில் நமது அம்புலிமாமா போல செயிண்ட் நிக்கலஸ் என்ற மாதப் பத்திரிகை ஒன்று குழந்தைகளுக்காக அமெரிக்காவில் வெளி வந்து கொண்டிருந்தது. அதை குடும்பத்தினர் படிப்பது வழக்கம்.
1918, மே மாதம் தனது 11ஆம் வயதில் ராக்கேல் ஒரு கதையை எழுதி அந்தப் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தார். அது நான்கு மாதங்கள் கழித்து பத்திரிகையில் வெளியானதோடு சன்மானமாக பத்து டாலரும் கிடைத்தது.
இரண்டே வருடங்களில் அவரது கதைகள் அனைவராலும் விரும்பிப் படிக்கப்படும் கதைகளாக அமைந்தன. இதனால் மகிழ்ந்த பத்திரிகை நிர்வாகம் அவரது ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு செண்ட் அளிக்க முன் வந்தது.
உயிரியலாளர்: 27-ம் வயதில் கல்லூரிப் படிப்பை ராக்கேல் முடித்த போது அவரது தந்தை 71-வது வயதில் இறந்தார்.
கடல் வாழ் உயிரினம் பற்றிய உயிரியலாளராக அவர் திகழ்ந்தார். கடலைப் பற்றிய அனைத்தும் அவருக்கு அத்துபடி. ரொமான்ஸ் அண்டர் தி வாட்டர் (Romance Under the Water) என்று மீன்களைப் பற்றி அவர் எழுதிய வானொலி உரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அவர் புகழ் எங்கும் பரவத் தொடங்கியது.
அரசு வேலை ஒன்றும் அவருக்குக் கிடைத்தது. ஆகவே பணக் கவலை ஒழிந்தது. திருமணத்தைப் பற்றி அவர் சிந்திக்கவே இல்லை. தனியாகவே இறுதி வரை வாழ்ந்தார்.
அப்போது இரண்டாம் உலக மகாயுத்தத்தில் பேர்ல் ஹார்பர் மீது நடந்த தாக்குதலினால் அமெரிக்கர்கள் அனைவரும் அதில் கவனம் செலுத்தவே 1941-ல் வெளியான அண்டர் தி சீ விண்ட்(under the sea Wind) என்ற அவரது புத்தகத்தைப் பற்றி யாரும் கவனிக்கவில்லை ஆனால் அடுத்து 1950-ல் "சீ அரவுண்ட் அஸ்" (Sea Around Us) என்ற அவரது புத்தகம் உலகளாவிய விதத்தில் கவனத்தை ஈர்த்தது. ஆறே மாதங்களில் இரண்டரை லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. அத்துடன் பல விருதுகளும் மெடல்களும் அவரைத் தேடி வந்தன.
இயற்கையை உற்றுக் கவனித்து வந்த ராக்கேல் அதற்கு நாசம் விளைவிப்போரை எளிதில் இனம் கண்டார். மனிதர்கள் இயற்கையை அழிக்கலாமா, கூடாது என்று முடிவெடுத்த அவர் சைலண்ட் ஸ்பிரிங் - மவுன நீரூற்று - (Silent Spring) என்ற நூலை எழுதி செப்டம்பர் 1962-ல் வெளியிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் கென்னடி நூலைப் படித்து வியந்தார். உலக மக்கள் அனைவரின் பார்வையையும் இது திருப்பியது. பெருத்த சர்ச்சையையும் தோற்றுவித்தது.
ரசாயன உரத்தின் கேடு:
அப்போது டிடிடி (DDT) என்ற உரம் வயலில் பயன்படுத்தப்பட ஆரம்பித்தது. இதைப் பற்றிக் கவலை அடைந்த ராக்கேல் அதை எதிர்த்து தீவிர பிரசாரத்தில் இறங்கினார்.

ச.நாகராஜன்
1939-ல் பால் முல்லர் என்பவர் DDT என்ற இரசாயனத்தை வயலில் பயிர்களை அழிக்கும் பூச்சிகளைக் கொல்லப் பயன்படுத்தலாம் என்றார். இதை ஏற்ற அமெரிக்க ராணுவம் 1943-ல் நேப்பிள்ஸ் நகரில் இதைத் தெளித்தது. அதனால் அந்த நகரில் பத்து லட்சம் பேர் தொற்று வியாதியினால் பீடிக்கப்பட்டனர்.
1948-ல் டி.டி.டி.ஐக் கண்டு பிடித்த முல்லருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. கொசுக்களை ஒழிக்க டி.டி.டி. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் தெளிக்கப்பட்டது.
1959-ல் 40000 டன்கள் டி.டி.டி. அமெரிக்கா முழுவதும் தெளிக்கப்பட அமெரிக்காவே கெமிக்கலினால் பாதிக்கப்பட ஆரம்பித்தது. கொதித்து எழுந்தார் ராக்கேல்.
சைலண்ட் ஸ்பிரிங்: சைலண்ட் ஸ்பிரிங் நூலில் அவர், அமெரிக்காவின் நடுவில் இருப்பதாக ஒரு கற்பனை நகரத்தைப் படைத்தார்.
நகரமே நாசமானது - கெமிக்கலினால். ஆடு, மாடுகள் அழிந்தன. மக்கள் மடிந்தனர். பறவைகள் ஒழிந்தன. தேனிக்கள் முற்றிலுமாகக் காணாமல் போனது. வயல்கள் வாடின. ஏரி, குளம், ஆறுகள் வறண்டன. மீன்கள் அழிந்தன. கறிகாய்களையே காணோம். மருத்துவர்கள் காரணம் தெரியாமல் விழித்தனர். மொத்தத்தில் சர்வ நாசம். இதற்குக் காரணம் மக்களே. கெமிக்கல்களை அவர்கள் ஆதரித்ததே இதற்குக் காரணம். இப்படி நூலைப் படைத்த ராக்கேல், மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்தார். டி.டி.டி. பற்றி ஏதாவது செய்யுங்கள் என்றார்.
இந்தப் புத்தகம் எழுந்ததே அவர் இளமையில் கண்ட ஒரு காட்சியினால் தான்!
ராக்கேல் சிறுமியாக இருந்த போது அவரது படுக்கை அறை ஜன்னல் வழியே ஒரு மைல் தூரத்தில் உள்ள குதிரைகளை வெட்டித் தள்ளும் ஒரு கசாப்புத் தொழிற்சாலையைப் பார்த்த வண்ணம் இருப்பார். அதிலிருந்த புகைபோக்கியில் இருந்து எழும் புகை வானத்தை மறைக்கும்.
மாலை நேரத்தில் வெட்டப்பட்ட உபயோகமற்ற மாமிசக் குவியலில் இருந்து எழும் நாற்றமும், குதிரை மாமிசத்தினால செய்யப்பட்ட உரத்தின் நாற்றமும் கிராமம் வரை வந்து அனைவரையும் வாந்தி எடுக்கச் செய்யும். ஆகவே மாலை நேரங்களில் கிராம மக்கள் வீடுகளின் கதவுகளைத் திறப்பதே இல்லை.
இந்த அவலத்தினால் ராக்கேலின் மனம் பெரிதும் பாதிக்கப்பட்டதில் வியப்பில்லை.இதனால் தான் கற்பனை நகரத்தை தனது நூலான மவுன நீரூற்றில் உருவாக்கி அதனால் பாதிக்கப்பட்டு அழிவை நோக்கிய நகரம் பற்றிக் கூறி அமெரிக்கப் பெண்மணிகளின் கவனத்தை அவர் ஈர்த்தார். அனைத்துப் பெண்மணிகளும் அவருக்கு ஆதரவாகப் பொங்கி எழுந்தனர்.
அமெரிக்காவின் தேசீயச் சின்னமான கழுகு ஒரு லட்சத்திலிருந்து 500 ஜோடிகளாகக் குறைந்தது ஏன்? ரசாயன உரத்தினால் தான். அபாயகரமான உரம் அதன் முட்டைகளைக் குஞ்சு பொறிக்க விடாமல் பொறிப்பதற்கு முன் முட்டைகளை உடைத்து விட்டதால் இந்த அபாயம் ஏற்பட்டது!
இதையெல்லாம் உணர்ந்ததால் உலக மக்களிடையேயும் ஒரு பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டது;
கென்னடி அமைத்த குழு:
புத்தகத்தின் தாக்கத்தை உணர்ந்த அமெரிக்க அரசும் விழித்தெழுந்தது. ஜனாதிபதி கென்னடியின் தலைமையிலான ஒரு விசேஷ குழு இதை ஆராய ஆரம்பித்தது.
1962, ஆகஸ்ட் மாதம் அவர்கள் அமெரிக்க ஜனாதிபதியான கென்னடியிடம், அரசு டி.டி.டி. பற்றி ஏதேனும் செய்யப் போகிறதா இல்லையா என்று கேட்டனர்.
அவர் உடனடியாக இப்படி பதிலளித்தார்:
"ஆம்.செய்யப் போகிறோம். குறிப்பாக மிஸ் கார்சனின் புத்தகத்தால் தான். ஆனால் இதை அவர்கள் (கமிட்டி) பரிசீலித்து வருகிறார்கள்".
கென்னடியின் அறிவியல் குழு 1963 மே மாதம் 15-ந் தேதி தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது.
"சைலண்ட் ஸ்பிரிங் வெளிவரும் வரை பொதுவாக உரங்களில் விஷத் தனமை இருப்பது பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்தது. ஆனால் சுற்றுப்புறச்சூழல் கேட்டை ரசாயன உரங்களைக் கட்டுப்படுத்துவன் மூலமே தடுத்து நிறுத்த முடியும்."
வணிக நோக்கில் இது வணிகர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் ரசாயனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் விடாது போராடிய கார்சனுக்கு மக்களின் ஆதரவினால் வெற்றியே கிடைத்தது!
1972-ல் அமெரிக்க அரசு விவசாயத்தில் டி.டி.டி. உபயோகத்தைத் தடை செய்தது.என்றாலும் கூட மலேரியாவைத் தடுப்பதற்கு டி.டி.டி. அனுமதிக்கப்பட்டது. இதையும் ராக்கேல் எதிர்த்தார்.
இதய நோயால் பாதிப்பு: இதற்கிடையில் அவரது உடல் நிலை இதய நோய்களுள் ஒன்றான ஆஞ்ஜினா வியாதியால் பாதிக்கப்பட்டது. அவருக்கு மார்பகப் புற்று நோயும் வந்து சேர்ந்தது. 1964-ல் கான்சர் உடல் முழுவதிலும் பரவி விடவே அவர் தலைமயிர் எல்லாம் உதிர்ந்து தலை வழுக்கையானது. எலும்புகள் பலஹீனமாக ஆகி விடவே அவர் வீல் சேரிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 1964 மார்ச் மாதம் கான்ஸர் கல்லீரலைத் தாக்கி அவரை வெகுவாகப் பாதித்தது.
இது போன்ற உடல் நிலையில் தான் அவர் அமெரிக்க கமிட்டி முன்னர் ஆஜராகி தன் தரப்பு வாதங்களை முன் வைத்தார்.
டி.டி.டி. போன்ற ரசாயன உரங்கள் முதலில் பூச்சிகளைக் கொல்லும். பின்னர் உணவுச் சங்கிலித் தொடரினுள் புகுந்து உணவையே நச்சாக்கும். அதனால் பறவைகள், மீன் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்தொழியும். ஏனெனில் அவை இப்படிப்பட்ட நச்சு உணவுகளை உட்கொள்ள வேண்டிய சுற்றுப்புறச் சூழ்நிலை கேடு உருவாவதால் தான்! ஆகவே இதற்கு ஒரு முடிவு கட்டுங்கள் என்றார் அவர். 'மக்கள் விஞ்ஞானி' என்ற பெயருடன் புதுமையாக மலர்ந்த அவர் மக்களுக்காக அரிய உண்மைகளைப் புள்ளி விவரங்களுடன் தொகுத்து வழங்கினார்.
மறைவு: தனது வியாதி பற்றி அவர் யாரிடமும் சொல்லவில்லை. ஆகவே அவரது கான்சர் பற்றி இறுதி வரை மக்களுக்குத் தெரியவில்லை.
1964-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி அவர் காலமானார். அவரது அஸ்தியின் ஒரு பகுதி மேரிலாந்தில் அவரது தாயாரின் கல்லறையில் புதைக்கப்பட்டது. இன்னொரு பகுதி ஷீப்ஸ்காட் பே என்ற இடத்தில் தெளிக்கப்பட்டது.
இன்று சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்கும் அம்சங்கள் முன்பை விட ஏராளமாகப் பெருகி விட்டன. ஆனால் ராக்கேல் கார்சன் போல அயராது பாடுபட்டு அந்த அம்சங்களை ஒழிக்க ஆள் தான் இல்லை.
'தி நன் ஆப் நேச்சர்' - இயற்கையின் கன்யாஸ்தீரி என்று அன்புடன் அழைக்கப்பட்ட கார்சனின் புகழ் என்றும் இலங்கும்!
ராக்கேலின் செய்தி: ராக்கேல் கார்சன் உலக மக்களுக்குக் கூறியது ஒன்றே ஒன்று தான் - "மனித குலமும் உயிரினங்களும் நீடித்து இருக்க, இயற்கையை நேசியுங்கள், சுற்றுப்புறச் சூழலை மாசு படுத்தாதீர்கள்!"
தொடர்புக்கு:- snagarajans@yahoo.com
- மன அழுத்தம், கட்டுப்பாடற்ற உணர்ச்சிகளால் சில நச்சுகளை நாமே உருவாக்கிக் கொள்கிறோம்.
- சிலவகையான வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்தி உடலில் நச்சுகளை உருவாக்குகின்றன.
"சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு."
-குறள் (நீத்தார் பெருமை-27)
பொருள்: சுவை, பார்வை, தொடுதல், கேட்டல், முகர்தல் என்று கூறப்படுகின்ற ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில்தான் உள்ளது உலகம்.
மனிதர்களுக்குச் சுவை, பார்வை, தொடுதல், கேட்டல், மற்றும் முகர்தல் போன்ற ஐம்புலன்கள் உண்டு என்பது நமக்குத் தெரிந்ததே. இந்த ஐந்து புலன்களும்தான் மனிதர்களை மனிதர்களாக அடையாளம் காண்பிக்கின்றன. இவை அனைத்தும் மூளையுடன் தொடர்புடையவை. மேலும், இவை மூளையின் கட்டளையை ஏற்றுச் செயல்படக்கூடியவை. பகல் முழுவதும் நாம் பல வேலைகளை உடல் மற்றும் மூளையைப் பயன்படுத்திச் செய்கின்றோம்.
இதனால் உடலிலும், மூளையிலும் பல கழிவுகள் சேர்கின்றன. இந்தக் கழிவுகளை உடல் உடனுக்குடன் அகற்றி விடுகிறது. ஆனால் மூளை அந்தக் கழிவுகளைச் சேமித்து வைத்து, இரவு நேரங்களில் நாம் அயர்ந்து உறங்கும்போது வெளியேற்றி மறு நாள் காலை சுறு சுறுப்புடன் செயலாற்ற உதவுகிறது. இதை "மூளை நச்சு வெளியேற்றம்" (Brain Detoxification) என்று அழைக்கின்றோம். இதைச் செய்வது மூளையின் கழிவுகளை அகற்றும் கழிவு மேலாண்மை அமைப்பு (கிளிம்பேடிக் சிஸ்டம்) ஆகும்.
உடலில் நச்சுகள் ஏற்படுவதற்கான சில காரணங்கள்?
தொழில்நுட்ப வளர்ச்சியால், மிகுந்த காற்று மாசு, நிலத்தடி நீர் மாசு உள்ளிட்ட பல தவிர்க்க முடியாத கேடுகளை மனித குலம் எதிர்கொண்டு வருகிறது. இதன் காரணத்தால் காற்றில் கலந்திருக்கும் உலோகப் பொருட்களான சல்பர் டை ஆக்சைடு, கார்பன், நைட்ரஜன் உள்ளிட்டவைகளைச் சுவாசிக்க நேரிடுகிறது. இதனால் உடலில் நச்சுத்தன்மைகள் உண்டாகின்றன. அதேபோல, தூய்மையற்ற நீர் மற்றும் உணவு, தொழிற்சாலை மற்றும் ஊர்திகளின் புகை, புகையிலைப் பயன்பாடு, அதிகப்படியான ஆல்கஹால் அருந்துவது, போதைப் பொருட்கள் பயன்படுத்துவது உள்ளிட்ட பல காரணங்களாலும் நச்சுகள் உடலினுள் தேங்குகின்றன. பாக்டீரியா, ஈஸ்ட் மற்றும் வைரஸ்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் தொற்று நோய்கள், நம் உடலில் நச்சுகள் சேரக் காரணமாகின்றன.
சில நச்சுகளை நாமே உற்பத்தி செய்கிறோமா?
ஆம்! மன அழுத்தம், எதிர்மறை எண்ணங்கள் மற்றும் கட்டுப்பாடற்ற உணர்ச்சிகளால் சில நச்சுகளை நாமே உருவாக்கிக் கொள்கிறோம். இவை சிலவகையான வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்தி உடலில் நச்சுகளை உருவாக்குகின்றன. இந்த நச்சுகளை வெளியேற்ற உடலில் சில அமைப்புகள் உள்ளன.
நச்சு நீக்கத்தை உடல் எவ்வாறு மேற்கொள்கிறது?
நச்சு நீக்கம் என்பது உடலில் இருக்கும் செல்களில் இருந்து நச்சுகளை அகற்றிச் தூய்மைப்படுத்தும் செயலாகும். இந்தச் செயலை மூளை, உடல் உறுப்புக்களைப் பயன்படுத்திச் செய்து முடிக்கிறது. இந்தச் செயல் உடலில் சரியாக நடைபெறவில்லை என்றால், கடுமையான உடல்நலச் சிக்கல்கள் ஏற்படும். பயனுள்ள நச்சு நீக்கம் செல் புதுப்பித்தலுக்கு வழிவகை செய்து, உடலுக்கு நிறைய நலம், ஆற்றல், மற்றும் நீண்ட ஆயுளைத் தருகிறது.

மரு.அ.வேணி
உடலின் நச்சு நீக்க அமைப்புகள் யாவை?
உடலில் கழிவுகளை அகற்றப் பல அமைப்புகள் உள்ளன. தோல், கல்லீரல், நுரையீரல், பெருங்குடல் மற்றும் சிறுநீரகங்கள் ஆகியவை கழிவுகளை அகற்றும் பணிகளைச் செய்கின்றன. இப்படி மனித உடல் தன்னைத்தானே நச்சு நீக்கும் திறனைக் கொண்டுள்ளது. இருப்பினும், இயற்கையான நச்சுத்தன்மை அதிகப்படியாகச் சேரும்போது, அந்த நச்சுக்களைப் போதுமான அளவில் நம் உடலால் அகற்ற முடியாமல் போகிறது. அப்போதுதான் நோய்கள் வரத்தொடங்குகின்றன. இப்படி ரத்தம், பெருங்குடல் மற்றும் நிணநீர் போன்றவற்றில் சேரும் நச்சுகளை நீக்கி உடலின் சமநிலையைச் சரிசெய்வதில் நச்சு நீக்க அமைப்புகள் முதற்பங்கு வகிக்கின்றன. மூளையில் உள்ள நச்சு நீக்க அமைப்பு சில சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளது.
மூளையில் உருவாகும் நச்சுகள்:
பீட்டா-அமைலாய்டு என்ற நச்சுப் பொருள்தான் அல்சைமர் எனப்படும் மூளை மழுங்கு நோய்க்குக் காரணம். இந்த நச்சு இரவு நேரத்தில் வெளியேற்றப்படுகிறது. இதே போல் பலவிதமான வளர்சிதை மாற்றத்தினால் ஏற்படும் கழிவுகள் தொடர்ந்து தேங்கிக் கொண்டே இருக்கும்போது, நம் மூளைக்கு அவை அனைத்தும் நச்சுப்பொருட்கள் தான். இந்த நச்சுப்பொருட்கள், அகற்றப்படாவிட்டால் மறதி நோய் (Dementia), நடுக்குவாத நோய் (Parkinson Disease), மனச்சோர்வு (Depression), முடிவெடுப்பதில் குறைபாடு என மேலும் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. மூளையின் கழிவுகள் அகற்றப்படுவதற்குக் கீழே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
மூளையின் கழிவுகளை அகற்ற நாம் பின்பற்ற வேண்டியவைகள்.!
ஆழ்ந்த இரவு உறக்கம் (REM Sleep):
மூளை தன்னைத்தானே சுத்தம் செய்துகொள்வதற்கு ஆழ்ந்த உறக்கம் அவசியம். உறக்கத்தைத் தள்ளிப்போட்டு 6 மாதங்களுக்கு மேலாக வேலை செய்து கொண்டே இருக்கும்போது மூளைத் தொடர்பான நோய்கள் சிறுவயதிலேயே வரக்கூடும்.
அதிக வெளிச்சம் உள்ள தொலைக்காட்சி, அலைபேசி, கணினி, மடிக்கணினி ஆகியவற்றின் பயன்பாட்டை உறங்குவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்பு நிறுத்த வேண்டும்.
இரவு உணவிற்கும், உறங்குவதற்கும் இடையே இரண்டு மணி நேர இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், செரிமானம் பற்றிய எச்சரிக்கை மூளைக்குச் சென்று கொண்டே இருக்கும். இதனைத் தவிர்க்க ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் இரவு உணவை முடித்துக் கொள்ள வேண்டும்.
தேநீர், காபியை மாலை 6 மணிக்குப் பிறகு தவிர்த்துக் கொள்வது ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கும். அலைபேசியைத் தூங்கும்போது 10 அடி தொலைவு தள்ளி வைக்க வேண்டும். அலைபேசியிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சானது மூளையை வெகுவாகப் பாதிக்கும். எனவே தலைமாட்டிலேயே அலைபேசியை வைத்துக் கொண்டு தூங்கும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
நோன்பிருப்பது மூளையில் இருந்து கழிவுகளை அகற்றுவதற்கு உதவிபுரிகிறது. உணவில் மஞ்சள், இஞ்சி, பூண்டு மற்றும் பச்சைக் காய்கறிகளைக் குறிப்பாகக் கீரைகள், பீட்ரூட் அதிகம் பயன்படுத்துவதால் மூளையின் கழிவுகள் எளிதாக அகற்றப்படும். இந்த "மூளைக்கான உணவுகள்" ப்ரீ ரேடிக்கல் வீணாவதை எதிர்த்துப் போராடி மூளையைப் பாதுகாக்கின்றன.
நார்ச்சத்து நிறைந்த பல்வேறு காய்கறிகள், கீரைகள், பழங்கள் மற்றும் தானியங்கள் போன்றவை மூளையில் இருந்து கன உலோகங்களை மற்றும் தீங்கு விளைவிக்கும் புரதப் பொருட்களை அகற்ற உதவுகிறது. மூளை மற்றும் ரத்தத்தில் பாதரசத்தின் அளவைக் குறைக்க நார்ச்சத்து உதவுகிறது. எனவே நம் மூளை மற்றும் உடலின் ஒட்டு மொத்த நலனுக்கு இந்த நார்ச்சத்து இன்றியமையாதது என்பதை உணர்ந்து அன்றாடம் உணவில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
உணவில் "வைட்டமின் சி" சத்து அதிகமுடைய நெல்லிக்கனி, எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா, கிவி, தக்காளி மற்றும் ஒவ்வொரு நாளும் ஒரு தேக்கரண்டி தேன் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது நல்லது. இதில் ஆண்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளதால் மூளையில் உள்ள செல்கள் சேதமடைவதைத் தவிர்க்க உதவுகின்றன.
"வைட்டமின் டி" சூரிய ஒளியில் இருந்து இயற்கையாகக் கிடைக்கக்கூடிய ஒன்றுதான். நாளும் 15 நிமிடங்களாவது சூரிய வெளிச்சம் நம் மீது படுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த வைட்டமின் ''டி'' நமது ஒட்டு மொத்த மூளை மற்றும் நரம்பியலின் நலனுக்கு இன்றியமையாதது.
நாளும் உடற்பயிற்சி செய்வதால் மூளையின் கழிவுகள் அகற்றப்பட்டு அதன் நலன் பேணிப் பாதுகாக்கப்படும். நாளும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி (யோகா, தியானம், மூச்சுப் பயிற்சிகள்) செய்வது நல்லது.
மேற்கூறப்பட்டுள்ள அனைத்தும் கடினமான செயலா? நம் மூளையின் நலனுக்காக நாம் நமக்கு இதனைச் செய்துகொள்ளாமல் வேறு எவர் வந்து செய்வார்? உடல் தூய்மையாகவும், மனநிறைவோடும் இருப்பதுதான் நல்வாழ்வின் அடையாளம்.
மூளையின் கழிவுகளை அகற்றுவதன் வாயிலாகத் தேவையற்ற மன அழுத்தங்கள் இன்றி, மனத்தைப் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்வதன் மூலம், நலமிக்க வாழ்க்கையை வாழ முடியும். மூளையின் கழிவுகளை அகற்றுவோம். முழு நலத்துடன் வாழ்வோம்.
போன்: 75980-01010, 80564-01010.
- சந்திரன் பலம் குறைந்தால் படிப்பில் ஆர்வம் குறையும்.
- சிறிய வேலை செய்து கடுமையாக உழைத்தவர்கள் போல் பாவனை காட்டுவார்கள்.
சூரியனுக்கு அடுத்ததாக நமது கண்ணிற்கு புலப்படும் இயற்கை சக்தி சந்திரன். ஒரு ஜாதகத்தில் உடல்காரகன், மாத்ருகாரகன் மற்றும் மனோகாரகனாகிய சந்திரன் நல்ல பலம் பெற்று இருந்தால் மட்டுமே வாழ்வில் நடக்கும் அனைத்து சுப, அசுப நிகழ்வுகளை எதிர்கொண்டு கடக்கும் மனோதிடம் உண்டாகும்.
ஒருவர் அளவிற்கு அதிகமான இன்பத்தில் இருந்தாலும் தாங்க முடியாத துயரத்தில் வாழ்ந்தாலும் சந்திரனே காரணமாக அமைகிறது. ஒரு ஜாதகத்தில் குற்றம் மற்றும் குறைகளை மதி எனும் சந்திரனுக்கு பரிகாரம் செய்வதன் மூலம் நீக்க முடியும். இனி பனிரெண்டு ராசிக்கும் சந்திர தோஷம் நீக்கும் பரிகாரங்களைக் காணலாம்.
மேஷம்
மேஷ ராசிக்கு சந்திரன் நான்காம் அதிபதி. சந்திரன் ஆட்சி உச்சம், சுயசாரம் அல்லது வளர்பிறை சந்திரனாக இருப்பது நல்லது.சுய ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்றால் சிறந்த கல்வியாளராக நன்கு படித்தவராக இருப்பார்கள். படிப்பிற்கு ஏற்ற வேலை, தொழில் மூலம் அமையும் சுக போக வாழ்க்கை உண்டு. சிறந்த கல்வியாளராக நன்கு படித்தவராக இருப்பார்கள். தாய், தாய் வழி உறவுகளின் அன்பும், அரவணைப்பும் இருக்கும். பதினாறு வகைச் செல்வங்களும் நிரம்பி இருக்கும். ஆடம்பரமான சொத்துக்கள் நிறைந்தவர். விவசாயமும், ரியல் எஸ்டேட், கால்நடை வளர்ப்பில் ஆர்வம் அதிகம். சிறிய முயற்சியில் அதிக வருமானம் கிடைக்கும். உழைக்காத வருமானம் உண்டு.
முன்னோர்களின் சொத்துகளை வம்சாவளியாக பயன்படுத்துவார்கள். அரச பதவி, அரசு உத்தியோகம், அரசு வகை ஆதரவு உண்டு. சந்திரன் பலம் குறைந்தால் படிப்பில் ஆர்வம் குறையும். ஏற்ற இறக்கமான வருமானம் உண்டாகும். சொத்துக்கள் சேராது அல்லது சொத்துக்கள் பயன்படாது. தாயின் ஆதரவு குறையும்.
பரிகாரம்: திங்கட்கிழமை பால் அபிசேகம் செய்து பெண் தெய்வங்களை வழிபட வேண்டும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்கு சந்திரன் முயற்சி ஸ்தான அதிபதி. சகாய ஸ்தான அதிபதி. சந்திரன் ஆட்சி உச்சம், சுயசாரம் அல்லது வளர்பிறை சந்திரனாக இருப்பது நல்லது.
வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும் வழங்கக் கூடிய உப ஜெய ஸ்தான அதிபதி. சந்திரன் சுப வலுப்பெற்றால் நல்ல ஞாபக சக்தி இருக்கும்.தொட்டது துலங்கும். திட்டுமிட்டு செயல்படுவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். ஆதாயம் இல்லாத செயலைச் செய்ய விரும்பாதவர்கள். எல்லா விசயமும் வேகமாகவும் தனக்கு சாதகமாகவும் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிகுதியாக இருக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டு. அண்டை அயலார் ஆதரவு உண்டு.
தானும் மகிழ்ச்சியாக இருப்பார். தன்னை சார்ந்தவர்களையும் சந்தோசமாக வைத்துக் கொள்வார்கள். சந்திரன் பலம் குறைந்தால் திட்டமிட்டு செயல்படத் தெரியாது. உடன் பிறந்தவர்களின் அன்பு அனுசரனை குறையும். ஒரு இடத்தில் நிலையாக வசிக்க முடியாது. அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்வார்கள். அண்டை அயலாரால் எல்லைத் தகராறு இருந்து கொண்டே இருக்கும்.
பரிகாரம்: திங்கட்கிழமை சுக்ர ஓரையில் வடக்கு நோக்கிய பெண் தெய்வங்களை வழிபட வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு சந்திரன் தன ஸ்தான அதிபதி. தன ஸ்தான அதிபதி என்பதால் சந்திரன் ஆட்சி உச்சம், சுயசாரம் அல்லது வளர்பிறை சந்திரனாக இருப்பது நல்லது.
சுய ஜாதகத்தில் சந்திரன் பலமானால் தொடர்ச்சியான வருமானம் உண்டாகும். பேச்சை மூலதனமாகக் கொண்ட தொழிலில் வல்லவர்கள். கல்லையும் காசாக மாற்றும் வித்தை தெரிந்தவர்கள்.குடும்ப உறுப்பினர்கள் இவர்களின் பேச்சிற்கு கட்டுப்படுவார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப பேசி காரியம் சாதிப்பார்கள்.கடினமாக உழைக்க விரும்ப மாட்டார்கள். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறி அதன் மூலம் ஆதாயம் தேடுவார்கள். சிறிய வேலை செய்து கடுமையாக உழைத்தவர்கள் போல் பாவனை காட்டுவார்கள். சந்திரன் பலம் குறைந்தால் நிலையான வருமானம் இருக்காது. குடும்ப உறவுகளின் அன்பு, ஆதரவு குறையும்.எதனையும் மிகைப்படுத்தலாக கூறுவார்கள்கள்.யாராவது எதிர்த்தால் அமைதியாவார்கள். கெஞ்சினால் மிஞ்சுவார்கள். மிஞ்சினால் கெஞ்சுவார்கள்.
பரிகாரம்: திங்கட்கிழமை குளத்து மீன்களுக்கு பொரியிட வேண்டும்.
கடகம்
கடக ராசிக்கு சூரியன் தனம், வாக்கு, குடும்ப கடக ராசிக்கு சந்திரன் ராசி அதிபதி சுய ஜாதகத்தில் சந்திரன் ஆட்சி உச்சம், சுயசாரம் அல்லது வளர்பிறை சந்திரனாக பலம் பெற்றால் அழகான தோற்றப் பொலிவும் தாய் அன்பும் நிறைந்தவர்கள்.நினைத்த செயலை நினைத்த மாத்திரத்தில் செய்து முடிக்கும் மனப்பான்மை உள்ளவர்கள். சுறுசுறுப்பாக இருப்பார்கள். சுய முயற்சியால் வெற்றிக்கனியை சுவைப்பவர்கள்.
சுக வாழ்க்கையில் நாட்டம் உண்டு. கற்பனை சக்தி, சாத்வீக குணம், எதிர்காலம் பற்றிய சிந்தனை மிகுதியாக இருக்கும். கதை, கட்டுரை எழுதுவதில் திறமைசாலிகள். பிறரை எளிதில் கவரும் குணம் இருக்கும். ஆன்மீகம், இல்லறம் என சிறப்பான வாழ்க்கை அமையும். சுய ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்தால் வெளியே தைரியமாக இருந்தாலும் உள்ளத்தில் பயமே மேலோங்கி நிற்கும். தன்னையும் நம்ப மாட்டார்கள். பிறரையும் நம்ப மாட்டார்கள்.சந்தேக குணம் மிகுதியாக இருக்கும். குறுகிய மனப்பான்மை அதிகம் உள்ளவர்கள்.
பரிகாரம்: பவுர்ணமி காலங்களில் சிவ சக்தியை வழிபட வேண்டும்.

சிம்மம்
சிம்ம ராசிக்கு சந்திரன் விரயாதிபதி என்பதால் சந்திரன் வலுக்கக் கூடாது. ஆட்சி உச்சம், சுயசாரம் என சந்திரன் பலம் பெற்றால் தேவையற்ற விரயங்கள், வைத்தியச் செலவு இருக்கும். வருமானம் உயர, உயர சுகம் தேடுவதில் அதிக சிந்தனை இருப்பதால் பெரும் முதலீடுள்ள தொழிலில் இருப்பவர்கள் கடுமையான தோல்வியை சந்திக்கிறார்கள். ஆரோக்கியமான உடலும் தெளிவான சிந்தனையும் கொண்ட ஒருவரே வாழ்வில் வெற்றி பெற முடியும். மன சஞ்சலத்தால் இவர்களுக்கு ஆரோக்கிய கேடு, கற்பனை பயம் அதிகமாகும். சிலர் தலை மறைவு வாழ்க்கை வாழ்வார்கள். வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பு.
பரிகாரம்: பவுர்ணமி அன்று தயிர் சாதம் தானம் வழங்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்கு சந்திரன் லாபாதிபதி. சுய ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்றால் ஆட்சி உச்சம், சுயசாரம் அல்லது வளர்பிறை சந்திரனாக பலம் பெற்றால் உழைக்காத வருமானம் உண்டு. தொட்டது துலங்கும். வாழ்வின் முன்னேற்றம், தொழில் தொடர்பான சிந்தனை, சுய முயற்சி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். ஒரு காரியத்தில் இறங்கினால் முடிக்காமல் ஓயமாட்டார்கள். வெளிநாட்டு வியாபாரம், வேலை, பயணம் சார்ந்த தொழில் மூலம் வருமானம் உண்டாகும். வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே இவர்களைத் தேடி வரும்.கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் திறமையாக பயன்படுத்திக் கொள்வார்கள் வழக்குகளில் வெற்றி உண்டாகும். சிலருக்கு வலுவான இருதார அமைப்பை ஏற்படுத்தும். சுய ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்தால் மனத்தின்வேகத்திற்கு ஏற்றவாறு இவரது செயல்களில் வேகம் இருக்காது.காரணமற்ற கவலைகளால் வாழ்க்கையை தொலைப்பவர்கள்.
பரிகாரம்: திங்கட் கிழமை வெண்பொங்கல் படைத்து அம்பிகையை வழிபட வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்கு சந்திரன் தொழில் ஸ்தான அதிபதி. சந்திரன் சுப வலிமை பெற்றவர்கள் ஆட்சி உச்சம், சுயசாரம் அல்லது வளர்பிறை சந்திரனாக இருந்தால் பின்னால் நடக்கப் போவதை முன் கூட்டியே யூகிக்கும் ஆற்றல் உண்டு. அதீத சுய சிந்தனை உண்டு. ஆழ்ந்த புலமையும், தொழில் ஞானமும், தெளிவான உள்ளுணர்வும், மன நிறைவும் நிரம்பியவர்கள்.முறையான திட்டமிடுதல் மூலம் அனைத்து விதமான நன்மைகளையும் அடைவார்கள். தனது சிந்திக்கும் திறனால், உள்ளுணர்வால் தொழிலில், வாழ்வில் ஏற்படப் போகும் அனைத்து ஏற்ற இறக்கங்களையும் உணர்ந்து செயல்படுவார்கள். தொழிலுக்கு அரச ஆதரவு உண்டு.
அரசியல் ஆர்வமும், பொது அறிவும் நிரம்பியவர்கள். சுய ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்தால் நிலையான, நிரந்தரமான தொழில் அமையாது. உறவுகளின் உழைப்பை, ஆதரவை சார்ந்தே வாழ்வார்கள்.
பரிகாரம்: பவுர்ணமி திதியில் மகாலட்சுமியை வழிபட வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு சந்திரன் பாதகாதிபதி என்பதால் எந்த நிலையிலும் சந்திரன் வலுக்கக் கூடாது. உண்மைக்கு தலை வணங்குவார்கள். கடவுள் மற்றும் பக்தி மார்க்கம் முன்னோர்கள் வழிபாட்டில் ஆர்வம் அதிகம். தெளிவான சிந்தனை, உயர்ந்த லட்சியம் இருக்கும். பிறருக்கு அடி பணிய மாட்டார்கள். மனதிற்குள் மேதாவித் தனம் இருக்கும். பல காரியங்களை கற்பனையில் செய்வார்கள். இருந்தாலும் சந்திர திசை, புத்தி காலங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும். பூர்வீகத்தில் வசிக்கக்கூடாது. வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பு.
பரிகாரம்: திங்கட்கிழமை செவ்வாய் ஓரையில் சிவனை வழிபட வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்கு சந்திரன் அஷ்டமாதிபதி. அஷ்டமாதிபதி வலுக்கக் கூடாது. சந்திர தசை, புத்தி காலங்களில் விபத்து, சர்ஜரி, வம்பு, வழக்கு உண்டு. வெகுசிலர் விபரீத ராஜ யோகத்தை அனுபவிப்பார்கள். வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். சுய தொழில் புரிபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பரிகாரம்: திங்கட்கிழமை குரு ஓரையில் சித்தர்களை வழிபட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்கு சந்திரன் ஏழாமதிபதி. மாரகாதிபதி.நல்ல அழகான வாழ்க்கைத் துணை அமையும். நிறைய நண்பர்கள் இருப்பார்கள். புதுப்புது நண்பர்கள் கிடைத்துக் கொண்டே இருப்பார்கள்.இவர்கள் முதலீடு அதிகம்இல்லாத சுய தொழில் செய்யலாம். இவர்களை வாடிக்கையாளர்கள் அதிகம் தேடித் தேடி வருவார்கள். சிறு சில்லரை வணிகம் செய்தால் பெரும் லாபம் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்யக் கூடாது. சந்திரன் பாதகாதிபதி என்பதால் நல்லவர்களையும், கெட்டவர்களையும் எளிதில் இனம் காணத் தெரியாது. இளகிய மனத்தால் எல்லோரையும் எளிதில் நம்பி கொடுத்து விட்டு பின் யோசிப்பார்கள். சந்திர தசை புத்தி காலங்களில் ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பாதிப்பு இருக்கும்.
பரிகாரம்: சங்கடஹர சதுர்த்தி நாட்களில் விரதம் இருந்து விநாயகரை அருகம்புல் சாற்றி வழிபடவும்.

கும்பம்
கும்ப ராசிக்கு சந்திரன் ஆறாம் அதிபதி என்பதால் சுய ஜாதகத்தில் சந்திரன் வலுக்கக் கூடாது.சந்திர தசை, புக்தி காலங்களில் மன சஞ்சலம் மிகுதியாக இருக்கும். சுயமாக சிந்திக்கும் திறனும், முடிவெடுக்கும் திறனும் இல்லாதவர்கள். கிடைக்கும் சந்தர்ப்பத்தையும், வாய்ப்பையும் பயன்படுத்த தெரியாதவர்கள். பிறரால் ஏமாற்றப்படுவார்கள்.
சதா எதையாவது நினைத்து கவலைப்பட்டு நோயை வளர்ப்பவர்கள்.நோய்க்கு வைத்தியம் செய்து கடன் உருவாகும்.மனக் கட்டுப்பாடு இல்லாதவர்கள். அதிக முதலீட்டில் சொந்த தொழில் செய்யக் கூடாது. அடிமைத் தொழிலே சிறப்பு.
பரிகாரம்: தினமும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையான நித்திய பிரதோஷ வேளையில் லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.
மீனம்
மீனம் ராசிக்கு சந்திரன் ஐந்தாம் அதிபதி என்பதால் சுய ஜாதகத்தில் சந்திரன் வலுப்பெறுவது மிகச் சிறப்பு. ஆழ்மன சிந்தனை நிறைந்தவர்கள். ஒரு இடத்தில் நிலையாக இருக்காமல் சுறுசுறுப்பாக இயங்கி புதிய முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். பூர்வீகச் சொத்தால் மிகுதியான பலன் உண்டு. குல தெய்வ அனுகிரகம் நிறைந்தவர்கள். பிள்ளைகளால் பெற்றோரும், பெற்றோர்களால் பிள்ளைகளும் பயன் பெறுவார்கள். எதையும் வரும் முன் அறியும் தீர்க்க தரிசிகள். தொழில் தொடர்பான ஆலோசனை வழங்குவதில் மதி மந்திரியாக திகழ்வார்கள். பகல் இரவு பாராமல் உழைத்து அனைத்து வசதிகளையும் தேடிக்கொள்பவர்கள்.
சுய ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்தால் புத்தி, சிந்தனை ஒரே மாதிரி இருக்காது.சந்திரன் வளர்பிறை, தேய்பிறை என வளர்வதும், பிறகு தேய்வதுமாக இருப்பதால் இவர்களது வாழ்க்கை வளர்வதும் தேய்வதுமாக இருக்கும்.
பரிகாரம்: தினமும் சந்திர ஓரையில் சிவ வழிபாடு செய்து வரவும்.
ஒருவரின் சுய ஜாதகத்தில் சந்திரனின் நிலைப்பாடு மிக மிக முக்கியம். மனம் சார்ந்த போராட்டத்தை சந்திக்காத மனிதர்கள் இருப்பது அரிது. ஒருவர் எந்த ராசி லக்னமாக இருந்தாலும் சந்திரன் பலம் குறைந்தால் மன அழுத்தம், மனம் சார்ந்த பிரச்சினைகள் இருக்கும். சந்திரனை சமன்படுத்த உரிய வழிபாட்டு முறைகளை பயன்படுத்துவது நல்லது.
- கடந்த காலம் சில பாடங்களை நமக்கு கற்றுத் தரலாம்.
- சிலருக்கு எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது போல் இருக்கும்.
கடுமையான கால கட்டத்தினை தாண்டுவது என்பது அனைவருக்கும் சவாலானது. அதே நேரத்தில் ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாய் தெரியும். அப்போது விடா முயற்சி, ஆக்கப்பூர்வமான எண்ணங்களுடன். அவையே கதி என்று இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
அவை:
* அனைத்து மகிழ்வற்ற சூழ்நிலைகளையும் மாற்றவும் முடியும். மாறவும் செய்யும்.
* மன எண்ண ஓட்டங்கள் மற்றும் தவிப்பினை நீக்க சூழ்நிலையினை மாற்றுங்கள். நண்பர்களோடு வெளியில் செல்லலாம்.
* அழகிய இயற்கை சூழலில் இருக்கலாம். நகைச்சுவை சினிமா பார்க்கலாம்.
* ஏற்கனவே நீங்கள் தீயதினை வென்று விட்டீர்கள் என்பதால் நடப்பது ஒரு சிறு அனுபவம் அவ்வளவே.
* பிறரது தவறான எண்ணங்கள், பேச்சுக்கள் இவற்றிற்கு நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? அதனை அவர்களிடமே திருப்பி கொடுத்து விடுங்கள். அவர்களே அதனை வைத்து கவலை படட்டும்.
* நமக்கு மகிழ்ச்சி தேவை. நகைச்சுவை தேவை. * நம் மீது நாம் அன்பாக, கருணையாக இருக்க வேண்டும்.
* எந்த சூழ்நிலையிலும் நாம் நன்றி சொல்ல ஏதோ ஒன்றினை பிரபஞ்சம் நமக்கு அளித்து கொண்டுதான் இருக்கின்றது.
ஒரு நாளில் எந்நேரமும் மனதினில் ஏதோ ஒன்றினைப் பற்றி யோசிப்பதும் குழப்புவதுமாக இருப்பவரா நீங்கள்?
* முதலில் உங்களுடன் நீங்கள் பேசும் முறையினை மாற்றிக் கொள்ளுங்கள்.
* அதிகமாக உங்களுக்கு நீங்களே அழிவுப்பூர்வமான சிந்தனைகளை கொடுக்காதீர்கள்.
* என்னால் முடியாது? என்றால் படிக்க முடியாது, திறமையாக பேச முடியாது என உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொண்டு இருந்தீர்கள் என்றால் உங்கள் மூளை அதனையே நிஜம் என பதிவாக்கி அதன்படியே செயல்படத் தொடங்கி விடும்.
* கடந்த கால கசப்பான நினைவுகளில் மூழ்கி அதில் இருந்து வெளி வராமல் உள்ளுக்குள்ளேயே புழுங்கி, புழுங்கி தவிப்பவர்கள் ஏராளம். இதனால் நிகழ்காலம் என்ற உணர்வே இல்லாமல் போய் விடும்.
* கடந்த காலத்தின் ஏதேனும் நிகழ்வுகளை நம்மால் மாற்ற முடியுமா? ஒரு நொடி முன்னால் நிகழ்ந்ததனைக் கூட திரும்ப பெற முடியாது.
* கடந்த காலம் சில பாடங்களை நமக்கு கற்றுத் தரலாம். அந்த பாடங்கள் மூலம் இனி நாம் தவறு செய்யாத நிலையினை உருவாக்கலாம்.

* ஒவ்வொரு நொடியும் நிகழ் காலத்தில் மட்டுமே இருப்பது எளிதானது. சிறந்த பலனை அளிக்க வல்லது.
* நம்மை விடாது துரத்தும் சில எண்ண ஒட்டங்களை நம்மால் கட்டுப்படுத்தவே முடியவில்லையா? உங்கள் எண்ணங்களை பொறுமையாய், முழுமையாய் ஒரு பேப்பரில் எழுதுங்கள். பின் அதனை கிழித்து எறிந்து விடுங்கள்.
* அதிகம் யோசிப்பதற்கு பயம் ஒரு காரணம் என்பர். இப்படி நடந்து விடுமோ? அப்படி நடந்து விடுமோ? என்ற பயம் மனிதனை அரித்து விடுகின்றது. இதில் இருந்து விடுபடுவது எப்படி? பயத்தில் இருந்து விடுபட வேண்டும். சிலருக்கு பல்லி, கரப்பான் பூச்சி கூட பயம்தான். அதற்கு தீர்வு, வீட்டில் அவை இல்லாமல் செய்து விடுவதுதான். இது ஒரு சிறிய உதாரணம்தான். இதைப் போலத் தான் சிறிதோ, பெரிதோ பயத்தில் இருந்து வெளிவர முயற்சிகள் செய்து தீர்வு காண வேண்டும்.
ஒன்றினை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். அதிகம் யோசித்துக் கொண்டு இருப்பவர்கள் பிரச்சனைகளைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் ஆவர். ஆகவே தீர்வுகளை பற்றி அளவாக, அமைதியாக யோசிக்கலாம், எழுதலாம்.
* என்னால் நல்ல திறமைசாலியாக வாழ முடியும்'என்ற நம்பிக்கையினை மனதில் ஆழபதிய வைத்துக் கொள்ளலாம்.
* சிலருக்கு எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது போல் இருக்கும். இரவு தூங்காமல் இருந்து மறுநாள் இப்படி இருப்பது ஒரு சாதாரண நிகழ்வு எனலாம். ஆனால் எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் எனத் தோன்றுவது கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்றாகின்றது.
* சிலருக்கு எப்போதுமே சோர்வாக இருக்கக் கூடும். இது பெண்களுக்கு சற்று கூடுதலாகவே இருக்கும். * கவனம் செலுத்த முடியாமை * தலை சுற்றுதல்
* உடம்பு வலி * மூட்டு வலி * தலை வலி * தொண்டை கட்டு போன்ற காரணங்களால் அதிக சோர்வு, தூக்கம் ஏற்படலாம்.
தைராய்டு குறைபாடு:
* தசைகள் வலுவின்மை * சோர்வு *ஜில்லென இருப்பது * மூட்டுகள், தசைகளில் வலி * இருதய துடிப்பு சற்று வேகம் குறைந்து இருப்பது. * வியர்வை குறைவு * மலச்சிக்கல் * மனச்சோர்வு * வறண்ட சருமம் * முகம் வீங்கி இருத்தல் * கரகரப்பான குரல் * மாதவிடாய் காலத்தில் அதிக உதிர போக்கு போன்ற காரணங்கள் தைராய்டு குறைபாட்டால் இருக்கும். இதன் காரணமாகவும் எப்பொழுதும் தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கலாம்.
ரத்த சோகை: உடலில் சுறுசுறுப்பின்றி இருப்பர். சக்தி இராது எப்பொதும் படுத்துக்கொண்டே இருப்பார்கள். வெளிறிய சருமம். முறையற்ற இருதய துடிப்பு போன்றவை இருக்கும்.
தசை நார்வலி: சிலர் உடல் முழுவதும் வலி என்பர். சோர்வால் இரவில் தூக்கமின்மை இருக்கும். இதனால் மனச்சோர்வு, படபடப்பு, தலைவலி, உடல் இறுக்கம் என இருக்கும்.
அலர்ஜி: இருமல், தும்மல், மூக்கில் நீர் வடிதல் ஆகிய அறிகுறிகள் இருக்கும். கண்களில் அரிப்பு இருக்கலாம்.
புளு போன்ற வைரஸ் பாதிப்புகள்: இத்தகு பாதிப்பு நேரங்களில் அதிக தூக்கம் தேவைப்படும். ஆர்த்ரைடிஸ், நீரிழிவு நோய், இருதய நோய் போன்ற நோய்களின் பாதிப்புகள் காரணமாக இருக்கலாம்.
உணவில் சத்து மற்றும் வைட்டமின்கள் குறைபாடும் ஒரு காரணமாக இருக்கலாம்.
உடலில் நீர் சத்து குறைவாக இருப்பது: அதிக தாகம், சிறுநீர் அளவு குறைதல். அடர்ந்த சிறுநீர், வறண்ட சருமம், தலை சுற்றல். இவை அறிகுறிகளாக தெரியும். உடலில் நீர் சத்து குறைவது சற்று ஆபத்தானதே.
மன அழுத்தம்: போதிய அளவு ஆக்சிஜன் இல்லாமல் மூச்சு வாங்கும். வயிறு பிரச்சனை, பசியின்மை இருக்கும். ஊட்டச் சத்து சரிவர உறிஞ்சப்படாது இருக்கலாம். படபடப்பு ஏற்படும்.
மனச்சோர்வு, கவலை இவையும் இத்தகு பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
மாதவிடாய் காலங்களில் வயிற்று பிரட்டல், தலைவலி, முதுகு வலி, எரிச்சல் காரணமாக சிலர் படுத்துக் கொண்டே இருப்பர்.
கர்ப்ப காலத்தில் ரத்த சோகை, ஹார் மோன் மாறுபாடுகள் இதே பிரச்சனையைத் தரும்.
சரி இதையெல்லாம் திடீரென இப்பொழுது எழுத என்ன காரணம்?
கோடை வந்து விட்டது. அதிக வெப்பம் நம்மை பல விதங்களில் வாட்டும். ஆனால் பல உடல் நல பிரச்சனைகளை நாம் கோடை பிரச்சனை என்று எண்ணி கவனக்குறைவாக இருந்து விடக்கூடாது. கோடைக்கான கவனமும் தேவை:
அன்றாடம் இருமுறை குளியுங்கள்.
2½ லிட்டர் நீர் அருந்துங்கள்.
காபி, டீ, இவற்றினை காலை ஒரு வேளையோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.
பழைய சாதம், நீராகாரம் இவற்றினை எடுத்துக் கொள்ளுங்கள்! நீர் மோர் நிறைய குடியுங்கள்!
காரம், புளி இவற்றினை வெகுவாய் குறைத்து விடுங்கள்! கொளுத்தும் வெயிலில் வெளியில் செல்வதனை தவிர்த்து விடுங்கள்!
வெயிலோ, மழையோ கண்டிப்பாய் பத்து நிமிடமாவது தவறாமல் தியானம் செய்யுங்கள்!
- சிரஞ்சீவியோடு நான் நடித்த முதல் படம் அது.
- ஒரு நாள் ஒரு காட்சி. அந்த காட்சியில் தலையில் மண்பானையில் தண்ணீரை நான் சுமந்து செல்ல வேண்டும்.
ரெடி...
ஸ்டார்ட்...
ஆக்ஷன்... என்று சொன்னதும் கேமராவை ஒளிப்பதிவாளர் சுழல விடுவார். நாம் நடிக்க வேண்டும். அவ்வளவு தான். ஆனால் ஆக்ஷன் என்றதும் ஒளிப்பதிவாளர் கல்லெடுத்து என் தலையை நோக்கி எறிந்து மண்டையை உடைத்தால் எப்படி இருந்திருக்கும்?
அப்படியும் ஒரு சம்பவத்தையும் சந்தித்தேன். முட்டா மேஸ்திரி என்ற தெலுங்கு படம். நானும், நடிகர் சிரஞ்சீவியும் ஜோடி. இந்த படத்தில் ரோஜாவும் உண்டு. லாரன்ஸ் மாஸ்டர் குரூப் டான்சராக இருந்தார்.
சிரஞ்சீவியோடு நான் நடித்த முதல் படம் அது. படம் முழுக்க கலகலப்பாக, ஜாலியாக இருக்கும். என் பெயர் பஜ்ஜிக்கடை புஜ்ஜம்மா. அதற்கு ஏற்றாற்போல சுறு சுறுப்பாகவும், மிடுக்கென்றும் பேசும் பாத்திரம் எனக்கு. இதற்கு நேர் மாறானது ஹீரோ சிரஞ்சீவியின் பாத்திரம். அவர் சாதாரண கூலிக்காரராக வருவார். மிகவும் அமைதியாக இருப்பார். அப்படி பட்டவர் எப்படி அரசியல்வாதியாக மாறி முதல்-மந்திரி பதவி வரை செல்கிறார் என்பதை விவரிக்கும் படம்.
ஷூட்டிங் நல்லாத்தான் போய்க்கொண்டு இருந்தது. ஒரு நாள் ஒரு காட்சி. அந்த காட்சியில் தலையில் மண்பானையில் தண்ணீரை நான் சுமந்து செல்ல வேண்டும். நான் போகும் வழியில் மிகப்பெரிய கலவரம் நடக்கும். எல்லோரும் அங்கும், இங்கும் ஓடுவார்கள். ஊரே அல்லோலப்படும். கல் எறிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வார்கள். கற்கள் ஆங்காங்கே பறக்கும். அப்போது என் தலையில் இருக்கும் பானையில் ஒரு கல் வந்து விழ வேண்டும். அதில் பானை உடைந்து தண்ணீர் கொட்ட வேண்டும். இது தான் காட்சி.
டைரக்டர் கோதண்ட ராமரெட்டி சார். காட்சியை தெளிவாக விளக்கி சொன்னார். பானையின் மீது கல் வந்து விழுந்ததும் நீங்கள் பானையை விட்டு விடுங்கள். அது கீழே விழுந்து உடையட்டும். ஏனென்றால் தலை மீது இருந்தே உடைந்தால் தண்ணீர் உடலில் சிந்தும் என்று கூறி இருந்தார்.
காட்சியை விளக்கியதும் திட்டமிட்டப்படி பானையில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு வந்தார்கள். அதை என் தலையில் தூக்கி வைத்தாகி விட்டது. எதிரே நின்று கல்லை எடுத்து எறிவது யார் என்ற கேள்வி வந்தது. அப்போது ஒருவரும் அதற்கு தயாரில்லை. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் பயம். எறியும் கல் குறி தவறி மீனா மேடம் தலையில் விழுந்தால்.... அய்யய்யோ நான் எறிய மாட்டேன் என்று ஒவ்வொருவரும் ஜகா வாங்கினார்கள்.
அதை பார்த்ததும் ஒளிப்பதிவாளர் வேறு வழியில்லாமல் விடுங்கப்பா நானே எறிகிறேன் என்று சொல்லிவிட்டு உதவியாளர் கையில் கேமராவை கொடுத்து விட்டு எறிவதற்கு தயாரானார்.

கூர்மையான கருங்கல் ஜல்லியை கையில் வைத்துக் கொண்டு என் தலை மீது இருந்த பானையை குறி பார்த்தபடி ஸ்டார்ட் கேமரா, ஆக்ஷன் என்றதும் கல்லை வீசினார். அந்த கல் எல்லோரும் எதிர் பார்த்தபடியே குறி தவறி பானையில் விழுவதற்கு பதில் என் தலையை பதம் பார்த்தது. நடிப்பதில் முழு கவனமாக இருந்த நான் என்ன தலை வலிக்கிறது என்று எதுவும் புரியாமல் டக்கென்று பானையை கீழே விட்டு விட்டேன். தலையில் கையை வைத்தால் ரத்தம் கொட்டுகிறது. தலையில் இருந்து கை வழியாக ரத்தம் வழிந்தது. அதை பார்த்ததும் மொத்த படக்குழுவும் அய்யயோ.. அய்யயோ என்று பதறிவிட்டது. உடனே அங்கிருந்து அருகில் உள்ள ஒரு சிறிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்கள்.
காயத்தை பார்த்த டாக்டர் ரத்தத்தை துடைத்து விட்டு காயம் ரொம்ப ஆழமாக இருக்கிறது. தையல் போட வேண்டியது அவசியம் என்றார்.
அதையடுத்து 5 தையல்கள் போடப்பட்டது. அடிபட்ட நேரமோ உணவு இடைவேளை விட வேண்டிய நேரம். இந்த ஒரு ஷாட்டையும் முடித்து விட்டு உணவு இடைவேளை விடலாம் என்று டைரக்டர் நினைத்து இருந்த நேரத்தில் தான் இப்படி ஆகி விட்டது. தலையில் தையல் போட்டு பிளாஸ்டரும் ஒட்டப்பட்டது.
எனக்கோ தலையில் பட்ட காயத்தின் வலி ஒரு பக்கம். இன்னொரு பக்கம் மதிய உணவு இடைவேளை என்பதால் பசி வேறு. இந்த பிளாஸ்டர் போடப்பட்டு இருப்பதால் எப்படி தொடர்ந்து நடிப்பது என்று மனதில் சங்கடம். அன்றைய காட்சியை நடித்து கொடுத்து விட்டு வேறு படப் பிடிப்புக்கும் செல்ல வேண்டி இருக்கிறதே என்று என்ன செய்வது என்று நினைத்த போது ரொம்ப கவலையாக இருந்தது.
ஏனெனில் அந்த காலக் கட்டத்தில் அவ்வளவு பிசியாக இருந்தேன். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் நடிக்க வேண்டி இருந்தது. 4 நாட்கள் ஒரு ஊரில் இருப்பேன். அங்கு இரவில் தான் படப்பிடிப்பு முடியும். உடனே புறப்பட்டு மறுநாள் காலையில் வேறு ஒரு படப்பிடிப்பிற்காக வேறு ஒரு ஊருக்கு செல்வேன். காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஓடுவதை போல் ஓடிக்கொண்டு இருப்பேன். ஆஸ்பத்திரியில் தையல் போட்டு முடித்ததும் நேராக ஷூட்டிங் நடந்த இடத்திற்கு தான் சென்றேன். என் நிலைமையை பார்த்ததும் மேடம் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கள் என்றார் டைரக்டர்.
ஆனால் நான் ரெஸ்ட் எடுப்பதை விரும்பவில்லை. எப்படியாவது அந்த காட்சியை நடித்து கொடுத்து விட்டு பொள்ளாச்சி அருகே நடைபெற்ற எஜமான் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டும். இரு படங்களுடைய படப்பிடிப்பையும் ரத்து செய்ய முடியாது.
தலையில் கட்டுடன் எஜமானை தேடி எப்படி சென்றேன்? அங்கு நடந்தது என்ன? என்பது பற்றி அடுத்த வாரம் சொல்கிறேன்.
(தொடரும்...)
- ஒரு பேருந்தில் ஏறி அலுவலகம் செல்கிறோம்.
- பொதுநல நோக்கில் ஒரு வாழை நடுபவன் பல தென்னைமரங்கள் காண்பான்.
நன்றி உணர்வோடு வாழவேண்டும் என்பதில் அக்கறை காட்டும் அன்பு வாசகர்களே! வணக்கம்!.
'நன்றி' என்கிற தமிழ்ச் சொல்லுக்குத் தமிழில், உதவி, நன்மை, நல்லுணர்வு, உதவிக்கு உதவி செய்தல் எனப் பல பொருள்நிலைகள் உண்டு. எது எப்படியாயினும் நன்றி என்பது பல நன்மைகளையும் பல நல்லொழுக்கங்களையும் விளைவிக்கக்கூடிய செயல் ஆகும். பிரதிபலன் கருதாமல் ஒவ்வொருவரும் மற்றவருக்கு உதவ வேண்டும் என்று கூறும் திருவள்ளுவர், பெற்றவர் உதவியை மறந்துவிடக்கூடாது என்றும் கூறுகிறார். அப்படி அவர் நன்றிமறந்த செயலில் ஈடுபட்டால் அந்த நன்றல்லதையும் அன்றே மறந்துவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
இந்த உலகில் உள்ள உயர்திணை, அஃறிணை எனப்படும் உயிருள்ளவை உயிரற்றவை ஆகிய அனைத்துமே ஒன்றையொன்று சார்ந்து வாழும் தன்மையை உடையன. நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகிய அனைத்துமே ஒன்றினோடு ஒன்று சார்ந்து, ஒன்றினோடு ஒன்று இணைந்து, கொண்டும் கொடுத்தும் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் பரிவோடு உதவி வருகின்றன. இயற்கையிடமுள்ள இந்த நன்றியுணர்வு மனித இனங்களிடத்தும் பண்பட்டு இருக்குமானால் மனித வாழ்வு மாண்புடைய வாழ்வாகத் தழைத்துச் செழிக்கும்.
சிறுகுழந்தையாக மனிதன் இருக்கும்போதே அவன் எதைப்பெற்றுக் கொண்டாலும், உடனே 'நன்றி' என்று சொல்லச்சொல்லி நன்றியுணர்வோடு இருக்க வேண்டும் என்று கற்பித்து வளர்க்கப்படுகிறான். அன்றாடம் நாம் பெறுகிற ஒவ்வொன்றுக்கும் யாதானும் ஒருவகையில் அடுத்தவர் காரணமாக இருப்பதால், ஒவ்வொன்றைப் பெறும்போதும் நாம் நன்றியுணர்வோடு செயல்பட வேண்டும்.
ஒவ்வொரு நாளின் விடியலில் நாம் படுக்கையை விட்டு எழும்போதெல்லாம், அன்றைய விடியலுக்கு நன்றி சொல்லி எழவேண்டும்; ஏனென்றால் இன்றும் நாம் உயிரோடு இருக்கிறோம் உயிர் வாழ்வதற்கு என்பதற்காக!. பிறகு, சுவாசிக்கிற காற்றுக்கு நன்றி சொல்ல வேண்டும்; இன்றும் குறைந்து போகாமல், மாசடைந்து போகாமல் அது நாம் உயிர்ச் சுவாசம் செய்ய உதவுவதால்!. குளிக்கச் செல்லும்போது நீருக்கு, சமைக்கச் செல்லும் போது, பக்குவப்படுத்த உதவுகிற நெருப்புக்கு, உலகம் பெரியது, பரந்தது, விரிந்தது என வெளிகாட்டும் வானுக்கு, நமக்கு சகலத்தையும் தந்து நம்மைத் தாங்கிப் பிடிக்கிற நிலத்திற்கு… என இப்படி ஒவ்வொன்றுக்கும் முழுமனத்தோடு, உள்ளுணர்வோடு நன்றி செலுத்த வேண்டும்.
ஒரு பேருந்தில் ஏறி அலுவலகம் செல்கிறோம். அந்தப் பேருந்துக்கு நடத்துநர் இருக்கிறார்; ஓட்டுநர் இருக்கிறார். இவர்களை நன்றியுணர்வோடு நினைத்துக்கொண்டே பயணம் செய்ய வேண்டும்; ஏனெனில் பயணிகளின் பாதுகாப்பான பயணம் ஒவ்வொன்றுக்கும் இந்த இருவர் மட்டுமே முழுமையான பொறுப்பான காரணம். நடந்துநரும் ஓட்டுநரும் தங்களது பணி சிறப்பதற்கும், வாழ்க்கைப்பாடு நலமாவதற்கும் பயணிகளே காரணம் என்று அவர்களுக்கு நன்றியுணர்வோடு இருக்க வேண்டும். காசு கொடுத்துத்தானே பயணச் சீட்டு வாங்குகிறோம்! எனப் பயணியும், நமக்கு அரசாங்கம் தானே சம்பளம் தருகிறது! என்று நடத்துநர் ஓட்டுநரும் மூன்றாம் மனிதக் கண்ணோட்டத்தோடு, நன்றியுணர்வின்றிச் செயல்படத் தொடங்கினால் அது இயந்திரத்தனமான செயல்பாடாகத் திரிந்துபோகும்.
பணிபுரிகிற அலுவலகம் தொடங்கி, உண்ணச் செல்கிற உணவகம், காற்று வாங்கப் போகிற கடற்கரை, சேவை பெறப்போகிற மருத்துவமனை, அரசு அலுவலகங்கள், தேவையான பொருட்களை வாங்கச் செல்கிற பலசரக்குக்கடை, துணிக்கடை, மருந்துக்கடை, பழக்கடை, சாலையோரப் பூக்கடை வரை எங்கு சென்றாலும் எவரிடம் பெற்றாலும் அவர்களிடம் நன்றியுணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.
அன்போடு நடந்துகொள்ள வேண்டும், கருணையோடு நடந்துகொள்ள வேண்டும், கோபமின்றி நடந்துகொள்ள வேண்டும், நேர்மையோடு, இரக்கத்தோடு, இனிமையாக நடந்துகொள்ள வேண்டும்… என்றெல்லாம் நடத்தை குறித்துப் பொதுவாகக் கூறுவார்களே! நீங்கள் நன்றியுணர்வோடு நடந்து கொள்ளுங்கள் என்று ஒற்றைச் செயல்பாட்டை மட்டும் சொன்னால் எப்படி?; என்று பலர் என்னிடம் கேள்வி கேட்க வரலாம்.

சுந்தர ஆவுடையப்பன்
உங்களுக்கு என் நன்றி. நன்றி என்கிற உணர்வோடு மட்டும் மனிதர் வாழத் தொடங்கினால் போதும்; மற்ற எல்லா நல்ல குணங்களும் தாமாக வந்து அவர்களிடம் சேர்ந்து அணி சேர்த்துவிடும் என்கிறார் திருவள்ளுவர். உழவுக்கு நன்றி சொன்னால் வேளாண்மை செழிக்கும்; உழைப்புக்கு நன்றி சொன்னால் பணிசிறக்கும், திறமை பளிச்சிடும்; சமையலுக்கு நன்றி சொன்னால் உணவு ருசிக்கும்; மருத்துவத்துக்கு நன்றி சொன்னால் உடல் நலமாகும்; நண்பர்களுக்கும் சுற்றத்தினர்க்கும் நன்றி சொன்னால் உறவுகள் பலப்படும்; கடவுளுக்கு நன்றிசொன்னால் பக்தி பளிச்சிடும்; இசைக்கும், கலைகளுக்கும், இலக்கியத்திற்கும் நன்றி சொன்னால் மனம் அமைதியாகும், வாழ்க்கை வளமாகும். நன்றியுணர்வே மனித நற்குணங்களில் தலைமைக் குணம்.
ஒரு வயதான பெரியவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்; ஓர் இளைஞன் நாள்தோறும் மருத்துவமனைக்கு வந்து அவரை நன்றாகக் கவனித்துக் கொண்டான். காலையில் வந்ததும் அவரைக் குளிக்கவைப்பது, உடை மாற்றி விடுவது,உணவு ஊட்டிவிடுவது, மருந்து மாத்திரைகளை நேரத்திற்குத் தருவது என்று அக்கறையோடு முதியவரைப் பார்த்துக் கொண்டான். நாளடைவில் அவர் குணமடையத் தொடங்கியதும், அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டு, மருத்துவமனைக்குள்ளேயே இருந்த தோட்டத்துப்பக்கம் நடைப்பயிற்சியாக அழைத்துச் செல்லத் தொடங்கினான்.
இப்படியாக அந்த இளைஞன் ஒவ்வொரு நாளும் காலையில் வந்து, மாலைவரை அந்த முதியவருக்கு வேண்டிய பணிவிடைகள் செய்துவிட்டு மாலையில் வீட்டுக்குச் சென்றுவிடுவான். ஒருநாள் இரவு, அவரது உடல்நிலையில் ஏற்பட்டு வரும் அபாரமான முன்னேற்றத்தை பற்றி அவரைப் பரிசோதித்த நர்ஸ் கூறினார், " ஐயா! கடவுளுடைய அருளாலும், நாள்தோறும் வந்து இடைவிடாது கவனித்துச் செல்லும் உங்கள் மகனின் அன்பினாலும் நீங்கள் விரைந்து குணமாகி வருகிறீர்கள்!" என்று.
நர்சின் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்த பெரியவர் கூறினார்," நன்றி! உங்களைப்போலவே நானும் அந்த இளைஞன் எனது பிள்ளைகளில் ஒருவனாக இருக்க வேண்டுமென்றே விரும்புகிறேன்!" என்றார்.
அதிர்ந்த நர்ஸ் கேட்டார்," இவ்வளவு கரிசனத்தோடு உங்களைப் பார்த்துக்கொண்ட அந்த இளைஞன் உங்கள் மகன் இல்லையா? அப்படியானால் அவர் யார்?".
முதியவர் தழுதழுக்கக் கூறினார்," அவன் ஒரு அனாதை".
பொங்கிவழியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே அவர் மேலும் பேசினார், " அது நடந்து இருபது வருடங்களுக்கு மேலாகி விட்டது. அவன் சிறுவனாக இருந்த போது, ஒரு மசூதியின் வாசலில் நின்று நிறுத்த முடியாத கண்ணீரோடு அழுதுகொண்டிருந்தான். இறந்துபோன அவனது தந்தையை அப்போதுதான் அந்தப் பகுதியில் அடக்கம் செய்திருந்தனர். அவன் ஏதும் புரியாத சிறுவனாய் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தான்.
அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த நான் இந்தக் காட்சியைப் பார்த்தேன்; அந்த சிறுவனின் அழுகையை நிறுத்த எண்ணிய நான் அருகிலிருந்த ஒரு பெட்டிக்கடைக்குச் சென்று சில சாக்லேட்டுகளை வாங்கி வந்து அவனுக்கு ஊட்டி விட்டேன். அவனோடு எந்தப் பேச்சையும் நான் பேசவில்லை; அவன் அழுகை நின்றதும் நான் கிளம்பி விட்டேன். அதன்பிறகு பல ஆண்டுகள் எனக்கும் அவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
நீண்ட காலத்திற்குப்பின் சமீபத்தில்தான் என் முகவரியைக் கண்டுபிடித்து, நானும் என் மனைவியும் வசிக்கிற வீட்டிற்கு வந்தான். உங்களுக்கு ஏதாவது வெளிவேலைகள் இருந்தால் சொல்லுங்கள் நான் செய்து உதவுகிறேன் என்பான். அண்மையில் எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதும், என் மனைவியை அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டான். என்னை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு இப்போது நாள்தோறும் வந்து கவனித்துக் கொண்டிருக்கிறான்.
நான்கூடக் கேட்டேன்," தம்பி! அன்று நீ சிறுவனாய்த் தவித்தபோது நான் என்ன அவ்வளவு பெரிய உதவியா செய்து விட்டேன்?. இப்படி வந்து விழுந்து விழுந்து பணிவிடைகள் செய்கிறாயே?".
அதற்கு அந்த இளைஞன் சொன்ன பதில் என்ன தெரியுமா?. " ஐயா! அன்று நான் சிறுவனாக, தந்தையை இழந்த சோகத்தில் தவித்துக் கொண்டிருந்த போது, நீங்கள் அருகில் வந்து ஆறுதலாய் ஊட்டிவிட்ட சாக்லேட் இருக்கிறதே!.... அது இன்னும் என் நாக்கில் இனித்துக்கொண்டிருக்கிறது!".
ஆம் நண்பர்களே! அந்த இனிப்புதான் நன்றியுணர்வு. மனிதன் வாழ்க்கையின் அலைக்கழிப்பில் எத்தனையோ மேடு பள்ளங்களையும் கஷ்ட நஷ்டங்களையும் கடந்து வந்திருக்கலாம். தேவைப்படும் தருணத்தில், தேவைப்படும் அளவுக்குச் செய்யப்படும் உதவியே சிறந்த உதவி. உதவியில் பெரியது சிறியது கிடையாது. காலத்திற் செய்யப்படுகிற உதவி, தேவைப்படும் பயனாளிக்குச் செய்யப்படுகிற நன்மை அது வானத்தை விட உயரத்திலும் பரப்பளவிலும் பெரியது.
'வினை விதைத்தவன் வினை அறுப்பான்! தினை விதைத்தவன் தினை அறுப்பான்!' என்பது பழமொழி. எதைச் செய்கிறோமோ அதுவே பன்மடங்காக விளையும் என்பது இதன் பொருள். நன்மை செய்தால் நன்மை. தீமை செய்தால் தீமை!.விதைத் தத்துவம். ஆனால் ஒருவர் செய்த நன்மை அவருக்கு நன்றியுணர்வோடு திரும்ப வரும்போது, அது மதிப்புக் கூடிய நிலையில் பன்மடங்காகப் பெருகி வரும். ஒரே வழியில் வராது; அதுவும் பல்வேறு வழிகளில் வரும். பொதுநல நோக்கில் ஒரு வாழை நடுபவன் பல தென்னைமரங்கள் காண்பான். சில வெள்ளிக் காசுகளை அடுத்தவர் நன்மைகருதிச் செலவு செய்பவன் பல தங்கக் காசுகளை பல்வேறு வழிகளில் வரவாகப் பெறுவான். நன்றியுணர்வோடு திகழும் உலகில் இந்த விந்தைகளெல்லாம் நிகழக்கூடும்.
அந்தக்காலங்களில் பொங்கல், தீபாவளி வரும்போது விதம்விதமான வாழ்த்து அட்டைகளும் விற்பனைக்கு வரும். மக்கள் அதை வாங்கி, வேண்டியவர்கள் அனைவருக்கும் வாழ்த்து அனுப்பி மகிழ்வர். அப்போது கொஞ்சம் கூர்ந்து கவனித்திருந்தால், உங்களுக்கு நினைவுக்கு வரும்; வாழ்த்து அட்டைகள் தவிர நன்றி அட்டைகளும் விற்பனையில் இருக்கும். அவற்றையும் வாங்கி வாழ்த்துப் பெற்றவர்கள் நன்றி அட்டை அனுப்பி மகிழ்வர். இதுதான் நன்றியுணர்வு; பரஸ்பரம் அன்பைப் பகிர்ந்து மகிழும் தருணம்.இப்போது வாட்ஸ்அப் காலத்தில் எல்லா வாழ்த்துகளும் நன்றிகளும் இயந்திரத் தனமாய் மாறிப்போய் விட்டன.
இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை. ஒவ்வொருவரும் தனித்தனியே ஒரு 'நன்றிக் குறிப்பேடு' தயாரித்து வைப்போம். நாள்தோறும் டைரி எழுதுவதுபோல இன்றைய நன்றிக்குரிய மனிதர்கள் / நிகழ்வுகளைக் குறைந்தபட்சம் மூன்று எண்ணிக்கையில் குறித்து வைக்கத் தொடங்குவோம். நன்றிக்குரிய செயல்களைச் செய்வோம். நன்றியுணர்வோடு இருப்போம்!.
தொடர்புக்கு 9443190098
- தாய்மையின் குணம் அன்று தொட்டு இன்று வரை மாறியதே இல்லை.
- துன்பமோ, இன்பமோ எந்தவொரு தருணமாக இருந்தாலும் ஆறுதலோடு, அரவணைத்து துணை நிற்பாள்.
அன்பையும், அரவணைப்பையும் அள்ள அள்ள குறையாத அட்சயப்பாத்திரம் போல் தன்னலமின்றி அளிக்கும் தியாக உருவின் பிறப்பிடம் தாய்மை. கருவில் குழந்தையை சுமக்க தொடங்கிய நொடி முதலே தன் ஆசைகளுக்கு கட்டுப்பாடு விதித்துக்கொள்வாள். அவளின் ஒவ்வொரு செயலுமே கருவில் வளரும் குழந்தையின் நலனை கருத்தில் கொண்டே அமையும்.
தனக்கு பிடித்தமான, விருப்பமான உணவாக இருந்தாலும் சரி அது குழந்தையின் வளர்ச்சிக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துவதாக கருதினாலே அந்த உணவையே வெறுத்து ஒதுக்கிவிடுவாள். கருவில் வளரும் குழந்தை நலமாக இருப்பதற்காக தன்னுடைய ஆசைகளை மட்டுமல்ல, ஒவ்வொரு தேவைகளையும் புறந்தள்ளிவிடுவாள். குழந்தையின் நலனை உணர்வுப்பூர்வமாக உணர்ந்து அதன் தேவையை நிறைவேற்ற முழுமூச்சாக இயங்குவாள்.
குழந்தையை பெற்றெடுக்கும்போது எதிர்கொள்ளும் பிரசவ வலியையும், வேதனையையும் பொறுத்துக்கொள்ள அவளால் மட்டுமே முடியும். சிறு வயிற்று வலிக்கே துடித்து போகும் ஆண்கள் அதனை உணர்ந்தாலே தாய்மையின் தியாகம் எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். குழந்தை பிறந்த பிறகு அதன் வளர்ச்சிக்காக தன் ஒட்டுமொத்த விருப்பு, வெறுப்புகளையும் ஒதுக்கிவைத்துவிடுவாள். காலங்கள் உருண்டோடிக்கொண்டே இருக்கலாம். நாகரிகம் என்ற போர்வையில் வாழ்வியல் முறை மாறிக்கொண்டிருக்கலாம். ஆனால் தாய்மையின் குணம் அன்று தொட்டு இன்று வரை மாறியதே இல்லை.
மழலை பருவம் முதலே தாய் தன்னை எப்படி வளர்த்து ஆளாக்கி இருப்பாள் என்பதை பலரும் அறியாமல் இருந்திருக்கலாம். ஆனால் தங்களுடைய பிள்ளைகளை மனைவி எப்படி வளர்த்து ஆளாக்குகிறாள் என்பதை பார்த்தே தாய்மையின் தியாக வாழ்க்கையை தெரிந்து கொள்ளலாம். குடிசை வீட்டில் ஏழ்மையிலும், பணக்கார வீட்டில் சொகுசு வசதியுடனும் என வாழ்வியல் முறையில் வித்தியாசங்கள் இருக்கலாம்.
ஆனால் ஏழைத்தாய் தன்னுடைய பிள்ளை மீது காட்டும் பாசமும், பணக்கார தாய் தன் குழந்தை மீது காண்பிக்கும் அன்பும் ஒரே அளவுகோலாகத்தான் இருக்கும். எந்தவொரு சூழலிலும் பிள்ளையின் பசியை போக்காமல் தான் உண்பதற்கு விரும்பமாட்டாள். பிள்ளைகள் சாப்பிடாமல் அடம் பிடித்தால் அதன் விருப்பம் என்னவோ அதனை நிறைவேற்றி வைப்பாள். விளையாட்டு காட்டியே சாப்பிடவும் வைத்துவிடுவாள். குழந்தை வயிறாற சாப்பிட்டதை உறுதி செய்த பிறகே நிம்மதி பெருமூச்சு விடுவாள். தன் பசியை போக்க முன் வருவாள்.
மனதுக்கு கஷ்டமாக இருக்கும் சமயத்தில் ஆறுதல் தரும் வார்த்தைகளை எத்தனை பேர் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் ஆழ் மனதில் இருந்து வெளிப்படும் அன்பு கலந்த வார்த்தை தாயிடம் மட்டுமே உணர்வுப்பூர்வமாக வெளிப்படும். துன்பமோ, இன்பமோ எந்தவொரு தருணமாக இருந்தாலும் ஆறுதலோடு, அரவணைத்து துணை நிற்பாள். வசதி, வாய்ப்புகள் வாழ்க்கை முறையை மாற்றிவிடலாம். ஆனால் தாய் வெளிப்படுத்தும் பாசம் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மாறாது. ஒரே மாதிரித்தான் வெளிப்படும்.
எல்லா பிள்ளைகளையும் அரவணைத்து அன்பை பொழிவாள். மனித உயிருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக உயிர்கள் அனைத்துக்கும் தாய்மையே பிரதானம். தாய் இல்லாவிட்டால் உலக உயிர்கள் எதுவும் இல்லை. உலக ஜீவராசிகள் அனைத்திடமும் தாய்மை வெளிப்படுத்தும் பாசத்தில் பாகுபாட்டுக்கு ஒருபோதும் இடமில்லை என்பதே நிதர்சனம்.
வருடந்தோறும் மே மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இன்றைய நாள் தாய்மையின் தியாக வாழ்க்கையை நினைவுகூரும் தினமாக மட்டுமே அமைந்துவிடக்கூடாது. என்னென்றும் தாய்மையின் தன்னலமற்ற தியாகத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அவர் உங்களை பெற்றெடுத்த பொழுது மகிழ்ந்ததை காட்டிலும் இரட்டிப்பு மகிழ்ச்சியை அவருக்கு அளிப்பதாக உங்களுடைய செயல்பாடு அமையட்டும். தாய்மைக்கு தலை வணங்குவோம்!
- பெண்ணுக்குக் காவல் அவள் மனமே.
- புண்ணியம் செய்த கணவனுக்கு புண்ணியம் மிகுந்த மனைவி கிடைப்பாள்.
அதிகாரம்: வாழ்க்கை துணை நலம்
இந்த அதிகாரத்தில்
"மனைத்தக்க மாண்பு உடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கை துணை.
என்ற குறளில் தொடங்கி
மாங்கல்யம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் நன்கலம் நன்மக்கட் பேறு. "
என்ற குறள் வரை மொத்தம் 10 குறட்பாக்கள் உள்ளன.
இந்த அதிகாரத்தில் மனைவியின் குணப் பண்புகளைப் பற்றி வள்ளுவர் கூறுகின்றார். கணவனுடைய வருமானத்திற்குத் தகுந்தாற் போல செலவு செய்து அதே நேரத்தில் கணவனின் தேவைகளைப் பூர்த்தி செய்து வாழ்க்கை நடத்துபவளாக இருக்க வேண்டும். சமையற்கலை தெரிந்திருக்க வேண்டும்.
மனைவி நற்பண்பு உடையவளாக இருத்தல் வேண்டும். அதுபோல கணவனும் நல்ல குணம் உடையவனாக இருக்க வேண்டும். அத்தகைய நற்பண்பு இல்லையெனில், எத்தகைய செல்வ வளம் இருந்தாலும் பயன் உள்ளதாக இருக்காது.
சான்றோர்களை வரவேற்று மனைவி உபசரித்தால் கணவனுக்கும் பெருமை சேரும். எளிமையான தோற்றம் உடையவர்களாயினும் அவர்கள் மீது மரியாதை செலுத்தி வரவேற்பது குடும்பத்திற்கும், மனையாளுக்கும் சிறப்பாகும்.
பெண்ணிற்கு கற்பு நெறி வேண்டும். அப்போதுதான் கணவன் தலை நிமிர்ந்து நடக்க முடியும். அத்தகைய கற்புநெறி, கணவன், மனைவி இருபாலருக்கும் பொருந்தும். கற்புடைய பெண்ணை விட மேலானது ஒன்றும் இல்லை.
கணவனைத் தெய்வமாக மனைவியும், மனைவியைத் தெய்வமாகக் கணவனும் நினைத்தல் வேண்டும்.
கணவனுக்குத் துன்பம் நேரிட்டால் மனைவி வருந்த வேண்டும். மனைவிக்குத் துன்பம் நேரிட்டால் கணவன் வருந்த வேண்டும். இருவருமே ஒற்றுமையுடன் இருந்தால், பருவ காலத்தில் மழை பெய்தால் நாடு எவ்வாறு செழிப்பாக இருக்குமோ அவ்வாறு அவர்களின் குடும்பம் மகிழ்ச்சியுடன் இருக்கும்.
பெண் என்பவள் தன்னையும் காத்து தன் கணவனையும் காத்து, அவன் பெருமையைக் காப்பாற்றி புகழ் சேர்க்க வேண்டும். சோதனைக் காலங்களில் உறுதியாக நின்று குடும்பத்தின் பெருமையைக் காப்பாற்றுபவளே சிறந்த இல்லாள் ஆவாள்.
பெண்ணுக்குக் காவல் அவள் மனமே. தனது மன உறுதியால், அவள் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளுதல் வேண்டும். அவளுக்குக் கணவன் வேலியிட்டுக் காப்பது அறியாமையாகும்.
பெண்ணுக்குப் பெருமையாதெனில், கணவன் மிகவும் மகிழ்ந்து, அவளை மனைவியாய் அடைந்ததை நினைத்து வாழ்த்த வேண்டும். அவ்வாறு ஒத்த கருத்துடன் வாழ்தல் வேண்டும். அவ்வாறு இருந்தால் கடவுளும் அவர்களை வாழ்த்துவார். தேவர்களும், சான்றோர்களும் வாழ்த்துவார்கள்.
இல்லறத்தின் மாண்பறியாத மனைவியை உடையவர்கள், பகைவர்கள் முன்பாகவும், மற்றவர்கள் முன்பாகவும் தலைநிமிர்ந்து நடக்க முடியாது. புண்ணியம் செய்த கணவனுக்கு புண்ணியம் மிகுந்த மனைவி கிடைப்பாள். அப்போது அவனுக்குப் புகழ் உண்டாகும்.
மங்கலம் என்பது அழகு. வீடும் அழகாக இருக்க வேண்டும். அம்மனையாளும் இன்முகத்தோடு நல்ல சிந்தனையும், நற்குணப் பண்புகளும், உள்ளவளாக இருக்க வேண்டும். அவர்களுக்கு பண்புள்ள புத்திர பாக்கியம் உண்டாகும்.
அதிகாரம்: மக்கட்பேறு
இந்த அதிகாரத்தில்
"பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவுஅறிந்த மக்கட்பேறு அல்ல பிற.
என்ற குறளில் தொடங்கி
மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்."
என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.

ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்
அறிய வேண்டியவைகளை அறிந்த மக்களாக தாம் பெற்ற மக்கள் இருக்க வேண்டும். எத்தகைய சிறந்த பதவிகளைப் பெற்றிருந்தாலும் தன்னை அறிந்து கொண்டவனாக இருக்க வேண்டும். புலால் உணவு உட்கொள்ளாமலும் உயிர்களைக் கொலை செய்யாத தன்மையைப் பெற்றும், குணப்பண்பு உடையவர்களாகவும் இருத்தல் வேண்டும். அத்தகைய உயர்ந்த பண்புள்ள பிள்ளைகளைப் பெறுவதே உயர்ந்த பாக்கியமாகும்.
தோற்றத்தில் ஒழுக்கமும், ஒழுக்கத்தில் தோற்றமும் என்ற உண்மையை அறிந்திருக்க வேண்டும். யாரும் தான் விரும்பிப் பிறப்பதும் இல்லை; இறப்பதும் இல்லை. ஒரு சக்தி நம்மை ஆட்டிப் படைக்கின்றது என்பதை அறிய வேண்டும். இத்தகைய இயற்கையை அறிந்த மேன்மக்களை மக்களாகப் பெற்றிருந்தால் அது உயர்ந்த பிறப்பாகும்.
ஞானிகளை பூஜை செய்பவர்களையும், சமுதாயத்திற்கு தொண்டு செய்பவர்களையும், அதற்கு தம்மையே அர்ப்பணித்துக் கொள்பவர்களையும் கருணையே வடிவாக விளங்குபவர்களையும், மரணத்தை வெல்லும் ஆற்றல் உடையவர்களையும் மகனாக பெற்றிருந்தால், இவ்வுலக மக்கள் மட்டுமல்லாமல் சான்றோர்களும், ஞானிகளும் மகிழ்வார்கள். அவர்களைப் பெற்றவர்களுக்கும் பெருமை உண்டு.
ஒரு குடும்பத்தில் ஒரு ஞானி தோன்றினால், அவன் தாய் தந்தை செய்த பாவத்தைப் பொடியாக்குவான். ஏழு பிறவிக்கும் தாய் தந்தை செய்த பாவத்தைப் பொடியாக்குவான். ஏழு பிறவிக்கும் தாய் தந்தையரின் துன்பத்தை துடைப்பான், நரகம் வராமல் காப்பான். அவன், பழியைக் கண்டு அஞ்சி பழி சேர்க்காத மகனாக இருக்க வேண்டும்.
சமுதாயத்தை அறிந்து, புரிந்து, சமுதாயத்தில் நடந்து கொள்பவர்களுக்குப் பழிபாவம் வராது, பொய், கோபம், காமம், வஞ்சனை போன்ற குணக்கேட்டினால் வரும் பழிகளிலிருந்து தப்பி விடுவார்கள். பிறரை வஞ்சிக்காத வாழ்க்கை வாழ்பவர்களாக இருத்தல் வேண்டும்.
கைகூப்பும் தன்மையுடன் புண்ணியம் செய்த கரங்களைப் பெற்ற மக்களைப் பெற வேண்டும். சினத்தால், செல்வமிகுதியால், தீய எண்ணத்தால், கடுமையான மனத்துடன், தலைவணங்காத செயலாலும் ஒருவனுக்கு பழி வந்து சேர்ந்து விடும்.
பிள்ளைப்பேறு என்பது குழந்தைச் செல்வம். சிலருக்கு தீவினை மிகுந்திருந்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், பிறருக்கு தீமை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல் தாய்,தந்தைக்கும் தீமையே செய்வார்கள்.
நல்வினையும், புண்ணிய பலமும் ஞானிகளின் ஆசியும் பெற்ற மக்களுடைய குழந்தைகள், உலகுக்கு நன்மை செய்து, தாய், தந்தையருக்குப் பெருமை தேடித்தருவர்.
கணவன்-மனைவியின் அன்புச் சின்னமாகவும், பாசத்தின் சின்னமாகவும் விளங்குவது அவர்கள் பெற்ற குழந்தைச் செல்வமே. அதன் மலர் போன்ற பிஞ்சுக் கைகளால் அன்னத்தைக் குழப்பி எடுத்து தாயின் வாயில் வைத்தால் குழந்தை மேல் உள்ள பாசத்தால் அந்த உணவு தாய்க்கு அமிர்தமாக இருக்கும்.
அன்பு பொருந்திய காதலருக்குத் தோன்றிய தேன்துளியே குழந்தை ஆகும். அத்தகைய பாசமும், அன்பும் பொருந்திய குழந்தையைத் தொடுவதால் உடலுக்கு இன்பம். அதன் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பமாகும்.
புல்லாங்குழலும், யாழும் இனிமை உடையவை. காதலின் சின்னமான அன்புக் குழந்தை இனிமையான கனி போன்றது. அக்குழந்தையின் மழலை மொழி குழலின், யாழின் இசையை விட இனிமையாக இருக்கும்.
தந்தை மகனுக்குச் செய்யும் உதவி யாதெனில், கற்றோர் அவையில் தன் பெற்றோரைத் தலை நிமிரச்செய்தல் வேண்டும்.
சிறந்த பதவிகளும், பட்டங்களும் தன் மகன் பெற்றிருந்தாலும், அவன் குணப் பண்பில் மிகுந்து, சிறப்பறிவு பெற்று இவ்வுலக மக்களுக்கெல்லாம் நன்மை செய்பவனாக இருத்தல் வேண்டும். தந்தையின் புண்ணிய பலமும், தலைவனின் ஆசியும் மகனுக்கும் கிட்டும்.
பிரசவ காலத்திற்கு முன், குழந்தையின் அசைவு, அன்னைக்கு மகிழ்ச்சியை உண்டாக்கி, அவளது கற்பனையை வளர்த்து, குழந்தை பிறந்த பின்பும் மகிழ்ச்சியை உண்டாக்கும். அதை விட சான்றோர்கள் தம்மகனைப் புகழும்போது அவனைப் பெற்றெடுத்த காலத்தில் உண்டாகும் மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியடைவாள். தாய் ஸ்தானம் கடவுள் தன்மையுடையது. தாய், உயர்ந்த கருணை மழைக்கு ஒப்பானவள். தாய்க்கு நிகர் தாயே ஆவாள். மகன், தந்தைக்கு ஆற்றும் நன்றி யாதெனில் இத்தகைய கருணையுள்ள உயர்ந்த பண்புகளைக் கொண்ட இம்மைந்தனைப் பெற்றெடுக்க இவன் தாய், தந்தை எத்தகைய நல்வினைப்பயனைப் பெற்றிருக்கின்றார்களோ? என, சான்றோர் வியக்கும் வண்ணம் வாழ்தல் வேண்டும்.
- நாம் வாழும் காலத்திலேயே நிஜத்தை உணர வேண்டும் என்றால், புற உலகில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட வேண்டும்.
- தியானம் 30 நிமிடங்கள் தொடர்ந்து மனம் எண்ணங்கள் அற்ற நிலையில் இருந்தால் எட்டாம் நிலையாகிய சமாதி நிலையாகும்.
அன்பார்ந்த வாசகர்களே, கடந்த வாரம், நாடி சுத்தி பிராணாயாமத்தை எப்படி செய்து, நமது ஆயுள் மற்றும் கர்ம வினை பதிவுகளை எப்படி மாற்றுவது என்பதை பற்றி பார்த்தோம்.
ஆரம்ப காலத்திலே முதலில், மூச்சை உள் இழுத்து வெளிவிடுதல் என்கின்ற முறையில் இந்த பயிற்சியை செய்ய வேண்டும். குறிப்பாக நாம் முதலில் சொன்னது போன்று சுவாசக் குழலை சரி செய்து கொள்ள ஆரம்ப பயிற்சியை செய்து கொண்டால், நமது மூச்சு குழலில் உள்ள நுண் துகள்கள் கூட வெளியேறும். பிறகு நாடி சுத்தி பிராணாயாமம் செய்தால், நமக்கு 100 சதவீதம் முழு பலன் கிடைக்கும்.
நாடி சுத்தி பிராணாயாமம் என்பது இரண்டு தடவை மூச்சை உள் இழுத்து வெளிவிட்டால், ஒரு நாடி சுத்தி பிராணாயாமம் ஆகும். அதாவது இடது நாசி வழியாக உள் இழுத்து, வலது நாசி வழியாக வெளிவிட்டு, வலது நாசி வழியாகவே உள் இழுத்து, இடது பக்கம் மூச்சை வெளிவிடுவது தான் ஒரு சுற்று பிராணாயாமம்.
இடது கையில் சின் முத்திரையும், வலது கையில் நாசிகா முத்திரையும் அவசியம். முத்திரை சரியாக வைக்கவில்லை என்றால் நாடி சுத்தி பலன் தராது. இடது கையில் சின் முத்திரை என்பது ஆள்காட்டி விரலையும்,கட்டை விரலின் நுனியையும் அழுத்தும் போது நாம், காற்றையும், நெருப்பையும் நமக்கு உள்ளாக கட்டுக்குள் வைக்கிறோம்.

வலது கையில் நாசிகா முத்திரையில், ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் உள்ளங்கை பக்கமாக அழுத்தும் போது காற்றையும் ஆகாயம் என்கின்ற உயிரையும் நமக்கு உள்ளாக கட்டுக்குள் வைக்கிறோம்.
இதில் காற்று என்பது நமது பிராணன், நெருப்பு என்பது உஷ்ணமாக நமக்குள் இருக்க கூடிய உயிர். எனவே தான் நாடி சுத்தி என்பது உயிரை சுத்தப்படுத்த கூடிய பயிற்சி என்கிறார்கள், சித்தர்கள். இது நமக்குள் உள்ள அக உலகின் பல ரகசியங்களை நமக்கும் அறியவும், உணரவும் வைக்கும்.
பதஞ்சலி மகானின் யோக சூத்திரமானது, அஷ்டாங்க யோகம் என்று அழைக்கப்படுகிறது. முதல் இரண்டாக இயமம் மற்றும் நியமம் என்பது, மனிதனாக பிறந்தவர்கள், வாழ்க்கையில் எதை எதை செய்ய வேண்டும், எதை எதை எல்லாம் செய்ய கூடாது என்று அறிவுரை கூறுவதாகும். அதன் படி நாம் வாழ்ந்தால், அதற்கு பெயர் தான் கர்ம யோக வாழ்க்கை. ஆனால் அப்படி வாழ்வதற்கு, நம்முடைய கர்ம வினை பதிவுகள் நம்மை அனுமதிக்காது. அதற்கு வழிகாட்டி தான் குரு என்கின்ற இரண்டு எழுத்து மந்திரம்.
இந்த இயமம், நியமம் உபதேசங்களை நமக்கு அவர் உணர்த்துவார். அப்படி தொடர்ந்து செய்து வரும் போது, இந்த உடல் என்கின்ற வாகனம் தான் அனைத்திற்கும் மூலம், இதை வைத்து தான் பாவ பதிவுகளை போக்கி, புண்ணியங்களை அனுபவிக்க வேண்டும் என்கின்ற அறிவு அறியப்படும். அப்போது தான், உடல் மீது நமக்கு அக்கரை வரும். அந்த உடலை பேணி காப்பதற்கு, உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம் வரும். அந்த நிலை தான் மூன்றாம் நிலையாகிய ஆசனம்.

உடல் சார்ந்த பயிற்சிகளை நாம் தினமும் செய்து வரும் போது உடல் மூலமாக வருகின்ற 80 சதவீதம் கர்ம வினை பதிவுகளை போக்கி கொள்ள முடியும். இந்த மூன்று நிலைகளை கடந்தால் தான், நான்காம் நிலையாகிய பிராணாயமம் செய்ய வேண்டிய மனநிலை வரும்.
அதற்கு முதல்படி என்ன வென்றால், நாம் புற உலகத்தோடு இருக்கின்ற தொடர்பை முதலில் குறைத்து கொள்ள வேண்டும். புற உலகம் என்பது மாயை. அக உலகம் என்பது நிஜம். நாம் வாழும் காலத்திலேயே நிஜத்தை உணர வேண்டும் என்றால், புற உலகில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட வேண்டும்.
எனவே நாடி சுத்தி பிராணாயமம் என்பது அக உலகிற்கு அழைத்து செல்லும் ஒரு அற்புதமான கருவியாகும். அப்படி அந்த பிரயாணத்திலே நாம் உள் நுழைந்து விட்டால், மூச்சுபிறக்கின்ற இடம் அல்லது மனம் உதிக்கின்ற இடத்திற்கு நம்மால் செல்ல முடியும். இந்த இடம் தான், மீதம் உள்ள 20 சதவீத கர்ம வினை பதிவுகளை கொண்டுள்ளது.
உடல் சார்ந்த 80% பதிவுகளை விட, மனம் சார்ந்த 20% பதிவுகள் தான் மிகவும் ஆபத்தானது. ஏனெனில், இன்றைய விஞ்ஞான உலகிலே, எவ்வளவோ மருத்துவ கண்டு பிறப்புகள் வந்தாலும், உடல் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட வழி உள்ளது. ஆனால் மருந்தால், மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு தியானம் மற்றும் நாடி சுத்தி பிராணாயாமம் சிறந்த வழியாகும்.
இதை தான், சித்தர்கள் மனம் அடங்கினால் மூச்சு ஒடுங்கும் என்றார்கள். எவ்வளவோ பேர் முயன்றும் ஒரு சிலர் மட்டுமே சித்தி அடைந்தார்கள். அடுத்த கட்டமாக மூச்சை ஒடுக்கினால் மனம் அடங்கும் என்றார்கள். அந்த வழி தான் நாடி சுத்தி பிராணாயாமம் ஆகும்.
எனவே நாடி சுத்தி பிராணாயாமம் எந்த நேரத்திலே செய்ய வேண்டும், என்கின்ற குழப்பம் வரும். அதிகாலை எழுந்தவுடன் மனம் உதிப்பதற்கு முன் நாடி சுத்தியை நாம் செய்தால், அன்று முழுவதும் மனம் அலையாமல், அமைதியாக இருக்கும். இதை ஆங்கிலத்தில் ஆல்பா நிலை என்பர்.
அதாவது மனம் ஒரு நொடிக்கு 14 அலை சுழல் (14CPS) அல்லது அதற்கு கீழே இயங்கும். இதுவே அமைதி நிலையாகும். அந்த நிலையிலேயே மனம் இருந்தால் அதற்கு ஐந்தாம் நிலையாகிய பிரத்தியாகாரம் என்று அஷ்டாங்க யோகத்தில் பதஞ்சலி சித்தர் குறிப்பிடுகிறார். அதன் அடுத்த நிலையே தாரணையாகும். அந்த தாரணையின் ஒடுங்கிய நிலைதான் தியானம் என்கின்ற ஏழாம் நிலையாகும்.
தியானம் 30 நிமிடங்கள் தொடர்ந்து மனம் எண்ணங்கள் அற்ற நிலையில் இருந்தால் எட்டாம் நிலையாகிய சமாதி நிலையாகும். சமாதி என்பது இறந்த பிறகு நம்மை நல் அடக்கம் செய்கின்ற இடம் மட்டும் அல்ல. வாழும் காலத்திலேயே சமாதி நிலைக்கு (சமம் + ஆதி) அதாவது இறைவனுக்கு சமமான நிலைக்கு செல்வது தான் கடைசி நிலை.
இதை தான் சித்தர்கள் ஜீவ பிரம்ம ஐக்கிய முக்தி நிலை என்கிறார்கள். இந்த நிலைக்கு நாம் வாழும் காலத்திலேயே செல்ல வேண்டும் என்றால் பிராணாயாமத்தின் மூலம் அகம் நோக்கி பிரயாணம் செய்தால் தான் அந்த நிலைக்கு செல்ல முடியும்.

இந்த எட்டு நிலைகளை தான், இந்த நவீன உலகிற்கு ஏற்றவாறு 3 நிலைகளாக சுருக்கி எளிமையாக அதற்கான பயிற்சிகளை கொடுத்த பெருமை வேதாத்திரி மகரிஷியையே சாரும். முதல் மூன்றை உடல் சார்ந்த நிலையிலும், நான்காவதை உயிர் சார்ந்த நிலையிலும், கடைசி நான்கை மனம் மற்றும் ஆத்மா சார்ந்த நிலையிலும் பயிற்சிகளை கொடுத்தார்கள்.
எனவே தினமும் பயிற்சிகளை ஒரு நாள் விடாமல் செய்ய வேண்டும். இதை நாம் நித்திய கடமைகளில் ஒன்றாக செய்ய வேண்டும். இப்படி தினமும் நாம் பழகும் போது, ஆல்பா நிலையில் இருந்து தீட்டா நிலைக்கு மனம் செல்லும். இந்த நிலையில் தான் மனம் கோள்களோடு தொடர்பு கொள்ளும். அந்த நிலையில் தான் கோள்களை நாம் நமது நண்பர்களாக மாற்றி கொள்ள முடியும். அந்த நிலையில் கோள்களில் இருந்து வரும் தாக்குதல்களை நாம் குறைத்து கொள்ள அல்லது தவிர்த்து கொள்ள முடியும்.
இதையும் கடந்த நிலை தான் டெல்டா நிலை. இந்த நிலையில் மனம் ஆனது இறை நிலையோடு சேர்ந்து விடும். தான் தானாக நின்று தன் மூலத்தை உணரும் நிலை இது தான். இதுவே முக்தி நிலை என்கிறோம். அப்படி தினமும் நாம் ஞான வாழ்க்கை வாழ்ந்தால் நம்முடைய மூச்சு ஆனது முதலில், ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுக்கு வந்து விடும்.
இது தான் முதல் வெற்றி படி நிலை. தொடர்ந்து இந்த நிலையை நாம் கடைபிடிக்கும் போது 3 முதல் 4 மாதங்களில் ஒரு நிமிடத்திற்கு 12 மூச்சாக குறைந்து விடும். அந்த நிலை தொடர்ந்து பயிற்சி செய்து வர 6 முதல் 9 மாதங்களில் ஒரு நிமிடத்திற்கு 10 மூச்சாக குறைந்து விடும். இது தான் நரை, திரை, மூப்பு இன்றி வாழும் ரகசியம் என்று திருமூலர் கூறுகிறார்.
நாடி சுத்தி பிராணாயாமம் மூலம் மூச்சின் எண்ணிக்கையை குறைத்தால் ஆயுள் நீளுகிறது. இதனால் நமது மரபணுவிலே (ஜீன்) மாற்றம் ஏற்பட்டு கர்ம வினை பதிவுகளை மாற்றுகிறது. அதனால் தான் காலனையே உதைக்கும் குறி என்று திருமூலர் கூறுகிறார். நம்முடடைய நடைமுறை வாழ்க்கையில் இதை சொல்லும் போது, விதியை மதியால் வெல்லக்கூடிய பயிற்சி என்கிறோம்.
இந்த விதியையும், மதியையும் நிர்ணயிப்பது கோள்களே. ஏனெனில், நம் தாயின் வயிற்றில் நாம் கருவாக உருவாகும் போது கோள்கள் எந்தெந்த தூரத்தில் தன்னை தானே சுற்றி கொண்டும், சூரியனை சுற்றி கொண்டும், சூரியனும் எந்த நிலையில் இருந்ததோ, அந்த காந்த அலை தூரத்தின் படி தான் விதி நிர்ணயிக்கப்படுகிறது. இந்த விதி தான் கோள்கள் மூலமாக நமக்கு வாழ்வில் ஏற்படுகின்ற நிகழ்வுகளாக வருகிறது. இதை தான் வானியல் மற்றும் ஜோதிடத்தில் தசா மற்றும் புத்தி என்கிறோம்.
தசை என்பது விதி, புத்தி என்பது மதியாகும். எனவே ஜோதிடத்தில் நம் விதி என்ன என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். அந்த விதியை நம் மதியால் (புத்தியில்) வெல்வது தான் ஜோதிட கலை. அதை தான் இந்த பயிற்சியின் மூலம் நாம் செய்கிறோம். இதற்கு வைராக்கியம் மிகவும் முக்கியம். அது இருந்தால் தான் கர்மாவை கடக்க முடியும். ஆனால் நாம் எந்த வைராக்கியத்தில் இருக்கிறோம், மேலும் அதிலிருந்து மாறும் வழி என்ன என்பதை பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்வோம்.






