என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

நன்றி உணர்வோடு இருப்போம்!
- ஒரு பேருந்தில் ஏறி அலுவலகம் செல்கிறோம்.
- பொதுநல நோக்கில் ஒரு வாழை நடுபவன் பல தென்னைமரங்கள் காண்பான்.
நன்றி உணர்வோடு வாழவேண்டும் என்பதில் அக்கறை காட்டும் அன்பு வாசகர்களே! வணக்கம்!.
'நன்றி' என்கிற தமிழ்ச் சொல்லுக்குத் தமிழில், உதவி, நன்மை, நல்லுணர்வு, உதவிக்கு உதவி செய்தல் எனப் பல பொருள்நிலைகள் உண்டு. எது எப்படியாயினும் நன்றி என்பது பல நன்மைகளையும் பல நல்லொழுக்கங்களையும் விளைவிக்கக்கூடிய செயல் ஆகும். பிரதிபலன் கருதாமல் ஒவ்வொருவரும் மற்றவருக்கு உதவ வேண்டும் என்று கூறும் திருவள்ளுவர், பெற்றவர் உதவியை மறந்துவிடக்கூடாது என்றும் கூறுகிறார். அப்படி அவர் நன்றிமறந்த செயலில் ஈடுபட்டால் அந்த நன்றல்லதையும் அன்றே மறந்துவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
இந்த உலகில் உள்ள உயர்திணை, அஃறிணை எனப்படும் உயிருள்ளவை உயிரற்றவை ஆகிய அனைத்துமே ஒன்றையொன்று சார்ந்து வாழும் தன்மையை உடையன. நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகிய அனைத்துமே ஒன்றினோடு ஒன்று சார்ந்து, ஒன்றினோடு ஒன்று இணைந்து, கொண்டும் கொடுத்தும் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் பரிவோடு உதவி வருகின்றன. இயற்கையிடமுள்ள இந்த நன்றியுணர்வு மனித இனங்களிடத்தும் பண்பட்டு இருக்குமானால் மனித வாழ்வு மாண்புடைய வாழ்வாகத் தழைத்துச் செழிக்கும்.
சிறுகுழந்தையாக மனிதன் இருக்கும்போதே அவன் எதைப்பெற்றுக் கொண்டாலும், உடனே 'நன்றி' என்று சொல்லச்சொல்லி நன்றியுணர்வோடு இருக்க வேண்டும் என்று கற்பித்து வளர்க்கப்படுகிறான். அன்றாடம் நாம் பெறுகிற ஒவ்வொன்றுக்கும் யாதானும் ஒருவகையில் அடுத்தவர் காரணமாக இருப்பதால், ஒவ்வொன்றைப் பெறும்போதும் நாம் நன்றியுணர்வோடு செயல்பட வேண்டும்.
ஒவ்வொரு நாளின் விடியலில் நாம் படுக்கையை விட்டு எழும்போதெல்லாம், அன்றைய விடியலுக்கு நன்றி சொல்லி எழவேண்டும்; ஏனென்றால் இன்றும் நாம் உயிரோடு இருக்கிறோம் உயிர் வாழ்வதற்கு என்பதற்காக!. பிறகு, சுவாசிக்கிற காற்றுக்கு நன்றி சொல்ல வேண்டும்; இன்றும் குறைந்து போகாமல், மாசடைந்து போகாமல் அது நாம் உயிர்ச் சுவாசம் செய்ய உதவுவதால்!. குளிக்கச் செல்லும்போது நீருக்கு, சமைக்கச் செல்லும் போது, பக்குவப்படுத்த உதவுகிற நெருப்புக்கு, உலகம் பெரியது, பரந்தது, விரிந்தது என வெளிகாட்டும் வானுக்கு, நமக்கு சகலத்தையும் தந்து நம்மைத் தாங்கிப் பிடிக்கிற நிலத்திற்கு… என இப்படி ஒவ்வொன்றுக்கும் முழுமனத்தோடு, உள்ளுணர்வோடு நன்றி செலுத்த வேண்டும்.
ஒரு பேருந்தில் ஏறி அலுவலகம் செல்கிறோம். அந்தப் பேருந்துக்கு நடத்துநர் இருக்கிறார்; ஓட்டுநர் இருக்கிறார். இவர்களை நன்றியுணர்வோடு நினைத்துக்கொண்டே பயணம் செய்ய வேண்டும்; ஏனெனில் பயணிகளின் பாதுகாப்பான பயணம் ஒவ்வொன்றுக்கும் இந்த இருவர் மட்டுமே முழுமையான பொறுப்பான காரணம். நடந்துநரும் ஓட்டுநரும் தங்களது பணி சிறப்பதற்கும், வாழ்க்கைப்பாடு நலமாவதற்கும் பயணிகளே காரணம் என்று அவர்களுக்கு நன்றியுணர்வோடு இருக்க வேண்டும். காசு கொடுத்துத்தானே பயணச் சீட்டு வாங்குகிறோம்! எனப் பயணியும், நமக்கு அரசாங்கம் தானே சம்பளம் தருகிறது! என்று நடத்துநர் ஓட்டுநரும் மூன்றாம் மனிதக் கண்ணோட்டத்தோடு, நன்றியுணர்வின்றிச் செயல்படத் தொடங்கினால் அது இயந்திரத்தனமான செயல்பாடாகத் திரிந்துபோகும்.
பணிபுரிகிற அலுவலகம் தொடங்கி, உண்ணச் செல்கிற உணவகம், காற்று வாங்கப் போகிற கடற்கரை, சேவை பெறப்போகிற மருத்துவமனை, அரசு அலுவலகங்கள், தேவையான பொருட்களை வாங்கச் செல்கிற பலசரக்குக்கடை, துணிக்கடை, மருந்துக்கடை, பழக்கடை, சாலையோரப் பூக்கடை வரை எங்கு சென்றாலும் எவரிடம் பெற்றாலும் அவர்களிடம் நன்றியுணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.
அன்போடு நடந்துகொள்ள வேண்டும், கருணையோடு நடந்துகொள்ள வேண்டும், கோபமின்றி நடந்துகொள்ள வேண்டும், நேர்மையோடு, இரக்கத்தோடு, இனிமையாக நடந்துகொள்ள வேண்டும்… என்றெல்லாம் நடத்தை குறித்துப் பொதுவாகக் கூறுவார்களே! நீங்கள் நன்றியுணர்வோடு நடந்து கொள்ளுங்கள் என்று ஒற்றைச் செயல்பாட்டை மட்டும் சொன்னால் எப்படி?; என்று பலர் என்னிடம் கேள்வி கேட்க வரலாம்.
சுந்தர ஆவுடையப்பன்
உங்களுக்கு என் நன்றி. நன்றி என்கிற உணர்வோடு மட்டும் மனிதர் வாழத் தொடங்கினால் போதும்; மற்ற எல்லா நல்ல குணங்களும் தாமாக வந்து அவர்களிடம் சேர்ந்து அணி சேர்த்துவிடும் என்கிறார் திருவள்ளுவர். உழவுக்கு நன்றி சொன்னால் வேளாண்மை செழிக்கும்; உழைப்புக்கு நன்றி சொன்னால் பணிசிறக்கும், திறமை பளிச்சிடும்; சமையலுக்கு நன்றி சொன்னால் உணவு ருசிக்கும்; மருத்துவத்துக்கு நன்றி சொன்னால் உடல் நலமாகும்; நண்பர்களுக்கும் சுற்றத்தினர்க்கும் நன்றி சொன்னால் உறவுகள் பலப்படும்; கடவுளுக்கு நன்றிசொன்னால் பக்தி பளிச்சிடும்; இசைக்கும், கலைகளுக்கும், இலக்கியத்திற்கும் நன்றி சொன்னால் மனம் அமைதியாகும், வாழ்க்கை வளமாகும். நன்றியுணர்வே மனித நற்குணங்களில் தலைமைக் குணம்.
ஒரு வயதான பெரியவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்; ஓர் இளைஞன் நாள்தோறும் மருத்துவமனைக்கு வந்து அவரை நன்றாகக் கவனித்துக் கொண்டான். காலையில் வந்ததும் அவரைக் குளிக்கவைப்பது, உடை மாற்றி விடுவது,உணவு ஊட்டிவிடுவது, மருந்து மாத்திரைகளை நேரத்திற்குத் தருவது என்று அக்கறையோடு முதியவரைப் பார்த்துக் கொண்டான். நாளடைவில் அவர் குணமடையத் தொடங்கியதும், அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டு, மருத்துவமனைக்குள்ளேயே இருந்த தோட்டத்துப்பக்கம் நடைப்பயிற்சியாக அழைத்துச் செல்லத் தொடங்கினான்.
இப்படியாக அந்த இளைஞன் ஒவ்வொரு நாளும் காலையில் வந்து, மாலைவரை அந்த முதியவருக்கு வேண்டிய பணிவிடைகள் செய்துவிட்டு மாலையில் வீட்டுக்குச் சென்றுவிடுவான். ஒருநாள் இரவு, அவரது உடல்நிலையில் ஏற்பட்டு வரும் அபாரமான முன்னேற்றத்தை பற்றி அவரைப் பரிசோதித்த நர்ஸ் கூறினார், " ஐயா! கடவுளுடைய அருளாலும், நாள்தோறும் வந்து இடைவிடாது கவனித்துச் செல்லும் உங்கள் மகனின் அன்பினாலும் நீங்கள் விரைந்து குணமாகி வருகிறீர்கள்!" என்று.
நர்சின் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்த பெரியவர் கூறினார்," நன்றி! உங்களைப்போலவே நானும் அந்த இளைஞன் எனது பிள்ளைகளில் ஒருவனாக இருக்க வேண்டுமென்றே விரும்புகிறேன்!" என்றார்.
அதிர்ந்த நர்ஸ் கேட்டார்," இவ்வளவு கரிசனத்தோடு உங்களைப் பார்த்துக்கொண்ட அந்த இளைஞன் உங்கள் மகன் இல்லையா? அப்படியானால் அவர் யார்?".
முதியவர் தழுதழுக்கக் கூறினார்," அவன் ஒரு அனாதை".
பொங்கிவழியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே அவர் மேலும் பேசினார், " அது நடந்து இருபது வருடங்களுக்கு மேலாகி விட்டது. அவன் சிறுவனாக இருந்த போது, ஒரு மசூதியின் வாசலில் நின்று நிறுத்த முடியாத கண்ணீரோடு அழுதுகொண்டிருந்தான். இறந்துபோன அவனது தந்தையை அப்போதுதான் அந்தப் பகுதியில் அடக்கம் செய்திருந்தனர். அவன் ஏதும் புரியாத சிறுவனாய் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தான்.
அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த நான் இந்தக் காட்சியைப் பார்த்தேன்; அந்த சிறுவனின் அழுகையை நிறுத்த எண்ணிய நான் அருகிலிருந்த ஒரு பெட்டிக்கடைக்குச் சென்று சில சாக்லேட்டுகளை வாங்கி வந்து அவனுக்கு ஊட்டி விட்டேன். அவனோடு எந்தப் பேச்சையும் நான் பேசவில்லை; அவன் அழுகை நின்றதும் நான் கிளம்பி விட்டேன். அதன்பிறகு பல ஆண்டுகள் எனக்கும் அவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
நீண்ட காலத்திற்குப்பின் சமீபத்தில்தான் என் முகவரியைக் கண்டுபிடித்து, நானும் என் மனைவியும் வசிக்கிற வீட்டிற்கு வந்தான். உங்களுக்கு ஏதாவது வெளிவேலைகள் இருந்தால் சொல்லுங்கள் நான் செய்து உதவுகிறேன் என்பான். அண்மையில் எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதும், என் மனைவியை அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டான். என்னை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு இப்போது நாள்தோறும் வந்து கவனித்துக் கொண்டிருக்கிறான்.
நான்கூடக் கேட்டேன்," தம்பி! அன்று நீ சிறுவனாய்த் தவித்தபோது நான் என்ன அவ்வளவு பெரிய உதவியா செய்து விட்டேன்?. இப்படி வந்து விழுந்து விழுந்து பணிவிடைகள் செய்கிறாயே?".
அதற்கு அந்த இளைஞன் சொன்ன பதில் என்ன தெரியுமா?. " ஐயா! அன்று நான் சிறுவனாக, தந்தையை இழந்த சோகத்தில் தவித்துக் கொண்டிருந்த போது, நீங்கள் அருகில் வந்து ஆறுதலாய் ஊட்டிவிட்ட சாக்லேட் இருக்கிறதே!.... அது இன்னும் என் நாக்கில் இனித்துக்கொண்டிருக்கிறது!".
ஆம் நண்பர்களே! அந்த இனிப்புதான் நன்றியுணர்வு. மனிதன் வாழ்க்கையின் அலைக்கழிப்பில் எத்தனையோ மேடு பள்ளங்களையும் கஷ்ட நஷ்டங்களையும் கடந்து வந்திருக்கலாம். தேவைப்படும் தருணத்தில், தேவைப்படும் அளவுக்குச் செய்யப்படும் உதவியே சிறந்த உதவி. உதவியில் பெரியது சிறியது கிடையாது. காலத்திற் செய்யப்படுகிற உதவி, தேவைப்படும் பயனாளிக்குச் செய்யப்படுகிற நன்மை அது வானத்தை விட உயரத்திலும் பரப்பளவிலும் பெரியது.
'வினை விதைத்தவன் வினை அறுப்பான்! தினை விதைத்தவன் தினை அறுப்பான்!' என்பது பழமொழி. எதைச் செய்கிறோமோ அதுவே பன்மடங்காக விளையும் என்பது இதன் பொருள். நன்மை செய்தால் நன்மை. தீமை செய்தால் தீமை!.விதைத் தத்துவம். ஆனால் ஒருவர் செய்த நன்மை அவருக்கு நன்றியுணர்வோடு திரும்ப வரும்போது, அது மதிப்புக் கூடிய நிலையில் பன்மடங்காகப் பெருகி வரும். ஒரே வழியில் வராது; அதுவும் பல்வேறு வழிகளில் வரும். பொதுநல நோக்கில் ஒரு வாழை நடுபவன் பல தென்னைமரங்கள் காண்பான். சில வெள்ளிக் காசுகளை அடுத்தவர் நன்மைகருதிச் செலவு செய்பவன் பல தங்கக் காசுகளை பல்வேறு வழிகளில் வரவாகப் பெறுவான். நன்றியுணர்வோடு திகழும் உலகில் இந்த விந்தைகளெல்லாம் நிகழக்கூடும்.
அந்தக்காலங்களில் பொங்கல், தீபாவளி வரும்போது விதம்விதமான வாழ்த்து அட்டைகளும் விற்பனைக்கு வரும். மக்கள் அதை வாங்கி, வேண்டியவர்கள் அனைவருக்கும் வாழ்த்து அனுப்பி மகிழ்வர். அப்போது கொஞ்சம் கூர்ந்து கவனித்திருந்தால், உங்களுக்கு நினைவுக்கு வரும்; வாழ்த்து அட்டைகள் தவிர நன்றி அட்டைகளும் விற்பனையில் இருக்கும். அவற்றையும் வாங்கி வாழ்த்துப் பெற்றவர்கள் நன்றி அட்டை அனுப்பி மகிழ்வர். இதுதான் நன்றியுணர்வு; பரஸ்பரம் அன்பைப் பகிர்ந்து மகிழும் தருணம்.இப்போது வாட்ஸ்அப் காலத்தில் எல்லா வாழ்த்துகளும் நன்றிகளும் இயந்திரத் தனமாய் மாறிப்போய் விட்டன.
இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை. ஒவ்வொருவரும் தனித்தனியே ஒரு 'நன்றிக் குறிப்பேடு' தயாரித்து வைப்போம். நாள்தோறும் டைரி எழுதுவதுபோல இன்றைய நன்றிக்குரிய மனிதர்கள் / நிகழ்வுகளைக் குறைந்தபட்சம் மூன்று எண்ணிக்கையில் குறித்து வைக்கத் தொடங்குவோம். நன்றிக்குரிய செயல்களைச் செய்வோம். நன்றியுணர்வோடு இருப்போம்!.
தொடர்புக்கு 9443190098






