என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    திருக்குறள் ஞான அமுதம்
    X

    திருக்குறள் ஞான அமுதம்

    • பெண்ணுக்குக் காவல் அவள் மனமே.
    • புண்ணியம் செய்த கணவனுக்கு புண்ணியம் மிகுந்த மனைவி கிடைப்பாள்.

    அதிகாரம்: வாழ்க்கை துணை நலம்

    இந்த அதிகாரத்தில்

    "மனைத்தக்க மாண்பு உடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கை துணை.

    என்ற குறளில் தொடங்கி

    மாங்கல்யம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் நன்கலம் நன்மக்கட் பேறு. "

    என்ற குறள் வரை மொத்தம் 10 குறட்பாக்கள் உள்ளன.

    இந்த அதிகாரத்தில் மனைவியின் குணப் பண்புகளைப் பற்றி வள்ளுவர் கூறுகின்றார். கணவனுடைய வருமானத்திற்குத் தகுந்தாற் போல செலவு செய்து அதே நேரத்தில் கணவனின் தேவைகளைப் பூர்த்தி செய்து வாழ்க்கை நடத்துபவளாக இருக்க வேண்டும். சமையற்கலை தெரிந்திருக்க வேண்டும்.

    மனைவி நற்பண்பு உடையவளாக இருத்தல் வேண்டும். அதுபோல கணவனும் நல்ல குணம் உடையவனாக இருக்க வேண்டும். அத்தகைய நற்பண்பு இல்லையெனில், எத்தகைய செல்வ வளம் இருந்தாலும் பயன் உள்ளதாக இருக்காது.

    சான்றோர்களை வரவேற்று மனைவி உபசரித்தால் கணவனுக்கும் பெருமை சேரும். எளிமையான தோற்றம் உடையவர்களாயினும் அவர்கள் மீது மரியாதை செலுத்தி வரவேற்பது குடும்பத்திற்கும், மனையாளுக்கும் சிறப்பாகும்.

    பெண்ணிற்கு கற்பு நெறி வேண்டும். அப்போதுதான் கணவன் தலை நிமிர்ந்து நடக்க முடியும். அத்தகைய கற்புநெறி, கணவன், மனைவி இருபாலருக்கும் பொருந்தும். கற்புடைய பெண்ணை விட மேலானது ஒன்றும் இல்லை.

    கணவனைத் தெய்வமாக மனைவியும், மனைவியைத் தெய்வமாகக் கணவனும் நினைத்தல் வேண்டும்.

    கணவனுக்குத் துன்பம் நேரிட்டால் மனைவி வருந்த வேண்டும். மனைவிக்குத் துன்பம் நேரிட்டால் கணவன் வருந்த வேண்டும். இருவருமே ஒற்றுமையுடன் இருந்தால், பருவ காலத்தில் மழை பெய்தால் நாடு எவ்வாறு செழிப்பாக இருக்குமோ அவ்வாறு அவர்களின் குடும்பம் மகிழ்ச்சியுடன் இருக்கும்.

    பெண் என்பவள் தன்னையும் காத்து தன் கணவனையும் காத்து, அவன் பெருமையைக் காப்பாற்றி புகழ் சேர்க்க வேண்டும். சோதனைக் காலங்களில் உறுதியாக நின்று குடும்பத்தின் பெருமையைக் காப்பாற்றுபவளே சிறந்த இல்லாள் ஆவாள்.

    பெண்ணுக்குக் காவல் அவள் மனமே. தனது மன உறுதியால், அவள் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளுதல் வேண்டும். அவளுக்குக் கணவன் வேலியிட்டுக் காப்பது அறியாமையாகும்.

    பெண்ணுக்குப் பெருமையாதெனில், கணவன் மிகவும் மகிழ்ந்து, அவளை மனைவியாய் அடைந்ததை நினைத்து வாழ்த்த வேண்டும். அவ்வாறு ஒத்த கருத்துடன் வாழ்தல் வேண்டும். அவ்வாறு இருந்தால் கடவுளும் அவர்களை வாழ்த்துவார். தேவர்களும், சான்றோர்களும் வாழ்த்துவார்கள்.

    இல்லறத்தின் மாண்பறியாத மனைவியை உடையவர்கள், பகைவர்கள் முன்பாகவும், மற்றவர்கள் முன்பாகவும் தலைநிமிர்ந்து நடக்க முடியாது. புண்ணியம் செய்த கணவனுக்கு புண்ணியம் மிகுந்த மனைவி கிடைப்பாள். அப்போது அவனுக்குப் புகழ் உண்டாகும்.

    மங்கலம் என்பது அழகு. வீடும் அழகாக இருக்க வேண்டும். அம்மனையாளும் இன்முகத்தோடு நல்ல சிந்தனையும், நற்குணப் பண்புகளும், உள்ளவளாக இருக்க வேண்டும். அவர்களுக்கு பண்புள்ள புத்திர பாக்கியம் உண்டாகும்.

    அதிகாரம்: மக்கட்பேறு

    இந்த அதிகாரத்தில்

    "பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவுஅறிந்த மக்கட்பேறு அல்ல பிற.

    என்ற குறளில் தொடங்கி

    மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்."

    என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.

    ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

    அறிய வேண்டியவைகளை அறிந்த மக்களாக தாம் பெற்ற மக்கள் இருக்க வேண்டும். எத்தகைய சிறந்த பதவிகளைப் பெற்றிருந்தாலும் தன்னை அறிந்து கொண்டவனாக இருக்க வேண்டும். புலால் உணவு உட்கொள்ளாமலும் உயிர்களைக் கொலை செய்யாத தன்மையைப் பெற்றும், குணப்பண்பு உடையவர்களாகவும் இருத்தல் வேண்டும். அத்தகைய உயர்ந்த பண்புள்ள பிள்ளைகளைப் பெறுவதே உயர்ந்த பாக்கியமாகும்.

    தோற்றத்தில் ஒழுக்கமும், ஒழுக்கத்தில் தோற்றமும் என்ற உண்மையை அறிந்திருக்க வேண்டும். யாரும் தான் விரும்பிப் பிறப்பதும் இல்லை; இறப்பதும் இல்லை. ஒரு சக்தி நம்மை ஆட்டிப் படைக்கின்றது என்பதை அறிய வேண்டும். இத்தகைய இயற்கையை அறிந்த மேன்மக்களை மக்களாகப் பெற்றிருந்தால் அது உயர்ந்த பிறப்பாகும்.

    ஞானிகளை பூஜை செய்பவர்களையும், சமுதாயத்திற்கு தொண்டு செய்பவர்களையும், அதற்கு தம்மையே அர்ப்பணித்துக் கொள்பவர்களையும் கருணையே வடிவாக விளங்குபவர்களையும், மரணத்தை வெல்லும் ஆற்றல் உடையவர்களையும் மகனாக பெற்றிருந்தால், இவ்வுலக மக்கள் மட்டுமல்லாமல் சான்றோர்களும், ஞானிகளும் மகிழ்வார்கள். அவர்களைப் பெற்றவர்களுக்கும் பெருமை உண்டு.

    ஒரு குடும்பத்தில் ஒரு ஞானி தோன்றினால், அவன் தாய் தந்தை செய்த பாவத்தைப் பொடியாக்குவான். ஏழு பிறவிக்கும் தாய் தந்தை செய்த பாவத்தைப் பொடியாக்குவான். ஏழு பிறவிக்கும் தாய் தந்தையரின் துன்பத்தை துடைப்பான், நரகம் வராமல் காப்பான். அவன், பழியைக் கண்டு அஞ்சி பழி சேர்க்காத மகனாக இருக்க வேண்டும்.

    சமுதாயத்தை அறிந்து, புரிந்து, சமுதாயத்தில் நடந்து கொள்பவர்களுக்குப் பழிபாவம் வராது, பொய், கோபம், காமம், வஞ்சனை போன்ற குணக்கேட்டினால் வரும் பழிகளிலிருந்து தப்பி விடுவார்கள். பிறரை வஞ்சிக்காத வாழ்க்கை வாழ்பவர்களாக இருத்தல் வேண்டும்.

    கைகூப்பும் தன்மையுடன் புண்ணியம் செய்த கரங்களைப் பெற்ற மக்களைப் பெற வேண்டும். சினத்தால், செல்வமிகுதியால், தீய எண்ணத்தால், கடுமையான மனத்துடன், தலைவணங்காத செயலாலும் ஒருவனுக்கு பழி வந்து சேர்ந்து விடும்.

    பிள்ளைப்பேறு என்பது குழந்தைச் செல்வம். சிலருக்கு தீவினை மிகுந்திருந்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், பிறருக்கு தீமை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல் தாய்,தந்தைக்கும் தீமையே செய்வார்கள்.

    நல்வினையும், புண்ணிய பலமும் ஞானிகளின் ஆசியும் பெற்ற மக்களுடைய குழந்தைகள், உலகுக்கு நன்மை செய்து, தாய், தந்தையருக்குப் பெருமை தேடித்தருவர்.

    கணவன்-மனைவியின் அன்புச் சின்னமாகவும், பாசத்தின் சின்னமாகவும் விளங்குவது அவர்கள் பெற்ற குழந்தைச் செல்வமே. அதன் மலர் போன்ற பிஞ்சுக் கைகளால் அன்னத்தைக் குழப்பி எடுத்து தாயின் வாயில் வைத்தால் குழந்தை மேல் உள்ள பாசத்தால் அந்த உணவு தாய்க்கு அமிர்தமாக இருக்கும்.

    அன்பு பொருந்திய காதலருக்குத் தோன்றிய தேன்துளியே குழந்தை ஆகும். அத்தகைய பாசமும், அன்பும் பொருந்திய குழந்தையைத் தொடுவதால் உடலுக்கு இன்பம். அதன் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பமாகும்.

    புல்லாங்குழலும், யாழும் இனிமை உடையவை. காதலின் சின்னமான அன்புக் குழந்தை இனிமையான கனி போன்றது. அக்குழந்தையின் மழலை மொழி குழலின், யாழின் இசையை விட இனிமையாக இருக்கும்.

    தந்தை மகனுக்குச் செய்யும் உதவி யாதெனில், கற்றோர் அவையில் தன் பெற்றோரைத் தலை நிமிரச்செய்தல் வேண்டும்.

    சிறந்த பதவிகளும், பட்டங்களும் தன் மகன் பெற்றிருந்தாலும், அவன் குணப் பண்பில் மிகுந்து, சிறப்பறிவு பெற்று இவ்வுலக மக்களுக்கெல்லாம் நன்மை செய்பவனாக இருத்தல் வேண்டும். தந்தையின் புண்ணிய பலமும், தலைவனின் ஆசியும் மகனுக்கும் கிட்டும்.

    பிரசவ காலத்திற்கு முன், குழந்தையின் அசைவு, அன்னைக்கு மகிழ்ச்சியை உண்டாக்கி, அவளது கற்பனையை வளர்த்து, குழந்தை பிறந்த பின்பும் மகிழ்ச்சியை உண்டாக்கும். அதை விட சான்றோர்கள் தம்மகனைப் புகழும்போது அவனைப் பெற்றெடுத்த காலத்தில் உண்டாகும் மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியடைவாள். தாய் ஸ்தானம் கடவுள் தன்மையுடையது. தாய், உயர்ந்த கருணை மழைக்கு ஒப்பானவள். தாய்க்கு நிகர் தாயே ஆவாள். மகன், தந்தைக்கு ஆற்றும் நன்றி யாதெனில் இத்தகைய கருணையுள்ள உயர்ந்த பண்புகளைக் கொண்ட இம்மைந்தனைப் பெற்றெடுக்க இவன் தாய், தந்தை எத்தகைய நல்வினைப்பயனைப் பெற்றிருக்கின்றார்களோ? என, சான்றோர் வியக்கும் வண்ணம் வாழ்தல் வேண்டும்.

    Next Story
    ×