என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

12 ராசிக்கும் சந்திரதோஷம் நீக்கும் பரிகாரங்கள்
- சந்திரன் பலம் குறைந்தால் படிப்பில் ஆர்வம் குறையும்.
- சிறிய வேலை செய்து கடுமையாக உழைத்தவர்கள் போல் பாவனை காட்டுவார்கள்.
சூரியனுக்கு அடுத்ததாக நமது கண்ணிற்கு புலப்படும் இயற்கை சக்தி சந்திரன். ஒரு ஜாதகத்தில் உடல்காரகன், மாத்ருகாரகன் மற்றும் மனோகாரகனாகிய சந்திரன் நல்ல பலம் பெற்று இருந்தால் மட்டுமே வாழ்வில் நடக்கும் அனைத்து சுப, அசுப நிகழ்வுகளை எதிர்கொண்டு கடக்கும் மனோதிடம் உண்டாகும்.
ஒருவர் அளவிற்கு அதிகமான இன்பத்தில் இருந்தாலும் தாங்க முடியாத துயரத்தில் வாழ்ந்தாலும் சந்திரனே காரணமாக அமைகிறது. ஒரு ஜாதகத்தில் குற்றம் மற்றும் குறைகளை மதி எனும் சந்திரனுக்கு பரிகாரம் செய்வதன் மூலம் நீக்க முடியும். இனி பனிரெண்டு ராசிக்கும் சந்திர தோஷம் நீக்கும் பரிகாரங்களைக் காணலாம்.
மேஷம்
மேஷ ராசிக்கு சந்திரன் நான்காம் அதிபதி. சந்திரன் ஆட்சி உச்சம், சுயசாரம் அல்லது வளர்பிறை சந்திரனாக இருப்பது நல்லது.சுய ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்றால் சிறந்த கல்வியாளராக நன்கு படித்தவராக இருப்பார்கள். படிப்பிற்கு ஏற்ற வேலை, தொழில் மூலம் அமையும் சுக போக வாழ்க்கை உண்டு. சிறந்த கல்வியாளராக நன்கு படித்தவராக இருப்பார்கள். தாய், தாய் வழி உறவுகளின் அன்பும், அரவணைப்பும் இருக்கும். பதினாறு வகைச் செல்வங்களும் நிரம்பி இருக்கும். ஆடம்பரமான சொத்துக்கள் நிறைந்தவர். விவசாயமும், ரியல் எஸ்டேட், கால்நடை வளர்ப்பில் ஆர்வம் அதிகம். சிறிய முயற்சியில் அதிக வருமானம் கிடைக்கும். உழைக்காத வருமானம் உண்டு.
முன்னோர்களின் சொத்துகளை வம்சாவளியாக பயன்படுத்துவார்கள். அரச பதவி, அரசு உத்தியோகம், அரசு வகை ஆதரவு உண்டு. சந்திரன் பலம் குறைந்தால் படிப்பில் ஆர்வம் குறையும். ஏற்ற இறக்கமான வருமானம் உண்டாகும். சொத்துக்கள் சேராது அல்லது சொத்துக்கள் பயன்படாது. தாயின் ஆதரவு குறையும்.
பரிகாரம்: திங்கட்கிழமை பால் அபிசேகம் செய்து பெண் தெய்வங்களை வழிபட வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு சந்திரன் முயற்சி ஸ்தான அதிபதி. சகாய ஸ்தான அதிபதி. சந்திரன் ஆட்சி உச்சம், சுயசாரம் அல்லது வளர்பிறை சந்திரனாக இருப்பது நல்லது.
வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும் வழங்கக் கூடிய உப ஜெய ஸ்தான அதிபதி. சந்திரன் சுப வலுப்பெற்றால் நல்ல ஞாபக சக்தி இருக்கும்.தொட்டது துலங்கும். திட்டுமிட்டு செயல்படுவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். ஆதாயம் இல்லாத செயலைச் செய்ய விரும்பாதவர்கள். எல்லா விசயமும் வேகமாகவும் தனக்கு சாதகமாகவும் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிகுதியாக இருக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டு. அண்டை அயலார் ஆதரவு உண்டு.
தானும் மகிழ்ச்சியாக இருப்பார். தன்னை சார்ந்தவர்களையும் சந்தோசமாக வைத்துக் கொள்வார்கள். சந்திரன் பலம் குறைந்தால் திட்டமிட்டு செயல்படத் தெரியாது. உடன் பிறந்தவர்களின் அன்பு அனுசரனை குறையும். ஒரு இடத்தில் நிலையாக வசிக்க முடியாது. அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்வார்கள். அண்டை அயலாரால் எல்லைத் தகராறு இருந்து கொண்டே இருக்கும்.
பரிகாரம்: திங்கட்கிழமை சுக்ர ஓரையில் வடக்கு நோக்கிய பெண் தெய்வங்களை வழிபட வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு சந்திரன் தன ஸ்தான அதிபதி. தன ஸ்தான அதிபதி என்பதால் சந்திரன் ஆட்சி உச்சம், சுயசாரம் அல்லது வளர்பிறை சந்திரனாக இருப்பது நல்லது.
சுய ஜாதகத்தில் சந்திரன் பலமானால் தொடர்ச்சியான வருமானம் உண்டாகும். பேச்சை மூலதனமாகக் கொண்ட தொழிலில் வல்லவர்கள். கல்லையும் காசாக மாற்றும் வித்தை தெரிந்தவர்கள்.குடும்ப உறுப்பினர்கள் இவர்களின் பேச்சிற்கு கட்டுப்படுவார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப பேசி காரியம் சாதிப்பார்கள்.கடினமாக உழைக்க விரும்ப மாட்டார்கள். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறி அதன் மூலம் ஆதாயம் தேடுவார்கள். சிறிய வேலை செய்து கடுமையாக உழைத்தவர்கள் போல் பாவனை காட்டுவார்கள். சந்திரன் பலம் குறைந்தால் நிலையான வருமானம் இருக்காது. குடும்ப உறவுகளின் அன்பு, ஆதரவு குறையும்.எதனையும் மிகைப்படுத்தலாக கூறுவார்கள்கள்.யாராவது எதிர்த்தால் அமைதியாவார்கள். கெஞ்சினால் மிஞ்சுவார்கள். மிஞ்சினால் கெஞ்சுவார்கள்.
பரிகாரம்: திங்கட்கிழமை குளத்து மீன்களுக்கு பொரியிட வேண்டும்.
கடகம்
கடக ராசிக்கு சூரியன் தனம், வாக்கு, குடும்ப கடக ராசிக்கு சந்திரன் ராசி அதிபதி சுய ஜாதகத்தில் சந்திரன் ஆட்சி உச்சம், சுயசாரம் அல்லது வளர்பிறை சந்திரனாக பலம் பெற்றால் அழகான தோற்றப் பொலிவும் தாய் அன்பும் நிறைந்தவர்கள்.நினைத்த செயலை நினைத்த மாத்திரத்தில் செய்து முடிக்கும் மனப்பான்மை உள்ளவர்கள். சுறுசுறுப்பாக இருப்பார்கள். சுய முயற்சியால் வெற்றிக்கனியை சுவைப்பவர்கள்.
சுக வாழ்க்கையில் நாட்டம் உண்டு. கற்பனை சக்தி, சாத்வீக குணம், எதிர்காலம் பற்றிய சிந்தனை மிகுதியாக இருக்கும். கதை, கட்டுரை எழுதுவதில் திறமைசாலிகள். பிறரை எளிதில் கவரும் குணம் இருக்கும். ஆன்மீகம், இல்லறம் என சிறப்பான வாழ்க்கை அமையும். சுய ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்தால் வெளியே தைரியமாக இருந்தாலும் உள்ளத்தில் பயமே மேலோங்கி நிற்கும். தன்னையும் நம்ப மாட்டார்கள். பிறரையும் நம்ப மாட்டார்கள்.சந்தேக குணம் மிகுதியாக இருக்கும். குறுகிய மனப்பான்மை அதிகம் உள்ளவர்கள்.
பரிகாரம்: பவுர்ணமி காலங்களில் சிவ சக்தியை வழிபட வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு சந்திரன் விரயாதிபதி என்பதால் சந்திரன் வலுக்கக் கூடாது. ஆட்சி உச்சம், சுயசாரம் என சந்திரன் பலம் பெற்றால் தேவையற்ற விரயங்கள், வைத்தியச் செலவு இருக்கும். வருமானம் உயர, உயர சுகம் தேடுவதில் அதிக சிந்தனை இருப்பதால் பெரும் முதலீடுள்ள தொழிலில் இருப்பவர்கள் கடுமையான தோல்வியை சந்திக்கிறார்கள். ஆரோக்கியமான உடலும் தெளிவான சிந்தனையும் கொண்ட ஒருவரே வாழ்வில் வெற்றி பெற முடியும். மன சஞ்சலத்தால் இவர்களுக்கு ஆரோக்கிய கேடு, கற்பனை பயம் அதிகமாகும். சிலர் தலை மறைவு வாழ்க்கை வாழ்வார்கள். வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பு.
பரிகாரம்: பவுர்ணமி அன்று தயிர் சாதம் தானம் வழங்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்கு சந்திரன் லாபாதிபதி. சுய ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்றால் ஆட்சி உச்சம், சுயசாரம் அல்லது வளர்பிறை சந்திரனாக பலம் பெற்றால் உழைக்காத வருமானம் உண்டு. தொட்டது துலங்கும். வாழ்வின் முன்னேற்றம், தொழில் தொடர்பான சிந்தனை, சுய முயற்சி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். ஒரு காரியத்தில் இறங்கினால் முடிக்காமல் ஓயமாட்டார்கள். வெளிநாட்டு வியாபாரம், வேலை, பயணம் சார்ந்த தொழில் மூலம் வருமானம் உண்டாகும். வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே இவர்களைத் தேடி வரும்.கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் திறமையாக பயன்படுத்திக் கொள்வார்கள் வழக்குகளில் வெற்றி உண்டாகும். சிலருக்கு வலுவான இருதார அமைப்பை ஏற்படுத்தும். சுய ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்தால் மனத்தின்வேகத்திற்கு ஏற்றவாறு இவரது செயல்களில் வேகம் இருக்காது.காரணமற்ற கவலைகளால் வாழ்க்கையை தொலைப்பவர்கள்.
பரிகாரம்: திங்கட் கிழமை வெண்பொங்கல் படைத்து அம்பிகையை வழிபட வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்கு சந்திரன் தொழில் ஸ்தான அதிபதி. சந்திரன் சுப வலிமை பெற்றவர்கள் ஆட்சி உச்சம், சுயசாரம் அல்லது வளர்பிறை சந்திரனாக இருந்தால் பின்னால் நடக்கப் போவதை முன் கூட்டியே யூகிக்கும் ஆற்றல் உண்டு. அதீத சுய சிந்தனை உண்டு. ஆழ்ந்த புலமையும், தொழில் ஞானமும், தெளிவான உள்ளுணர்வும், மன நிறைவும் நிரம்பியவர்கள்.முறையான திட்டமிடுதல் மூலம் அனைத்து விதமான நன்மைகளையும் அடைவார்கள். தனது சிந்திக்கும் திறனால், உள்ளுணர்வால் தொழிலில், வாழ்வில் ஏற்படப் போகும் அனைத்து ஏற்ற இறக்கங்களையும் உணர்ந்து செயல்படுவார்கள். தொழிலுக்கு அரச ஆதரவு உண்டு.
அரசியல் ஆர்வமும், பொது அறிவும் நிரம்பியவர்கள். சுய ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்தால் நிலையான, நிரந்தரமான தொழில் அமையாது. உறவுகளின் உழைப்பை, ஆதரவை சார்ந்தே வாழ்வார்கள்.
பரிகாரம்: பவுர்ணமி திதியில் மகாலட்சுமியை வழிபட வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு சந்திரன் பாதகாதிபதி என்பதால் எந்த நிலையிலும் சந்திரன் வலுக்கக் கூடாது. உண்மைக்கு தலை வணங்குவார்கள். கடவுள் மற்றும் பக்தி மார்க்கம் முன்னோர்கள் வழிபாட்டில் ஆர்வம் அதிகம். தெளிவான சிந்தனை, உயர்ந்த லட்சியம் இருக்கும். பிறருக்கு அடி பணிய மாட்டார்கள். மனதிற்குள் மேதாவித் தனம் இருக்கும். பல காரியங்களை கற்பனையில் செய்வார்கள். இருந்தாலும் சந்திர திசை, புத்தி காலங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும். பூர்வீகத்தில் வசிக்கக்கூடாது. வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பு.
பரிகாரம்: திங்கட்கிழமை செவ்வாய் ஓரையில் சிவனை வழிபட வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்கு சந்திரன் அஷ்டமாதிபதி. அஷ்டமாதிபதி வலுக்கக் கூடாது. சந்திர தசை, புத்தி காலங்களில் விபத்து, சர்ஜரி, வம்பு, வழக்கு உண்டு. வெகுசிலர் விபரீத ராஜ யோகத்தை அனுபவிப்பார்கள். வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். சுய தொழில் புரிபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பரிகாரம்: திங்கட்கிழமை குரு ஓரையில் சித்தர்களை வழிபட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்கு சந்திரன் ஏழாமதிபதி. மாரகாதிபதி.நல்ல அழகான வாழ்க்கைத் துணை அமையும். நிறைய நண்பர்கள் இருப்பார்கள். புதுப்புது நண்பர்கள் கிடைத்துக் கொண்டே இருப்பார்கள்.இவர்கள் முதலீடு அதிகம்இல்லாத சுய தொழில் செய்யலாம். இவர்களை வாடிக்கையாளர்கள் அதிகம் தேடித் தேடி வருவார்கள். சிறு சில்லரை வணிகம் செய்தால் பெரும் லாபம் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்யக் கூடாது. சந்திரன் பாதகாதிபதி என்பதால் நல்லவர்களையும், கெட்டவர்களையும் எளிதில் இனம் காணத் தெரியாது. இளகிய மனத்தால் எல்லோரையும் எளிதில் நம்பி கொடுத்து விட்டு பின் யோசிப்பார்கள். சந்திர தசை புத்தி காலங்களில் ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பாதிப்பு இருக்கும்.
பரிகாரம்: சங்கடஹர சதுர்த்தி நாட்களில் விரதம் இருந்து விநாயகரை அருகம்புல் சாற்றி வழிபடவும்.
கும்பம்
கும்ப ராசிக்கு சந்திரன் ஆறாம் அதிபதி என்பதால் சுய ஜாதகத்தில் சந்திரன் வலுக்கக் கூடாது.சந்திர தசை, புக்தி காலங்களில் மன சஞ்சலம் மிகுதியாக இருக்கும். சுயமாக சிந்திக்கும் திறனும், முடிவெடுக்கும் திறனும் இல்லாதவர்கள். கிடைக்கும் சந்தர்ப்பத்தையும், வாய்ப்பையும் பயன்படுத்த தெரியாதவர்கள். பிறரால் ஏமாற்றப்படுவார்கள்.
சதா எதையாவது நினைத்து கவலைப்பட்டு நோயை வளர்ப்பவர்கள்.நோய்க்கு வைத்தியம் செய்து கடன் உருவாகும்.மனக் கட்டுப்பாடு இல்லாதவர்கள். அதிக முதலீட்டில் சொந்த தொழில் செய்யக் கூடாது. அடிமைத் தொழிலே சிறப்பு.
பரிகாரம்: தினமும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையான நித்திய பிரதோஷ வேளையில் லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.
மீனம்
மீனம் ராசிக்கு சந்திரன் ஐந்தாம் அதிபதி என்பதால் சுய ஜாதகத்தில் சந்திரன் வலுப்பெறுவது மிகச் சிறப்பு. ஆழ்மன சிந்தனை நிறைந்தவர்கள். ஒரு இடத்தில் நிலையாக இருக்காமல் சுறுசுறுப்பாக இயங்கி புதிய முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். பூர்வீகச் சொத்தால் மிகுதியான பலன் உண்டு. குல தெய்வ அனுகிரகம் நிறைந்தவர்கள். பிள்ளைகளால் பெற்றோரும், பெற்றோர்களால் பிள்ளைகளும் பயன் பெறுவார்கள். எதையும் வரும் முன் அறியும் தீர்க்க தரிசிகள். தொழில் தொடர்பான ஆலோசனை வழங்குவதில் மதி மந்திரியாக திகழ்வார்கள். பகல் இரவு பாராமல் உழைத்து அனைத்து வசதிகளையும் தேடிக்கொள்பவர்கள்.
சுய ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்தால் புத்தி, சிந்தனை ஒரே மாதிரி இருக்காது.சந்திரன் வளர்பிறை, தேய்பிறை என வளர்வதும், பிறகு தேய்வதுமாக இருப்பதால் இவர்களது வாழ்க்கை வளர்வதும் தேய்வதுமாக இருக்கும்.
பரிகாரம்: தினமும் சந்திர ஓரையில் சிவ வழிபாடு செய்து வரவும்.
ஒருவரின் சுய ஜாதகத்தில் சந்திரனின் நிலைப்பாடு மிக மிக முக்கியம். மனம் சார்ந்த போராட்டத்தை சந்திக்காத மனிதர்கள் இருப்பது அரிது. ஒருவர் எந்த ராசி லக்னமாக இருந்தாலும் சந்திரன் பலம் குறைந்தால் மன அழுத்தம், மனம் சார்ந்த பிரச்சினைகள் இருக்கும். சந்திரனை சமன்படுத்த உரிய வழிபாட்டு முறைகளை பயன்படுத்துவது நல்லது.






