என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

விதியை மதியால் வெல்லும் பயிற்சி
- நாம் வாழும் காலத்திலேயே நிஜத்தை உணர வேண்டும் என்றால், புற உலகில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட வேண்டும்.
- தியானம் 30 நிமிடங்கள் தொடர்ந்து மனம் எண்ணங்கள் அற்ற நிலையில் இருந்தால் எட்டாம் நிலையாகிய சமாதி நிலையாகும்.
அன்பார்ந்த வாசகர்களே, கடந்த வாரம், நாடி சுத்தி பிராணாயாமத்தை எப்படி செய்து, நமது ஆயுள் மற்றும் கர்ம வினை பதிவுகளை எப்படி மாற்றுவது என்பதை பற்றி பார்த்தோம்.
ஆரம்ப காலத்திலே முதலில், மூச்சை உள் இழுத்து வெளிவிடுதல் என்கின்ற முறையில் இந்த பயிற்சியை செய்ய வேண்டும். குறிப்பாக நாம் முதலில் சொன்னது போன்று சுவாசக் குழலை சரி செய்து கொள்ள ஆரம்ப பயிற்சியை செய்து கொண்டால், நமது மூச்சு குழலில் உள்ள நுண் துகள்கள் கூட வெளியேறும். பிறகு நாடி சுத்தி பிராணாயாமம் செய்தால், நமக்கு 100 சதவீதம் முழு பலன் கிடைக்கும்.
நாடி சுத்தி பிராணாயாமம் என்பது இரண்டு தடவை மூச்சை உள் இழுத்து வெளிவிட்டால், ஒரு நாடி சுத்தி பிராணாயாமம் ஆகும். அதாவது இடது நாசி வழியாக உள் இழுத்து, வலது நாசி வழியாக வெளிவிட்டு, வலது நாசி வழியாகவே உள் இழுத்து, இடது பக்கம் மூச்சை வெளிவிடுவது தான் ஒரு சுற்று பிராணாயாமம்.
இடது கையில் சின் முத்திரையும், வலது கையில் நாசிகா முத்திரையும் அவசியம். முத்திரை சரியாக வைக்கவில்லை என்றால் நாடி சுத்தி பலன் தராது. இடது கையில் சின் முத்திரை என்பது ஆள்காட்டி விரலையும்,கட்டை விரலின் நுனியையும் அழுத்தும் போது நாம், காற்றையும், நெருப்பையும் நமக்கு உள்ளாக கட்டுக்குள் வைக்கிறோம்.
வலது கையில் நாசிகா முத்திரையில், ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் உள்ளங்கை பக்கமாக அழுத்தும் போது காற்றையும் ஆகாயம் என்கின்ற உயிரையும் நமக்கு உள்ளாக கட்டுக்குள் வைக்கிறோம்.
இதில் காற்று என்பது நமது பிராணன், நெருப்பு என்பது உஷ்ணமாக நமக்குள் இருக்க கூடிய உயிர். எனவே தான் நாடி சுத்தி என்பது உயிரை சுத்தப்படுத்த கூடிய பயிற்சி என்கிறார்கள், சித்தர்கள். இது நமக்குள் உள்ள அக உலகின் பல ரகசியங்களை நமக்கும் அறியவும், உணரவும் வைக்கும்.
பதஞ்சலி மகானின் யோக சூத்திரமானது, அஷ்டாங்க யோகம் என்று அழைக்கப்படுகிறது. முதல் இரண்டாக இயமம் மற்றும் நியமம் என்பது, மனிதனாக பிறந்தவர்கள், வாழ்க்கையில் எதை எதை செய்ய வேண்டும், எதை எதை எல்லாம் செய்ய கூடாது என்று அறிவுரை கூறுவதாகும். அதன் படி நாம் வாழ்ந்தால், அதற்கு பெயர் தான் கர்ம யோக வாழ்க்கை. ஆனால் அப்படி வாழ்வதற்கு, நம்முடைய கர்ம வினை பதிவுகள் நம்மை அனுமதிக்காது. அதற்கு வழிகாட்டி தான் குரு என்கின்ற இரண்டு எழுத்து மந்திரம்.
இந்த இயமம், நியமம் உபதேசங்களை நமக்கு அவர் உணர்த்துவார். அப்படி தொடர்ந்து செய்து வரும் போது, இந்த உடல் என்கின்ற வாகனம் தான் அனைத்திற்கும் மூலம், இதை வைத்து தான் பாவ பதிவுகளை போக்கி, புண்ணியங்களை அனுபவிக்க வேண்டும் என்கின்ற அறிவு அறியப்படும். அப்போது தான், உடல் மீது நமக்கு அக்கரை வரும். அந்த உடலை பேணி காப்பதற்கு, உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம் வரும். அந்த நிலை தான் மூன்றாம் நிலையாகிய ஆசனம்.
உடல் சார்ந்த பயிற்சிகளை நாம் தினமும் செய்து வரும் போது உடல் மூலமாக வருகின்ற 80 சதவீதம் கர்ம வினை பதிவுகளை போக்கி கொள்ள முடியும். இந்த மூன்று நிலைகளை கடந்தால் தான், நான்காம் நிலையாகிய பிராணாயமம் செய்ய வேண்டிய மனநிலை வரும்.
அதற்கு முதல்படி என்ன வென்றால், நாம் புற உலகத்தோடு இருக்கின்ற தொடர்பை முதலில் குறைத்து கொள்ள வேண்டும். புற உலகம் என்பது மாயை. அக உலகம் என்பது நிஜம். நாம் வாழும் காலத்திலேயே நிஜத்தை உணர வேண்டும் என்றால், புற உலகில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட வேண்டும்.
எனவே நாடி சுத்தி பிராணாயமம் என்பது அக உலகிற்கு அழைத்து செல்லும் ஒரு அற்புதமான கருவியாகும். அப்படி அந்த பிரயாணத்திலே நாம் உள் நுழைந்து விட்டால், மூச்சுபிறக்கின்ற இடம் அல்லது மனம் உதிக்கின்ற இடத்திற்கு நம்மால் செல்ல முடியும். இந்த இடம் தான், மீதம் உள்ள 20 சதவீத கர்ம வினை பதிவுகளை கொண்டுள்ளது.
உடல் சார்ந்த 80% பதிவுகளை விட, மனம் சார்ந்த 20% பதிவுகள் தான் மிகவும் ஆபத்தானது. ஏனெனில், இன்றைய விஞ்ஞான உலகிலே, எவ்வளவோ மருத்துவ கண்டு பிறப்புகள் வந்தாலும், உடல் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட வழி உள்ளது. ஆனால் மருந்தால், மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு தியானம் மற்றும் நாடி சுத்தி பிராணாயாமம் சிறந்த வழியாகும்.
இதை தான், சித்தர்கள் மனம் அடங்கினால் மூச்சு ஒடுங்கும் என்றார்கள். எவ்வளவோ பேர் முயன்றும் ஒரு சிலர் மட்டுமே சித்தி அடைந்தார்கள். அடுத்த கட்டமாக மூச்சை ஒடுக்கினால் மனம் அடங்கும் என்றார்கள். அந்த வழி தான் நாடி சுத்தி பிராணாயாமம் ஆகும்.
எனவே நாடி சுத்தி பிராணாயாமம் எந்த நேரத்திலே செய்ய வேண்டும், என்கின்ற குழப்பம் வரும். அதிகாலை எழுந்தவுடன் மனம் உதிப்பதற்கு முன் நாடி சுத்தியை நாம் செய்தால், அன்று முழுவதும் மனம் அலையாமல், அமைதியாக இருக்கும். இதை ஆங்கிலத்தில் ஆல்பா நிலை என்பர்.
அதாவது மனம் ஒரு நொடிக்கு 14 அலை சுழல் (14CPS) அல்லது அதற்கு கீழே இயங்கும். இதுவே அமைதி நிலையாகும். அந்த நிலையிலேயே மனம் இருந்தால் அதற்கு ஐந்தாம் நிலையாகிய பிரத்தியாகாரம் என்று அஷ்டாங்க யோகத்தில் பதஞ்சலி சித்தர் குறிப்பிடுகிறார். அதன் அடுத்த நிலையே தாரணையாகும். அந்த தாரணையின் ஒடுங்கிய நிலைதான் தியானம் என்கின்ற ஏழாம் நிலையாகும்.
தியானம் 30 நிமிடங்கள் தொடர்ந்து மனம் எண்ணங்கள் அற்ற நிலையில் இருந்தால் எட்டாம் நிலையாகிய சமாதி நிலையாகும். சமாதி என்பது இறந்த பிறகு நம்மை நல் அடக்கம் செய்கின்ற இடம் மட்டும் அல்ல. வாழும் காலத்திலேயே சமாதி நிலைக்கு (சமம் + ஆதி) அதாவது இறைவனுக்கு சமமான நிலைக்கு செல்வது தான் கடைசி நிலை.
இதை தான் சித்தர்கள் ஜீவ பிரம்ம ஐக்கிய முக்தி நிலை என்கிறார்கள். இந்த நிலைக்கு நாம் வாழும் காலத்திலேயே செல்ல வேண்டும் என்றால் பிராணாயாமத்தின் மூலம் அகம் நோக்கி பிரயாணம் செய்தால் தான் அந்த நிலைக்கு செல்ல முடியும்.
இந்த எட்டு நிலைகளை தான், இந்த நவீன உலகிற்கு ஏற்றவாறு 3 நிலைகளாக சுருக்கி எளிமையாக அதற்கான பயிற்சிகளை கொடுத்த பெருமை வேதாத்திரி மகரிஷியையே சாரும். முதல் மூன்றை உடல் சார்ந்த நிலையிலும், நான்காவதை உயிர் சார்ந்த நிலையிலும், கடைசி நான்கை மனம் மற்றும் ஆத்மா சார்ந்த நிலையிலும் பயிற்சிகளை கொடுத்தார்கள்.
எனவே தினமும் பயிற்சிகளை ஒரு நாள் விடாமல் செய்ய வேண்டும். இதை நாம் நித்திய கடமைகளில் ஒன்றாக செய்ய வேண்டும். இப்படி தினமும் நாம் பழகும் போது, ஆல்பா நிலையில் இருந்து தீட்டா நிலைக்கு மனம் செல்லும். இந்த நிலையில் தான் மனம் கோள்களோடு தொடர்பு கொள்ளும். அந்த நிலையில் தான் கோள்களை நாம் நமது நண்பர்களாக மாற்றி கொள்ள முடியும். அந்த நிலையில் கோள்களில் இருந்து வரும் தாக்குதல்களை நாம் குறைத்து கொள்ள அல்லது தவிர்த்து கொள்ள முடியும்.
இதையும் கடந்த நிலை தான் டெல்டா நிலை. இந்த நிலையில் மனம் ஆனது இறை நிலையோடு சேர்ந்து விடும். தான் தானாக நின்று தன் மூலத்தை உணரும் நிலை இது தான். இதுவே முக்தி நிலை என்கிறோம். அப்படி தினமும் நாம் ஞான வாழ்க்கை வாழ்ந்தால் நம்முடைய மூச்சு ஆனது முதலில், ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுக்கு வந்து விடும்.
இது தான் முதல் வெற்றி படி நிலை. தொடர்ந்து இந்த நிலையை நாம் கடைபிடிக்கும் போது 3 முதல் 4 மாதங்களில் ஒரு நிமிடத்திற்கு 12 மூச்சாக குறைந்து விடும். அந்த நிலை தொடர்ந்து பயிற்சி செய்து வர 6 முதல் 9 மாதங்களில் ஒரு நிமிடத்திற்கு 10 மூச்சாக குறைந்து விடும். இது தான் நரை, திரை, மூப்பு இன்றி வாழும் ரகசியம் என்று திருமூலர் கூறுகிறார்.
நாடி சுத்தி பிராணாயாமம் மூலம் மூச்சின் எண்ணிக்கையை குறைத்தால் ஆயுள் நீளுகிறது. இதனால் நமது மரபணுவிலே (ஜீன்) மாற்றம் ஏற்பட்டு கர்ம வினை பதிவுகளை மாற்றுகிறது. அதனால் தான் காலனையே உதைக்கும் குறி என்று திருமூலர் கூறுகிறார். நம்முடடைய நடைமுறை வாழ்க்கையில் இதை சொல்லும் போது, விதியை மதியால் வெல்லக்கூடிய பயிற்சி என்கிறோம்.
இந்த விதியையும், மதியையும் நிர்ணயிப்பது கோள்களே. ஏனெனில், நம் தாயின் வயிற்றில் நாம் கருவாக உருவாகும் போது கோள்கள் எந்தெந்த தூரத்தில் தன்னை தானே சுற்றி கொண்டும், சூரியனை சுற்றி கொண்டும், சூரியனும் எந்த நிலையில் இருந்ததோ, அந்த காந்த அலை தூரத்தின் படி தான் விதி நிர்ணயிக்கப்படுகிறது. இந்த விதி தான் கோள்கள் மூலமாக நமக்கு வாழ்வில் ஏற்படுகின்ற நிகழ்வுகளாக வருகிறது. இதை தான் வானியல் மற்றும் ஜோதிடத்தில் தசா மற்றும் புத்தி என்கிறோம்.
தசை என்பது விதி, புத்தி என்பது மதியாகும். எனவே ஜோதிடத்தில் நம் விதி என்ன என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். அந்த விதியை நம் மதியால் (புத்தியில்) வெல்வது தான் ஜோதிட கலை. அதை தான் இந்த பயிற்சியின் மூலம் நாம் செய்கிறோம். இதற்கு வைராக்கியம் மிகவும் முக்கியம். அது இருந்தால் தான் கர்மாவை கடக்க முடியும். ஆனால் நாம் எந்த வைராக்கியத்தில் இருக்கிறோம், மேலும் அதிலிருந்து மாறும் வழி என்ன என்பதை பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்வோம்.






