என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    இயற்கையை நேசித்த மக்கள் விஞ்ஞானி!
    X

    இயற்கையை நேசித்த 'மக்கள் விஞ்ஞானி'!

    • தாயிடமிருந்து மகளுக்கு வந்த அரிய குணம் இயற்கையை நேசிப்பது.
    • நூலைப் படைத்த ராக்கேல், மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்தார்.

    பலர் தடைகளைச் செய்த போதிலும் விடாது போராடி பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களையும் உயிரினங்களையும் காத்த ஒரு அதிசயப் பெண்மணி ராக்கேல் கார்சன். அமெரிக்க ஜனாதிபதி கென்னடியையே ஒரு கமிட்டி அமைக்க வைத்து தனது கூற்றை நியாயப்படுத்திய இந்த அமெரிக்கப் பெண்மணி அதிகம் அறியப்படாதவர். ஆனால் அரிய செயலைச் செய்தவர். இவரைப் பற்றித் தெரிந்து கொள்வது இயற்கை ஆர்வலர்களுக்கு உத்வேகம் ஊட்டும்.

    பிறப்பும் இளமையும்: அமெரிக்காவில் பென்சில்வேனியாவில் 27-5-1907-ல் ராக்கேல் கார்சன் சாதாரணமான நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு டிராவலிங் சேல்ஸ்மென். ஆகவே பெரும்பாலும் வீட்டில் இருக்க மாட்டார். தாயோ ஒரு இசைப் பாடகி. மகளின் புத்தி கூர்மையைக் கண்டு வியந்த தாய், தனது பெண்ணை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். பணம் பெரிய பிரச்சனையாக இருந்தது. தங்களுக்குச் சொந்தமாக இருந்த நிலத்தை விற்றார். படிப்புக்கு வழி வகுத்தார்.

    தாயிடமிருந்து மகளுக்கு வந்த அரிய குணம் இயற்கையை நேசிப்பது. இயற்கைக்கு ஊறு விளைவிப்போரை அவரால் சிறுவயதிலிருந்தே பொறுக்க முடியாது. பொங்கி எழுவார். இது பின்னால் உலக மக்களுக்குப் பெரிய நன்மையைச் செய்தது!

    இளம் வயது எழுத்தாளர்: எட்டாம் வயதிலேயே ராக்கேல் சின்னச் சின்னக் கதைகளை எழுத ஆரம்பித்தார். அந்தக் காலத்தில் நமது அம்புலிமாமா போல செயிண்ட் நிக்கலஸ் என்ற மாதப் பத்திரிகை ஒன்று குழந்தைகளுக்காக அமெரிக்காவில் வெளி வந்து கொண்டிருந்தது. அதை குடும்பத்தினர் படிப்பது வழக்கம்.

    1918, மே மாதம் தனது 11ஆம் வயதில் ராக்கேல் ஒரு கதையை எழுதி அந்தப் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தார். அது நான்கு மாதங்கள் கழித்து பத்திரிகையில் வெளியானதோடு சன்மானமாக பத்து டாலரும் கிடைத்தது.

    இரண்டே வருடங்களில் அவரது கதைகள் அனைவராலும் விரும்பிப் படிக்கப்படும் கதைகளாக அமைந்தன. இதனால் மகிழ்ந்த பத்திரிகை நிர்வாகம் அவரது ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு செண்ட் அளிக்க முன் வந்தது.

    உயிரியலாளர்: 27-ம் வயதில் கல்லூரிப் படிப்பை ராக்கேல் முடித்த போது அவரது தந்தை 71-வது வயதில் இறந்தார்.

    கடல் வாழ் உயிரினம் பற்றிய உயிரியலாளராக அவர் திகழ்ந்தார். கடலைப் பற்றிய அனைத்தும் அவருக்கு அத்துபடி. ரொமான்ஸ் அண்டர் தி வாட்டர் (Romance Under the Water) என்று மீன்களைப் பற்றி அவர் எழுதிய வானொலி உரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அவர் புகழ் எங்கும் பரவத் தொடங்கியது.

    அரசு வேலை ஒன்றும் அவருக்குக் கிடைத்தது. ஆகவே பணக் கவலை ஒழிந்தது. திருமணத்தைப் பற்றி அவர் சிந்திக்கவே இல்லை. தனியாகவே இறுதி வரை வாழ்ந்தார்.

    அப்போது இரண்டாம் உலக மகாயுத்தத்தில் பேர்ல் ஹார்பர் மீது நடந்த தாக்குதலினால் அமெரிக்கர்கள் அனைவரும் அதில் கவனம் செலுத்தவே 1941-ல் வெளியான அண்டர் தி சீ விண்ட்(under the sea Wind) என்ற அவரது புத்தகத்தைப் பற்றி யாரும் கவனிக்கவில்லை ஆனால் அடுத்து 1950-ல் "சீ அரவுண்ட் அஸ்" (Sea Around Us) என்ற அவரது புத்தகம் உலகளாவிய விதத்தில் கவனத்தை ஈர்த்தது. ஆறே மாதங்களில் இரண்டரை லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. அத்துடன் பல விருதுகளும் மெடல்களும் அவரைத் தேடி வந்தன.

    இயற்கையை உற்றுக் கவனித்து வந்த ராக்கேல் அதற்கு நாசம் விளைவிப்போரை எளிதில் இனம் கண்டார். மனிதர்கள் இயற்கையை அழிக்கலாமா, கூடாது என்று முடிவெடுத்த அவர் சைலண்ட் ஸ்பிரிங் - மவுன நீரூற்று - (Silent Spring) என்ற நூலை எழுதி செப்டம்பர் 1962-ல் வெளியிட்டார்.

    அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் கென்னடி நூலைப் படித்து வியந்தார். உலக மக்கள் அனைவரின் பார்வையையும் இது திருப்பியது. பெருத்த சர்ச்சையையும் தோற்றுவித்தது.

    ரசாயன உரத்தின் கேடு:

    அப்போது டிடிடி (DDT) என்ற உரம் வயலில் பயன்படுத்தப்பட ஆரம்பித்தது. இதைப் பற்றிக் கவலை அடைந்த ராக்கேல் அதை எதிர்த்து தீவிர பிரசாரத்தில் இறங்கினார்.

    ச.நாகராஜன்

    1939-ல் பால் முல்லர் என்பவர் DDT என்ற இரசாயனத்தை வயலில் பயிர்களை அழிக்கும் பூச்சிகளைக் கொல்லப் பயன்படுத்தலாம் என்றார். இதை ஏற்ற அமெரிக்க ராணுவம் 1943-ல் நேப்பிள்ஸ் நகரில் இதைத் தெளித்தது. அதனால் அந்த நகரில் பத்து லட்சம் பேர் தொற்று வியாதியினால் பீடிக்கப்பட்டனர்.

    1948-ல் டி.டி.டி.ஐக் கண்டு பிடித்த முல்லருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. கொசுக்களை ஒழிக்க டி.டி.டி. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் தெளிக்கப்பட்டது.

    1959-ல் 40000 டன்கள் டி.டி.டி. அமெரிக்கா முழுவதும் தெளிக்கப்பட அமெரிக்காவே கெமிக்கலினால் பாதிக்கப்பட ஆரம்பித்தது. கொதித்து எழுந்தார் ராக்கேல்.

    சைலண்ட் ஸ்பிரிங்: சைலண்ட் ஸ்பிரிங் நூலில் அவர், அமெரிக்காவின் நடுவில் இருப்பதாக ஒரு கற்பனை நகரத்தைப் படைத்தார்.

    நகரமே நாசமானது - கெமிக்கலினால். ஆடு, மாடுகள் அழிந்தன. மக்கள் மடிந்தனர். பறவைகள் ஒழிந்தன. தேனிக்கள் முற்றிலுமாகக் காணாமல் போனது. வயல்கள் வாடின. ஏரி, குளம், ஆறுகள் வறண்டன. மீன்கள் அழிந்தன. கறிகாய்களையே காணோம். மருத்துவர்கள் காரணம் தெரியாமல் விழித்தனர். மொத்தத்தில் சர்வ நாசம். இதற்குக் காரணம் மக்களே. கெமிக்கல்களை அவர்கள் ஆதரித்ததே இதற்குக் காரணம். இப்படி நூலைப் படைத்த ராக்கேல், மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்தார். டி.டி.டி. பற்றி ஏதாவது செய்யுங்கள் என்றார்.

    இந்தப் புத்தகம் எழுந்ததே அவர் இளமையில் கண்ட ஒரு காட்சியினால் தான்!

    ராக்கேல் சிறுமியாக இருந்த போது அவரது படுக்கை அறை ஜன்னல் வழியே ஒரு மைல் தூரத்தில் உள்ள குதிரைகளை வெட்டித் தள்ளும் ஒரு கசாப்புத் தொழிற்சாலையைப் பார்த்த வண்ணம் இருப்பார். அதிலிருந்த புகைபோக்கியில் இருந்து எழும் புகை வானத்தை மறைக்கும்.

    மாலை நேரத்தில் வெட்டப்பட்ட உபயோகமற்ற மாமிசக் குவியலில் இருந்து எழும் நாற்றமும், குதிரை மாமிசத்தினால செய்யப்பட்ட உரத்தின் நாற்றமும் கிராமம் வரை வந்து அனைவரையும் வாந்தி எடுக்கச் செய்யும். ஆகவே மாலை நேரங்களில் கிராம மக்கள் வீடுகளின் கதவுகளைத் திறப்பதே இல்லை.

    இந்த அவலத்தினால் ராக்கேலின் மனம் பெரிதும் பாதிக்கப்பட்டதில் வியப்பில்லை.இதனால் தான் கற்பனை நகரத்தை தனது நூலான மவுன நீரூற்றில் உருவாக்கி அதனால் பாதிக்கப்பட்டு அழிவை நோக்கிய நகரம் பற்றிக் கூறி அமெரிக்கப் பெண்மணிகளின் கவனத்தை அவர் ஈர்த்தார். அனைத்துப் பெண்மணிகளும் அவருக்கு ஆதரவாகப் பொங்கி எழுந்தனர்.

    அமெரிக்காவின் தேசீயச் சின்னமான கழுகு ஒரு லட்சத்திலிருந்து 500 ஜோடிகளாகக் குறைந்தது ஏன்? ரசாயன உரத்தினால் தான். அபாயகரமான உரம் அதன் முட்டைகளைக் குஞ்சு பொறிக்க விடாமல் பொறிப்பதற்கு முன் முட்டைகளை உடைத்து விட்டதால் இந்த அபாயம் ஏற்பட்டது!

    இதையெல்லாம் உணர்ந்ததால் உலக மக்களிடையேயும் ஒரு பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டது;

    கென்னடி அமைத்த குழு:

    புத்தகத்தின் தாக்கத்தை உணர்ந்த அமெரிக்க அரசும் விழித்தெழுந்தது. ஜனாதிபதி கென்னடியின் தலைமையிலான ஒரு விசேஷ குழு இதை ஆராய ஆரம்பித்தது.

    1962, ஆகஸ்ட் மாதம் அவர்கள் அமெரிக்க ஜனாதிபதியான கென்னடியிடம், அரசு டி.டி.டி. பற்றி ஏதேனும் செய்யப் போகிறதா இல்லையா என்று கேட்டனர்.

    அவர் உடனடியாக இப்படி பதிலளித்தார்:

    "ஆம்.செய்யப் போகிறோம். குறிப்பாக மிஸ் கார்சனின் புத்தகத்தால் தான். ஆனால் இதை அவர்கள் (கமிட்டி) பரிசீலித்து வருகிறார்கள்".

    கென்னடியின் அறிவியல் குழு 1963 மே மாதம் 15-ந் தேதி தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது.

    "சைலண்ட் ஸ்பிரிங் வெளிவரும் வரை பொதுவாக உரங்களில் விஷத் தனமை இருப்பது பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்தது. ஆனால் சுற்றுப்புறச்சூழல் கேட்டை ரசாயன உரங்களைக் கட்டுப்படுத்துவன் மூலமே தடுத்து நிறுத்த முடியும்."

    வணிக நோக்கில் இது வணிகர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் ரசாயனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் விடாது போராடிய கார்சனுக்கு மக்களின் ஆதரவினால் வெற்றியே கிடைத்தது!

    1972-ல் அமெரிக்க அரசு விவசாயத்தில் டி.டி.டி. உபயோகத்தைத் தடை செய்தது.என்றாலும் கூட மலேரியாவைத் தடுப்பதற்கு டி.டி.டி. அனுமதிக்கப்பட்டது. இதையும் ராக்கேல் எதிர்த்தார்.

    இதய நோயால் பாதிப்பு: இதற்கிடையில் அவரது உடல் நிலை இதய நோய்களுள் ஒன்றான ஆஞ்ஜினா வியாதியால் பாதிக்கப்பட்டது. அவருக்கு மார்பகப் புற்று நோயும் வந்து சேர்ந்தது. 1964-ல் கான்சர் உடல் முழுவதிலும் பரவி விடவே அவர் தலைமயிர் எல்லாம் உதிர்ந்து தலை வழுக்கையானது. எலும்புகள் பலஹீனமாக ஆகி விடவே அவர் வீல் சேரிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 1964 மார்ச் மாதம் கான்ஸர் கல்லீரலைத் தாக்கி அவரை வெகுவாகப் பாதித்தது.

    இது போன்ற உடல் நிலையில் தான் அவர் அமெரிக்க கமிட்டி முன்னர் ஆஜராகி தன் தரப்பு வாதங்களை முன் வைத்தார்.

    டி.டி.டி. போன்ற ரசாயன உரங்கள் முதலில் பூச்சிகளைக் கொல்லும். பின்னர் உணவுச் சங்கிலித் தொடரினுள் புகுந்து உணவையே நச்சாக்கும். அதனால் பறவைகள், மீன் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்தொழியும். ஏனெனில் அவை இப்படிப்பட்ட நச்சு உணவுகளை உட்கொள்ள வேண்டிய சுற்றுப்புறச் சூழ்நிலை கேடு உருவாவதால் தான்! ஆகவே இதற்கு ஒரு முடிவு கட்டுங்கள் என்றார் அவர். 'மக்கள் விஞ்ஞானி' என்ற பெயருடன் புதுமையாக மலர்ந்த அவர் மக்களுக்காக அரிய உண்மைகளைப் புள்ளி விவரங்களுடன் தொகுத்து வழங்கினார்.

    மறைவு: தனது வியாதி பற்றி அவர் யாரிடமும் சொல்லவில்லை. ஆகவே அவரது கான்சர் பற்றி இறுதி வரை மக்களுக்குத் தெரியவில்லை.

    1964-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி அவர் காலமானார். அவரது அஸ்தியின் ஒரு பகுதி மேரிலாந்தில் அவரது தாயாரின் கல்லறையில் புதைக்கப்பட்டது. இன்னொரு பகுதி ஷீப்ஸ்காட் பே என்ற இடத்தில் தெளிக்கப்பட்டது.

    இன்று சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்கும் அம்சங்கள் முன்பை விட ஏராளமாகப் பெருகி விட்டன. ஆனால் ராக்கேல் கார்சன் போல அயராது பாடுபட்டு அந்த அம்சங்களை ஒழிக்க ஆள் தான் இல்லை.

    'தி நன் ஆப் நேச்சர்' - இயற்கையின் கன்யாஸ்தீரி என்று அன்புடன் அழைக்கப்பட்ட கார்சனின் புகழ் என்றும் இலங்கும்!

    ராக்கேலின் செய்தி: ராக்கேல் கார்சன் உலக மக்களுக்குக் கூறியது ஒன்றே ஒன்று தான் - "மனித குலமும் உயிரினங்களும் நீடித்து இருக்க, இயற்கையை நேசியுங்கள், சுற்றுப்புறச் சூழலை மாசு படுத்தாதீர்கள்!"

    தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

    Next Story
    ×