என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

மூளைக் கழிவுகளை அகற்றும் வழிமுறை
- மன அழுத்தம், கட்டுப்பாடற்ற உணர்ச்சிகளால் சில நச்சுகளை நாமே உருவாக்கிக் கொள்கிறோம்.
- சிலவகையான வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்தி உடலில் நச்சுகளை உருவாக்குகின்றன.
"சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு."
-குறள் (நீத்தார் பெருமை-27)
பொருள்: சுவை, பார்வை, தொடுதல், கேட்டல், முகர்தல் என்று கூறப்படுகின்ற ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில்தான் உள்ளது உலகம்.
மனிதர்களுக்குச் சுவை, பார்வை, தொடுதல், கேட்டல், மற்றும் முகர்தல் போன்ற ஐம்புலன்கள் உண்டு என்பது நமக்குத் தெரிந்ததே. இந்த ஐந்து புலன்களும்தான் மனிதர்களை மனிதர்களாக அடையாளம் காண்பிக்கின்றன. இவை அனைத்தும் மூளையுடன் தொடர்புடையவை. மேலும், இவை மூளையின் கட்டளையை ஏற்றுச் செயல்படக்கூடியவை. பகல் முழுவதும் நாம் பல வேலைகளை உடல் மற்றும் மூளையைப் பயன்படுத்திச் செய்கின்றோம்.
இதனால் உடலிலும், மூளையிலும் பல கழிவுகள் சேர்கின்றன. இந்தக் கழிவுகளை உடல் உடனுக்குடன் அகற்றி விடுகிறது. ஆனால் மூளை அந்தக் கழிவுகளைச் சேமித்து வைத்து, இரவு நேரங்களில் நாம் அயர்ந்து உறங்கும்போது வெளியேற்றி மறு நாள் காலை சுறு சுறுப்புடன் செயலாற்ற உதவுகிறது. இதை "மூளை நச்சு வெளியேற்றம்" (Brain Detoxification) என்று அழைக்கின்றோம். இதைச் செய்வது மூளையின் கழிவுகளை அகற்றும் கழிவு மேலாண்மை அமைப்பு (கிளிம்பேடிக் சிஸ்டம்) ஆகும்.
உடலில் நச்சுகள் ஏற்படுவதற்கான சில காரணங்கள்?
தொழில்நுட்ப வளர்ச்சியால், மிகுந்த காற்று மாசு, நிலத்தடி நீர் மாசு உள்ளிட்ட பல தவிர்க்க முடியாத கேடுகளை மனித குலம் எதிர்கொண்டு வருகிறது. இதன் காரணத்தால் காற்றில் கலந்திருக்கும் உலோகப் பொருட்களான சல்பர் டை ஆக்சைடு, கார்பன், நைட்ரஜன் உள்ளிட்டவைகளைச் சுவாசிக்க நேரிடுகிறது. இதனால் உடலில் நச்சுத்தன்மைகள் உண்டாகின்றன. அதேபோல, தூய்மையற்ற நீர் மற்றும் உணவு, தொழிற்சாலை மற்றும் ஊர்திகளின் புகை, புகையிலைப் பயன்பாடு, அதிகப்படியான ஆல்கஹால் அருந்துவது, போதைப் பொருட்கள் பயன்படுத்துவது உள்ளிட்ட பல காரணங்களாலும் நச்சுகள் உடலினுள் தேங்குகின்றன. பாக்டீரியா, ஈஸ்ட் மற்றும் வைரஸ்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் தொற்று நோய்கள், நம் உடலில் நச்சுகள் சேரக் காரணமாகின்றன.
சில நச்சுகளை நாமே உற்பத்தி செய்கிறோமா?
ஆம்! மன அழுத்தம், எதிர்மறை எண்ணங்கள் மற்றும் கட்டுப்பாடற்ற உணர்ச்சிகளால் சில நச்சுகளை நாமே உருவாக்கிக் கொள்கிறோம். இவை சிலவகையான வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்தி உடலில் நச்சுகளை உருவாக்குகின்றன. இந்த நச்சுகளை வெளியேற்ற உடலில் சில அமைப்புகள் உள்ளன.
நச்சு நீக்கத்தை உடல் எவ்வாறு மேற்கொள்கிறது?
நச்சு நீக்கம் என்பது உடலில் இருக்கும் செல்களில் இருந்து நச்சுகளை அகற்றிச் தூய்மைப்படுத்தும் செயலாகும். இந்தச் செயலை மூளை, உடல் உறுப்புக்களைப் பயன்படுத்திச் செய்து முடிக்கிறது. இந்தச் செயல் உடலில் சரியாக நடைபெறவில்லை என்றால், கடுமையான உடல்நலச் சிக்கல்கள் ஏற்படும். பயனுள்ள நச்சு நீக்கம் செல் புதுப்பித்தலுக்கு வழிவகை செய்து, உடலுக்கு நிறைய நலம், ஆற்றல், மற்றும் நீண்ட ஆயுளைத் தருகிறது.
மரு.அ.வேணி
உடலின் நச்சு நீக்க அமைப்புகள் யாவை?
உடலில் கழிவுகளை அகற்றப் பல அமைப்புகள் உள்ளன. தோல், கல்லீரல், நுரையீரல், பெருங்குடல் மற்றும் சிறுநீரகங்கள் ஆகியவை கழிவுகளை அகற்றும் பணிகளைச் செய்கின்றன. இப்படி மனித உடல் தன்னைத்தானே நச்சு நீக்கும் திறனைக் கொண்டுள்ளது. இருப்பினும், இயற்கையான நச்சுத்தன்மை அதிகப்படியாகச் சேரும்போது, அந்த நச்சுக்களைப் போதுமான அளவில் நம் உடலால் அகற்ற முடியாமல் போகிறது. அப்போதுதான் நோய்கள் வரத்தொடங்குகின்றன. இப்படி ரத்தம், பெருங்குடல் மற்றும் நிணநீர் போன்றவற்றில் சேரும் நச்சுகளை நீக்கி உடலின் சமநிலையைச் சரிசெய்வதில் நச்சு நீக்க அமைப்புகள் முதற்பங்கு வகிக்கின்றன. மூளையில் உள்ள நச்சு நீக்க அமைப்பு சில சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளது.
மூளையில் உருவாகும் நச்சுகள்:
பீட்டா-அமைலாய்டு என்ற நச்சுப் பொருள்தான் அல்சைமர் எனப்படும் மூளை மழுங்கு நோய்க்குக் காரணம். இந்த நச்சு இரவு நேரத்தில் வெளியேற்றப்படுகிறது. இதே போல் பலவிதமான வளர்சிதை மாற்றத்தினால் ஏற்படும் கழிவுகள் தொடர்ந்து தேங்கிக் கொண்டே இருக்கும்போது, நம் மூளைக்கு அவை அனைத்தும் நச்சுப்பொருட்கள் தான். இந்த நச்சுப்பொருட்கள், அகற்றப்படாவிட்டால் மறதி நோய் (Dementia), நடுக்குவாத நோய் (Parkinson Disease), மனச்சோர்வு (Depression), முடிவெடுப்பதில் குறைபாடு என மேலும் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. மூளையின் கழிவுகள் அகற்றப்படுவதற்குக் கீழே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
மூளையின் கழிவுகளை அகற்ற நாம் பின்பற்ற வேண்டியவைகள்.!
ஆழ்ந்த இரவு உறக்கம் (REM Sleep):
மூளை தன்னைத்தானே சுத்தம் செய்துகொள்வதற்கு ஆழ்ந்த உறக்கம் அவசியம். உறக்கத்தைத் தள்ளிப்போட்டு 6 மாதங்களுக்கு மேலாக வேலை செய்து கொண்டே இருக்கும்போது மூளைத் தொடர்பான நோய்கள் சிறுவயதிலேயே வரக்கூடும்.
அதிக வெளிச்சம் உள்ள தொலைக்காட்சி, அலைபேசி, கணினி, மடிக்கணினி ஆகியவற்றின் பயன்பாட்டை உறங்குவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்பு நிறுத்த வேண்டும்.
இரவு உணவிற்கும், உறங்குவதற்கும் இடையே இரண்டு மணி நேர இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், செரிமானம் பற்றிய எச்சரிக்கை மூளைக்குச் சென்று கொண்டே இருக்கும். இதனைத் தவிர்க்க ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் இரவு உணவை முடித்துக் கொள்ள வேண்டும்.
தேநீர், காபியை மாலை 6 மணிக்குப் பிறகு தவிர்த்துக் கொள்வது ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கும். அலைபேசியைத் தூங்கும்போது 10 அடி தொலைவு தள்ளி வைக்க வேண்டும். அலைபேசியிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சானது மூளையை வெகுவாகப் பாதிக்கும். எனவே தலைமாட்டிலேயே அலைபேசியை வைத்துக் கொண்டு தூங்கும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
நோன்பிருப்பது மூளையில் இருந்து கழிவுகளை அகற்றுவதற்கு உதவிபுரிகிறது. உணவில் மஞ்சள், இஞ்சி, பூண்டு மற்றும் பச்சைக் காய்கறிகளைக் குறிப்பாகக் கீரைகள், பீட்ரூட் அதிகம் பயன்படுத்துவதால் மூளையின் கழிவுகள் எளிதாக அகற்றப்படும். இந்த "மூளைக்கான உணவுகள்" ப்ரீ ரேடிக்கல் வீணாவதை எதிர்த்துப் போராடி மூளையைப் பாதுகாக்கின்றன.
நார்ச்சத்து நிறைந்த பல்வேறு காய்கறிகள், கீரைகள், பழங்கள் மற்றும் தானியங்கள் போன்றவை மூளையில் இருந்து கன உலோகங்களை மற்றும் தீங்கு விளைவிக்கும் புரதப் பொருட்களை அகற்ற உதவுகிறது. மூளை மற்றும் ரத்தத்தில் பாதரசத்தின் அளவைக் குறைக்க நார்ச்சத்து உதவுகிறது. எனவே நம் மூளை மற்றும் உடலின் ஒட்டு மொத்த நலனுக்கு இந்த நார்ச்சத்து இன்றியமையாதது என்பதை உணர்ந்து அன்றாடம் உணவில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
உணவில் "வைட்டமின் சி" சத்து அதிகமுடைய நெல்லிக்கனி, எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா, கிவி, தக்காளி மற்றும் ஒவ்வொரு நாளும் ஒரு தேக்கரண்டி தேன் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது நல்லது. இதில் ஆண்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளதால் மூளையில் உள்ள செல்கள் சேதமடைவதைத் தவிர்க்க உதவுகின்றன.
"வைட்டமின் டி" சூரிய ஒளியில் இருந்து இயற்கையாகக் கிடைக்கக்கூடிய ஒன்றுதான். நாளும் 15 நிமிடங்களாவது சூரிய வெளிச்சம் நம் மீது படுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த வைட்டமின் ''டி'' நமது ஒட்டு மொத்த மூளை மற்றும் நரம்பியலின் நலனுக்கு இன்றியமையாதது.
நாளும் உடற்பயிற்சி செய்வதால் மூளையின் கழிவுகள் அகற்றப்பட்டு அதன் நலன் பேணிப் பாதுகாக்கப்படும். நாளும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி (யோகா, தியானம், மூச்சுப் பயிற்சிகள்) செய்வது நல்லது.
மேற்கூறப்பட்டுள்ள அனைத்தும் கடினமான செயலா? நம் மூளையின் நலனுக்காக நாம் நமக்கு இதனைச் செய்துகொள்ளாமல் வேறு எவர் வந்து செய்வார்? உடல் தூய்மையாகவும், மனநிறைவோடும் இருப்பதுதான் நல்வாழ்வின் அடையாளம்.
மூளையின் கழிவுகளை அகற்றுவதன் வாயிலாகத் தேவையற்ற மன அழுத்தங்கள் இன்றி, மனத்தைப் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்வதன் மூலம், நலமிக்க வாழ்க்கையை வாழ முடியும். மூளையின் கழிவுகளை அகற்றுவோம். முழு நலத்துடன் வாழ்வோம்.
போன்: 75980-01010, 80564-01010.






