என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் 55 நாட்களுக்கு பிறகு ஆட்டோ, கார்கள் இயங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    புதுச்சேரி:

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசின் அறிவிப்புக் கிணங்க புதுவையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அன்று முதல் புதுவையில் பஸ்கள், ஆட்டோக்கள் மற்றும் கார்கள் இயங்கவில்லை. இதற்கிடையே மத்திய அரசு 4-வது கட்டமாக ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டித்துள்ளது.

    அதேவேளையில் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தி உள்ளது. மேலும் கொரோனா பரவல் இல்லாத மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அதி காரத்தை வழங்கி உள்ளது.

    இதையடுத்து புதுவையில் ஊரடங்கு தளர்வு மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது.

    மேலும் பஸ், ஆட்டோ, வாடகை கார்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. பஸ்களில் பயணிகள் சமூக இடைவெளி விட்டு பயணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    ஆட்டோக்களில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்றும், கார்களில் டிரைவர் உள்பட 3 பேர் பயணம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பையடுத்து புதுவையில் 55 நாட்களுக்கு பிறகு ஆட்டோ, கார்கள் இயங்கின. அதே வேளையில் பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவித்தாலும் இன்று காலை அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் இயங்கவில்லை. புதுவை பஸ் நிலையம் வழக்கம் போலவே இன்றும் காய்கறி மார்க்கெட்டாக இயங்கியது.

    புதுவை எல்லைக்குள் மட்டுமே பஸ்களை இயக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதாலும், பஸ் கட்டணம் குறித்து அரசு அறிவிப்பு ஏதும் வெளியிடாததால் பஸ்கள் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இன்று மதியத்துக்கு மேல் பஸ்கள் இயக்கப்படும் என தெரிகிறது.

    அதேவேளையில் புதுவையில் இருந்து தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த பஸ்களில் தமிழக பகுதிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மட்டுமே பயணம் செய்தனர்.

    இதுபோல் புதுவையில் நாளை (புதன்கிழமை) முதல் மதுக்கடைகள் திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான கோப்பு கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கோப்புக்கு கவர்னர் அனுமதி அளிப்பார் என கூறப்படுகிறது.

    எனவே, புதுவையில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என தெரிகிறது.

    கேரளாவுக்கு சென்ற புதுச்சேரி விமான நிலைய ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுச்சேரி கென்னடி கார்டனை சேர்ந்த 28 வயது இளைஞர் கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இதற்காக அவர் மோட்டார் சைக்கிளிலேயே கண்ணூர் சென்றுள்ளார். அப்போது கடந்த 16-ந் தேதியன்று விபத்தில் சிக்கினார். இதனையடுத்து அவர் சேர்க்கப்பட்ட மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து கேரள சுகாதாரத்துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில் அவருக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றோம். மேலும் அவரது உறவினர்கள், நண்பர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்து வருகின்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் புயல் முன்னெச்சரிக்கையாக 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    தென்கிழக்கு வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்ற ழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெற்றுள்ளது. இதற்கு உம்பன் என்று பெயரிடப்பட்டுள்ளது.இதனால், கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் புயல் முன்னெச்சரிக்கையாக 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லும் இந்த புயலானது வருகிற 20-ந் தேதியன்று மேற்கு வங்கம் அருகே கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் நாளை (செவ்வாய் கிழமை) 170 முதல் 180 கிலோ மீட்டர் வேகத்துடன் வீசும் காற்றுடன் அதி தீவிர புயலாக உருவெடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சில இடங்களில் 200 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும், இந்த புயலினால் தமிழகம், புதுவையில் பாதிப்பு இல்லை என்றாலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    மேலும், கடலில் காற்றின் வேகம் அதிகமாக வீச கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, புதுச்சேரியிலும் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    மத்திய அரசு வெளியிட்டுள்ள ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு தொடர்பாக ஆலோசிப்பதற்காக புதுச்சேரியில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. 

    முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாளை முதல் மதுக்கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகளை திறந்து மது விற்பனை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, புதுச்சேரியிலும் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன. இதன்மூலம் மது விற்பனையில் புதுச்சேரி மாநிலம் இயல்பு நிலைக்கு திரும்ப உள்ளது. 
    கேரளாவுக்கு சென்ற புதுவை வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து அவருடன் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புதுவையில் கதிர்காமம் கொரோனா மருத்துவமனையில் தற்போது 6 பேரும், காரைக்கால் மருத்துவமனையில் 2 பேரும் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் தமிழகத்தை சேர்ந்த 5 பேரும் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில், காரைக்கால் சுரக்குடியை சேர்ந்த ஒருவருக்கு 2 நாள் முன்பு பரிசோதனை செய்ததில் கொரொனா தொற்று இல்லை என வந்துள்ளது. நேற்று மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான முடிவு இன்று வெளிவரும். அவருக்கு கொரோனா தொற்று இல்லை என வந்தால் நாளை அவர் வீட்டிற்கு அனுப்பப்படுவார்.

    புதுவையில் இருந்து டெல்லி மாநாட்டிற்கு சென்றிருந்த 9 பேரும், மாணவர்கள் 4 பேரும் இன்று திரும்பி வருகின்றனர். அவர்கள் புதுவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் புதுவை கென்னடி நகரை சேர்ந்த 28 வயது நபர் ஒருவர் கடந்த 14 -ந் தேதி கேரள மாநிலம் கன்னூர் சென்றுள்ளார். அங்கு விபத்தில் சிக்கிய அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபோது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இதனால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நண்பர்களுடன் கடலில் குளித்தபோது கல்லூரி மாணவரை ராட்சத அலை இழுத்துச் சென்றது.
    பாகூர்:

    தவளக்குப்பம் அடுத்துள்ள தானாம்பாளையம் நல்லவாடு ரோடு, சப்தகிரி நகரை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகன் கலை என்கிற கலையரசன் (வயது 23). புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் கலைக் கல்லூரியில் எம்.எஸ்சி. கணிதம் இறுதியாண்டு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்துவந்த கலையரசன், கொருக்கமேட்டை சேர்ந்த நண்பர் செல்வா உள்பட 7 பேருடன் பூரணாங்குப்பம் புதுக்குப்பம் கடற்கரைக்கு நேற்று சென்றார். பின்னர் பாரடைஸ் பீச் அருகில் உள்ள கடலில் அவர்கள் குளித்தனர்.

    அம்பன் புயல் காரணமாக நேற்று கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. இதை பொருட்படுத்தாமல் அவர்கள் கடலில் ஆனந்தமாக குளித்தனர். திடீரென்று எழுந்த ராட்சத அலை கலையரசன், செல்வா ஆகியோரை வாரி சுருட்டிக்கொண்டு கடலுக்குள் இழுத்துச்சென்றது. இதை பார்த்த மற்ற நண்பர்கள், அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.

    இதை பார்த்த அப்பகுதியில் இருந்த மீனவர்கள், உடனே கடலுக்குள் குதித்து, கலையரசன், செல்வா ஆகியோரை தேடினர். இதில் செல்வா மட்டும் பத்திரமாக மீட்கப்பட்டார். அவர் தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் கலையரசன் அலையில் சிக்கி மாயமானார். அவரை படகு மூலம் மீனவர்கள் உதவியுடன் தவளக்குப்பம் போலீசார் கடலுக்குள் சென்று தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    இதை அறிந்த கலையரசனின் பெற்றோர் கடற்கரைக்கு வந்து, தனது மகனின் கதி என்ன என்று தெரியாமல் கதறி அழுதனர். இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அந்த பகுதியில் குளிப்பதை தடை செய்தும், மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


    தவளக்குப்பம் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 10 மணி முதல் மதியம் 2 வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.
    பாகூர்:

    பாகூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும். அதன் விவரம் வருமாறு:-

    தவளக்குப்பம், பூரணாங்குப்பம், புதுக்குப்பம், தானாம்பாளையம், நல்லவாடு, ஆண்டியார்பாளையம், இடையார்பாளையம், பிள்ளையார்திட்டு, கொருக்குமேடு, காசான்திட்டு ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என மின்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    புதுச்சேரியில் 5,484 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 6 பேர், காரைக்கால் பொது மருத்துவமனையில் 2 பேர், ஜிப்மர் மருத்துவமனையில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 13 பேர் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் சனிக்கிழமை அன்று புதுவை மற்றும் காரைக்காலில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    புதுச்சேரியில் இதுவரை 5,484 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 5,320 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என வந்துள்ளது. மீதமுள்ள முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது. அங்கு சமூக இடைவெளியை கடைபிடிப்பது இல்லை. சிலர் முக கவசம் அணிவது இல்லை. இது ஏற்புடையது அல்ல.

    தற்போதைய நிலையில் கொரோனா யாரிடம் இருந்து வருகிறது, எவ்வாறு வருகிறது என்பதை கண்டுபிடிக்க முடியாது. எனவே இறைச்சி கடைகளில் ஒன்றாக கூட்டம் கூடக்கூடாது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த பைனான்சியர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை குரும்பாம்பேட் 6-வது குறுக்குதெருவை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது43). இவருக்கு ராதா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சின்னத்துரை பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். 

    இந்த தொழிலில் அவருக்கு ரூ.20 லட்சம் வரை கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடன் தொல்லையால் சின்னத்துரை மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் சின்னத்துரை சீர்காழியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வருவதாக தனது மனைவியிடம் கூறி சென்றார். 

    அங்கு விரக்தியில் இருந்து வந்த சின்னத்துரை தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து எலி மருந்தை (விஷம்) தின்று விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிதம்பரம் அண்ணாமலைநகர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டென்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சில நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பிய சின்னத்துரைக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    லாஸ்பேட்டை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் காவலாளி மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை கீதாநகர் முதல்தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி அனுசுயா (வயது34). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் குடும்பத்துடன் அனுசுயாவின் தந்தை கண்ணன் (74) தங்கி லாஸ்பேட்டை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் மூலம் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு கண்ணன் வழக்கம் போல காவல் பணிக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை கண்ணன் காவல் பணியில் இருந்த மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் காயத்துடன் உட்கார்ந்த நிலையில் இறந்து கிடப்பதாக காவல்பணி மேற்பார்வையாளர் புஷ்பராஜ் என்பவர் அனுசுயாவுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

    இதையத்து அனுசுயா சம்பவ இடத்துக்கு சென்று மர்மமான முறையில் இறந்து கிடந்த தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் இதுகுறித்து லாஸ்பேட்டை புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து திடீர் மாரடைப்பால் கண்ணன் இறந்து போனாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொரோனா தொற்று ஏற்பட்டால் அவமானப்பட ஏதும் இல்லை என்று புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் கூறினார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கதிர்காமம் அரசு சிறப்பு மருத்துவமனையில் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரைக்காலில் ஏற்கனவே ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் துபாயில் இருந்து காரைக்காலுக்கு கடந்த 9-ம் தேதி திரும்பிய 24 வயது பெண், தனக்கு விமான நிலையத்தில் உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அதில் தொற்று இல்லை என்று முடிவு கிடைத்ததாகவும் தெரிவித்தார்.

    இருப்பினும் நாங்கள் அவரை பரிசோதனை செய்தோம். அப்போது கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆனது. இதையடுத்து அவர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதனால் காரைக்காலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. எனவே புதுச்சேரியில் 6, காரைக்காலில் 2 மற்றும் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வரும் தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் 5 பேர் என மொத்தமாக 13 பேர் புதுச்சேரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் ஓரிரு தினங்களில் சில நிபந்தனைகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது. அப்போதும் மக்கள் சமூக விலகல், முககவசம் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துவது ஆகியவை மிக முக்கியம். இவைகள் கொரோனா தொற்று ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள உதவும்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி கொரோனாவிற்கான கட்டுப்பாட்டு பகுதிகளை முடிவு செய்யும் அதிகாரத்தை மாநில முதல்-மந்திரிகளிடம் விட வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டு பெற்றுள்ளார். இதனால் தற்போது முதல்-அமைச்சர் தலைமையில் உள்ள பேரிடர் மேலாண்மையே எவ்வளவு பகுதிகள் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும்.

    கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க சமூக விலகல் அவசியம் என்பதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு டோக்கன் கொடுக்கும் முறையை அமல்படுத்த உள்ளோம். ஏற்கனவே மகளிர் மருத்துவமனையில் செயல்படுத்தி வருகின்றோம். கொரோனா தொற்று ஏற்பட்டால் அவமானப்பட ஏதும் இல்லை.

    எனவே பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு முன்பு எங்கு சென்று வந்தோம் என்பது போன்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்கும் முழு விவரத்தையும் உடனடியாக தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தொற்றுக்கு ஆளாவதை விரைந்து தடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஆம்பன் புயல் அதிதீவிர புயலாக மாறிவருவதால் நாகை, தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
    தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஆமபன் புயலாக மாறியுள்ளது.

    ஆம்பன் புயல் வடமேற்கு திசையில் 6 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. அதிதீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நாகை, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    ஆம்பன் புயல் வரும் 20-ந்தேதி மேற்குவங்காளம் மற்றும் ஒடிசா அருகே நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு வங்காளம் - வங்காளத்தேசத்தை ஒட்டிய கடற்பகுதியில் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    ×