search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் ஆட்டோக்கள் இயங்கிய காட்சி.
    X
    புதுவையில் ஆட்டோக்கள் இயங்கிய காட்சி.

    55 நாட்களுக்கு பிறகு புதுவையில் ஆட்டோ, கார்கள் இயங்கின

    புதுவையில் 55 நாட்களுக்கு பிறகு ஆட்டோ, கார்கள் இயங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    புதுச்சேரி:

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசின் அறிவிப்புக் கிணங்க புதுவையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அன்று முதல் புதுவையில் பஸ்கள், ஆட்டோக்கள் மற்றும் கார்கள் இயங்கவில்லை. இதற்கிடையே மத்திய அரசு 4-வது கட்டமாக ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டித்துள்ளது.

    அதேவேளையில் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தி உள்ளது. மேலும் கொரோனா பரவல் இல்லாத மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அதி காரத்தை வழங்கி உள்ளது.

    இதையடுத்து புதுவையில் ஊரடங்கு தளர்வு மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது.

    மேலும் பஸ், ஆட்டோ, வாடகை கார்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. பஸ்களில் பயணிகள் சமூக இடைவெளி விட்டு பயணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    ஆட்டோக்களில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்றும், கார்களில் டிரைவர் உள்பட 3 பேர் பயணம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பையடுத்து புதுவையில் 55 நாட்களுக்கு பிறகு ஆட்டோ, கார்கள் இயங்கின. அதே வேளையில் பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவித்தாலும் இன்று காலை அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் இயங்கவில்லை. புதுவை பஸ் நிலையம் வழக்கம் போலவே இன்றும் காய்கறி மார்க்கெட்டாக இயங்கியது.

    புதுவை எல்லைக்குள் மட்டுமே பஸ்களை இயக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதாலும், பஸ் கட்டணம் குறித்து அரசு அறிவிப்பு ஏதும் வெளியிடாததால் பஸ்கள் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இன்று மதியத்துக்கு மேல் பஸ்கள் இயக்கப்படும் என தெரிகிறது.

    அதேவேளையில் புதுவையில் இருந்து தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த பஸ்களில் தமிழக பகுதிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மட்டுமே பயணம் செய்தனர்.

    இதுபோல் புதுவையில் நாளை (புதன்கிழமை) முதல் மதுக்கடைகள் திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான கோப்பு கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கோப்புக்கு கவர்னர் அனுமதி அளிப்பார் என கூறப்படுகிறது.

    எனவே, புதுவையில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என தெரிகிறது.

    Next Story
    ×