என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காரைக்காலில் அதிக சத்தத்தை எழுப்பும் பட்டாகளை வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் தெரிவித்தார்.
    காரைக்கால்:

    தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் புத்தம்புது துணிகள், மளிகை சாமான்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவதற்காக கடை வீதிகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளியை குதூகலமாக கொண்டாடி மகிழ வைக்க பட்டாசு கடைகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.

    இதேபோல் காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு மும்முரமாக வியாபாரம் நடந்து வருகிறது. பல பட்டாசு கடைகளில் சீன பட்டாசு மற்றும் அதிகம் சத்தத்தை எழுப்பும் நாட்டுப் பட்டாசுகள் விற்பனை செய்யப் படுவதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.

    இதுதொடர்பாக பட்டாசு கடைகளில் மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனைத்து பட்டாசு கடைகளிலும் தீயணைப்பு சாதனங்கள், தண்ணீர் வாளி, மணல் வாளி வைத்திருக்க வேண்டும். அதிகம் சத்தத்தை எழுப்பும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றை விற்பனை செய்யக் கூடாது. பட்டாசுகளை கடையின் வெளியே வைத்து விற்பனைச் செய்யக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பட்டாசுகளை பாதுகாப்பாக கையாளவேண்டும். முக்கியமாக, கொரோனா தொற்றை தடுக்கும் வகையில், முகக்கவசம், சமூக இடைவெளியை அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின் போது, காரைக்கால் பாரதியார் வீதியில், ஓட்டல் ஒன்றின் அருகில் இருந்த பட்டாசு கடை மூடப்பட்டது. முறையான பாதுகாப்பு வசதிகளை செய்தபிறகு அந்த கடையை திறக்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    பாகூர் அருகே தீபாவளி போனஸ் கேட்டு பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பாகூர்:

    புதுச்சேரி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் பால் ஊற்றும் உறுப்பினர்கள் பாண்லே மூலம் ஒரு ரூபாய்க்கு 10 பைசா என்ற விகிதத்தில் போனஸ் வழங்கிட வேண்டும். சட்டமன்றத்தில் அறிவித்தபடி பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் ஊக்க தொகை வழங்கிட வேண்டும். பாண்லே மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 75 சதவீத மானிய விலை தீவனத்தை மாதந்தோறும் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பால் உற்பத்தியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், முருகையன், தனவேல், நாராயணன், மாயவன், செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை சங்க சிறப்பு தலைவர் கீதநாதன் தொடங்கி வைத்தார். மாசிலாமணி, ராஜா, கலியமூர்த்தி, ராமச்சந்திரன், ஆறுமுகம், சசிதரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில குழு உறுப்பினர் தாமோதரன் நன்றி கூறினார்.
    ஆதிதிராவிட மக்களுக்கு இலவச துணிகளுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்த கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதிதிராவிட மக்களுக்கு அரசு சார்பில் இலவச துணிகள் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு இலவச துணிகளுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்த கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச துணிகளுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். ஒரு நபருக்கு ரூ.500 வீதம் 1லட்சத்து 32 ஆயிரத்து 688 பேருக்கு மத்திய அரசின் விதிமுறைகள் படி அவர்களின் வங்கி கணக்கில் ரூ.6கோடியே 63லட்சம் செலுத்தப்படும்.

    இதேபோல் புதுவை அரசு சாலை போக்குவரத்துக் கழகத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் தர ரூ.3கோடியே 97லட்சத்துக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2018-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட விஜயன் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் புதுவை அரசு சாலை போக்குவரத்துக் கழக செயல்பாட்டை மறுசீரமைக்க நீண்ட கால மற்றும் குறுகிய கால நடவடிக்கைகளை செயல்படுத்த இயக்குனர்கள் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    கொரோனா விழிப்புணர்வு கண்காட்சிக்கு வரும் மக்களை வரவேற்கும் விதமாக வைக்கப்பட்டுள்ள பேனரில் இடம் பெற்றுள்ள கொரோனா அரக்கி ஓவியம் மக்களை கவர்ந்துள்ளது.
    புதுவை:

    புதுவையில் கொரோனா பரவல் கடந்த ஒரு மாத காலமாக வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மக்களிடம் கொரோனா குறித்த அச்சம் குறைந்துள்ளது. பண்டிகை காலமான இப்போது பிரதான சாலைகளிலும், கடைகளிலும் மக்கள் அதிக அளவில் கூடுகின்றனர்.

    இதனால் புதுவை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன் ஒரு கட்டமாக புதுவை கடற்கரை சாலையில் கொரோனா விழிப்புணர்வு கண்காட்சி நடக்கிறது. இதில், முகக்கவசம், கிருமிநாசினி, சமூக இடைவெளி ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஒவியங்கள் இடம் பெற்றுள்ளது. கண்காட்சிக்கு வரும் மக்களை வரவேற்கும் விதமாக வைக்கப்பட்டுள்ள பேனரில் இடம் பெற்றுள்ள கொரோனா அரக்கி ஓவியம் மக்களை கவர்ந்துள்ளது.
    திருபுவனை பகுதியில் கருவளையத்தை நீக்குவதாக நல்ல பாம்பை முகத்தில் தேய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திருபுவனை:

    முகம், கழுத்து உள்ளிட்ட உடலில் பல இடங்களில் பரு, தேமல், கண்களில் கருவளையம் போன்றவற்றை நீக்கி தோற்றப் பொலிவுடன் இருக்க வேண்டும் என்பதில் ஆண், பெண் பாகுபாடின்றி அனைவருக்குமே ஆர்வம் இருக்கத் தான் செய்கிறது. இதை பயன்படுத்தி பல்வேறு அழகு சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு கடைகளில் அமோகமாக விற்பனையாகி வருகின்றன.

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ் புதூரை சேர்ந்த குமரேசன் என்ற பாம்பாட்டி திருபுவனையில் முகாமிட்டு அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று பொதுமக்களின் பலவீனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ‘முகத்தில் இருக்கும் கருவளையத்தை நீக்க வேண்டுமா? தன்னிடம் உள்ள விஷப்பாம்பை வைத்து முகத்தில் தேய்த்தால் போதும். அவை இருந்த இடம் இல்லாமல் போய் விடும்’ என்று ஆசை வார்த்தை கூறி இந்த நூதன சிகிச்சை பெற அழைத்துள்ளார்.

    இதை நம்பி பலரும் இந்த சிகிச்சை பெற முன்வந்தனர். அந்த பாம்பாட்டி 100 ரூபாயை வாங்கிக் கொண்டு அதிக விஷத்தன்மை கொண்ட நல்ல பாம்பை கையில் சுற்றி கருவளையத்தை நீக்குவதாக அவர்களது முகத்தில் தேய்த்தார். அப்போது பலர் பயந்து நடுங்கியபடியே இந்த சிகிச்சையை மேற்கொண்டனர். இளைஞர்கள் பலர் பயந்து ஓடியதையும் காண முடிந்தது. அபாயகரமான இந்த பாம்பு சிகிச்சையுடன் நின்று விடாமல் மஞ்சள் கரு கலந்த மருந்தையும் கொடுத்து அதை முகத்தில் தேய்த்து வருமாறு பொதுமக்களுக்கு அந்த பாம்பாட்டி டிப்சும் கொடுத்தது இதன் உச்சகட்டமாகும்.

    இந்த சம்பவம் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
    கவர்னர் கிரண்பேடியை பாஜக எம்எல்ஏக்கள் சந்தித்தனர். அப்போது அவரிடம் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அனுமதி அளிக்குமாறு வலியுறுத்தினர்.
    புதுச்சேரி:

    புதுவை அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு வசதியாக 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக கோப்பு தயாரித்து கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆனால் இதற்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்க மறுத்ததுடன் அந்த கோப்பை மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பி விட்டார். இத்தகைய சூழ்நிலையில் புதுவையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் சட்டப்பூர்வமாக இந்த பிரச்சினையை அணுகுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இந்த சூழலில் பா.ஜ.க.வைச் சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்களான சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோர் கவர்னர் கிரண்பேடியை கவர்னர் மாளிகையில் சந்தித்துப் பேசினார்கள். அப்போது 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வலியுறுத்துமாறு கவர்னரிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

    இந்த சந்திப்பு முடிந்தது மாநில பா.ஜ.க. தலைவரான சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    10 சதவீத இடஒதுக்கீடு என்பது கொள்கை சம்பந்தப்பட்டது. இதில் கவர்னர் முடிவு எடுக்க முடியாது என்பதால் அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அதை வைத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பொய்பிரசாரம் செய்து வருகிறார். அவர் தனது தவறுகளை மறைக்க கவர்னர் மேல் பழிபோடுகிறார்.

    10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரியை சந்தித்து நாங்கள் வலியுறுத்துவோம். மத்திய அரசு அனுமதித்தால் உடனடியாக அமல்படுத்த வாய்ப்பு உள்ளது என்று கவர்னர் எங்களிடம் தெரிவித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    விதிமுறைகளின்படியே எம்.பி.பி.எஸ். படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருவதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் புதுச்சேரி மாணவர்களுக்கு 64 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் புகார் தெரிவித்துள்ளன.

    இந்தநிலையில் ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். இளநிலை மருத்துவ கல்விக்கான அனுமதிக்கு புதுச்சேரி அரசின் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் சமீபத்திய இருப்பிட சான்றிதழ் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த நடைமுறை இதற்கு முன் இருந்த அதே சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே நடைபெறுகிறது.

    இதற்கான அனைத்து விவரங்களும் ஜிப்மர் வலைதள பதிவில் தகவல் வெளியீட்டில் தெரிவிக்கப்படுகிறது. ஜிப்மர் உள்ளீட்டுக்கான முன்னுரிமை என்ற மருத்துவ கலந்தாலோசனை குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ள தொகுப்பு புதுச்சேரி இருப்பிடத்தின் அடிப்படையிலான முன்னுரிமையே ஆகும்.

    இந்த முன்னுரிமைக்கு தகுதியுடையவர் மட்டும் இதற்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். ஜிப்மர் வலைதள பகுதியில் தகவல் வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறையின் அடிப்படையிலேயே எம்.பி.பி.எஸ். எனப்படும் இளநிலை மருத்துவ கல்விக்கான அனுமதி நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே ஜிப்மர் முதல்வருக்கு கலெக்டர் அலுவலக தனி அதிகாரி சுரேஷ்ராஜ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    ஜிப்மர் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட தரவரிசை பட்டியலை இந்திய மருத்துவ கல்வி ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் புதுவை பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன.

    எனவே புதுவை மாணவர்களுக்கான இடத்தை பெற்றிருக்கும் மாணவர்களின் சான்றிதழ்களை சேர்க்கைக்கு முன்பாக ஆய்வு செய்யவேண்டும். இதில் எந்த விதிமீறலும் இருக்கக் கூடாது. புதுவை வருவாய்த்துறை அதிகாரிகள் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து உறுதி செய்த பின்னரே சேர்க்கை வழங்கவேண்டும்.

    புதுவை இடஒதுக்கீடு கேட்டு தற்போது இடஒதுக்கீடு பெற்றுள்ளவர்கள் சமர்ப்பித்துள்ள சான்றிதழ்களின் நகல்களை அதன் உண்மை தன்மை குறித்து அறிய சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    தீபாவளியை முன்னிட்டு கடை வீதிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று நல வழித்துறைக்கு கலெக்டர் அர்ஜூன் சர்மா உத்தரவிட்டுள்ளார்.
    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்கவேண்டும். வெளியில் எங்கு சென்றாலும், சமூக இடைவெளி கடைபிடிப்பதுடன் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். பண்டிகை அன்றும் இதை கடைபிடிக்க வேண்டும். மாலை நேரங்களில் கடைக்கு செல்வதைவிட, மதிய நேரங்களில் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வரவேண்டும். வணிகர்கள் தங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் முககவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும்.

    பொருள் வாங்க வரும் பொதுமக்களுக்கும் இது குறித்து வலியுறுத்த வேண்டும். அனைத்து கடைகளிலும் கை கழுவ தண்ணீர், சானிடைசர் வைத்திருக்க வேண்டும். கடைவீதிகளில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில், கொரோனா பரிசோதனையை மாவட்ட நலவழித்துறை தீவிரப்படுத்த வேண்டும். நடமாடும் வாகனம் மூலம் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். பண்டிகைக்கு முதல் நாள் கடைவீதிகளில் கூட்டமாக பொருட்கள் வாங்காமல் முன்னதாகவே வாங்கி பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட் கூறும்போது, ‘காரைக்காலில் உள்ள அனைத்து சரக எல்லைக்குட்பட்ட அதிகாரிகள், போலீசார் தீபாவளி காலங்களில் சிறப்பு குழுக்கள் அமைத்து மக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் இருக்கவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முக கவசம் அணிவது குறித்து ஒலிபெருக்கி மூலம் அடிக்கடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒரே இடத்தில் அதிகம் கூட்டம் கூடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ரோந்துப் பணியை பலப்படுத்த வேண்டும்’ என்றார்.
    மருத்துவ படிப்பில் 10 சதவீத ஒதுக்கீடு விவகாரத்தில் மாணவர்கள், பெற்றோர்களுக்கு முதல்-அமைச்சர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்று பாஜக தெரிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜ.க. பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் நாராயணசாமி தனக்கு இல்லாத அதிகாரத்தை வைத்துக் கொண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். நமது மாநிலம் 3 மாநில கல்வி வாரியத்தை சார்ந்துள்ளது. அதனை கூட அறிந்து கொள்ளாமல் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் எந்த விதமான ஆணையமோ, நீதிபதி குழுவோ அமைக்காமல் வெறும் அமைச்சரவையை கூட்டி 10 சதவீத இடஒதுக்கீடு கேட்டுள்ளார்.

    கவர்னரை விட முழு அதிகாரம் உள்ள தமிழகத்தில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்கும் போது, அதை விட புதுவையில் 10 சதவீதம் கேட்பது மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு அந்த இடஒதுக்கீடு கிடைக்கக் கூடாது என்பதற்காக வேண்டுமென்றே அரசியல் நாடகம் நடத்துகிறார். உள்ஒதுக்கீடு விவகாரத்தில், இது ஒரு கொள்கை முடிவு என்பதால் இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் இது போன்று பிரச்சினை ஏற்பட்டால் அதனை எவ்வாறு சமாளிப்பது என்பதற்காக மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். இதனை புரிந்து கொள்ளாமல் அவர் கவர்னரை குறைகூறி வருகிறார்.

    கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத மருத்துவ இடங்களை அரசு ஒதுக்கீடாக பெற்றுத் தருவோம் என்று கூறிய முதல்-அமைச்சர் நாராயணசாமி இதுவரை அதை பெறவில்லை. மத்திய அரசு இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்த பிறகும் அதனை பெற மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. முதல்-அமைச்சர் நாராயணசாமி உண்மையிலேயே மாணவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற வேண்டும். இல்லையென்றால் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றாததற்காக முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ஜிப்மர் மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம் என்று கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் புதுவை மாநிலத்தை இருப்பிடமாக கொண்டவர்களுக்கு 64 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலையில் தேர்வு பட்டியலில் புதுவை மாநில மாணவர்களுக்கான இடத்தில் வெளிமாநிலத்தை சேர்ந்த 31 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.

    புதுவை மாநிலத்தை இருப்பிடமாக கொண்டு நீட் தேர்வு எழுதியவர்களின் பட்டியலில் அவர்களது பெயர்கள் இடம்பெறவில்லை. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி, சுகாதாரத்துறை செயலாளர் அருண் ஆகியோருக்கு தொடர்ச்சியாக புகார்கள் சென்றுள்ளன.

    இதற்கிடையே அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவரான அன்பழகன் எம்.எல்.ஏ. கவர்னர் கிரண்பேடியை சந்தித்து புகார் அளித்துள்ளார். இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    இதுதொடர்பாக கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், போலி என கூறப்படும் ஆவணங்களின் சரிபார்ப்பு நிலுவையில் உள்ளதால் அத்தகையவர்களின் சேர்க்கையை இறுதி செய்யவேண்டாம் என்று ஜிப்மர் இயக்குனரை கேட்டுக்கொண்டுள்ளதாக கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
    புதுச்சேரியில் பட்டாசுகள் வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக கலெக்டர் அருண் கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிப்பது தொடர்பாக கலெக்டர் அருண் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி பொதுமக்கள், பட்டாசு தயாரிப்பாளர், விற்பனையாளர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதாவது, பட்டாசுகளை முறையான லைசென்சு பெற்றிருப்பவர்கள் மட்டுமே விற்பனை செய்யவேண்டும். இணையவழியிலோ, பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட பிற ஆன்லைன் சேவை நிறுவனங்கள் மூலமாகவோ பட்டாசுகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளை மீறி பட்டாசுகளை விற்பனை செய்தால் அது கோர்ட்டு அவமதிப்பு ஆகும்.

    பேரியத்தில் செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. அனுமதிக்கப்பட்ட வேதிப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளையே விழாக்கள் மற்றும் மத விழாக்களில் பயன்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பட்டாசுகளை தயாரிக்க கூடாது. அனுமதிக்கப்பட்ட அளவு சத்தம் எழுப்பும் பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும். இதை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும்.

    ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100 மீட்டருக்கு வெளியே பட்டாசுகள் வெடிக்கப்பட வேண்டும். இதை போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறையினர் உறுதி செய்யவேண்டும்.

    தீபாவளி பண்டிகையின்போது காலை 6 மணி முதல் 7 மணிவரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும். இதை உரிய அதிகாரிகளும், காவல்துறையினரும் உறுதி செய்யவேண்டும்.

    இந்த நடைமுறையை சம்பந்தப்பட்ட அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். மீறினால் இந்திய தண்டனை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    காரைக்கால்மேடு கடற் கரையில் பிளஸ்-2 மாணவியின் பிணம் ஒதுங்கியது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    காரைக்கால்:

    காரைக்கால்மேடு மீனவர் கிராமத்தில் உள்ள கடற்கரையில் இளம் பெண்ணின் உடல் நேற்று காலை கரை ஒதுங்கியது. இதைப்பார்த்ததும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து அவர்கள் தகவல் தெரிவித்ததன்பேரில் காரைக்கால் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து அவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில் அந்த பெண் காரைக்கால்மேடு பகுதியை சேர்ந்த மீனவர் பாலதண்டாயுதம் என்பவரின் மகளான பிளஸ்-2 மாணவி நிவேதா (வயது 17) என்பது தெரியவந்தது. அவர் அணிந்து இருந்த நகைகள் அப்படியே இருந்தன.

    எனவே கடற்கரையில் மர்மமான முறையில் நிவேதாவின் உடல் ஒதுங்கியது எப்படி? என்பது குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நிவேதா கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணத்துக்காக தற்கொலை செய்துகொண்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பிளஸ்-2 மாணவியின் உடல் கடற்கரையில் ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×