என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தி.மு.க. பிரமுகர் வீட்டில் வெடி குண்டு வீசிய வழக்கில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் 2-வது நேதாஜி நகர் அழகர்சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பிராங்ளின் (59). பொதுப்பணித்துறை காண்டிராக்டர். தி.மு.க. பிரமுகர். சம்பவத்தன்று பிராங்ளின் வெளியே சென்று இருந்தார். வீட்டில் அவரது மனைவி குளோதினி, பேரன், பேத்திகள் மட்டும் இருந்தனர்.

    அப்போது  மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த 2 நாட்டு வெடி குண்டுகளை பிராங்ளின் வீடு மீது அடுத்தடுத்து வீசினார். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து  தப்பி சென்று விட்டனர். வீட்டின் முன் பக்கத்தில் கிரீல் கதவு மூடி இருந்ததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.

    இந்த தகவல் கிடைத்ததும் கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு தீபிகா தலைமையில்  ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் மனோஜ்,  சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.பிராங்ளின் வீடு மீது  வாலிபர் வெடி குண்டு வீசும் காட்சி அப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. அதனை ஆய்வு செய்த போது குண்டு வீசியவர் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்கிற சதிஷ் (23) என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் விக்னேசுக்கு முதலியார் பேட்டையை சேர்ந்த அன்பரசு(24), ரெமோ(25)  ஆகியோர் உதவியது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அன்பரசுவை  உப்பளத்தில் உள்ள ஹெலிபேடு மைதானத்திலும், ரெமோவை தேங்காய்த்திட்டு துறைமுகத்திலும் கைது செய்தனர் . அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நேதாஜி நகரில் பாழடைந்த வீட்டில் பதுக்கி  வைத்திருந்த மற்றொரு நாட்டு வெடிகுண்டை பறிமுதல் செய்தனர்.
     
    கைதான 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    தி.மு.க. பிரமுகர் வீட்டில்  வெடிகுண்டு வீசிய விக்னேஷ் டி.வி. நகரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இந்த நிலையில் அவர் வெளிநாடு சென்று விட்டார். அந்த சமயத்தில் அப்பெண்ணிற்கு வேறு ஒரு வாலிபருடன் திருமணம் முடிந்தது. இந்த தகவல் விக்னேசுக்கு தெரிய வந்தது. அவர்  வெளிநாட்டில் இருந்தபோது ஏற்கனவே தான் காதலித்து வந்த பெண்ணிடம் பேசி வந்துள்ளார்.

    இதனை அப்பெண்ணின் கணவர் கண்டித்துள்ளார். இதனால் அவருக்கும் விக்னேசுக்கும் தகராறு ஏற்பட்டது. அவரை கொலை செய்ய விக்னேஷ் தனது நண்பர்கள் அன்பரசு, ரெமோ ஆகியோர் உதவியுடன் நாட்டு வெடிகுண்டு தயார் செய்துள்ளார். இந்த நிலையில் தி.மு.க. பிரமுகர் பிராங்ளினிடம் வெளிநாடு செல்ல விக்னேஷ் பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்ததால், ஏற்கனவே தான் தயாரித்து வைத்திருந்த வெடிகுண்டை அவரது வீட்டில் வீசியது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் மற்றொரு வாலிபருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    கைதான ரெமோ, சாணிக்குமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    புதுவை கடற்கரை சாலை-பாரதி பூங்காவில் போலீசாரின் கெடுபிடியால் காதலர்கள் தனித்தனியாக பாரதிபூங்காவில் நுழைந்து பின்னர் ஜோடியாக அமர்ந்தனர்.
    புதுச்சேரி:

    உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்பட்டது.

    புதுவையில் வார விடுமுறையையொட்டி வெள்ளிக்கிழமை மாலை முதல் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    இதில் காதல்ஜோடிகள் அதிகளவில் இடம் பெற்றிருந்தனர். இன்று காதலர் தினத்தையொட்டி நகர பகுதியில் உள்ள சாலைகளில் காதல் ஜோடிகளின் நடமாட்டம் அதிகம் இருந்தது. கடற்கரை சாலைக்கு வந்த காதல் ஜோடிகளிடம் போலீசார் கெடுபிடியாக நடந்துகொண்டனர்.

    வெளிமாநிலத்திலிருந்து வந்த காதல்ஜோடிகளிடம், முக கவசம் அணியவில்லை என அபராதம் விதித்தனர்.

    கடற்கரை சாலை, பாரதி பூங்காவில் கையில் பூக்கள், சாக்லெட்டுடன் காதலர்கள் இருந்ததை காண முடிந்தது. போலீசாரின் கெடுபிடியால் காதலர்கள் தனித்தனியாக பாரதிபூங்காவில் நுழைந்து பின்னர் ஜோடியாக அமர்ந்தனர். அவர்களை போலீசார் விசாரித்தனர். இதனால் காதல்ஜோடிகள் அங்கிருந்து கிளம்பினர்.

    தாவரவியல் பூங்காவில் டிக்கெட் பெற்று சென்றதால் காதல்ஜோடிகளுக்கு கெடுபிடி இல்லை. ஜாதி, மத ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கும் வாய்ப்பாக உள்ள காதலை போற்றுவோம் என வலியுறுத்தி தந்தை பெரியார் தி.க. சார்பில் பாரதி பூங்கா, கடற்கரைக்கு வந்த காதலர்களுக்கு பூக்கள் வழங்கப்பட்டது.

    இதில் மாநில தலைவர் வீரமோகன், துணைத்தலைவர் இளங்கோ, செயலாளர் சுரேஷ், பொருளாளர் பெருமாள், இளைஞரணி தலைவர் சிவமுருகன், தொழிற்சங்க தலைவர் ஜெகன், மகளிரணி தலைவர் சுகந்தி, மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், ராஜா உட்பட பலர் கலந்துகொண்டு காதலர்களுக்கு பூக்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். 
    சாலையோர வியாபாரிகளுக்கு குடை, சேலை வழங்கப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா பிரச்சார அணி அமைப்பாளர் பாண்டி ரவி மற்றும் உருளையன்பேட்டை தொகுதி பிரச்சார அணி அமைப்பாளர் குமார் ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில் பெரியமார்க்கெட் பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகள் 100 பேருக்கு சேலை-குடைகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், வக்கீல் அசோக்பாபு ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர். நிகழ்ச்சியில் உருளையன்பேட்டை தொகுதி அமைப்பாளர் முன்னாள் கவுன்சிலர் பத்மாவதி, ஓ.பி.சி. அணி பொதுச்செயலாளர் கிருஷ்ணராஜ், ஹரி, பிரச்சார அணி துணை அமைப்பாளர் கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
    அ.தி.மு.க. மீது அவதூறு பரப்ப திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்து வருவதாக தி.மு.க.வுக்கு அன்பழகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உப்பளத்தில் உறவினர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் அசம்பாவித சம்பவம் நடந்தது.  இதைப்பற்றி உண்மை நிலையை உணராமல், எம்.எல்.ஏ.க்கள் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. மீது வேண்டுமென்றே அவதூறு பரப்பும் வகையில் நடந்து கொண்டனர். 

    தங்கள் பொறுப்புகளை உணர்ந்து கருத்துக்களை எம்.எல்.ஏ.க்கள் தெரிவிக்க வேண்டும். கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படக்கூடாது. எதிர் கட்சித்தலைவர் எதிர்கட்சி தலைவராக செயல்பட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி கொடுத்த 16 வாக்குறுதிகளில் 15 வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது. 

    சட்டமன்ற அறிவிப்புகள் நிறைவேற்றி வருகிறது. தமிழகத்தில்தான் தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது. குற்றம் சொல்ல வேண்டும் என்ற நோக்கில் எதிர்கட்சித் தலைவர் புகார் கூறுகிறார். அரசு திட்டங்களை நிறைவேற்றியது குறித்து நேருக்கு நேர் விவாதிக்கலாம். 

    உள்ளாட்சி தேர்தலை தடுத்ததே தி.மு.க.தான். கட்சியின் உயர்மட்ட வக்கீல்கள் மூலம் வழக்கு தொடர்ந்து தடுத்தனர். மீண்டும் தேர்தல் நடக்க தி.மு.க.தான் மனது வைக்க வேண்டும். தோல்விபயம் காரணமாக தி.மு.க. தேர்தலை தடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    சம்பளம் வழங்க கோரி புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்களுக்கு கடந்த 7 மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கோரி பி.டி.டி.சி. அனைத்து சங்க ஊழியர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. 

    ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் கஜபதி, முகுந்தன், ஆதிகணேசன், கந்தன், கலைவாணன் காரைக்கால் பிரிவு அண்ணாதுரை மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்
    புதுவையில் கொரோனாவுக்கு ஒருவர் பாலியாகியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் 874 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதிதாக 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 40, காரைக்காலில் 11,  மாகியில் ஒருவர் புதிதாக   தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 26, காரைக்காலில் 12, ஏனாமில் 1, மாகியில்2 பேர் என 41 பேர் தொற்றுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 191, காரைக்காலில் 99, ஏனாமில் 26, மாகியில்3 பேர் என 319 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 295 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 308 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 

    புதுவையில் 549, காரைக்காலில் 365,  ஏனாமில் 57, மாகியில்17 பேர் என 988 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது ஆயிரத்து 29 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த 71 வயது முதியவர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 958 ஆக உயர்ந்துள்ளது. 

    புதுவையில் 2-வது  தவணை உட்பட 15 லட்சத்து 56 ஆயிரத்து 347 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    கிருமாம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலியானர்.
    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் சோலை கவுண்டர் வீதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் சூர்யா (வயது 18). இவர் புதுவையில் உள்ள தனியார் கார் ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில், இவர் தனது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த பிரபு மகன் புஷ்பராஜ் (20), முருகன் மகனான தனியார் கல்லூரியில் படிக்கும் சிவக்குமார் (18) ஆகியோருடன்  மோட்டார் சைக்கிளில்   கடலூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சூர்யா ஓட்டிச் சென்றார்.

    கிருமாம்பாக்கம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே சென்ற போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அருகிருந்த வர்கள் அவர்களை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு, பரிசோதித்த டாக்டர்கள் சூர்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    தொடர்ந்து சிவக் குமாருக்கும், புஷ்பராஜிக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் புஷ்பராஜ் ஆபத்தான நிலையில் உள்ளார்.

    இதுகுறித்து சூர்யாவின் உறவினர் வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மகள் திருமணம் செய்துகொள்ளாத வேதனையில் வனத்துறை பெண் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை முத்துபிள்ளை பாளையம் புதுநகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சங்கரிதேவி(வயது 47). கண்ணன் புதுவை வனத்துறையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். 

    திடீரென அவர் இறந்து விட்டதால் கருணை அடிப்படையில் சங்கரிதேவிக்கு வனத்துறை யில் வேலை வழங்கப்பட்டது. சங்கரிதேவி மஸ்தூராக வேலை செய்து வந்தார்.

    இவர்களுக்கு சரண்யா (27), சங்கீதா(25) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். சரண்யாவுக்கு திருமணமாகி அவரது கணவர் ஆனந்தன் பிரான்சில் வேலை பார்த்து வருகிறார். இதனால் சரண்யா தனது குழந்தைகளுடன் தாயார் சங்கரிதேவி வீட்டில் வசித்து வந்தார்.

    இதற்கிடையே சங் கீதாவுக்கு திருமணம் செய்து வைக்க சங்கரிதேவி விரும்பினார். ஆனால் சங்கீதா திருமண செய்து கொள்ள மறுத்து விட்ட தாக கூறப்படுகிறது. இதனால் சங்கரிதேவி மன வருத்தத்தில் இருந்து வந்தார். அவருக்கு சரண்யா ஆறுதல் கூறி சிறிது காலம் கழித்து சங்கீதாவுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என தாயாரை சமாதானப்படுத்தி வந்தார்.

    சரண்யா கடந்த ஒரு வாரமாக சிறுவந்தாடு அருகே நரசிங்கபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் குழந்கைகளுடன் இருந்து வந்தார். 

    இந்தநிலையில் இளைய மகளுக்கு திருமணம் செய்து வைக்கமுடியவில்லையே என சங்கரிதேவி வேதனையடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.  இளையமகள் சங்கீதா வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டின் குளியல் அறையில் சங்கரிதேவி இரும்பு பைப்பில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சங்கரிதேவியை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சங்கரிதேவி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மூத்த மகள் சரண்யா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுவை காந்திவீதியில் பெண்களை கிண்டல் செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவைக்கு வார இறுதி நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவர்களில் சிலர் அரைகுறை ஆடையுடன் புதுவை நகரில் வலம் வருகிறார்கள்.  

    காதலர் தினத்தையொட்டி ஏராளமான வெளிமாநில காதல் ஜோடிகள் காதலர் தினவிழாவை கொண் டாட புதுவையில் குவிந்துள் ளார்கள்.

    இந்த நிலையில் புதுவை காந்தி வீதியில் வெளிமாநில  பெண் சுற்றுலா பயணிகள் நடந்து சென்றனர். அப்போது 2 வாலிபர்கள் அந்த பெண்களை கிண்டல் செய்தனர்.

    இதையடுத்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட ஓதியஞ்சாலை போலீசார் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்தனர். விசார ணையில் அவர்கள் உருளையன்பேட்டை செங்குந்தர் வீதியை சேர்ந்த கனி(வயது31) மற்றும் புதுவை ஜீவாநகரை சேர்ந்தர் சுனில்(21) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    வில்லியனூர்-ஒதியம் பட்டு ரோடு சந்திப்பில் நேற்று நள்ளிரவு 2 வாலிபர்கள் நின்றுக்கொண்டு பொது மக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் வில்லியனூர் பெரியபேட் பால்வாடி தெருவை சேர்ந்த அம்பேத்குமார்(28) மற்றும் உத்திரவாகினிபேட் பள்ளத்தெருவை சேர்ந்த ராஜன்(24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    திருமண வரவேற்பு விழாவில் பெண்களை சாம்பார் வாளியால் தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அருகே நாணமேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன். இவரது மனைவி லட்சுமி (வயது32).  இவரது தம்பி கலைவாணனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அபிஷேகப்பாக்கத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடந்தது.  அதற்காக விருந்து தயார் செய்யப்பட்டது. 

    அப்போது அங்கு வேலை செய்யும் பெண்கள் சிலர் சமையல் பொருட்களை திருடி மறைத்து வைத்தனர். இதனை கண்ட லட்சுமி அவர்களை தட்டிக்கேட்டு சமுதாய நலக்கூட மேலாளர் நாகையனிடம் முறையிட்டார். இதில்  லட்சுமி தரப்பினருக்கும், சமுதாய நலக்கூடத்தில் வேலை செய்யும் பெண்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து  திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நல்லப்படியாக முடிக்க லட்சுமி தரப்பினர் அதற்கான வேலையில் ஈடுபட்டனர். இரவு 11 மணியளவில் அனைவரும் சாப்பிட்ட பின்னர் ஓரு கும்பல் திடீரென சமுதாய நலக்கூடத்தில் புகுந்தது. அவர்கள் உணவு பரிமாறு கேட்டனர். அதற்கு சாம்பார் மட்டுமே உள்ளது என்று லட்சுமி தெரிவித்தார்.

    ஏற்கனவே சமையல் பொருட்களை திருடியதாக லட்சுமி குற்றம் சாட்டியிருந்ததால் ஆத்திரமடைந்த கும்பல் லட்சுமியை சாம்பார் வாளியால் தாக்கினர். இதனால் லட்சுமி அலறினார். இந்த சத்தம் கேட்டு அவரது உறவினர்கள் தாக்குதலில் ஈடுபட்ட கும்பலிடம் தட்டிக் கேட்டனர்.

    ஆனால் அந்த கும்பல் தகாத வார்த்தைகளால் திட்டி லட்சுமியின் அக்காள் மஞ்சுளா மற்றும் அவரது மகள் நந்தினி ஆகியோரையும் பீர் பாட்டிலால் தாக்கினர். மேலும் நந்தினியின் ஆடைகளை கிழித்து மானபங்கம் செய்ய முயன்றனர்.

    இதையடுத்து உறவி னர்கள் திரளவே அந்த கும்பல் அங்கிருந்து சென்று விட்டது. இந்த தாக்குதலில் காயமடைந்த லட்சுமி அவரது அக்காள் மஞ்சுளா மற்றும் அவரது மகள் நந்தினி ஆகிய 3 பேரும் கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    பின்னர் இதுகுறித்து லட்சுமி தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்களை தாக்கிய கும்பலை தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி வந்த காதல் ஜோடிகள் நகரின் ஒயிட் டவுன் பகுதிகளில் உள்ள கட்டிடங்களில் வரைந்துள்ள ஓவியங்களின் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதற் கிடையே இன்று (திங்கட் கிழமை) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக புதுவையில் நேற்று சுற்றுலா பயணிகள், காதலர்கள் குவிந்தனர். இதன்காரணமாக புதுவையில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் அறைகள் முழுவதும் நிரம்பி வழிந்தன.

    குறிப்பாக புதுச்சேரி நகர பகுதியில் எங்கு பார்த்தாலும் காதல் ஜோடிகள் உலா வருவதை காண முடிந்தது. காதலை வெளிப்படுத்தும் விதமாக காதலர்கள் பரிசு பொருட்கள் வழங்கி மகிழ்வார்கள். இதற்காக பரிசு பொருட்கள் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    சுற்றுலா பயணிகள், காதல் ஜோடிகள் வருகை காரணமாக நேற்று புதுச்சேரி கடற்கரை, பாரதி பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா பீச் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    கடற்கரை சாலையில் தலைமை செயலகம் எதிரே உள்ள செயற்கை மணல் பரப்பு, பழைய துறைமுக பாலம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கடலில் இறங்கி விளையாடி மகிழ்ந்தனர்.

    புதுச்சேரி நகர பகுதியில் நேற்று ஏராளமான வெளி மாநில பதிவெண் கொண்ட கார்கள் உலா வந்தன. நகரின் முக்கிய வீதிகளான அண்ணாசாலை, நேருவீதி, புஸ்சி வீதி, கடலூர் சாலை, மரப்பாலம் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    புதுச்சேரி வந்த காதல் ஜோடிகள் நகரின் ஒயிட் டவுன் பகுதிகளில் உள்ள கட்டிடங்களில் வரைந்துள்ள ஓவியங்களின் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    புதுச்சேரியில் நேற்று சண்டே மார்க்கெட் செயல்படும் காந்திவீதியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் களை கட்டியது. அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பேரம் பேசி வாங்கி சென்றனர்.
    புதுவையில் இருந்து தமிழகத்திற்கு ரெயில் மூலம் கடத்த முயன்ற 314 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் இருந்து சென்னைக்கு நேற்று காலை 5.35 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது ரெயில்வே போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் உத்தரவின் பேரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் பிளாட்பாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது 2 வது பிளாட்பாரத்தில் ஒரு இருக்கையின் அடியில் 3 பெரிய பைகள் இருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பைகளை பிரித்து பார்த்தனர். அப்போது 3 பைகளில் 314 குவார்ட்டர் மது பாட்டில்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.14 ஆயிரத்து 440 ஆகும்.

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக புதுவையில் இருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக மர்மநபர் கடத்த முயற்சி செய்ததும், போலீசாரை கண்டதும் மதுபாட்டில்கள் அடங்கிய பைகளை போட்டு விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது.

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில் களை கடத்த முயன்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    ×