என் மலர்
புதுச்சேரி
புதுவையில் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் 2 ஆயிரத்து 19 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், புதிதாக 53 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 35, காரைக்காலில் 6, ஏனாமில் 4, மாகியில் 8 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
புதுவையில் 23, காரைக்காலில் 7, ஏனாமில் 1, மாகியில் 3 பேர் என 34 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 134, காரைக்காலில் 62, ஏனாமில் 20, மாகியில் ஒருவர் என 217 பேர் குணமடைந்தனர். புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 416 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 721 பேர் குணமடைந்துள்ளனர்.
புதுவையில் 395, காரைக்காலில் 260, ஏனாமில் 27, மாகியில் 20 பேர் என 702 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 736 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர்.
மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 959 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை உள்பட 15 லட்சத்து 58 ஆயிரத்து 849 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கணவர்-மாமியாரிடம் கோபித்து விட்டு 2 குழந்தைகளுடன் பெண் மாயமானர்.
புதுச்சேரி:
புதுவை குறிஞ்சிநகர் 12-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வினோத் குமார் (வயது36). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி லட்சுமி(28). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் வினோத்குமாரின் மகனும், மகளும் விளையாடி கொண்டிருந்தனர். இதனை லட்சுமியிடம் வினோத்குமாரின் தாய் சுமதி கண்டித்துள்ளார்.
இதில் மனவருத்தமடைந்த லட்சுமி குழந்தைகளை பள்ளியில் விடுவதாக அழைத்து சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் லட்சுமி மற்றும் குழந்தைகள் வீடு திரும்பவில்லை.
இதனையறிந்த வினோத் குமார் லாஸ்பேட்டையில் உள்ள லட்சுமியின் தாய் வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து வினோத்குமார் லாஸ்பேட்டை புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி வழக்கு பதிவு செய்து காணாமல் போன தாய் மற்றும் குழந்தைகளை தேடி வருகிறார்.
மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டி கேட்ட தகராறில் கட்டிட தொழிலாளியை கல்லால் தாக்கி கொல்ல செய்ய முயற்சி செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை பூமியான்பேட்டை குண்டுசாலை தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது40). இவரது சகோதரர் ரமேஷ்(வயது40). இருவரும் கட்டிட வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வெங்கட்டா நகரை சேர்ந்த பெயிண்டர் வெற்றிவேல்(27) என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதை ரமேஷ் மற்றும் சுரேஷ் தட்டிக்கேட்டனர். இதில் இவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது-.
இதே போல் ரமேஷ் மற்றும் சுரேஷ் குண்டுசாலை தெருவில் சாலையோரம் அமர்ந்திருந்தனர். அப்போது அந்த வழியாக வெற்றிவேல் மோட்டார் சைக்கிளில் பூமியான்பேட்டையில் உள்ள தனது மனைவியை பார்க்க சென்றார்.
பின்னர் திரும்பி வரும் போது திடீரென அங்கு கிடந்த காண்கீரீட் சிலாப் கல்லை எடுத்து சுரேசின் தலையில் பலமாக தாக்கி னார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயமடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் அதே கல்லால் ரமேசை தாக்க முயன்றார். அவர் சுதாரித்துக்கொண்டதால் தாக்குதலில் இருந்து தப்பினார்.
பின்னர் வெற்றிவேல் அங்கிருந்து தப்பியோடி விட்டார். சுரேசை அவரது சகோதரர் ரமேஷ் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ரமேஷ் ரெட்டியார் பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர்உசேன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுவையில் பிரபல நகை கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை பாரதி வீதியில் சிவ வள்ளி விலாஸ் நகை கடை உள்ளது. இங்கு சென்னையில் இருந்து 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். அங்கு வருமான வரி சோதனை நடத்தப்போவதாக தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து நகை கடை மூடப்பட்டது. நகை கடை கணக்குகளை அதிகாரிகள் சரிபார்க்கும் பணியை தொடங்கினர். தொடர்ந்து ஆவணங்கள், நகைகளை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.
புதுவையில் முக்கிய வீதியான பாரதி வீதியில் அமைந்துள்ள நகை கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
லாஸ்பேட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு கடற்கரை சாலையையும், லாஸ்பேட்டை மெயின் ரோடையும் இணைக்கும் வகையில் கொட்டுப்பாளையத்தில் செல்வவிநாயகர் கோவில் தெரு உள்ளது.
செல்வ விநாயகர் கோவில் தெரு, லாஸ்பேட்டை மெயின்ரோடு முழுவதும் ஆக்கிரமிப்புகள் நிறைந்த பகுதியாக உள்ளது. லாஸ் பேட்டை மெயின் ரோட்டில் உள்ள கடைகளின் விளம்பர பலகைகள் சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கடைகளையும் சாலையில் வைத்து வியாபாரம் செய்கின்றனர். லாஸ்பேட்டையில் நீதிபதிகள் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் இருந்து நாள்தோறும் நீதிபதிகள் நீதிமன்றத்துக்கு இந்த வழியில் தான் செல்வார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் ஒரு விபத்தும் நடந்தது. இதை கருத்தில்கொண்டு நீதிபதி தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து புதுவை போலீஸ் சூப்பிரெண்டு பக்தவச்சலம், பொதுப் பணித்துறை இளநிலை பொறியாளர் வேல்முருகன் மற்றும் அதிகாரிகள் போலீசார் பாதுகாப்போடு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது. விநாயகர் கோவில் வீதியில் வாய்க்காலுக்கு மேல் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டு ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டது.
லாஸ்பேட்டை மெயின்ரோடு முதல் விமான நிலையம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப் படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
காலி பணியிடத்தை நிரப்பக்கோரி வாலிபர் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தப்பட்டது.
புதுச்சேரி:
மத்திய, மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள 60 லட்சத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்தது.
போராட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பிரதேச தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். செயலாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார். பொருளாளர் சஞ்சய், துணைத்தலைவர்கள் லீலாவதி, கவுசிகன், துணை செயலாளர்கள் ரஞ்சித், ராஜ்குமார், நிர்வாகிகள் ஜெயராஜ், மேடே, செல்வராஜ், ஜான்குமார், கிருஷ்ணமூர்த்தி, நிலவழகன், நவீன், மற்றும் பலர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சரவைக்கு அவர்கள் கடிதம் அனுப்பினர்.
புதுவையில் கொரோனவுக்கு மூதாட்டி பலியாகியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் ஆயிரத்து 971 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதிதாக 68 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 39, காரைக்காலில் 16, ஏனாமில் 8, மாகியில் 5 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 23, காரைக் காலில் 8, ஏனாமில் 1, மாகியில் 3 பேர் என 35 பேர் தொற்றுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 96, காரைக்காலில் 70, ஏனாமில் 22, மாகியில் 8 பேர் என 196 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 363 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 504 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.
புதுவையில் 494, காரைக்காலில் 315, ஏனாமில் 43, மாகியில் 13 பேர் என 865 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 900 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். புதுவை ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 959 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் 2-வது தவணை உட்பட 15 லட்சத்து 57 ஆயிரத்து 738 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடலில் மூழ்கிய வாலிபர்களை உயிருடன் மீட்ட போலீஸ் காரர் சவுந்தரராஜனை ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன் பாராட்டினார்.
புதுச்சேரி:
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள் விஷ்ணு (22), சபரிஷ் (24).
இவர்கள் தங்கள் நண்பர்களுடன் புதுவையில் நடந்த திருமணத்தில் பங்கேற்றுவிட்டு புதுவை கடற்கரை சாலையில் தலைமை செயலகம் எதிரே உள்ள கடலில் குளித்தனர். அப்போது ராட்ச ஆலை ஒன்று விஷ்ணு, சபரிஷை இழுத்து சென்றது.
இதைக்கண்ட அவர்களின் நண்பர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கடலோர காவல் படை போலீஸ் காரர் சவுந்தரராஜனை உதவி அழைத்தனர். அவர் சீருடையுடன் கடலில் இறங்கி அலையில் இழுத்து செல்லப்பட்ட இளைஞர்களை உயிருடன் மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தார்.
சிகிச்சைகாக இருவரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துரிதமாக செயல்பட்டு இளைஞர்களை காப்பற்றிய போலீஸ்காரர் சவுந்தரராஜனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதை பார்த்தவர்கள் போலீஸ்கார் சவுந்தரராஜனை பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் போலீஸ் காரர் சவுந்தரராஜனை ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன் தனது அலுவலகத்தில் அழைத்து பாராட்டி கவுரவித்தார்.
இதன்பின் ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன் நிருபர் களிடம் கூறியதாவது:&
சவுந்தரராஜனின் பணியால் காவல் துறை பெருமை கொள்கிறது. மற்ற போலீசாரும் இது போன்று சேவையாற்ற வேண்டும். காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இப்போது உடல்தகுதி தேர்வு முடிந்து, எழுத்து தேர்வுக்கு தயாராகி வருகிறோம்.
காலியாக உள்ள ஊர்க்காவல் படைவீரர், உதவி சப்&இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுவை வெடி குண்டு தயாரிக்கும் இடத்தை கண்டறிந்து, அங்கேயே சென்று குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதிய பஸ் நிலையம் அருகே 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை புதிய பஸ் நிலையம் அருகே ராஜாநகர் அய்யனார் கோவில் தெருவில் ஒரு டீக்கடை அருகே தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் சாதாரண உடையில் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்குள்ள ஒரு டீக்கடையில் ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மூலம் 3 நம்பர் லாட்டரி முடிவுகளை தெரிவித்துக்கொண்டிருந்தார்.
இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் காராமணிக்குப்பம் மாரியம்மன் நகரை சேர்ந்த ஆறுமுகம் (வயது59) என்பதும், இவர் டீக்கடையில் வேலை பார்த்துக்கொண்டே தனது கூட்டாளி ராஜாராம் உதவியுடன் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்று வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 3 நம்பர் லாட்டரி சீட்டு, செல்போன் மற்றும் லாட்டரி விற்பனை பணம் ரூ-.810 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் ஆறுமுகத்தின் கூட்டாளியான ராஜாராமனை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
வில்லியனூர் அருகே எலி மருந்து தின்று நர்சு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே வி.மணவெளி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி உமா (வயது35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
உமா புதுவை அருகே தமிழக பகுதியான தூக்கனாம்
பாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக உமா ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டு அடிக்கடி மயக்கம் ஏற்பட்டு அவதியடைந்து வந்தார். அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.
இந்த நிலையில் திடீரென வீட்டில் உமா மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி யடைந்த அவரது கணவர் ரங்கசாமி மனைவியை மீட்டு புதுவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு உமாவிடம் விசாரித்த போது ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோயினால் அவதிப்பட்டு வந்ததால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.
தொடர்ந்து அந்த ஆஸ்பத்திரியில் உமாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டது. பின்னர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனும தித்தனர். அங்கு உடல் நிலை மோசமாகவே உமாவை சென்னையில் உள்ள ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த உமா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து ரங்கசாமியின் சகோதரர் குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எம்.ஐ.டி. கல்லூரியில் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை சாந்தவேல் டெக்னாலஜி நிறுவனம் இணைந்து வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை சாந்தவேல் டெக்னாலஜி நிறுவனம் இணைந்து பொது வளாக வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது.
சாந்தவேல் டெக்னாலஜி மனிதவளத் துறை மேலாளர் நெப்போலியன் அந் நிறுவனத்தின் பணி சூழல், எதிர்கால குறிக்கோள் உள்ளிட்டவை குறித்து விளக்கினார். எழுத்து தேர்வு மூலம் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
கல்லூரி முதல்வர் மலர்க்கண் முகாமை தொடங்கி வைத்தார். அனைத்து துறை வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் மயிலம் எம்.ஐ.டி. மற்றும் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். முகாம் ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் செய்திருந்தார்.
தூய்மை பணியாளர்கள் குறைகளை தீர்க்க வேண்டும் என்று ஜிப்மர் அதிகாரிகளிடம் தேசிய ஆணைய தலைவர் அறிவுறுத்தினார்.
புதுச்சேரி:
தேசிய தூய்மை பணியாளர் ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும் தூய்மை பணியாளர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து தேவைகளை நிறைவேற்றி வருகிறது.
அதன்படி புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் தலைமையில் கூட்டம்
நட ந்தது. ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வார்ல் உட்பட அதிகாரிகள், பணியாளர் களின் பிரதிநிதிகள், ஒப்பந்த நிறுவனத்தினர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ஜிப்மரில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் நிலை, அவர்களின் அடிப்படை வசதிகள், குறைகள், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
புதுவை ஜிப்மரில் ஆயிரத்து 31, காரைக்காலில் 39 பேர் என ஆயிரத்து 70 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு சாதனங்கள், பணிபாதுகாப்பு சலுகைகள் குறித்து ஜிப்மர் நிர்வாகம் விளக்கியது. தூய்மை பணியாளர்கள் தரப்பில் சில கோரிக்கைகள், குறைகள் முன்வைக்கப்பட்டது. அவர்களின் தேவைகளை தீர்த்து வைக்க ஜிப்மர் நிர்வாகத்திடம், ஆணைய தலைவர் அறிவுறுத்தினார்.






