என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பாண்டி மெரினா கடற்கரைக்கு செல்ல ரூ.72 லட்சம் செலவில் புதிய சாலை பணியை அமைச்சர் லட்சுமிநாராயணன்-கென்னடி எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
    புதுச்சேரி:

    சுற்றுலா பயணிகள் பாண்டி மெரினா கடற்கரைக்கு செல்ல ஏற்ற வகையில் ரூ.72 லட்சம் செலவில் சாலை பணியை அமைச்சர் லட்சுமி நாராயணன்- கென்னடி எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    புதுவைக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கி றார்கள். அவர்கள் கடற்கரை அழகை கண்டு களிக்கும் வகையில் வம்பாகீரப்பாளையத்தில் பாண்டி மெரினா பீச் அமைக்கப்பட்டுள்ளது. 

    இதையடுத்து சுற்றுலா பயணிகள் சிரமமின்றி வானங்களில் பாண்டி மெரினா பீச்சிக்கு சென்றும் வரும் வகையில் புதுவை பொதுப்பணித்துறை மூலம் புதுவை சுப்பையா சாலையிலிருந்து வம்பாகீரப் பாளையம் வழியாக பாண்டி மெரினா பீச்சிக்கு ரூ.72 லட்சம் செலவில் சாலை அமைக்கப்படுகிறது.

    இதற்கான பூமி பூஜை விழா   நடந்தது. உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கென்னடி முன்னிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்திய மூர்த்தி, செயற்பொறியாளர் ஏழுமலை, உதவி பொறியாளர் சீனிவாசன், வம்பாகீரப்பாளையம் பஞ்சாயத்து தலைவர் தனசேகரன், தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, பொருளாளர் சண்முகம், கலை மற்றும் இலக்கிய பகுத்தறிவு சந்துரு, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ஆரோக்கியராஜ், மீனவரணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் செல்வம், மணிகண்டன், முரளி, செங்குட்டு, தினேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    திருக்காஞ்சியில் மாசிமக தீர்த்தவாரியையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நிகழ்ச்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் 17-ந்தேதி நடந்தது.

    இதையொட்டி திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் தேவஸ்தானத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.  சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வல மாக வந்து, கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 

    அங்கு கூடிய பக்தர்கள், பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சங்கராபரணி ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.  

    சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலிலும் நடந்த மாசி மக விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    புதுவை துறைமுகத்துக்கு சுருக்கு வலையை ஏற்றி வந்த லாரியை கடலோர காவல்படையினர் தடுத்து நிறுத்தியதோடு அதனை கடல் வழியாக கொண்டு செல்ல வந்த படகையும் திருப்பி அனுப்பினர்.
    புதுச்சேரி:

    மீன்வளத்தை அழிக்க கூடிய சுருக்கு வலைக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    இருப்பினும் சிலர்  சுருக்கு வலையை பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.  ஆனால் சுருக்கு வலைக்கு மீன்வளத்துறை முழுமையாக தடை செய்துள்ளது. இதனையும் மீறி சுருக்கு வலையுடன் மீனவர்கள் யாராவது வந்தால் அதனை தடுக்கும் பணியில் கடலோர காவல் படை போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

    இந்த நிலையில் புதுவை துறைமுகத்திற்கு  சுருக்கு வலையுடன் லாரி ஒன்று  வந்தது. இதனை அறிந்த  கடலோர காவல்படை சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும்  கடலோர காவல்படையினர் லாரியை தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

    அதே நேரத்தில் கடல் வழியாக துறைமுகத்திற்கு வந்த வைத்திக்குப்பத்தை சேர்ந்த படகை மடக்கி விசாரித்ததில் லாரியில்  வரும் சுருக்கு வலையை ஏற்றுவதற்கு அவர்கள் வந்ததாக தெரிவித்தனர். 

    இதனையடுத்து கடலோர காவல் படை போலீசார் சுருக்குவலைக்கு அரசு தடை விதித்து இருப்பதால் அதை ஏற்ற அனுமதிக்கமுடியாது என கூறி   படகை திருப்பி அனுப்பினார்கள்.

    அதே வேளையில் லாரியில் வந்த சுருக்கு வலை குறித்து விசாரித்து வருகின்றனர்.
    தனியார் ஆலையை மூடுவதை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப்பாளையத்தில் ஆட்டோ மொபைல் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.

    இந்த தொழிற்சாலையில் 135 நிரந்தர தொழிலாளர்கள், 400 தற்காலிக தொழி லாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆலை தொழி லாளர் சங்கம் சார்பில் 2020-ல் புதிய ஊதிய ஒப்பந்த கோரிக்கை அளிக்கப்பட்டது. இதனால் ஆலையை மூடும் நடவடிக்கையை நிர்வாகம் தொடங்கியுள்ளது. 

     இதை கண்டித்தும், தொழிற்சாலை மூடல் உத்தரவை திரும்பப்பெற வலியறுத்தியும் தொழிலாளர் துறையும், முதல்-அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தொழிலாளர் நலத்துறை முன்பு  தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

    ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஹரிபாபு, பொருளாளர் கல்பனா உட்பட தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
    கடலூர் பகுதியிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான பேர் மருத்துவம், வேலை மற்றும் கல்விக்காக கிருமாம்பாக்கம் பகுதியை நோக்கி வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் ஷேர் ஆட்டோ, ஆட்டோவைத் தான் பயன்படுத்துகின்றனர்.
    பாகூர்:

    கடலூரில் இருந்து ரெட்டிச்சாவடிக்கும், கிருமாம்பாக்கத்திற்கும் அனுமதி இல்லாத ஏராளமான ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் இயங்கிவருகிறது.

    இன்று காலை சுமார் 10 மணியளவில் கடலூரில் இருந்து ஷேர் ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு ரெட்டிச்சாவடி நோக்கி சென்று கொண்டிருந்தது. கன்னியக்கோவில் தனியார் பெட்ரோல் பங்க் எதிரில் வந்த போது பின்புறமாக வந்த தமிழக அரசு பேருந்து ஷேர் ஆட்டோவை உரசியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஷேர் ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்து சாலை ஓரத்தில் விழுந்தது. ஆட்டோவில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் சாலையில் விழுந்து கிடந்தனர். இந்த விபத்தில் 8 மாத கர்ப்பிணி, குழந்தை உட்பட 15 பேர் காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு கிருமாம்பாக்கம் அருகே உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் நிர்மல் குமார் தலைமையில் பேரிடர் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர்.

    தகவலறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

    கடலூர் பகுதியிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான பேர் மருத்துவம், வேலை மற்றும் கல்விக்காக கிருமாம்பாக்கம் பகுதியை நோக்கி வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் ஷேர் ஆட்டோ, ஆட்டோவைத் தான் பயன்படுத்துகின்றனர்.

    இந்த ஷேர் ஆட்டோக்கள் பெரும்பாலும் உறுதி தன்மையற்று பாதுகாப்பில்லாமல் இருப்பதாக பயணிகள் கூறுகின்றனர்.

    இன்று நடந்த விபத்தில் ஷேர் ஆட்டோவில் அச்சு முறிந்து அப்பளம் போல் நொறுங்கி காணப்பட்டது.பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு இது போன்ற வாகனங்களை கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
    பஸ் நிலையத்தில் தூங்கி கொண்டிருந்த பயணியிடம் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான வானூர் அருகே காயல்மேடு  மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வரதராஜ் (வயது62). இவர் டெய்லர் வேலை செய்து வருகிறார்.

    இவர் புதுவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல பஸ்சில் புதுவை பஸ் நிலையத்துக்கு வந்தார்.  அப்போது நள்ளிரவு நேரமாகிவிட்டதால் உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டிய பஸ் இல்லாததால் வரதராஜ் காத்திருந்து விட்டு அங்குள்ள பயணிகள் அமரும் சிமெண்ட் கட்டையில் படுத்து தூங்கினார்.

    அப்போது ஒரு வாலிபர் நைசாக வரதராஜ் சட்டையில் வைத்திருந்த செல்போனை திருடிக்கொண்டு நழுவி சென்றார். உடனே திடுக்கிட்டு எழுந்த வரதராஜ் செல்போன் திருடி சென்றவனை பிடிக்க முயன்றார். ஆனால் அவன் மாயமாகிவிட்டான்.

    இதையடுத்து வரதராஜ் தனது ஊருக்கு சென்று நண்பர்களிடம் இதனை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து செல்போன் திருடியவனை பிடிக்க வரதராஜ் தனது நண்பர்களை புதிய பஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார். 

    அப்போது செல்போன் திருடியவன் சென்னை செல்லும் பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்ததை வரதராஜ் கண்டார். உடனே நண்பர்கள் உதவியுடன் அவனை பிடித்து உருளையன்பேட்டை போலீசில் ஒப்படைத்தார்.

    போலீசார் அவனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவன் நாகப்பட்டினம் வடகானத்தூர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்ற விஜ்ய்(20) என்பது தெரியவந்தது. இதையடுத்து விஜ்யை போலீசார் கைது செய்து அவனிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.
    புதுவை பெரிய மார்க்கெட்டில் பூக்கடை தொழிலாளி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் பெரிய மார்க்கெட்டில் வியாபாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள்ளாறு பெரியார்நகரை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மகன் அருளானந்தம் (வயது33). இவர் புதுவையில் தங்கி பெரிய மார்க்கெட்டில் உள்ள ஒரு பூக்கடையில் பூ கட்டும் வேலை செய்து வந்தார்.

    இவரும் அங்குள்ள மற்றொரு பூக்கடையில் வேலை பார்க்கும் வைத்திக்குப்பத்தை சேர்ந்த பாலாஜி(20), பாலா(22) ஆகிய இருவரும் நண்பர்கள். இவர்கள் வேலை முடிந்ததும் ஒன்றாகவே வெளியே சென்று வருவார்கள்.

    மேலும் இவர்கள் இரவில் பூக்கடையிலேயே மது அருந்துவது வழக்கம். அதுபோல் நேற்று இரவு மதுபாட்டில்களை வாங்கி வந்து 3 பேரும் பூக்கடையில் அமர்ந்து மது குடித்துள்ளனர். நள்ளிரவு 1 மணி வரை அவர்கள் மது குடித்துக்கொண்டிருந்தனர்.

    அப்போது மது போதையில் மாலை அழகாக கட்டுவது தொடர்பாக அருளானந்தத்துக்கும் பாலாஜி மற்றும் பாலா ஆகியோருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றியதில் பாலாஜியும், பாலாவும் சேர்ந்து அருளானந்தத்தை சரமாரியாக தாக்கினர்.

    மேலும் ஆத்திரம் அடங்காத அவர்கள் பூக்கடையை திறந்து கத்தியை எடுத்து வந்து அருளானந்தத்தின் கழுத்தை சரமாரியாக அறுத்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அருளானந்தம் இறந்து போனார்.

    இதனையடுத்து பாலாஜியும், பாலாவும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இன்று அதிகாலை 3 மணிக்கு துப்புரவு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அருளானந்தம் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அங்குள்ள காவலாளிக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து காவலாளி சம்பவ நடந்த இடத்தின் பூக்கடை உரிமையாளருக்கு இதுபற்றி தெரிவித்தார். இதை தொடர்ந்து கடை உரிமையாளர் இதுகுறித்து பெரியக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அருளானந்தம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவகல்லூரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது பாலாஜியும், பாலாவும் சேர்ந்து அருளானந்தத்தை கழுத்தை அறுத்தை படுகொலை செய்தது பதிவாகி இருந்தது. இதனை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய பாலாஜி மற்றும் பாலா ஆகிய இருவரையும் தேடி வருகிறார்கள்.

    இந்த கொலை சம்பவம் பெரிய மார்க்கெட்டில் வியாபாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுவையில் 2-வது நாளாக பிரபல நகை கடையில் வருமான வரி சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது.
    புதுச்சேரி:

    புதுவை கொசக்கடை வீதியில் உள்ள பிரபல நகைக்கடையான சிவவள்ளி விலாஸ் கடையில் வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதன்பேரில் சென்னையிலிருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் தனித்தனி குழுவாக பிரிந்து இந்த கடைகளில் நேற்று சோதனை நடத்தினர். இந்த கடைகளின் கடலூர், விழுப்புரத்தில் உள்ள கிளை கடைகளிலும் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். நகைகளின் விற்பனை விவரம், கொள்முதல் ரசீது ஆகியவற்றை ஆய்வு செய்தனர். 

    இந்த சோதனையின் காரணமாக நகை கடை கள்  மூடப்பட்டது. இந்நிலையில் இன்றும் 2-வது நாளாக இந்த கடைகளில் சோதனை தொடர்ந்தது. கடையின் 3 ஷட்டர்களை மூடி சோதனை நடத்து கின்றனர். இதனால் இந்த நகை கடைகள், கிளை கடைகள் இன்றும் அடைக்கப்பட்டு இருந்தது. வாடிக்கையாளர்கள் அனு மதிக்கப்படவில்லை.  தொடர்ந்து முக்கிய  ஆவணங்களை கைப்பற்றி உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காங்கிரசிலிருந்து வெளியேறுபவர்களால் இளைஞர் களுக்கு வழி கிடைத்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் கட்சியிலிருந்து சில முன்னாள் அமைச்சர்கள் வெளியேறுகிறார்கள் என்ற தகவல் தேர்தல் நடக்கும் காலத்தில் எப்போதும் வரும்.இது புதிதல்ல. ஆயிரம் கால் மண்டபத்திலே ஒருகால் குறைந்தால் ஒன்றும் ஆகி விடப்போவதில்லை. 

    காங்கிரஸ் கட்சியை தாங்கி நிற்கிறோம் என்று தாங்களே, தங்களை பெரிதாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள்தான் வெளியேறுகிறார்கள். 

    இவர்கள் வெளியேறுவதால்  காங்கிரஸ் கட்சியில் இருக்கின்ற இளைஞர்களுக்கு வழி கிடைத்து, இளைஞர்களுக்கு ஒரு எதிர்காலத்தை உண்டாக்கி கொடுக்கிறது. 

    137 ஆண்டுகால வரலாறு கொண்ட காங்கிரஸ் கட்சி யின் கொள்கைகளில் பிடிப்பு இல்லாமல், சந்தர்ப்பவாதிகள் ஆக இத்தனை ஆண்டுகாலம் இருந்துவிட்டு, இப்போது வெளியேறுவது காங்கிரஸ் பேரியக்கத்திற்கு நல்லதுதான். 

    ஆண்டு அனுபவித்த மூத்த முன்னாள் அமைச்சர்கள் வெளியேறுவதால், காங்கிரஸ் கட்சிக்கு நன்மை தான்  ஏற்படுமே தவிர, எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. மாறாக எதிர்காலம் விரைவில் சிறப்பாகும். 

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    மூலக்குளம் முதல் வில்லியனூர் வரை ரூ.5.81 கோடியில் சாலை மேம்படுத்தும் பணியை அமைச்சர் லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தார் தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவை மூலக்குளம் முதல் வில்லியனூர் மூலக்கடை வரை உள்ள பெரம்பை சாலையை ரூ.5 கோடியே 81 லட்சத்தில் அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிக்கான பூமிபூஜை விழா நடந்தது.

    பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்து பணிகளை தொடங்கி வைத்தார்.  குடிமைப்பொருள் வழங்கல் துறை  அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் முன்னிலை வகித்தார். 

    நிகழ்ச்சியில் சிவ சங்கர் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர்  சத்தியமூர்த்தி, தேசிய நெடுஞ்சாலை கோட்ட செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவி பொறியாளர் ராஜன், இளநிலை பொறியாளர்  ரமேஷ்குமார், ஊர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    இந்த பணியை 9 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
    மத்திய அரசு கண்காட்சியில் உள்ளூர் கலைஞர்கள் புறக்கணிப்பட்டுள்ளனர் என சிவா எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர், எதிர் கட்சித் தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு அனைத்து கலைஞர்களின் நலனுக்காக எந்த ஒரு செயல்பாட்டையும் மேற்கொள்ளவில்லை. இச்சூழலில் பல கோடி செலவு  செய்து மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சகம் கைவினை பொருள் கண் காட்சியை நடத்தி வருகிறது. 

    இங்கு உள்ளூர் கலை  மற்றும் கைவினை கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. உள்ளூர் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து வெளி  மாநில கலைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதை எப்படி ஏற்க முடியும்? இதற்கு பெயர் சுயசார்பா? பிழைக்க வழியின்றி சொல்லொணாத்  துயரத்திற்கு ஆளாகியுள்ள புதுவை கலைஞர்களை இப்படித்தான் அவமரியாதை செய்வதா? 

    புதுவையின் இந்திய பிரெஞ்சு கலாச்சார சிறப்பு,  பாரம்பரியம், கலைகள் பற்றிய ஒரு அறிகுறியும் இந்நிகழ்வில் இல்லை. வடமாநிலத்தவரின் வருவாயை பெருக்க சிவப்பு கம்பள வரவேற்பு  அளிக்கப்பட்டுள்ளது. 

    ஆனால் புதுவையில் பத்மஸ்ரீ விருது பெற்ற கலைஞர்கள், கலைமாமணி பட்டம் பெற்றவர்களுக்கு கூட முறையான  அழைப்பும் மரியாதையும் தரவில்லை. இந்த கண்காட்சி தமிழ் மொழியையும், புதுவை சுயசார்பையும் புறக்கணிப்பதாகவும், இந்தியை  திணிப்பதாகவுமே உள்ளது. 

    மத்திய அரசின் திட்டங்களாக இருந்தாலும், கண்காட்சிகளாக இருந்தாலும் இந்தியில் பெயர் சூட்டி நடத்த  அனுமதிப்பதை தவிர்த்து, தமிழில் பெயர் சூட்டி நடத்தினால் மட்டுமே அனுமதிக்க வேண்டும். உள்ளூர் கலைஞர்களுக்கு முக்கியத்துவம்  தரப்பட வேண்டும். இல்லை யெனில் மீண்டும் ஓர் மொழிப் போராட்டம்  தொடங்கும். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    பணி உயர்வு வழங்கக்கோரி கல்லூரி பேராசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி: 

    புதுவை அரசின் உயர்கல்வி இயக்குனரகத்தின் கீழ் புதுவை உயர்கல்வி குழுமம் அரசின் முழு நிதியுதவியோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த குழுமத்தின் மூலம் புதுவையில் 4 கலை, அறிவியல் கல்லூரிகளும், காரைக்காலில் ஒரு கல்லூரியும் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 

    இங்கு பணியாற்றும் பேராசிரியர்களுக்கு 15 ஆண்டாக எந்த பணி உயர்வும் வழங்கவில்லை. மாத சம்பளமும் தாமதமாக வழங்கப்பட்டு வருகிறது. வீட்டு வாடகைப்படி, பஞ்சப்படி உள்பட இதர படிகள் அரசு ஊழியர்களுக்கு இணையாக கடந்த 6 ஆண்டாக வழங்கவில்லை. பல முறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை. 

    இதனால் நிதித்துறை செயலர், அதிகாரிகளை கண்டித்தும், சம்பளம், பணி உயர்வு, 7-வது சம்பளக்குழு நிலுவைத்தொகை உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாணவர்களின் வகுப்புகள், தேர்வுகள் பாதிக்காத வகையில் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.  

    அனைத்து கல்லூரிகளிலும் கருப்பு பேட்ஜ் அணிந்து பேராசிரியர்கள் வகுப்புகளை நடத்தினர். வருகிற 19-ந்தேதி வரை கருப்பு பேட்ஜ் அணியவும் திட்டமிட்டு உள்ளனர். 16-ந்தேதி 5 கல்லூரிகளின் முன்பு வாயிற்கூட்டம் நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.  

    இதைத்தொடர்ந்து 21-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை கருப்பு பேட்ஜ், கோரிக்கை அட்டை அணிந்து வகுப்புகளை நடத்தவும், 24-ந்தேதி உயர் கல்வி குழும தலைமை அலுவலகத்தை முற்றுகையிடவும், 25-ந்தேதி மாலை 6 மணி முதல் கோரிக்கை நிறைவேறும்வரை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என ஆசிரியர் சங்க தலைவர் ராம்குமார்  தெரிவித்துள்ளார்.
    ×