என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காரைக்கால் அருகே நெடுங்காடு கடைத்தெரு பகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.

    காரைக்கால்:

    காரைக்காலிலிருந்து கோட்டுச்சேரி, வடமட்டம், நெடுங்காடு வழியாக மயிலாடுதுறை, கும்பகோணத்துக்கு தமிழக மற்றும் புதுச்சேரி அரசுப் பஸ்கள், கடந்த பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. ஆனால், அண்மைக்காலமாக அவையாவும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், முதியோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின் றனர்.

    எனவே, மீண்டும் அந்த வழித்தடங்களில் அரசு மற்றும் தனியார் பஸ் வசதிகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழித் தடங்களில் அனுமதி பெற்றுள்ள ஷேர் ஆட்டோக்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் அருகே நெடுங்காடு கடைத்தெரு பகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.

    நெடுங்காடு பகுதி செயலாளர் பாக்கியராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் திவ்ய நாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் தமீம் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    தகவல் அறிந்த புதுச்சேரி சாலை போக்குவரத்து அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி 45 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித் ததையடுத்து, அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    புதுவை சட்டமன்றம் 23-ந்தேதி கூடுகிறது.
    புதுச்சேரி:

    புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் 18-ந்தேதி நிருபர்களிடம் கூறியதாவது:-

     வருகிற 23-ந்தேதி புதுவை சட்டசபையின் குளிர்கால கூட்டம் கூடுகிறது. கவர்னர் தமிழிசை கூட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். 1963-ம் ஆண்டு சட்டமன்ற விதிகளின்படி 6 மாதத்துக்கு ஒருமுறை சட்டமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற விதிகளின்படி சபை கூட்டப்படுகிறது. 

    எத்தனை நாள் கூட்டத்தொடர் என்பதை சட்டமன்ற அலுவல் குழு முடிவு செய்யும். புதிய சட்டமன்றம் கட்டும் பணிகள் தொடர்பாக தொடர்ந்து மத்திய அரசு பேசி வருகிறது.  மத்திய அரசில் இருந்து தொடர்பு கொண்டு பேசினர். விரைவில் சட்டமன்றம் கட்ட டெண்டர் கோரப்படும். 

    குளிர்கால கூட்டத்தொடர் முடிந்தவுடன் கோவா, உத்திரகண்ட், ஜார்கண்ட், தெலுங்கானா, கர்நாடக மாநிலம் பெல்காமில் கட்டப்பட்டுள்ள புதிய சட்டமன்றத்தை பார்வையிட உள்ளோம். அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.  
    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    பிறந்த நாளையொட்டி- சிங்காரவேலர் சிலைக்கு ரங்கசாமி மாலை அணிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசு செய்தி விளம்பரத்துறை சார்பில் தியாகி சிங்காரவேலர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி புதுவை-கடலூர் சாலையில் உள்ள சிங்காரவேலர் சிலைக்கு முதல்& அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

    காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிர மணியன் தலைமையில் வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

    தி.மு.க. சார்பில் எதிர்க்கட்சித்தலைவர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், தொகுதி பொறுப்பாளர் கோபால்,  துணை அமைப்பாளர் செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் தைரியநாதன், மீனவர் அணி தனசேகர், தொகுதி செயலாளர் சக்திவேல் மற்றும் தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர். 

    இந்திய கம்யூனிஸ்டு சார்பில் மாநில செயலாளர் சலீம் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், நிர்வாகிகள் அபிஷேகம், கீதநாதன், சேதுசெல்வம் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். இதேபோல பல்வேறு மீனவ அமைப்புகள் சார்பில் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
    புதுவையில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    புதுச்சேரி: 

    புதுவையில் ஆயிரத்து 884 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 27, காரைக்காலில் 11, ஏனாமில் 9, மாகியில் 3 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 25, காரைக்காலில் 4, மாகியில் 3 பேர் என 32 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 101, காரைக்காலில் 51, ஏனாமில் 2, மாகியில் ஒருவர் என 155 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 

    புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 534 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 989 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 

    புதுவையில் 287, காரைக்காலில் 218,  ஏனாமில் 31, மாகியில் 18 பேர் என 554 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 586 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 959 ஆக உள்ளது. 

    புதுவையில் 2-வது தவணை உட்பட 15 லட்சத்து 60 ஆயிரத்து 635 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
    ஜெயலலிதா பிறந்த நாளை பெண்கள் தினமாக கொண்டாட வேண்டும்- என புதுவை அ.தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    புதுச்சேரி: 

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. சார்பில் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாடுவது குறித்து மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆலேசானைக்கூட்டம் நடந்தது.

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், ராஜாராமன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்,  ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு கிழக்கு மாநில அ.தி.மு.க. சார்பில் வருகிற 24-ந்தேதி தலைமை கழகத்தில் ஏழை மக்களுக்கு, இலவச வேட்டி, சேலை, தட்டு வண்டி, தள்ளுவண்டி, சலவைப்பெட்டி, ஆதரவற்ற பெண்களுக்கு தையல் எந்திரம், மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், அன்னதானம் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாடுவது. 

    அரசு குழந்தைகள் மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்குவது. கிழக்கு மாநிலம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. 

    மேலும், ஜெயலலிதா பிறந்த நாளை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு வெண்கல சிலை அமைக்க வேண்டும் என புதுவை அசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    நிகழ்ச்சியில் இணை செயலாளர்கள் கணேசன், திருநாவுக்கரசு, அன்பா னந்தம், துணை தலைவர் சின்னத்துரை, பொருளாளர் ரவிபாண்டுரங்கன், துணை செயலாளர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, அன்பழக உடையார், மூர்த்தி,  ஜெயசேரன், கிருஷ்ணமூர்த்தி, காந்தி, மணவாளன், குமுதன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் மருதமலையப்பன், தொழிற்சங்க பேரவை செயலர் பாப்புசாமி, மகளிரணி செயலாளர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்
    புதிய பஸ் நிலையம், பெரிய மார்க்கெட்டில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என நேரு எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து நேரு எம்.எல்.ஏ. ஸ்மார்ட் சிட்டி திட்ட துணை இயக்குனர் மாணிக்க தீபனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

    அப்போது, சின்ன வாய்க்காலை  மேம்படுத்துதல், அரசு குடியிருப்புகளை மேம்படுத்துதல், குடிநீர் குழாய்களை  புதிதாக மாற்றுதல், மின் பற்றாக்குறையை போக்குதல், பாதாள சாக்கடைகளை தரம் உயர்த்துதல்,  முக்கிய வீதிகளை சிமெண்டு சாலைகளாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

    மேலும் நகரின் மைய  பகுதியில் உள்ள புதிய பஸ் நிலையத்தை மேம்படுத்தி கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், பெரிய மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை மேம்படுத்தி சிதிலமடைந்த நடைபாதைகளை  புதுப்பித்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    ஆலோசனையின்  போது ஸ்மார்ட் சிட்டி திட்ட தொழில்நுட்ப அதிகாரிகள்  மாணிக்கவாசகம், முரளி, நகராட்சி உதவி பொறியாளர் நமச்சிவாயம்,  இளநிலை பொறியாளர் ஞானசேகரன். மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    விவசாயிகளை சிரமப்படுத்தாமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் வைத்தி லிங்கம் எம்.பி. தலைமையில் காரைக்காலில் நடந்தது. 

    அப்போது மத்திய அரசின் மூலம் மாவட்டத்தில் செயல்பாட்டில் உள்ள அனைத்து திட்டங்களையும் அமைச்சர் சந்திரபிரியங்கா, எம்.எல்.ஏ.க்கள் நாஜிம்,  நாக.தியாகராஜன், காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜுன் சர்மா, துணை கலெக்டர் பாஸ்கரன் மற்றும் இதர உறுப்பினர்கள  ஆய்வு செய்தார்கள். 

    கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உரிய தகவல் மற்றும் விளக்கங்களை அளித்தார்கள். வைத்திலிங்கம் எம்.பி. கூறுகையில் இந்திய உணவுக்கழக அதிகாரிகளிடம் நெல் கொள்முதலை அதிகப்படுத்த விவசாயிகளுக்கு எந்தவித சிரமத்தையும் அளிக்க கூடாது.  நெல் கருப்பாக இருப்பதால் திருப்பி அனுப்புவதாக புகார்கள் வந்துள்ளன. விவசாயிகளை சிரமப்படுத்தாமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    நாஜீம் எம்.எல்.ஏ.   கூறுகையில், குடிசை மாற்று வாரியத்தில் அமைந்துள்ள குடியிருப்பில் குடிநீர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக புகார்கள் வருகின்றன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை உடனடியாக சரி செய்து தர உத்தரவிட வேண்டும்.  குடிசை மாற்று வாரியம் தரும் வீடு கட்டும்  மானியத்தை குறித்த காலத்தில் வழங்க வேண்டும் என கூறினார்.
    விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என வைத்திலிங்கம் எம்.பி. கேட்டுக் கொண்டார்.
    புதுச்சேரியில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான உதவித்தொகை ரூ.500 உயர்த்துவது என முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பில் மாநில எய்ட்ஸ் தடுப்பு உயர்நிலை குழு கூட்டம் அக்கார்டு ஓட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். இதில் சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தகவல் தொடர்பு மற்றும் பயிற்சி தேசிய நிதி ஆலோசகர் ராவத் உட்பல் தாஸ், ஷேர் இந்தியா நிறுவனம் சார்பில் சம்ருதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் உயர்மட்ட குழு உறுப்பினர்களாக உள்ள மாவட்ட நீதிபதி, சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர், குடிமைப்பொருள் வழங்கல் துறை, சமூக நலத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, தொழிலாளர் துறை உள்பட பல்வேறு துறையின் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், எய்ட்ஸ் தொற்றுடன் வாழ்பவர்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகையில் ரூ.500 உயர்த்தி வழங்குவது, எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு விதவை பென்ஷன் பெறுவோருக்கு கூடுதலாக எய்ட்ஸ் தொற்றுக்கான உதவித்தொகையை சேர்த்து வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் ஏ.ஆர்.டி. சிகிச்சை எடுத்துக்கொள்ள மருத்துவமனைக்கு சென்று வர அரசு ஒரு ஆண்டுக்கு வழங்கும் பயண படி ரூ.400 என்பதை ரூ.1,800 ஆக உயர்த்தி வழங்கவும், எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் ரூ.1,025 மதிப்புள்ள சத்து பொருட்கள் வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    மேலும் சிவப்பு ரேஷன்கார்டு வைத்துள்ள எய்ட்ஸ் நோயாளிகளை அந்தி யோதயா அன்ன யோஜனா திட்டத்தில் சேர்த்து அதற்கான குடும்ப அட்டை வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

    இதற்கு ஆகும் செலவு ரூ.1 கோடியே 57 லட்சத்து 46 ஆயிரத்தை புதுவை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
    காரைக்கால் அருகே திருபட்டினத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
    காரைக்கால்:

    காரைக்கால் அருகே திருபட்டினம் கீழையூர் பகுதியில் வசிப்பவர்கள் வீரமணி, ஸ்டாலின், தமிழரசன்.

    நேற்று மாலை மாசிமகத் திருவிழா முடிந்து, அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 2 மணி சுமாருக்கு தமிழரசன் என்பவர் வீட்டில் தீ பற்றியது. சிறுது நேரத்தில் தொடர்ந்து அடுத்தடுத்தவர்களின் வீட்டுக்கும் தீ பரவியது. விபத்தை தொடர்ந்து அனைவரும் வீட்டை விட்டு உடனடியாக வெளியேறினார். நள்ளிரவு என்பதால் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது.

    காரைக்கால் மாவட்ட தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீ மற்ற வீடுகளுக்கு பரவாமல் அணைத்தனர். விபத்தில் சுமார் ரூ. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து சாம்பலானது.

    தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீ விபத்து குறித்து, திரு.பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அங்கிருந்த கம்ப்யூட்டர், மின் பெட்டி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் எரிந்து சேதமானது.
    புதுச்சேரி:

    புதுவை கோரிமேட்டில் ஜிப்மர் ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது.

    இந்த ஆஸ்பத்திரியில் புதுவை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து உள்புற நோயாளியாகவும் வெளிப்புற நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இன்று காலை ஜிப்மர் வளாகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் உள்ள ரத்த மாதிரிகள் சேமிப்பு அறையில் திடீரென கரும்புகை வெளியேறியது. இதனை அறிந்த ஆஸ்பத்திரி ஊழியர் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இதுகுறித்து ஆஸ்பத்திரி காவலாளிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக அறையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த மின் வயரில் மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து நடந்தது தெரியவந்தது.

    இந்த திடீர் தீ விபத்தால் அங்கிருந்த கம்ப்யூட்டர், மின் பெட்டி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் எரிந்து சேதமானது. ஆனால் பெரிய அளவிலான தீவிபத்தோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

    இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரி வளாகத்தில் இன்று காலை பரபரப்பு நிலவியது.




    புதுவை சட்டசபையின் கடந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் ஆகஸ்டு 26-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது.
    புதுச்சேரி: 

    சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததால் பாராளு மன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலாசீத்தாராமன், யூனியன் பிரதேசமான புதுவைக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

    இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி ரூ.9 ஆயிரத்து 900 கோடிக் கான முழுமையான பட்ஜெட்டை ஆகஸ்ட்டில் தாக்கல் செய்தார். சட்டசபை கூடி வருகிற 26-ந்தேதியுடன் 6 மாதம் நிறைவடைய உள்ளது. 6 மாதத்துக்கு ஒருமுறை சட்டசபையை கூட்ட வேண்டும் என விதி உள்ளது.  

    இதனால் வருகிற 23-ந்தேதி (புதன்கிழமை) புதுவை சட்டசபையில் குளிர்கால கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டம் ஒரு நாள் மட்டுமே நடைபெறும் என தெரிகிறது. புதுவை சட்டசபையில் அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 

    கடந்த 10 ஆண்டுகளாக புதுவை சட்டசபையில் தொடர்ந்து மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, ஜூலை, ஆகஸ்டு மாதங் களில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 

    இந்த ஆண்டு மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய ரங்கசாமி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளது. அரசு துறைகளில் பட்ஜெட் தொடர்பான கூட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. 

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுவை நிதித்துறை செயலாளர் பிரசாந்த் கோயல் டெல்லி சென்று புதுவை பட்ஜெட் தொடர்பாக உள்துறை, நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
    புதுவையில் 68 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவையில் 2 ஆயிரத்து 30 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது

    இதில் புதிதாக 68 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 50, காரைக்காலில் 12, ஏனாமில் 5, மாகியில் ஒருவர் புதிதாக    தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 82, காரைக்காலில் 17, ஏனாமில் 9, மாகியில் 5 பேர் என 113 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 

    புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 484 பேர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 834 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 

    புதுவையில் 360, காரைக் காலில்  23, மாகியில் 15 பேர் என 654 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 691 பேர் கொரோனா  தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 959 ஆக உள்ளது. 

    புதுவையில் 2-வது தவணை  உட்பட 15 லட்சத்து 59 ஆயிரத்து 790 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    ×