என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி கென்னடி நகர் சுப்புராயப்பிள்ளை சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி வசந்தி. இவரது 2-வது மகள் சுவாதி (வயது 24). இவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் வயிற்று வலியால் சுவாதி அவதிப்பட்டு வந்ததாகவும் இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாகாததால் விரக்தியில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுவாதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்கால் திருநள்ளாறை அடுத்த செல்லூர் அகலங்கண்ணு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையன் (வயது70). விவசாயம் செய்துவரும் இவர், தனது தெருவில் கார் ஓட்டி பழகி வந்தார். அப்போது, தெருவில் நின்று கொண்டிருந்த செல்லம்மாள் (76), முத்துலட்சுமி (48), புனிதா (36) ஆகிய 3 பெண்கள் மீது கார் மோதியது. இதில், 3 பேரும் காயம் அடைந்தனர். அருகில் உள்ளோர், 3 பேரையும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதில், செல்லம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். மற்ற இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து, காரைக்கால் நகர போக்குவரத்து காவல் நிலைய போலீசார், காரை தவறாக ஓட்டிய முருகையன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வானூர்:
புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்/ இவரது மனைவி அன்னபூரணி (வயது 52). இவர்கள் 2 பேரும் நேற்று மாலை புதுவையில் இருந்து திருச்சிற்றம்பலத்தில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
பின்னர் திருச்சிற்றம்பலத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து புதுவை நோக்கி திரும்பினர். மோட்டார் சைக்கிள் ஆரோவில் உள்ள போலீஸ் நிலையம் அருகே வந்தபோது அங்குள்ள வேகத்தடை மீது மோட் டார் சைக்கிளை வேகமாக இயக்கியதில் எதிர்பாராத விதமாக பின்னால் இருந்த அன்னபூரணி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அன்னபூரணி இறந்தார்.
இதுகுறித்து ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.
இந்தியாவில் இருந்து மாணவர்கள் உள்பட 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
உக்ரைன் நாட்டு எல்லைகளில் உள்ள நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். புதுவையிலிருந்து மருத்துவம் படிக்க சென்ற 23 மாணவர்கள் உக்ரைனில் சிக்கி உள்ளனர்.
நேற்று நள்ளிரவில் தமிழகத்தை சேர்ந்தவர்களோடு புதுவையை சேர்ந்த மாணவி ரோஜாசிவமணி நாடு திரும்பினார். அவரை சென்னை விமான நிலையத்தில் கவர்னர் தமிழிசை பூங்கொத்து அளித்து வரவேற்றார்.
பின்னர் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையை சேர்ந்த ரோஜா சிவமணி, தமிழகத்தை சேர்ந்த மாணவர்களோடு திரும்பி வந்துள்ளார். மத்திய அரசின் கடுமையான முயற்சியால் இந்தியர்கள் மீட்டெடுக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த மாணவி 6-ம் ஆண்டு மருத்துவம் படிக்கிறார். 2 மாதத்தில் தன் படிப்பை நிறைவு செய்திருப்பார். அதற்குள் போர் வந்துவிட்டது. அவர் பத்திரமாக மீட்கப்பட்டது மகிழ்ச்சி தருகிறது.
புதுவையில் இருந்து சென்ற 23 மாணவர்களும் பத்திரமாக உள்ளதாக தெரிவித்து உள்ளனர். அவர்கள் அனைவரையும் மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளையும் அரசு செய்து வருகிறது.
புதுவை அரசு வெளியுறவுத்துறையிடம் தொடர்புகொண்டு மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ள பிரதமருக்கு நன்றி.
இந்தியர்களை மீட்க 26 விமானங்களுக்கு மேல் இயக்கப்பட்டுள்ளது. 4 மந்திரிகளை உக்ரைன் எல்லை நாடுகளுக்கு அனுப்பி இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் பிரதமர் ஈடுபடுத்தியுள்ளார்.
‘ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டம் மிக சிறப்பாக, மனிதாபிமானத்தோடு இந்தியர்கள் யாரும் விடுபட்டுவிடக்கூடாது என்ற நிலையில் இயங்கி கொண்டிருக்கிறது. இது மனநிம்மதியை தருகிறது.
உக்ரைனில் போர் சூழல் கவலை அளிக்கிறது. அனைத்து மாணவர்களும் வந்து சேர்ந்தால்தான் மிகவும் ஆறுதலாக இருக்கும். மத்திய அரசோடு இணைந்து, மாநில அரசும் இணைந்து மாணவர்களை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






