என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    போலீஸ் தேர்வு முடிவில் திருக்கனூர் அருகே உள்ள செட்டிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் தேர்வானார்கள். இதன் மூலம் புதுச்சேரியில் ஒரு போலீஸ் கிராமமாக இது விளங்குகிறது.
    திருக்கனூர்:

    புதுச்சேரி மற்றும் தமிழக போலீஸ் துறையில் திருக்கனூர் அருகே உள்ள செட்டிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சுமார் 100 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு, போலீஸ், ஊர்க்காவல் படை வீரர், பெண் காவலர் என பல்வேறு பிரிவுகளில் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் இடம் பிடித்து தனி முத்திரை பதித்துள்ளனர்.

    புதுச்சேரி தீயணைப்பு துறையிலும் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட பல்வேறு பிரிவுகளில் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். போலீஸ் பணிக்கான தேர்வு எப்போது அறிவிக்கப்பட்டாலும் அதில் பங்கேற்று இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருகிறார்கள்.

    புதுச்சேரி மாநில போலீஸ் துறை சார்பில் நடந்த காவலர் தேர்விலும் செட்டிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

    இதில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளதில் இந்த கிராமத்தை சேர்ந்த 7 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஏற்கனவே புதுச்சேரி, தமிழக போலீஸ் துறையில் அதிகம் பேர் பணியாற்றி வரும் நிலையில் தற்போதும் இந்த அளவுக்கு தேர்ச்சி பெற்று இருப்பது மாநிலத்தையே போலீஸ் கிராமமாக செட்டிப்பட்டு திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அதிலும் தமிழ்ச்செல்வம் என்பவர் மாநில அளவில் 8-வது இடத்தை பிடித்து தேர்வாகி இருப்பது மற்றொரு சிறப்பாகும். இவர்களில் பெரும்பாலானோர் கூலி தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    ஏற்கனவே இந்த கிராமத்தில் இருந்து போலீஸ் துறையில் பணியில் இருந்து வருபவர்கள் தங்கள் கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு வழிகாட்டி வருவது இந்த சாதனைக்கு முக்கிய அம்சமாகும். தங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் புதுச்சேரி காவலர்களாக தேர்வு செய்யப்பட்டிருப்பது செட்டிப்பட்டு கிராம மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    ஒடிசாவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி புதுவையில் விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேதராப்பட்டு:

    சேதராப்பட்டு தொழிற் பேட்டையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

    இங்குள்ள இரும்பு உருக்கும் தொழிற்சாலையில் வட மாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் சேதராப்பட்டு, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, கரசூர் உள்ளிட்ட பகுதிகளில் தங்கி தொழிற்சாலைகளில் வேலை செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே சேதராப்பட்டு பகுதிகளில் கடந்த பல மாதங்களாக கஞ்சா புழக்கம் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    குறிப்பாக கனரக தொழிற்சாலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர்.

    சேதராப்பட்டு, துத்திப்பட்டு, வில்லியனூர் பகுதிகளைச் சேர்ந்த ரவுடிகள் சிலர் சேதராப்பட்டு பகுதியில் உள்ள அடர்ந்த பகுதியில் கஞ்சா புகைப்பதும் அதனை போலீசார் கண்டுபிடித்து அவர்களை கைது செய்வதும் இருந்து வருகிறது.

    இந்நிலையில் சேதராப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று சேதராப்பட்டு ஏரிக்கரையில் ரோந்து பணிமேற்கொண்டனர். அப்போது, அய்யனார் கோவில் அருகே வட மாநில வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்தார். சந்தேகம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அவரது உடமைகளை சோதித்தனர். அப்போது அவரது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அவர் ஒடிசா மாநிலம் ஹஜிப்பூர் பகுதியைச் சேர்ந்த சோமநாத் (வயது32) என்பதும், திருமணமாகி மனைவியுடன் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.

    சோம்நாத் வீட்டில் சேதராப்பட்டு போலீசார் சோதனை நடத்தினர். அங்கு வீட்டுக்குள் அறையில் வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.

    கர்ப்பிணியான சோமநாத் மனைவியிடம் போலீசார் விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில் ஒடிசாவில் இருந்து ரெயிலில் கஞ்சா பொட்டலங்களை கிலோ கணக்கில் கடத்தி வந்து 10 கிராம் அளவிற்கு பாக்கெட்டுகளில் அடைத்து அதை ஒரு பொட்டலம் ரூ.500-க்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

    சேதராப்பட்டில் வேலை செய்து வரும் வட மாநில தொழிலாளர்கள் மட்டுமல்லாது திருச்சிற்றம் பலம் கூட்ரோடு, ஆரோவில் பகுதியில் உள்ள உள்ளூர் இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் கஞ்சாவை சோம்நாத் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

    சோம்நாத்தை கைது செய்த போலீசார் அவர் வைத்திருந்த 2½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    காரைக்கால் பாரதியார் சாலை, திருநள்ளாறு சாலை, மாதா கோவில் வீதி உள்ளிட்ட பிரதான சாலைகளில் மட்டும் இன்று காலை முதல் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

    காரைக்கால்:

    காரைக்கால் கைலாசநாதர் கோவில் வகையறாவை சேர்ந்த, பொய்யாத மூர்த்தி விநாயகர் கோவில், காரைக்கால் மாதா கோவில் வீதியில் உள்ளது. இந்த கோவில் வாசலில், நடு சாலையில் முகப்பு மண்டபம் கட்டுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு மற்றும் சில காரணங்களால் தடைப்பட்டுப் போனது.

    இந்நிலையில், பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மண்டபம் குறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 18-ந் தேதி ஐகோர்ட் அளித்த தீர்ப்பில், காரைக்கால் மாதா கோவில் வீதியில், பொய்யாத மூர்த்தி விநாயகர் கோவில் எதிரே கட்டப்பட்டு வரும் முகப்பு மண்டபத்தை இடித்து அகற்றுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இது தொடர்பாக காரைக்கால் மாவட்ட இந்து அமைப்புகள் சார்பில் காரைக்காலில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மண்டபத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று (23-ந் தேதி) கடையடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று இந்து அமைப்புகளைச் சேர்ந்தோர். காரைக்காலில் உள்ள பல்வேறு வணிக நிறுவனங்களுக்கு சென்று காரைக்காலில் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி காரைக்கால் பாரதியார் சாலை, திருநள்ளாறு சாலை, மாதா கோவில் வீதி உள்ளிட்ட பிரதான சாலைகளில் மட்டும் இன்று காலை முதல் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதன் கிளை சாலைகளில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் பள்ளி, கல்லூரிகள், வங்கிகள், அரசுத் துறை அலுவலகங்கள் இயங்குகின்றன. ஆட்டோ, பஸ், வேன் இயங்குகின்றன. அனைத்து சாலையிலும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மத்திய கலாச்சார அமைச்சகம் சார்பில் தியாகிகள் நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவையில் அரபிந்தோ ஆசிரம ஆடிட்டோரியத்தில் தியாகிகள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை தலைமையில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அரங்கில் இருந்த மாணவர்களும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். 
    இதனை தொடர்ந்து கவர்னர் தமிழிசை பேசியதாவது:&

    சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகள் பற்றி இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லும் தினமாக இந்த தியாகிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23-ந் தேதி கட்டாயமாக கொண்டாடப்பட வேண்டும் என்று பாரதப் பிரதமர் எடுத்துக் கூறினார். 
    அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.பகத்சிங் தூக்கிலிடப்பட்ட போது அவருக்கு வயது 23. 3 இளைஞர்கள் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்ட நாள். 

    எங்களுடைய உயிர் ஒரு மெழுகுவர்த்தி போல இங்கு கரைந்தாலும் எங்களது தியாகத்தின் வெளிச்சம் இந்த நாட்டிற்கு சுதந்திரத்தை வாங்கித் தரும் என்று சொல்லிவிட்டு தூக்குமேடை ஏறினார்கள்.

    பகத் சிங் தூக்கு மேடைக்கு போவதற்கு முன்னால் கூட புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். அப்படிப்பட்ட இளைஞர்கள் வாழ்ந்த நாடு இந்த நாடு. தூக்கு மேடைக்கு யார் முதலில் செல்கிறீர்கள் என்று கேட்டபோது நான் செல்கிறேன் என்று சுகதேவ் சொன்னார். 

    இந்த நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித் தருவதற்காக தூக்கு மேடையை எந்த அளவிற்கு விருப்பமாக ஏற்றுக் கொண்டார்கள் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    காந்தியக் கொள்கை அகிம்சைக் கொள்கை. இவர்கள் தேர்ந்தெடுத்தது தீவிரவாதக் கொள்கை. தீவிரவாதம், புரட்சி என்பதை கத்தி, வெடிகுண்டு பயன்படுத்துவது என்று புரிந்து கொள்ள வேண்டாம். 

    தாம் நினைப்பதில் தீவிரமாக இருந்து அதன்மூலம் சுதந்திரத்தைப் பெற்றுத் தருவோம் என்று உறுதியாக இருப்பதுதான் புரட்சி. அந்தப் புரட்சியாளர்களுக்காகத் தான் இந்த திருநாள்.

    சுபாஸ் சந்திரபோஸ் இந்த நாட்டிற்கு சுதந்திரத்தை வாங்கி தர வேண்டும் என்பதற்காக ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து இளைஞர்களை அழைத்து வந்தார்.

    நாட்டின் எல்லை வந்தவுடன் இந்த நாட்டின் எல்லையைத் கடக்கும் முதல் 10 பேர் இந்தியர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால் என் நாட்டில் கீழே விழும் முதல் ரத்தம் இந்தியனின் ரத்தமாக இருக்க வேண்டும் என்றார். அப்படி ரத்தம் சிந்தி வாங்கிய சுதந்திரம் இந்த சுதந்திரம்.

    மாணவர்களைக் கேட்டுக் கொள்வது, சுதந்திர போராட்ட வீரர்களைப் பற்றி தேடித்தேடி படியுங்கள். ஒவ்வொரு தியாகத்தைப் பற்றி கேட்கும் போது ரத்தம் சூடேறும், இந்த நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும் என்று தோன்றும். 

    நாம் வாழ்வதற்காக பல இளைஞர்கள் தியாகம் செய்தார்கள். அந்த தியாகத்தை நினைவு கூறுவதற்காகத்தான் இந்த நாள். தெரிந்தவர்கள் சிலர் மட்டுமே. தெரியாதவர்கள் பல பேர் இருக்கிறார்கள். 

    ஆஷ் துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதன் துப்பாக்கிச் சுடப் பயிற்சி பெற்றது இந்த புதுச்சேரி மண்ணில் தான் என்பது பலருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட புரட்சியாளர்கள் வாழ்ந்த மண் இந்த மண்.

    பாரத பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்று சுதந்திரமடைந்த 75-வது ஆண்டை ஒரு வருடமாக கொண்டாட தொடங்கி பல நல்ல தகவல்களை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

    ஆசிரியர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றியும் தினமும் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். மாணவர்களுக்கு அது பற்றி தெரியத் தெரிய இந்த நாட்டுக்கான சிறந்த தலைவர்களாக அவர்கள் உருவாக முடியும். இந்த நாட்டின் வளர்ச்சிக்காக மாணவர்களின் பங்காற்ற வேண்டும். சுதந்திர போராட்டத்திற்காக பெண்களும் தியாகம் செய்திருக்கிறார்கள் அவர் களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    மாணவிகள் வந்திருப்பது சிறப்பு. மாணவர்களுக்கு தேசப்பற்று வேண்டும். அதே போல சுயமுயற்சியும் வேண்டும். நீங்கள் வெற்றியாளர்களாக வளர வேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வெறி இருக்க வேண்டும். நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு, தாய்-தந்தையைப் போற்றுவதற்கு, இந்த நாட்டை முன்னேற்றப் பாதையில் வளர்ச்சி பெற வைப்பதற்கு வெறி இருக்க வேண்டும். அந்த வெறி இருக்கும்போது நீங்கள் வெற்றியாளர்களாக மாறுவீர்கள்.

    நாட்டுக்காக தியாகம் செய்த அந்த இளைஞர்களை நாம் நினைப்போம். ஒருகாலத்தில் இளைஞர் களாகிய நம்மால் இந்த நாடு முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற உறுதிப்பாட்டை எடுப்போம். சுதந்திரத்தை மனதில் விதைக்கும் தினமாக அந்த நாள் அமைய வேண்டும்.
    இவ்வாறு தமிழிசை பேசினார். கவர்னர் பேசும்போது உணர்ச்சி வசப்பட்டு நாதழுதழுக்க பேசினார்.

    விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார்,  எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், கலெக்டர் வல்லவன், சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், செய்தித்துறை இயக்குனர் வினயராஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
    வாழ்க்கையை நெறிப்படுத்தும் புத்தகங்களை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று ரங்கசாமி பேசினார்.
    புதுச்சேரி:

    புதுவையில் நடந்த தியாகிகள் நினைவு தினத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    தியாகிகள் தினத்துக்கு மாணவர்களை அழைக்க என்ன காரணம்? வழக்கமாக அரசின் விடுதலை நாள், சுதந்திர நாளில் தியாகிகளை கவுரவப்படுத்துவோம். ஆனால் இவ்விழாவில் தியாகிகளின் தியாகத்தை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மாணவர்களை அழைத்துள்ளோம். 

    ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்த காலத்தில் எத்தனை துன்பத்தை அனுப வித்திருப்பார்கள்? அடிமை வாழ்வு சாதாரணமானதல்ல. அந்த நாட்களை நாம் நினைத்து பார்க்க வேண்டும். தலைவர்கள் விடுதலைக்காக போராடினார்கள். 

    அதேநேரத்தில் இளைஞர்களும், மாணவர்களும் விடுதலைக்காக போராடினர். மாணவ பருவம் மிக முக்கியமானது. இந்த பருவத்தில் பாட புத்தகங்களோடு வாழ்க்கையை நெறிப் படுத்தும் புத்தகங்களையும் தேடிச்சென்று படிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சியிலும் மாணவர்கள் பங்கேற்க வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார்.
    காலாப்பட்டு அருகே கோவில் விழாவில் ஏற்பட்ட மோதலில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    புதுச்சேரி:

    காலாப்பட்டு அருகே பிள்ளைச் சாவடியில் பல்கலைக்கழக பின் புறம் தமிழகப்பகுதியில் அமைந் துள்ள அய்யனாரப்பன் கோவிலில் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து இரவு சாமி வீதி உலா நடைபெற்றது.

    அப்போது பிள்ளைச் சாடியை சேர்ந்த இரு தரப்பினருக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் இருதரப்பை சேர்ந்த மாரியப்பன் என்ற மணிகண்டன் (வயது 24) மற்றும் ஆனந்து என்ற பாஸ்கர் (50) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். 

    அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.இந்த மோதல் குறித்து இருதரப்பினரும் தனித்தனியே காலாப்பட்டு போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    இந்த மோதல் காரணமாக பிள்ளைச் சாவடி கிராமத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. அங்கு மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க மத்திய அரசை வலியுறுத்தி புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அ.தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெங்களுரூ குடிநீர் தேவை என்ற போர்வையில் 67 டி.எம்.சி. நீர் கொள்ளளவு கொண்ட மேகதாது அணையை கட்ட கர்நாடக அரசு ரூ.1000 கோடி  நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது ஒட்டுமொத்த தமிழ்நாடு, காரைக்கால் பகுதிகளை பாலைவனமாக்கும் உள் நோக்கம் கொண்ட செயலாகும்.  

    இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, கர்நாடக அரசின் சட்ட விரோத அணை கட்டும் முயற்சிக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் தமிழக அரசால் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

    இந்த தீர்மானத்திற்கு தமிழக மக்களின் நலன் கருதி அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஏகமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    எனவே, காவிரியின் கடைமடை மாவட்டமான காரைக்கால் மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி, தமிழக அரசை பின்பற்றி புதுவை  சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டத்திற்கு விரோதமாகவும் தமிழக, காரைக்கால் மாவட்ட விவசாயிகளின் நலனுக்கு எதிராக மேகதாதுவில் புதிய அணை கட்டப்பட இருக்கும் கர்நாடக அரசின் முடிவை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி அரசின் சார்பில் தீர்மானம் கொண்டு வர வேண்டும். 

    இவ்வாறு அன்பழகன் கூறி உள்ளார்.
    புதுவை தவளக்குப்பம் வேளாண் அறிவியல் கல்லூரியில் உலக தண்ணீர் தினவிழா நடைபெற்றது.
    புதுச்சேரி:

    பாண்டிசேரி வேளாண் அறிவியல் கல்லூரியில் உலக தண்ணீர் தின விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் விழாவை தொடங்கி வைத்தார்.

     புதுவை வேளாண்மை துறை தேனீ.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கதிரேசன் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் வேளாண் புல முதல்வர் டாக்டர் சுந்தர வரதராஜன் மற்றும் கல்லூரியின் தாளா ளர் அக்ரி கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். 

    திண்டிவனம் என்னை பனை மற்றும் நிலக்கடலை உழவர் உற்பத்தியாளர் கம்பெனியின் தலைவர் காளிதாஸ் கலந்து கொண்டார்.

    கல்லூரி உதவி பேராசிரியர் மணிகண்டன் வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் பண்ணையிலுள்ள இடத்தில் மாணவர்கள் ஒருங்கிணைந்த வேளாண் பண்ணையம் உருவாகியுள்ளதை அண்ணாமலை பல்கலைக் கழக துணைவேந்தர் திறந்து வைத்தார்.

     தண்ணீர் விழாவை கொண்டாடும் விதமாக, நெல்லுக்கு அடுத்தபடியாக தண்ணீர் சிக்கனத்தை குறைக்கும் வகையில் இயந்திரவியல் முறையில் மக்காச்சோளம் நடவு செய்முறை நடத்தப்பட்டது. இந்த  நிகழ்ச்சி வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

    மேலும் பண்ணையில் மாணவர்கள் ஏற்படுத்தியுள்ள ஒருங்கிணைந்த வேளாண் பண்ணையம், அசோலா வளர்ப்பு, காளான் வளர்ப்பு, பயிர் திட்டமிடல், நர்சரி, மண்புழு உரம் தயாரித்தல், ஆடு வளர்ப்பு, மற்றும் மூலிகை தோட்டம். ஆகியவற்றை சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டனர். 

    இந்த விழாவில் நல்லவாடு, ஆண்டியார் பாளையம், தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சபாநாயகர் மற்றும் அமைச்சர் பரிசுகளை வழங்கினார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி மாணவ-மாணவிகள்   செய்து இருந்தனர். முடிவில் உதவிப் பேராசிரியர் தமிழ்செல்வன் நன்றி கூறினார்.
    என்.ஆர்.காங்கிரசை பலவீனப்படுத்த மத்திய பா.ஜனதா அரசு திட்டமிட்டு சதி செய்வதாக மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய பா.ஜனதா மோடி அரசால் மாநிலத்திற்குத் தேவையான நிதிகள் தாராளமாக அனுப்பப்பட்டு அதன் மூலம் புதுவை மாநிலம் நிதி பற்றாக்குறை இல்லாத மாநிலமாக மாறி விடும் என என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணியானது தேர்தலுக்கு முன்பு பிரசாரம் செய்து வாக்காளர்களை நம்பவைத்து வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்தனர்.  

    ஆனால், கூட்டணி அரசு அமைந்து ஒராண்டு ஆகும் நிலையிலும் புதுவையின்  நிலைமை சற்றும் மாறவே இல்லை.  இந்திய நிதிக் கமிஷனில் இன்றுவரை புதுவை மாநிலம் சேர்த்துக்கொள்ளப் படவில்லை. மின் வினியோகம் தனியார் மயமாக்குதலை தடுக்க முடியவில்லை.

    மாநில அரசின் உரிமைகளையும் மற்றும் நிதியினையும்  பறிக்க திட்டமிட்டு கொண்டு வரப்பட்டுள்ள, ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு திட்டத்தின் கீழ், புதுவையின் கொஞ்சநஞ்ச பத்திர பதிவு வருவாயும் மத்திய அரசுக்கு மாற்றப்படும் நிலை இருக்கிறது.

    புதுவை மாநிலத்தில் சுத்தமான குடிநீர் வழங்க கோரி குடத்துடன் பெண்கள் ஊர்வலம், மதிய உணவு தயாரிப்பு  ஊழியர்கள், கல்வித்துறையில் காத்திருப்பு போராட்டம், ரொட்டி பால் ஊழியர்கள் போராட்டம், தரமற்ற இலவச அரிசி விநியோகம் ஆகியவற்றை பார்க்கின்றபோது மத்திய அரசு திட்டமிட்டு என்.ஆர். காங்கிரசை பலவீனப்படுத்த  செய்கின்ற சதி செயல் என்பதை எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம். 

    இவ்வாறு ஏ.வி.சுப்ரமணியன் அறிக்கையில் கூறியுள்ளார்.
    பாகூர் அருகே கோவில் பூசாரி மயங்கி விழுந்து இறந்து போனார்.
    புதுச்சேரி:

    பாகூர் அருகே சேலியமேடு வில்லியனூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சடையச்சியம்மன் (வயது 47) இவரது தம்பி செந்தில் குமார் (45) இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் அங்குள்ள செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் பூசாரியாக வேலைசெய்து வந்தனர்.

    கோவிலில் பக்தர்கள் பக்தர்கள் அளிக்கும் தட்சனை பணத்தில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே செந்தில் குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவந்ததால் கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை பாதிக்கப்பட்டது.

    அவரது சகோதரி சடையச் சியம்மன் கண்டித்தும் செந்தில் குமார் மது பழக்கத்தை நிறுத்தவில்லை. இந்த நிலையில்   வீட்டில் இருந்த செந்தில் குமார் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரது சகோதரி சடையச்சியம்மன் மற்றும் உறவினர்கள் செந்தில் குமாரை மீட்டு கரிக்கலாம் பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே செந்தில் குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இது குறித்து அவரது சகோதரி சடையச்சியம்மன் கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  
    மணக்குள விநாயகர் கட்டிடக்கலை பிரிவில் மாணவர்களுக்கு கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில், கட்டிடக்கலை பிரிவில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இயற்கையிலிருந்து கலை என்னும் தலைப்பில் பயிற்சி பட்டறை நடைபெற்றது.

    மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கல்லூரியின் இயக்குனரும் முதல்வருமான சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக மணக்குள விநாயகர் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் முதல்வர் மனோகரன் வரவேற்றார்.

    புதுச்சேரி சர்வதேச கைவினை பயிற்றுவிப்பாளர் உமாபதி மாணவர்களுக்கு இயற்கையிலிருந்து கலை என்னும் தலைப்பில் கைவினை பொருட்கள் வடிவமைக்கும் பயிற்சி அளித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறையின் துணை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
    ஏனாம் அரசு ஆஸ்பத்திரியில் ஐஸ் கட்டி மீது பிணத்தை வைக்கும் அவலம் சமூக வலைதளத்தில் வைரலாக வீடியோ பரவி வருகிறது.
    புதுச்சேரி:

    புதுவையின் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றுப்பகுதியில் உள்ளது.

    இங்குள்ள அரசு  ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை கூடத்தில் ஏ.சி. இயந்திரம் பழுதாகி பல மாதமாகிறது. இதை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அரசுக்கு தகவல் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. 

    இதற்கு மாற்றாக இறந்தவர்களின் உடல் ஐஸ் பார் மீது வைக்கப்படும் நிலை உள்ளது. பழங்கால முறைக்கு ஏனாம் ஆஸ்பத்திரி திரும்பியிருப்பது மிகப்பெரிய வேதனையாக உள்ளது. இந்த நிலை பல மாதங்களாக நீடிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

    அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பிரேத பரிசோதனை கூடத்தில் ஏ.சி. எந்திரத்தை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  ஐஸ் கட்டி மீது பிணம் வைக்கப்பட்டுள்ளதை புகைப்படம் எடுத்தவர்  சமூக வலைத்தளத்தில் பதிவிட  இந்த படம் வைரலாக பரவி வருகிறது.
    ×